உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?

0023ae606e66148c858101

 

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 6

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

 

உக்ரைன் தொடரை, ‘தமிழ் இந்துகீழ்க்கண்டவாறு முடித்திருக்கிறது.

 

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை

 

அதாவது ரஷ்யா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து வருவதால் உக்ரைன் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்பது தமிழ் இந்துவின் முடிவு. இந்த முடிவு எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை முன்பே கண்டிருக்கிறோம். ‘தமிழ் இந்துவைப் பொருத்தவரை முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளை அமெரிக்கா ஒவ்வொன்றாக தன் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருப்பது குறித்து தமிழ் இந்துவுக்கு கவலையோ, கருத்தோ ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுத்தால் அது நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு. இப்படி அப்பட்டமாக அமெரிக்க அடிவருடித் தனத்தை கைக் கொண்டிருக்கும் தமிழ் இந்துதான் வாய்மை நின்றிட வேண்டும் என்பதை தன் முழக்கமாக வைத்திருக்கிறது.

 

இப்படி அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட தமிழ் இந்துதம்மையறியாமல் ஒரு உண்மையும் போகிற போக்கில் எழுதிச் சென்றிருக்கிறது.

“ரஷ்யா உக்ரைன் மோதலில் நேட்டோ அமைப்பின் பங்கும் வெகுவாக அலசப்படுகிறது. 2008-ல் இந்த அமைப்பு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தாங்கள் உறுப்பினர்களாக அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதன் பிறகு ரஷ்யா, உக்ரைனுக்கிடையே கொஞ்சம் நல்லுறவு மலர்ந்தது போல இருந்தது”

இதில் தெளிவாக ரஷ்ய உக்ரைன் மோதலுக்கான உண்மையான காரணம் நேட்டோ உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தன்னுடைய உறுப்பு நாடாக ஆக்க முனைந்தது தான் என்பது வெளிப்பட்டிருக்கிறது. யதார்த்தம் எப்படி இருந்தாலும் அமெரிக்காவுக்கு பக்கமேளம் வாசிப்பது என்பது தமிழ் இந்துவுக்கு மட்டுமல்ல. அனைத்து அச்சு, காட்சி ஊடகங்களுக்கும் பொதுவான தன்மையாக மாறிப்போய் வெகு காலம் ஆகிறது. காரணம் எந்த வகையிலேனும் கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. தற்போதைய ரஷ்யாவுக்கும் கம்யூனிசத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற போதிலும், ரஷ்யாவை, சீனாவை இன்னமும் அவர்கள் கம்யூனிசத்தின் ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வளவு தான்.

 

இப்போது உக்ரைன் பிரச்சனை ஓரளவு தீர்ந்திருக்கிறது, அல்லது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், அன்றைய நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு ஒத்து ஊதிய ஊடகங்களும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதரத் தடைகள் ரஷ்யாவின் ரவுடித்தனத்தை ஒழித்துக் கட்டி சர்வதேச அரங்கில் (அதாவது அமெரிக்காவின் முன்) மண்டியிட வைத்து விடும் குஷியாக எழுதின. ஆனால் உக்ரைன் பிரச்சனையில் அடிவாங்கியிருப்பது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தான். அதனால் தான் சர்வதேச ஊடகங்கள் இதை அப்படியே கழனிப் பானைக்குள் ஊறவைத்து விட்டு அடுத்த பிரச்சனைகளுக்கு நகர்ந்து விட்டன.

 

இதற்கு ரஷ்யா மூன்று விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1. எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியது.

2. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தடை விதித்தது.

3. சைபீரிய வான்பரப்பை பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய விமானங்களுக்கு தடைவிதிக்க ஆலோசிப்பதாக அறிவித்தது.

 

உக்ரைனுடனான எரிவாயு பிரச்சனை குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ரஷ்யா ஒரு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு. ரஷ்யாவின் எரிவாயு இல்லாமல் ஐரோப்பிய யூனியனால் இருக்க முடியாது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை (ஓபெக்) ஏற்படுத்தி இருப்பது போல் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளும் உருவாக்க வேண்டும் என்று கத்தார், ஈரான் போன்ற அரேபிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியது ரஷ்யா. இந்த முயற்சி வெற்றிடைந்து ஒரு கூட்டமைப்பு உருவாகி அது எரிவாயு விலையை தீர்மானிக்கும் நிலை வந்தால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஏனென்றால் ரஷ்யாவின் எரிவாயு இல்லையென்றால் ஐரோபிய யூனியன் நாடுகள் குளிரில் நடுங்க வேண்டியதிருக்கும்.

 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து ரஷ்யா உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. காய்கறிகள், பால் பொருட்கள் போன்றவற்றை முக்கியமாக இறக்குமதி செய்கிறது. இவைகளை வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கிய்துமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அலறத் தொடங்கி விட்டன.

 

ஐரோப்பிய, அமெரிக்க விமான நிறுவனங்கள் ஜப்பான் சீன போன்ற நாடுகளுக்குச் செல்ல ரஷ்யாவின் சைபீரிய வான்பரப்பை பயன்படுத்துகின்றன. இதற்கு தடை விதிக்க ஆலோசிப்பதாக ஒரு செய்தியை கசிய விட்டது. ஒருவேளை அப்படி ஒரு தடையை ரஷ்யா விதிக்குமானால் அமெரிக்க ஐரோப்பிய விமானங்கள் துருவப் பகுதியை சுற்றிக் கொண்டு பறக்க வேண்டும். இதனால் கூடுதல் எரிபொருள் செலவும், கூடுதல் நேரமும் ஆகும். எனவே பயணத்திற்கான கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகும். இதேநேரம் ஏனைய விமானங்களுக்கு தடை இல்லை என்பதால் அவை வழக்கமான கட்டனத்திலேயே இயங்கும். இது அமெரிக்க, ஐரோபிய விமான நிறுவங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

இவைகளல்லாமல் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் சப் பிரைம் நெருக்கடியிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ரஷ்யா பெரும் பொருளாதார லாபமடைந்தது. (தற்போதைய விலை குறைப்பு ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கயாக பார்க்கும் பொருளாதார வல்லுனர்களும் உண்டு) இதனால் ஐரோப்பிய பெரு நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்ய ஆரவம் காட்டுகின்றன. குறிப்பாக எரிவாயு உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்புகின்றன. இதற்கு பகரமாக ஐரோப்பிய அணு உலைகளில் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்ய நிபந்தனை போடுகின்றன. இதற்கு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை இடையூறாக இருக்கிறது.

 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரஷ்யா மீது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை ரஷ்யாவை பாதித்ததை விட அமெரிக்க ஐரோப்பியாவை அதிகம் பாதித்தது. இதனால் பொருளாதரத் தடை பிசுபிசுத்துப் போனது. அண்மையில் ரஷ்ய எரிவாயு நிறுவனம் ஒன்றுக்கும் ஷெல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொருளாதாரத் தடை குறித்து யாருக்கும் கவலை இல்லை.

 

ரஷ்யாவுக்கு 21ம் நூற்றாண்டு ஆயுதங்களுடன் பதிலடி கொடுப்போம் என கொக்கரித்த அமெரிக்கா இன்று எந்த பதிலடியும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா அமைதியாக இருக்காது. அமைதியாக இருப்பது அதன் இயல்பிலேயே இல்லை. உக்ரைன் பிரச்சனையை அமெரிக்கா இவ்வளவு தீவிரமாக அணுகியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

1. பதிலிப் போருக்குப் பிறகு தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்று உலகின் போலீசாக நடந்து கொண்டு வருகிறது அமெரிக்கா. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு சமமாக ரஷ்யா மீண்டும் வளர்ந்து விட்டதன் குறியீடாக அமெரிக்கா கருதியது.

2. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையானது, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் நடவடிக்கைகளின் எதிர் விளைவு என்பதை மறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த காரணங்களினால் தான் தன்னிடமிருக்கும் ஊடக பலத்தைப் பயன்படுத்தி ரஷ்யா மீது ஆக்கிரமிப்பாளன் தோற்றத்தை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்தது. அது போதிய பலன் தராமல் போகவே அடுத்த வாய்ப்புக்காக அமைதி காக்கிறது.

 

அன்று முதல் இன்று வரை, சிலியின் அலண்டோ தொடங்கி லிபியாவின் கடாபி வரை அமெரிக்காவின் ரத்தக்கரை தெரிக்காத நாடே உலகில் இல்லை. இதை மறைப்பதற்கு அதன் கையிலிருக்கும் சர்வதேச ஊடகங்கள் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. அதை அப்படியே பிராந்திய ஊடகங்களும் வாந்தியெடுத்து வருகின்றன. அப்படியான் ஒரு தொடர் தான் தமிழ் இந்துவின் உக்ரைன் பற்றிய இந்த தொடர்.

 

ஒரு பக்கம் கம்யூனிசம் செத்து விட்டது என்று தொடர் பிரச்சாரம். மறு பக்கம் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் கம்யூனிச அவதூறுகள். செத்து விட்ட ஒன்றுக்காக எதற்காக அவதூறுப் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். உலகை கம்யூனிச பூதம் பிடித்தாட்டுகிறது என்று அன்றே ஆசான்கள் எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இத் தொடரின் முந்திய பகுதிகள்

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

3. தமிழ் இந்துவின் அமெரிக்க ஆவர்த்தனம்

4. தமிழ் இந்துவின் விசமத்தனம்

5. பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்

timthumb

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 5

 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம்.

 

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் திட்டமிட்டகலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2010ல் நடந்த தேர்தலில் மொத்த வாக்குகளில் பாதியளவு வாக்குகள் பெற்று மீண்டும் வென்று யனுகோவிச் அதிபரானார். வழக்கம் போலவே 2013 மத்தியில் அரசுக்கு எதிரான கலகங்கள் மூண்டன. உலகின் ஊடகங்கள் யனுகோவிச்சின் ஊழல்களுக்கு எதிராக மக்கள் போராடுவதாக மார்கெட்டிங் செய்தன. ஆனால் இந்தக் கலவரங்கள் மேற்கத்திய நாடுகளால் திட்டமிட்டு நடத்தப்படுபவை தான் என்பது ஐய்ரோப்பிய யூனியன் சிறப்புப் பிரதிநிதி ஆஸ்டினுக்கும், எஸ்தானிய வெளியுறவு அமைச்சர் உர்மாஸ் பேட் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து அம்பலமானது. அவர்கள் பேச்சில் கலவரத்தில் இறந்த 88 பேர் எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி சுடுபவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் என தெரிவிக்கிறார். இப்படி நடக்கும் கலவரங்களைத் தான் ஊழலுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டம் என ஊடகங்கள் கொண்டாடின.

 

மேற்கத்திய ஆயுத பணபல உதவிகளால் கலவரம் தொடரவே, 2014 பிப்ரவரியில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஐரோப்பிய யூனியனின் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. செப்டம்பருக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யனுகோவிச் பதவி விலகிய மறுநாளே இடைக்கால அரசுக்குப் பதிலாக கலவரக்காரர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஐரோப்பிய யூனியன் வேடிக்கை பார்த்தது.

 

யனுகோவிச் வெற்றி பெற்று பதவி ஏற்கும் போதெல்லாம் ஏன் கலவரங்கள் நடக்கின்றன? ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாகவும் சோவியத் யூனியனின் உணவுக் கிடங்காகவும் திகழ்ந்த உக்ரைன் தனி நாடான பிறகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்ற விதத்தில் பொருளாதர வளர்ச்சியை அடைய முடியாமலும் ஊழலாலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தான் என்பது முதாலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் கருத்து. இதை யனுகோவிச் ஏற்காமல் ரஷ்யாவிடமிருந்து கடனும், மானியங்களும் பெறுவதன் மூலம் நிலமைகளை சமாளித்து வந்தார். ஐரோப்பிய யூனியனுடன் இணைவதற்கான பேச்சு வார்த்தைகளிலுருந்து யனுகோவிச் இரண்டுமுறை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதற்கு அவர் கூறிய காரணம், இணைவதற்காக ஐரோப்பிய யூனியன் முன்வைக்கும் நிபந்தனைகள் உக்ரைனை திவாலாக்கி விடும் என்பது தான்.

 

நுணுக்கமாகப் பார்த்தால் ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவது உக்ரைனின் பொருளாதரத்துக்கு உகந்தது என்பதை விட ஐரோப்பிய முதலாளிகளுக்கு அவசியம் என்பது தான் பொருத்தமானது. வளமான உக்ரைனிய விளைநிலங்கள் மீது ஐரோப்பிய பெருமுதலாளிகள் நீண்ட காலமாகவே கண்வைத்திருக்கிறார்கள். ஆனால் உக்ரைனிய சட்டத்தின்படி விளைநிலங்களை அன்னியர்கள் வாங்க முடியாது. என்றாலும் பலவிதமான வழிமுறைகள் மூலம் பல ஐரோப்பிய நிறுவனங்கள் உக்ரைனிய விவசாயத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்தக் காரணங்களால் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்தே தீர்வது என அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகளும் முனைப்புக் காட்ட, இணைய மறுப்பதற்கு யனுகோவிச் கூறும் முக்கிய காரணம் ஏற்றுமதி கட்டுப்பாடு. அதாவது உக்ரைன் ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. இதை இரண்டு லட்சம் டன்னாக குறைத்துக் கொண்டு பிற மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிக்கு வழி விட வேண்டும் என்பது தான் அந்த ஏற்றுமதி கட்டுப்பாடு. இதனால் உக்ரைனுக்கு ஆண்டொன்றுக்கு 20 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படும். இது எப்படி உக்ரைனின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வாகும்?

 

ஆனால், இடைக்கால அரசுக்குப் பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட கலகக்காரர்கள் தேர்தல் நடத்தி புதிய அரசு செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை உடனடியாக செய்யத் தொடங்கினார்கள். ஐ.எம்.எஃப் பிடமிருந்து 35 பில்லியன் டாலர் கடன் பெறுவது, அமெரிக்காவிடமிருந்து 1 பில்லியன் உதவித் தொகை பெறுவது, ஐரோப்பிய யூனியனுடன் இணைவது போன்ற மிக முக்கிய முடிவுகள் மிக அவசரமாக எடுக்கப்பட்டன. இவைகளை விட சிறுபான்மையினருக்கான பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதாவது உக்ரைனிய மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும். மொழி, இன சிறுபான்மையினருக்கு இதுவரை கிடைத்துவந்த சலுகைகள் எதுவும் இனி கிடைக்காது.

 

உக்ரைனுக்கு உட்பட்ட பகுதியான கிரீமியாவில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரீமியா தனி பாராளுமன்றம், தனி அதிபர் உள்ளிட்ட அதிகாரங்கள் கொண்ட, ரஷ்ய எல்லைக்கு அருகிலிருக்கும், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் தன்னாட்சிப் பகுதி. இதனால் கிரீமியா சட்டவிரோத வழியில் பதவியை பிடித்திருக்கும் கலகக்காரர்கள் அரசை ஏற்க முடியாதென்றும், தாங்கள் உக்ரைனுடன் இணைந்திருப்பதா? ரஷ்யாவுடன் சேர்வதா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்கப் போவதாக அறிவித்தது. இதை ரஷ்யா வரவேற்றதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புக்காக படைகளையும் அனுப்பியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தன.

 

உக்ரைனின் அரசியல் சட்டப்படி தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் அரசை ஆயுத உதவி பணஉதவி வழங்கி கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய கலகக்காரர்களின் ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா கிரீமிய மக்களிடம் ஜனநாயகமான வழியில் வாக்கெடுப்பு நடத்துவோம் என அறிவித்ததை உக்ரைன் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறியது. எதையும் கண்டு கொள்ளாமல் வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் கிரீமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலகக்காரர்கள் தூக்கி வீசுவதற்கு ஆதரவளித்த அமெரிக்கா, மக்கள் விருப்பப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்ததை ரஷ்யா 19ம் நூற்றாண்டு மனோபாவத்துடன் நடந்து கொள்கிறது, அதற்கு 21ம் நூற்றாண்டு ஆயுதங்களுடன் பதிலடி கொடுப்போம்என்று கூறியது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன.

 

மக்களுக்கு மதிப்பளிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடு அமெரிக்கா என்றால் உலக மக்கள் தங்கள் பின்வாயால் சிரிப்பார்கள். ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் அமெரிக்காவின் ஜனநாயகப் படுகொலைகளின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனாலும் ரஷ்யா ஒரு சமரசத் தீர்வுக்கு முன்வந்தது. உக்ரைனில் ஒரு சமஸ்டி முறை குடியரசை ஏற்படுத்தினால் தாம் அதை பரிசீலிப்பதாக புதின் அறிவித்தார். இதை மேற்குலகம் முற்றாக நிராகரித்து கலகக்காரர்களின் ஆட்சி தொடரும் என்றது. அவர்களுக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் நிதிமூலதனங்களின் கொள்ளைக்கு வழி திறந்து விடும் நாடு என்பது தான்.

 

இந்த அமெரிக்காவின் நரித்தனங்களைத் தான் தமிழ் இந்து மழுப்பலாக ஆதரித்து நிற்கிறது. தமிழ் இந்து மட்டுமல்ல, அனைத்து ஊடகங்களுமே இப்படித்தான் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் மக்களுக்கு எதை செய்தியாக வழங்க வேண்டும் என முடிவு செய்கிறதோ அவைகளை மட்டுமே செய்தி எனும் போர்வையில் தந்து கொண்டிருக்கின்றன. ஊடக தர்மம் என்று இவர்கள் கூறிக் கொள்வதெல்லாம் கழிப்பறை காகிதங்கள் பெறும் மதிப்பைக் கூட பெறுவதில்லை என்பது தான் உண்மை.

 

உண்மை நின்றிட வேண்டும் என்பது தமிழ் இந்து வின் முழக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது. பொய்மை நின்றிட வேண்டும் என்பது தான் அதன் உண்மையான பொருள்.

இத் தொடரின் முந்திய பகுதிகள்

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

3. தமிழ் இந்துவின் அமெரிக்க ஆவர்த்தனம்

4. தமிழ் இந்துவின் விசமத்தனம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்

nato warsaw

உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 4

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  

உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அப்போது தான் ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க அடிவருடித்தனத்தின் உச்சம் விளங்கும்.

 

ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது என்றாலும் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு கூறிவிடுவது அவசியம். ரஷ்யா ஒரு சோசலிச நாடல்ல, முதலாளித்துவ நாடு தான். புதின் உட்பட அதன் தலைவர்கள் யாவரும் கம்யூனிசத்தை எதிர்க்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் தாம் என்பதை மறந்து விடலாகாது.

 

\\\பிரிந்த நாடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை. என்றாலும் முடிந்த வரை முயற்சிக்கிறார் புதின். முடிந்தவரை என்றால்? பிரிந்த நாடுகளின் கொஞ்சூண்டு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தாலே அதில் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறார்/// இப்படி எழுதியிருப்பதும் ‘தமிழ் இந்து’ தான். அதாவது  சோவியத் யூனியன் பிரிவை ஏற்க முடியாத புதின், பிரிந்து போன நாடுகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடுவதில்லை. அதனால் அது உக்ரைனை [கிரீமியாவை] அபகரித்துக் கொள்ள, ரஷ்யாவின் அதிகாரம் விரிவடைவதை விரும்பாத, மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ்வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும்  அமெரிக்கா ஜனநாயகம் பரவ வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உக்ரைன் பிரச்சனையில் தலையிடுகிறது. இது தான் ‘தமிழ் இந்து’வின் பார்வை. இது உண்மை தானா?

 

ஒரு தேசிய இனத்துக்கு மொழி அடிப்படையான ஒன்று. உக்ரைனிய மொழி தனி மொழியா? அதை தனி மொழியாக ஏற்காமல் ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழியாக கருதும் ரஷ்ய தேசியவாதிகள் இன்னும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத் தமிழ் என்றொரு வட்டார வழக்கு உண்டு. தமிழுடன் உருது மொழியை கலந்து பேசிய சென்னை உழைக்கும் மக்களின் மொழியே சென்னைத் தமிழ் என்று வழங்கப்படுகிறது. இது பார்ப்பனியத்தால் இழிவுபடுத்தப்படுகிறது. தென் மாவட்டங்களிலிருந்து முதன்முறையாக சென்னை செல்லும் யாரும் சென்னைத் தமிழை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். இது போல ரஷ்ய மொழியுடன் உக்ரைனுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் போலிஷ் மொழியை கலந்து பேசப்படுவது தான் உக்ரைனிய மொழி. 1917 புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட சோசலிச அரசு தான் ரஷ்ய வட்டார வழக்கு மொழியாக இருந்த மொழியை தனிமொழியாக அங்கீகரித்து தனி வரிவடிவமும் ஏற்படுத்திக் கொடுத்தது.

 

உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் எப்போது உருவானது? 1917 புரட்சிக்கு முன்னர் உக்ரைன் என்றொரு நாடு இருக்கவே இல்லை. இன்றைய உக்ரைனின் கிழக்குப் பகுதி ஜார் ரஷ்யாவின் கீழும், மேற்கின் ஒரு பகுதி ஆஸ்திரியாவின் கீழும், இன்னொரு பகுதி ஹங்கேரியின் கீழும் இருந்தன. புரட்சிக்குப் பிறகான சோசலிச அரசு அந்தப் பகுதிகளில் பேசப்படும் ரஷ்ய வட்டார வழக்கு மொழியின் அடிப்படையில் மூன்று பகுதிகளையும் ஒன்றிணைத்து உக்ரைன் எனும் தனி நாடாக ஏற்படுத்தி, அதற்குறிய அந்தஸ்துடனும், தனி மொழியுடன் கூடிய தேசிய இனமாகவும் அங்கீகரித்தது. உக்ரைன் எனும் சொல்லுக்கு எல்லைப்புற நாடு என்பது பொருள்.

 

1991 ல் உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடான பிறகு சில ஆட்சிக் கலைப்புகளைக் கண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட மேற்குலக ஆதரவுடன் நடந்த கலகத்தில் அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோ பிரதமராக்கப்பட்டார். இது வரையில் உக்ரைனில் நடந்த எந்த குழப்பத்திலும் ரஷ்யா தலையிடவே இல்லை. சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க கிடைக்க எந்த வாய்ப்பையும் ரஷ்யா தவற விடுவதில்லை என ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பது உண்மையானால் இந்த நிகழ்வுகளிலெல்லாம் ஏன் ரஷ்யா வாய்ப்பை தவற விட்டது?

 

உண்மையில், டிமோசென்கோ பிரதமரான பிறகு தான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோவுடன் அமெரிக்க இராணுவ தளத்தை கிரீமியாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குகிறது அமெரிக்கா. இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்த இடத்தில் முக்கியமான இன்னொரு ‘பிளாஷ் பேக்’கை பார்த்து விடுவது பொருத்தமானது.

 

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அச்சு நாடுகள், நேச நாடுகள் என்று உலகம் இரண்டாக பிரிந்திருந்தது. இது போலவே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் காலகட்டத்திலும் நோட்டோ நாடுகள், வார்ஷா நாடுகள் எனப் பிரிந்திருந்தன. நோட்டோவை அமெரிக்காவும், வார்ஷாவை சோவியத் யூனியனும் வழிநடத்தின. இதன்படி அந்தந்த நாடுகளைக் காக்கும் பொருட்டு நோட்டோ நாடுகளில் அமெரிக்காவும், வார்ஷா நாடுகளில் சோவியத் யூனியனும் தங்கள் இராணுவங்களை நிறுத்தியிருந்தன. சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்ப்பச்சேவும் அமெரிக்க அதிபர் ரீகனும் செய்து கொண்ட ‘சுய ஆயுதக் களைவு’ ஒப்பந்தத்தின் படி வார்ஷா நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தை சோவியத் யூனியன் விலக்கிக் கொண்டது. மட்டுமல்லாது அணு ஆயுதங்களை யூரல் மலைகளுக்கு அப்பால் நகர்த்தியது. முறைப்படி வார்ஷா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா எப்படி நடந்து கொண்டது? நோட்டோ கலைக்கப்படவில்லை, நோட்டோ நாடுகளில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இரானுவம் சில நாடுகளிலிருந்து விலகினாலும் பல நாடுகளில் தொடர்ந்து இருந்து வருகிறது, மட்டுமல்லாது, முன்னாள் வார்ஷா நாடுகளான போலந்து, ஸெகோஸ்லாவாக்கியா, ருமேனியா போன்ற நாடுகளையும் நோட்டோவில் சேர்த்துக் கொண்டு இராணுவ தளங்களை நிறுவி வருகிறது. இதுமட்டுமின்றி முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளையும் இணைத்துக் கொண்டு அந்த நாடுகளில் அணு ஆயுதங்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இதன் தொடர்ச்சியாகத் தான் கிரீமியாவில் இராணுவ தளம் அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை பார்க்க வேண்டும்.

 

அமெரிக்காவின் இந்த அத்துமீறல்களை விரும்பாத ரஷ்யா தனது காலடி வரை வந்து விட்ட அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கியது. முதல்கட்டமாக உக்ரைனுக்கு வழங்கிவந்த எரிவாயுவின் விலையை உயர்த்தியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் குளிர் பிரதேச நாடுகள் என்பதால் கணப்பு அடுப்புகள் இல்லாமல் இருக்க முடியாது. கணப்பு அடுப்புகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்திருக்கின்றன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த எரிவாயுவை முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு மானிய விலையில் வழங்கி வந்தது ரஷ்யா. அப்படி மானிய விலையில் எரிவாயு பெற்று வந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இந்த மானியத்தை ரத்து செய்த ரஷ்யா உக்ரைனும் சர்வதேச அளவில் விற்கும் சந்தை விலையையே உக்ரைனும் தர வேண்டும் என்று வற்புறுத்தியது. இதனால் பிரதமர் டிமோசென்கோ அமெரிக்க உதவியை நாட அமெரிக்கா ஐரோபிய யூனியனைக் கைகாட்டியது. இந்த நெருக்கடி முற்றியதோடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ள, அடுத்து வந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவு பெற்ற யனுகோவிச் மீண்டும் வெற்றி பெற்றார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது என்று எற்கனவே இருந்த டிமோசென்கோ அரசு எடுத்திருந்த முடிவின்படி ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ரஷ்ய ஆதரவு யனுகோவிச் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதனால் உலக நியதிப்படி[!] கலகக்காரர்களால் கலகம் மூண்டு யனுகோவிச் தூக்கி வீசப்பட்டார். இது தான் உக்ரைன் பிரச்சனையின் மையம்.

 

இப்போது ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு வன்மத்தோடும், எவ்வளவு விசமத்தனத்தோடும் அந்தத் தொடர் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும். ஏன் இப்படி எழுத வேண்டும்? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பு மனோபாவம் தான் காரணம். ரஷ்யா சீனா போன்றவை சோசலிச நாடுகள் அல்ல என்றபோதிலும் தங்களது கம்யூனிச எதிர்ப்பை தீர்த்துக் கொள்ள ரஷ்யா சீனாவை கம்யூனிசத்தின் குறியீடாக பாவிக்கின்றன. அதனால் தான் இது போன்ற அபத்தங்களை கூசாமல் அவிழ்த்து விடுகின்றன. தனக்கு உகந்த முறையில் மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்று கருதிக் கொண்டு எந்த நியதிக்கும் உட்படாமல் அடாவடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவை வெட்கமின்றி தாங்கிப் பிடிக்கும் ‘தமிழ் இந்து’ வேறு என்ன தான் செய்யாது?

 

உக்ரைன் பிரச்சனையின் வேறு சில விளைவுகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

3. தமிழ் இந்துவின் அமெரிக்க ஆவர்த்தனம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்

soviet1920

உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 3

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  

தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா .. .. .. சோவியத் யூனியன் எதனால் உடைய வேண்டும் என்பதற்கு எளிதான ஒரே விடை கிடையாது/// ஏன் ஒரே விடை கிடையாது? எளிதான ஒரே விடை கிடையாது என்று கூறிய தமிழ் இந்து எத்தனை விடைகளை கூறியிருக்கிறது? ஒரே விடை தான். அதுவும் அமெரிக்கா ஊதிய அதே நாயனத்தை தனி ஆவர்த்தனமாக அரங்கேற்றியிருக்கிறது. சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவை இராணுவ பலத்தால் ஒருங்கிணைத்ததைப் போல் ரஷ்யாவும் செய்து சோவியத் யூனியனாகியது என்று காட்டுவதற்கு தமிழ் இந்து பகீரதப் பிரயத்தனம் செய்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 

இப்போது சோவியத் யூனியனின் உடைவுக்கான விடையை காண வேண்டியதிருக்கிறது. அதற்கு முன்னதாக அவை எப்படி இணைந்தன என்பதை ஐரோப்பிய வரலாற்றிலிருந்து அவதானித்தால் அவை எப்படி உடைந்தன என்பதற்கான சரியான விடையை அடைவது எளிதாக இருக்கும்.

 

தேசியம், தேசிய அரசு என்பவை முதலாளித்துவத்தின் விளைவு. இந்த விளைவு 18ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மேற்கு ஐரோப்பியாவில் வலிந்தது, பல தேசிய அரசுகள் தனித்தனியாக எழுந்தன. ஆனால் இதே போன்ற தேசிய இன அரசுகள் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படவில்லை. காரணம், கிழக்கு ஐரோப்பாவில், மஞ்சூரிய, ஜப்பானிய, உத்மானிய, ஜாரிய பேரரசுகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. இவைகளின் படை வலிமைக்கு எதிராக சிற்றரசுகளாக இருந்த தேசிய இனங்கள் எதிர்த்து நிற்க முடியாமல் இயல்பாகவே ஒன்றிணையத் தொடங்கின. ஒன்றிணைந்து பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டரசுகளை ஏற்படுத்தி பேரரசுகளை எதிர்கொண்டன. இந்தக் கூட்டரசின் நிகழ் போக்கில் பேரினவாதக் கண்ணோட்டம் தலை தூக்கியது. இந்த காலகட்டத்தில் தொடங்கிய முதல் உலகப் போர் இராணுவ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை புதிய எல்லைக்கு கொண்டு சென்றதால் பல்வேறு சிறு தேசிய இனங்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின. இவ்வாறு கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தேசிய இனங்களின் சிக்கல்கள் அவைகளை தீர்ப்பதற்கான காரணிகளை தகவல்களை சேகரிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஸ்டாலினைப் பணித்தார் லெனின். இந்த வகையில் தான் லெனினிசத்தின் முக்கியமான கோட்பாடான ‘பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை’ தோன்றியது. இந்த அடிப்படையில் தான் 1917 புரட்சியின் பின்னர் பல்வேறு தேசிய இனங்களை குடியசுகளாக உள்ளடக்கி சோவியத் யூனியன் உருவானது. மனித குலத்தின் மீப்பெரும் சிக்கல்களில் ஒன்றான தேசிய இனச் சிக்கல்களுக்கு தீர்வை முன்வைத்த சோவியத் யூனியனின் உருவாக்கத்தைத் தான் ‘தமிழ் இந்து’ சர்தார் வல்லபபாய் படேலின் இராணுவ நடவடிக்கையுடன் ஒப்பிட்டு கொச்சைப் படுத்துகிறது.

 

நிலவி வந்த சிக்கல்களுக்கு சரியான தீர்வாக வந்த சோவியத் யூனியன் ஏன் சிதைய வேண்டும்? முடியாட்சி, குடியாட்சி, ஜனநாயகம் உள்ளிட்டு பலவாறாக கூறப்படும் அரசுகளுக்கும் சோசலிச அரசுக்கும் இடையில் உள்ள முதன்மையான வித்தியாசம் என்னவென்றால், பிற எல்லா வகை அரசுகளும் வர்க்க முரண்பாட்டை பயன்படுத்தி, வளத்தெடுப்பதை நோக்கமாக கொண்டவை, சோசலிச அரசோ வர்க்க பேதத்தை நீக்கி மனிதர்களை எந்தவித பிரிவுகளுக்கும் இடமில்லாத மனிதர்களாக மட்டுமே வாழவைப்பதை நோக்கமாக கொண்டது. கடந்த சில நூற்றாண்டுகளில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருந்த மாமன்னர்களிடம் கூட இல்லாத அளவுக்கு இன்றைய முதலாளித்துவத்தின் தனிமனிதர்களிடம் செல்வங்கள் கோடி கோடியாய் குவிந்ததெப்படி? வர்க்கப் பிரிவினையைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவதில் உச்சத்துக்குச் சென்ற முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம். மனித குலத்தின் வர்க்கப் பிரிவினையின் உச்சகட்ட பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கம், வர்க்கங்களை இல்லாமலாக்கும் நோக்கத்திடன் தோன்றியிருக்கும் சோசலிச அரசையும், சோவியத் யூனியனையும் விட்டுவைக்குமா? நேரடி இராணுவ நடவடிக்கைகள் மூலமும், மறைமுகமாக தேசிய இனப் பிரச்சனைகளை தூண்டி விடுவதன் மூலமும் பலவீனப்படுத்த தொடர்ச்சியாக முயன்றது.

 

போலி கம்யூனிச கட்சிகளும், முதலாளித்துவ ஆதரவாளர்களும் 1991ல் தான் சோவியத் யூனியன் சிதைந்ததாக சாதிக்கிறார்கள். அதாவது, 1991க்கு முன்னர் இருந்தது சோசலிச அரசு தான் என்று சாதிக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினுக்குப் பிறகிலிருந்தே சோவியத் யூனியனின் சிதைவு தொடங்கி விட்டது என்கிறார்கள் உலகெங்கிலுமுள்ள புரட்சிகர கம்யூனிஸ்டுகள். இரண்டில் எது உண்மை? ஒரு கேள்வியிலிருந்து தொடங்கினால் அந்த உண்மை புலப்பட்டுவிடும். கம்யூனிச பூதம் ரஷ்யாவை ஆட்டிப்படைக்கிறது. ஜனநாயகத்தைக் கொண்டுவருவது தான் அந்த மக்களுக்கு செய்யும் உதவி என்று முதலாளித்துவவாதிகள் கூறி வந்தார்கள். 91ல் கம்யூனிசம் வீழ்ந்து முதலாளித்துவம் வந்தது என்றால், கம்யூனிச சோவியத் யூனியனில் இல்லாதிருந்த முதலாளிகள் திடீரென ஒரே இரவில் தோன்றி விட்டார்களா? இல்லையென்றால் எப்போது தோன்றினார்கள்?

 

சோசலிச ஆட்சி என்பது உற்பத்தி முறையை, உற்பத்தி கருவிகளை பொதுவுடமையாக்குவதை நோக்கமாக கொண்டது. ஜாரின் ஆட்சியில் தனியுடமைகளாக இருந்த நிலமும், ஆலைகளும் படிப்படியாக பொதுவுடமையாக ஆக்கபடுகின்றன. அரசுடமையாக்கப்பட்ட நிலம் கூட்டுப்பண்ணைகளாக மாற்றப்பட்டு, உழவு, களையெடுப்பு தொடங்கி அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்துறை விவசாயத்தையும் சார்ந்திருப்பதாக மாற்றப்பட்டு ஒருங்கே வளர்த்தெடுக்கப்பட்டது. விளைவு, 200 ஆண்டுகளில் முதலாளித்துவ நாடுகள் சாதித்ததை 20 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது சோவியத் யூனியன். வறுமையும், இல்லாமையும் நிறைந்திருந்த ஜாரின் ரஷ்யா தன்னிறைவு பெற்ற சோவியத் யூனியனாக மாறுகிறது. நிலம் கூட்டுப் பண்ணைகளாகவும், அரசே நிர்வகிக்கும் ஆலைகளாகவும் சோவியத் யூனியனின் உற்பத்தி மாற்றப்பட்ட பிறகு தனியுடமையின் பலனினால் உருவாகும் முதலாளிகள் எப்படி தோன்ற முடியும்?

 

தோழர் ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ் கும்பல் சோசலிசத்தை கைவிட்டு அதிகாரவர்க்க முதலாளித்துவ பாதைக்கு திரும்புகிறது. அரசுடமையாக்கப்பட்ட கூட்டு நிர்வாகத்தை மாற்றி அரசு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி மாற்றியமைக்கப்படுகிறது. அந்த அதிகாரவர்க்க ஆசாமிகள் படிப்படியாக உற்பத்தியின் பலனை தங்களே சுவீகரிக்கத் தொடங்குகிறார்கள். உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் முதலாளிகள் உருவாகிறார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்ய, இந்த அதிகாரவர்க்க முதலாளிகளை ஊக்குவித்த முதலாளித்துவவாதிகளும், போலி கம்யூனிஸ்டுகளும் அங்கு சோசலிசம் தொடர்வதாக வாதிட்டார்கள். மட்டுமல்லாது இந்த விமர்சனங்களை செயலிழக்கச் செய்ய ஏற்கனவே செய்யப்பட்டு வந்த தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் அதிகமதிகம் பரப்பப்படுகின்றன. இப்படி சோசலிச திரை மறைவில் இருந்து கொண்டு முதலாளித்துவத்தை வேகமாக வளர்த்தார்கள். இது ஒரு பாரிய நெருக்கடிக்குள் நாட்டை தள்ளியது.

 

அதிகாரவர்க்க முதலாளிகள் ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் கூட்டு உற்பத்தியே சமூக அளவில் தொடர்ந்தது. அவ்வளவு எளிதில் அதை தனியுடமை ஆக்க முடியவில்லை. இதை தோழர் மாவோ எளிமையான ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவார். “குதிரையின் ஒவ்வொரு காலும் ஒரு விவசாயியுடன் பிணைக்கப்பட்டிருக்கும் போது, ஆளுக்கு ஒரு காலாக வெட்டி எடுத்தா தனியுடமை ஆக்க முடியும்?” ஒரு கூட்டுப் பண்ணையில் நூறு விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள் என்று கொள்வோம். நிலமோ, விவசாயக் கருவிகளோ தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருக்கும் சொந்தமானது. இதை தனியுடமை ஆக்க வேண்டுமென்றால் நிலத்தையும் கருவிகளையும் எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பயனின்றிப் போகும். ஒரு சிலர் மட்டும் எடுத்துக் கொண்டால் ஏனைய விவசாயிகள் வறுமையில் வாட நேரிடும். இதனுடன் அதிகாரவர்க்க முதலாளிகளின் வளர்ச்சி விவசாயிகளைச் சுரண்டுவதாக இருந்தது. இதே சிக்கல்கள் தான் ஆலை நிர்வாகத்திலும் நடந்தது.

 

மறுபக்கம், மிக குறுகிய காலத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக ஆன சோவியத் யூனியன் ஆயுதக் கொள்முதலில் பெருமளவில் ஈடுபடுவதற்காக ஆயுத உற்பத்தியாளர்கள் ஆட்சியாளர்களைத் தூண்டினார்கள். மேல்நிலை வல்லரசான அமெரிக்காவுக்கு போட்டியாக ஆயுத உற்பத்தியிலும், அணு ஆயுத, வானியல், ராக்கெட்  ஆய்வுகளிலும் நாட்டின் பொருளாதாரம் திருப்பி விடப்பட்டது.

 

இன்னொரு பக்கம், அதிகாரவர்க்க முதலாளிகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைக்க அதிகாரப் போட்டியில் குதித்தார்கள். அதற்கு எதிராக இருப்பவர்களையெல்லாம் ஸ்டாலினிசவாதிகள் என்று தூற்றினார்கள். இதனால் கமிட்டிகளைக் கலைப்பது, மீறுவது என்று நிர்வாக குளறுபடிகள் மலிந்தன. மட்டுமல்லாமல் சிறிய பெரிய அளவிலான ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரங்கேறின.

 

வேறொரு பக்கம், சோவியத் யூனியனை பலவீனப்ப்டுத்தும் நோக்கத்தில் தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவவாதிகள் கிளப்பி விட்டார்கள். பேரினவாதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தோழர் ஸ்டாலினால் மேற்கொள்ளப் பட்டிருந்த குடியேற்றங்கள் மத்தியில் பகைமையுணர்வு கூடி சண்டைகள் ஏற்பட்டன.

 

இவை அனைத்தும் ஒன்றுகூடி ஆளவே முடியாத அளவுக்கு சோவியத் யூனியனில் சிக்கலை ஏற்படுத்தின. ஆனாலும் சோசலிசம் தொடர்வதாக ஆட்சியாளர்கள் மக்களை நம்பவைத்துக் கொண்டிருந்தார்கள். சோவியத் யூனியனுக்கு வெளியிலிருந்த போலி கம்யூனிஸ்டுகளும் அங்கு சோசலிசம் தொடர்வதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இதற்கு மேலும் ஒரே யூனியனாக தொடர முடியாது எனும் நிலையில் 1985ல் அதிகாரத்துக்கு வந்த கோர்ப்பச்சேவ் பிரஸ்ட்ரொய்கா, கிளாஸ்நாஸ்ட் எனும் இரண்டு திட்டங்களைக் கொண்டு வந்தார். அவை சோசலிச திரைச்சீலையின் மறைவில் இருந்த முதலாளித்துவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பது குறித்த திட்டங்கள் தானே தவிர இல்லாதிருந்த சோசலிசத்தை உடைப்பது குறித்த திட்டங்கள் அல்ல. இதனால் தான் யெல்ட்சின் சோவியத் யூனியனை 15 நாடுகளாக பிரித்ததோடல்லாமல் பெயரளவுக்கு இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் கலைத்தார்.

 

இதைத்தான் கம்யூனிசம் தோற்று விட்டது, கம்யூனிசம் செத்து விட்டது என்று வாய் கூசாமல் கூறித் திரிகிறார்கள். ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறுண்டது வரை அங்கு இருந்தது வளர்ந்தது முதலாளித்துவமே. சோசலிச கட்டுமானத்துக்குள் முதலாளித்துவம் இருக்க முடியாமல் சிதறியதைத் தான் கம்யூனிசத்தின் தோல்வியாக காட்டுகிறார்கள். குருச்ஷேவ் தொடங்கி கோர்ப்பச்சேவ் வரையிலும் அங்கு நடந்த முதலாளித்துவ சதிகளை, அரங்கேற்றிய கொடூரங்களை மறைப்பதற்காகத் தான் 91 வரையிலும் அங்கு சோசலிசம் இருந்தது என்றும் அதன் பிறகு திடீரென்று அவை உடைந்து முதலாளித்துவம் தோன்றி விட்டது என்றும் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த கட்டுக் கதைகளைத்தான் தமிழ் இந்து சொற்களால் சிலம்பமாடி காட்டியிருக்கிறது. \\\ரஷ்யர்கள் அல்லாத பல இனங்களைச் சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் பாதிக்கும்மேல் வசித்தனர். அவர்கள் தங்கள் இனங்கள் ரஷ்யர்களுக்கு கீழாக எண்ணப் படுவதை விரும்பவில்லை/// \\\“க்ளாஸ் நாஸ்ட்’’ (Glasnost) என்ற கொள் கையை அறிமுகப்படுத்தினார். இது சோவியத் யூனியன் மக்களுக் குப் பேச்சுரிமையை அளித்தது/// என்று சோவியத் யூனியனில் குறுந்தேசிய இனங்கள் அடக்குமுறையால் அவதிப்பட்டதைப் போலவும். கிளாஸ்நாஸ்ட் வரும் வரையில் சோவியத் மக்கள் பேச முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததைப் போலவும் படம் வரைந்து பாகம் குறிக்கிறது.

 

இது மட்டுமா? அமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா என்று எழுதியிருக்கிறது. இது உண்மைக்கு நேர் எதிரான, அமெரிக்க அடிவருடித் தனத்தின் உச்சம். அவைகளையும் நாம் தொடர்ந்து சுரம் பிரித்துப் பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

உக்ரைன் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருக்கும் போது ஏற்பட்ட பஞ்சத்தால் 15 000 குழந்தைகள் மரணமடைந்ததை சொல்லும் பத்திரிக்கை செய்தி

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 2

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனம்செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்/// அதாவது, சோவியத் யூனியன் தன்னுடைய படை வலிமையால் உக்ரைனை பணிய வைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது என்று கூசாமல் எழுதியிருக்கிறார்கள். நோக்கியா நாடு என்று நினைவில் கொள்ளப்படும் பின்லாந்து சோவியத் யூனியனிலிருந்து எப்படி பிரிந்து தனிநாடானது எனும் வரலாறு தெரியுமா இவர்களுக்கு?

 

ஜார் மன்னனின் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகத் தான் பின்லாந்து இருந்தது. ஆனாலும், புரட்சிக்குப் பின் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க பின்லாந்து விரும்பவில்லை. காரணம், சோவியத்தின் அடிப்படையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தோழர் லெனின் ரஷ்ய பேரினவாதிகளின் எதிர்ப்பையும் மீறி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பின்லாந்து தனிநாடாக ஆவதற்கான அனுமதியை கொண்டு வந்தார். இந்த சுய நிர்ணய உரிமை உக்ரைனுக்கு பொருந்தியிருக்காதா? ‘பிரம்மாண்ட செம்படைக்குமுன்னால் பின்லாந்து பெரும்படையை கொண்டிருந்தது என்று தமிழ் இந்து கருதுகிறதா? அல்லது நோக்கியா மோகத்தில் இருந்த தமிழர்கள் பின்லாந்து வரலாற்றை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்ததா?

 

ஒரு பொய்யைக் கூறினால் மட்டும் போதாது. வாசகர்கள் அந்தப் பொய்யை அறிந்திடா வண்ணம் திசை மாற்றி கொண்டு சென்றாகவும் வேண்டும் எனும் அவசியம் இருக்கிறதல்லவா? அதனால் தான் தமிழ் இந்து ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான பதிலின் மூலம் நகர்த்திச் செல்கிறது. உலகின் போக்கை தீர்மானிக்கவல்ல ஒரு வல்லரசின் பகுதியாக இருப்பது நல்லது தானே, பின் ஏன் உக்ரைனிய மக்கள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பினார்கள்? எனும் கேள்வியை முன்வைக்கிறது. இது முன்பின் காலப் பகுதிகளை பொருத்தமற்று குழப்பும் நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. எப்படியென்றால், முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இந்த காலகட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு தலைமை தாங்கிய இங்கிலாந்து அதன் தகுதியை அமெரிக்காவிடம் இழந்த காலகட்டம். இதற்கு முந்திய ஜாரின் ரஷ்யப் பேரரசோ, புரட்சிக்குப் பின்னான லெனின் தலைமையிலான சோசலிச அரசோ பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் இருந்தது. சோவியத்தை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்த ஜெர்மனியுடன் தன்னுடைய நலனை விட்டுக் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்த நாடு. இந்த நிலையைத் தான் உலகின் போக்கைத் தீர்மானிக்கும் வல்லரசுஎன்னும் சொல்லால் குறிப்பிடுகிறது தமிழ் இந்து. சோவியத் யூனியன் அமெரிக்காவிக்கு நிகரான வல்லரசாக மாறியது பின்னர். இந்த இரண்டு வெவ்வேறு காலப் பகுதிகளை ஒன்றிணைத்து தான் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது தமிழ் இந்து. இதைக் கூட பிரித்தறிந்து கொள்ள இயலாதவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதினால் அது என்ன தரத்தில் இருக்கும்?

 

சரி, அந்தக் கேள்விக்கான பதில் என்ன? \\\உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள்? இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது/// இப்படித் தொடங்கும் தமிழ் இந்துவின் பதில் படிப்படியாக உக்ரைனில் பஞ்சம், இனப் படுகொலை என்று முதலாளித்துவத்தின் கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறில் சென்று தஞ்சமடைகிறது. அதாவது, உக்ரைன் பகுதி விவசாயம் செழித்த பகுதி, அங்கு நிறைய பணக்கார விவசாயிகள் இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு அதிகரித்தால் அவர்கள் தனிநாடு கேட்பார்கள். அவர்கள் தனிநாடு கேட்டால் சோவியத் யூனியனே சிதறிப் போகுமே என்று கவலைப்பட்ட ஸ்டாலின், பணக்கார விவசாயிகள் பதுக்கி வைக்காமல் கண்காணிக்கிறோம் எனும் போர்வையில் இராணுவத்தை அனுப்புகிறார். இராணுவம் பணக்கார விவசாயிகளை சைபீரியப் பகுதிக்கு கடத்திவிட அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். இதைத்தான் இனப் படுகொலை என்று சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். இதுதான் தமிழ் இந்து வர்ணிக்கும் உக்ரைன் மக்கள் பிரிந்து போக விரும்பியதற்கான கலாச்சார பின்னணி.

 

indian famine

இந்தியப் பஞ்சம்

 

வாசகர்கள் இதை தெளிவாக கவனிக்க வேண்டும். ரஷ்யாவில் புரட்சி நடந்து சோவியத் யூனியன் அமைகிறது. இந்த சோவியத் யூனியனில் அங்கம் வகிக்க விரும்பாத உக்ரைனியர்கள் தனிநாடு கோருகிறார்கள். இதை செம்படை தன் வலிமை மூலம் அடக்குகிறது. வேறு வழியில்லாமல் சோவியத் யூனியனில் நீடிக்கிறார்கள். ஏன் அவர்கள் சோவியத் யூனியனுடன் இணைந்திருக்க விரும்பவில்லை என்றால் லெனினுக்கு பின் வந்த ஸ்டாலின் விவசாயிகளை விவசாயிகளை சைபீரியாவுக்கு கடத்தி பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தி உக்ரைனிய மக்களை கொன்று குவித்ததனால் ரஷ்யாவின் மீது வெறுப்புற்ற உக்ரைனிய மக்கள் லெனின் தலைமையிலான சோவியத் யூனியனுடன் இணைய விரும்பவில்லை. எப்படி இருக்கிறது? காதில் பூச்சுற்றுவது என்பதையெல்லாம் தாண்டி காதில் பூந்தோட்டமே வளர்த்துப் பாரமரிப்பது என்று சொல்லலாமா? பொய்யைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியாத இவர்கள் வரலாறு எழுத வந்தது ஏன்? வேறென்ன, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கம்யூனிசத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதான்,

 

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? அகண்ட ஜெர்மனி கனவுடன் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக குறிப்பாக உக்ரைனுக்கு எதிராக நாஜி ஹிட்லர் நடத்திய உளவியல் பிரச்சாரம் தான் சோவியத் யூனியனில் பஞ்சம், லட்சக்கணக்கான மக்கள் படுகொலை என்பதெல்லாம். அது அமெரிக்க உதவியுடன் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்ன? கேரத் ஜோன்ஸ், ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன், வில்லியம் ஹெர்ஸ்ட், தாமஸ் வாக்கர் போன்ற எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், பத்திரிக்கை அதிபர்களும் எழுதிய, வெளியிட்டவை தான் இன்றுவரை முதலாளித்துவ அடிவருடிகளாலும், மதவாதிகளாலும் ஆதாரமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. இவர்களில்,

 

கேரத் ஜோன்ஸ் ஹிட்லரால் சோவியத் யூனியனுக்குள் கட்டுக்கதைகளை உருவாக்கும் நோக்கத்தில் அனுப்பப்பட்டவர். இதை அவரே பின்னாளில் ஒப்புக் கொண்டார்.

 

ராபர்ட் கான்குவெஸ்ட் கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். பிரிட்டன் ரகசிய உளவுத் துறையிலிருந்து பணம் பெற்று வரும் ஒரு உளவாளி, எழுத்தாளர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது.

 

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் இவர்கள் மூவரும் பிரிட்டன் உளவுத்துறையிடம் பணம் பெற்றுக் கொண்டு எழுதிய கைக்கூலி எழுத்தாளர்கள் என்பது 1996ல் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.

 

சோல்சனிட்சன் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். நோபல் பரிசு எதற்காக வழங்கப்படுகிறது, நோபல் பரிசு வழங்கப்படுவதன் அரசியல் என்ன என்பது இன்று எல்லோருக்கும் அறிந்த உண்மை. அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும், அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோவியத் யூனியன் எழுத்தாளர் பிரச்சாரம் செய்தார். எழுத்தாளருக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பும், அமெரிக்க அடிவருடித்தனமும் தான். இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

 

வில்லியம் ஹெர்ஸ்ட் அமெரிக்க பத்திரிக்கை அதிபர். உலகளாவிய தன்னுடைய பத்திரிக்கை மூலம் ஹிட்லருக்கு ஆதரவாக சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்பட்டவர்களின் கட்டுரைகளையும் எழுத்துகளையும் உலகமெங்கும் பரப்பியவர். இவைகள் அனைத்தும் கட்டுக் கதைகள் என்று கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் தன்னுடைய பித்தலாட்டம், பஞ்சம் மற்றும் பாசிசம் இட்லர் முதல் ஹார்வார்டு வரையிலான உக்ரைன் படுகொலைகள் என்கிற புனை கதைஎனும் நூலில் அம்பலப்படுத்தினார்.

 

தாமஸ் வாக்கர் உக்ரைனிய கட்டுக்கதைகளுக்கு புகைப்படங்கள் வழங்கியவர். இவர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஐந்து நாட்கள் மட்டுமே தங்கி இருந்தார். இந்த உண்மையை தி நேசன் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் நிரூபித்தார்.

 

இந்த கைக்கூலிகளின் கட்டுக்கதைகள் தான் உலகமெங்கும் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைப் பொழிகின்றன. சோவியத் யூனியனும், கம்யூனிசத்தோடு தொடர்பற்ற நேர்மையான எழுத்தாளர்களாலும், ஆய்வாளர்களாலும் இவைகள் அனைத்தும் பொய் என்றும், உள்நோக்கத்துடன் புனையப்பட்டவை என்றும் அப்பட்டமாக அம்பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. சோவியத் மீதான புனைவுகளுக்கு எதிராக உண்மைகளை வெளிக் கொண்டுவந்த முதலாளித்துவ ஊடகவியலாளர்களின் பட்டியல் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இதன் பின்னரும் அதே அவதூறுகளை தூக்கிபிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இங்கு எழுப்ப வேண்டிய கேள்வியே தவிர உக்ரைன் பிரச்சனை ஒரு முகாந்திரம். அவ்வளவு தான்.

 stalin ukraine

1930 களில் உக்ரைனில் நடந்தது என்ன? ஸ்டாலின் காலத்தில் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. தொழிற்துறை, விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக தன்னிறைவை எட்டும் வண்ணம் திட்டமிட்ட உற்பத்தி பெருக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பஞ்சம் தொடர் கதையாக இருந்தது. பஞ்சத்தினால் பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இந்தியாவும் இந்த பஞ்சத்துக்கு தப்பவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம், இரண்டு மில்லியன் மக்களை பட்டினிச் சாவுக்குள் தள்ளியது. ஆனால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு மட்டும் தோழர் ஸ்டாலினும், கம்யூனிசமும் பொறுப்பாக்கப்பட்டன. இந்த பஞ்சத்துக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை தான் பதுக்கல்காரர்களை கைது செய்தது, உக்ரைனின் பணக்கார விவசாயிகளோ தங்களின் கோதுமை சோவியத் அரசுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக வயல் வெளிகளை தீயிட்டு எரித்தார்கள். இந்த பதுக்கல்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும் கைது செய்ததை தான் வெள்ளை அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தமானுக்கு கைது செய்து அனுப்பியதோடு ஒப்பிடுகிறது தமிழ் இந்து. இப்படிப்பட்ட கொடூரர்களை ஒரு அரசுத் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தோழர் ஸ்டாலின் செய்தார்.

 

சோவியத் யூனியனை இரும்புத்திரை நாடு என்று இன்றளவும் கூறி வருகிறார்கள். ஆனால் மாபெரும் சதி வழக்குநடந்த போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் யூனியன் சார்பில் வழக்கை பார்வையிட பிரதிநிதியை அனுப்புமாறு கோரிக்கை அனுப்பப்பட்டது. அமெரிக்கா உப்பட பல நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பின. அத்தனை பேரும் இது போன்று வெளிப்படையான ஒரு விசாரணையை நாங்கள் கண்டதில்லை என்றனர். அதற்கு முன்பும் பின்பும் இப்படி ஒரு வெளிப்படையான விசாரணை உலகின் எந்த நாட்டிலும் நடந்ததில்லை. ஆனாலும் சோவியத் யூனியன் என்றால் இரும்புத்திரை நாடு என்று தான் இன்றும் அழைக்க விரும்புகிறார்கள். என்றால் கம்யூனிசத்தைக் கண்டு அவர்கள் முதலாளித்துவவாதிகள் என்றாலும் மதவாதிகள் என்றாலும் அஞ்சுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

 

இந்த அச்சம் தமிழ் இந்துவுக்கும் இருக்கிறது. அதனால் தான் அது பொய்களின் மேல் பொய்களாக அடுக்கிக் கொண்டே செல்கிறது. \\\சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர் என்று சாதித்தது/// சோவியத் யூனியன் சர்வாதிகாரமும் கொடூரங்களும் நிறைந்திருக்கும் இரும்புத்திரை நாடு என்று தான் ஊடகங்க்ளை கையில் வைத்திருக்கும் முதலாளிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய்களுக்கு விளக்கம் கொடுப்பது தான் சோவியத் யூனியன் செய்திப் பிரிவின் முழுநேர வேலையாக இருந்தது. இதைத்தான் உழைப்பாளர்களின் சொர்க்கமெனும் இமேஜ் இருந்ததாகவும், உண்மை வெளிவந்து மக்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அதை சமாளிக்க நோய்களால் தான் இறந்தனர் என்று சாதித்ததாகவும் திரித்து எழுதுகிறது தமிழ் இந்து.

 

உக்ரைன் குறித்த முந்திய அவதூறுகளைப் போலவே இன்றைய பிரச்சனை குறித்தும் உண்மைகளை மறைத்து அவதூறு செய்துவருவதை தொடர்ந்து பார்ப்போம்.

இத் தொடரின் முந்திய பகுதி

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

ukraine

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க

உக்ரைன்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக உலகின் முன் இருந்தது. இன்றைய செய்திகளின் நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் இப்போது இல்லை. என்றாலும் உக்ரைன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த உக்ரைன் பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டாம் தேதியிலிருந்து தமிழ் இந்து நாளிதழில் ஆறு நாட்கள் தொடராக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களுக்கு உக்ரைன் பிரச்சனை குறித்த செய்திகளை வழங்கவில்லை. மாறாக, ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான கண்ணோட்டம். அதன் வழியே கம்யூனிசத்துக்கு எதிரான கண்ணோட்டம். அதுமட்டுமல்லாமல் உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு குறித்த எதையும் காட்சிப்படுத்தாமல் ரஷ்யாவையும் உக்ரைனையும் மட்டுமே பாத்திரங்களாகக் கொண்ட ஒரு ஓவியத்தையும் வாசகனின் மனக்கண் முன் தீட்டிக் காட்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களானாலும் சரி, அச்சு ஊடகங்களானாலும் சரி வெளிநாட்டுச் செய்திகள் என்ற பெயரில் பாண்டாக் கரடி குட்டி போட்டதையும், அமெரிக்க மாநகராட்சி குப்பை வண்டிகள் பனிப்பொழிவை அள்ளி சாலைகளை சுத்தப்படுத்துவதையும் மட்டுமே செய்திகளாக கூறிக் கொண்டிருக்கின்றன. பற்றியெறிந்து கொண்டிருக்கும் பிரச்சனை குறித்த செய்திகள் கூட “ஈராக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர்” என்பது போல் தான் செய்தி வெளியிடுகின்றன. ஈராக்கின் எண்ணெய் வளம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ஈராக்கிலிருந்த ஆட்சியை தூக்கியெறிந்து, குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, இராணுவ முகாம்களுக்குள் இருப்பதைப்போல் சொந்த நாட்டில் மக்களை துப்பாகி முனையில் நிம்மதியில்லாமல் உலவவிட்டிருக்கும் அமெரிக்காவையும் அதன் கூலிப்படையினரையும் பாதுகாப்புப் படையினர் என்றும், அவர்களை எதிர்த்து போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றும் குறிப்பிடுவதற்கு இந்த ஊடகங்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லை. இந்த இலக்கணத்துக்கு கொஞ்சமும் விலகாமல், மாத்திரை குறையாமல் வந்திருப்பது தான் தமிழ் இந்துவின் உக்ரைன் பற்றிய “உருக்குலைகிறதா உக்ரைன்” எனும் கட்டுரைத் தொடர்.

அந்த தொடர் குறித்து பார்க்கும் முன் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுவது பொருத்தமாக இருக்கும். இன்றைய ரஷ்யா ஒரு கம்யூனிச நாடல்ல, அதுவும் ஒரு முதலாளித்துவ நாடுதான். எனவே, இன்றைய ரஷ்யாவின் செயல்பாடுகளை கம்யூனிசத்தோடு பொருத்திப் பார்ப்பது முறையற்றதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

முதலில் அந்தத் தொடரின் சில வாக்கியங்களை மேற்கோளாக காட்டி அதன் மூலம் அவர்களின் விருப்பம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிவிட்டு உக்ரைன் பிரச்சனைக்குள் புகுந்து பார்க்கலாம்.

“1905ல் ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு அங்கு முழுமையான முடியாட்சி என்பது அரசியல் சட்ட முடியாட்சியாக (constitutional monarchy) மாறியது. ஆனாலும் கூட மன்னர் அரசியலில் பலம் மிகுந்தவராகத்தான் இருந்தார். 1917-ல் நடைபெற்ற பிப்ரவரி புரட்சி, மன்னராட்சியை முற்றிலுமாக ஒழித்தது. ரஷ்ய பேரரசில் அன்று இருந்த நாடுகள் இணைந்து ஒரே நாடாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. யூனியன் ஆஃப் சோவியத் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்ஸ் என்று தங்களது ஒற்றுமையை ஒரே பெயரில் காட்டிக் கொண்டன. அதன் சுருக்கம்தான் சோவியத் யூனியன். மன்னராட்சி களையப்பட்டு சோவியத் யூனியன் உருவானதற்கு லெனின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை முக்கியக் காரணம். சோவியத் யூனியன் என்று ஆனவுடன் அங்கு கம்யூனிஸ அரசு அமைந்தது”

இது ரஷ்யாவில் மக்கள் புரட்சி மூலம் ஜார் ஆட்சி அகற்றப்பட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச அரசு அமைந்ததை குறிப்பிடும் அந்தத் தொடரின் ஒரு பத்தி. மேலோட்டமாக ரஷ்ய வரலாறு அறிந்தவர்களுக்கு கூட மேற்கண்ட இந்த பகுதியில் பெரும் பிழை இருப்பதாக தோன்றாது. அந்த அளவுக்கு முனைப்பெடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது அதன் வாக்கியங்கள். இதைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் தலைமையில் இந்திய இராணுவம் மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்றொரு நாட்டை கட்டியது போன்ற தோற்றம் வருகிறதா இல்லையா. இது தான் புரட்சியின் பாத்திரமா? 1905ல் ரஷ்யப் புரட்சி என்று குறிப்பிட்ட ஆசிரியர், 1917ல் பிப்ரவரிப் புரட்சி என்று குறிப்பிட்ட ஆசிரியர், மிகக் கவனமாக 1917 நவம்பர் புரட்சியைப் பற்றி கூறவில்லை. ஏன்? அதாவது அங்கு நடந்தது ஒரு அரசு மாற்றமே தவிர அரசியல் மாற்றமல்ல என்பது தான் அந்த இடத்தில் ஆசிரியர் குறிப்பிட விரும்புவது. உண்மையை மறைப்பவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால் இது போன்ற மறைக்கவும் வேண்டும் அதேநேரம் மறைத்ததும் தெரியக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

“சோவியத்தில் `அனைவரும் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ அரசு அமைந்தது. இதன் விளைவாக பல அடிப்படை மாற்றங்கள் அங்கு நிகழ்ந்தன. யாரும் தனிப்பட்ட சொத்துக்களை வைத்திருக்க முடியாது. எல்லாமே அரசினுடை யது”

கம்யூனிசம் வந்தால் எல்லோருடைய சொத்துகளையும் பிடுங்கிக் கொள்வார்கள் என்று வலதுசாரிகள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அதே பூச்சாண்டிதான் இதிலும் தொழிற்பட்டிருக்கிறது.

“ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம்மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்”

மீண்டும் படேலின் இந்தியாவைப் போன்று லெனின் தலைமையிலான சோவியத்தையும் பிம்பமாக்க்கும் முயற்சி. பின்லாந்து எப்படி தனிநாடாகியது என்பதை சிந்திப்பவர்களால் உக்ரைனை இப்படி பார்க்க முடியாது. அவதூறு கூற விரும்புகிறவர்கள் மட்டுமே இப்படி கூறத் துணிவார்கள்.

“சோவியத்தின் ஒரு பகுதியான சைபிரியா கடுங்குளிர் பிரதேசம். தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை அங்கு அனுப்பும் பழக்கத்தை சோவியத் யூனியன் வழக்கமாகவே கொண்டிருந்தது – அந்தமானுக்கு அனுப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு வருகிறார்களா?”

அந்தமானுக்கு அனுப்பப்பட்டவர்கள் வெள்ளை காலனி ஆட்சியை எதிர்த்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள். சைபீரியாவுக்கு அனுப்பபட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஒவ்வொரு நாடும் தண்டனையாக சில பகுதிகளுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆனால் இந்த சைபீரியாவை அந்தமானோடு ஒப்பிட வேண்டிய அவசியமென்ன? இந்தியாவை வெள்ளைக்காரர்கள் காலனிப்படுத்தி வைத்திருந்ததைப் போல ரஷ்யாவை ஸ்டாலின் காலனிப்படுத்தி வைத்திருந்ததாக குறிக்க விரும்புகிறார்கள். இதை அவதூறு என்றல்லாமல் வேறுஎன்ன சொல்லால் குறிப்பிடுவது?

“அப்படிப் பிரிந்தால் வேறு பல பகுதிகளும் பிரிந்துவிட வாய்ப்பு உண்டே! கவலைப்பட்ட ஸ்டாலின் திட்டங்கள் தீட்டினார் .. .. .. குருஷேவ் ரஷ்ய அதிபரானார். இவர் உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் ஸ்டாலின் உக்ரைனுக்கு எதிராக செய்த சதியில் இவரும் பங்கு கொண்டார். என்றாலும் உலகப் போரின்போதும் அதற்குப் பிறகு தனது ஆட்சியிலும் உக்ரைனில் உண்டான பாதிப்புகளைக் களைய முயற்சிகளை எடுத்துக் கொண்டார்”

அதாவது ஸ்டாலின் கெட்டவர், குருஷேவ் நல்லவர். இது யாருடைய கூற்று?

“அமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும்? ஏதோ ஒரு சிறிய நாடு தொடர்பான பிரச்னை இது என்று அமெரிக்காவால் விடமுடியவில்லை. ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா”

இது அப்பட்டமாக நரியைப் பரியாக்கும் முயற்சி. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போக்கும் தன்னுடைய மறுகாலனிய நாடுகளாக உலகின் ஏனைய நாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று உலக போலீஸ்காரனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் போக்கு உலகிற்கே தெரியும். தமிழ் இந்துவுக்கும், இத்தொடரின் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ் க்கும் தெரியாதா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு புரிதலுக்காக மாட்டுமே இதனைக் குறிப்பிடும்படி ஆனது என்பதால், எடுத்துக்காட்டுகளை முடித்து விட்டு உக்ரைன் பிரச்சனையை அதன் தொடக்கத்திலிருந்து பார்க்கலாம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: