வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்

 

பன்றிக் காய்ச்சல் பீதி மீண்டும் பற்றிப் படரத் தொடங்கியிருக்கிறது. நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் மிகுந்த முதன்மைத்தனம் அளித்து இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனும் ஐயம் மக்களை தனியார் மருத்துவமனைகளில் ஆயிரங்களை செலவு செய்து சோதித்துக் கொள்ள தூண்டுகிறது. நோய், அதற்கான எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அதனால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை உடல்நலம் எனும் அடிப்படையில் தவிர்க்க இயலாதவை. ஆனால் இந்த அடிப்படையைக் கொண்டே சுரண்டல்கள் நடந்தால்..?ஆபத்துகளையும் பேரழிவுகளையும் தன்னுடைய லாபவெறிக்கான களமாக அமைத்துக் கொண்டால்..?

 

கடந்த முறை பன்றிக் காய்ச்சல் உலகை வலம் வந்த போது அது தான் நடந்தது. “மருத்துவ நிபுணர்களே! ஹெச்1என்1 தொற்று நோயைத் தடுத்திடுங்கள்! உயிர்களைக் காத்திடுங்கள்” என்று பிரபல நாளிதழ்களில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது அன்று. பரவும் தொற்று நோயை தடுப்பது அரசின் கடமையா? தனிப்பட்ட மருத்துவர்களின் வேலையா? பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அஞ்சியதால் இப்படி விளம்பரம் வெளியிட நேர்ந்ததாக மத்திய அரசு பின்னர் விளக்கம் அளித்தது. அன்று தனிப்பட்ட மருத்துவர்கள் எந்தக் காய்ச்சல் என்றாலும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதைத்தான் செய்தார்கள். தனியார் மருத்துவ நிலையங்களோ இதைப் பயன்படுத்தி முடிந்தவரை கறந்தார்கள். கடந்த 2009ல் வளைகுடாவில் வேலை செய்யும் சலீம் என்பவர் விடுப்பில் ஊர் திரும்பினார். வந்த இரண்டாம் நாள் அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதாக தெரிந்தது. பெற்றோர்கள் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனப் பதறினார்கள், உறவினர்கள் முடிவே செய்துவிட்டார்கள். ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனை செய்ய அறிகுறிகள் தெரிவதாகக் கூறி உள்நோயாளியாக சேர்த்துக் கொண்டார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு சாதாரணக் காய்ச்சல் தான் என்று கூறி, கட்டணமாக மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு விட்டுவிட்டார்கள். பல ஆண்டுகளாக வளைகுடாவில் கடைநிலை ஊழியராக இருந்து சேமித்த பணத்தை அந்த தனியார் மருத்துவமனை நான்கே நாட்களில் கொள்ளையடித்துக் கொண்டது. சாதாரண மக்களுக்கு இந்த பீதியை ஏற்படுத்தியது யார்?

 

 

உலக சுகாதார அமைப்பு(WHO) தான் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் அளவில் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டது. இதை உலகின் அனைத்து செய்தி ஊடகங்களும் பரபரப்புக்காகவும், உள்நோக்கத்துடனும் விடாமல் செய்தியாக வெளியிட்டு உலகை பதற்றத்துக்கு உள்ளாக்கின. 2009ல் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் 85 பேர் மரணமடைந்தார்கள், ஆனால் காச நோயால் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 5000 பேர் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தையும் இதனுடன் இணைத்துப் பாருங்கள். மக்களிடம் பயத்தை உருவாக்க மைய அரசும் பாடுபட்டிருப்பது புரியும். இதன் பொருள் மக்கள் இறந்து போகும் எண்ணிக்கையைக் கொண்டு விழிப்புணர்வை தீர்மானிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, அளவுக்கு மீறி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன? அதன் விளைவு என்ன? என்பதே முதன்மையான கேள்வி.

 

 

பன்றிக் காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தான டாமிபுளூ வை உற்பத்தி செய்யும் ரோஷ் என்ற பன்னாட்டு நிறுவனம் 200 மடங்கு லாபத்தை ஈட்டியது. மற்றொரு மருந்தான ரிலின்ஜா வை உற்பத்தி செய்யும் கிளாக்ஸோ நிறுவனந்த்தின் விற்பனை 1900 நூற்றுமேனியாக அதிகரித்தது. சனோஃபிபாஸ்டர், அஸ்ட்ராஜெனிகா, நோவாவெக்ஸ் போன்ற நீறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. புரோடின் சயின்ஸ் கார்பரேஷன் எனும் மருந்து நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிடும் நிலையில் இருந்தது, பன்றிக் காய்ச்சலை பயன்படுத்தி உச்சத்திற்கு சென்றுவிட்டது இன்று. டெட்டாலின் இந்தியச் சந்தை ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜான்சன் நிறுவனத்தின் பியூர்ல் ன் விற்பனை 452 கோடியாக அதிகரித்துள்ளது. ஹிமாலயாவின் பியூர் ஹேண்ட்ஸ்ன் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. முகமூடி தயாரிக்கும் நிறுவனமான ரெலிகேர் பன்றிக் காய்ச்சலைப் பயன்படுத்தி தனது சந்தையை விரிவுபடுத்தி விட்டது. மொத்தத்தில் இந்த பன்றிக் காய்ச்சலுக்காக இரண்டு லட்சம் கோடி டாலர்களை உலக மக்கள் செலவிட்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தெளிவாகச் சொன்னால், பன்றிக் காய்ச்சல் எனும் நோய் உருவானதினால் அல்லது உருவாக்கப்பட்டதினால் ஏற்பட்ட இழப்புகள், பாதிப்புகள், நட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு; அதனால் கிடைத்த வாய்ப்புகள், லாபம், பலன்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு. இன்னும் அப்பட்டமாக கூறினால் முதலாளிகளுக்கு லாபம் கிடைப்பதற்காக உலகெங்கும் கோடிக்கணக்கான சலீம்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

 

மருந்துகள், கிருமிநாசினி, காகித கைக்குட்டைகள், முகமூடிகள், கைகழுவும் திரவங்கள் இவற்றால் மட்டும் பன்றிக் காய்ச்சலை நீக்கிவிட முடியுமா? அம்மை, காலரா போன்ற கொடூரமான நோய்கள் உலகில் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தின் நோய்களான பறவைக் காய்ச்சல், டெங்கு, சார்ஸ், பன்றிக் காய்ச்சல் போன்றவைகளை உலகைவிட்டே நீக்கும் தடுப்பூசி வகைகளுக்கான ஆய்வுகள் எந்த மருந்து நிறுவனத்தாலும் செய்யப்படுவதில்லை. மாறாக, நோய் வந்த பின்பு போக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மட்டுமே செய்கின்றன. அரசுகளோ சுகாதாரத்துறையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

 

 

உலகில் கால்நடை இறைச்சி விவசாயம் விரல்விட்டு எண்ணக் கூடிய சில நிறுவனங்களின் பிடியிலேயே சிக்கி இருக்கின்றன. அதிக பால், அதிக முட்டை, அதிக இறைச்சி போன்றவற்றுக்காக இந்நிறுவனங்கள் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை மரபணு மாற்றத்தின் மூலம் விரும்பிய படியெல்லாம் வளைக்க முயல்கின்றன. விளைவு இயற்கையாக அவைகளுக்கு இருக்க வேண்டிய எதிர்ப்பு சக்திகள் இல்லாமல் போய்விடுகின்றன. இதனால் வெகு எளிதாக நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகின்றன. மட்டுமல்லாது, குறுகிய இடத்தில் அடைத்து வைத்தே வளர்ப்பது, கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படாமல், உணவும் கழிவும் ஒரே இடத்தில் ஒன்று கலந்து கிடப்பது, முறையான பராமரிப்பு வசதிகளை செய்யாதது போன்றவைகளெல்லாம் சேர்ந்து இது போன்ற பண்ணைகளை நோய் உற்பத்திக் கூடாரங்களாகவும், நோய்க் கிருமிகள் புதிய மருந்துகளை எதிர்கொள்ளும் விதத்தில் பரிணாம ரீதியில் மாற்றமடைவதற்கு ஏதுவான களங்களாகவும் மாற்றுகின்றன. அதனால் தான் ஆண்டுக்கு ஆண்டு புதுப்புது விதங்களில் நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. இவைகளை கண்காணிக்கும் அரசு அமைப்புகளும் பெயரளவுக்கே செயல்படுகின்றன. சுமித் ஃபூட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் பண்ணையிலிருந்தே முதன் முதலில் பன்றிக் காய்ச்சல் பரவியதாக கண்டறியப் பட்டிருக்கிறது. இதே சுமித் ஃபூட்ஸ் நிறுவனம் 2005ல் ISO 14001 எனும் தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனமாம். அதாவது அந்தப் பண்ணையில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பன்றிகள் வளர்க்கப்படுவதாக, உலக அளவிலான தரம் பேணப்படுவதாக சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயர் உலகில் பரவத் தொடங்கியதும் இறைச்சிக்கான பன்றி விற்பனையும், ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்தது. உடனே ஒபாமாவிடம் முறையிடப்பட அவர் பன்றிக் காய்ச்சலுக்கு ஹெச்1என்1 காய்ச்சல் என்று அறிவியல் பெயர் சூட்டினார். ஆனால் உலகெங்கும் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான சலீம்களுக்காக கவலைப்பட எந்த அரசும் தயாராக இல்லை.

 

 

இந்த நோயைப் பயன்படுத்தி பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மக்களிடம் அடித்த கொள்ளை ஒருபுறமிருக்கட்டும். இந்த நோய் உருவானதா? உருவாக்கப்பட்டதா? என்பதிலேயே இன்னும் ஐயம் நீடிக்கிறது. மேல்நிலை வல்லரசுகள் தங்களுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகள் மீது போர் தொடுப்பதை விட உயிரி ஆயுதங்களை ஏவிவிடுவது பாதுகாப்பானது என்று கருதுகின்றன. அதற்காக செய்யப்படும் ஆராய்ச்சிகள் மறைக்க முடியாதபடி வெளிப்பட்டிருக்கின்றன. அவைகளை வெறும் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எய்ட்ஸ் குறித்தும் இவ்வாறான சர்ச்சை உண்டு. அது குறித்து ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்பட்டதன் விளைவாக அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பதிலளிக்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்த வரிசையில் பன்றிக் காய்ச்சலும் சேர்ந்திருக்கிறது. இந்நோய்க் கிருமியின் உட்கூறு பறவைக் காய்ச்சலின் கிருமி(Avian flu), மனிதக் காய்ச்சலின் வகைகளான ஏ, பி கிருமிகள்(Human flu Type A&B), ஆசிய பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu), ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பாக இந்தக் கிருமி இருப்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது ஒரு குறுகிய காலத்தில் நான்கு கண்டங்களில் உருவான கிருமிகளின் கலப்பாக இது இருக்கிறது. ஆகவே, இது ஏன் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட கிருமியாக இருக்கக் கூடாது?

 

இவைகளின் கிளைக் காரணங்கள் பலவாக இருந்தாலும் மூல காரணம் சுகாதாரம், மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பது படிப்படியாக விலக்கப்பட்டு சுகாதாரத்துறை தனியார்மயமாவது தான். நோய்களிலிருந்து மக்களைக் காப்பதும், புதிய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதும், இருக்கும் நோய்களுக்கான காரணங்களைக் களைவதும் அரசின் கடமை. இவைகளை அரசுகள் செய்யத் தயாராக இல்லாத போது செய்ய வைப்பது தான் மக்களின் கடமை. முகமூடி அணிந்து கொண்டாலோ, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலோ, மருந்துகள் உட்கொண்டாலோ நோய்களிலிருந்து தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் மருத்துவம் தனியார்மயமாவதன் நோக்கம் நோய்க் கிருமிகளை உருவாக்குவதோ, அழிப்பதோ, மருத்துவம் செய்வதோ அல்ல. அதைக் காரணமாகக் கொண்டு மக்களின் உழைப்பைத் திருடுவது. இன்று உருவாக்கப்பட்ட கிருமியை முகமூடியைக் கொண்டும், டெட்டாலைக் கொண்டும் தடுத்துவிட முடியும் என்றால், நாளை உருவாக்கப்படும் கிருமி அதையும் தாண்டி உள்ளே நுழையும். அப்போது மக்கள் வேறுவகை சாதனங்களை வாங்க வேண்டியதிருக்கும். என்றால் எது சரியானது? தங்கள் உழைப்பை விற்று புதிது புதிதாய் உபகரணங்களையும் மருந்துகளையும் வாங்கிக் கொண்டே இருப்பதா? தனியார்மயத்துக்கு எதிராக போராடுவதா? இத்தருணத்தை விட்டால் இனி சிந்திப்பதற்குக் கூட நேரமிருக்காது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌
%d bloggers like this: