சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்

ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.

1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் வந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.

அன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்?

1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.

அம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,

ஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.

படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……

……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா? என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?

முக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்?

தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்?

வடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களின் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு?

விவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம்  மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு? மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு?

லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு(!) கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு?

 

தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

சோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று?

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்டையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு?

டன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை?

ஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா?

நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.

சுதந்திரம் என்றால் என்ன?

ம்…ம்… குச்சி மிட்டாய் 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

 

 

 

 

இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? என்றாலோ, கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருதத்துணியும் மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறோம். ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிலேயே இது தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான்.

 

ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் விட ஒரு விளையாட்டு நம் கவனத்தை விழுங்கிவிட முடிவது எப்படி நம்முள் இயல்பாய் ஏற்பட்டிருக்க முடியும்? மகிழ்வாய் வாழ்வது, சொகுசாய் வாழ்வது எனும் இரண்டின் வேறுபாட்டையும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வியின் பொருளைச் செரிப்பது சற்றுக் கடினம் தான். காரணம், நம்முடைய விருப்பங்கள் நம்மீது திணிக்கப்படுபவை என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறிந்துகொண்டிருக்கவில்லை. விளையாட்டு என்பது நம்முடைய உற்பத்தித் திறனைச் சார்ந்து அதனை மேம்படுத்திக்கொள்ள நாம் ஈடுபடும் ஒரு கலைவடிவம் என்பது மாறி தொழில்நுட்பமும் சந்தை வணிகமும் அதில் கலந்து விளையாட்டு என்பது உற்பத்திப் பொருளான போது நாம் அதன் நுகர்வு அடிமையாகிப் போனோம்.

 

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடப்படும் கால்பந்து விளையாட்டு இங்கு எந்தக் கவனத்தையும் ஈர்க்காத ஒன்றாக இருக்கிறது. பல நாடுகளில் கிரிக்கெட் என்ற ஆட்டமே அறிமுகமாகியிருக்கவில்லை. இந்த இரண்டு இடங்களின் மக்களையும் பொதுவான ஒரு ஒப்பீடு செய்து பார்த்தாலே அந்தத்தப் பகுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுகள் எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டு கொள்ளை லாபமீட்டும் தொழிலாக நடந்துவருகிறது என்பது புரியும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் எந்தப்பகுதியில் விளையாடினாலும் நேரடியாகக் க்காணும் வசதி முதலாக‌, அனைத்து செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக இது குறித்த செய்திகளை வெளியிட்டு மக்களின் நினைவெல்லையிலிருந்து அகன்றுவிடாதவண்ணம் இருத்திவைப்பது ஈறாக அத்தனை வழிகளிலும் இது மக்களின் மனதில் பதியவைக்கப்படுவதினாலேயே சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆழமான புரிதல் இல்லாத யாரும் இதில் தனிப்பாட்ட விருப்பம் எதையும் கொண்டுவிட முடியாது.

 

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஆயிரக்கணக்கான கோடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளன. விளையாடுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் உட்பட இதில் செலவு செய்யப்படும் அனைத்திற்கும் பகரமாக பலமடங்குகளில் லாபமீட்டாவிட்டால் இந்த விளையாட்டு சீந்துவாரின்றிப் போகும். ஆனால் அவ்வாறில்லாமல் மேலும் மேலும் இதில் கொட்டப்படுவதிலிருந்தே இது எந்த அளவுக்கு வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

கிரிக்கெட் விளையாட்டில் கோடிகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதுதான். உலக அளவில் கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 70 விழுக்காடு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. பெப்சி, கோக், நைக் ஷூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் 30லிருந்து 40 கோடி பேர்வரை காண்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரங்களாக மீண்டும் மீண்டும் காட்டி பதியவைக்கப்படுவதன் மூலமே இந்த விற்பனை சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர்ச்சியாக பார்க்கவைப்பதற்காகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சரி, இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்படும் பணத்தை அந்த நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகளாகத்தான் வகைப்படுத்துகின்றன. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் கிரிக்கெட்டிற்காக செலவிடப்படும் தொகையும் அடக்கம். அதையும் உள்ளடக்கித்தான் விலை தீர்மானிக்கப்படுகிறது. என்றால் அந்தப் பணத்தைச் செலுத்துவது யார்? சந்தேகமென்ன மக்கள் தான். சுற்றிவளைத்து மக்களிடம் இருக்கும் கிரிக்கெட் மோகம் மக்களைச் சுரண்டி முதலாளிகளிடம் சேர்க்கும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்றோ, தேசபக்தியின் அடையாளம் என்றோ கூற முடியுமா?

 

லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து வீழ்ந்தபோது ஏற்படாத‌ சோகமும், கோபமும் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த விதத்தில் இது தேசபக்தி? ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் வாழும் நாடு எனும்போது ஏற்படாத அவமானம் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த அடிப்படையில் இது தேசபக்தி? இந்தியர்கள் விளையாடினால் எதிரில் யாராக இருந்தாலும் தோற்க வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகும்? ஐ.பி.எல் போட்டிகளின் போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னைச் சார்ந்த அணியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதே விளையாட்டு வீரன் அவ‌னுடைய நாட்டு அணியில் விளையாடும் போது எதிரியாக பார்ப்பது விளையாட்டா? வெறியா? இதை எப்படி தேசபக்தி என்பது?

இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது, தவிரவும் விளையாடுபவர்கள் பணத்திற்காகவே விளையாடுகிறார்கள். இதன் மீது தேசியம் வெளிப்பூச்சாக பூசப்பட்டிருக்கிறது. நமக்கு கிரிக்கெட் மீதான மோகம் வற்றிவிடக்கூடாது என்பதற்காக பூசப்பட்ட வெளிப்பூச்சு தான் இந்திய அணி என்பது

 

மட்டுமல்லாது, வெளியில் தெரியும் அத்தனை பகுதிகளிலும் விளம்பரங்களை எழுதி நடமாடும் விளம்பரத்தட்டியாக நின்று ஆடுபவனை நாட்டுக்காக விளையாடுபவன் என்பது எந்த வகையில் பொருந்தும்? மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்ஸிங் தொடங்கி அனைத்து ஊழல்களிலும் ஈடுபட்டு விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதா? வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு மட்டையிலிருக்கும் நிறுவனந்த்தின் பெயரை கேமராவில் காண்பித்தால் அதற்கு தனியே காசு என விளையாட்டை அவர்கள் தொழிலாக்கி விட்டிருக்க, சொந்த வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கும் இரசிகனை என்னவென்பது?

 

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு மக்களிடம் சேவை வரி விதிக்கிறது. ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சேவை என்று கூறி பிசிசிஐ எனும் தனியார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை கிரிக்கெட் இரசிகன் என்னவென்று புரிந்து கொள்வான்?

 

கிரிக்கெட் எனும் விளையாட்டைச் சூழ்ந்திருக்கும் இவை எதும் எந்த விதத்திலும் சலனப்படுத்தாது, அதில் அடிக்கப்படும் ஃபோர்களும் சிக்ஸர்களும் மட்டும் பரவசத்தைத்தரும் எனக் கூறும் ஒரு ரசிகன் மனிதனாக இருக்கமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க இதைவிட பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: