ஒற்றை பொம்மைக்கு ஓராயிரம் ஆட்டங்கள்

உங்கள் அலுவலகத்தில் ஒரு முத்திரைக் கட்டை தேய்ந்து விட்டால் என்ன செய்வீர்கள்? சத்தமில்லாமல் இன்னொன்றை வாங்கிக் கொள்வீர்கள். மாறாக அனைத்து அலுவலர்களும் கூடிப்பேசி, கலந்தாலோசித்து, வழிகேட்டு திட்டமிட்டு என ஆர்பாட்டமாக அமர்க்களம் செய்தால் .. .. அது தான் குடியரசுத் தலைவர் தேர்தல். அரசியலில் கவனம் கொண்டிருக்கும் யாருக்கும் கடந்த சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் கேள்வி இது தான், ‘ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு ஏன் இத்தனை சதிராட்டம்?’ மூன்றாம் வகுப்பு மாணவன் கூட குடியரசுத் தலைவருக்கு ஏதாவது அரசியல் அதிகாரம் இருக்கிறது என்றால் நம்பமாட்டான். பின் ஏன் .. ..?

 

இந்த முறை குடியரசுத் தலைவராக ஆகவிருப்பவருக்கு முக்கியமான பணி ஒன்று காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அதே நேரம் தற்போதைய கூட்டணிகளிலும் கூட ஆட்சியமைக்கும் அளவுக்கான எண்ணிக்கையில் எம்பிக்கள் கிடைப்பார்கள் என்று எந்தக் கட்சிக்கும் நம்பிக்கையில்லை. எனவே அந்த நேரத்தில் நடத்தப்போகும் குதிரை பேரங்களுக்கும், ஆள் கடத்தல், போன்ற பண விளையாட்டுகளுக்கும் தங்களுக்கு உகந்தவராக இருப்பவரை அந்த அலங்கார மாளிகையில் உட்கார வைத்து விட்டால், அதுவே அதிகார ருசியை சுவைப்பதற்கு இலை விரித்தது போலாகும் என்பதனாலேயே ஒவ்வொரு கட்சியும் தத்தமது கூட்டணிகளுடன் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.

 

இந்த பந்தயத்தில் முன்னணியில் நிற்பது ஆளும் காங்கிரஸ் கட்சி தான். எண்ணிக்கை பலத்தால் மட்டுமல்லாது, ஆளும்கட்சி என்பதால் கிடைக்கும் பலன்களை பங்கிட்டுக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஏனைய கட்சிகளிலும் குடி கொண்டிருப்பதன் அடிப்படையிலும் அது பந்தயத்தில் முந்தியிருக்கிறது. இல்லையென்றால் மாயாவதி, முலாயம் தொடங்கி சிவசேனை வரை காங்கிரஸை ஆதரித்து நிற்பதற்கு கொள்கை வழிப்பட்ட உறுதி என்று நாம் நம்ப வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இந்த குடியரசு தலைவர் தேர்தலை முன்வைத்து திட்டங்கள் இருக்கின்றன. அந்த திட்டத்தின் வழியில் தான் ஆதரவும், எதிர்ப்பும், ஒதுங்கலும் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதேயன்றி அவர்கள் பீற்றிக் கொள்வது போல் குடியசுத் தலைவர் எனும் பதவியின் கண்ணியத்தினாலோ, அதன் அதிகார மதிப்பினாலோ அல்ல. இது யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை.

 

பாஜக கூட்டணியிலோ கடைசி வரை குழப்பம். யார் பெயரைப் பரிந்துரைத்தாலும் வடக்கு ஒன்றும் தெற்கு ஒன்றுமாய் அவிழ்ந்த நெல்லிக் காய் மூட்டையாகிறது கூட்டணி. முன்னாள் அரசவைக் கோமாளியைக் கொண்டு வந்து அகடவிகடம் செய்ய எத்தனித்தார்கள். கடைசியில் ஜெயலலிதாவின் கணக்குப் பண்ணலுக்கு பணிந்து சங்மாவை முன் தள்ளி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

 

இடதுசாரிகள் என்ற பெயரில் இடறி உலவும் கும்பல்களும் இங்குண்டு. சிபிஐ முதலில் தலித் பெண் வேட்பாளர் என்று ‘சவுண்ட்’ விட்டுப் பார்த்தது, பரமக்குடியில் தலித் மக்களை சுட்டுக் கொன்ற ஜெயா எட்டி உதைத்த பின்னும் தொத்திக் கொண்டிருக்கும் நிலையை எண்ணி வெட்கப்பட்டிருக்கும் என எண்ணி விட வேண்டாம். அவர்களின் ‘சவுண்டை’ கேட்க ஆளில்லாததால் இப்போது புறக்கணிப்பு என்கிறது. மார்க்சிஸ்டுகளோ மம்தா யாரை எதிர்க்கிறாரோ அவரை ஆதரிப்பது தான் கம்யூனிச நிலைப்பாடு என்கிறார்கள்.

 

ஆளும் கூட்டணியிலிருந்து பிரணாப் முகர்ஜி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். இவர் பெயரை அறிவித்ததிலிருந்து இவரின் ஆளுமை குறித்தும், எல்லோருடனும் இணக்கம் பேணும் தன்மை குறித்தும், புள்ளிவிபரங்களை விரல் நுணியில் வைத்திருக்கும் திறமை குறித்தும், இன்னும் பலவாறாகவும் விதந்தோதப்படுகிறது. ஆனால் இவரின் தகுதி என்ன என்பதற்கு ஒற்றை எடுத்துக்காட்டு போதுமானது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம் அனைத்தையும் கருப்புப் பணம் என்று கொச்சைப்படுத்தக் கூடாது என்றாரே. இதற்கு மேலும் ஏதாவது அத்தாட்சி வேண்டுமா இவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு.

 

சங்மா என்று ஒருவரும் சீனில் இருக்கிறார். இவரின் தியாகம் மகத்தானது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் ‘இருக்கும்’ கட்சியையே துறந்திருக்கிறார். ஏனென்றால், பழங்குடியினரின் நலைனை பிரதிபலிக்கிறாராம். பசுமைவேட்டை என்ற பெயரில் அரசு பழங்குடியினரை கொன்றழித்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து இந்த பழங்குடிகளின் புதுத் தலைவர் ஏதாவது கூறுவாரா? பழங்குடிகளை இனி யாரும் புறக்கணிக்க முடியாது என்கிறார். முதலில் பழங்குடிகள் அவர்கள் வாழிடங்களிலிருந்து துரத்தப்படுவது குறித்த தன்னுடைய கருத்தை இந்த தலைவர் வெளிப்படுத்தட்டும்.

 

ஊர் ஊராகச் சென்று மேட்டுக்குடி சிறுவர்களிடம் “சீக்கிரம் தூங்குங்கள், 2020ல் இந்தியா விழித்துவிடும்” என்று காமெடி பண்ணிக் கொண்டிருக்கும் கோமாளி ஒருவரும் அவ்வப்போது தலை காட்டுகிறார். முன்னர் இவர் ராஷ்டிரபதி பவனில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த போது தான் குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை ரசித்துக் கொண்டிருந்தவர் தன் மாளிகையில் திரியும் மயிலுக்கு அடிபட்ட போது அதற்கு தனி எழுவூர்தியில் (ஹெலிகாப்டரில்) மருத்துவம் செய்வித்து கொண்டுவரும் வரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தவர். இவருக்கு மீண்டும் அந்த மாளிகையில் குடியிருக்க வேண்டும் என்று ஆசை. ஆனாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உறுதியாக தெரியாத போது போட்டியிலிருந்து நழுவிக் கொள்வது தான் தன் விஞ்ஞானி பிம்பத்துக்கு உகந்தது என்றும் எண்ணுகிறார்.

 

முதல் குடிமகனாவதற்கு நடக்கும் கூத்துகள் இப்படியிருக்க; ஒரு குடிமகன் 28 ரூபாய் சம்பாதித்தால் அவன் சுகமாக வாழலாம் என திமிரெடுத்து அறிவித்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மண் மோகன் சிங் ஐரோப்பிய முதலாளிகளின் லாப உத்திரவதத்திற்கு மக்களின் வரிப்பணத்தை பாடை விரித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் பெருச்சாளிகள் தின்று தீர்த்து மீதமுள்ளவைகள் புழுத்துப் போனாலும் பட்டினி கிடக்கும் மக்களுக்கு அரிசியை தரமாட்டேன் என்கிறார். இந்த லட்சணத்தில் இங்கு நடப்பது குடியரசாம், அதற்கு தலைவரை தேர்ந்தெடுக்கிறார்களாம்.

 

நம்புங்கள், உலகில் இந்தியா மிகப் பெரிய்ய ஜனநா.. .. .. .. நாயக நாடு.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

அன்பார்ந்த பொது மக்களே,

தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து ஜெர்மனியில் அணுமின் உலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகநாடுகள் முழுவதும் அணுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின்படி 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகளை அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ் நிறுவனங்களிடம் வாங்கி இந்திய கடற்கரைகள் முழுவதும் நிறுவும் முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது.

அணு உலைகள் பாதுகாப்பானது, மின்சார தட்டுப்பாட்டை நீக்கக் கூடியது, நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது, அணு உலைக்கு எதிராக போராடுவோர் தேச விரோதிகள் அன்னியக் கைக்கூலிகள் என்றும் தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், அப்துல் கலாம் போன்ற நபர்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறது. ஆர்எஸ்எஸ், பிஜேபி, சிவசேனா, காங்கிரஸ், சாதி சங்கங்கள் போன்ற மக்கள் விரோத கும்பல் பன்னாட்டு அணு உலை முதலாளிகளுக்கு ஆதரவாக பொய்ப் பிரச்சாரத்தை விசமமாக மக்கள் மத்தியில் கக்குகின்றன.

தற்போது இரத்தம்சிந்தியமக்கள் போராட்டத்தால் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அணு உலை கட்டும் திட்டத்தை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். கேரளாவில் மக்களும் அனைத்து கட்சிகளும் அணு உலைகளை எதிர்த்துப் போராடிவராமல் தடுத்துள்ளனர். இந்த உரிமை தமிழக மக்களுக்கு இல்லையா? மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிரிழப்பு, நோய்கள், அணுக் கழிவுகளை[ப் பாதுகாப்பது, விவசாய நிலங்கள், கடல்வளம் பாழாவது, காற்று மாசுபடுவது என பல்வேறு இழப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தகரை மக்கள் போராடக் கூடாதா? 1988ல் கூடங்குளத்தில் நடந்த போராட்டத்தினால் ராஜிவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கியதை மறக்க முடியுமா? சுற்றுச் சூழல் ஆய்வு, அணு உலை அமைப்பதற்கான சர்வதேச விதிமுறைகள் என எதையும் கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை. உறுதியான இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கு நாடுமுழுவதும் ஆதரவு பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற மத்திய, மாநில அரசுகள் தூதுக்குழு, பேச்சு வார்த்தை என்று ஒருபுறம் இழுத்தடித்து; மறுபுறம் தேசிய பாதுகாப்புச் சட்டம்,முப்படை இராணுவம், போலீசு, பொய்வழக்கு என மிரட்டி ஒடுக்கிவிடலாம் என கனவு காண்கிறது.மக்களின் நலன்களிலிருந்து பரிசீலிக்காமல் முதலாளிகளின் லாபத்திலிருந்து பரிசீலிக்கிறது.

1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக் கதிர்வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது.மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான விவிஇஆர்1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட் காலம் 35 ஆண்டுகள் மட்டுமே. அதன்பின் இயக்க முடியாது.

ரஷ்ய சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் 2011ல் ரஷ்யப் பிரதமர் மெத்வதேயிடம் அளித்த அறிக்கையில் விவிஇஆர்1000 தொழில் நுட்ப அணு உலைகளில் (கூடங்குளம்) 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். அணு உலைக் கழிவுகளை மூவாயிரம் அடிக்குக் கீழ் புதைத்து, குறைந்தது 24000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். கதிர்வீச்சின் தாக்கம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும்.

இன்று மொத்தமின் உற்பத்தியில் 97% மக்களுக்கு பாதிப்பின்றி அனல்,நீர்,காற்று, கடலலை, சூரிய ஒளி, கழிவுகள் ஆகியவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. யூனிட்டுக்கு 2 ரூபாய் மட்டுமே செலவாகும். அணு உலைதான் ஒரே வழி என்பது போல பேசுவது மோசடியானது. பன்னாட்டு கம்பனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஷாப்பிங் மால்கள், தொலிழ்நுட்ப பூங்காக்களுக்கு 24 மணிநேர ஏ.சி. க்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற மின்சாரத்தை சிக்கனப்படுத்தினாலே அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை ஈடுகட்ட முடியும். இலவசங்களுக்குப் பதிலாக நாடு முழுவதும் சி.எப்.எல் பல்புகள் கொடுத்து மின் பயனீட்டு அளவைக் குறைக்கலாம். மக்களின் மின்சாரத் தேவைக்குத்தான் அணு உலைகள் என்பது மோசடியானது.

அணு உலையை இயக்க யுரேனியம் வெளிநாடுகளில் தான் வாங்க வேண்டும். பெட்ரோல் விலை போல அதுவும் உயரும். இதனால் உற்பத்திச் செலவு 10 ரூபாய்க்கும் மேலாகும். ஒருவேளை வெளிநாடுகள் யுரேனிய விற்பனையை நிறுத்தினால் அணு உலைகள் என்னவாகும்?இந்தியா மொத்த மின்சாரத் தேவையில், தற்போது இயங்கி வருகின்ற 18 அணு உலைகள் மூலம் 2.8% மட்டுமே கிடைக்கிறது. 2005ல் 3,310 மெ.வா உற்பத்தி செய்ய அணு உலைகளை இயக்க பயன்படுத்தப்பட்ட மின்சாரம் 4000 மெகாவாட் என்கிறார் பேராசிரியர் தீரேந்திர சர்மா. ஆனால் காற்றாலைகளால் மட்டும் தமிழகத்திற்கு 2040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

அணு உலையில் விபத்தே ஏற்படாது, 100% பாதுகாப்பானது என்று சொல்லுமரசவைக் கோமாளி அப்துல் கலாம்,வல்லரசு கனவு காணும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற அணு உலையை ஆதரிக்கும் நபர்களிடம் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறார். பல மாதங்களாக போராடும் மக்களை சந்திக்கவில்லை. பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என நினைத்தால் காவேரி ஆற்றில்கரிகாலன்கல்லணையை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டு தஞ்சை பெரிய கோவில் இருக்காது என லூசு தனமாக நம்மிடம் பேசுகிறார். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி அனைத்து அணு உலைகளையும் இயக்கினால் கூட இன்னும் 15 வருடங்களுக்குப் பின்பும் இந்திய மின் தேவையில் 7% மட்டுமே அணு மின்சாரத்தால் கிடைக்கும். பன்னாட்டு அணு உலை முதலாளிகளைப் பாதுகாக்கும் அணு சக்தி இழப்பீட்டு சட்டத்தை நீக்குவதற்கு மன்மோகன் சிங்கிடம் பேசுவாரா? மின் தேவைக்கு அணு உலைதான் ஒரே வழியா எனக் கேட்பாரா?

அணு மின் உலையினால் ஏற்படும் மிகப்பெரிய,தலைமுறைகள் கடந்த அபாயம்,அணுக் கழிவுகளைப் பாதுகாப்பது. ஏற்கனவே தாராப்பூர் அணு உலைக் கழிவை திரும்பப் பெறும் பொறுப்பை அமெரிக்கா நிராகரித்ததால், 20 ஆண்டுகளாக இந்திய அரசுபெரும் பொருட்செலவில் பாதுகாத்து வருகிறது. தற்போது கூடங்குளம் அணுக் கழிவுகளை எடுத்துச் செல்ல ரஷ்ய அரசு மறுத்துள்ளது. பொதுவாக அணு உலைகள் அணு குண்டு தயாரிப்புடன் பிணைக்கப்பட்டு இராணுவம், பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுவதால் இதில் நடக்கும் விபத்துகள், ஊழல்கள், தொழில்நுட்ப தோல்விகள், துரோகம் போன்றவை இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அணுசக்தித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் விவாதிக்க, நீதிமன்றத்தில் வழக்குப் போட உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனால் இந்திய மக்களின் 3 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம், லட்சக் கணக்கான மக்களின் உயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க இந்திய முதலாளிகள், அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்யும் அவலம் உள்ளது.

அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தின் படி விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அணு உலைகளை விற்ற பன்னாட்டு நிறுவனம் ரூபாய் 1500 கோடி கொடுத்தால் போதும். மீதிப் பணத்தை இந்திய அரசே மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அமெரிக்காவில்பிரைஸ் ஆண்டர்சன் சட்டத்தின் படி இதே அணு உலை நிறுவனங்கள் ரூபாய் 49,266 கோடி நட்ட ஈடாக வழங்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்க உயிரைவிட இந்திய உயிர் 33 மடங்கு கீழானது. அணு சக்தி ஒழுங்கு வாரியம், அணு உலை விபத்தை முக்கியத்துவம் இல்லாத விபத்து என அறிவித்தால் நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை. 24000 ஆண்டுகள் கதிர் வீச்சு உள்ள விபத்திற்கு 10ஆண்டுகளில் இழப்பீடு கோராவிட்டால் அதன்பின் சட்டப்படி கோரமுடியாது. சுனாமி, நிலநடுக்கம், போர், பயங்கரவாத நடவடிக்கைகளால் விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு நட்டஈடு வழங்க வேண்டியதில்லை.

இன்று கூடங்குளம் போன்றே இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு ரசாயண தொழிற்சாலை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரே இரவில் 20 ஆயிரம் மக்கள் துள்ளத் துடிக்க கொல்லப்பட்டனர். இன்றளவும் அதன் பாதிப்பு தொடர்கிறது. விசக் கழிவுகள் அகற்றப்படவில்லை. முறையாக இழப்பீடும் வழங்கப்படவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி ஆண்டர்சன் மீது இன்னும் விசாரணையே துவக்கப்படவில்லை. மற்ற குற்றவாளிகளுக்கு TVS-50 இடித்தால் என்ன தண்டனையோ அதுதான் வழங்கப்பட்டது. அன்றைய தினமே ஜாமீனிலும் விடப்பட்டனர். மத்திய அரசின் யோக்கியதை இதுதான். ஆனால் கூடங்குளம் அணு உலையில் பாதிகப்படும் மக்கள் வழக்கே தொடுக்க முடியாதபடி இந்திய அரசுக்கும் ரஷ்ய நிறுவனத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அணு உலைகள் கட்டுவது மக்களின் மின்சாரத் தேவையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல; இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம்,இந்திய பிரான்ஸ், இந்திய ரஷ்ய வர்த்தக உடன்பாடுகள், இந்திய முதலாளிகள் நலன் ஆகியவைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. இதில் மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு துளியுமில்லை. விவசாயம்,பொது வினியோகம், கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், சுயசார்பு விஞ்ஞான வளர்ச்சி, சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார தயாரிப்புக்கென தேவையான நிதியை ஒதுக்காமல், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாபவெறிக்காகவும், இந்திய அதிகார வர்க்கத்தின் வல்லரசு கனவுகளுக்காகவும் லட்சக்கணக்கான கோடி வரிப்பணத்தை பல ஆண்டுகளுக்குப் பின் கிடைப்பதாகக் கூறும் 7%அணுசக்தி மின்சாரத்திற்காக முதலீடு செய்வதன் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை. 40 ஆண்டுகள் கூட ஆயுளற்ற அணு உலைகளுக்கு, 400 தலைமுறை மக்களின் உயிரை, வாழ்க்கையை பணயம் வைக்கும் கொடூரத்தை அனுமதிக்கலாமா?

அறிவார்ந்த தேசப்பற்றாளர்களே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் அணு குண்டு, அணு உலை அரசியல், ஆதிக்க வல்லரசுக் கனவு, அமெரிக்க அடியாள் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம் மட்டுமல்ல இப்புவிப் பரப்பிலிருந்தே மனிதகுலத்திற்கு எதிரான அனைத்து அணு உலைகளையும் அகற்றும் வரை போராடுவோம். வாரீர்!

மத்திய மாநில அரசுகளே!

பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களை பலியிடாதே!

அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி போன்ற சுயசார்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி,காங்கிரஸ், சிவசேனா கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!

நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!

மனிதகுல விரோத அணு உலைகளை நாட்டை விட்டேவிரட்டியடிப்போம்!

பன்னாடுமுதலாளிகளின் லாபவெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 16/11/2011 – புதன், காலை 10 மணி

இடம்: பாலக்கரை, விருத்தாசலம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


 

%d bloggers like this: