தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்

arkej2003

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கேஜ்ரிவால் பெருவெற்றி அடைந்திருப்பது ஓட்டுக்கட்ட்சி அரசியல்வாதிகளிடையே சலசலப்பையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தேர்தலுக்கு முன்பாகவே முடிவு தெரிந்ததைப் போல் சுரத்தின்றியே காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை கொட்டிக் கொண்டிருந்தன. அதிலும் மோடியை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு ‘செயற்கரிய’ அனைத்தையும் செய்தன. ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும் கூட பா.ஜ.க 30 இடங்கள் வரை பெறும் என்று நம்பவைக்க முயன்று கொண்டிருந்தார்கள். கடைசியில் மூன்று இடங்களோடு ஒடுங்கிக் கொள்ள வேண்டியதாயிறு.

 

கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் போது இது மோடி அரசின் மீதான வாக்கெடுப்பு என்றவர்கள் இப்போது இது மோடி அரசின் மீதான மக்களின் மதிப்பீடு அல்ல என்கிறார்கள். வேறு சிலர் இது நல்ல அரசியலின் தொடக்கம் என்கிறார்கள். கட்சி அரசியல் சாராமல் கேஜ்ரிவால் போன்றவர்கள் நாடு முழுவதும் தோன்றி வந்தால் இந்த ஊழல் அரசியல்வாதிகளை இதுபோல் மக்கள் விரட்டியடிப்பார்கள். என்கிறார்கள். இன்னும் சிலரோ மொத்த வாக்கு விகிதத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ‘நோட்டோ’வுக்கு வாக்கு கிடைத்திருக்கிறது. இது ஆபத்தான அறிகுறி. என்னதான் கேஜ்ரிவால் நல்லவர் திறமையானவர் என்றாலும் மக்கள் அவரிடம் இந்த அளவுக்கு நம்பிக்கை வைப்பது அவரையும் சாதாரண அரசியவாதியாக ஆக்கிவிடும் என எச்சரிக்கிறார்கள். இவைகளெல்லாம் உண்மையா?

 

பொதுவாக, தேர்தலில் வெற்றி பெறுவது என்பது குறிப்பிட்ட அந்தக் கட்சி முன்பு ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது? எதை சாதித்தது? என்பது பேசப்படும் விசயமாக ஆனதே இல்லை. கட்சிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பது கூட வாக்களிப்பவர்களுக்கு தெரியாது. மாறாக, தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு மட்டுமே வாக்களிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் தான் பெரும்பாலான மாநிலங்களில் ஒவ்வொருமுறையும் ஆட்சியிலிருக்கும் கட்சி தோற்று எதிர்க்கட்சியாய் மாறுவதும், எதிர்க்கட்சியாய் இருந்தது ஆளும் கட்சியாய் மாறுவதுமாக மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. இது ஓரளவுக்கு சரிதான். ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் நிலை இல்லாமல் இருந்தால் தான் முறைகேடுகள் ஓரளவுக்கு தடுக்கப்பட்டு மக்கள் நலனின் கொஞ்சம் அக்கரை எடுத்து செயல்படுவார்கள் என்று நம்பும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகான இந்த குறைந்த நாட்களிலேயே, தேர்தலுக்கு முன் மக்கள் எந்த அளவுக்கு ப.ஜ.க வை நம்பினார்களோ அதைவிட அதிகமாக இப்போது வெறுக்கிறார்கள். மக்களின் இந்த மனோநிலையைத் தான் ஆம் ஆத்மியின் வெற்றி காட்டுகிறது. மோடியில் அலை என்று உருவகிக்கப்பட்ட நீர்க்குமிழியும் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீதான வெறுப்புதான். இப்படி ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்களின் மீது வெறுப்பு ஏற்படும் போது அந்த வெறுப்பின் குவிப் புள்ளியாக ஏதாவது ஒன்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான் மோடி கட்டியமைக்கப்பட்டார். இப்போது தில்லியைப் பொருத்தவரை கேஜ்ரிவால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறார்.

 

ஆனால், இது வெறும் வெறுப்பின் அரசியலா? ஓவ்வொரு முறையும் ஆட்சி மாறுகிறது என்றால் அது ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பா? அல்லது ஆட்சி செய்வதற்காக அவர்கள் வைத்திருக்கும் கொள்கையின் மீதான வெறுப்பா? மத்தியில் என்றாலும் சரி, மாநிலங்களில் என்றாலும் சரி ஆட்சியாளர்களின் கொள்கைகளில் மாறுபாடு ஒன்றுமில்லை. காங்கிரஸ் மீதான வெறுப்பை அறுவடை செய்த பா.ஜ.க கங்கிரஸ் செய்து வந்ததையே இன்னும் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆட்சிக்கு வந்த குறைந்த நாட்களிலேயே பா.ஜ.க வும் வெறுப்பை எதிர் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அது ஆட்சியாளர்களின் மீதான வெறுப்பா? ஆட்சியாளர்களின் கொள்கைகள் மீதான வெறுப்பா? கொள்கைகள் மீதான வெறுப்பை எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் மீதான வெறுப்பாக மாற்றியமைக்கிறார்களோ அந்த அளவுக்கு அது அவர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவுகிறது. 67 இடங்களைப் பெற்று ஆம் ஆத்மி பெறு வெற்றி அடைந்திருக்கிறது என்றால் அதன் பொருள் மோடிக்கு எதிராக கேஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மக்களின் இந்த நம்பிக்கை சரியானது தானா?

 

ஒவ்வொரு முறையும் மக்கள் இப்படித்தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேஜ்ரிவால் ஊழல் அரசியல்வாதிகளிலிருந்து மாறுபட்டவரா? காங்கிரஸ் கட்சியின் அடுக்கடுக்கான ஊழல்களை பிரச்சாரம் செய்து தான் கேஜ்ரிவால் அரசியல் களத்துக்கு வந்தார். கடந்தமுறை தில்லி தேர்தலின் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை என்றதும் எந்தக் கட்சியின் ஊழல்களை எதிர்த்து சண்டமாருதம் செய்தாரோ அதே கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது மட்டுமா? காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதா வேண்டாமா எனும் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் தாம் முடிவெடுத்தால் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதால் அதை தந்திரமாக மக்கள் பக்கம் தள்ளி விட்டார். சந்தர்ப்பவாத, தந்திரவாத இந்த நடவடிக்கை அவர் சாதாரண அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதைக் காட்டுகிறதா?

 

இப்போது தில்லியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கும் பலர் பிற ஓட்டுக் கட்சிகளிலிருந்து கட்சிமாறி வந்தவர்கள் தாம். நேற்றுவரை வேறொரு ஓட்டுக் கட்சியில் ஒட்டியிருந்து எல்லாவித ஓட்டுக் கட்சி இலக்கணங்களையும் பிசகின்றி செய்து வந்தவர்கள் திடீரென ஆம் ஆத்மியில் சேர்ந்தவுடன் புனிதர்கள் ஆகி விடுவார்களா? இவர்களில் ஓரிருவர் அமைச்சர்களாகக் கூட ஆகிவிட முடியும். எவ்வித வரைமுறைகளும் இன்றி இவர்களைச் சேர்த்துக் கொண்ட ஆம் ஆத்மியும், கேஜ்ரிவாலும் எந்த விதத்தில் சாதாரண அரசியல் ஓட்டுக் கட்சிகளை விட மாறுபட்டவர்?

 siku

இவை எல்லாவற்றையும் விட கேஜ்ரிவால் யார்? ஆம் ஆத்மி எப்படிப்பட்டது? எனும் கேள்விகளில் தான் மக்கள் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அடங்கியிருக்கிறது. இதை புரிந்து கொள்வதற்கு, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், சிந்தனைக் குழாம், குடிமைச் சமூக அமைப்புகள் போன்றவை குறித்த தெளிவு வேண்டும்.

 

தொண்டு நிறுவனங்கள் குறித்து பலரும் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடல்புறங்களிலிருந்து மீனவர்களை அகற்றுவது எப்படி? என்று அரசு சுற்றி வளைத்து யோசனை செய்து கொண்டிருந்த போது சுனாமி வந்தது. களத்தில் இறங்கின தொண்டு நிறுவனங்கள். மீனவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் மெழுகுதிரி செய்வது, அலங்காரப் பொருட்கள் செய்வது என்று சொல்லிக் கொடுத்து ‘சம்பாதிக்கும்’ ஆசை காட்டினார்கள். அதாவது மீனவர்களை மீன்பிடிப்பதிலிருந்து நைச்சியமாக வெளியேற்றினார்கள். இது தான் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பணி.

 

அரசு அதிகார அமைப்பினரின் பணியே எந்த திட்டத்தில் எவ்வளவு கமிசன் அடிப்பது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது என ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுப்பது என்று ஆகிப்போனது. ஓட்டுக் கட்சி அமைச்சர்களுக்கோ தங்கள் துறை சார்ந்த அறிவு கொஞ்சமும் இருப்பதில்லை. என்றால் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் இடும் கட்டளைகளை மக்களை ஏய்த்து அமல்படுத்தும் திட்டங்களை தீட்டுவது யார்? இந்த இடத்தில் தான் சிந்தனைக் குழாம்களின் பங்களிப்பு வருகிறது. லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் காசு வாங்கிக் கொண்டு இது போன்ற திட்டங்களுக்கான யோசனைகளை தெரிவிப்பதற்கென்றே அமெரிக்க மூளை பொருத்திய இந்தியர்கள் பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தாம் சிந்தனைக் குழாம்கள் என்றழைக்கப்படுகிறார்கள். மானியத்தை வெட்டும் திட்டத்துக்கு உங்கள் பணம் உங்கள் கையில் எனும் பெயர் வேறெப்படி வந்திருக்க முடியும்? விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேசன் எனும் சிந்தனைக் குழாமின் இயக்குனர் அஜித் தோவால் இப்போது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  நர. மோடியின் முதன்மைச் செயலாளராக அதன் உறுப்பினர் நிரிப்பேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு உறுப்பினரான பி.கே மிஸ்ரா கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்தனைக் குழாம்கள் தான் அரசின் மூளையாக செயல்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமா?

 

தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்களை நடத்துவது அரசின் வேலையல்ல என்று அறிவுஜீவிகள் எனப்படுவோர் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொள்கை முடிவுகளை அரசு அதிகாரிகள் மட்டும் செய்யக் கூடாது மக்கள் குழுக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும் என்கிறார்கள் ஜனநாயகவாதிகள் எனப்படுவோர். சாராயக்கடை நடத்துவது தான் அரசின் வேலையா என எதிர்க் கேள்வி கேட்டால் அறிவுஜீவிகள் பதில் கூற மாட்டார்கள். அரசின் கொள்கை முடிவுகளில் மக்களுக்கு பங்கிருக்க வேண்டுமல்லவா சேரிகளிலும் வந்து கருத்தெடுப்பு நடத்துங்கள் என்றால் ஜனநாயகவாதிகள் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். அப்படி என்றால் அவர்கள் சொல்ல வருவது என்ன? பெரும் தொழில் நிறுவனங்களை, சேவைத்துறைகளை அரசு கைகழுவி விட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தடையாக உள்ள மக்கள் நலச் சட்டங்களை நீக்கி அல்லது செயலிழக்கச் செய்து, பாதிக்கப்படும் மக்களின் எதிர்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பில்லாமல் அடக்க வேண்டும். இது தான் அரசின் பணி. இதற்கு தேவைப்படும் விதத்தில் குடிமைச் சமூகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகளின் கூற்று. குடிமைச் சமூகம் என்பது அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், சிந்தனைக் குழாம்கள் ஆகியவற்றின் கூட்டு. இப்படிப்பட்டவர்கள் அரசுகளுக்கு ஆலோசனை கூறினால் அது ஊசிமுனை அளவுக்காவது உழைக்கும் மக்களுக்கு பலனளிக்குமா?

 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் ஊழல்களை ஒழிக்கப் போவதாய் கூறிக் கொண்டு அந்த ஊழல்வாதிகளின் பணத்திலே உண்ணாவிரதம் இருந்தார் அன்னா ஹஸாரே. அப்போது அவரின் வலக்கரமாய் அறிமுகமானவர் தான் கேஜ்ரிவால். ஆனால் 2003ம் ஆண்டிலேயே குடிமைச் சமூகம் இதழ் கேஜ்ரிவாலை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறது. அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் ஒழிப்பு சூப்பர் ஷோவுக்கு முன்னணியில் நின்றவர்கள் அனைவரும் அமெரிக்காவின் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியில் வழங்கப்படும் மகசாசே விருதைப் பெற்றவர்கள். ஆம் ஆத்மியை உருவாக்கியவர்களான அர்விந்த் கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், மனீஷ் சிசோதியா ஆகியோர் அதே ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியில் அரசுசாரா தொண்டு நிறுவனம் நடத்தியவர்கள். அதிலும் கேஜ்ரிவால் நடத்திய கபீர் எனும் தொண்டு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக அருந்ததிராய் குற்றம் சாட்டியபோது கேஜ்ரிவால் அதை மறுக்கவே இல்லை. அதேநேரம் ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் பிரதிநிதியான ஸ்டீவன் சோல்னிக் 2008ம் ஆண்டு வரை 3,69,000 அமெரிக்க டாலரை கேஜ்ரிவாலுக்கு வழங்கியிருப்பதாக ஒப்புக் கொண்டார். இப்படி அன்னிய நாட்டு நிதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒன்று கூடி கட்சியமைத்து இரண்டே ஆண்டுகளில் தில்லியில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

 

சரி ஆட்சியில் அமர்ந்து விட்டார். இனி என்ன வழியில் அவர் ஆட்சி நடத்துவார்? முன்னர் நாற்பத்துச் சொச்சம் நாட்கள் அவர் ஆட்சி செய்தபோது என்ன செயதார்? என்ன சொன்னார்? “எனக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. சித்தாந்தம் இல்லாமல் இருப்பதே என்னுடைய சித்தாந்தம்” என்றார். ஆனால் அதனைத் தொடர்ந்து, “கார்ப்பரேட் துறை நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஓபன் மாகஸின் எனும் இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். பெரிய அளவில் ஊழலைத் தொடங்கி அதனை இன்று வரை கட்டிக் காத்து வருபவர்கள் கார்ப்பரேட் முதலாளிகள். ஆனால் அவர்கள் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறினால் அதில் ஒழிந்திருக்கும் சித்தாந்தம் என்ன? எனக்கு எந்த சித்தாந்தமும் இல்லை என்று கூறிக் கொண்டே முதலாளித்துவம் தான் என்னுடைய சித்தாந்தம் என சுற்றிவளைத்து கூறினால் அதன் பொருள் என்ன? இப்படிப்பட்டவர் தன்னை கண்டெடுத்து, கட்டுரை எழுதி பிரபலமாக்கி, விருது கொடுத்து, பணம் கொடுத்து, இன்று ஆட்சிக் கட்டில் வரை உந்தித் தள்ளி கொண்டு வந்திருக்கும் ஃபோர்டு ஃபவுண்டேஷனுக்கு ஆதரவாக இருப்பாரா? மக்களுக்கு ஆதரவாக இருப்பாரா?

 

சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை தில்லியில் தடை செய்வதாக அறிவித்த போது “தான் பன்னாட்டு முதலீடுகளுக்கு எதிரி அல்ல, சில்லறை வணிகத்தில் அவர்களை அனுமதிப்பது வேலை வாப்பைப் பாதிக்கும் என்பதால் மட்டுமே அதனை எதிர்க்கிறேன். தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை” என்று ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிக்கிறோம் என்று கூறிக் கொண்டுதான் மோடி குஜராத்தில் டாடா நானோ கார் தயாரிப்புக்கு ஒரு லட்ச ரூபாய் காரை ஒரு ரூபாய்க்கு விற்றால் கூட லாபம் பார்க்கலாம் எனும் அளவுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொட்டினார். தமிழ்நாட்டில் கருணாநிதி நோக்கியா நிறுவனத்துக்கு முதலீட்டை விட அதிகமாக சலுகைகள் வழங்கினார். நிதி நெருக்கடியால் மானியங்களை வெட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் முதலாளிகளுக்கு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சலுகைகள் காண்பிக்கப்படுகின்றன. இப்படியான பொருளாதாரக் கொள்கையைத் தான் அனைத்து கட்சிகளும் கொண்டிருக்கின்றன, அமல்படுத்துகின்றன. அது தான் கேஜ்ரிவாலின் பொருளாதாரக் கொள்கை என்றால் மோடிக்கும் கேஜ்ரிவாலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

 

தன்னுடைய பொருளாதாரக் கொள்கையை வலிந்து கூறும் கேஜ்ரிவால், காஷ்மீர் பிரச்சனை, தலித்களின் மீதான ஒடுக்குமுறை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறித்தனமான அரசியல், ஊழல் ராணி ஜெயா இவை குறித்தெல்லாம் ஏதாவது கருத்து தெரிவித்திருக்கிறாரா? அப்படியென்றால் அவரின் உள்ளடக்கம் என்ன? நாட்டில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் பெருச்சாளிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறுபடுகிறார் கேஜ்ரிவால்?

 

உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் காலால் இடும் கட்டளைகளை தலைமேற்கொண்டு செய்து முடிப்பது மட்டுமே இந்திய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் பணி. இதில் மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டுமே என்பதற்காக சில மேற்பூச்சுகள் செய்து கொள்ளலாமே தவிர வேறொன்றும் இவர்களால் செய்து விட முடியாது. இதில் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனால் ஆளை மாற்றுவார்கள். அப்படித்தான் தொழில்சார் சட்டங்களில் கார்ப்பரேட்டுக்கு சாதமான விசயங்களைச் சேர்ப்பது தாமதமானதால் ‘அண்டர் அச்சீவர்’ என்ற பட்டத்தை முகத்தில் ஒட்டி மன்மோகன் சிங்கை விரட்டியடித்தார்கள். மோடி அதை வேகமாக செயல்படுத்தினாலும் அதை மறைப்பதற்காக இந்துவெறி பாசிசங்களை சுதந்திரமாக உலவ விட்டிருப்பது அமெரிக்க எஜமானர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் ஒபாமா இந்தியா வந்த போது காந்தி இப்போது இருந்தால் இந்தியாவின் மதவாத தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியடைவார் என்று மோடியின் முகத்தில் துப்பி விட்டுப் போனார். சீக்கிரமே மோடி மக்களிடம் விளக்குமாற்றால் அடிவாங்க நேர்ந்தால் என்ன செய்வது என்று முன்னதாகவே அடுத்த மோடியை தயார் செய்கிறார்கள். அது தான் அரவிந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும்.

 

நொருங்கி வீழும் நிலையில் இருக்கும் இந்த நெருக்கடியின் கோரத்தால் மக்கள் வாழவே முடியாமல் தத்தளிக்கிறார்கள். அது அரசுக்கு எதிரான கோபமாக உருமாறும் போதெல்லாம் அழும் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல ஆளை மாற்றுகிறார்கள். இது அவர்களின் கோபத்தை தணித்திடுமா? மக்களுக்கு நல்வாழ்வு கிடைத்திடுமா? நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களையும் கொள்ளையடிப்பதையே முன்னேற்றம் என்று நம்பவைத்து கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளை மாற்றுவதால், கட்சியை மாற்றுவதால் மக்களையும் நாட்டையும் காக்க முடியாது. அதற்கு ஒரே வழி மக்களிடம் அதிகாரம் வர வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் அதிகாரத்துக்கான மக்கள் குழுக்களை கட்டியமைக்க வேண்டும். மக்களுக்கு தேவையில்லாத சுமையாக இருக்கும் அரசு அமைப்புகளை நொருக்கி வீழ்த்த வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம்.

 

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தி சில ஊர்களில் பேசிவிட்டால் அது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகிவிடும் என்றால், இந்தியாவில் ஊழல் என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாதவாறு அழிந்து போயிருக்கும். அந்த அளவுக்கு எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் வியாதிகளும் பாகம், பாகமாக ஊழல் ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்கள்.  ஆனால் நாற்பதுகளில் சில ஆயிரங்களில் இருந்த ஊழல் இன்று பல லட்சம் கோடிகளாக வளர்ந்திருக்கிறது.  இந்த ஜன் சேத்னா ரத் யாத்ரா தன் 38 நாள் உழவை முடித்ததும் ஊழல் பயிர் எவ்வளவு மகசூல் காணுமோ.

 

இப்போதே இந்த யாத்திரைக்கு பாஜக தலைவர்கள் அதிக அக்கரை காட்ட வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் உத்தரவு போட்டிருக்கிறது.  ஏற்கனவே ஊழல்களால் காங்கிரஸ் சரிவை கண்டிருக்கும் வேளையில், மோடி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை தேசிய அளவில் உயர்த்தி காட்ட முயன்றிருக்கிறார். செய்தி ஊடகங்கள் குஜராத்தை உள்நோக்கத்துடன் கொண்டாடி வருகின்றன.  இந்தநிலையில் தாம் ஏதாவது செய்யாவிட்டால் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் தம் கனவுகள் திரிசங்கு வானத்தில் தான் மிதக்கும் என்று தெரியாதவரா அத்வானி. அதனால் தான் கிளம்பிவிட்டர் ரதத்திலேறி. ஆனால் மக்கள் முட்டாள்களல்லவே.

 

என்ன சொல்ல வருகிறார்கள் இந்த ரத யாத்திரை மூலம்?  சில நாட்கள் ரத யாத்திரை நடத்தி ஊழலை ஒழித்து விடுமளவுக்கு ஊழல் என்பது சதாரணமானது தான் என்கிறார்களா? அல்லது ஊழல் குறித்து மக்களுக்கு என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்கள்? ஊழல் செய்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகள் அந்த ஊழல்களால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் மக்களிடம் ஊழலுக்கு எதிராக என்னவிதமான பரப்புரை செய்வார்கள்?  ரதமாக மாற்றப்பட்டபேருந்தில் லிப்ட் உதவியுடன் கூரையில் ஏறி நின்று ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும்பணத்தை கொண்டுவந்தால் இந்தியக் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தலாம், சாலை போடலாம், பள்ளிக் கூடம் கட்டலாம்.  ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு ஆதர்ஸ், காமன்வெல்த், 2ஜி என ஊழல் செய்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.  சரி, பாஜக ஆளும்போது என்ன செய்தது? சவப்பெட்டி ஊழல் தொடங்கி எதியூரப்பாவின் நிலபேர ஊழல் வரையான கல்வெட்டுக்களை என்ன செய்வது?  மைய அரசிலோ, மாநிலங்களிலோ ஊழல் செய்யாத ஆட்சி எது? ஊழல் செய்யாத கட்சி என்று ஏதாவது உண்டா? இங்கு இருப்பதெல்லாம் இரண்டே வகை. ஒன்று, ஊழல் செய்து மாட்டியவர்கள், இன்னொன்று, இன்னும் மாட்டாதவர்கள். இதில் யாருக்கு யார் படம் காட்டுவது?

 

2ஜி, ஆதர்ஸ், காமன்வெல்த், சவப்பெட்டி, போபர்ஸ் இவை மட்டும் தான் ஊழலா?   இது வரை ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? கையூட்டு பெற்றதாய் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதை ஊழலாக கொள்வதற்கு நமக்கு கற்றுத் தருகிறார்கள் இவர்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் அத்தனையும் ஊழல் தான். அந்த வகையில் இந்த அரசும், இந்த அரசின் கொள்கையுமே ஊழல்தான்.  தமிழகத்தில் நோக்கியா நிறுவனத்திற்கு, குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலைக்கு தொழில் தொடங்க அந்தந்த நிறுவனங்கள் முதலீடாக போட்ட தொகையைவிட அதிகமாக மக்கள் வரிப்பணம் சலுகையாக கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதை முன்னேற்றம் என்பவர்கள் திட்டம் போட்டோ, சட்டம் போட்டோ, ரதயாத்திரை நடத்தியோ ஊழலை என்ன செய்வார்கள்? 2ஜியில் நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி இழப்பு என்று கூறியவர்கள் இதுவரை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டதில் எத்தனை லட்சம் லட்சம் கோடிகள் நாட்டிற்கு இழப்பு என்பதை கணக்குப் பார்க்கட்டும். இவைகளை ஏன் ஊழலாக காண மறுக்கிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளபடி ஐந்து லட்சம் கோடி முதலாளிகளுக்கு சலுகையாக கொடுத்திருக்கிறார்கள். இவைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

 

இன்னும் சாலை காணாத கிராமங்களுக்கு, மின்சாரம் பாயாத கிராமங்களுக்கு, கல்விக் கூடங்கள் நுழையாத கிராமங்களுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டுவந்தால் தான் முடியும் என்றால் தனியார் கல்லூரிகளும், தொழிற்சாலைகளும் மின்சாரத்தில் குளித்து பளபள சாலைகளில் தலை வாருவது எப்படி? ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை கருப்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் யாவர்? நாட்டின் வளங்களை சுரண்டிக் கொள்ளையடிக்கும் தனியார் முதலாளிகளும், அவர்கள் வீசி எறிவதற்காய் காத்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் தானே. இவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது கருப்பு வண்ணமென்றால் இங்கு குவித்து வைத்திருப்பதை என்ன வண்ணம் என்பது? நினைவிருக்கிறதா, கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்,உங்கள் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதோடு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்ததற்காக ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்பட்டார் சிதம்பரம். ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை அறிவித்தால் சட்டச் சிக்கல் வரும் என்றார் மன்மோகன் சிங். பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்காகவே தனி அமைச்சரவையை ஏற்படுத்தியது பாஜக. பங்குச் சந்தையை வீழச் செய்வோம் என்று லேசாக மிரட்டியதற்கே வைப்பு நிதியை சந்தையில் கொட்டினார் வாஜ்பாய்.  இவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று கூறினால், நாம் எந்த வாயால் சிரிப்பது?

 

இந்த ஓட்டுப் பொறுக்கிகள் பொழுதுபோகாமல் நடத்தும் கூத்துகளில் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பினால் இருக்கும் கோமணமும் களவாடப்படுவது தெரியாமல் போய்விடும்.  இவர்களை ஓட்டுப் போடாமல் தண்டித்துவிட்டால் திருந்தி விடுவார்கள் என்று நம்பினால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி.  இவர்களை ஓடுமொத்தமாய் விரட்டியடிக்காதவரை ஊழல் ஒழியப் போவதும் இல்லை.  மக்களுக்கான வாழ்வு மலரப் போவதும் இல்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

13 நாள் கூத்து முடிந்துவிட்டது, அடுத்தென்ன?

 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


%d bloggers like this: