தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?


நாடு மறுகாலனியாக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதை நேரடியாக மறுக்கும் முதலாளித்துவவாதிகளைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். மறுகாலனியாக்கம் எனும் சொல்லில் பேதம் கொண்டிருப்போரும் அதன் உள்ளார்ந்த சாரத்தில் பேதமேதும் கொண்டிருக்க மாட்டார்கள். நாட்டின் அனைத்துத் துறைகளும் தனியார்மயப் படுத்தப்பட்டிருக்கின்றன, படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் அனைத்துத் தரப்பு மக்களின் முதுகுகளிலும் அடையாளமாய் பதிந்திருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டச் செய்திகள் என்றாலே கசந்து காததூரம் போகும் செய்தி ஊடகங்களிலும் தவிர்க்கவே முடியாமல் தினசரி ஏதேனும் போராட்டச் செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன. மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுக்கட்சிகளால் தங்கள் சொகுசுகளைத் தொடரமுடியாதே, அதனால் அவைகளும் போராட்டங்களை அறிவிக்கவேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.

மொட்டையடித்து நூதனப்போராட்டம், வயிற்றிலடிக்கும் போராட்டம், பட்டை நாமமடிக்கும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், பட்டினிப் போராட்டம், உண்ணும் போராட்டம் என்று பலவிதமான ‘புரட்சிகர’ போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளையும், அவர்களின் போராட்டத்திற்கான உள்ளீட்டையும் மிகக்கவனமாய் நீர்த்துப்போகச் செய்துவிடுவார்கள். இந்த இலக்கணங்களிலிருந்து சற்றும் வழுவாமல் நடத்தப்பட்டதுதான் கடந்த 07/09/2010 அன்று நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்.

நாடு தழுவிய இந்தப் போராட்டத்திற்கான காரணங்களாக விலைவாசி உயர்வு, தொழிலாளர் நல சட்டங்கள் புறக்கணிப்பு, லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீடு, ஆட்குறைப்பு, தாற்காலிக கதவடைப்பு, முறைசாரா தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை அதை நடத்தியவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் நியாயமில்லை என்றோ தேவையற்றது என்றோ கூறிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. பின் என்ன பிரச்சனை இப்போராட்டம் நடத்தியதில்? இப்போராட்டம் யாரை எதிர்த்து யார் நடத்தியது.

ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி போராட்டம் நடத்தலாம், அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தினால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? காங்கிரஸின் ஐஎன்டியூசி, பாரதிய ஜனதாவின் பிஎம்எஸ், மார்க்சிஸ்டின் சிஐடியூ, வலதுதின் ஏஐடியூசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. இதில் இடதுகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா தவிர ஏனைய இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென ஊடகங்கள் (மகிழ்ச்சியுடன்) தெரிவித்திருக்கின்றன.

இந்தப் போராட்டத்தின் மையச்சரடாக இருப்பது தனியார்மய எதிர்ப்பு. இந்த தனியார்மய எதிர்ப்பில் தனித்தனியே போராட்டம் நடத்தும் கட்சிகளின் நிலை என்ன? அமெரிக்க அடிவருடித்தனத்தின் எல்லையை நோக்கி விரையும் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு தனியார்மயத்தை எதிர்க்கிறதா? தனியார்மயத்திற்கென்றே தனி அமைச்சகம் கண்ட பாஜக தனியார்மயத்தை எதிர்க்கிறதா? கம்யூனிஸ்டுகள் என்று தங்களை வெட்கமில்லாமல் அழைத்துக்கொள்ளும் இடதுவலதுகளின் நந்திகிராம்களின் கதை என்ன? இவர்கள் தனியார்மயத்தை எதிர்க்கிறார்களா? தங்களின் ஆட்சியில் தனியார்மயத்தை முழுமைப்படுத்துவதற்கு தங்கள் செயல்களை அர்ப்பணித்துவிட்டு இப்போது ஒன்றுகூடி நாங்கள் தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?

விலைவாசி உயர்வு. அண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, மானியம் கொடுத்தே நிதி வற்றிவிட்டது என்று அண்டப்புழுகுகளை அவித்துவிட்டு எண்ணெய் விலையில் இருந்த அரசின் கட்டுப்பாடுகளை நீக்கி நிறுவனங்களின் கைகளில் தள்ளிவிட்டது காங்கிரஸ் அரசு. எண்ணெய் விலை உயர்வு அனைத்து பொருள்களிலும் எதிரொலிக்கும் என்பது என்ன யாருக்கும் தெரியாத ரகசியமா? விலை உயர்வின் அச்சாணி ஊக வணிகத்தில் இருக்கிறது. ஊகவணிகத்திலிருந்து இந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள், அந்தப் பொருளுக்கு விலக்களியுங்கள் என்று கூக்குரலிடும் எந்தக் கட்சியும் ஊகவணிகத்தை தடைசெய்யுங்கள் கூற நாவு எழ மறுக்கிறது.

இவர்கள் ஒன்று கூடி நாங்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது யாரை ஏமாற்றுவதற்கு?

தொழிலாளர் உரிமைகளை பறிப்பது தொடங்கி, அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றுவதுவரை இந்த ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் இடையே வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க இயலுமா? பெயர்களில் இருக்கும் வித்தியாசத்தைத் தவிர. எதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களோ அதை எதிர்த்து போராட்டம் நடத்துத்தும் அளவுக்கு அவர்களைத் தள்ளியது எது? மக்கள் தங்க‌ளை வாழ்வை பாதித்து அரிக்கும் தனியார்மய, தாராளமய, உலகமய சூக்குமங்களை முழுமையாக உணர்ந்துகொண்டார்கள் என்று கூறமுடியாது என்றாலும், அவற்றின் வலியால் திரண்டெழுந்து போராட்டங்களின் முனைக்கு அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள். முதலாளிய கோரங்களை எதிர்த்து இப்போது கூக்குரலிடாவிட்டால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுபோவோம் என்பதைத்தவிர இவர்களின் பொருளற்ற இந்தப் போராட்டத்திற்கு வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

உள்ளொன்று வைத்து புறத்தில் வேறொன்றாய் கள்ளத்தனமாய் செயல்படும் இந்த ஓட்டுக்கட்சிகளின் அயோக்கியத்தனங்களை மக்கள் உணர்ந்துகொள்ள‌ வேண்டும். உணர்ந்து புரட்சிகர இயங்களின் பின்னே அணிதிரண்டு சமரசமற்ற உலுக்கியெடுக்கும் போராட்டங்களினாலேயே மக்கள் தங்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டெடுக்கமுடியும்.

எச்சரிக்கை: தேர்தல் வருகிறது எச்சரிக்கை

          தேர்தல் நடப்பது ஒன்றே ஜனநாயகம் என்பதற்கு போதுமானது என்னும் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, கூடவே சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட அதன் வாசகங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற மக்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய கட்டுப்பாட்டு விதிகளையும் சேர்த்து. தேர்தல் என்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்பது திருமங்கலம் இடைத்தேர்தல் நிரூபித்துக்காட்டிவிட்டது. கையூட்டு வாங்குவது குற்றம் என்றிருந்த நிலை மாறி தெரியாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிப்படையாக அதுவும் ஒரு தொகுதி மக்கள் அனைவரையும் கூச்சமில்லாமல் பணத்துக்கு விலைபோகும் நிலைக்கு தள்ளிச்சென்றுவிட்டன ஓட்டுக்கட்சிகள். நல்ல பழக்கங்களை எல்லாம் பட்டினி போட்டுக்கொன்றுவிட்டு கறி விருந்து போட்டுக்கொண்டாட பொதுத்தேர்தல் வருகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட வாழும் உரிமையை பரித்துக்கொண்ட கும்பல் மக்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை வழங்க நாள் குறித்து விட்டன. இதுவரை வார்த்தைகளில் கொள்கை பேசிக்கொண்டிருந்த ஓட்டுக்கட்சிகள் இப்போது செயல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.

          நேற்றுவரை ராஜபக்சேவின் சகோதரியாய் இருந்து போர் என்றால் நான்குபேர் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று இலங்கை பிரச்சனையில் அருள் பாலித்த அம்மா இன்று இலங்கையில் தமிழர்கள் காக்கப்படவேண்டும் என்று உண்ணாவிரதமிருந்து தன் நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அம்மாவின் இந்த கருணை வெளிப்பட்டிருக்குமா?

          சட்டசபை தீர்மானம், மனிதச்சங்கிலி, பதவிவிலகல் என்று உலகத்தமிழர்களின் தலைவன் போல் காட்டிவரும் கலைஞர், இலங்கையில் போரை நடத்துவது இந்தியாதான் என்று வெளிப்படையாக தெரிந்த பின்னரும் கடைசிவரை காங்கிரஸ் அரசை முட்டுக்கொடுத்து தாங்கி நிற்பதை விடமுடியாது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் நாற்காலியில். தமிழர்களைவிட பதவி முக்கியம் என்று அவருக்கு தெரிகிறது மக்களுக்கு….?

          மகனின் அமைச்சர் பதவி போய்விடக்கூடாது என்று இத்தாலி அம்மாவிடம் பம்மிக்கொண்டிருந்த மருத்துவர் போயஸ் அம்மாவிடம் அடைக்கலம் தேடப்போகிறார். இலங்கைப்பிரச்சனையில் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று கூறிக்கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற ஒரு நாடகம் போட்டதும் அங்கு ஓடிப்போகப்போகிறார். இதுவரை இலங்கை தமிழர்களைச் சொல்லிக் குதித்ததெல்லாம் அவரின் சொந்த நாடகம் என்பதை தேர்தல் நாடகம் வெளிச்சம் போட்டு விட்டது.

           அணுசக்தி உடன்பாடு கருவாகி உருவாகி பிறப்பதுவரை உறவு கொண்டிருந்துவிட்டு பிறக்கக்கூடாது பிறந்தால் உறவை முறிப்போம் என்று வெளியில் வந்து பாஜக காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சவடால் அடித்தனர் போலிகள். தேர்தல் முடிந்தவுடன் கிடைத்த எம்பிக்களை வைத்துக்கொண்டு தான் பிரதமராக முடியுமா என்று பார்ப்பார், முடியாவிட்டால் பாஜக வுடன் எம்பிவிடுவார் என்று பாமரனுக்கும் தெரிந்திருந்தாலும் தலா இரண்டு இடத்துக்காக அம்மாவுடன் நின்று தொகுதி பேசுகிறார்கள்.

           முதலில் தனித்தே போட்டி என்றார், தேர்தலை புறக்கணியுங்கள் என்றார், பிறகு நான் கை காண்பிக்கும் ஆட்களுக்கு ஓட்டுப்போடுவீர்களா என்று உருகினார், இப்போது மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்று எடுத்துவிடுகிறார் கேப்டன். இவர் கேட்ட பத்துத்தொகுதிகளையும் அம்மாவோ, கலைஞரோ த‌ரச்சம்மதித்திருந்தால் கடவுளும் மக்களும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும்.

           இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்று சுற்றிச்சுற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு எங்கள் கூட்டணை ஆட்சிக்குவந்தால் இலங்கைப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு என்று பாயாசம் விற்கிறார் நாட்டாமை.

            கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத்தான் முஸ்லீம் சமுதாயம் ஓட்டளிக்கும் என்று கூறிக்கொண்டிருந்துவிட்டு, ஆறு சீட்டு தந்தால் தான் ஓட்டு என்று கட்சி கட்டிக்கொண்டு வந்து கேட்கும் மதக்கட்சிகள்.

          கடவுளை நம்பினால் நல்லது நடக்கும் என்று குறைந்த பட்ச நம்பிக்கையாவது கடவுள் மீது பக்தனுக்கு இருக்கிறது இதைப்போன்ற எந்த நம்பிக்கையாவது தேர்தல் மீது மக்களுக்கு இருக்கிறதா? (மருதையன் பேட்டி ஆனந்த விகடன்) ஆனாலும் இங்கு தேர்தல் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. உரிய விலையில்லாமல் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை, விளை நிலங்களை பறித்துவிட்டு கிராமங்களை நகரங்களை நோக்கி விரட்டிவிடும் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், அனைத்துத்தரப்பு மக்களையும் வாழவிடாமல் சாகடிக்கும் உலகவங்கிக்கட்டளைகள், இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிபணத்தையே செலவு செய்யும் பொருளாதாரக்கொள்கை இவை எதாவது மாறுமா இந்தத்தேர்தலால்? மாறப்போவதுமில்லை மாற்றவும் மாட்டர்கள். ஆனாலும் மக்களுக்காகவே வாழ்கிறோம், மக்களுக்காகவே உழைக்கிறோம், மக்களுக்காகவே இறக்கவும் தயார் என்று புளித்துப்போன வசனங்களை பேசிக்கொண்டு கோரைப்பற்களை மறைப்பதற்க்கு ஒரு இளிப்பை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள். என்ன செய்வதாய் உத்தேசம்?

          தேய்ந்து போன துடைப்பங்களையும், பிய்ந்து போன செருப்புகளையும் உபயோகம் இல்லாதவை என்று வீசிவிடாதீர்கள். அருமையான மிகப்பொருத்தமான பயன்பாடு ஒன்று உண்டு அவைகளுக்கு.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருத்துப்படங்கள் வினவு தளத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது
%d bloggers like this: