முகிலன் எங்கே?

mugilan

பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள்

பாதுகாப்பு படையினாரால் வீடு இடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்ட ஜம்லா சோகி

 

கேரளாவில் நக்சல் பயங்கரவாதிகள் ஊடுறுவி விட்டதாக மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைக் கூட்டி அண்மையில் அறிவித்திருக்கிறார். குற்றால மலையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. உள்நாட்டு அச்சுறுத்தல் எல்லைமீறி போய்விட்டதாக ப.சிதம்பரம் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளுகிறார். சல்வாஜுடும் போன்ற ஆயுதக் குழுக்களை மாநில அரசுகள் கட்டியமைத்திருக்கின்றன. பல்லாயிரம் கோடி செலவில் ‘ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்’ எனும் படையெடுப்பை சொந்த மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது மைய அரசு. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்?

 

எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? உள்நாட்டு அச்சுறுத்தல் என்பதின் பொருள் என்ன? இந்த அரசும் ஆட்சியாளர்களும் உள்நாட்டு அச்சுறுத்தல் என்று கருதுவது யாருக்கான அச்சுறுத்தல் என்பதை விளங்கிக் கொண்டால், எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? என்பது எளிதாக விளங்கும். நாட்டு மக்களை எப்போதும் ஒருவித பீதியில் உறைந்திருக்கச் செய்வது தான் சிறப்பான ஆட்சி என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் மாக்கியவல்லி. உலகில் இருக்கும் அனைத்து அரசுகளும் மாக்கியவல்லியை குருவாக கொண்டாடும் அரசுகள் தாம். இந்திய அரசும் அதற்கு விதிவிலக்கானது அல்ல. இந்தியா என்றால் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. இருப்பதை எப்படி பெருக்குவது என்று கவலைப்படும் முதலாளிகள், அதிகார வர்க்கத்தினரின் இந்தியா. அடுத்த வேளை எப்படி உண்பது என்று கவலைப்படும், 28 ரூபாய் வருமானம் கிடைத்துவிட்டாலே அவர்கள் ஏழைகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருப்பவர்களின் இந்தியா. 90 சதவீத மக்கள் இருக்கும் இரண்டாவது இந்தியாவைத்தான் எப்போதும் அச்சத்தில் ஆட்டி வைக்க அரசுகள் விரும்புகின்றன. இந்த அச்சமூட்டலின் காரணங்கள் காலந்தோறும் மாறுபடும். சீனா, பாக்கிஸ்தான், இஸ்லாமிய பயங்கரவாதிகள் வழியாக தற்போது நக்சல்பாரி புரட்சியாளர்கள் அந்த பயங்காட்டலின் வேராக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

கடந்த சில ஆண்டுகளாக பசுமை வேட்டை (ஆபரேசன் கிரீன் ஹண்ட்) என்ற பெயரில் மத்திய கிழக்கு பழங்குடியினர் மீது பெரும் பொருட் செலவில் போர் ஒன்றை நடத்தி வருகிறது இந்திய அரசு. எதற்காக இந்தப் போர்? அங்கு கிடைக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்கக் காத்திருக்கின்றன பல பன்னாட்டு, தரகு நிறுவனங்கள். எங்கள் மண்ணை விட்டுத் தரமாட்டோம் என மறுக்கிறார்கள் பழங்குடிகள். சில முதலாளிகளை பலனடையச் செய்வதற்காக சில கோடி மக்களை கொன்றழித்தேனும் துரத்திவிடத் துடிக்கிறது அரசு. இதற்கு மறுபெயர் தான் ஆபரேசன் கிரீன் ஹண்ட். இதனை நியாயப்படுத்த பழங்குடிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாவோயிஸ்டுகளை எதிர்த்துத்தான் இந்த நடவடிக்கை என்கிறது அரசு. மாவோயிஸ்டுகள் விலகிவிட்டால் பசுமை வேட்டையை நிறுத்திவிடுமா அரசு? அரசின் நோக்கம் அந்த பழங்குடி மக்களை விரட்டியடிப்பது. அதை நியாயப்படுத்த மாவோயிஸ்டு பீதி பயன்படுத்தப்படுகிறது.

 

இதை பொதுமைப்படுத்திக் கூறினால், முதல் இந்தியாவுக்காக இரண்டாம் இந்தியாவை அழிக்கும் நடவடிக்கை. அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் இந்த முதல் இந்தியா, இரண்டாம் இந்தியா வேறுபாட்டை பிரித்துப் பார்க்கலாம். ஆனால் மக்கள் அப்படி பிரித்து பார்த்து உணர்ந்துகொண்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் காலந்தோறும் பீதிகள் பயன்படுத்தப்படுகின்றன. மக்களைக் கொல்வது, கடத்துவது, மிரட்டிப் பணிய வைப்பது இவைகளைத்தான் பயங்கரவாதம் என்று அரசு வரையறுத்திருக்கிறது. இவற்றை யார் செய்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள். கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் சில நிகழ்வுகளை படித்துப் பாருங்கள்.

 

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். பின்னர் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்

 

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர்

2011 மார்ச் இர‌ண்டாவ‌து வார‌த்தில் பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌. நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌(மொத்த‌ இருப்பு) த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

 

இவைகளெல்லாம் அரசு செய்த பயங்கரவாதத்தின் வெகு சில எடுத்துக்காட்டுகள். நாடு முழுவதும் இதுபோல் ஏராளம் ஏராளம் மக்களின் நினைவுகளில் வலிகளாய் எஞ்சியிருக்கின்றன. இவை அரசு வரையறுத்து வைத்துள்ள பயங்கரவாதம் எனும் அர்த்தத்திற்கு உள்ளிருந்து; அதேநேரம் அரசு அதை மீறுவதை இயல்பாக கொண்டிருக்கிறது எனும் அடிப்படையிலிருந்து எழுந்த செயல்கள். ஆனால், மெய்யாகவே பயங்கரவாதம் எனும் சொல் அதனிலும் பொருள் பொதிந்தது. மக்கள் தங்கள் உழைப்பிற்கு ஏற்ப பெற வேண்டிய வசதிகளையும், வாய்ப்புகளையும் மறுக்கின்ற எந்தச் செயலையும் பயங்கரவாதமாகவே கருத வேண்டும். அது வெறுமனே உடல் ரீதியான, பொருள் ரீதியான தாக்குதலை, இழப்பை மட்டும் குறிப்பதாக இருப்பதில்லை. இந்த வகையில் அரசின் செயல்கள் அனைத்துமே இதற்கு எடுத்துக்காட்டுகள் தாம்.

 

இந்தியா ஒரு விவசாய நாடு. நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு இன்னமும் வேலை வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருப்பது விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தான். ஆனால், பசுமைப்புரட்சி எனும் திட்டத்தின் மூலமும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலமும் விவசாயத்தையே கருவறுத்து, லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குள் தள்ளியிருக்கிறது அரசு.

 

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் திட்டமிட்டு, அலட்சியத்துடன் அணுகி, நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்தி நட்டமடைய வைத்து பின் தனியாரிடம் தாரை வார்த்திருக்கிறது அரசு. அதன் கோடிக்கணக்கான ஊழியர்கள் தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பலவற்றை படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறார்கள்.

 

தொழில்துறையிலும் பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு பலவாறான சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்துவிட்டு, உள்நாட்டு சிறு குறுந்தொழில்களுக்கு நெருக்குதல்களையும், வரிச்சுமைகளையும், மானிய சலுகைகள் வெட்டு போறவற்றை பரிசளித்து அவைகளை நலிவடைந்து போக வைத்திருக்கிறது அரசு.

 

கைத்தறி னெசவு சார்ந்த உற்பத்திக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு ரகங்களை ஒற்றைக் கையெழுத்தின் மூலம் நீக்கி அவற்றை பெரு விசைத்தறிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கூட உற்பத்தி செய்யலாம் என திருத்தம் கொண்டுவந்து நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் வயிற்றிலடித்திருக்கிறது அரசு.

 

சில்லறை வியாபாரத்திலும், காய்கறி வியாபாரத்திலும் ரிலையன்ஸ் போன்ற தரகு நிறுவனங்களையும், கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதித்ததன் மூலம் கோடிகணக்கான சிறு வியாபாரிகளை, தெருவில் கூவி விற்பவர்களை, தள்ளுவண்டி வியாபாரிகளை, மளிகைக்கடை உரிமையாளர்களை வாழ்விழந்து ஓட வைத்திருக்கிறது அரசு.

 

இது மட்டுமா?

 

தண்ணிரை தனியாருக்கு லிட்டருக்கு ஒரு பைசாவுக்கு கொடுக்கிறது அரசு, அவர்களோ அதை 12 ரூபாய்க்கு மக்களிடம் விற்கிறார்கள். அரசு வேடிக்கை பார்க்கிறது.

 

மின்சார உற்பத்தியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு, அதில் தனியாரை ஊக்குவித்து, அவர்களிடமிருந்து 17 ரூபாய்க்கு ஒரு யூனிட்டை வாங்கி 3 ரூபாய்க்கு அவர்களிடமே விற்கிறது அரசு. இதனால் ஏற்படும் மின்வெட்டும், விலை உயர்வும் மக்கள் தலையில்.

 

அன்றாட உபயோகப் பொருட்கள் முதல், உணவு தானியங்கள் வரை ஊக வணிக சூதாடிகளை அனுமதித்து அவர்களை கொள்ளையடிக்க வைத்துவிட்டு விலைவாசி உயர்வால் மக்கள் உண்ணும் உணவை குறைக்க, பட்டினி கிடக்க வைத்திருக்கிறது அரசு.

 

இவைகளோடு முடிந்து போகுமா?

 

தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை ஏவி அப்பாவி மக்களை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் பல்லாண்டுக் கணக்கில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னே தடுத்து வைத்திருக்கிறது.

 

ஐரோம் சர்மிளா பத்தாண்டுகளுக்கும் மேலாக உணவை உட்கொள்ளாமல் போராடியும் சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை நீக்க மறுக்கிறது.

 

இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி என்று பதாகை ஏந்திக் கொண்டு பெண்கள் நிர்வாணமாக போராடியும் வண்புணர்ச்சி செய்த இராணுவ அதிகாரிகளை விசாரிக்கக் கூட அனுமதி மறுக்கிறது.

 

அணு உலை வேண்டாம் என அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது தேச துரோக வழக்குகளை பதிவு செய்து மிரட்டுகிறது.

 

தண்ணீர் வரவில்லை என்று போராடினாலும், சாலைகளை அமைக்கக் கோரி போராடினாலும் போராடுபவர்களை போலீஸின் குண்டாந்தடி தான் முதலில் விசாரிக்க வருகிறது.

 

இப்படி அரசின் எந்த நடவடிக்கையை எடுத்துப் பார்த்தாலும் முதல் இந்தியாவைக் காப்பதற்காக இரண்டாம் இந்தியாவை எந்த எல்லைக்குச் சென்றும் விரட்டியடிக்க, தாக்கியழிக்க சித்தமாய் இருக்கிறது அரசு. இந்த வேறுபாட்டை மறைக்க முதல் இந்தியாவின் முன்னேற்றத்தை மொத்த இந்தியாவின் முன்னேற்றமாய் சித்தரிக்க முயல்கிறது. சாமனியனை வல்லரசு கனவில் மிதக்க வைக்க முயல்கிறது. இதை அம்பலப்படுத்த முயலும் யாரையும், மக்களுக்காக போராட முனையும் யாரையும் பயங்கரவாதிகளாய் முத்திரை குத்துகிறது. இனியும் மக்களை ஏய்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்தே உணர்ந்து வருகிறார்கள் யார் பயங்கரவாதிகள்? என்பதை.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: