மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 5

இதுவரை

 

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

 

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

 

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

 

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4

மாவோயிச வன்முறை 4

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் கடைசிப் பகுதியில் சில கேள்விகளை எழுப்புகிறார். முதலில் பொருளியலில் பின் தங்கியிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லையா? எனக் கேள்வி எழுப்பி தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காட்டில் டாடா டைட்டானிய ஆலை அமைக்க முற்பட்டதை மக்கள் ஜனநாயக போராட்ட வழிகளில் விரட்டிக் காட்டவில்லையா என எடுத்துக்காட்டும் வழங்கியிருக்கிறார்.

இந்திய சூழலில் நடப்பிலிருக்கும் ஜனநாயகமான வழிமுறைப் போராட்டங்களின் மூலம் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிராக மக்கள் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என்பது கற்பிதமாகவே இருக்க முடியும். பீகாரில் கடந்த சில ஆண்டுகளாக போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் நுழைவதற்கே கூட தடைவிதிக்குமளவிற்கு அவர்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று போஸ்கோ நிறுவனம் தன்னுடைய திட்டத்தை கைவிட்டுவிடவில்லை. ஆனால் நந்தி கிராமில் டாடா வெருண்டோடியது. நடப்பு ஜனநாயக வழிமுறை போராட்டங்கள் அரசுக்கெதிராகவும், பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் குறிப்பிடத்தகுந்த எந்த வெற்றியையும் பெற்றுவிடவில்லை என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு என்ன மதிப்பளித்தது? நர்மதா அணைக்கட்டு இழப்பீடுகளுக்காக இருந்த உண்ணாவிரதங்கள் என்ன பலனை சாதித்தன? அரசோ, எந்த ஒரு நிறுவனனமுமோ தாங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை எப்படி சரிசெய்வது எனும் கோணத்தில் தான் சிந்திக்கின்றனவே அன்றி அவர்களின் எதிர்ப்புக்கு மதிப்பளிப்பதில்லை, கவனத்தில் கொள்வதில்லை. சத்திஸ்கர் மக்களின் போராட்டங்கள் தீவிரவாதமாக சித்தரிக்கப்பட்டன. அதனால் சல்வாஜுடும் எனும் கூலிப்படை அமைப்பை அரசே ஏற்படுத்தியது. அவர்கள் கிராமம் கிராமமாக கொழுத்திய போது மக்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா?

ஒருபகுதி முதலாளிகளுக்கு தேவைப்படாதபோது அங்கு அரசு எந்த வசதிகளையும் ஏற்படுத்தாது மக்களை ஏழ்மையிலும் நிலப்பிரபுத்துவத்திலும் உழலவிடும். அதே பகுதிகளில் முதலாளிகள் தங்கள் லாபத்தைக் கண்டு கொண்டாலோ, அங்குள்ள மக்கள் அதுவரை தங்கள் வாழ்வாதாரங்களுக்கு எதை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் துறந்துவிட்டு அரசு கை காட்டும் இடத்திற்கு இடம்பெயர்ந்துவிட வேண்டும். நலத்திட்டங்கள் எனும் பெயரில் அவர்கள் அதுவரை செய்து கொண்டிருந்த மரபு சார்ந்த இயற்கை சார்ந்த தொழிலகளையும், விவசாயம் இன்னபிறவற்றையும் விட்டுவிட்டு அரசிடம் கையேந்த வேண்டும். அப்படிச் செய்தால் ஊழல் மலிந்திருந்தாலும் முதலாளித்துவம் அவர்களின் பசியைப் போக்கிவிட்டது என்று குதூகலிக்கலாம், எழுதித்தள்ளலாம். ஆனால் அந்தப் பகுதிகளிலேயே மக்களின் விருப்பங்களை கணக்கில் கொண்டு அவர்களின் மரபுமுறைகளை மேம்படுத்த அரசு செயல்பட்டால் ஊழல் மிகுந்த முதலாளித்துவம் பசியாற்றியதைவிட அவர்கள் சிறப்பாக இருப்பார்களே எனும் சிந்தனை மட்டும் வந்து விடக் கூடாது. வந்துவிட்டால் அது எழுத்தாள ஆளுமைக்கு பங்கமாகிவிடும்,

தமிழகத்தின் தென்பகுதியின் தேரிக்காடுகளில் அமைக்கபடவிருந்த டைட்டானியம் ஆலை மக்களின் அடையாளப் போராட்டங்களால் கைவிடப்பட்டது என்பது அப்பட்டமான பொய். அன்றைய கருணாநிதி அரசாங்கத்திற்கும் டாடாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், என்ன காரணத்தாலோ, அவர்களுக்கிடையேயான உள் ஒப்பந்தத்தில் உடன்பாடு காணப்படாததாலோ நிலத்தை கையகப்படுத்தித் தருவதிலிருந்து அரசு விலகி விட்டது. தேவைப்படும் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை அரசின் உதவியில்லாமல் கையகப்படுத்த முடியாத நிலை. விற்க முன்வந்த சிலரும் ஏக்கருக்கு ஐந்து லட்சம் கேட்க டாடாவின் தமிழக நிர்வாகி பி முத்துராமனோ ஏக்கருக்கு ஐம்பதினாயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். மட்டுமல்லாது திட்டத்திற்கான மொத்த செலவினம், மற்றும் ஆலை செயல்படும் போது வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு ஏற்படும் எதிர்ப்பு ஆகியவைகளை உத்தேசித்து திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு மறுபடியும் திமுக ஆட்சியின் கடைசியில் டாடா டைடானியம் தொழிற்சாலைக்கான முயற்சிகளை தொடங்கியது. உகந்த ஒரு சூழலில் அந்த ஆலை மீண்டும் ஏற்படுத்தப்படுவதற்கே வாய்ப்புள்ளது. இதை மக்கள் போராட்டங்களால் விரட்டி விடப்பட்டதைப் போல் காட்டுவதற்கு தேவையான துணிவு தம்மிடம் இருப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் துணிவு வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.

இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது. மாவோயிஸ்டுகளின் இராணுவாத கண்ணோட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான நிலைபாடல்ல. இதில் ஜெயமோகன் விமர்சனத்திற்கும் எங்களுடைய விமர்சனத்திற்கும் (முதல் கட்டுரையில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது) இடையே ஒன்றுமை இருப்பது போல் தோன்றினாலும் இரண்டின் தளங்களும் வேறானவை. ஒரு கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட ஒரு மதத்தை விமர்சிப்பதற்கும், அந்த விமர்சனந்த்தை வேறொரு மதத்தை பின்பற்றும் ஒரு மதவாதி செய்வதற்கும் இடையிலான வேறுபாடு இதில் தொழிற்படுகிறது என்பது முக்கியமானது.

அந்தப் பகுதி மக்கள் இன்னும் அரசியல்மயப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியான விழிப்புணர்வுடன் மக்களை ஒன்று திரட்டி சமரசமற்ற போராட்டங்களை கட்டியமைத்து அரசுக்கு நெருக்குதல் தொடுத்திருக்க வேண்டும். இதில் மாவோயிஸ்டுகள் தவறியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அரசியலில் தவறொன்றுமில்லை. மவோயிஸ்டுகளின் இந்த தவறை முதன்மையானதாக எடுத்துக் கொண்டு அதையே கம்யூனிசத்திற்கு எதிராய் முன்வைத்த ஜெயமோகன்; நடப்பு முதலாளித்துவ ஊழல்களுக்கு ஆட்பட்டு. பசியிலிருந்து விடுதலை பெற்ற ஏனைய பகுதி மக்களைப் போலல்லாது நிலப்பிரபுத்துவத்திலேயே ஊறிக்கிடக்க வைக்கப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் ஜெயமோகன்; மாவோயிஸ்டுகள் வந்து வன்முறைப் பாதையைக் கையிலெடுத்தது சரியல்ல என்று கூறும் ஜெயமோகன், மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதியைக் கையிலெடுக்கும் வரை அந்த மக்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளி வைத்திருந்த அரசின் மீது செய்த விமர்சனம் என்ன?

மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றி மக்களைக் கண்ட, எழுத்தாள மனோபாவத்தின் ஆளுமை அடுத்து வந்தடைய வேண்டிய மையப்புள்ளி அரசின் மீதான விமர்சனம் தான். ஆனால் அதை லாவகமாக தவிர்த்துவிட்டு அந்த விமர்சனத்தை மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் அறிவுத்துறையினரின் தனிச்செயல்பாடுகளின் மீது வைத்து அவர்கள் உண்ணும் உணவில் பாதியாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டாமா என்று தர்மகத்தா பாணி இரக்க உணர்ச்சியில் கொண்டுவந்து சேர்க்கிறார்.

அவர் ஏன் அரசின் மீதான விமர்சனங்களை தவிர்க்கிறார் என்பதற்கான காரணம் ஆளும்வர்க்க அடிப்படையில் நின்று சீனா குறித்து பேசுவதில் வெளிப்படுகிறது. சீனா ஒரு கம்யூனிச நாடல்ல, அது ஒரு சமூக ஏகாதிபத்திய நாடு. பிராந்திய வல்லரசு, பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தன்னுடைய மேலாதிக்கத்தை பேணும் ஒரு ஆதிக்க நாடு. அதேநேரம் அளவிலும் பலத்திலும் குறைந்திருந்தாலும் இந்தியாவும் அப்படியான ஒரு நாடு தான். தன்னுடைய ஆதிக்க நலன்களுக்காக இந்தியாவுக்குள் சீனா உள்ளடி வேலைகளைச் செய்யக்கூடும். ஆனால் மாவோயிஸ்டுகள் அப்படியானவர்களா? இது எந்த அடிப்படையும் இல்லாமல் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்டிருக்கும் கருத்தியலைப் போன்றது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அன்னியக் கைக்கூலிகள் எனும் ஆளும் வர்க்க கருத்தைத்தான் ஜெயமோகன் பிரதிபலிக்கிறார். இதற்கு ஆதரவாக ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

மாவோயிஸ்டுகள் தங்களின் போராட்டத்திற்காகவும் ஆயுதத்திற்காகவும் மக்கள் தரும் நிதியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள், ஜமீந்தார்கள் என உள்ளூர் முதலாளிகளையும் சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத பலம் காவல் நிலையங்களை சூறையாடுவதையும் சார்ந்திருக்கிறது. இந்தக் தொடர்கட்டுரைகளுக்காக ஆங்காங்கே ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கும் படங்களில் கூட பயிற்சி செய்வதற்கு மாவோயிஸ்டுகள் காவல்நிலைய துப்பாக்கிகளை பயன்படுத்துவது தெளிவாகவே தெரிகிறது. அவர்களின் இராணுவவாதப் பாதையும், ஆயுதங்களுக்காக உள்ளூர் முதலாளிகளைச் சார்ந்திருப்பதும் சரியா தவறா என்பது வேறு. அடிப்படையின்றி சீனாவின் வளர்ப்பு மிருகங்கள் என்பது வேறு. முன்னது சித்தாந்தப் பிரச்சனை பின்னது ஆளும்வர்க்க அவதூறு. அவர்கள் போராடுவது மக்களுக்காக, அவர்களை வேட்டையாடும் அரசை எதிர்த்து. அவர்களின் பாதையில் தவறிருக்கிறது, அது வேறு விசயம். ஆனால் அவர்களின் அரசியலில் தவறு ஒன்றுமில்லை.

சீனா மீது ஜெயமோகன் வைத்திருக்கும் விமர்சனம் எதையும் மறுப்பதற்கில்லை. அது சமூக ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுதான். ஆனால் இந்திய அரசின் சார்பில் அந்த விமர்சனந்த்தை வைக்க முடியுமா? அளவு வித்தியாசத்தைத்தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. சீனாவை விலக்கிவிட்டு இந்தப் பிரச்சனைகளை விவாதிப்பது அயோக்கியத்தனம் என்றால், இந்திய ஆளும்வர்க்கத்தின் சார்பில் இந்த விமர்சனங்களை வைப்பதும் அயோக்கியத்தனமானது தான். சாமான்ய புத்தியுடன் சிந்திப்பவர்களுக்கு கூட இந்திய சீன அரசியலை பின்புலமாக வைத்துத்தான் இதை யோசிக்க முடியும் என்று கூறிக்கொண்டே இந்தக் கட்டுரையின் இந்திய அரசியல் குறித்த விமர்சனம் எதையும் முன்வைக்காத அவரின் ஆளுமைக்கு கிடைத்த ஊதியமென்ன?

தொடரும்…

இதுவரை

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

 

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

ஆழ்மனதில் உறைந்து கிடப்பதும் பொதுப்புத்தியும்

மாவோயிச வன்முறை 3

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். “இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்” அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த எழுத்தாளுமையின் மயக்கத்தோடு இணைந்துகொள்ள பொதுப்புத்தி போதுமானது தான்.

கம்யூனிசம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது எனும் அதரப்பழையதான அவதூறைக் கொண்டே தொடங்குகிறார். இந்த பலகோடி மனித உயிர்களை கண்டுபிடித்துச் சொன்னவர்களே தற்போது முதலில் கூறிய எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்துக் கொண்டார்கள் தெரியுமா? நாங்கள் தான் பணம் கொடுத்து எழுதச் சொன்னோம் என்று பிரிட்டன் உளவுத்துறையே ஒப்புக்கொண்டது தெரியுமா? அல்லது இவைகளை மறுத்து புள்ளியியல் தரவுகளுடன் பல நூல்கள் வெளிவந்துள்ளனவே தெரியுமா? மீண்டும், மீண்டும் கோடிக்கணக்கான மக்கள் கொலை என்பவர்கள் குறைந்தபட்சம் இவைகளை இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை எனும் விளக்கத்தையாவது தரலாமே, அவ்வாறன்றி மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளிப் பூசிக்கொண்டிருப்பது என்ன நோக்கத்திற்காக? வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அவர் எழுதியிருப்பதே அவரின் எண்ணத்தை சுமந்து சொல்கிறது, “லெனினும் மாவோவும் அவர்களைக் கொலைகாரர்களாக ஆக்க முடிந்தது” ஆகவே, கம்யூனிச எதிர்ப்பு என்பதைத்தாண்டி அதில் உய்த்தறிய ஒன்றுமில்லை.

மாவோயிச பூதம் குறித்து அவர் வரைந்து காட்டும் ஓவியம் கவர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக இருப்பனவெல்லாம் மெய்யாக இருக்கும் என்று அறுதியிடமுடியாதல்லவா? 1947க்குப் பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்று மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் ஏற்படவில்லை. பிறபகுதிகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் மனதில் முதலாளித்துவத்திற்கு ஆதரவான பொருளியல் ரீதியில் முன்னேறும் உந்துதலை ஏற்படுத்தி அதுவே வளர்ச்சிக்கான காரணியாகியது. ஆனால் மாவோயிசம் இருக்கும் பகுதிகளில் மக்களின் மனதில் இந்த முன்னேறும் உந்துதல் இல்லாததால் அதாவது நிலப்பிரபுத்துவ மனோநிலையிலேயே இருப்பதால் அந்தப்பகுதிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இது ஒரு மாதிரியான சுழற்சி போல் வறுமை இருப்பதால் மாவோயிசம்; மாவோயிசம் இருப்பதால் வறுமை. இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர் கூறியிருக்கும் சொல். இது அப்படியே இன்னும் விரிந்து கம்யூனிசம் மக்களின் முன்னேறத்திற்கு பயன்படாது. அது சிக்கலைத்தான் தீவிரப்படுத்தும், இருக்கும் முதலாளித்துவ அமைப்பையே கொஞ்சம் சீர்திருத்தி பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது அவர் கூற விரும்பும் பொருள். இதற்காகத்தான் சமூகத்தை மாற்றியமைக்கும் கம்யூனிச கூறுகளெல்லாம் குறியடையாளமாக முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நேரடி ஆங்கிலக் காலனியாக இந்தியா இருந்தபோது, இந்திய முன்னேற்றம் எந்த அடிப்படையில் இருந்தது? இன்றும் கூட சில பழம் பிண்டங்கள் “வெள்ளைக்காரன் இல்லையின்னா ஏது ஓய் ரயிலு, தபாலு?” என்று சிலாகிப்பது போல்; காலனிய நலன்களுக்கு தேவைப்பட்ட மாற்றங்களும் நுட்பங்களும் அவர்களுக்கு உகந்த இடங்களில் ஏற்படுத்தப்பட்டதே முன்னேற்றமாக இருந்தது. 47க்குப் பிறகும் அதுதான் நடந்தது இன்னும் சற்றே விரிவாக. முதலாளிகளுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புகள், உற்பத்திச் செலவை குறைப்பதற்குத் தேவையான மூலவளங்கள் செரிவாகக் கிடைப்பது இன்னும் பலவாறான காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகள் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அரசின் முனைப்பினால் முதலாளிகளுக்குத் தேவையான அளவில் வளர்ச்சி உண்டாக்கப்பட்டது. 47க்குப் பிறகு இந்தியாவில் பல பகுதிகள் அப்படியான் வாய்ப்புகளின்றி சீண்டுவாரற்று கிடந்தன என்றால் அதன் பொருள் முதலாளிகள் தங்கள் லாபங்களை அந்தப் பகுதியில் கண்டடையவில்லை என்பதாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய அணைத்திட்டங்கள் பாசன வசதிகளை பெருக்கி விவசாய முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன, அதேநேரம் அந்த திட்டங்களுக்காக தங்கள் நிலங்களை இழந்த வரிய மக்கள் தங்கள் இழப்பீடுகளுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்களே. இதை எப்படி எடுத்துக்கொள்வது? ”இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அப்படி திட்டமிட்ட முன்னேற்றம் வந்துவிடவில்லை, விதி விலக்குகளும் உண்டு” என்று போகும்போக்கில் குறுக்கிக் கொண்டுவிட முடியுமா? தெளிவாகச் சொன்னால் அன்றைய நிலையில் முதலாளிகள் தங்களுக்கு தேவையில்லை என ஒதுக்கிய நிலப்பகுதிகளே எந்த வாய்ப்புகளும் தரப்படாமல் நிலப்பிரத்துவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த மக்கள் வரிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்களென்றால் அதன் முழுப் பொறுப்பும் அரசின் மீதல்லவா சுமத்தப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் ஜெயமோகனோ இயல்பாக வந்தடையும் சாதாரண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள் என்கிறார். அதாவது ஏனைய பகுதிகளில் நகர்ந்ததைப் போல பிந்தங்கிய பகுதிகளில் நகராதது மக்களின் தவறு என்கிறார். அதனால் தானே மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதிகளில் காலூன்றும்படி நேர்ந்துவிட்டது என அங்கலாய்க்கிறார். இந்த தேக்க மனோநிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட வறுமையும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு காரணமாகியது என்கிறார். இது அப்பட்டமாக அரசின் பார்வையா இல்லையா?

இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகத்தானே அந்தப் பகுதி மக்களை வாழவைக்க திட்டம் தீட்டுவதாக அரசு பரப்புரை செய்கிறது. ஆனால் மக்கள் அந்த திட்டங்களை பசப்பு வார்த்தைகளை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தானே அவர்கள் மீது சல்வாஜுடும் குண்டர்படையை ஏவி விட்டது. அது தவிர்க்கவியலாமல் அம்பலப்பட்டுப் போனதால் தானே பசுமை வேட்டையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவைகளை மறைத்துவிட்டு மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறவில்லை என்றும் மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அந்த முன்னேற்றத்தை(!) வரவிடாமல் தடுத்தார்கள் என்பது போன்றும் எழுதுவது எந்த அடிப்படையில்? அல்லது யாருடைய விருப்பத்திற்காக?

ஜெயமோகனின் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் மாவோயிஸ்டுகளை விமர்சிப்பது, அதனூடாக கம்யூனிசத்தை குற்றம் சாட்டுவது. தன்னை நேர்மையாளனாக (பின்நவீனத்துவவாதியாக) காட்டிக்கொள்வதற்காக முதலியத்தின் குணங்களை லேசாக கோடிட்டுக் காட்டும் ஜெயமோகன்; எதிரெதிர் நிலைகளான இரண்டின் குறை நிறைகளைகளையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்தத் தொடர்கட்டுரை முழுவதும் அவர் மாவோயிஸ்டுகளின் குறைகளையும், முதலாளியத்தின் நிறைகளையுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டு பொருத்திக் காட்டுகிறார்.

கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது எதனுடைய விளைவு? மாவோயிஸ்டுகளின் போராட்டங்களினால் தானே அந்த மக்களுக்கு அரசின் வெகுசில சலுகைகளேனும் கிடைத்திருக்கிறது. தனக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்த்துவிட்டு விளம்புவது மதவாதிகளின் இலக்கணம். எழுத்தாளர்களுக்கும் அதுதான் போலும்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

காயங்களும் நோய்களும்

மாவோயிச வன்முறை 2


மாவோயிசம் பற்றி பேசுவதற்கு முன்னால் அதுகுறித்தான எங்கள் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வது தேவையானதாகவும், சரியான புரிதலுக்கு உதவுவ‌தாகவும் இருக்கும். மாவோயிஸ்டுகள் பற்றிய இந்த வெளியீட்டை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு, அவர்களின் செயல் திட்டம், உத்திகள் குறித்த எங்களின் நிலைக்கும், மாவோயிஸ்டுகள் குறித்த ஜெயமோகனின் புரிதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. மாறாக அவரின் நோக்கம், மாவோயிஸ்டுகளின் மீதான அவரது விமர்சனம் எந்த தளத்திலிருந்து வைக்கப்படுகிறது, எதனுடன் பொருத்தப்படுகிறது, என்னவிதமான வினையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது.

இரண்டாவது கட்டுரையில், மக்கள் யுத்தக் குழுவினர் செயல்படும் பகுதிகளில் அவர் பயணம் செய்து பெற்ற நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனூடாக வாசகர்களையும் அழைத்துச் செல்கிறார். அதை அப்படியே வரிக்குவரி மறுக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஏனென்றால் அதில் உண்மைகளும் கலந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து அவர் உருவாக்கும் சித்திரத்தை மறுக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் அதில் பொய்களும் கலந்திருக்கின்றன.

முதலில், இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் நடத்த சுதந்திரப் போராட்டங்கள் அன்றைய அமைப்பான நிலப்பிரபுத்துவ முறையை எதிர்ப்பதினூடாக அமைந்ததாகவும், அதன் வீரியத்தன்மையின் போதாமையால் இடதுசாரிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டதாகவும் காட்சிகளை நகர்த்துகிறார். ஆனால் அது உண்மையல்ல. காங்கிரஸ் நிலப்பிரபுத்துவ முறையை எதிர்க்கவுமில்லை, அது கூறிய சுதந்திரத்தின் பொருளில் மக்கள் அடங்கவுமில்லை என்பதே உண்மை. பர்தோலியில் கூடிய காங்கிரசின் செயற்குழு தீர்மானங்கள் இதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.

ஜமீன்தார்களுக்கு நிலவரியை கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு எதிரானது என்றும், நாட்டின் நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரஸ் செயற்குழு காங்கிரஸ் ஊழியர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆலோசனை கூறுகிறது.

ஜமீன்தார்களுடைய சட்டபூர்வ உரிமைகளை தாக்குவதை காங்கிரஸ் இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாக கொள்ளவில்லை என்று ஜமீன்தார்களுக்கு உறுதியளிக்கிறது.

இந்த இரண்டு தீர்மானங்கள் மட்டுமல்ல, 1934 ஆம் ஆண்டு காந்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் இதை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

“வர்க்க யுத்தத்தை தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழுப்பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம். உங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க அநீதியான ஒரு முயற்சி நடந்தால், அப்போது உங்கள் பக்கம் சேர்ந்துகொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காண‌லாம்.”

மட்டுமல்லது, காங்கிரஸை வெள்ளையர்கள் தோற்றுவித்ததன் நோக்கம் இந்தியர்களின் கைகளில் இம்மியளவும் மாறவில்லை என்பதை கல்கத்தாவில் கூடிய இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானம் வெளிப்படையாகவும், மிகத்தெளிவாகவும் எடுத்து வைக்கிறது.

“மகாராணியின் அனுகூலமான,என்றும் மறப்பரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருடம் முடிவு பெற்றதைக் குறித்து சக்கரவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டீஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருஷம் ஆளவேண்டுமென்று வாழ்த்துகிறது.”

ஆக, காங்கிரஸின் சுதந்திரப்போராட்டம் என்பதும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பதும் உள்ளீடற்றவை. சுருங்கச் சொன்னால், காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடியது, விடுதலையைப்(!) பெற்றுத்தந்தது என்பதெல்லாம் பாமரத் தனமான பார்வை. அதேநேரம் மக்களின் எதிர்ப்புணர்விலிருந்து கிளம்பிய எழுச்சியை பயன்படுத்திக்கொண்ட, ஜெயமோகன் அவர்களால் இடதுசாரிகள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் எப்படி ஓட்டுக் கட்சியாக எதிர்பரிணாமம் அடைந்தனர் என்பது தனிக்கதை.

தெலுங்கானாவில் நிலப்பிரபுத்துவமுறைக்கு எதிராகவும் நிஜாம், ஜமீந்தார்கள் சுரண்டலுக்கு எதிராகவும் தொடங்கிய தெலுங்கானா போராட்டத்தை இராணுவ பலத்துடன் நேரு அரசு முறியடித்தது. அதன் தொடர்ச்சியைப் போல் பின்னர் எழுந்த மக்கள் யுத்தக் குழுவுக்கு அந்தப் பகுதியின் மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது என்பது, வீரம் செரிந்த தெலுங்கானா போராட்டத்திற்கும் மக்கள் யுத்தக் குழுக்களுக்குமான இடைவெளியில் என்ன நிலை நிலவியிருந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டாதா? தெலுங்கானா போராட்டம் குவித்து வைக்கப்பட்டிருந்த நில உடமைகளையும், ‘வெட்டிச் சாக்கிரி’ போன்ற கொத்தடிமை முறைகளையும் முடிந்தவரை ஒழித்து நிலப்பங்கீட்டு முறையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் 80களில் ஜெயமோகன் அந்தப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் போது ஒழிக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ முறை அங்கு கோலோச்சிக் கொண்டிருந்ததென்றால் அதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும்? இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அங்கு அரசு ஏற்படுத்திய மாற்றங்கள் மக்கள் யுத்தக் குழுவினரால் பின்னோக்கி இழுக்கப்பட்டதென்றால் கொள்கை ரீதியாக இல்லாமல் பொருளியல் ரீதியில் மக்கள் மக்கள் யுத்தக் குழுவை அங்கீகரித்ததும் ஆதரித்ததும் எப்படி? ஒரு போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டுமென்றால், எழுச்சி ஏற்படவேண்டுமென்றால் அதற்கான தேவை சமூகத்தில் இருந்தாக வேண்டும். அதன்படி நிலப்பிரபுத்துவமுறையும் பட்டினியும், சாதிய கொடுமைகளும் எண்பதுகள் வரை நீண்டிருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை மக்கள் யுத்தக் குழு மட்டும் தங்கள் தோளில் சுமக்க வேண்டுமா?

“அவர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளில்” எனும் சொல்லாடலின் வேதியல் வினைப்பாடுகள் வாசிப்பவர்களை எந்த இடத்தில் தைக்க வேண்டும் எனும் திட்டமிடல் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். “தினமும் போலீஸ் என்கவுன்டர் கொலைகள். நக்ஸலைட் தாக்குதல்கள். போலீஸின் பழிவாங்குதல்கள்” என்று அவர் விவரிக்கும் காலம் எந்த இடத்தில் அவர்களின் ஆளுமை என்று முகமூடி தரிக்கிறது என்பதை தனிப்படுத்த வேண்டியது அவசியமல்லவா? குட்டி முதலாளிய ஆயுதக் குழுக்களாக அவர்கள் நடத்திய ஆயுதப் போராட்டங்கள் இந்திய நிர்வாகத்தை மீறிய தனித்த ஆளுமைப் பிரதேசங்களாக ஆகியிருந்ததில்லை. ஜெயமோகன் கூறுவது போல் பொருளியல் காரணங்களுக்காக அவர்கள் செல்வாக்குடன் இருந்த பகுதிகளில், இராணுவவாத எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பகுதிகளில்; நிர்வாகம் உள்ளிட்டவைகளை கவனிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தனித்தன்மையான மக்கள் ஆதரவோ, அந்த அடிப்படையிலான பலமோ இருந்ததில்லை. முந்திய‌ தெலுங்கானா போராட்டத்தைப் போன்ற மக்கள் பங்களிப்பு இல்லாத குழு ஆயுத நடவடிக்கை பகுதிகளை அவர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளில் எனக் குறிப்பிட வேண்டிய தேவை என்ன? “நான் பயணம் செய்தபோது கண்டது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அப்போது அழிந்துவிட்டிருந்த அதே நிலப்பிரபுத்துவ முறையைத்தான்” எனும் பதிலை ஏற்றி வைப்பதையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

மேலாக‌ பாசன வசதி, வறுமை ஒழிப்பு என்று கூறிக்கொண்டாலும், “எந்த நூற்றாண்டானாலும் போர்நிகழும் சூழலில் எந்த வளர்ச்சியும் இருக்க முடியாது” என்பது தான் உண்மை. உலகின் பெரிய ஜனநாயக நாடாக கூறப்படும் இந்தியாவின் நிர்வாகம் குழுவாத எதிர் இராணுவ நடவடிக்கையை காரணம் காட்டி அந்தப்பகுதியில் ஏற்படுத்த வேண்டிய வசதி வாய்ப்புகளை புறக்கணிக்க முடியுமென்றால்; மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனாலேயே நிர்வாக ரீதியான புறக்கணிப்பின் தார்மீகத்தை மக்கள் யுத்தக் குழுவின் மீது திணிக்கும் இரசவாதத்தில் என்ன நியாயம் இருக்க முடியும்? அவர் வரையும் சித்திரத்தில் போர் நிகழும் சூழல் எனும் கோடு நுணுக்கமாக இருவேறு பொருளைக் கொண்டு நிற்கிறது என்பது வெளிப்படை. சாதகங்களை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டு பாதகங்களை எதிரியிடம் தள்ளிவிடும் முதலாளித்துவ பாடம் தான் ஜெயமோகன் அவர்களின் ஊடுநூலாக இருக்கிறது.

கடைமட்டம் வரை திருட வாய்ப்பளிக்கும் முதலாளித்துவ ஊழல் தான் இராணுவவாத நடவடிக்கைகளின் மீதான மக்கள் ஆதரவை பலமிழக்கச் செய்து யுத்தக் குழுவை முற்றுப்புள்ளியை நோக்கி தள்ளியது என்பது மெய்தான். ஆனால் இதை வயிறாற சாப்பிட முடிந்தது என்பதாக குறுக்குவது ஏற்புடையது தானா? என்கவுண்டர், சித்திரவதைக் கொலைகள், வன்புணர்ச்சிகள் மக்கள் யுத்தக் குழுவின் மேல் ஏவிவிடப்பட்டபோது மக்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நியாய உணர்ச்சி ‘திருட வாய்ப்பளிக்கும்’ முதலாளித்துவத்தால் பட்டினி மறைந்து உணவு கிடைத்தது என்பதான காரிய வாதத்தில் எதிர்கொள்ள‌ப்பட்டது. உணவைக் கொடுத்து வயிற்றைத் திருடிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை ஜோடனைகளால் புனிதமாக்கிவிட முடியுமா? பட்டினி மறைந்ததாக விதந்தோதப்படுவதுதான் மக்களை ஒட்டச் சுரண்டி நிர்க்கதியாய் அலைய விட்டிருப்பதை இந்தியாவெங்கும் காணலாம். தண்டகாரண்ய பழங்குடியினரின் மாவோயிச ஆதரவு, சாப்பாட்டைக் கொடுத்து வாழ்வாதரத்தை பிடுங்கியெடுத்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரானதாகவல்லவா திரண்டிருக்கிறது.

ஆக, மக்கள் பங்களிப்பை புறந்தள்ளி இராணுவவாதத்தை கைக்கொண்ட குழுக்களின் காயங்களை உருப்பெருக்கியும், காரியவாத பெருநோய்களை அடையாளங்களாக சுருக்கியும் சித்திரம் எழுதிக்காட்டும் எழுத்தாளனின் வானவில் கூட்டணி வண்ண‌க் கண்ணாடிகளையே ஆடையாய் உடுத்தி வந்திருப்பது கண்ணுள்ளவர்கள் காணக் கூடுவது.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: