அப்சல்குரு: நிரபராதியின் மரணத்தில் திருப்தியடைந்த இந்திய மனசாட்சி

afzal_guru_reuters

 

கடந்த 09/02/2013 சனியன்று காலை எட்டு மணிக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் எனும் வழக்கில் அப்சல் குரு தூக்கிலப்பட்டிருக்கிறார். அஜ்மல் கசாப் தூகிக்கிலடப்பட்டதைப் போல் இரகசியமாக தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இதனால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காஷ்மீரில் இரண்டு நாட்களாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிலிருந்து வெளியாகும் அனைத்து நாளிதள்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயங்கரவாதியை(!) தூக்கிலிடுவதற்கு ஏன் இத்தனை ஏற்பாடுகள்? இத்தனை பிரளயங்கள்?

மெய்யாகவே நாடாளுமன்றம் மக்களின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் இடம் தானா? எனும் விவாதத்துக்குள் நாம் புக வேண்டாம். மெய்யாகவே அப்சல் குரு பயங்கரவாதி தானா? எனும் விவாதத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நோக்கம் இப்படி நமக்கு விளக்கப்பட்டிருக்கிறது, “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” அதனாலும் கூட இப்படி ஒரு கேள்வி அவசியப்படுகிறது. அப்சல் குருவுக்கு நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் தொடர்பு இருக்கிறதா? இப்படி கேள்வி எழுப்பியவுடன் அதை தேசப்பற்றுடன் கயிறு போட்டு கட்ட வேண்டாம்.

2001 டிசம்பர் 13 ம் தேதி காலை 11:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தினுள் வெள்ளை கார் ஒன்று நுழைகிறது. நாடாளுமன்றத்தையே தகர்க்கக்கூடிய அளவுக்கு வெடிபொருட்களை கொண்டிருந்த அந்த காரிலிருந்து இறங்கிய ஐந்து பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்குகிறார்கள். பாதுகாப்பு வீரர்களும் திருப்பித் தாக்க, வந்த ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டுமல்லாது எட்டு பாதுகாப்பு வீரர்களும் ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்றத்தையே வெடித்துச் சிதறவைக்கும் அளவுக்கு வெடி பொருட்களை நிரப்பி வந்தவர்கள். அதை வெடிக்கச் செய்து மிகப்பெரிய பொருட் சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும், இறையாண்மை சேதத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் ஏன் துப்பாக்கியால் சுட்டார்கள்? என்பது முதன்மையான ஒரு கேள்வி. அடுத்து அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்பட்ட வாசகம், INDIA IS A VERY BAD COUNTRY AND WE HATE INDIA WE WANT TO DESTROY INDIA AND WITH THE GRACE OF GOD WE WILL DO IT GOD IS WITH US AND WE WILL TRY OUR BEST. THIS EDIET WAJPAI AND ADVANI WE WILL KILL THEM. THEY HAVE KILLED MANY INNOCENT PEOPLE AND THEY ARE VERY BAD PERSONS THERE BROTHER BUSH IS ALSO A VERY BAD PERSON HE WILL BE NEXT TARGET HE IS ALSO THE KILLER OF INNOCENT PEOPLE HE HAVE TO DIE AND WE WILL DO IT. தங்கள் எண்ணத்தை இவ்வளவு வெளிப்படையாகவும் விரிவாகவும் காரில் எழுதி வைத்துக் கொண்டு தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தை தாக்க வந்தார்கள் என்றால் காவல் துறை அமைத்த திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை இனியும் விளக்க வேண்டுமோ?

இந்த நாடாளுமன்ற தாக்குதலை யார் நடத்தினார்கள்? எதற்காக நடத்தினார்கள்? உள்ளிட்ட எந்த விபரமும் தண்டனை அளித்த நீதிபதி உட்பட யாருக்கும் தெரியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு உதவினார் என்று கூறி அப்சல்குருவும் கொல்லப்பட்டு விட்டார். என்றால் அந்த தாக்குதலை யார் எதற்காக நடத்தினார்கள்? இந்தக் கேள்விகளும் அப்சலோடு தூக்கிலிடப்பட்டு விட்டது. இனி யாராவது இந்தக் கேள்வியை எழுப்புவார்களா? மாட்டார்கள், ஏனென்றால் அப்சல்குருவின் தூக்கில் தான் இந்தியாவின் கூட்டு மனசாட்சி திருப்திப்படுத்தப்பட்டு விட்டதே.

நாடாளுமன்ற தாக்குதலோடு அப்சல் குருவை தொடர்புபடுத்தும் அம்சங்கள் என்ன? அதாவது துக்குத் தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு குற்றவாளிக்கு எதிராக உள்ள ஆதாரங்கள் என்ன? தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியின்(!) செல்போனிலிருந்து அப்சல்குருவின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது என்பது மட்டும் தான். அப்சல்குரு தான் உடந்தையாக இருந்திருக்கிறேன் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையால் பெறப்பட்ட அந்த வாக்குமூலம் செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தள்ளுபடி செய்து விட்டது. இதை விடுத்து இன்னொரு வாக்குமூலம் இருக்கிறது, அதில் தான் எப்படி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன் என்பதை அப்சல் குரு விளக்கியிருக்கிறார்.

காஷ்மீர் என்பது இந்து மன்னரால் ஆளப்பட்ட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் பகுதி. 47ல் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்களிடம் கருத்துக்கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்து இந்தியாவோடு இணைத்தார்கள். ஆனால் இன்றுவரை அந்த ஓட்டெடுப்பு நடத்தப்படவே இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வு, பின்னர் காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு தான்தோன்றித்தனங்கள், உள்ளிட்டவைகளால் அங்கு தேசிய விடுதலை இயக்கங்கள் தோன்றின. இதை ஒடுக்குகிறேன் என்று கூறி ஒருபக்கம் அடக்குமுறைகளையும் மறுபக்கம் அந்த இயக்கங்களை உடைப்பதற்காக துரோகக் குழுக்களையும் இந்தியா உருவாக்கியது. இவை இந்தியா மீதான வெறுப்பை தூண்டின, இது பின்னர் பாகிஸ்தானின் கைகளில் மதவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் உருமாற்றம் செய்யப்பட்டது. தோராயமாக ஒரு லட்சம் பேர் கடந்த 18 ஆண்டுகளில் பாதுகாப்புப்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசின் கணக்குப்படியே 3000 இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். இதற்காக நாளொன்றுக்கு 500 கோடி ரூபாயை செலவளிக்கிறது இந்திய அரசு. இது காஷ்மீரிகள் பயங்கரவாதிகளான கதை.

90களில் பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி எடுத்துத் திரும்பும் அப்சல் குரு பின்னர் அதில் பிடிப்பற்று மனம் திருந்தி திருமணம் செய்து அமைதியாக வாழ விரும்புகிறார். சாராயம் காய்ச்சியவனைக் கூட திருந்தவிடாத போலீசு முன்னாள் பயங்கரவாதியை(!) விட்டுவிடுமா? அவ்வப்போது மிரட்டி பணம் பறிக்கவும் ஆள்காட்டியாக வேலை செய்யவும் வற்புறுத்துகிறது. வேறு வழி தெரியாமல் சிறப்பு போலீசார் சொல்லும் வேலைகளை செய்து கொடுக்கிறார் அப்சல். இல்லாவிட்டால் என்றொ என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விட்டு எல்லைகடந்த பயங்கரவாதியை வீழ்த்தி விட்டதாய் போலீசு வீரப்பதக்கம் குத்திக் கொண்டிருக்கும். இதன்படி 2001ல் ஒரு போலீசு அதிகாரி ஒரு நபரை தில்லியில் விட்டு வருமாறு கூறுகிறார். (இவர்தான் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்படப் போகிறவர். இவர் செல்போனிலிருந்து தான் அப்சலுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததெனும் ஒரே ஆதாரம் எடுக்கப்பட்டிருக்கிறது) அதை செய்துவிட்டு திரும்பிய பின்னர் தான் அப்சல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆக, அப்சல் குரு இரண்டு வாக்குமூலங்கள் கொடுத்திருக்கிறார். ஒன்று தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து இந்தியாவின் மீது போர் தொடுத்ததாக(நீதிபதியின் வார்த்தைகளில்) ஒப்புக் கொண்ட தன்னை குற்றவாளியாக காட்டும் வாக்கு மூலம். இரண்டு, தான் சதித்தனமாக இதில் சிக்க வைக்கப்பட்டதாக, என்ன நடந்தது என்று விவரித்து தன்னை நிரபராதியாக காட்டும் வாக்குமூலம். இரண்டும் அப்சல்குருவால் கொடுக்கப்பட்டது தான். இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இரண்டில் எது சரியானது?

தன்னை குற்றவாளியாக காட்டி அப்சல் கொடுத்த வாக்குமூலத்தை எடுத்துக் கொண்டால், இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று நீதிமன்றமே தள்ளுபடி செய்திருக்கிறது.இந்த வாக்குமூலம் உண்மை தான் என்பதற்கான எந்த சான்றும் போலிசால் அளிக்க முடியவில்லை. தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளும் அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கு அப்சல்குரு அடையளம் காட்டியதைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. தன்னை நிரபராதியாகக் காட்டி கொடுத்த வாக்குமூலத்தை எடுத்துக் கொண்டால், இது தான் உண்மையாக நடந்தது என்பதற்கு இந்த வழக்கு நடந்த விதமே ஆதாரமாக இருக்கிறது. அவ்வளவு குளறுபடிகள்.

   1. அக்டோபர் 2005ல் அப்சல்குருவின் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் இல்லை என ஒப்புக் கொண்டது.
   2. இந்த தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளிகளான மசூத் அசார், காஜி பாபா, தாரிக் அஹமது ஆகியோர் பிடிக்கப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஐவருமே கொல்லப்பட்டு விட்டனர். இவர்களுக்கு உதவினார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு ஆதாரமும் இல்லை என்று உச்சநீதி மன்றத்தால் குறிப்பிடப்பட்ட அப்சல் மட்டுமே தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.
   3. வழக்கு விசாரனை முறையாக நடத்தப்படவில்லை. அப்சலுக்காக யாரும் வாதாட முன்வரவில்லை. வேறு வழியின்றி நீதி மன்றமே நியமித்த ஒரு வக்கிலும் அப்சலை ஒருமுறை கூட சந்தித்து கருத்து கேட்கவில்லை. அரசுத் தரப்பில் கொண்டு வந்த எந்த சாட்சியையும் குறுக்கு விசாரணை செய்யவில்லை. அப்சலுக்கு ஆதரவாக எந்த ஒரு சாட்சியையும் அழைக்கவில்லை.
   4. 2005 தீர்ப்பில் அப்சல்குரு எந்த ஒரு பயங்கரவாதக் குழுவுடனோ, அமைப்புடனோ தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியது.
   5. இந்த வழக்கில் அப்சல் வாக்குமூலம் கொடுத்து குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படும் வரையில் அப்சல் குருவின் தம்பி ஹிலால் காஷ்மீர் சிறப்பு நடவடிக்கைக் குழுவினரால் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.
   6. தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்(!) ஐவர் யார் என்பதற்கு அப்சல்குருவின் அடையாளத்தைத்தவிர வேறு சாட்சிகளோ அதாரங்களோ இல்லை.
   7. நீதிமன்றத்தில் தான் எந்த பயங்கரவாதியையும் அடையாளம் காட்டவில்லை என்றும், போலீசுதான் அவர்களின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டுமாறு கட்டாயப்படுத்தினார்கள் என்று கூறினார். ஆனால் அப்சலுக்காக நியமிக்கப்பட்ட வக்கீல் எந்த ஆதாரமும் இல்லாமலேயே அப்சல் கூறிய அடையாளத்தையும், பிரேத பரிசோதனை அறிக்கையையும் தாம் சாட்சியாக ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவிக்கிறார்.
   8. புலன்விசாரணையில் போலி ஆவணங்களும், பொய்களும், புரட்டுகளும் இருக்கின்றன, இது கவலை தரும் போக்கு என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
   9. ஜிலானியை கைது செய்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்சல்குருவை தேடி கைது செய்யும்படி தில்லி போலிஸ் ஸ்ரீநகர் காவல்துறைக்கு தகவல் அனுப்பியது டிசம்பர் 15 காலை 5:45 மணிக்கு என்று நீதிமன்றத்தில் தில்லி போலிசின் அறிக்கை பதிவாகி இருக்கிறது. ஆனால் தில்லி காவல் துறையின் பதிவுகளின்படி ஜிலானி கைது செய்யப்பட்டது டிசம்பர் 15 காலை 10 மணிக்கு. அதாவது ஜிலானியை கைது செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே ஜிலானியை கைது செய்து விசாரித்து தகவல்பெற்று அதனடிப்படையில் அப்சலை கைது செய்வதற்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.
   1. “இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டால் தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே தீர்ப்பில் தான் அப்சலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், அப்சல் எந்த பயங்கரவாத குழுவிலும் செயல்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

apsal

 

என்றால் யார் குற்றவாளி? இந்த நாடாளுமன்ற தாக்குதலை முன்னிருத்தி இந்தியா பாகிஸ்தானிலிருந்து தனது தூதரை திரும்பப் பெற்றது. வான்வழி, ரயில், பேருந்து என அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 5 லட்சத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் எல்லைக்கு நகர்த்தப்பட்டனர். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுதப் போரின் முனையில் இருந்தன. போர் நடவடிக்கைகளுக்காக மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் மக்களின் பணம் செலவழிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு துப்பாக்கிக் குண்டைக் கூட சுடாமல் பின்னர் திரும்ப வரவழைக்கப்பட்டது. இவைகளெல்லாம் எதற்காக? அன்றைய பாஜக அரசு திட்டமிட்டு நடத்திய நாடகம் தான் இந்த நாடாளுமன்றத் தாக்குதல். இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதால் தான் தொடர்ந்து அப்சல்குருவை தூக்கில் போடு என்று தொடர்ந்து பாஜக குரல் கொடுத்து வந்தது. பாஜகவின் ஆசையை காங்கிரசு நிறைவேற்றி இருக்கிறது. போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதை அம்பலப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து இந்த நாடகத்திற்கு வெவ்வேறு அளவுகளில் துணை போகின்றன.

அப்சல்குருவை தூக்கில் போட்டதை ஆதரித்ததால் தங்களின் தேசபக்தியை உறுதிப்படுத்திக் கொண்ட அனைவரும் ஒருமுறை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் நீதிமன்றங்கள் ஏன் தூக்கு விதித்து உறுதி செய்தன? எனும் கேள்வியை எழுப்பினாலே த்ல் வேறு வ்வகாரங்களும் இருக்கின்றன என்பது உறுதியாகும். முறையாக விசார்த்தால் வாஜ்பேயி அத்வானி உட்பட அன்றைய பாஜக அரசின் பல தலைவர்களும், அதிகாரிகளும் காவல்துறையினரும் இதில் தொடர்பு கொண்டிருப்பது தெரியவரும். இதற்கு மேலும் அப்சல்குரு நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி என்போர் “பாரத் ம்மாதாக்கி ஜொய்ய்ய்ய்ய்ய்” என்று பஜனை பாடிக் கொள்ளுங்கள். பரிசீலிக்க முன்வருவோர் போராட்டக் களம் காண வாருங்கள்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு

மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.  தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த தீர்ப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முதன்மையான அம்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

அய்யா ஆட்சியில் செய்ததை அம்மா நீக்குவதும்,  அம்மா ஆட்சியில் செய்ததை அய்யா நீக்குவதும் இங்கு வழக்கமானது. ஆனால் 1992ல் அம்மா ஆட்சியில் நடந்த இந்தக் கோரத்தை மறைக்கவும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும் அம்மாவும் அய்யாவும் ஒற்றுமையாய் செயல்பட்டிருக்கிறார்கள்.  அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களும் ஒன்றாய் கைகோர்த்து மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது தான் ஆட்சியாக, நிர்வாகமாக, அரசியலாக பய்ணப்பட்டு வந்திருக்கிறது.  நீதிமன்றத்தில் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்துவதென்றாலும், பரமக்குடியில் தாண்டவமாடுவது என்றாலும், நிகழ்வுகள் வேறாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். அரசை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் தான்.  இதுதான் வாச்சாத்தியிலும் நடந்திருக்கிறது எனும் போது, அம்மாவாக இருந்தாலும், அய்யாவாக இருந்தாலும் ஒன்றுதான்.

தொன்னூறுகளில், வீரப்பன், சந்தன மரம் போன்ற சொற்களெல்லாம் நாளும் உச்சரிக்கும் சொற்களாக இருந்தன.  காடுகளில் மறைந்து திரிந்த வீரப்பன் எனும் கொள்ளையனுக்கு கோடிகோடியாய் கொட்டிக் கொடுக்கும் சந்தன மரக் கடத்தலும், யானைத் தந்தங்களும் ஏன் தேவைப்பட்டது? எனும் கேள்வி எழுப்பப்படாமலேயே அவனை திட்டமிட்டுக் கொன்றதுடன் முடிந்துவிட்டது. பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தவரை வீரப்பன்கள் உருவாகவில்லை.  காடுகளின் ஓர் அங்கமாகவே இருந்த பழங்குடியினர் காடுகளை விட்டு துரத்தப்பட்டது தான் வீரப்பன்களுக்கு பலனில்லாத்போதும் வீரப்பன்களை உருவாக்கியது.

47ல் 40 நூற்றுமேனியாக இருந்த காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் 17 நூற்றுமேனியாக சுருங்கிப் போனது.  வாச்சாத்தியும் இதனுடன் இணைந்தது தான். தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலையடிவாரத்தில் இருப்பது தான் வாச்சாத்தி கிராமம். விவசாயமும், காடுகளில் சுள்ளி பொறுக்குதலும், கூலி வேலையுமே அந்த பழங்குடிகளின் வாழ்வாதாரம்.  இவர்களைத்தான் சித்தேரி காடுகளின் சந்தன மரங்களை வெட்டிக் கடத்த வனத்துறையினரும் காவல் துறையினரும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  பணம் அதிகமாக கிடைத்தாலும் நமக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள் ஒரு கட்டத்தில் மரத்தை வெட்டிக் கடத்த மறுக்கிறார்கள். 1992 ஜூன் 19 ல் வனத்துறையினர் சமாதானம் பேச ஊருக்குள் செல்கிறார்கள் என்றாலும் மக்கள் உறுதியாக மறுத்துவிடவே, மறுநாள் ஜூன் 20ம் தேதி வாச்சாத்தி மக்கள் சந்தன மரத்தை கடத்துவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், சோதனை போடும் அதிகாரத்துடன் வந்திருப்பதாகவும் கூறிக் கொண்டு வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மூன்றும் வாச்சாத்தியை சுற்றி வளைக்கிறது.

அன்றிலிருந்து மூன்று நாட்கள் வாச்சாத்தி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  அனைவரையும் ஒன்று திரட்டி ஒரே இடத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டார்கள். சேமித்து வைத்திருந்த தானியங்கள் வீதிகளில் கொட்டப்பட்டன.  சேர்த்து வைத்திருந்த பணம், தங்கம் போன்றவை திருடப்பட்டன.  குடிநீர் கிணற்றில் பெட்ரோலும், மண்ணெண்ணையும் கலந்து பாழக்கப்பட்டது.  ஆண்களை நிர்வாணப்படுத்தி ஒருவர் சிறுநீரை மற்றவர் குடிக்குமாறு துன்புறுத்தப்பட்டனர். எல்லாவற்றுகும் மேலாக 18 பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். அவர்களின் ஆடு கோழிகளை அடித்து சாப்பிட்டு விட்டு அமைதியாக சந்தனக் கட்டைகளை அடுக்கிவைத்து அதன் முன் ஊர் மக்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு வன்புணர்ச்சி செய்யப்பட்ட 18 பெண்கள் உட்பட 90 பெண்களையும், 15 ஆண்களையும்,  28 குழந்தைகளையும் கைது செய்து அழைத்துக் கொண்டு அந்த அரச பயங்கரவாத வெறிநாய்கள் வெளியேறிபோது 34 பேர் கொல்லப்பட்டிருந்தனர், 28 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

ஜூலை ஏழு வரை இப்படி ஒன்று நிகழ்ந்ததாக யாருக்கும் தெரியாது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூலமாக அறைகுறையாக செய்திகள் வெளிவருகிறது.  அன்றைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை அரூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்க புகார் பதிவு செய்யப்படவே இல்லை.  பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இது குறித்து விசாரணை கமிசன் அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அரசைப் பணித்தது.  இதனால் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையாளர் பாமதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி நீதி மன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகே நீதி மன்றம் வழக்கை பதிவு செய்யுமாறு ஆணையிட்டது. ஆனாலும் வழக்கை நடத்தவே வாச்சாத்தி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.  தமிழ்நாடு காவல்துறை வழக்கை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்க சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று போராடினார்கள்.  கிருஷ்ணகிரி நீதி மன்றத்திற்கும் தர்மபுரி அமைர்வு நீதிமன்றத்திற்கும் மாற்றி மாற்றி இந்த வழக்கு பந்தாடப்பட்டது, மட்டுமல்லாது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் தொடர்ந்து மாற்றப்பட்டனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்கள் ஒவ்வொருமுறை நீதிபதி மாறும் போதும் தங்கள் கூலி வேலை செய்தே வாழமுடியும் என்ற நிலையிலும் தயங்காமல் வந்து நடந்ததைக் கூறி போராடினார்கள்.  அதிகாரிகள் தரப்பிலிருந்து வழக்கை இழுத்தடிக்கும் அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டே இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

 

12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்

269 நபர்களில், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே மரணமடைந்து விட்ட 54 பேர் தவிர ஏனையவர்களுக்கு அவரவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக 9 மாதங்களும் கடுங்காவல் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு தீர்ப்பளித்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பத்து ஆண்டு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட17 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  மீதமுள்ள 198 பேருக்கும் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை என்பதால் பிணை வழங்கப்பட்டு வெளியில் விடப்பட்டுள்ளார்கள்.

அனைவரும் தண்டனை அடைந்து விட்டனர் என்பதோடு முடிந்துவிடும் விசயமல்ல இது. இப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்டனை அவர்கள் செய்த வன்கொடுமைக்கும், வன்புணர்ச்சிக்கும், தாகுதலுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திடீரென அவர்கள் ஊருக்குள் புகுந்து அத்துமீறி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முக்கியமான கேள்வியே அவர்கள் அதை ஏன் செய்தார்கள் என்பது. அதை நீதிமன்றம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது.  அதாவது, அந்த பழங்குடி மக்கள் சந்தன மரம் கடத்தினார்கள், அதை தடுக்கப் போன அதிகாரிகள் கொஞ்சம் வரம்பு கடந்து விட்டார்கள் அவ்வளவு தான். இது தான் நீதி மன்றத்தின் பார்வை. இவ்வளவு பெரிய அநீதி நடந்திருக்கிறது என்பதை விசாரிக்கும் போது இது ஏன் நடந்தது எனும் கேள்வியே எழாமல் தண்டனையளிக்க முடியும் என்றால், அந்த மக்களைப் பற்றி நீதி மன்றத்தின் பார்வை என்ன?  சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ எடுத்து நடத்தக் கோரும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பத்மினி ஜோசுதுரை சொன்ன காரணம் ”பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் இதுபோன்ற நடந்திருக்க வாய்ப்பில்லை“ என்பது.  இரண்டு நீதிபதிகளின் பார்வையிலும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  தொடக்கத்தில் இது மக்கள் கவனத்திற்கு செல்லாது எனும் நிலையில் பொறுப்புள்ள அதிகாரிகள் இப்படி நடக்கமாட்டார்கள் என்று கூறிய நீதிபதி, எல்லா ஆதாரங்களும் அம்பலப்பட்டுவிட்ட நிலையில் வேறு வழியின்றி இன்னொரு நீதிபதி தண்டனை அளித்திருக்கிறார்.

அரசு அதிகாரிகளின் அரசின் குணமாகவே இது இருக்கிறது. மக்களைப்பற்றி யாதொரு கவலையும் இன்றி நாட்டின் வளங்களை கொள்கை ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் தனியாருக்கு வாரிக் கொடுப்பது.  அதற்கு உடன்பட மறுத்தாலோ, எதிர்த்தாலோ தீவிரவாத முத்திரை குத்தி பசுமை வேட்டை போல இராணுவத்தை ஏவி கொன்றொழிப்பது, அல்லது போலி மோதல் கொலைகளில் சுட்டுக் கொல்வது. வாச்சாத்தி போல வெகுசில வழக்குகளிலேயே உண்மை வெளிவருகிறது. ஏனையவைகளில் தேசபக்தி முழக்கங்களில் குளிக்க வைத்து ஊடகங்கள் மக்களின் எதிர்ப்புணர்வில் மஞ்சள் பூசி விடுகின்றன.

என்ன சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கும், ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவிப்பதற்கும் மீண்டுமொரு வாய்ப்பாக இந்த வழக்கு வாய்த்திருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இது சில இடுகைகளாக நீளும். நண்பர் வெள்ளை அவர்களுக்கு நன்றி.

 

உண்மையில் எது பீர் புரட்சியாக இருக்கிறது?

 

ஒருவரின் சொல், செயல் அனைத்தின் பின்னாலும் தொழிற்படுவது அவரது வர்க்கமே. வர்க்கத்தை, வர்க்க அரசியலை விலக்கிவிட்டு யாராலும் செயல்பட்டுவிட முடியாது. வெகுமக்களின் செயல்களிளூடான வர்க்க அரசியலை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருக்கும். ஏனென்றால் அது அவர்களிடம் மரபாக, பழக்கமாக, கருத்தாக இருந்துவருவதன் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் சிலரின் செயல்பாடுகளில் அதைப் பிரித்தறிவது நுணுக்கமான அணுகல் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தவகையில், ஜெயமோகன் அவர்களின் “மாவோயிஸ வன்முறை”யும் அவரின் வர்க்க அரசியலை மறைக்கும் எழுத்து எத்தனங்களோடு அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாக அவர் எழுதியிருக்கும் அந்த நீள் கட்டுரையை சாதாரணமாக படிக்கும் அவரின் வாசகர்கள், அவரே கூறியிருப்பது போல, மனித மனங்களை உய்த்துணரக்கூடிய எழுத்தாளனுக்குறிய கோணத்தில், இந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கற்றுவரும் அடிப்படையில், மண்ணைச் சுற்றிவந்த பயணியின் அனுபவத்தில் மாவோயிச பிரச்ச‌னையை பல்வேறு தளங்களில் அலசி எழுதப்பட்ட ஒன்றாகவே எண்ணுவர். ஆனாலும் அவரின் விரிவான அந்த அலசலில் ஊடாடியிருக்கும் அவரின் நோக்கம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே செய்கிறது.

 

கம்யூனிசம், பொதுவுடமை எனும் சொற்களை பயன்படுத்துவனின்று கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் ஒட்டுமொத்த நோக்கம் கம்யூனிச எதிர்ப்பே. அதற்கு மாவோயிசம் ஒரு குறியீட்டு மையமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஊடகவியலாளர்களிலிருந்து தொடங்கி மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனமாக பயணித்து மார்க்சிய மேற்கோள்களின் உதவியுடன் முதலாளித்துவத்திற்கு மார்க்சியம் மாற்றாக முடியாது என முடிக்கப்பட்டிருக்கிறது.

 

அரசியல் நோக்கில் கருத்தாடும் வழக்கமும், நேரமும், உழைப்பும் எனக்கில்லை, அதனால் அரசியலை தவிர்த்துவிட்டு அனுகியிருக்கிறேன், எனக்கூறிக்கொண்டே தன்னுடைய மார்க்சிய எதிர்ப்பு அரசியலை நெய்து தந்திருக்கிறார். அதாவது எரியும் ஒரு பிரச்சனையின் அடிக்கொள்ளியை தவிர்த்துவிட்டு நெருப்பின் சாதக பாதக விளைவுகளை பார்க்கிறேன் எனக் கூறிக்கொண்டே அந்த நெருப்புக்கு தன்னுடைய கொள்ளியைத் தருகிறார்.

 

மாவோயிச அரசியலைப் பற்றி எழுதப்புகுமுன் தன்னுடைய வாசகர்களின் உளப்பாங்கை சாதகமாக வளைக்கும் மனப்பாங்குடன் பீர்கோப்பை புரட்சி எனும் உருவகத்தில் ஊடகவியலாளர்கள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறார். ஊடகவியலாளர்கள் குறித்து அவர் வரைந்திருக்கும் சித்திரத்தை முழுமையாக மறுக்க முடியாது. ஒட்டுமொத்தத் தன்மையில் அது அப்படித்தான் இருக்கிறது என்றாலும், எதை எங்கு பொருத்த வேண்டும் என்பதில் தான் அவரின் எழுத்தாள அனுபவத்தை பயன்படுத்தி மெய்யேபோன்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்.

 

நாட்டின் பெருமப்பான்மை மக்கள் நாளொன்றுக்கு எழுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைக் கடக்கிறார்கள், ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கும் சிறுபான்மை மக்கள் பீர்க்கோப்பை புரட்சி செய்கிறார்கள். இதில் அவர் தன்னை எங்கு இருத்திக்கொள்கிறார்? தன்னுடைய ஒரு மாத ஊதியம் அவர்களின் ஒருவேளைக் குடிப்பணம் என்பதன் மூலமும், அவர்கள் ஆயுதப் புரட்சியை ஆதரிக்கிறார்கள் நான் எதிர்க்கிறேன் என்பதன் மூலமும் நாளொன்றுக்கு 70 ரூபாய் வருமானம் பெறும் பெரும்பான்மை மக்களுடனும் இல்லாமல் மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் சிறுபான்மையினருடனும் இல்லாமல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை (ந‌டுநிலைமை(!)) தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏனென்றால் 70 ரூபாய் தினக்கூலியில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை, ஐம்பதினாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களின் பேச்சளவிலான அம்மக்களின் ஆதர‌வையும் சரியில்லை என காட்ட‌ வேண்டியதிருக்கிறது.

 

அலைக்கற்றை ஊழலின் போது, ஊடகவியலாளர்கள், அந்த‌ பாவனை தரும் வசதியை பயன்படுத்தி அதிகாரத்தரகு வேலை செய்திருப்பது அம்பலமானது. செய்தி ஊடகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதும், தம் வர்க்க நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்கும், அல்லாதவற்றை மக்களிடமிருந்து மறைப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. அவர்களின் ‘லாபியிங்’ வேலைகள் திசையை மறைத்து நடப்பனவும் அல்ல.

 

அதேபோல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரசனையுடன் மதுவை ருசித்துக்கொண்டே, சாலைகளில் படுத்துறங்கும் மக்களின் துயரம் குறித்து கவலைப்படும் ‘தன்னார்வப்’ பிதாமகர்களின் கவலை, அவர்கள் அள்ளிவிடும் பணம், இதெல்லாம் எந்த நோக்கில் வழிகின்றன, பாய்கின்றன என்று பலமுறை அம்பலப்பட்டிருக்கிறது, படுத்தப்பட்டிருக்கிறது.

இவர்களின், இவர்களை ஒத்தவர்களின் கவலையும், பரிவும்; ஊடகவியலாளர்களின் கட்டுரைகளில் தெரித்து விழும் சிவப்பும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை பாமரர்களுக்கு சற்றுமேல் விழிப்புடனிருப்பவர்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவை தாம். ஆனால் இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதற்கு எதிராக முன்னிருத்துகிறார் அல்லது இந்த பீர்க்கோப்பை புரட்சியை எதனுடன் தொடர்புபடுத்துகிறார் என்பதில் தான் அவரது அரசியல் இழையாடுகிறது.

 

இணையத்தில் புரட்சிகரமாக எழுதுபவர்களில், ஊடகங்களில் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துபவர்களில் களத்தில் செயல்படாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படாதவர்கள் என்பதினாலேயே அவர்களின் கருத்துகள் பீர்க்கோப்பை நுரையில் காணாமல் போய்விடுமா? எளிமைப்படுத்திப் பார்த்தால் யதார்த்தத்தை விரித்துக்காட்டி உண்மையை மறைப்பது. அதாவது, ஊடகவியலாளர்களின் லாபி, அவர்கள் சுயம் கருதி வெளிப்படுத்தும் அரசுக்கு எதிரான தன்மைகள் எனும் யதார்த்தத்தை விரித்துக்காட்டி, மெய்யாகவே கொள்கைப்பிடிப்புடனும், அரசின் பயங்கரவாதத்தை, அதன் ஒதுக்கல்வாதத்தை அருகிருந்து கண்ட வலியுடன் எழுதுபவர்களையும் கூட மறைத்துவிடுவது அல்லது அந்தக் கும்பலில் இவர்களையும் சேர்த்துவிடுவது. குறிப்பாக அருந்ததிராய், சாய்நாத், பினாயக் சென் போன்றவர்களின் எழுத்தும் செயல்பாடும் பீர்நுரையில் அடங்குவதுதான் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் குறிப்பால் உணர்த்துகிறார்.

 

ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? அதன் தேவை என்ன? நீள்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் அவருடைய அனுபவத்தினூடாக கட்டுரையில் பயணிக்க வேண்டுமேயல்லாது, தங்களுடைய சொந்த வாசிப்பனுபவத்தினூடாக, மெய்யான நிலைகளின் அறிதல்களினூடாக கட்டுரையில் பயணப்பட்டு விடக்கூடாது என்பது தான். அவருடைய நோக்கமான கம்யூனிச எதிர்ப்பை உறையிட்டுக்காட்டுவதற்கு அவருடைய சொந்தப்பார்வைதான் பயன்படுமேயன்றி, வாசகனின் விழிப்புணர்வை தூண்டுவது பயன்படாது. அதனால் தான் அரசியல் நோக்கராக சொல்லவில்லை என்றும் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று சொல்வதாகவும் தன்னுடைய ‘ஹோதா’வை தொடக்கத்திலேயே கடை பரப்பிவிடுகிறார்.

 

இப்போது சொல்லுங்கள் எது மெய்யான பீர்க்கோப்பை புரட்சி?

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி


மீண்டும் குஜராத் போலி மோதல் கொலைகள் இந்திய ஊடகங்களில் வலம் வருகிறது. ஒரு அலையைப் போல் சில நாட்கள் பேசப்படுவதும், அடங்கிவிடுவதும் பின் வேறொரு நாளில் மீண்டும் எழுவதும் என இதன் ஏற்றவற்றங்களினால் பெறப்படவேண்டிய உண்மை ஆழ்கடலில் மூழ்கிப் போயுள்ளது. தேர்தல் லாபத்திற்காக நடத்தப்பட்ட கொலைகள் என்று காங்கிரசும், நாட்டில் ஆயிரக்கணக்கில் போலி மோதல் கொலைகள் நடந்திருக்கும் போது குஜராத்தை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று பாஜக வும் மெய்யான அதன் கிடக்கையை பேசுபொருளாக்குவதில் இருந்து போலி மோதல் கொலைகளை தள்ளிவைக்கின்றன.

மோடிக்கு அடுத்த இடத்திலிருக்கும் அமித் ஷா கைது செய்யப்பட்டிருப்பதும், மைய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் சோராபுதீன் விவகாரத்தில் நீதி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதைப்போல் தோற்றம் காட்டினாலும், மெய்யாகவே அமித் ஷா உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப் பட்டாலும் கூட (அப்படி நடக்கப் போவதில்லை என்றாலும்) அது ஒரு கொலை நிகழ்ச்சி அதற்கான தண்டனை என்பதைத் தாண்டி எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை.

போலி மோதல் கொலைகள் ஆத்திரத்தினாலோ, பகைமை உணர்ச்சியினாலோ நடைபெறுவதில்லை. அது திட்டமிட்டு அரசியல் நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகின்றன. குஜராத்தில் நிகழ்ந்த போலி மோதல் கொலைகளுக்கு மோடியை கொல்ல செய்யப்பட்ட சதி முறியடிக்கப்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் காரணம் கூறப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்த போலி மோதல் கொலைக்கான காரணங்கள் மக்களிடம் உரங்களாக தெளிக்கப்பட்டு ஓட்டுக்களாக அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. எனில் கொலைக்கான தண்டனை என்பது மட்டும் நீதியாக இருக்கமுடியுமா?

இந்த சோராபுதீன் விவகாரத்தில் கூட 2005 நவம்பர் 26ல் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதும், சோராபுதீன் லஷ்கர் இ தொய்யிபா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி, மோடியை கொல்லும் நோக்கத்தில் வந்தவன் என்று காவல் துறை அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து சாட்சிகளை சுட்டுக்கொன்றதிலிருந்து இன்று வரை காவல் துறையும் அரசு எந்திரமும் அவர்கள் சொன்ன பொய்யான காரணத்தை மெய்ப்படுத்துவதற்காக செயல்பட்டு வந்திருக்கின்றனர். இவைகளை கொலைக்கான தண்டனை என்பதோடு முடித்துக் கொண்டுவிடலாமா?


குஜராத் மட்டுமல்ல காஷ்மீர் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் ஈறாக சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தோழர் ஆசாத் கொலை உட்பட தினந்தோறும் போலி மோதல் கொலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அரசை எதிர்ப்பவர்கள் தொடங்கி அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பயன்படும் என்றால் எவரும் இந்த போலி மோதல் கொலைகளிலிருந்து தப்பித்துவிடமுடியாது. பதக்கங்களை குத்திக்கொள்வதற்காக கொல்வதிலிருந்து தொடங்கி, மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டே அதற்கான முனைப்புகளைச் செய்த தோழர் ஆசாத் சுட்டுக்கொல்லப்பட்டதுவரை அரசின் விருப்பத்திற்காக, அரசின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே தினந்தோறும் கொலைகள் நடத்தப்படுகின்றன. எனும்போது எங்காவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள நேரும் போது ஒரு கொலை அதற்கான தண்டனை எனும் அளவில் இந்த போலி மோதல் கொலைகள் தீர்க்கப்பட்டால், இது என்ன வகைத் தீர்வு?

அரசின் விருப்பிற்காக அதை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் கொலைகள் பொய்யான காரணங்களினால் தான் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது, அல்லது மோதல் கொலைகளின் மெய்யான காரணங்களை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை என்பது; அரசு என்பது மக்களின் தேவைகளுக்காக, மக்களை நிர்வகிப்பதற்காக இருக்கவில்லை எனும் உண்மை அவர்களாலேயே வெளிப்படுத்தப்படும் இடமாகும். மோடி மக்களுக்கான அரசாக செயல்பட்டிருக்க முடியாது என்பதால் தானே சோராபுதீனைக் கொன்று மோடியை கொல்லவந்ததாக காட்டி ஓட்டு வாங்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. காவல் துறையும், ராணுவமும் மக்களை காப்பதற்குத்தான் என்றால் அப்பாவி பொதுமக்களைக் கொன்று தீவிரவாதியாக சித்தரித்து பதக்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? அரசு மாவோயிஸ்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்றால் தோழர் ஆசாத்தை கொல்லும் தேவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நோக்கங்கள் என எதுவும் மக்களுக்கானதாக இருப்பதில்லை. அவை தரகு, பன்னாட்டு முதலாளிகளுக்காகவே இருக்கின்றன, அவர்களுக்காகவே இயங்குகின்றன. அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே ஒவ்வொரு திட்டமும் தீட்டப்படுகிறது. இவைகளை புள்ளிவிபரங்கள், தரவுகள் ஊடாக நிரூபிக்கமுடியும். விலைவாசி உயர்வு முதல் மக்களை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் எங்கிருந்து உருவம் கொள்கின்றன என்பதை அரசுகளின் செயல்பாட்டு திட்டங்களின் மூலமே மறுக்கவியலாத வகையில் வெளிப்படுத்த முடியும். என்றாலும் இவைகளை வேறொரு கோணத்திலிருந்து, வேறொரு தளத்திலிருந்து வெளிப்படுத்துபவைகள் தாம் போலி மோதல் கொலைகள்.

தோழர் ஆசாத்

போலி மோதல் கொலைகளில் உள்ளாடும் இந்த அரசியல் பின்னணியை விளக்காமல், போலி மோதல் கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை வெளிப்படையாக விவாதிக்காமல்; இவைகளை பேசுபொருளாக்குவதை கவனமாக தவிர்த்துவிட்டு வெகுசில நிகழ்வுகளில் விசாரிப்பதனாலோ, தண்டனை வழங்கிவிடுவதாலோ போலி மோதல் கொலைகளை தடுத்துவிட முடியாது. முதலாளிகளுக்கான அரசை தக்கவைத்துக் கொண்டு போலி மோதல் கொலைகளை தடுத்துவிட முடியும் என நினைக்கவும் முடியாது. ஏனென்றால் வெளிப்படையான ஜனநாயகம் என்பது இதில் சாத்தியமில்லை. பாட்டாளிகளுக்கான அரசு ஏற்படும் போது மட்டுமே, பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிருவப்படும் போது மட்டுமே இவைகளைத் தீர்க்க முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது

%d bloggers like this: