மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து

 

அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.

 

கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் சிவப்பு மையை மாற்றி “எரிமலை எப்படி பொறுக்கும், நெருப்புக்கு இன்னுமா உறக்கம்” என்று பொங்குவார். எபோதும் திமுக அனுதாபியாக காட்டிக் கொண்டாலும், எம்ஜிஆர் பரிந்துரையில் கலாச்சாரத் தூதுவராய் ரஷ்யா சென்றுவரும் ரசவாதமும் தெரியும். தான் சாதாரண பாடலாசிரியர் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது நூல்களையும் எழுதிக் கொண்டிருப்பார். தன் வயதின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் நூல்களை எழுதியிருப்பதாக முன்பொருமுறை அவரே ஒரு செவ்வியில் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

 

அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நூல் தான் “மூன்றாம் உலகப் போர்” அந்த நூலை படிக்கும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. (வடிவடக்கத்தில் அழகாகவும், உள்ளடக்கத்தில் குப்பையாகவும் இருக்கும் நூல்களை 500,600 கொடுத்து வாங்க கட்டுபடியாகுமா?) ஆனால் அந்த நூலின் முன்னுரை கடந்த 13/07/2012 அன்று தினமணியில் வாசிக்கக் கிடைத்தது. நூலின் மொத்தத்தையே முன்னுரையில் தந்தது போல் இருந்தது.

 

புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் மீது தொடுத்திருக்கும் போர் தான் மூன்றாம் உலகப் போர் என்றும், அதற்கு “வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப் பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்” என்பது அதற்கான தீர்வுகளில் ஒன்று என்றும் எழுந்தருளியிருக்கிறார். ஆகா ஒரு கவிஞன் சமூக அக்கரையோடு எழுதியிருக்கும் நூலா எனும் உணர்வின் உந்துதலால் ஆர்வத்துடன் உருப் பெருக்கி கண்ணாடி கொண்டு தேடியும் புவி வெப்பமடைதலை வெகுவாகத் தூண்டும் முதலாளித்துவ தொழில் வளர்ச்சிப் போக்கு குறித்தும், உலகமயமாக்கம் எப்படி வேளாண்மையை வதைக்கிறது என்பது குறித்தும் கொஞ்சமும் இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு சற்றும் பொருத்தமற்று கம்பஞ்சங்கு கண்ணில் விழுந்தது போல் (நன்றி முதல்வன் படப்பாடல் வைரமுத்து) உருத்தலாய் ஒரு விசயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி கடைசியில் பார்க்கலாம்.

 

விவசாயத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி யார்? அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி தொடங்கி இன்றுவரை விவசாயத்தை கருவறுத்துக் கொண்டிருப்பது எது? கடந்த சில பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டியது எது? உலகமயம் தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட்டால்; புவி வெப்பமடைவதும், உலகமயமாவதும் எதோ இயற்கைச் சீற்றம் என்பது போல் கவிதைநடை குழைத்து இலக்கியமாய் சொல்லிச் சென்றால் அது கதைவிடலாக இருக்குமேயன்றி ஒருபோதும் சமூகத்தை பதியனிட்டதாக ஆகாது. புவி வெப்பமடைதலும், உலகமயமாதலும் சேர்ந்து விவசாயத்தின் மீது தொடுத்திருக்கும் போர் தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றால் அதை தொடுத்திருப்பவர்கள் யார்? தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் யாரால், யார் பலனடைவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன? உலமயத்தால் யார் பலனடைகின்றார்களோ அவர்களே விவசாயத்தின் மீது போர் தொடுத்திருக்கிறார்கள். முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம் உள்ளிட்ட விவசாய்த்துக்கு எதிரான திட்டமிடல்களை ஒரு அத்தியாயத்திலேனும், வேண்டாம் ஒரு பக்கத்திலேனும் விவரித்திருக்குமா மூன்றாம் உலகப் போர்.

 

புவி வெப்பமடைதல் குறித்த பேச்சுகள் எப்போது தொடங்கியது? பசுங்குடில் விளைவினால் கார்பனின் அளவு அதிகரித்திருப்பதே புவிவெப்பமடைவதற்கான முதல் காரணி என்கிறார்கள். க்வெட்டா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்தீர்மானங்களை அமெரிக்கா ஏன் ஏற்க மறுக்கிறது என்பது குறித்து மூன்றாம் உலகப் போரில் ஏதேனும் குறிப்பிடப் பட்டிருக்குமா? இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி தான் குளோரோஃபுளோரோ கார்பன் மிக அதிக அளவில் உற்பத்தி செய்தது; அதனால் தான் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டது. இதற்கும் வேளாண்மையின் அழிவுக்கும் உள்ள தொடர்பு குறித்து மூன்றாம் உலகப் போர் ஆராய்ந்திருக்குமா? வெறுமனே ஒரு கிராமத்துக் கதை, பேரு மட்டும் உலகப் போர். கிராமத்து வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று சாராயம் காய்ச்சுவது எப்படி என்று நுணுக்கமாக எழுதியது போல், கிராமத்து விவசாயியின் கதையை கற்பனையாக எழுதி அதன் சர்வதேச கவனம் வேண்டி மூன்றாம் உலகப் போர் என்று பெயர் வைத்திருக்கிறார். இதற்கு முட்டுக் கொடுப்பது போல் வியட்நாமின் நெற்பயிர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை குறித்தெல்லாம் தோரணங்களைப் போல தகவல்கள். ஒருவேளை எலக்கியத்திற்கான சர்வதேச விருதுகளை வளைக்கும் வித்தைகளும் வைரமுத்துவுக்கு அத்துபடி தாமோ.

 

ஆனால், முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயம் உள்ளிட்டு அனைத்துமே அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து போராடி வரும் வேளையில் உலகமயமும், வெப்படைதலும் இயற்கைச் சீற்றங்கள் என்பது போல் வைரமுத்து கரடி விடுவது ஏன்? முதலாளிகள் உலகின் வளங்களையும், மக்களையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள், அதன் விளைவாகவே மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் விவசாயம் அழிவது என்பதை வைரமுத்து மறைக்க முற்படுகிறார். வைரமுத்து மட்டுமல்ல எல்லா வண்ண அறிவுஜீவிகளும் இதை மறைத்து மக்களை திசை திருப்பவே முயல்கிறார்கள். மூன்றாம் உலகப் போர் இலக்கிய வகையிலான திசைதிருப்பல். சரி, இதை வைரமுத்து ஏன் செய்ய வேண்டும்? தமிழகத்தின் வானவில் கூட்டணியில் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டாரா? இந்த ஐயத்தைத்தான் மேலே குறிப்பிட்ட கம்பஞ்சங்கு எழுப்புகிறது.

 

மேலைநாட்டு ரஸ்ஸல் தொடங்கி தமிழ்நாட்டு சு.ரா வரை மார்க்கிசியத்தின் மீது அவதூறுகளைப் புனையும் போதெல்லாம், தங்களை மார்க்சியவாதிகளாகவே காட்டிக் கொண்டனர். அதை அடியொற்றித் தான் வைரமுத்துவும் கூட்டுப்பண்ணைகளின் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும் என்கிறார். அதே நேரம் சற்றும் பொருத்தமில்லாத ஒரு பொய்யையும் சந்தடி சாக்கில் அவிழ்த்து விட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து ஹிட்லர் எனும் பாசிச சர்வாதிகாரியிடம் இருந்து உலகை காப்பாற்றியது சோவியத் யூனியன். மட்டுமல்லாது, ஜெர்மனியிடம் பிடிபட்ட 18 ஆயிரம் சோவியத் போர்க்கைதிகளை ஹிட்லரின் ஜெர்மன் அரசு பட்டினி போட்டே கொன்றது வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வைரமுத்து எழுதியிருக்கிறார். சோவியத் யூனியனிடம் பிடிபட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ஜெர்மன் போர்க்கைதிகள் முதல் இரண்டேகால் ஆண்டுகள் விலங்குகள், பறவைகள், எலிகளை தின்று உயிர் பிழைத்தார்களாம், அதன் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல் சக கைதிகளையே உணவாய் திண்ணத் தொடங்கினார்களாம். இப்படி அவர்கள் தின்று தீர்த்தது ஐந்தாயிரம் பிணங்களையாம். மூன்றாம் உலகப் போரை வைரமுத்து மூன்றாண்டுகள் ஆராய்ந்து பத்து மாதங்களாய் எழுதினாராம். இதில் மூன்று வினாடிகள் சிந்தித்திருந்தாலே இவர் எழுதியிருக்கும் கணக்கு எவ்வளவு அபத்தமானது என்பது விளங்கியிருக்கும். .. ம்ம் .. புச்சு புச்சா கிளம்பிடுறாய்ங்க.. .. ..

 

 மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

 

அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

 

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

 

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

 

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

 

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

 

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

 

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

 

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

 

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

 

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

 

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

 

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

 

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

 

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

 

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

 

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

 

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

 

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

 

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

 

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில் 

 

கடலூர் ஜூலை 15ல்

சென்னை ஜூலை 17ல்

திருச்சி ஜூலை 19ல்

விழுப்புரம் ஜூலை 22ல்

 

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

 

வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இப்படியான கைதுகளும், சித்திரவதைகளும், பொதுமக்களுக்கு சிரமங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குடிமக்களுக்கான அரசை அதன் குடிகளில் சிலரே ஏன் தகர்க்க நினைக்கிறார்கள்?

 

இந்தக் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலக நாடுகள் அனைத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டியதும், பரிசீலிக்கப் படாமல் ஒதுக்கப்படுவதுமான கேள்வி. குடிமக்களில் பெரும்பாலானோர் அரசுகளின் மீது கோபமாகவும் வெறுப்பாகவுமே இருக்கிறார்கள். ஏனென்றால், அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை பாதிக்கிறது. அவர்களை தங்கள் வாழ்நிலைகளிலிருந்து கீழிறக்குகிறது. அதனால், தனித்தனி குழுக்களாக வெவ்வேறு பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களை போராடத் தூண்டும்படியாக நடந்து கொண்டிருக்கும் அரசை குடி மக்களுக்கான அரசு என்று கூற முடியுமா? ஆனால், பலர் அப்படி கூறிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் தான் குடியரசு தினம் இன்னும் கொண்டாட்டமாய் நீடிக்கிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் அதன் பொருட்டே மக்களுக்கானதாக விளம்பப்படுகிறது. ஆனால் மெய்யில் அப்படி இருக்கிறதா?

 

இதை தற்போது மக்களிடையயே கொதிப்பில் இருக்கும் மீனவர் பிரச்சனையினூடாக பார்க்கலாம். கடந்த கால் நூற்றாண்டாக தோராயமாக 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தன் சொந்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா செய்ததென்ன? எல்லா முதலாளித்துவ நாடுகளும் தம் சொந்த மக்களை தன்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதும் போது கொன்று குவிக்க தயங்குவதில்லை. ஆனால் பிற நாடுகள் தம் குடிமக்களை கொல்லும் போது தன் பிம்பத்தை காத்துக் கொள்ள கொஞ்சமாவது எதிர்ப்பை காண்பிக்கும். ஆனால், ஐநூறுக்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் கிடப்பது தான் ஒரு குடியரசின் இலக்கணமா?

 

இதை இன்னும் அணுகிப் பார்த்தால் இந்திய குடியரசின் லட்சணம் என்ன என்பது வெளிப்படையாகிவிடும். மீனவர்கள் தொடர்ந்து தனித்தனியான பல அடையாள போராட்டங்களை நடத்தி சோர்ந்து நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்திருக்கும் பதிலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை இதைச் செய்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் இது தொடர்கிறது, மட்டுமல்லாது அதிகரித்திருக்கிறது. என்றால் அதன் நோக்கம் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அந்தக் கடல் பகுதியில் மீனவர்கள் நடமாட்டத்தை இரண்டு அரசுகளுமே தடுக்க நினைக்கின்றன என்பதாகத் தான் இருக்க முடியும்.

 

90களில் நரசிம்மராவ் தொடங்கிய வெளிப்படையான மறுகாலனியாக்கத்தில் இந்திய இலங்கை கடற்பகுதியில் பன்னாட்டு மீன்பிடி நிறுவங்களுக்கு மீன்பிடித்துக் கொள்ளும் அனுமதியை வழங்கியது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித்தல் என்பது மீன்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டதல்ல மாறாக தகவமைதலை பயன்படுத்தி மீன்வளத்தை காக்கும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் மீன்பிடித்தல் என்பது முட்டைகள் குஞ்சுகள் தொடங்கி கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் ஒட்ட வழித்தெடுப்பதால் மீன்வளத்தை அழிக்கிறது. உலகமயமாக்க சூரையாடல்களால் உயர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்டவும், பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை எதிர்கொள்ள முடியாமையும் இணைந்து மீனவர்களை எல்லை தாண்டவும், தடுக்கப்பட்ட வலைகளை, மீன்பிடி முறைமைகளை பயன்படுத்த தூண்டுகிறது. இந்த காரணங்களால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக, இலங்கை மீனவர்களுக்கிடையேயும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனைகள் இந்திய மாநிலங்களுக்கிடையேயும், உலகமெங்கும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

 

இதை மீனவர்களை கொல்வதன் மூலமும், தொடர்ச்சியாக படகுகளை வலைகளை தாக்கி சேதப்படுத்துவதன் மூலமும் அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி அந்த கடற்பகுதியிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையை இலங்கை செய்கிறது. அதற்கு முழுமையான ஆசியையும், ஆதரவையும் இந்தியா வழங்குகிறது. இதை மறைப்பதற்கு இந்தியா எல்லை தாண்டுவதையும், இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளையும் முன்னிருத்தி திசை திருப்புகின்றன.

 

இந்தியா பெயரில் மட்டுமல்ல தன்மையிலும் குடியரசாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 40 கிலோமீட்டர் கொண்ட குறுகிய கடற்பரப்பை இரு தரப்பு மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் எல்லை கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். எந்த மாதிரியான மீன்பிடி முறையை பாவிப்பது என்பது குறித்து இரு தரப்பு மீனவர்களும் உகந்த இணக்கமான முடிவை எடுப்பதற்கு அரசு உதவ வேண்டும். குடிகளுக்கான அரசாக இருந்தால் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

ஆனால் இந்தியா செய்திருப்பதென்ன? பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி வழங்கி அதனை பாதுகாக்கிறது. எல்லையை வறையறை செய்யாமலும், அதேநேரம் எல்லை தாண்டாதே என்றும் குழப்புகிறது. மீன்பிடியை ஒழுங்கு செய்வதற்கு என்று சட்டம் கொண்டு வந்து பாரம்பரிய மீனவர்களுக்கு ஏற்க முடியாதபடி பலவிதமான கட்டுப்பாடுகளைச் சுமத்துகிறது. மீறினால் ஆயிரக்கணக்கில் தண்டத்தொகை வசூலிக்கவும், படகை பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யும் அதேநேரம் பன்னாட்டு கப்பல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி கடலை வழித்தெடுக்க துணை நிற்கிறது. கடலோர மீனவர்களிடையே தொண்டு நிறுவனங்களை, சுய உதவிக் குழுக்களை களமிறக்கி மெழுகுதிரி செய்தல், பொம்மை செய்தல் என்று மாற்றுத் தொழில்களை பயிற்றுவித்து மீன்பிடித்தலிலிருந்து வெளியேற ஊக்குவிக்கிறது. நீளமான கடற்பரப்பை பெற்றிருக்கும் இந்தியா, பல்லாயிரக்கணக்கான மீனவ குடிமக்களுக்கு எதிராகவும், சில பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இவைகளைச் செய்திருக்கிறது. என்றால் இது குடியரசா?

 

மீன்பிடி தொழிலில் மட்டுமல்ல, உழவு, நெசவு உட்பட மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் அனைத்து தொழில்களிலும் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே அரசு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் செயல்பாடு மக்கள் விரோதமாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு புதுப்புது வரிகளை அமல்படுத்துவதிலிருந்து இருக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பது வரை, முதலாளிகளுக்கு வரிச்சலுகையிலிருந்து லாபத்திற்கான உத்திரவாதம் வரை மக்களுக்கு எதிராகவே அரசுகள் பொதுநிதியை கையாளுகின்றன. இவைகள் ஒன்றும் கமுக்கமான செய்திகளல்ல.

 

எப்படி மக்களை பட்டினி போடும் மசோதவுக்கு உணவு பாதுகாப்பு மசோதா என்று பெயர்சூட்டி மக்களை ஏமாற்ற எண்ணுகிறதோ அது போன்றே முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயல்படும் அரசுக்கு குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டிருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், இப்படி தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு கொண்டாட்டம் ஒரு கேடா என்று.

 

தொடர்புடைய பதிவுகள்

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன் ஹண்ட், புரியாதவர்களுக்கு குடியரசு தினம்

தமிழக மீனவர்களை கொல்லச் சொல்வது இந்திய அரசு தான்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு

சிறு வணிகத்தில் 51 நூற்றுமேனி(சதவீதம்)  அளவிற்கு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று தீர்மானித்திருப்பதாக கடந்த வாரத்தில் அரசு அறிவித்தது. அன்றிலிருந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளித்து வருகின்றன. அதாவது, அப்படிச் செய்தால் அன்னிய முதலீட்டை அவர்கள் எதிர்ப்பதாக மக்கள் நம்புவார்களாம். மட்டுமல்லாது கருணாநிதி, மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்டோர் தாங்களும் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் அரசு அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விலைவாசி குறையும் என்றும், சூடம் அணைக்காமல் சத்தியம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இவைகளில் உண்மையில்லை என்பதே உண்மை.

 

இப்போது அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டும் அத்தனை கட்சிகளின் செயலும் நாடகமே. எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது போராடுவதாக காட்டிக் கொள்வதும், ஆளும்கட்சியகும் போது அதையே நடைமுறைப்படுத்துவதும் நாம் வழமையாக கண்டு வருபவைதான். பாஜக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதற்கென்றே தனியாக ஓர் அமைச்சகத்தை ஏற்படுத்தவில்லையா? போலிகள் வங்கத்தையும் கேரளாவையும் தனியாருக்கு திறந்துவிடவில்லையா? ஜெயா ஆற்றையே தாரை வார்க்கவில்லையா? கருணாநிதி நோக்கியாக்களுக்கு முதலீட்டைவிட அதிக சலுகைகளை வழங்கவில்லையா? இவர்களா அன்னிய முதலீட்டை எதிர்ப்பவர்கள்?

 

சிறுவணிகத்தின் மீது அரசு நடத்தும் முதல் தாக்குதல் அல்ல இது. ஏற்கனவே பல்முனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஈ மொய்த்த பண்டங்களை, திறந்த வெளியில் இருக்கும் பண்டங்களை வாங்கி உண்ணாதீர்கள் என்று மக்களின் உடல்நலத்தில் அக்கரை கொண்டது போல் பிரச்சாரம் செய்யும் அரசு தான், சுகாதார நடவடிக்கைகளை புறக்கணித்து ஈ மொய்க்கும், கிருமிகள் பரவும் சூழலுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பெப்சி, கோக் வகைகளில் போதை மருந்துகள் உள்ளிட்டு கெடுதல் விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பிறகும் அவைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. மாம்பழங்களை கல்வைத்து பழுக்க வைக்கிறார்கள் அது உடல்நலத்திற்கு தீங்கானது என்று சந்தைக்கு வந்த பழங்களை சாலையில் கொட்டி அழிக்கும் அரசு, லேஸ் உள்ளிட்ட சிப்ஸ் வகைகளில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? பில் போடாமல் விற்பனை செய்வது நுகர்வோரை ஏமாற்றும் குற்றவியல் நடவடிக்கை என்று மக்களை பீதியூட்டும் அரசு, பில்போட்டு கோடிகோடியாக திருடிய அம்பானிகளை என்ன செய்தது?

 

சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்று விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படுவது போல் அரசு நாடகமாடுகிறதே, விலைவாசி உயர்வுக்கு முதன்மையான காரணம் என்ன? அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்தையும் ஊக வணிகத்திற்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் திறந்து விட்டிருப்பதும், பதுக்கலை சட்டரீதியாக அங்கீகரித்திருப்பது தானே. இதை செய்து விலைகளை ஏற்றிய அரசு அன்னிய முதலீட்டை கொண்டுவந்து விலைகளை குறைக்கப் போகிறதா? அன்னிய முதலீட்டால் விலை குறையும் என்பதும் முழுப்பூசணியை கட்டுச்சோற்றில் மறைப்பதைப் போன்றது தான்.

 

அரசு கொள்முதல் செய்வதிலிருந்து விலகிக் கொண்டு தனியார் கொள்முதல் நிலையங்களை அமைக்க அனுமதித்திருப்பதால் விவசாயிகளிடமிருந்தும், சிறு உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியாக தரகு, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். எனவே விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும், நுகர்வோருக்கும் விலை மலிவாக கிடைக்கும் என்பது அரசின் பிரச்சாரம். இன்றைய நிலையில் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் போதிய விலை கிடைக்காமல் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்றால் இந்த விலை உயர்வின் பலன் போவது எங்கே? உற்பத்தியும் செய்யாமல் நுகரவும் செய்யாமல் கணிணி முன் அமர்ந்து விற்பனை விளையாட்டுகள் ஆடிக் கொண்டிருக்கும் வர்த்தகச் சூதாடிகள் தான் அதனை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அனுமதித்துவிட்டு சிறுவணிகர்களை ஒழித்தால் விலை குறைந்து விடும் என்பது மோசடி.

 

பெரும் முதலீட்டில், குளீரூட்டி, சேமிப்புக் கிடங்கு, கணிணி, வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளோடு வணிகத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அன்றைய சந்தை விலையை விட 50 காசுகளோ, ஒரு ரூபாயோ குறைத்து விற்பனை செய்வது பெரிய விசயமும் அல்ல, அவர்களுக்கு அது இழப்பும் அல்ல. ஆனால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பமே சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இவ்வாறான விலைக் குறைப்பை செய்யமுடியுமா? இந்த ஒரு ரூபாயையோ, 50 காசுகளையோ தான் அரசு விலை குறையும் என்கிறதா? என்றால் அதன் நோக்கம் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருட்களைக் கொடுப்பதல்ல. தொடக்கத்தில் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்து, சிறுவணிகர்களை ஒழித்த பின் நினைத்த விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்றுக் கொள்ளும் கொடும்புத்தி.

 

தரமான பொருட்கள் கிடைக்கும் என்கிறார்களே, தனியாக சோதனைச் சாலைகளில் தரத்தை உருவாக்கி பொருட்களில் ஏற்றுகிறார்களா? சிறுவர்த்தகர்கள் விற்கும் அதே பொருட்களை, உள்ளூர் சந்தையில் கிடைக்கும் அதே காய்கறிகளை துடைத்து பைகளில் அடைத்துக் கொடுப்பது தான் தரம் என்றால், அது ஏமாற்று இல்லையா? மட்டுமல்லாது இவர்களிடம் சிறுவர்த்தகம் சென்றால் மக்களிடம் இருக்கும் பல்வேறு ரகங்களை அழித்து, அவர்களுக்கு லாபம் தரும் ஒற்றை ரகத்தையே மக்களுக்கு பழக்கப்படுத்துவார்கள் என்பதற்கு கண்முன்னே சான்றுகள் இருக்கின்றன. மாணிக்க வினாயகர், காளிமார்க் உள்ளிட்ட எண்ணற்ற உள்ளூர் சோடா வகைகள் மறைந்து கோக் பெப்ஸிக்கு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சிப்ஸ் தயாரிப்புக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் பல உருளைக் கிழங்கு வகைகள் அழிக்கப்பட்டு ஒரே வகை உருளைக் கிழங்குகளை பயிரிட விவசாயிகளை ஒப்பந்த விவசாயம் மூலம் நிர்ப்பந்திக்கிறார்கள். இவைகளை மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?

அன்னிய முதலீட்டை சிறுவணிகத்தில் அனுமதிப்பது வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என்பதும் கடைந்தெடுத்த பொய்தான். இந்தியாவில் சில்லரை வணிகம் ஆண்டொன்றுக்கு 12லட்சம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இதை கபளீகரம் செய்வது தான் அன்னிய முதலீட்டின் நோக்கமேயன்றி விலையைக் குறைப்பதோ வேலைவாய்ப்பை அளிப்பதோ அல்ல. இன்றைய நிலையில் நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமானோர் சில்லரை விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது 20 கோடி மக்கள் இந்த சில்லரை வணிகத்தின் மூலம் பிழைத்து வருகிறார்கள். நூறு குடும்பங்கள் சில்லரை வணிகத்தின் மூலம் வாழ்ந்துவரும் ஒரு சிறுநகரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதாக கொண்டால் 25 பேர் வேலைவாய்ப்பை பெறுவதாக கொள்ளலாம். அதேநேரம் ஏற்கனவே இருந்துவரும் நூறு குடும்பங்களும் சில்லரை வணிகத்திலிருந்து படிப்படியாக வெளியேறி வேலையிழந்து வாழ்வதற்கு வழியற்ற நிலை உருவாகும். இன்று சில்லரை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்க பங்கினர் விவசாயத்திலிருந்து ஏனைய தொழில்களிலிருந்தும் இப்படி விரட்டப்பட்டவர்கள் தாம். 25 பேருக்கு வேலை கொடுத்து விட்டு நூறு குடும்பங்களை வேலையிலிருந்து விரட்டும் இந்த அன்னிய முதலீடு வேலை வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

 

அன்னிய முதலீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். அன்னிய முதலீடென்றால் இன்னொரு நாட்டிலிருந்து பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு இங்கு வந்து தொழில் தொடங்குவதா? இந்திய வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணத்தை கொண்டே தொழில் தொடங்குகிறார்கள். பின்னர் லாபம் என்றும், பல்வேறு சலுகைகளின் மூலமும் இங்குள்ள பணத்தை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்கிறார்கள். இதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு என்ரான். இந்திய வங்கிகள் 40%க்கு மேல் நிதியுதவி செய்து அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையத்தை தொடங்கியது. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்பட, அதனை இந்திய மக்கள் தங்கள் தலையில் சுமந்தார்கள். வளர்ச்சி என்பதன் பொருள் இது தானா? இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் அன்னிய முதலீடு என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கின்றன. உள்நாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கும் அன்னிய நிறுவனங்கள் காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வகைகளில் உள்நாட்டுப் பணத்தை கடத்திச் சென்று விடுகின்றன.

 

போஸ்ட்வானா நாட்டில் 1995-2003 ல் போடப்பட்ட அன்னிய முதலீடு 4243 கோடி. ஆனால் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ 25,294 கோடி. காங்கோவில் அன்னிய முதலீடு 7,303 கோடி. வெளியேறியதோ 12,478 கோடி. 1993 ல் பிரேசிலை விட்டு வெளியேறியது ரூ. 148 கோடி. இதுவே 1998ல்  28,000 கோடியாக உயர்ந்தது. இந்தியாவிலும் உள்வந்த முதலீட்டைவிட வெளிச்சென்ற அன்னியச் செலாவணி அதிகம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. மட்டுமல்லாமல் இந்த நிறுவனங்கள் நட்டக்கணக்கு காட்டியும், லாபத்தை குறைத்து மதிப்பிட்டும் எல்லாவிதங்களிலும் வரி ஏய்ப்பு செய்து வருகின்றன. இதை நாட்டின் வளர்ச்சி என்பதா? நாட்டை சுரண்டிக் கொழுப்பவர்களின் வளர்ச்சி என்று கூறுவதா?

 

மக்கள் குடிநீர் வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்துகிறார்கள். நல்ல சாலை வசதி வேண்டும், மருத்துவ மனைகள் வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தினம் தினம் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. அவசியமான இவைகளை செயல்படுத்த மறுக்கிறது அரசு. காய்கறிகளோ மற்ற பொருட்களோ கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது என்று மக்கள் போராடினார்களா? சந்துக்கு மூன்று கடைகள் இருக்கும் நாட்டில் அன்னிய நிறுவங்கள் நடத்தும் அங்காடிகள் வேண்டும் என்று கேட்டது யார்? மக்கள் கேட்பதை கொடுக்க மறுக்கும் அரசு கேட்காததை திணிக்கிறது என்றால் அதன் பின்னே இருப்பது மக்கள் நலனா? பன்னாட்டு முதலாளிகளின் நலனா?

 

சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு என்பது இருக்கும் கடைகளோடு இன்னுமொரு கடை என்பதல்ல. உள்ளிருந்து மெல்லக் கொல்லும் கொடிய நோயைப் போல உள்நாட்டு சிறுவணிகர்களை அழிப்பதுடன் மக்களை வாழத் தகுதி இல்லாதவர்களாக ஆக்கும் தனியார் மயம் தாரளமயம் உலகமயத்தின் மற்றொரு கொடுங்கரம். அது நம் கழுத்தை நெரிப்பதற்கு முன் நாம் ஒன்று திரண்டு போராடவேண்டியது அவசியம், அவசரம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும்.

இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை கொள்ளையடிப்பதற்கு விடப்படும் டென்டர். இப்படி டென்டர் எடுத்து சம்பாதித்த எம்.எல்.ஏ; எம்.பிக்கள் அமைச்சர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகிவிட்டார்கள். மல்லையா, அம்பானி, பிர்லா போன்ற தொழிலதிபர்களோ எம்.பிக்கள் ஆகிவிட்டார்கள். மொத்தத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், முதலாளிகள் மன்றமான லயன்ஸ் கிளப்பாகவே மாறிவிட்டன. இந்த முதலாளிகள் யாரேனும் ஒருவரைத் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தான் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை.

சட்டமன்றம் முதலாளிகள் மன்றமாக மாறி விட்டது மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புகளும் கோடீசுவரர்களுக்கும் பன்னாட்டு முதலளிகளுக்கும் மட்டுமே சேவைசெய்யும் விதத்தில், தனியார் மயக் கொள்கைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல் படுத்திவரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை, நமது நாட்டை முன்னேற்றுவதற்காக இங்குள்ள கட்சிகள் சிந்தித்து வகுத்த கொள்கை அல்ல. அது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் உலக நாடுகளையும் மக்களையும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்காக, அமெரிக்கா வகுத்துத் தந்த கொள்கை; உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திணிக்கப் பட்டிருக்கும் மறுகாலனியாக்கக் கொள்கை.

எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுச் சொத்துக்களையும், மக்களின் உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும், அதற்கு தரகுத் தொகையாக கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொள்வதும், வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் தொழில் பங்காளிகளாக சேர்ந்துகொண்டு கொள்ளையடிப்பதும்தான் இன்று நாம் காணும் ஓட்டுக் கட்சி அரசியல். இதில் ஓட்டு பொறுக்கிகளிடையான தொழில்போட்டியின் களம் தான் இந்தத் தேர்தல் களம். தனியார்மயக் கொள்கை என்ற பெயரில், சட்டபூர்வமாக கொள்கை முடிவெடுத்து கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் பகற்கொள்ளை அடிப்பதற்கு, அரசாங்கத்தையே கருவியாக்கி அடியாள் வேலை செய்யும் பணியைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அரசுகளும் செய்து வருகின்றன.

தொலைபேசி, வங்கி, காப்பீடு, எண்ணெய் எரிவாயு, துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற லாபம் ஈட்டுகின்ற பொதுத்துறைகள் எல்லாம் காங்கிரசு, பாஜக அரசுகளால் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை 22 லட்சம் கோடி ரூபாய். இது 14 ஸ்பெக்ட்ரம் கொள்ளைகளுக்கு இணையான தொகையாகும். சட்டிஸ்கார் மாநிலத்தில் 500 கிராமங்களைத் தீவைத்துக் கொளுத்தி, பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு அந்தக் கிராமங்களையே டாடாவின் இருப்புச் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கியிருக்கிறது சட்டீஸ்கார் அரசு. டன் 7000 ரூபாய் சந்தை மதிப்புள்ள இருப்புத் தாதுவுக்கு வெறும் 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, பல லட்சம் டன் இருப்புத் தாதுவை வெட்டி விற்பதற்கு ரெட்டி சகோதரர்கள் என்ற கிரிமினல் முதலாளிகள் கும்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது கர்னாடக அரசு. இதைப் போல பல அரிய கனிமப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசப்படுகின்றன. தமிழகத்தில் 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 650 கோடி ரூபாய் மனியம் அளித்து வருகிறது கருணாநிதி அரசு. லிட்டர் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரை லிட்டர் 1.3 பைசாவுக்கு கோகோகோலா நிறுவனத்திற்கு அன்றைய ஜெயலலிதா அரசு. ஆறுகளையே தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டு விற்றிருக்கிறது சட்டீஸ்கார் மாநில அரசு. இப்படி தனியார்மயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கார்ப்பரேட் கொள்ளையை பட்டியலிட்டு மாளாது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு போடுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளும் சட்டமன்றத்துக்கும், நாட்டாளுமன்றத்துக்குமே தெரியாத பரம ரகசியங்களாக பேணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நகர்ப்புற குடிநீர் திட்டம் முதல் குப்பைவாரும் திட்டம் வரையிலான அனைத்தையும் வகுப்பவர்கள் உலக வங்கி அதிகாரிகள், அதிகாரவர்க்கம், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஆகியோரடங்கிய குழுக்களேயன்றி மக்கள் பிரதிநிதிகள் அல்லர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டங்களும் திட்டங்களும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் ஒரு நாளும் விவாதிக்கப்பட்டதில்லை. இதுதான் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்க‌ளின் யோக்கியதை.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்ப இந்த அரசமைப்பே மாற்றப்பட்டுவிட்டது. அரசின் கட்டமைப்பு, சட்டங்கள் விதிமுறைகள், நாடாளுமன்றம் சட்டமன்றங்களின் அதிகார வரம்பு ஆகிய அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. இதுதான் மையமான பிரச்சனை. எப்பேர்ப்பட்ட நல்லவரோ, வல்லவரோ, யோக்கியரோ பதவியில் அமர்ந்தாலும் இந்த அரசமைப்பினைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்ய முடியுமே தவிர, மக்கள் நலன்னுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி செய்து கொடுத்து அதற்கு சேவைக் கட்டணமாக முதலாளிகள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளை மட்டுமே ஓட்டுக் கட்சிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1,76,000 கோடி பகற்கொள்ளை அடிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து ராசாவும் கருணாநிதி குடும்பமும் பெற்ற எலும்புத்துண்டுகளின் மதிப்பு சில ஆயிரம் கோடிகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை ராசா திமுக வின் ஊழலாக மட்டுமே சித்தரிக்கின்றனர். இதில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்த குற்றவாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களையோ, அவர்கள் செய்த தில்லுமுல்லுகளையோ வெளியில் சொல்வதில்லை. காரணம், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு சேவை செய்வதென்பது ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ஏற்றுக்கொண்ட கொள்கை.

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழியமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய லஞ்சத்தின் அளவும், முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையிடுவதற்கான புதிய வாய்ப்புகளும் எத்தனை பிரமாண்டமாக விரிந்து கிடக்கின்றன என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழல் காட்டிவிட்டது. இத்தகைய பொன்னான வாய்ப்பை தலைமுறை தலைமுறையாக தங்களிடமே வைத்துக்கொள்வதற்கு கருணாநிதி குடும்பமும், அதனை தட்டிப் பறிப்பதற்கு ஜெயா சசி குடும்பமும் களத்தில் நிற்கின்றன. இதில் எந்தக் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கான லைசன்சை உங்களிடமிருந்து பெறுவதற்காக நடத்தப்படுவது தான் இந்தத் தேர்தல்.

234 தொகுதிகளில் நிற்கும் சர்வ கட்சி வேட்பாளர்களும் கோடீசுவர அயோக்கியர்கள் மட்டுமே, “இவர்களில் எந்த அயோக்கியனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், ஆனால் காசு வாங்காமல் மனசாட்சிப்படி யோக்கியமான முறையில் தேர்ந்தெடுங்கள்” என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சுவரெழுத்து தெருமுனைப் பிரச்சாரங்கள், ஆட்டோ பிரச்சாரம் போன்ற உழைக்கும் மக்கள் கையாளக்கூடிய எளிய பிரச்சார முறைகளுக்கெல்லாம் தடைவிதித்து, இந்த தேர்தல் களத்திலிருந்தே உழைக்கும் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி பலாத்காரமாக விலக்கி வைக்கிறது. தொலைக்காட்சிகள், நாளேடுகளில் விளம்பரம் கொடுக்க முடிந்த கோடீசுவரர்கள் மட்டும் தான் இனி தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும் என்று பணநாயகத்தையே சட்டப்படி நிலைநாட்டி வருகிறது. “ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் பணம் வாங்குவதும் குற்றம் வழக்குப்போடுவேன்” என்று கர்ச்சிக்கிறது தேர்தல் ஆணையம். ஓட்டுப் பொறுக்கிகளோ “எம்.எல்.ஏ மந்திரி எங்களுக்கு, மிக்சி கிரைண்டர் உங்களுக்கு” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது வேடிக்கை போல தெரியலாம். ஆனால் இதன் உள்ளே ஒரு குரூரம் பொதிந்திருக்கிறது.

“னமக்கு கொள்கை லட்சியம் எல்லாம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுருட்டுவதற்குத்தான். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும் போது வெறுங்கையாகப் போய் ஓட்டுக் கேட்டால் ஓட்டு விழாது. எதிர்க்கட்சிக்காரனைவிட கூடுதலாக இலவசம் தருவதாக அறிவிக்க வேண்டும். அவனை மட்டம் தட்டிப் பேசுவதன் மூலம் நம்மை கொஞ்சம் யோக்கியனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்” என்ற அடிப்படையில் தான் இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றனர் ஓட்டுப் பொறுக்கிகள்.

உங்கள் கையை வெட்டி உங்களுக்கே சூப் வைத்துத் தருவது போல, டாஸ்மாக் சாராயக் கடை விற்பனை மூலம் இலட்சக் கணக்கான உழைப்பாளர்களைக் குடிகாரர்களாக்கி, அவர்களது மனைவியர்களை கைம்பெண்களாக்கி, மாணவர் சமூகம் வரையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கிச் சீரழித்து, பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட பணத்தைக் கொண்டுதான் இந்த இலவசங்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள். கருணாநிதி பதவியிலிருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டிய வருவாய் ரூ 50,000 கோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி வழங்கிய இலவசத் திட்டங்கள் அனைத்துக்குமான மொத்தச் செலவு 40,000 கோடியைத் தாண்டாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக்கின் வருமானம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 60  70,000 கோடிகளைக் கொண்டே இவர்கள் அறிவிக்கும் எல்லா இலவசத்திட்டங்களையும் நிறைவேற்றிவிட முடியும். ஒரு சமூகத்தையே கருவறுத்து அழிக்கின்ற இத்தகையதொரு நயவஞ்சகத் திட்டத்தை ஜென்ம விரோதியோ, பகை நாட்டானோகூட சிந்தித்துப் பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கொலைகார கபட வேடதாரிகள் தான் உங்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.

முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள். வாக்களிக்கப் போகிறீர்களா? புறக்கணிக்கப் போகிறீர்களா? ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துத்தனே ஆகவேண்டும் என்று வக்களிப்பதும், அல்லது குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளரையோ தோற்கடிப்பதன் மூலம் அவர்களைத் தண்டிக்கலாம் என்று சிந்திப்பதும் நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானங்கள் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ‘தண்டனைகளை’ பலமுறை அனுபவித்துத்தான் ஓட்டுப் பொறுக்கிகள் கோடீசுவரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கோடீசுவரர்கள் ஆவதற்கு வாய்ப்பு வழங்காதீர்கள்.

இந்த போலி ஜனநாயகத் தேர்தல் என்பது நமது போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற மயக்க மருந்து. தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடலாம் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகத்தை ஒழிப்போம்!

தேர்தலைப் புறக்கணித்து நக்ச்ல்பாரிப் பாதையில் அணிதிரள்வோம்!

தொடர்புக்கு: அ. முகுந்தன்,

110, 2 வது மாடி,

மாநகராட்சி வணிக வளாகம்,

63 ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை 24.

பேசி: 9444834519.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்

அண்மையில் சுத்திகரிப்பு முறையை செயல்படுத்தாத திருப்பூர் சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். அதனையடுத்து திருப்பூரில் போராட்டம் கடையடைப்பு என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்கள் வேலை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இருவேறு விதமாய் பேசி விவாதித்து வருகிறார்கள். ஆனால் இது திருப்பூர் மட்டுமே சார்ந்த விசயம் என்றோ, மாசுகட்டுப்பாட்டுத்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்றோ இதை குறுக்கிவிடமுடியாது. உலக அளவில், குறிப்பாகச் சொன்னால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கும் இந்தப் பிரச்சனையின் இந்திய தமிழக வடிவம் திருப்பூர். சாயப்பட்டறைகளின் கழிவு நீரை ஆற்றில் கலந்துவிட்டார்களாம் என்று இந்தப் பிரச்சனையைப் பார்ப்பது அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்களே என்று மட்டுமே இதைப்பார்ப்பது இந்தப் பிரச்சனையின் நீள ஆழ‌ங்களை உள்வாங்காத மேலோட்டக் கோணமாகும்.

 

இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றம், வளர்ச்சி என்று கூறப்படுவது தொழில்துறை சார்ந்துதான். ஆனால் அந்த தொழில்துறையின் வள‌ர்ச்சி இந்திய விவசாயத்தின் அழிவில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இதற்கு சிற‌ப்பான குறியடையாளமாக திருப்பூரைக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரத்தப்பாளையம் அணை திறக்கப்பட்டபோது நானூறுக்கும் அதிகமான தென்னந்தோப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த நீரைக் குடித்த நூற்றுக்கணக்கான கால்நடைகள் செத்துவீழ்ந்தன. அதன்பிறகு அந்த அணை திறக்கப்படவே இல்லை. அணையை ஒட்டியுள்ளவர்கள் எங்கள் விவசாய நிலங்கள் பாழாகிவிட்டன அணையைத் திறந்துவிடுங்கள் என்கிறார்கள். பிறபகுதி மக்களோ எங்கள் விவாசாய் நிலங்கள் பாதிக்கப்படும் எனவே அணையை திறக்காதீர்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு சாயக் கழிவுகளால் நிறைந்திருக்கிறது அந்த அணை. குறுகிய காலத்தில் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் திருப்பூர் வளர்ச்சியின் மறுபக்கம் இது. விவசாய நிலங்கள் பாழ்பட்டுப்போனது, கால்நடைகளின் இழப்பு, புற்றுநோய் உள்ளிட்டு பலவிதமான தோல்நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுத்தமாக துடைத்தெறியப்பட்ட நிலத்தடிநீர், குடிநீர் வளம் இவைகளோடு ஒப்பிட்டால் வந்திருக்கும் நீதிமன்ற ஆணை கொசுறு.

 

தொன்னூறுகளிலிருந்தே அந்தப்பகுதி விவசாயிகள் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலாற்றில் கலந்துவிடப்படுவதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஆற்றில் கலப்பதற்கு எதிராக ஏதாவது பரிந்துரைகளைச் செய்வதும் அது மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் உதவியுடன் சாயப்பட்டறை முதலாளிகளால் அப்பட்டமாக மீறப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. இந்த தேதிக்குள் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாக செயபடுத்தவேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. அத்தனையும் மேல்முறையீடு என்ற பெயரிலும் பல்வேறு சதிகளினாலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக காமன் எப்ளூயண்ட் ட்ரிட்மெண்ட பிளான்ட் (செப்ட்) எனும் பொதுவான சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. இதன்படி சாயப்பட்டறைகள் தங்கள் சாயக்கழிவுகளை இந்த செப்டிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் அதை சுத்திகரித்து போதுமான அளவில் வேதி அபாயங்களை நீக்கி வெளிவிடுவார்கள். ஆனால் இதையும் சாயப்பட்டறை முதலாளிகள் புறக்கணித்தார்கள். காரணம், ஒரு லிட்டருக்கு 12 காசு சுத்திகரிப்பு கட்டணமாக செப்ட்டிற்கு கொடுக்கவேண்டியதிருந்தது. லாபத்தில் மட்டுமே குறியாக இருந்த‌ முதலாளிகள் திருட்டுத்தனமாக நொய்யலாற்றில் கலந்தார்கள். இவைகளையெல்லாம் கடந்து தான் சாயப்பட்டறைகளை மூடும்படி நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிற‌து.

 

ஆனால் இவைகள் எல்லாவற்றையும் வசதியாக மறைத்துவிட்டு இன்று தொழிலாளர்கள் வேலையிழந்துவிட்டார்கள் என்று பிரச்சனையை வேறுவிதமாய் மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் பணத்தாலும், அதிகாரத்தை வளைத்தும் செல்லாக்காசாக்கியவர்கள் இன்று ஒட்டுமொத்தமாய் பட்டறைகளை அடைத்து தொழிலாளர்களை வெளியில் நிறுத்தி அரசை மிரட்டியிருக்கிறார்கள். அதற்குத் தோதாக மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தற்காலிகமாக பிரச்சனையை தீர்க்கமுனைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது முதலாளிகள் லாபத்தை தங்கள் பைகளில் திணித்துக்கொள்வார்கள், பிரச்சனைகளையும் செலவுகளையும் அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.

 

இது ஏதோ திருப்பூர் சாய்ப்பட்டறை முதலாளிகளின் தனிப்பட்ட இயல்பாக நினைத்துவிட முடியாது. உலகம் முழுவதிலும் முதலாளிகளின் முதலாளித்துவத்தின் இயல்பு இதுதான். சந்தைப் பொருளாதாரம், சுதந்திரமான போட்டி என்று கூறிக்கொண்டு எந்த விதத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது, அதுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்பவர்கள், நெருக்கடி என்று வந்துவிட்டால் அரசு தங்களை கைதூக்கி விடவேண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் சப் பிரைம் லோன் நெருக்கடியின் பிறகு சீட்டுக்கட்டு கோபுரங்களைப்போல் சரிந்துவிழுந்த நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு மக்கள் பணத்தை கோடிக்கணக்கான டாலர்களை வாரி வழங்கியது. புழுத்த அரிசியைக் கூட ஏழைகளுக்கு வழங்கமுடியாது என திமிரோடு கூறும் மன்மொகன் அரசு கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் ஐந்துலட்சம் கோடியை வரிச்சலுகையாக வழங்கியிருக்கிறது. பிரச்சனைகளை அரசின் தலையில் கட்டிவிடும் முதலாளிகள் மக்களைச் சுரண்டி அடிக்கும் கொள்ளையில் தங்களை நிறைத்துக்கொள்கிறார்கள். திருப்பூரின் பின்னணியும் இதுதான்.

 

அரசுக்கு பலகோடி அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முடங்கினால் அதுவும் மக்களை பாதிக்கும் ஒன்றுதானே என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் விவசாயத்தை அழித்து இதை எட்டியிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அரசு ஏன் விவசாயத்தை அழிக்கிறது? என்பதும் அன்னியச் செலவாணியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. திருப்பூர் பின்னலாடைத்தொழில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டே இயங்கிவருகிறது. பின்னலாடைகளை நெய்யப் பயன்படும் அதி நவீன இயந்திரங்கள் முதல் சாயப்பட்டறை இயந்திரங்கள் சுத்திகரிப்பு முறைகள் என அனைத்தும் வளர்ந்த நாடுகளில் தயாராகி இறக்குமதி செய்யப்படுகிறது. துணிகளுக்கு நிறமேற்றப்பயன்படும் சாயப் பொருட்கள், வேதியல் கலவைகள் அனைத்தும் வளர்ந்த நாடுகளிலிருந்தே தருவிக்கப்படுகின்றன. இதில் இன்னோன்றையும் கவனிக்க வேண்டும். இங்கு நிறமேற்றப் பயன்படும் பொருட்களில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டவைகள். எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பார்த்தால்; கனரக நவீன இயந்திரங்களைத் தயாரிப்பது அவர்கள், வேண்டிய வண்ணத்திற்கு மாற்ற இரசாயணப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அவர்கள், இவைகளின் மூலம் நெய்யப்படும் ஆடையை அணிவதும் அவர்கள், எல்லாவற்றையும் செய்யும் அவர்கள் துணிகளுக்கு சாயமேற்றுவதையும் ஏன் அவர்கள் செய்யக் கூடாது?

 

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும், உற்பத்திச்செலவு அதிகமாக இருக்கும், ஆபத்து நிறைந்த, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அனைத்துவகைத் தொழில்களையும் வளரும் நாடுகளிடம், மூன்றாம் உலக நாடுகளிடம் தள்ளிவிட்டு உற்பத்தியை மட்டும் தருவித்துக்கொள்வது வளர்ந்த நாடுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழிகளுக்காகத்தான் இன்னும், நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து உயிராதாரமாய் இருக்கும் விவசாயத்தை அழித்து வருகிறார்கள். இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களால் குறிப்பிடுகிறார்கள்.

இதை வணிகம் என்றோ, உலகமே கிராமமாக சுருங்கியிருக்கும் நிலையில் ஒரே இடத்திலேயே எல்லாவற்றையும் தயாரிக்க முடியுமா என்றோ புரிந்து கொள்ள முடியாது. எப்படியென்றால், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அனைத்து நாடுகளையும் கடன் வலையில் சிக்க வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையையே தீர்மானிக்கும் அளவுக்கு இந்தக் கடன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உதவி எனும் பெயரின் கடன்களைத் தந்து தங்களுக்கு தேவையான வசதிகளை, கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.  தங்கள் நாடுகளில் அதிக செலவுபிடிக்கும் உற்பத்திகளை ஏழை நாடுகளில் செய்யவைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கிறார்கள். உலகளாவிய சந்தையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்களுக்கு அதிக விலையையும், உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த விலையயும் நிர்ணயம் செய்து, ஏழை நாடுகளை மொத்தமாகச் சுரண்டுகிறார்கள். உலகமயம் என்ற பெயரில் ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கும் வேலையைத்தான் வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. இதை வணிகம் என்றோ, தொழிலகலின் பரவல் என்றோ குறிப்பிடமுடியாது. மறுகாலனியாக்கம் என்பதே பொருத்தமான பெயர்.

 

ஆக, அன்னியச் செலவாணி ஈட்டித்தரும் தொழில்கள் என்று கூறிக்கொண்டு நாம் சுற்றுச் சூழலை இழந்திருக்கிறோம், விவசாயத்தை இழந்திருக்கிறோம், மக்களின் வாழ்வாதாரத்தை, குடிநீர் வளத்தை அனைத்தையும் இழந்திருக்கிறோம். இதுவரை திருப்பூர் பின்னலாடைத்தொழில் மூலம் கிடைத்த அத்தனை அன்னியச் செலவாணி டாலர்களைக் கொண்டுவந்து கொட்டினாலும் ஒரத்தப்பாளையம் அணையை சுத்தம் செய்ய முடியுமா? அதனால் மலடாகிப்ப்போன நிலங்களை சரி செய்ய முடியுமா? பாதாளத்துக்கு இறங்கிவிட்ட நிலத்தடி நீரை உயர்த்திக் கொண்டுவர முடியுமா? எனவே சாயப்பட்டறைக் கழிவுகள் என்பது திருப்பூரை மட்டுமே சார்ந்த பிரச்சனை அல்ல. உலகளாவிய முதலாளித்துவ கோரத்தின் திருப்பூர் முகம்.

 

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சாயப்பட்டறைகளிலும் சுத்திகரிப்பு முறைகளை செயல்படுத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத திட்டமல்ல. 40 லிருந்து 60 விழுக்காடு வரை லாபம் தரும் சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு செலவினங்கள் லாபத்தில் குறைவைக்கொண்டுவருமேயன்றி ஒருபோதும் நட்டத்தைக் கொண்டுவராது. மட்டுமல்லாது ஒரத்தப்பாளையம் அணையை கொஞ்சமேனும் சீர்செய்ய வேண்டுமென்றால் ‘ஸீரோ டிஸ்சார்ஜ்’ முறையைத் தவிர வேறதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது சாயப்பட்டறைக் கழிவில் அங்கீகரிக்கப்பட்ட அளவு குறித்து பேசுபவர்கள், நேரடியாக ஆற்றில் கலந்தபோது அங்கீகரிக்கப்பட்ட அளவுகுறித்து எந்தக்கவலையும் பட்டவர்களில்லை. தவிரவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் இந்தத்தொழிலில் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தச் செய்யவேண்டியதும் அவசியமாகும்.

 

இப்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்று கூறி போராடுவது சாயப்பட்டறை முதலாளிகள் இதுவரை செய்துவந்த அயோக்கியத்தனத்தை மறைக்கும் விதத்திலேயே அமையும். திருப்பூரில் மட்டுமா இந்தியாவெங்கும், உலகெங்கும் மக்கள் வேலையிழந்து வருகிறார்கள். அந்த வேலையிழப்புக்கு மையமான காரணம் என்ன என்பதை கூர்ந்து நோக்காமல், முதலாளிகளால் திசைதிருப்பாக முன்தள்ளப்படும் வேலையிழப்பு சார்ந்த போராட்டங்கள் முதலாளிகளின் லாபத்திற்கு பயன்படுமேயன்றி தொழிலாளர்களுக்கல்ல. மத்திய மாநில அரசுகள் சுத்திகரிப்புப்பணிகளை கைக்கொண்டாலும் அதுவும் மக்கள் தலையிலேயே விடியும். இப்போது வேலையிழப்பை முன்வைப்பவர்கள் இந்த முதலாளிகள் வேறு காரணங்களுக்காக தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்யமாட்டார்கள் என்பதை உத்திரவாதப்படுத்த முடியுமா?

 

சாயப்பட்டறைகள் மூடப்பட்டிருப்பது தொழிலாளர்களுக்கு இழப்பு என்றாலும், முதலாளிகளுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும் அதேநேரம், சாயப்பட்டறைகள் தொடர்ந்து மூடிக்கிடப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே அரசு கெடு விதித்து, அதற்குள் சுத்திகரிப்பு முறைகளை அமைத்து திறக்காத சாயப்பட்டறைகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். இதை அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த திசையில் மக்கள் ஒன்றிணைந்து சமரசமற்ற போராட்டங்களை நடத்தி அரசை பணியவைப்பது தான் இந்தப்பிரச்சனைக்கான சரியான தீர்வாக இருக்கும்.

 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி உண்ணாவிரதங்களால் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர்.

 
அண்மையில் பெய்த மழையினால் வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்க ஆந்திர அரசு முதலில் ஏக்கருக்கு 4500 ரூபாயும் பின்னர் அதை ஆறாயிரமாக உயர்த்தியும் நிவரணத்தொகை அறிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சந்திரபாபு நாயுடு இழப்பீட்டுத்தொகையை ஏக்கருக்கு பத்தாயிரமாக உயர்த்தவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். காலவரையற்ற உண்ணாவிரதம் என்று விளபரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நாடகம் இரண்டு நாட்களாகுமுன்னரே அவரின் உடல்நிலை சீர் கெடுகிறது என்று மருத்துவர்கள் குழு பிரச்சாரத்தைத் தொடங்க, பிரச்சனை சிக்கலாகி விட‌க் கூடாதே என அஞ்சிய ஆந்திர அரசு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டியது. ஆதரவு பெருகுகிறது என்பதை அறிந்த‌ நாயுடு உண்ணாவிரதத்தை கைவிட மறுக்க, கைது செய்தாவது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பியது அரசு. விளைவு, தெலுங்கு தேச தொண்டர்கள்(!) சாலை மறியல் கல்வீச்சு என இறங்கிவிட்டனர்.

 
நாயுடுவுக்கு அப்படியென்ன திடீர் பாசம் விவசாயிகள் மீது? அவரின் பாசம் விவசாயிகள் மீதல்ல, தன் மீது தான். ராஜசேகர ரெட்டி விபத்தினால் காலியாகிவிட்ட திண்ணைக்கு முதலில் ரோசய்யா, பிறகு கிரண்குமார் ரெட்டி என்று ஒரு நிலையற்ற தன்மை நிலவ, இடையில் ஜெகன் மோகன் நடைபயணம், தனிக்கட்சி என்று வீரம் காண்பிக்க, சும்மா இருந்தால் காணாமல் போய்விடுவோம் எனும் பயம் வந்தது நாயுடுவுக்கு. எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தவருக்கு தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியது கிடைக்க, விவசாயிகளுக்கான போராளியாக புது அவதாரம் எடுத்தார்.

 
விவசாயிகளின் வயிற்றில் எரியும் தீயை ஏக்கருக்கு பத்தாயிரம் என்பது அணைத்து விடாது என்றாலும், இந்தக் கோரிக்கையை நாயுடுவால் வேறு வழிகளில் விடுத்திருக்க முடியாதா? தன்னுடைய கட்சித் தொண்டர்களின் பங்களிப்புடன் ஆந்திரா முழுவதிலும் இந்தக் கோரிக்கையை முன்னிருத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்க முடியாதா? தலைமையகத்தை முற்றுகையிட்டிருக்க முடியாதா? முடியலாம், ஆனால் அவை ஓரிரு நாட்களின் மக்களால் மறக்கப்பட்டுவிடும். எதிர்வரும் தேர்தலில் ஒட்டுகளாக அவை மாறாது. ஓட்டுக்களாக மாறவேண்டுமென்றால் தன்மீது அனுதாபம் ஏற்பட்டாக வேண்டும் என்பதைத்திட்டமிட்டே இந்த உண்ணாவிரத உருப்படியை கையில் எடுத்திருக்கிறார்.


ஆந்திராவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்து செழித்தாலும், பெய்யாமல் வறண்டாலும் அவைகளை தன்னை பாதிக்கும் அம்சங்களாக மாறிவருவதை மவுனமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறான் விவசாயி. அரசின் பொருளாதரக் கொள்கைகளினால் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சி எனும் பெயரில் செயற்கையான இரசாயண உரங்கள் விளை நிலங்களில் கொட்டி நிலத்தை மலடாக்கி விதைக்குக் கூட பண்ணாடு நிறுவனங்களிடம் கையேந்தும் நிலையை திட்டமிட்டு உருவாக்கி, இடு பொருட்களின் விலையை விண்ணுக்கு உயர்த்தி விளை பொருட்களின் விலையை மண்ணுக்குத்தாழ்த்தி, விவசாயிகளை ஒட்டாண்டியாக்கி அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஓடவிட்டிருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?

 
பருவம் தப்பாமல் மழை பெய்துகொண்டிருந்த நாடு இது. ஆனால் இன்று என்றாவது மழை பெய்தாலே அது விளைநிலங்களிலும், குடியிருப்புகளில் புகுந்து மக்களையும் விவசாயிகளையும் தவிக்க வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நீர்நிலைகளும் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் காணாமல் போய்விட்டன கடந்த சில பத்தாண்டுகளில். இருக்கும் நீர்நிலைகளையும் தூர்வாரி மராமத்துப் பணிகளை செய்யக்கூடாது என்று தடை போட்டிருக்கிறது உலக வங்கி. அதனால் தான் சிறு மழைக்கும் வயல்கள் தண்ணீரில் மிதக்கின்றன. உணவு தானியங்கள் புழுத்துப்போய் கடலில் கொட்டினாலும் அதை பசித்திருப்பவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என தத்துவ விசாரம் செய்யும் அறிவுஜீவி பிரதமர் தண்ணீரும் மின்சாரமும் இலவசமாய் கிடைப்பதனால் தான் விவசாயிகள் வீணாக்குகிறார்கள் என்று அவற்றுக்கு விலைவைத்து தனியாரிடம் தள்ளிவிட தருண‌ம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாரா இந்த நாயுடுகளும் ரெட்டிகளும்?

 
அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது கழுத்தை அறுப்பது, ஆட்சியில் இல்லாதபோது கட்டுப்போடுவதுபோல் நடிப்பது என்பதையே தங்கள் ஒரே கொள்கையாய் வைத்திருக்கின்றன. மக்கள் இவர்களை இனம்கண்டு துடைத்தழிக்க முன்வராதவரை நம்மில் படிந்திருக்கும் துயரத்தின் கறைகளை நீக்க முடியாது.

%d bloggers like this: