முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட முடியுமா? தங்கள் பங்குக்கு அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு குறித்து கேரளா எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களும் உண்மைக்கு மாறானவை என்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தினால் முறியடிக்கவும் பட்டிருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு உட்பட தமிழகத்தின் முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் கேரளா அநீதியான முறையிலேயே மீறிவந்திருக்கிறது. என்றாலும் கூட இன்றைய நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரள மக்களிடம் இருக்கும் உணர்வு தமிழக மக்களிடம் இல்லை. தேனி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே மக்கள் போராடி வருகிறார்கள், ஏனைய பகுதிகளில் இன்னமும் இது செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஊடகங்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் கேரளாவில் செய்ததைப் போன்ற ஒருங்கிணைந்த பரப்புரையை தமிழக ஊடகங்களோ, இங்குள்ள ஓட்டுக்கட்சிகளோ செய்யவில்லை.

கொந்தளிப்பான இன்றைய நிலையிலும் கூட, கேரளா தண்ணீர் தர மறுக்கிறது என்பது போன்று தான் இங்கு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக புதிய அணை கட்டி தண்ணீர் தருகிறோம் என்று தானே கூறுகிறோம் மறுக்கவில்லையே என்று கேரளாவிலும் பேசப்பட்டு விருகிறது. ஆனால் இது தண்ணீர் பற்றாக்குறை குறித்த பிரச்சனையல்ல, அணையின் உரிமை யாருக்கு எனும் பிரச்சனை. இது புரியவைக்கப்படாததால் தான் அவர்கள் தான் தண்ணீர் தருகிறோம் என்று கூறுகிறார்களே எனும் எண்ணம் தமிழகத்தின் பிறபகுதிகளில் நிலவுகிறது.

1979ல் தொடங்கிய இந்தப் பிரச்சனையில் அடாவடி செய்யும் கேரளத்திற்கு சாதகமாக பல்வேறு கட்டங்களில் தமிழக ஒட்டுக் கட்சிகளால் விட்டுக் கொடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வசம் இருந்த இந்த அணையின் பாதுகாப்பு பணியை 1980ல் கேரள காவல்துறைக்கு மாற்ற அனுமதித்தார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து அணையை பலப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு கட்டுமான ஊழியர்களை தாக்குவது, பொறியாளர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வது, வாகனங்களை கைப்பற்றுவது என்று ஆண்டுக்கணக்கில் கேரள அரசுகள் செய்து வந்த இடையூறுகளுக்கு எதிராக தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி அரசுகள் சிறு முணுமுணுப்பைக் கூட காட்டியதில்லை. அவ்வளவு ஏன், ஒரு சட்டமன்ற தேர்தலின் போது கேரளாவில் போட்டியிட்ட ஜெயா தலைமையிலான அதிமுக தேர்தல் வாக்குறுதியில் முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியே ஓட்டுக் கேட்டது. 2006ல் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என நீதி மன்ற தீர்ப்பு வந்தபோது ஆட்சியில் இருந்த ஜெயா, அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்ப்புக்குப் பிறகு, கேரளா அளித்த வரைவுத் திட்டத்தை ஏற்று ஐவர் குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தியபோது அதை எதிர்த்திருக்க வேண்டிய கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அணையின் மீதான தமிழகத்தின் உரிமைகளை கேரளா கபளீகரம் செய்தபோது ஒற்றுமையாய் ஆதரித்த ஓட்டுக் கட்சிகள், இன்று கேரளத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்பதாக படம் காட்டுகின்றன.

நீதிமன்றங்களும் பலமுறை நியாயமற்று கேரள சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து, கேரளா செய்த மேல்முறையீட்டு மனுவை தானே விசாரித்தது எந்த சட்ட அடிப்படையில் வரும்? உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து தீர்ப்பை செல்லாக் காசாக்கியது கேரளா. இதை எதிர்த்து தமிழ்நாடு அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கையும், அதாவது கேரள சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்கலாமா? கூடாதா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய இந்த வழக்கையும், ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்ப்பை எதிர்த்து கேரளா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் ஒன்றாக இணைத்து ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியது எந்த சட்ட அடிப்படையில் சரியானது? இரண்டு வேறு வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்ததன் மூலம் உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை தானே குப்பைக் கூடைக்கு அனுப்பியது. இத்தனைக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்குகிறார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஆக கேரள அரசு, உச்சநீதி மன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் இணைந்து தான் முல்லை பெரியாறு பிரச்சனையை இன்று கொதி நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

திமுக வழக்கம் போல உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்களையும்(!) இந்த விசயத்தில் தமிழக அரசுடன் ஒத்துழைப்போம் என்று அரசியல் நாகரீகத்தையும்(?) காட்டிக் கொண்டிருக்கிறது. ஜெயாவோ தானே உண்ணாவிரதம் இருந்துவிடலாமா? அல்லது ஒரு நாள் பந்த் நடத்தலாமா? என்று சோதிடர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தமிழ்வாதக் கட்சிகளோ மலையாளிகளை அடி, மலையாளக் கடைகளை நொறுக்கு என்று இனவாதத்தை தொடங்கி விட்டார்கள். வைரமுத்து போன்ற உலக மகா கவிஞர்களுக்கு சோவியத் யூனியன் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலிகள் மாநிலத்திற்கு ஏற்றார்ப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ’சவுண்டு’ மட்டுமே விடும் இளங்கோவன் இப்போதும் உம்மன் சாண்டியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை ஏன் அவர் சோனியா காந்தியிடம் கூறக் கூடாது? அணையை உடைக்க கம்பிகளுடன் வெறித்தனத்தைக் காட்டிய கேரள பாஜகவை தண்டிக்கக் கோரி பாஜக தலைமையிடம் தமிழக பாஜக வற்புறுத்தலாமே, இந்தப் பிரச்சனையை தோற்றுவித்து எண்ணெய் ஊற்றி வளர்த்து வரும் கேரள தோழர்(!)களிடம் இங்குள்ள சீபீஎம் மேடையில் சர்வதேசியம் பேசிக் கொண்டும் மக்களிடம் பிராந்திய இனவெறியை கிளப்பியும் கம்யூனிச வித்தை காட்டுவது குறித்து விமர்சனம் வைக்கலாமே. அதைவிட்டு கேரளாவில் அணையை உடை என்றும் தமிழ்நாட்டில் அணையை பாதுகாப்போம் என்றும் இந்தக் கட்சிகள் வசனம் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?

இவைகளுக்கு மாறாக, தேனி பகுதியிலுள்ள விவசாயிகள் புதிய எழுச்சி மிகுந்த வரலாற்றை படைத்திருக்கிறார்கள். எழுபதாயிரம் விவசாயிகள் வரை திரண்டு, ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து அணையைக் கைப்பற்ற கிளம்பி விட்டார்கள். குமுளி வழியான கேரள எல்லையை அடைத்து போக்குவரத்தையும், கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களையும் தடை செய்தது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவைப் பொருத்தவரை ஓட்டுக் கட்சிகளின் நச்சுப் பரப்புரைகள் ஊடக பலத்தினாலும், தொடர்ச்சியான முனைப்பினாலும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்திருக்கிறது. மட்டுமல்லாது, அணை உடைந்து பல லட்சம் மக்கள் செத்து மடிவதைப் போன்ற குறுந்தகடுகள் வரைகலை உத்திகளுடன் தயாரிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்டதால் பீதியடைந்திருக்கும் மக்கள் இயல்பாகவே கேரள ஓட்டுப் பொறுக்கிகளின் கோரிக்கைகளுடன் ஒன்றிப் போய்விட்டார்கள். இந்த மக்கள் ஆதரவு எனும் பலம் இருப்பதுதான் கேரள ஓட்டுக் கட்சிகளின் சண்டித்தனங்களுக்கு தடமேற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தேவையற்ற பயமும், புரிதலற்று ஓட்டுக் கட்சிகளின் பின்னே அணிவகுப்பதும், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு உணர்த்துவதற்கும், கேரள ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுமாயின் குமுளி, களியக்காவிளை, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை நிறுத்தி காய்கறி உள்ளிட்டு பொருட்களின் தடையை ஏற்படுத்தலாம். ஆனால், அது ஒருபோதும் இனவாத அடிப்படையில் பயன்படுத்தப்படக் கூடாது. கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கே 500 டி.எம்.சி க்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

பிரச்சனை என்று வந்தால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுவதையும், கமிட்டி அமைத்து ஆறப் போடுவதையும் வழமையாக வைத்திருக்கும் மத்திய அரசு, அதை மீறிப்போகும் மாநிலத்தை வழிக்கு கொண்டுவர என்ன செய்திருக்கிறது இதுவரை? அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி பின் வழக்கு தொடுத்து தீர்ப்பு வந்தபின் அதையும் செயல் படுத்தாமல் மீறும் மாநிலத்தை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், பாதிக்கப்பட்ட மாநிலம் என்ன செய்வது? முன்னர் வந்த தீர்ப்பை கழிப்பறை காகிதமாக்கியது போல் கேரளா இனியும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? புவியியல் ரீதியாக கடைமாநிலத்தில் வாழும் மக்கள் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டுமா? மாநிலங்களிடையேயான பகிர்வில் பொது ஒழுங்கை மீறும் அரசுகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் கேரளாவைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கக் கூட தமிழ்நாட்டல் முடியவில்லையே ஏன்? ஏனென்றால், தேவையான உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லை. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே பிரிந்து போகும் உரிமையல்ல. எந்த மாநிலமும் எல்லை மீறாதிருக்கவும் மீறும் போது அதை ஒழுங்கிற்குள் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

தேனி பகுதியில் விவசாயிகளிடம் ஓட்டுக்கட்சிகளை புறந்தள்ளி ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவ வேண்டும். அது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை நோக்கி நகர வேண்டும். இப்போதே பிற பகுதிகளில் வணிகர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவைகளை ஆதரிப்பதும், அதை இலக்கு நோக்கி வளர்த்தெடுப்பதுமே நம்முன் உடனடிக் கடமையாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லை பெரியாறு அணை பிரச்சனையும் தீர்வும் – ஆவணப்படம்

நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்

எங்கும் ஒரே பேச்சு

இல்லையில்லை,

எங்கெங்கும் ஒரே ஏச்சு.

 

 

கடந்த ஆட்சி துண்டாய் போனது

மின்வெட்டினால் தான்

எச்சரிக்கிறார்களாம் சிலர்.

நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும்

மின்வெட்டு எஞ்சியிருக்கும்

அறியாதவர்களா இவர்கள்.

 

 

காற்றாலை சுற்றவில்லை

அணைகளில் நீரில்லை

அனல் நிலக்கரி தரமில்லை

அண்டை மாநிலங்கள்

ஒத்துழைப்பதும் இல்லை

ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம்.

ஆனாலும்,

மின்சாரம் இல்லை.

 

 

பேசுவது எதிர்க்கட்சியா

ஆளும் கட்சி செயல்படவில்லை.

பேசுவது ஆளும் கட்சியா

ஆண்ட கட்சி செயல்படுத்தவில்லை.

காட்சியும், கட்சிகளும் மாறினாலும்

காரணங்கள் மாறாது.

எந்தக் கட்சி ஆண்டாலும்

எந்திரம் ஓடாது.

மின்வெட்டுக்கு மட்டும்

வெட்டே இருக்காது.

 

 

வியர்வையில் மின்சாரம் தயாரிக்கலாமா

மைக்கேல் ஃபாரடே வோ

தாமஸ் எடிசனோ

புதிதாய் வரவேண்டும்.

 

 

சாலைகளில், சந்திகளில்

கண்கள் கொள்ளக் கூசும்

வெளிச்சத்தில் குளித்த

விளம்பரங்கள், விளம்பரங்கள்.

குடிசை வீடுகளில்

கண்களை இடுக்கி திரிவிளக்கில்

பாடங்களை மேயும்

தேர்வுநேர மாணவர்கள்.

 

 

ஓலை விசிரி கைவலிக்கும்

விசிராவிட்டால் தூக்கம் சிரிக்கும்

உறக்கமாவது வந்துவிடக் கூடாதா?

படுக்கையிலும் போராட்டம்

விசிரிகள் கைதட்டும்

பறந்துவிட்டதா பந்து

போதை எழும்பிப்பார்த்து கொண்டாடும்

மின்னொளியிலும் கிரிக்கெட்.

 

 

மின்சாரம் பற்றாக்குறை

தினமும் வெட்டு 3 மணி நேரம்

திட்டம் போடும் அரசு

மின்சாரம் பற்றாக்குறை

விளம்பர ஆடம்பரங்களுக்கு இனி வெட்டு

சட்டம் போடுமா அரசு.

 

 

சொந்த விவசாயிகள்

விதைத்ததை எடுக்க

நீரிறைக்க மின்சாரமில்லை

அன்னிய கோலாக்கள்

புட்டிகளை நிறைக்க

எப்போதும் தடையில்லை

நீண்ட கடற்கரை நாடு

அலைகளிலிருந்து மின்சாரம்

யோசிக்கவே கூடாது.

எப்போதும் வெயில்காயும் நாடு

பரிதிஒளியில் மின்சாரம்

ஆராயவே கூடாது

வல்லரசு காணும் நாடல்லவா

அணுவை திருத்தி

அடிமையாவதை மட்டுமே

யோசித்து ஆராய்வோம்.

 

 

எதையும் விற்றே பழக்கப்பட்டு

மின்வெட்டிலும் லாபம் ருசிக்க

வருகிறார்கள்

மின்கல முதலாளிகள்.

இனி உபரியாய் மின்சாரம் இருந்தாலும்

லாபத்திற்கு உத்திரவாத ஒப்பமிட்டு

மின்வெட்டை

நம்மிடம் சாட்டும் அரசு.

 

 

என்ன செய்யப் போகிறோம் நாம்?

 

 

நினைத்தாலே ‘ஷாக்’ அடிக்கும்

புரட்சிகர மின்சாரம் என்னவென்று

காட்டவேண்டாமா?

 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லைப்பெரியாற்று அணைக்குப்பதிலாக வேறு புதிய அணை கட்டியே தீருவது என்று சாத்தியமுள்ள எந்த வழியையும் விட்டுவைக்காமல் கங்கணங்கட்டி செயல்படுகிறது கேரள அரசு. அமெரிக்கப்படங்களுக்கு இணையான வரைகலை உத்திகளுடன் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் குறுந்தகடுகளை வெளியிட்டு மக்களை ஏய்த்தது தொடங்கி இப்போதுஅணையில் நீர்கசிகிறது என்று குழு அமைத்து ஆராய அனுப்பியது வரை அடுக்கடுக்காக அக்கிரமங்கள் புரிந்துவருகிறது. ரப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்து தோட்டங்களில் வேலையிழந்து மக்கள் தவித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்திய அரசு, விலை உயர்வு குறிட்ட போராட்டங்களின்போது போராடிய மக்களை குண்டாந்தடிகளைக்கொண்டு அடித்து நொருக்கிய அரசு, முல்லைப்பெரியாற்றில் மக்களுக்காக கவலைப்படுவதாக காட்டுவது அப்பட்டமான நடிப்பு. இதில் காங்கிரஸ் கயவாளிகளுக்கும், போலிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அன்று நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, இன்று வழக்கை மேலும் தாமதப்படுத்துவதற்க்காக தனிப்பெஞ்சுக்கு அனுப்பியிருக்கிறது போலிகளின் அரசு.

 

அப்படி என்னதான் காரணம் அந்த அணையை முடக்க நினைப்பதற்கு? மெய்யாகவே அணை பலமிழந்து தான் இருக்கிறதா? அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்களா? இவர்கள் மக்களிடம் சொல்லும் காரணங்களைவிட வேறு காரணக்கள் இதன் பின்னால் இருக்கின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது முல்லைப்பெரியாற்று அணைப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன (இதை எதிர்த்து அபோது போராட்டங்களும் நடைபெற்றன) பின்னர் 1976 ல் பெரியாற்று அணைக்கு 40கிமீ கீழே இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் 800 மெகாவாட் மின் உற்பத்திக்காக கட்டியது கேரள அரசு. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட அந்த அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. இந்த அணை கட்டப்பட்ட பின்னர்தான் கேரள அரசு முழு மூச்சுடன் முல்லைப்பெரியாற்று அணை பழுதடைந்திருப்பதாக பரப்பத்தொடங்கியது. பெரியாற்று அணை இருக்கும்வரை இடுக்கி அணைக்கு நீர்கிடைக்காது என்று உணர்ந்த கேரள அரசு 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவான கே.கே.தாமஸ் என்பவர் தலைமையில் அணை பலமின்றி இருப்பதாகவும் நீர்மட்டத்தின் அளவை குறைக்கவேண்டும் எனவும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய மைய அரசு அணை பலமாக இருப்பதாக அறிவித்தது. ஆனாலும் கேரள தமிழக அரசுகளிடையே அணையை பலப்படுத்துவது என்றும் அதுவரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொள்வது என்றும் ஒப்பந்தமாகியது. தனடிப்படையில் 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டது. அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அணையின் நிர்வாகம் தமிழகத்திடம் இருந்தது. இதற்கு வாடகையையும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு வழக்கிவருகிறது, இருந்தாலும் மூன்று ஆண்டுகளில் முடியவேண்டிய பலப்படுத்தும் பணி கேரளாவின் பல்வேறு முட்டுக்கட்டைகளால் 1985 வரை நீண்டது. பணி முடிவடைந்த பின்னும், மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை நீர்மட்டத்தை உயர்த்துவாதால் பாதிப்பு ஒன்றுமில்லை என சான்றிதழ் வழங்கிய பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த இதுவரை கேரளா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் தான் உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த ஆணையிட்டது. அதை கேரள சட்டமன்றத்தில் சிறப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் முறியடித்தது. இப்போது 136 அடியில் இருக்கும் அணையின் நீர்மட்டம் கடந்த 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் முழுக்கொள்ளளவான 152 அடிவரை எந்தப்பாதிப்புமில்லாமல் நிரம்பியிருந்தது, இன்னும் சிற்ப்பாக 1943 ஆம் ஆண்டு கொள்ளளவை விட இரண்டு அடி அதிகமாக அதாவது 154 அடிவரை நிரம்பியிருந்தது. அணை பலமற்று இருப்பதாக கேரளா தொடர்ந்து கூறிவருவதற்கு ஒரே காரணம் அது நூற்றாண்டுப்பழமை வாய்ந்தது என்பது மட்டும்தான். நில நடுக்கம் வந்தால் தாங்காது என்பதெல்லாம் அதிக பட்சம். எந்த கட்டிடத்திற்கு நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் என்று உறுதியளிக்கமுடியும்? இந்தியாவின் எந்த அணைக்கு இத்தகைய உறுதியளிக்கப்பட்டுள்ளது? மாறாக தமிழகத்தின் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக இயங்கிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா அணை உடைந்துவிடும் என்று பரப்பியிருப்பது திட்டமிட்ட பொய் என்றாலும், கேரள மக்கள் அணை உடைந்து தாங்கள் கடலில் கரைந்து விடுவதாய் நம்புகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதுவும் உண்மையல்ல என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாற்று அணையின் உபரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளைனைத்தும் மக்கள் வசிக்காத அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இடுக்கி மாவட்டம் உட்பட அணை உடைந்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக குறிக்கப்படும் ஐந்து மாவட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிமுதல் 4600 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன. ஆனால் முல்லைப்பெரியாற்று அணையோ கடல் மட்டத்திலிருந்து 2850 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது 2850 அடி உயரத்தில் இருக்கும் அணை உடைந்து அதை விட சற்றேறக்குறைய ஆயிரம் அடி அதிக உயரத்திலிருக்கும் பகுதி மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவார்களாம். இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பது மட்டுமல்ல, அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டபோது வெளித்தெரிந்த பகுதிகளில் அவசரம் அவசரமாக ரப்பர் முதலாளிகளும் ஊடக முதலாளிகளும் விடுதிகளும், பொழுதுபோக்கு மையங்களும் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அணை உடைந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் முதலாளிகள் கல்லாக்கட்டும் விடுதிகளும் பொழுதுபோக்கு மையக்களும் மூழ்கிவிடும் என்பதே உண்மை. எதை வைத்து இவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லித்திரிகிறார்கள்?

 

தமிழ் தேசியவாதிகள் என்று சிலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை இந்தியா படுகொலை செய்வதையே இரண்டு மலையாள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம் என்று கூறுபவர்கள் இவர்கள். கன்னடம் ஆந்திரா கேரளம் ஆகியவை தமிழகத்தின் நீராதார உரிமையை மறுப்பது தேசிய இனச்சிக்கலினால் தான் என அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் தேசிய இனக்கூறுகள் வளராத கேரளாவில், பிராந்தியக்கட்சிகள் ஏதும் இல்லாத கேரளாவில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் பலன் யாருக்குச் சேர்கிறது? கேரளாவிலிருக்கும் முதலாளித்துவ நலன் பாடும் அரசு இந்தச்சிக்கலை மேலும் மேலும் வளர்த்து புதிய அணையை கட்ட நினைப்பதன் காரணம கேரள தேசியமா? மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்வது போல் காட்டி மக்களை ஏமாற்றி காப்பாற்ற நினைப்பது மக்களையா? முதலாளிகளையா? அன்னிய முதலீட்டில் பின் தங்கி இருக்கும் கேரளாவில் மின் உற்பத்தியை அதிகரிப்பது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கா? அன்னிய தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கா?

 

மைய மாநில அனைத்து அரசுகளுக்கும் திட்டமாக இருப்பது முதலாளிகளின் வளர்ச்சிதானேயன்றி ஒருபோதும் மக்களின் வளர்ச்சியல்ல. தமிழக அரசின் நோக்கமும் ராமனாதபுர மதுரை மாவட்ட விவசாயிகளின் நலனா? உள்நாட்டின் குறுந்தொழில்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தி வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடுங்கள் என அறிவுரை கூறும் அரசு, பன்னாட்டு நிருவனங்களுக்கு ஒரு நொடி நேரம் கூட நிறுத்தாமல் மின்சாரம் வழங்கிவருகிறது. விவசாயிகளை நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறை கூறும் அரசுகள் அதை ஒருபோதும் பாட்டிலில் அடைத்துவிற்கும் நிருவனங்களுக்கு சொல்வதில்லை. எல்லா இடங்களிலும் அந்ந்தந்த பகுதிமக்களைவிட எல்லாவிதத்திலும் பன்னாட்டு முதலாளிகள் தான் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதில் தேசிய நலன்களைக்கூறி ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிரியாக காட்டுவது அந்த முதலாளிகளுக்குத்தான் சாதகமாக அமையுமேயன்றி எப்போதும் மக்களுக்கு சாதகமானதாக அமையாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக இதை மாற்றாதவரை எந்த ஆற்றுச்சிக்கலையும் தீர்க்கமுடியாது.

%d bloggers like this: