குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை

image0101310

 

கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின்

கைகளில் இன்னும் காயவில்லை

மலம் அள்ளிய ஈரம்.

ஒருமுறை கைதட்டிக் கொள்வோம்

ஐந்து செயற்கைக் கோளுடன்

வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட்.

 

வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம்

ஆனால் என்ன?

தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம்.

கொஞ்சம் பாராட்டலாம்

ஊனமுற்றோர்க்கு மோடி

சக்கர நாற்காலி வழங்கினார்.

 

இடுகாட்டுக்கு பாதையில்லை

போலீசே பிணம் திருடி

புதைத்த கொடூரம்.

பெருமிதம் கொண்டால் என்ன?

பன்னாட்டு தரத்தில் எட்டு வழி

வழுக்கும் சாலைகள்.

 

இரு கால், ஒரு கை செயல் தராவிடினும்

அபாயகரமான பயங்கரவாதி

பேராசிரியருக்கு நீதிமன்றம் தந்த பெயர்.

இந்தியராய் பெருமை கொள்வோம்

பதான்கோட்டில் தீவிரவாதிகள்

சுட்டுக் வீழ்த்தப்பட்டனர்.

 

பனங்கள் இறக்க அனுமதிக்க மாட்டோம்

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயித்தவாறே

சட்டமன்றத்தில் அமைச்சர்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

வெள்ள நிவாரணம்

முறையாக கொடுக்கப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை இறங்க இறங்க

பெட்ரோல் விலை உயரும்

இது மோடி விதி.

அதனால் என்ன?

பென்ஸ் கார் இரண்டு லட்சம்

திட்டம் இருக்கிறதே.

 

அடடே! மறந்து விட்டேன்.

மக்கள் வதங்கினால் என்ன?

இன்று குடியரசு தினம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா?

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.
வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.
1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.
விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 – -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.
விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.
உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.
உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?
இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.
110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
 
டிசம்பர் 2008 “புதிய ஜனநாயகம்”
“உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்” கட்டுரையில் இருந்து

ஒற்றை பொம்மைக்கு ஓராயிரம் ஆட்டங்கள்

உங்கள் அலுவலகத்தில் ஒரு முத்திரைக் கட்டை தேய்ந்து விட்டால் என்ன செய்வீர்கள்? சத்தமில்லாமல் இன்னொன்றை வாங்கிக் கொள்வீர்கள். மாறாக அனைத்து அலுவலர்களும் கூடிப்பேசி, கலந்தாலோசித்து, வழிகேட்டு திட்டமிட்டு என ஆர்பாட்டமாக அமர்க்களம் செய்தால் .. .. அது தான் குடியரசுத் தலைவர் தேர்தல். அரசியலில் கவனம் கொண்டிருக்கும் யாருக்கும் கடந்த சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் கேள்வி இது தான், ‘ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு ஏன் இத்தனை சதிராட்டம்?’ மூன்றாம் வகுப்பு மாணவன் கூட குடியரசுத் தலைவருக்கு ஏதாவது அரசியல் அதிகாரம் இருக்கிறது என்றால் நம்பமாட்டான். பின் ஏன் .. ..?

 

இந்த முறை குடியரசுத் தலைவராக ஆகவிருப்பவருக்கு முக்கியமான பணி ஒன்று காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அதே நேரம் தற்போதைய கூட்டணிகளிலும் கூட ஆட்சியமைக்கும் அளவுக்கான எண்ணிக்கையில் எம்பிக்கள் கிடைப்பார்கள் என்று எந்தக் கட்சிக்கும் நம்பிக்கையில்லை. எனவே அந்த நேரத்தில் நடத்தப்போகும் குதிரை பேரங்களுக்கும், ஆள் கடத்தல், போன்ற பண விளையாட்டுகளுக்கும் தங்களுக்கு உகந்தவராக இருப்பவரை அந்த அலங்கார மாளிகையில் உட்கார வைத்து விட்டால், அதுவே அதிகார ருசியை சுவைப்பதற்கு இலை விரித்தது போலாகும் என்பதனாலேயே ஒவ்வொரு கட்சியும் தத்தமது கூட்டணிகளுடன் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கின்றன.

 

இந்த பந்தயத்தில் முன்னணியில் நிற்பது ஆளும் காங்கிரஸ் கட்சி தான். எண்ணிக்கை பலத்தால் மட்டுமல்லாது, ஆளும்கட்சி என்பதால் கிடைக்கும் பலன்களை பங்கிட்டுக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஏனைய கட்சிகளிலும் குடி கொண்டிருப்பதன் அடிப்படையிலும் அது பந்தயத்தில் முந்தியிருக்கிறது. இல்லையென்றால் மாயாவதி, முலாயம் தொடங்கி சிவசேனை வரை காங்கிரஸை ஆதரித்து நிற்பதற்கு கொள்கை வழிப்பட்ட உறுதி என்று நாம் நம்ப வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இந்த குடியரசு தலைவர் தேர்தலை முன்வைத்து திட்டங்கள் இருக்கின்றன. அந்த திட்டத்தின் வழியில் தான் ஆதரவும், எதிர்ப்பும், ஒதுங்கலும் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதேயன்றி அவர்கள் பீற்றிக் கொள்வது போல் குடியசுத் தலைவர் எனும் பதவியின் கண்ணியத்தினாலோ, அதன் அதிகார மதிப்பினாலோ அல்ல. இது யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை.

 

பாஜக கூட்டணியிலோ கடைசி வரை குழப்பம். யார் பெயரைப் பரிந்துரைத்தாலும் வடக்கு ஒன்றும் தெற்கு ஒன்றுமாய் அவிழ்ந்த நெல்லிக் காய் மூட்டையாகிறது கூட்டணி. முன்னாள் அரசவைக் கோமாளியைக் கொண்டு வந்து அகடவிகடம் செய்ய எத்தனித்தார்கள். கடைசியில் ஜெயலலிதாவின் கணக்குப் பண்ணலுக்கு பணிந்து சங்மாவை முன் தள்ளி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

 

இடதுசாரிகள் என்ற பெயரில் இடறி உலவும் கும்பல்களும் இங்குண்டு. சிபிஐ முதலில் தலித் பெண் வேட்பாளர் என்று ‘சவுண்ட்’ விட்டுப் பார்த்தது, பரமக்குடியில் தலித் மக்களை சுட்டுக் கொன்ற ஜெயா எட்டி உதைத்த பின்னும் தொத்திக் கொண்டிருக்கும் நிலையை எண்ணி வெட்கப்பட்டிருக்கும் என எண்ணி விட வேண்டாம். அவர்களின் ‘சவுண்டை’ கேட்க ஆளில்லாததால் இப்போது புறக்கணிப்பு என்கிறது. மார்க்சிஸ்டுகளோ மம்தா யாரை எதிர்க்கிறாரோ அவரை ஆதரிப்பது தான் கம்யூனிச நிலைப்பாடு என்கிறார்கள்.

 

ஆளும் கூட்டணியிலிருந்து பிரணாப் முகர்ஜி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். இவர் பெயரை அறிவித்ததிலிருந்து இவரின் ஆளுமை குறித்தும், எல்லோருடனும் இணக்கம் பேணும் தன்மை குறித்தும், புள்ளிவிபரங்களை விரல் நுணியில் வைத்திருக்கும் திறமை குறித்தும், இன்னும் பலவாறாகவும் விதந்தோதப்படுகிறது. ஆனால் இவரின் தகுதி என்ன என்பதற்கு ஒற்றை எடுத்துக்காட்டு போதுமானது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம் அனைத்தையும் கருப்புப் பணம் என்று கொச்சைப்படுத்தக் கூடாது என்றாரே. இதற்கு மேலும் ஏதாவது அத்தாட்சி வேண்டுமா இவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு.

 

சங்மா என்று ஒருவரும் சீனில் இருக்கிறார். இவரின் தியாகம் மகத்தானது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் ‘இருக்கும்’ கட்சியையே துறந்திருக்கிறார். ஏனென்றால், பழங்குடியினரின் நலைனை பிரதிபலிக்கிறாராம். பசுமைவேட்டை என்ற பெயரில் அரசு பழங்குடியினரை கொன்றழித்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து இந்த பழங்குடிகளின் புதுத் தலைவர் ஏதாவது கூறுவாரா? பழங்குடிகளை இனி யாரும் புறக்கணிக்க முடியாது என்கிறார். முதலில் பழங்குடிகள் அவர்கள் வாழிடங்களிலிருந்து துரத்தப்படுவது குறித்த தன்னுடைய கருத்தை இந்த தலைவர் வெளிப்படுத்தட்டும்.

 

ஊர் ஊராகச் சென்று மேட்டுக்குடி சிறுவர்களிடம் “சீக்கிரம் தூங்குங்கள், 2020ல் இந்தியா விழித்துவிடும்” என்று காமெடி பண்ணிக் கொண்டிருக்கும் கோமாளி ஒருவரும் அவ்வப்போது தலை காட்டுகிறார். முன்னர் இவர் ராஷ்டிரபதி பவனில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த போது தான் குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை ரசித்துக் கொண்டிருந்தவர் தன் மாளிகையில் திரியும் மயிலுக்கு அடிபட்ட போது அதற்கு தனி எழுவூர்தியில் (ஹெலிகாப்டரில்) மருத்துவம் செய்வித்து கொண்டுவரும் வரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தவர். இவருக்கு மீண்டும் அந்த மாளிகையில் குடியிருக்க வேண்டும் என்று ஆசை. ஆனாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உறுதியாக தெரியாத போது போட்டியிலிருந்து நழுவிக் கொள்வது தான் தன் விஞ்ஞானி பிம்பத்துக்கு உகந்தது என்றும் எண்ணுகிறார்.

 

முதல் குடிமகனாவதற்கு நடக்கும் கூத்துகள் இப்படியிருக்க; ஒரு குடிமகன் 28 ரூபாய் சம்பாதித்தால் அவன் சுகமாக வாழலாம் என திமிரெடுத்து அறிவித்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மண் மோகன் சிங் ஐரோப்பிய முதலாளிகளின் லாப உத்திரவதத்திற்கு மக்களின் வரிப்பணத்தை பாடை விரித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் பெருச்சாளிகள் தின்று தீர்த்து மீதமுள்ளவைகள் புழுத்துப் போனாலும் பட்டினி கிடக்கும் மக்களுக்கு அரிசியை தரமாட்டேன் என்கிறார். இந்த லட்சணத்தில் இங்கு நடப்பது குடியரசாம், அதற்கு தலைவரை தேர்ந்தெடுக்கிறார்களாம்.

 

நம்புங்கள், உலகில் இந்தியா மிகப் பெரிய்ய ஜனநா.. .. .. .. நாயக நாடு.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இன்று குடியரசு தினமாம்


யாருக்கான குடியரசு இன்று?
குடிமக்களுக்கா?
மக்களை குடிக்கப் பழக்கும் அரசுதான் உண்டு
தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?
அறியாமை அகன்றிருக்கிறதா?
பஞ்சம் பசி மறைந்திருக்கிறதா?
என்ன கிடைத்திருக்கிறது இந்த குடியரசால்?
வாழும் உரிமையற்று தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்,
மலம் உண்ணும் உரிமை தந்த திண்ணியங்கள்
பெருங்கற்காலத்தில் வாழச்செய்த கயர்லாஞ்சிகள்
இவைதானே குடியரசின் பரிசுகள்.
என்ன இருந்தாலும் சுதந்திரம்
வெள்ளையனிடமிருந்து பெறப்பட்டதாய்
வீரவசனம் பேசுவோரே
இதோ இந்த படங்களைப் பாருங்கள்
அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டில்
மக்கள் போராடிக்கொண்டிருந்தனர்
இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கோ
கொஞ்சமும் குறைவில்லை.
அன்று
மக்களின் கைகளால் சுதந்திரம் கிடைப்பதை தடுத்ததும் இவர்கள் தான்
இன்று
மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவிடாமல் தடுப்பதும் இவர்கள் தான்.
கடைசிப்படத்தை பாருங்கள்
மெக்காலே திமிருடன் எழுதியிருப்பதை
அன்று அவன் எழுதியதை
இன்று செயல்படுத்திக்கொண்டிருப்பவர்களை வீழ்த்தாமல்
குடியரசு தினமா?
வெட்கம்! வெட்கம்!

%d bloggers like this: