அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

manippu delhi naked struggle

 

ஊதாரிகளின் அம்மணம்

ஊக்கிப் பேசப்படும்

நாகரீகமாய்.

அந்த அம்மணங்களின் கூடுகளில்

சுயநலப் புழுக்கள் நெளியும்

அறுவெறுப்பாய்.

 

அம்மணம் இங்கே

பக்தியாக இருக்கும் போது

போராட்டமாய் கூடாதா?

 

லட்சக் கணக்கில் விவசாயிகள்

உயிர் துறந்த போது

செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு,

ஆடை துறந்த போதோ

உங்கள் வல்லரசுக் கனவு

அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.

 

இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி

மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள்

ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.

 

பன்றித் தொழுவத்தின் முடை நாற்றத்தை

அம்மணமாக்கினார்கள் எங்கள் விவசாயிகள்.

அந்த கிருஷ்ணன்களின் இளைய தம்பிகள் இன்று

கைது ஆடை அணிவிக்கிறார்கள்.

 

பத்து லட்சத்தில் ஒற்றை ஆடை அணிந்தவர்கள்

இந்த அம்மணத்தைக் கொஞ்சம் பார்க்கட்டும்

ஆடையின் அம்மணத்தை உடுத்திக் கொண்டு

அங்கத்தின் அம்மணத்தை மறைத்தவர்கள்

தங்கள் அரசியலின் அம்மணத்தை கொஞ்சம்

உற்றுப் பார்த்து தரிசிக்கட்டும்.

 

பாதி மயிர் மழிப்பில் தொடங்கி

தலை கீழாக நின்றது வரை

வடிவங்கள்.

அவற்றில் ஒன்று தானா அம்மணம்?

புழுத்துப் போன இந்த அரசமைப்பு

நம்மை அரவணக்காது என்றுணர்ந்த

குறியீடு அது.

 

37 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து விட்டு

கூச்சமே இல்லாமல்

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது

நேர்மையை பாதிக்கும் என்றார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை

பாசனப் பரப்புகள் அனைத்தும் சாக்கடை

வனங்களை அழித்ததால் மழைவளம் நோயாளி

பசுமைப் புரட்சி கொண்டு வேளாண்மைக்கு தூக்கு

இடுபொருள் விலை உச்சம்

விளைபொருள் விலை துச்சம்

இன்னும் .. .. இன்னும் .. .. .. ஆனாலும்

இந்தியா விவசாயநாடு என்கிறார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மரபணு மாற்று விதை என்றும்

பணப்பயிர் விவசாயம் என்றும்

ஏகாதிபத்திய அறுவடைக்காக

விவசாயி மூளையில் உழுதன அரசுகள்.

 

நம்மாள்வார்கள் போராடிக் கொண்டிருக்கையில்

சுவாமிநாதன்களை கொண்டாடின அரசுகள்.

 

மலட்டு விதைகள்

விவசாயிகள் ஆண்மையை நசுக்கிய போது

பி.டி க்கு எதிராக பேசவும் கூடாதென

சட்டம் போட்டு முந்தி விரித்தன அரசுகள்.

 

கடற்கரை தொடங்கி ஆற்றங்கரை வரை

ஒட்டச்சுரண்டி விற்றுக் குவித்த போது

கலவிக் கொண்டிருந்த அரசுகள்,

விவசாயி கரம்பை மண்ணை அள்ளிய போது

மானமே போனதாய் துடித்தன.

 

கோடைக்கு முன்னே பாலை தலை காட்டி

வைத்த நாற்றும் வதங்கக் கண்டு

மொத்தமும் போனதாய் மண்ணில் வீழ்ந்தான்.

குடிக்க தண்ணீர் மட்டுமல்ல

கண்ணீரும் வற்றிய போதும்

தாமிரவருணியில் உபரி நீர் என்று

பெப்சி கோலாக்களின் உதடுகளில்

முத்தமிட்டுக் கொண்டிருந்தன நீதிமன்றங்கள்.

 

இவற்றை அம்மணமாய் பார்க்காதவர்கள்

முகம் சுழிக்கிறார்கள்

விவசாயிகளின் அம்மணம் கண்டு.

 

பூமியை அவிழ்த்து உண்ணத் தந்தவர்கள்

ஆடையை அவிழ்த்து பார்க்கத் தந்திருக்கிறார்கள்.

வயிற்றிலடிக்கத் தெரியாத அவர்களுக்கு

அவிழ்க்க மட்டுமல்ல,

அடிக்கவும் தெரியும்.

வன்முறை என்று அலறாதீர்கள்.

அவர்கள் அடிக்கத் தொடங்கும் போது

கல்லறைக்குள்ளும்

உங்களால் செத்து விட முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்

 

சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது.

 

காவிரி ஆணையத்தை அதிகாரம் இல்லாத அமைப்பு என்று கன்னடம் தாக்கல் செய்த பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததற்காக நீதிமன்றம் பிரதமர் அலுவலகத்தை கேள்வி கேட்டிருந்தது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருத்தை முன்னர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். இப்படி பல் இல்லாத அமைப்பு என்று கூறுவது மெய்யாகவே அது அதிகாரமில்லா அமைப்பாக இருக்கிறது என்பதாலோ, அதிகாரம் கொடுத்து மாற்றியமைக்கப்ப்பட வேண்டும் எனும் ஆவலினாலோ அல்ல. அதுமட்டுமன்றி இரண்டு மாநில அரசுகளும், ஓட்டுக் கட்சிகளும் காவிரி நதிநீர் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதே கூட விவசாய நலனுக்காகவோ, காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை காப்பதற்காகவோ அல்ல. நாட்டிலிருக்கும் எந்தக் கட்சியானலும், மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையானாலும் தங்கள் ஓட்டு வங்கியின் சாதக பாதகங்களைக் கொண்டே நிலையெடுக்கின்றனவேயன்றி மக்கள் மீதான அக்கரை ஒருபோதும் ஒரு ஒட்டுக் கட்சியிலும் தொழிற்படுவதில்லை.  இதில் காவிரி சிக்கல் மட்டும் விலக்காகி விடுமா என்ன?

 

காவிரி நடுவர் மன்றம் தன் நீண்ண்ண்ண்ட விசாரணைக்குப் பிறகு 2007ல் தன் இறுதித்தீர்ப்பை வழங்கியது. ஓரளவு நியாயமான அந்தத் தீர்ர்பு சரிவர நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அரசோ, ஆணையமோ, நீதி மன்றங்களோ அவற்றை கண்காணிக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. கொஞ்சம் மழை பொழிந்து விட்டால் அனைவரும் மறந்து விடுவார்கள், பொய்த்தால் மட்டுமே கவலை. கன்னடத்தைப் பொருத்தவரை காவிரியில் தமிழ்நாட்டுக்கும் பங்குண்டு என்பதை ஏற்கவே மறுக்கிறார்கள். மிகையாக வரும் நீருக்கான வடிகாலாக மட்டுமே தமிழகம் அவர்களுக்குத் தெரிகிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காகவே கன்னட தேசிய வெறியை வளர்த்து வருகிறார்கள். பயிர்கள் வாடுகின்றன என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்த உடனேயே இந்த கன்னட அமைப்புகள் தங்கள் வெறித்தனங்களைத் தொடங்கி விடுகின்றன. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதும் போக்குவரத்தை நிறுத்தி பதட்டத்தை ஏற்படுத்தியதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?

 

தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் பீற்றீக் கொள்ளப்படும் நாட்டில் அண்டை மாநிலங்களுக்கிடையில் ஆற்று நீரைப் பகிர்வதில் பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆண்டை நாடுகளுடன், சிந்து, கங்கை ஆற்றுநீரை பகிர்வதில் பெரிதாக குழப்பம் ஏதும் வந்ததில்லை. சிந்து கங்கையை விட காவிரி, பெரியாற்றில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? சிக்கல் ஆற்று நீரில் இல்லை, தேசிய, பிராந்திய அரசியலில் இருக்கிறது. பல்பொடியிலுருந்து ஆடுமாடுகள் வரை இலவசமாய் கொடுக்கப்படுவதற்கும், மாநிலங்களுக்கிடையேயான சிறிய அளவிலான சிக்கல்கள் கூட தீர்க்கப்படாமல் தொடர்வதற்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அரசு நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது அரசுகளின் மீது திரும்பிவிடக் கூடாது என்பதை ஓட்டுக் கட்சிகள் மிகுந்த கவனத்துடனும், கவலையுடனும் பரிசீலிக்கின்றன. அதனால் தான் ஒருபக்கம் இலவசங்களைக் கொடுத்து அவர்களை ‘தாஜா’ பண்ண முயல்கிறது. மறுபக்கம் எந்த பிரச்சனையானாலும் அவைகளை எளிய முறையில் தீர்ப்பது குறித்து ஆலோசிக்காமல் அதை அப்படியே நீடிக்க வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன.

 

நதிநீர் ஆணையத்தை கூட்டக் கோருவது, நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது; எங்களுக்கே போதிய நீர் இருப்பு இல்லை என்பது, இனவெறி அமைப்புகளை தூண்டி விடுவது இவைகளெல்லாம் மாநில விவசாயிகள் மீது விவசாயத்தின் மீது கொண்ட அக்கரையினால் தமிழக, கன்னட அரசுகள் செய்யும் நடவடிக்கைகளா? இல்லை. விவசாயத்தின் மீதோ, விவசாயிகள் மீதோ அரசுகளுக்கு யாதொரு அக்கரையும் இருக்காது என்பதற்கு லட்சக் கணக்கில் தற்கொலை செய்து மாண்ட விதர்பா விவசாயிகள் சாட்சி. மெய்யாகவே அக்கரை இருந்திருந்தால் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளை ரியல் எஸ்டேட் முதளைகள் முழுங்கி ஏப்பம் விட அனுமதித்திருப்பார்களா? இருக்கும் நீர்நிலைகளை முறையாக மரமாத்து செய்யாமல் தூர்ந்து போக விட்டிருப்பார்களா? ஊக வணிகத்திலும் சூதாட்டத்திலும் முதலாளிகளை சுதந்திரமாய் கொள்ளையடிக்க அனுமதித்திருக்கும் அரசு, விளைவிக்கும் விவசாயிடமே விலையைத் தீர்மானிக்கும் உரிமையை வழங்கியிருக்க வேண்டும்.மாறாக போராடிய பிறகும் கூட ஆதார கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கின்றன அல்லது சொற்பமாக உயர்த்துகின்றன. விவசாயத்தின் மீதோ விவசாயிகள் மீதோ அக்கரை இருப்பது போல் நடிக்க எண்ணியிருந்தால் கூட இவைகள் நடந்திருக்காது. என்றால் வீராவேசமாக அறிக்கை விடுவதும் வழக்குத் தொடுப்பதும் விவசாயிகளின் நலனுக்கா?

 

ஆண்டுக்கணக்காக நீளும் பேச்சு வார்த்தைகள், பின் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுப்பது, பாதகமான தீர்ப்பு வந்தால் அதை மாற்றி சட்டமியற்றுவது தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது பின் முறையீடு பேச்சு வார்த்தை என செக்கு மாட்டுச் சுழலில் சிக்கிக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றன. மாநில அரசுகள் உள்நோக்கத்துடன் அட்டகத்தியுடன் சட்டப் போர் புரிகின்றன. மத்திய அரசோ அதே உள்நோக்கத்துடன் கள்ள மௌனம் சாதிக்கிறது. நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட கிடைக்கும் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று விளக்குகிறதேயன்றி, பற்றாக்குறையை எப்படி பகிர்வது என்று விளக்குவதில்லை. இதை வசதியாக பயன்படுத்திக் கொண்டு தான் கன்னட அரசு தொடர்ந்து போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் திறந்து விடவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறது. அதாவது போதிய தண்ணீர் இருப்பு இருந்து மேலதிகமாக கிடைத்தால் தான் தமிழகத்துக்கு திறந்து விடுவோம் என்பதுதான் அதன் பொருள். தெளிவாகச் சொன்னால் காவிரியில் வெள்ளம் வந்தால் திறந்துவிடும் வடிகாலாக மட்டுமே தமிழகம் இருக்க வேண்டும் என்று கன்னடம் எதிர்பார்க்கிறது. உங்கள் மிகைக்கான வடிகாலாக நாங்கள் இருக்க முடியாது என்று எதிர் முயற்சிகள் எடுக்கும் நியாய உணர்ச்சியோ, புவியியல் அமைப்போ தமிழகத்திடம் இல்லை. ஆனால் இவர்களின் இந்த அக்கப்போர்களில் தமிழக கன்னட விவசாயிகளின் பங்களிப்பு என்ன?

 

இரு மாநில விவசாயிகளும், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகத்திலும், திறந்து விடக் கூடாது என்று கன்னடத்திலும் போராடுகிறார்கள். இதை தங்களுக்கு இசைவானதாக தமிழ் தேசியவாதிகளும், கன்னட தேசியவாதிகளும் கருதிக் கொண்டு காரியமாற்றுகிறார்கள். அரசுகளும் இதற்கு ஊக்கமூட்டும் வகையில் இரண்டு மாநில விவசாயிகளையும் எதிரெதிரே நிற்க வைத்து மோதவிடும் நிலைக்கு தள்ளி வருகின்றன கன்னட விவசாயிகள் போதிய நீரின்றி இருக்கும் போது தமிழகம் தண்ணீர் கேட்பதாகவும்; அணைகளில் 75 நூற்றுமேனி தண்ணீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது என்றும் இரு மாநில அரசுகளும் விவசாயிகளிடம் பரப்புரை செய்து வருகின்றன. ஆனால், இரு மாநில அரசுகளும் கையாண்டு வரும் விவசாயக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும், அது விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதையும் விவசாயிகள் உணர வேண்டும். கன்னட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விட்டாலோ, அல்லது தண்ணீரை திறந்து விடாமல் அணைகளிலேயே தேக்கி வைத்து விட்டாலோ விவசாயம் செழித்து விடும் என்று கூறி விட முடியுமா? ஒட்டு மொத்தமாக எலிக்கறி திண்ணும் நிலையை நோக்கித்தான் விவசாயிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

 

தான் பெற்ற பிள்ளையைப் போல் பயிரை பார்த்துப் பார்த்து வளர்க்கும் விவசாயி இன்னொரு விவசாயிக்கு தண்ணீர் இல்லை என்று ஒருபோதும் கூறமாட்டான். ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் மட்டுமே பிரச்சனை இல்லை. அரசின் விவசாயக் கொள்கை விவசாயத்தையே சூரையாடுகிறது. அதை மறைப்பதற்குச் செய்யப்படும் அக்கப்போர்கள் தண்ணீர் பிரச்சனைகளை சூடேற்றுகிறது. இரண்டையும் இணைத்து மாநில எல்லைகளைக் கடந்து அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை வீரியத்துடன் முன்னெடுக்காதவரை விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் வாழ்வில்லை. 

 

தொடர்புடைய கட்டுரைகள்:

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்

தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு குடித்தால் காசு

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.

 

சில பத்தாண்டுகளுக்கு முன் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினால் வயிறு வலிக்கச் சிரித்திருப்பார்கள் அல்லது கண் சிவக்க கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அது தான் யதார்த்தம். இதில் ஒரு அடி மேலே எடுத்து வைத்து ஏழையை மிதித்து இன்னும் கீழே தள்ளுவதற்கு அரசு தயாராகி விட்டது. அதன் அடையாளம் தான் ”தேசிய நீர் கொள்கை 2012” இதன் முதன்மையான ஒரு அம்சம் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர் அந்த நிலத்தின் உரிமையாளனுக்கு சொந்தமல்ல என்பது. அதாவது ஒரு விவசாயி தன் நிலத்தில் தன் சொந்த செலவில் வெட்டிய கிணற்றிலிருந்து அவன் விருப்பப்படி வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாது.  அதற்கும் மீட்டர் வைத்து அளந்து காசு கொடுக்க வேண்டும். அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை தன் ஒட்டுக் கோமணத்தையும் அவிழ்த்துப் போட்டு அம்மணமாகக் காட்டி  ஆண்டுகள் பல கடந்து விட்டன. இந்த வரைவுச் சட்டத்தின் மூலன் தன் கோரைப் பற்களையும் இளித்துக் காட்டியிருக்கிறது.

 

”விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் விவசாயி தேவையின்றி நீரை வீணாக்குகிறான். அதனால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு விலை வைத்தால் தான் தண்ணீர் வீணாவது குறையும் தட்டுப்பாடும் நீங்கும்” இது இறக்குமதி செய்யப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங். ”இந்தியாவில் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர் தான். இதை மாற்றியமைக்க வேண்டும்” இது அமெரிக்க கைக்கூலி மாண்டேக் சிங் அலுவாலியா. மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த சாவி கொடுத்த பொம்மைகள் தான் மண்ணின் புதையல் எப்படி மக்களுக்கு சொந்தமில்லையோ அதேபோல் நிலத்தடி நீரும் அந்த மக்களுக்கு சொந்தமில்லை என்று ஒப்பிக்கின்றன. 

 

மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியானது போல் சிலருக்கு தோன்றலாம். ஆண்டாண்டு காலமாக குடியிருந்து கொண்டிருந்தாலும் அந்த நிலத்தின் அடியில் கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டால் மக்கள் பணத்தில் இயங்கும் இராணுவத்தைக் கொண்டே அந்த மக்களை விரட்டிவிட்டு அந்த கனிம வளத்தை முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்கும். அதாவது மண்ணின் அடியிலிருக்கும் புதையல் அந்த மண்ணை உடைய மக்களுக்கு சொந்தமில்லை, அது முதலாளிகளுக்கே சொந்தம். அதுபோலத்தான் நிலத்தடி நீரும், அது முதலாளிகளுக்கே சொந்தம். இதை சுற்றி வளைத்து சட்டத்தனமான சொற்களால் கூறுவது தான் “தேசிய நீர் கொள்கை 2012”

 

பூமியின் ஒட்டு மொத்த நீர் வளத்தில் 99 நூற்றுமேனி நேரடியாக குடிக்க முடியாத கடல்நீர். மீதமுள்ள நன்னீரில் 96 நூற்றுமேனி துருவங்களில் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய 4 நூற்றுமேனியைத்தான் மொத்த மக்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கட் தொகையுடன் ஒப்பிட்டால் இந்த நீரே உலக மக்கள் அனைவருக்கும் தாராளமாக போதுமானது. என்றால் ஏன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது? ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை முறையாக பராமரிக்காமல் பாழ்படுத்தியது, நிலத்தடி நீரை கணக்கின்றி தனியார் பயன்படுத்த அனுமதித்தது, வரன்முறையின்றி காடுகளை அழித்து மழை பொழிவை கெடுத்தது, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி மாசுபடுத்தியது போன்ற காரணங்களினால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவைகளைச் செய்தது யார்? எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி முதலாளிகளும், அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் அரசுகளும் தான்.

 

1990களில் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளின் முடிவால் அதுவரை அரைகுறையாக செய்துவந்த பாசனத்திற்கு நீர்வழங்குவது நீர்நிலைகளை பராமரிப்பது உள்ளிட்டவைகளை அரசு கைகழுவியது. 1960களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியோ வேதி உரங்களைக் கொட்டி மண்ணை மலடாக்கி விவசாயிகளை தண்ணீர் தாகமெடுத்து அலைய வைத்தது. அதனுடன் நீர்நிலைகள் பராமரிப்பு கைவிடப்பட்டதும், பணப்பயிரை ஊக்குவித்ததனால் அது அதிக தண்ணீரை கோரியதும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி கினறுகளையும் ஆழ்துளைக் கிணறுகளையும் விவசாயிகள் நாடினர். இப்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது என்றதும் அரசும் அறிவுத் துறையினரும் ஒருசேர விவசாயிகளை நோக்கி கை நீட்டுகின்றனர் இரக்கமின்றி.

 

தண்ணீர் தனியார்மயம் என்ற பெயரில் ஆறுகளை தனியாருக்கு தாரை வார்த்தது. அவர்கள் புட்டிகளில் அடைத்து, வறட்சியைப் பயன்படுத்தி விற்பனையை எகிறச்செய்து, இராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் புவியின் அடியாளம் வரை நிலத்தடி நீரை துரத்திச் சென்றது யார், விவசாயிகளா? முதலாளிகளா?

 

தொழிற்துறை முன்னேற்றம் என்ற பெயரில் ஆலைக் கழிவுகளை ஆறுகளிலும் நீர்நிலைகளிலும் கொட்டி அவைகளை நஞ்சாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

புதுப்புது ஆலைகளையும் கேளிக்கை விடுதிகளையும் கட்டுவதற்கென்று காடுகளை வெட்டியழித்து மழையளவை குறைத்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

ரியல் எஸ்டேட் பெருக்கத்திற்காக பல்லாயிரக் கணக்கான ஏரிகளையும்,  குளங்களையும் காணாமல் போக்கி அவற்றில் காங்கிரீட் காடுகளை உருவாக்கியது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

எந்திரக் கரங்களால் சுரண்டிச் சுரண்டி மணலள்ளி ஆற்றங்கரைகளை புண்களாக்கி ஆறுகளை வறண்டு போகச் செய்தது யார் விவசாயிகளா? முதலாளிகளா?

 

விவசாயி தண்ணீரை நிலத்தில் தான் பாய்ச்சினான். முதலாளிகளோ தன் தனிப்பட்ட லாபத்திற்காக எல்லா நீர் நிலைகளையும் அழித்து நாசமாக்கினார்கள்.  நாசமாகிய முதலாளிகளின் கைகளிலேயே நீர்வளத்தை தூக்கிக் கொடுத்து மக்களைச் சுரண்ட வழி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை. ஏற்கனவே குடிநீர் பகிர்வில் தனியாரை நுழைத்து, புட்டிகளில் அடைத்து விற்கப்படுவது தான் தூய்மையானது ஏனைய மூலங்களிலிருந்து கிடைப்பது அனைத்தும் தூய்மையற்றது என்று அவதூறு பிரச்சாரம் செய்து கோடிகளில் குளித்துவருகிறார்கள் முதலாளிகள். தற்போது எல்லாவகையிலும் தண்ணீர் ஒரு வியாபாரப் பண்டமே என வெளிப்படையாக அறிவித்து, இருப்பவன் காசு கொடுத்துக் குடி இல்லாதவன் தொண்டை வறண்டு செத்துப்போ என்று அந்த முதலாளிகளுக்கு மேலும் வசதி செய்து கொடுப்பது தான் தேசிய நீர் கொள்கை.

 

மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றாக விலக வேண்டும். அனைத்து வகைகளிலும் தண்ணீருக்காக வழங்கப்படும் மானியங்களை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக சமூகக் குழுக்களுக்கும், தனியார் துறையினருக்கும் அவற்றை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தேவையின்றி தண்ணீரை வீணாக்குவது குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்பது தான் தேசிய நீர் கொள்கை வரைவுத் திட்டத்தின் சாராம்சம். அதாவது, குடிக்கும் நீரில் சிறு குழந்தை கையை நுழைத்தாலே அடித்துத் தடுக்கும் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். அதை சரி செய்ய, புவியின் நீர் வளங்களையெல்லாம் நாசமாக்கிய முதலாளிகளின் கையில் கொடுக்க வேண்டும். பின்னும் அந்த அறிக்கை கூறுகிறது, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று. இதன் பொருள் இருக்கும் தண்ணீர் வளங்களையெல்லாம் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, மக்களே தண்ணீர் தாரளமாக இருக்கிறது தேவைப்படும் போது காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அந்த முதலாளிகளுக்கு விளம்பரம் செய்வது மாநில உள்ளாட்சி அமைப்புகளின் வேலை. அல்லது முதலாளிகளிடம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி அதை மக்களுக்கு கொடுக்க வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலிருந்து அரசு விலகி, தனியாரிடமிருந்து வாங்கி மக்களுக்கு கொடுக்கிறோம் எனும் அரசின் கொள்கையால் இன்று மக்கள் மின்வெட்டினாலும் மின் கட்டண உயர்வினாலும் அவதியுற்று வருகிறார்கள். இதே போன்ற நிலையில் தண்ணீரையும் தள்ளுவதற்குத்தான் துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

 

விவசாயத்தை வாழவைப்பதற்கு இலவச மின்சாரம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனால் அதிக நிதிச் சுமை ஏற்படுவதாகவும், அதை நீக்கினால் தான் நாடு முன்னேறும் என்றும் அரசுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன் விவசாயம் நடைபெறவில்லையா? விவசாயத்திற்கு பாசன வசதி செய்து தருவது அரசின் கடமை. அந்த அடிப்படையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி, பராமரித்து, பாதுகாத்து வந்த ஆறு, ஏரி,குளங்களை முதலாளிகளின் லாபத்துக்காக நாசமாக்கி விட்டு பாசனச் செலவுகளை தனிப்பட்ட விவசாயியின் தலையில் கட்டி, அதை மறைத்து ஏய்ப்பதற்குத்தான் இலவச மின்சாரம் என்றார்கள். இப்போது அதையும் ரத்து செய்வதற்கு நாட்டு முன்னேற்றம் என்று பசப்புகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

 

இதை தடுப்பதற்கு வீதியில் இறங்கி போராடுவது அல்லது நாக்கு உலர்ந்து செத்துப்போவது என்ற இரண்டே வழிகள் தான் மக்கள் முன் இருக்கிறது. எந்த வழியைதேர்ந்தெடுக்கப் போகிறோம் நாம்?

தொடர்புடைய பதிவுகள்:

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்

திருப்பூர் மிரட்டும் சாயப்பட்டரை முதலாளிகள்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட முடியுமா? தங்கள் பங்குக்கு அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு குறித்து கேரளா எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களும் உண்மைக்கு மாறானவை என்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தினால் முறியடிக்கவும் பட்டிருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு உட்பட தமிழகத்தின் முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் கேரளா அநீதியான முறையிலேயே மீறிவந்திருக்கிறது. என்றாலும் கூட இன்றைய நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரள மக்களிடம் இருக்கும் உணர்வு தமிழக மக்களிடம் இல்லை. தேனி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே மக்கள் போராடி வருகிறார்கள், ஏனைய பகுதிகளில் இன்னமும் இது செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஊடகங்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் கேரளாவில் செய்ததைப் போன்ற ஒருங்கிணைந்த பரப்புரையை தமிழக ஊடகங்களோ, இங்குள்ள ஓட்டுக்கட்சிகளோ செய்யவில்லை.

கொந்தளிப்பான இன்றைய நிலையிலும் கூட, கேரளா தண்ணீர் தர மறுக்கிறது என்பது போன்று தான் இங்கு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக புதிய அணை கட்டி தண்ணீர் தருகிறோம் என்று தானே கூறுகிறோம் மறுக்கவில்லையே என்று கேரளாவிலும் பேசப்பட்டு விருகிறது. ஆனால் இது தண்ணீர் பற்றாக்குறை குறித்த பிரச்சனையல்ல, அணையின் உரிமை யாருக்கு எனும் பிரச்சனை. இது புரியவைக்கப்படாததால் தான் அவர்கள் தான் தண்ணீர் தருகிறோம் என்று கூறுகிறார்களே எனும் எண்ணம் தமிழகத்தின் பிறபகுதிகளில் நிலவுகிறது.

1979ல் தொடங்கிய இந்தப் பிரச்சனையில் அடாவடி செய்யும் கேரளத்திற்கு சாதகமாக பல்வேறு கட்டங்களில் தமிழக ஒட்டுக் கட்சிகளால் விட்டுக் கொடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வசம் இருந்த இந்த அணையின் பாதுகாப்பு பணியை 1980ல் கேரள காவல்துறைக்கு மாற்ற அனுமதித்தார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து அணையை பலப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு கட்டுமான ஊழியர்களை தாக்குவது, பொறியாளர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வது, வாகனங்களை கைப்பற்றுவது என்று ஆண்டுக்கணக்கில் கேரள அரசுகள் செய்து வந்த இடையூறுகளுக்கு எதிராக தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி அரசுகள் சிறு முணுமுணுப்பைக் கூட காட்டியதில்லை. அவ்வளவு ஏன், ஒரு சட்டமன்ற தேர்தலின் போது கேரளாவில் போட்டியிட்ட ஜெயா தலைமையிலான அதிமுக தேர்தல் வாக்குறுதியில் முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியே ஓட்டுக் கேட்டது. 2006ல் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என நீதி மன்ற தீர்ப்பு வந்தபோது ஆட்சியில் இருந்த ஜெயா, அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்ப்புக்குப் பிறகு, கேரளா அளித்த வரைவுத் திட்டத்தை ஏற்று ஐவர் குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தியபோது அதை எதிர்த்திருக்க வேண்டிய கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அணையின் மீதான தமிழகத்தின் உரிமைகளை கேரளா கபளீகரம் செய்தபோது ஒற்றுமையாய் ஆதரித்த ஓட்டுக் கட்சிகள், இன்று கேரளத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்பதாக படம் காட்டுகின்றன.

நீதிமன்றங்களும் பலமுறை நியாயமற்று கேரள சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து, கேரளா செய்த மேல்முறையீட்டு மனுவை தானே விசாரித்தது எந்த சட்ட அடிப்படையில் வரும்? உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து தீர்ப்பை செல்லாக் காசாக்கியது கேரளா. இதை எதிர்த்து தமிழ்நாடு அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கையும், அதாவது கேரள சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்கலாமா? கூடாதா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய இந்த வழக்கையும், ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்ப்பை எதிர்த்து கேரளா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் ஒன்றாக இணைத்து ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியது எந்த சட்ட அடிப்படையில் சரியானது? இரண்டு வேறு வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்ததன் மூலம் உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை தானே குப்பைக் கூடைக்கு அனுப்பியது. இத்தனைக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்குகிறார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஆக கேரள அரசு, உச்சநீதி மன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் இணைந்து தான் முல்லை பெரியாறு பிரச்சனையை இன்று கொதி நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

திமுக வழக்கம் போல உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்களையும்(!) இந்த விசயத்தில் தமிழக அரசுடன் ஒத்துழைப்போம் என்று அரசியல் நாகரீகத்தையும்(?) காட்டிக் கொண்டிருக்கிறது. ஜெயாவோ தானே உண்ணாவிரதம் இருந்துவிடலாமா? அல்லது ஒரு நாள் பந்த் நடத்தலாமா? என்று சோதிடர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தமிழ்வாதக் கட்சிகளோ மலையாளிகளை அடி, மலையாளக் கடைகளை நொறுக்கு என்று இனவாதத்தை தொடங்கி விட்டார்கள். வைரமுத்து போன்ற உலக மகா கவிஞர்களுக்கு சோவியத் யூனியன் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலிகள் மாநிலத்திற்கு ஏற்றார்ப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ’சவுண்டு’ மட்டுமே விடும் இளங்கோவன் இப்போதும் உம்மன் சாண்டியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை ஏன் அவர் சோனியா காந்தியிடம் கூறக் கூடாது? அணையை உடைக்க கம்பிகளுடன் வெறித்தனத்தைக் காட்டிய கேரள பாஜகவை தண்டிக்கக் கோரி பாஜக தலைமையிடம் தமிழக பாஜக வற்புறுத்தலாமே, இந்தப் பிரச்சனையை தோற்றுவித்து எண்ணெய் ஊற்றி வளர்த்து வரும் கேரள தோழர்(!)களிடம் இங்குள்ள சீபீஎம் மேடையில் சர்வதேசியம் பேசிக் கொண்டும் மக்களிடம் பிராந்திய இனவெறியை கிளப்பியும் கம்யூனிச வித்தை காட்டுவது குறித்து விமர்சனம் வைக்கலாமே. அதைவிட்டு கேரளாவில் அணையை உடை என்றும் தமிழ்நாட்டில் அணையை பாதுகாப்போம் என்றும் இந்தக் கட்சிகள் வசனம் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?

இவைகளுக்கு மாறாக, தேனி பகுதியிலுள்ள விவசாயிகள் புதிய எழுச்சி மிகுந்த வரலாற்றை படைத்திருக்கிறார்கள். எழுபதாயிரம் விவசாயிகள் வரை திரண்டு, ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து அணையைக் கைப்பற்ற கிளம்பி விட்டார்கள். குமுளி வழியான கேரள எல்லையை அடைத்து போக்குவரத்தையும், கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களையும் தடை செய்தது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவைப் பொருத்தவரை ஓட்டுக் கட்சிகளின் நச்சுப் பரப்புரைகள் ஊடக பலத்தினாலும், தொடர்ச்சியான முனைப்பினாலும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்திருக்கிறது. மட்டுமல்லாது, அணை உடைந்து பல லட்சம் மக்கள் செத்து மடிவதைப் போன்ற குறுந்தகடுகள் வரைகலை உத்திகளுடன் தயாரிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்டதால் பீதியடைந்திருக்கும் மக்கள் இயல்பாகவே கேரள ஓட்டுப் பொறுக்கிகளின் கோரிக்கைகளுடன் ஒன்றிப் போய்விட்டார்கள். இந்த மக்கள் ஆதரவு எனும் பலம் இருப்பதுதான் கேரள ஓட்டுக் கட்சிகளின் சண்டித்தனங்களுக்கு தடமேற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தேவையற்ற பயமும், புரிதலற்று ஓட்டுக் கட்சிகளின் பின்னே அணிவகுப்பதும், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு உணர்த்துவதற்கும், கேரள ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுமாயின் குமுளி, களியக்காவிளை, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை நிறுத்தி காய்கறி உள்ளிட்டு பொருட்களின் தடையை ஏற்படுத்தலாம். ஆனால், அது ஒருபோதும் இனவாத அடிப்படையில் பயன்படுத்தப்படக் கூடாது. கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கே 500 டி.எம்.சி க்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

பிரச்சனை என்று வந்தால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுவதையும், கமிட்டி அமைத்து ஆறப் போடுவதையும் வழமையாக வைத்திருக்கும் மத்திய அரசு, அதை மீறிப்போகும் மாநிலத்தை வழிக்கு கொண்டுவர என்ன செய்திருக்கிறது இதுவரை? அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி பின் வழக்கு தொடுத்து தீர்ப்பு வந்தபின் அதையும் செயல் படுத்தாமல் மீறும் மாநிலத்தை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், பாதிக்கப்பட்ட மாநிலம் என்ன செய்வது? முன்னர் வந்த தீர்ப்பை கழிப்பறை காகிதமாக்கியது போல் கேரளா இனியும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? புவியியல் ரீதியாக கடைமாநிலத்தில் வாழும் மக்கள் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டுமா? மாநிலங்களிடையேயான பகிர்வில் பொது ஒழுங்கை மீறும் அரசுகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் கேரளாவைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கக் கூட தமிழ்நாட்டல் முடியவில்லையே ஏன்? ஏனென்றால், தேவையான உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லை. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே பிரிந்து போகும் உரிமையல்ல. எந்த மாநிலமும் எல்லை மீறாதிருக்கவும் மீறும் போது அதை ஒழுங்கிற்குள் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

தேனி பகுதியில் விவசாயிகளிடம் ஓட்டுக்கட்சிகளை புறந்தள்ளி ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவ வேண்டும். அது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை நோக்கி நகர வேண்டும். இப்போதே பிற பகுதிகளில் வணிகர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவைகளை ஆதரிப்பதும், அதை இலக்கு நோக்கி வளர்த்தெடுப்பதுமே நம்முன் உடனடிக் கடமையாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லை பெரியாறு அணை பிரச்சனையும் தீர்வும் – ஆவணப்படம்

நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்


காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வள‌வு தான் இவர் வழக்கம்போல் கடிதம் எழுத, அவர் கூட்டம் கூட்டி தண்ணீர் இல்லை என்று அறிவிக்க, சுபம். மக்களுக்கு துரோகம் செய்வதில் விஞ்சி நிற்பது நீயா நானா என்று கருணாவிற்கும் ஜெயாவிற்கும் இப்போது அறிக்கைப்போர். மக்களுக்கோ அக்கப்போர்.
1800களின் பிற்பகுதியிலிருந்தே காவிரியின் தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தொடங்கிய‌ சிக்கல் இன்னும் நீடிக்கிறது. அன்டை நாடுகளுடனான ஆற்று நீர் ஒப்பந்தங்களே சிக்கலின்றி செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாட்டிற்குள் ஓடும் ஆற்று நீரை பகிர்வதில் அப்படி என்ன தீர்க்கமுடியாத சிக்கல்? கன்னடப் பகுதியில் தொடங்கி தமிழகப்பகுதியில் கடலில் கலக்கும் இந்த ஆற்று நீருக்கு இரு மாநிலங்களும் முழு உரிமை கோருவதால் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் கன்னடத்தில் காவிரியின் தலைப்பகுதி அமைந்திருப்பதால் தனக்கு மிஞ்சியதுதான் தமிழகத்திற்கு என கன்னடம் அடாவடியாக நடந்துகொள்வது சிக்கலை தீவிரப்படுத்துகிறது.
1892, 1924 ஆண்டுகளில் ஆற்று நீரைப் பகிர்வதில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருந்தும் தீர்க்கப்படாமல் காவிரிப்பிரச்சனை தொடர்ந்துகொண்டிருப்பதில் முக்கியப்பங்கு  காங்கிரஸுக்கு உண்டு. தேசியக் கட்சியான காங்கிரஸ் மாநில ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் கன்னடத்திலும் எதிரெதிரான நிலைப்பாட்டைக் கொண்டு பிரச்சனையை இழுத்தடித்து வளர்த்தது. மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பிறகு இரண்டு மாநிலங்களுமே ஒப்பந்தத்தை மதிக்காமல் தங்கள் மாநில பாசனப்பரப்பை அதிகரித்துக்கொண்டே சென்றன. 1924 ஒப்பந்தத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட மதிப்பீட்டைவிட அதிகமாக கிடைக்கும் தண்ணீரை எந்த விகிதத்தில் பகிர்ந்துகொள்வது என்பதை மறுபரிசீலனை செய்துகொள்ள‌ வேண்டும் எனும் விதியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் 1965க்குப் பிறகு 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நீர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் மாறுபரிசீலனை எனும் பேச்சுக்கே இடமின்றிப் போனது. நீர் பற்றாக்குறை பெரிதாக உருவெடுத்ததும் இரு மாநிலங்களும் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிரெதிரான நிலைப்பாட்டைக் கொள்ள ஆரம்பித்தன.
இந்தச் சிக்கலைத்தீர்ப்பதற்கென்று 1990ல் காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. அது இடைக்கால தீர்ப்பாக ஆண்டுக்கு 205 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தும், கன்னடம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெளியேறும் நீரை கணக்கிட்டு தீர்ப்பின்படி நீர் வழங்கிவிட்டதாக ஏய்த்துவந்தது. இந்த நிலையில் தான் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2007ல் இறுதித்தீர்ப்பு வந்தது. இதில் கன்னடத்தின் அடாவடிக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் கொடுக்கவேண்டிய நீரின் அளவைக்குறிப்பிட்டு மொத்தமாக அளவிடுவதை மறுத்திருந்தது. ஆனாலும் வழக்கம் போலவே ஒப்பந்தங்களையும் தீர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு அந்தந்த நேரத்து ஓட்டு அரசியல் நிலமைகளுக்கு ஏற்ப செயல்பட்டுக்கொண்டிருப்பதால் சிக்கல் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவிரி நீர்ப்பிரச்சனை முன்னணிக்கு வந்திருந்த ஒரு நிலையில் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்தார். இரண்டு முறையாக ஜெயலலிதா ஆட்சியிலிருந்த பத்தாண்டுகளில் ஓரிரு ஆண்டுகளைத்தவிர ஏனைய ஆண்டுகளில் இடைக்காலத்தீர்ப்பான 205 டிஎம்சி நீருக்கும் குறைவாக தண்ணீர் வந்திருந்தும் அதற்காக கன்னடத்தை நிர்ப்பந்திக்கவோ நீரைப் பெறவோ முயலாத ஜெயலலிதா, அதே பிரச்சனைக்கு இன்று கருணாநிதியை குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசுக்கு உண்ணாவிரதமிருந்தவர் இன்று மறந்தும் கூட மத்திய அரசை கைநீட்ட மறுக்கிறார், ஏன்?

இன்று தான் பிறப்பதற்கு முன்பிருந்தே காவிரி சிக்கலுக்காக தான் செய்தவற்றைப் பட்டியலிடும் கருணாநிதி, புள்ளம்பாடி கால்வாய்த்திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களுக்கு உபரி நீரைத்தான் பயன்படுத்துவோம், அதிக நீர் கோரமாட்டோம் என்று மைய அரசின் திட்டக்கமிசனிடம் உறுதியளித்ததை குறிப்பிட மறந்ததேன்? ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு பதில் சொல்ல செலுத்தும் கவனத்தை இறுதித்தீர்ப்பை அமல்படுத்த கன்னடத்தை வற்புறுத்தவைக்க மைய அரசிடம் முயற்சியெடுக்காததேன்? இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடுத்துக்கொள்கிறார்களேயென்றி, இதில் மைய அரசுக்குண்டான பொருப்பை செயல்படுத்த மறந்தும் கோரவில்லை. காரணம், எதிர்வரும் தேர்தலில் இருவருமே காங்கிரஸின் தயவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதுதான் இருவருக்கும் முக்கியமானதேயன்றி காவிரி நீரோ விவசாயிகளோ அல்ல.

காவிரியின் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியாமல் பாதிக்கப்படும் பரப்பைவிட ஏரி குளங்கள் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்காததால் வெள்ள‌க்காலங்களில் நீரில் மூழ்கி அழுகும் பயிர்களின் பரப்பு அதிகம். இதற்கு யாரைக் குறை சொல்வது? விவசாயிகளின் இரட்சகர்களைப்போல் அறிக்கைவிடும் இருவரும் தத்தமது ஆட்சிக்காலங்களில் விவசாயிகளை ஊடறுக்கும் தனியார்மய தாரளமய கொள்கைகளை தலையிலேற்று செயல்படுத்தியவர்கள்தானே, செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தானே. விவசாயிகள் மீது இப்போதென்ன அக்கரை? இவர்களின் லாவணிக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருப்பது தமிழர்களின் பிறப்புரிமையா என்ன?

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் பிரச்சனைகளை பயன்படுத்திக்கொள்வார்களேயன்றி ஒருபோதும் அதை தீர்ப்பதற்கு முனையமாட்டார்கள். அதற்கு விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும். மாநிலங்களுக்கு பிரிந்து போகும் அதிகாரத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையுள்ள கூட்டிணைவு வேண்டும். அப்போதுதான் தீர்வை நோக்கிய திசையில் நகரமுடியும்.


அமெரிக்க ‘கோக்’கை அடித்து விரட்டுவோம்!

கோக் தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு, சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து, தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரையும் குழாய் மூலம் கொண்டு வந்து தரவிருக்கிறது தமிழக அரசு. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒண்ணேகால் பைசா.

இதுவன்றி அங்கே ஆழ்துளைக் கிணறுகளை இறக்கி விருப்பம் போல நிலத்தடி நீரைச் சூறையாடவுமிருக்கிறது கொக்கோ கோலா நிறுவனம். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் குடிநீரும் பாசனநீரும் இல்லாமல் தவிக்கும்போது, அந்த மண்ணுக்குரிய தாமிரவருணித் தண்ணீரை லிட்டர் ஒண்ணே கால் பைசாவுக்கு வாங்கி 12 ரூபாய்க்கு விற்று மக்களைக் கொள்ளையிடப் போகிறது கொக்கோ கோலா. கட்டபொம்மனும், பூலித்தேவனும், சுந்தரலிங்கமும், வ.உ.சி.யும் பிறந்த மண் மறுகாலனியாதிக்கத்தால் உறிஞ்சப்படவிருக்கிறது.

கோக் என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம்.

“உலகமே தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள நம் பானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்” என்பது அந்த நிறுவனத்தின் இலட்சிய வாசகம். 200 நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் கோக், தனது லாபத்தில் 70 சதவீதத்தை அமெரிக்காவுக்கு வெளியிலிருந்துதான் கொள்ளையிடுகிறது. ஒவ்வொரு நொடியும் கோக் நிறுவனத்தின் ஏதாவதொரு பானம், உலகெங்கிலும் 13,000 தொண்டைகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது. “கோக்கினால் நனைக்கப்பட்ட தொண்டையிலிருந்து அமெரிக்க எதிர்ப்புக் குரல் எழும்பாது’ என்பது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால், கோக் அடிமைகளின் பானம்!

கோக் ஆக்கிரமிப்பின் சின்னம்.

கேரளத்தின் நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தை அது இரண்டே ஆண்டுகளில் சுடுகாடாக்கியது; அம்மக்களைக் குடிநீருக்காக அன்றாடம் 5 கி.மீ. அலையச் செய்தது. உள்ளூர் மக்கள் தாகத்தால் தவித்தாலும், விவசாயம் அழிந்தாலும், “அந்தக் கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சும் உரிமை அமெரிக்கக் கம்பெனிக்கு உண்டு” என்று நீதிமன்றத்தைச் சொல்ல வைத்ததன் மூலம், தான் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்பதை நிரூபித்திருக்கிறது கோக்.

கோக் ஒரு கொலைகாரன்.

தனக்குத் தண்ணீர் தந்த பிளாச்சிமடா மக்களின் மண்ணில் நஞ்சை வைத்திருக்கிறது கோக். நச்சுக் கழிவுநீரால் விளைநிலத்தை மாசுபடுத்தியது மட்டுமல்ல, கொடிய இராசயனக் கழிவுகளை “இயற்கை உரம்’ என்று விவசாயிகளிடம் விநியோகித்து அவர்களுடைய மண்ணையே கொன்றிருக்கிறது. கொலம்பியாவில் தன் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்களை, கூலிப் படை வைத்துக் கொன்று குவித்திருக்கிறது.

 தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்! உயிரின அழிவுக்குத் தண்ணீர் வியாபாரம்!

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்தமுதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை. புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணீரை வழங்குகிறது.

உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர். மனித உடலின் பெரும்பகுதி தண்ணீர். தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை, உயிரில்லை. மண்ணும் காற்றும்கூட தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர். “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற முதுமொழியின் பொருள் இதுதான்.

பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டு கூட இல்லை. காரணம், அங்கெல்லாம் தண்ணீரில்லை. நீரின்றி அமையாது உலகு! இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. அது எந்தவொரு தேசத்தின் தனிச் சொத்துமல்ல; உலகின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு.

அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காகத் தனிஉடைமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி! சமூக விரோத, மக்கள் விரோதக் கொடுஞ்செயல்!

தண்ணீர் வியாபாரம்: ஒரு பயங்கரவாதம்!

ஆனால், அத்தகைய அநீதிதான் இன்று கோலோச்சுகிறது. தாகம் தீர்க்கும் தண்ணீர், லாபம் பார்க்கும் சரக்காக விற்பனை செய்யப்படுகிறது. “காசுள்ளவனுக்குத்தான் தண்ணீர்’ என்ற கயமை கடைகளில் சரம்சரமாகத் தொங்குகிறது. பாட்டில்களாக அணிவகுத்து நின்று பணம் காசில்லாத ஏழைகளை எள்ளி நகையாடுகிறது.

நம்மில் பலர் பாக்கெட் தண்ணீருக்குப் பழகி விட்டனர். பாலைவிட அதிக விலை விற்கும் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் பலர் பழகிவிட்டார்கள். மற்ற நுகர் பொருட்களை விலை கொடுத்து வாங்குவதைப் போல கேன் கேனாகத் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதை சகஜமாகக் கருதுகிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் இது கட்டாயம் தேவையான தென்றும், தவிர்க்க முடியாததென்றும் கருதுகிறார்கள்.

“குழாய்த் தண்ணியும் லாரித் தண்ணியும் பிடிப்பதற்காகக் கால் கடுக்கக் காத்து நிற்க வேண்டும். பிறகு அதைக் கொண்டு வந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தத் துன்பத்துக்கு கேன் தண்ணியையே காசு கொடுத்து வாங்கிவிடலாம்; வேறென்ன செய்வது?” என்று நடுத்தர வர்க்கத்தினர் இதை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். தரமான நல்ல குடிநீரை ஓசியிலா தரமுடியும்? காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று தண்ணீர் வியாபாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது பணத்திமிர் கொண்ட வர்க்கம்.

தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பதும் அதற்காக பொதுச்சொத்தான நீர்வளங்களையும் நீராதாரங்களையும் தனியார் கொள்ளைக்குத் திறந்து விடுவதும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறோம். நமது நீராதாரங்களை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு நாசமாக்கி, மண்ணையும் நஞ்சாக்கி, எல்லாத் தாவரங்களையும் உயிரினங்களையும் ஒழித்துக் கட்டும் பயங்கரவாதம்தான் தண்ணீர் வியாபாரம் என்று குற்றம் சாட்டுகிறோம்.

தண்ணீர்: இன்னொரு பண்டமல்ல!

ஏனென்றால், உலகின் நீர் ஆதாரம் வரம்புக்குட்பட்டது. கடல்நீர் போக, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மனிதன் பயன்படுத்தத்தக்க நீரின் அளவு, மொத்த உலக நீர் ஆதாரத்தில் 2.5 சதவீதம்தான். துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளைக் கழித்து விட்டால், நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு 0.3 சதவீதம் மட்டும்தான். இடத்திற்கு இடம் மழையின் அளவு மாறினாலும், மொத்தத்தில் உலகளவில் பெய்யும் மழை ஏறத்தாழ ஒரே அளவாகவே இருந்து வருகிறது. எனவே, நமக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு உயராது, உயர்த்தவும் முடியாது; ஏöனன்றால், அது இயற்கையின் கொடை. அது வரம்புக்குட்பட்டது.

அரிசியோ, துணியோ விற்றுத் தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உற்பத்தியின் அளவையும் உயர்த்தலாம். ஆனால், தண்ணீரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது; அளவையும் கூட்ட முடியாது.

தண்ணீருக்கு மாற்று இல்லை. அரிசி இல்லையென்றால் கோதுமை உண்ணலாம். சில நாட்கள் பட்டினியும் கிடக்கலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்தும் செல்லலாம். ஆனால், தண்ணீர் இல்லையென்றால் உயிர்வாழ முடியாது. தண்ணீருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை.

தண்ணீரில்லையென்றால் புல், பூண்டு, மரம், பச்சை இல்லை; புழு, பூச்சி, ஊர்வன, நடப்பன, பறப்பன எதுவும் இல்லை; மனிதனும் இல்லை; உணவு உற்பத்தி நின்று மண்ணே புழுதிக் காடாய் பாலைவனமாய் மாறிவிடும். ஈரப்பதம் வறண்டு காற்றே அனல்காற்றாகும். தண்ணீரில்லையேல் எதுவுமில்லை.

எனவேதான், தண்ணீரை எல்லா நுகர் பொருட்களையும் போன்ற இன்னொரு நுகர் பொருளாகக் கருதக்கூடாது என்கிறோம். தண்ணீரின் அருமையையும் மதிப்பையும் புரிந்தவர்கள் அதனை விற்பனைப் பண்டமாக்கும் கொடுமையை அனுமதிக்கக் கூடாது என்கிறோம்.

தண்ணீர்க் கொள்ளையர்கள்

சென்னையில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் வியாபாரிகள் முதலாளிகள் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை தாம்பரம் வட்டாரத்தில் 20 கிராமங்களிலிருந்து மட்டும் 20,000 லாரிகள் அன்றாடம் தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று கூறுகிறது, சென்னை வளர்ச்சி ஆய்வுக்கழகம் (Mஐஈகு) என்ற அரசுசார் நிறுவனத்தின் ஆய்வு. திருவள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமங்களிலிருந்து மட்டும் அன்றாடம் 1000 லாரிகள் தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும், பாலாற்றின் கரைப்பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.

தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள்; இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர்; பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.

யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.

நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.

இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.

நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான்!

நிலத்தடி நீர் அழிந்தால்?

குழாய்க் கிணற்றின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் தன்மை மாறுகிறது. அத்தனை ஆழத்தில் கிடைக்கும் நீர், உப்பும் வேதிப் பொருட்களும் நிறைந்த கடினநீராகி விடுகிறது. தண்ணீர்த் திருடர்கள், “அற்ற குளத்தின் அருநீர்ப் பறவைகள்’ போல அடுத்த இடம் தேடிப்பறந்து விடுகிறார்கள்.

அந்த வட்டாரத்து மக்கள் எங்கே ஓடுவது? சுற்று வட்டாரம் முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக, கடின நீராக மாறி விடுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்கரையிலேயே நல்ல தண்ணீர்க் கிணறுகள் இருந்த காலமும் உண்டு. இன்றோ கடலோரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் கடல் மட்டத்தைக் காட்டிலும் கீழே போய்விட்டதால் மக்களின் குடிநீர்க் கிணறுகள் உவர் நீர்க் கிணறுகளாகி விட்டன.

வேறு வழியில்லாத இடங்களில் இத்தகைய தண்ணீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்; சமைக்கிறார்கள். அளவுக்கு அதிகமான வேதிப் பொருட்கள் அத்தண்ணீரில் கலந்திருப்பதால் பல்நோய், குடற்புண், ஈரல் நோய், தோல் நோயென வகைவகையான நோய்களுக்கு மக்கள் இரையாகிறார்கள். ஒரு வட்டாரம் முழுவதும் குறிப்பிட்ட ஒருவகை நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டின் 72 சதவீத நிலத்தடி நீர் குடிக்க லாயக்கற்றது என்றும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாய எல்லைக்குச் சென்றுவிட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. ஆனால் தண்ணீர்க் கொள்ளையோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலை நீடித்தால் ஏரி, குளம் அனைத்தும் வறண்டு நாடே பாலைவனமாகும். உணவு உற்பத்தி நின்றுவிடும். கால்நடைகள் மடிந்துவிடும்; அல்லது அடிமாட்டுக்கு விற்கப்பட்டே அழிந்துவிடும். பனைமரமும் பட்டுப்போக வெப்பக் காற்று வீசும் மண்டலமாக நாடே மாறிவிடும்.

லாபவெறி பிடித்த தண்ணீர் முதலாளிகள் எண்ணிக்கையில் சில ஆயிரம் மட்டும்தான். விவசாயிகளோ பல கோடிப்பேர். நீர்வளம் கொழிக்கும் பகுதிகளில் அவர்களும்தான் தண்ணீர் எடுத்தார்கள். முப்போகம் சாகுபடியும் செய்தார்கள். அதனால் நீர்வளம் அழியவில்லை. ஏனென்றால், அவர்கள் பாசனத்திற்குத்தான் தண்ணீர் எடுத்தார்கள் பணத்திற்கு விற்பதற்காக அல்ல; விவசாயி எடுத்த தண்ணீர் ஒரு துளி கூட வெளியே சென்றதில்லை. அவ்வளவையும் மண்ணில் பாய்ச்சினார்கள். ஆவியானது போக அனைத்தும் நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட்டது. இதனால் பருவமழை தவறிய காலங்களிலும் கூட நிலத்தடி நீர் வறண்டு விட வில்லை.

தண்ணீர்க் கொள்ளையர்களோ மழைநீரை மண் உறிஞ்சும் அளவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இயற்கையின் அற்புதங்களான நீர்த்தாங்கிகள் (ச்ணுதடிஞூஞுணூண்), மேற்பரப்பு நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமித்து வைத்திருக்கின்றன. நீர்த்தாங்கிகள் சேமித்து வைத்திருக்கும் அந்த நீரையும் சப்பி எடுத்து விடுகிறார்கள், தண்ணீர் கொள்ளையர்கள். நூற்றாண்டுகளாய் இயற்கை சேமித்து வைத்திருக்கும் நீர்வளத்தை நீயா, நானா என்று போட்டி போட்டுச் சூறையாடுகிறார்கள்.

இவர்களுடைய பணத்தாகத்திற்கு இயற்கையாலும் ஈடு கொடுக்க முடிவதில்லை. வெள்ளமாய் மழை பெய்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவதேயில்லை. இனி பிளாச்சிமடா கிராமமே மூழ்குமளவுக்கு மழை பெய்தாலும், கொக்கோ கோலாவால் பலநூறடி ஆழத்திற்கு வீழ்த்தப்பட்ட நீர்மட்டம் அவ்வளவு லேசில் மேலெழும்ப முடியாது. சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகமான அளவுக்கு சென்னை நகரில் மழை பெய்த போதிலும் நிலத்தடி நீரின் மட்டம் கால் அங்குலம் கூட உயரவில்லை என்கிறது நிலத்தடி நீர் ஆய்வுக் கழகம். மண்ணின் உறிஞ்சும் திறன் இயற்கை விதியை விஞ்சுவதில்லை. லாபவெறி பிடித்த முதலாளிகளோ, தாங்கள் தோற்றுவிக்கும் இயற்கைப் பேரழிவு குறித்துச் சிறிதும் அஞ்சுவதில்லை.

எனவேதான் சொல்கிறோம். தண்ணீர் வியாபாரம் என்பதை இன்னொரு நுகர்பொருள் வியாபாரம் என்று கருதாதீர்கள். அது உலகின் எல்லா வளங்களையும் உயிர்களையும் அழிக்கும்; உயிரின வாழ்க்கைச் சூழலின் சமநிலையைச் சீர்குலைக்கும். இதனால் சுனாமி போன்ற திடீர்ப் பேரழிவுகளும் தோன்றக்கூடும். எனவேதான், தண்ணீர் வியாபாரமென்பது பேரழிவு ஆயுதங்களை விற்பதற்குச் சமமானது. இது மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதம் என்று கூறுகிறோம்.

எண்ணெயை விஞ்சும் பணம் தண்ணீரில்!

நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்து வருகின்றது. எனவே, தண்ணீரை விற்றால் கொள்ளைலாபம் நிச்சயம் என்று ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் அண்மைக் காலமாக தண்ணீர் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று உலக மக்கள் தொகையில் 5% பேர் மட்டும்தான், பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தண்ணீர் வாங்குகின்றனர். இந்த வர்த்தகத்தின் மதிப்பென்ன தெரியுமா? இன்று நடக்கும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பில் 50 சதவீதம். எனவேதான், சென்ற நூற்றாண்டில் இக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கான பெரும் ஆதாரமாக எரி எண்ணெய் இருந்ததைப் போல, 21ம் நூற்றாண்டில் தண்ணீர் இருக்கும் என உலக முதலாளிகள் கணக்கு போடுகின்றனர். எனவே, தண்ணீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவது அதற்கான சந்தைகளைக் கைப்பற்றுவது ஆகியவற்றிற்கான போட்டியும் முரண்பாடும் தீவிரமடைந்து தண்ணீருக்காகவே யுத்தங்கள் வெடிக்கலாம் என்றும் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகத்திற்கே பேராபத்து உண்டாக்கக்கூடிய இந்தத் தண்ணீர் வியாபாரம் நமது பண்பாட்டிற்கும் மரபிற்கும் எதிரானதாகும். நமது நாட்டில் அரசாங்கங்களும் ஊர்ப் பஞ்சாயத்துக்களும் மக்களுக்கும், ஏன், ஆடு மாடுகளுக்கும் கூட குடிநீர்த் தொட்டி கட்டி தண்ணீரைத் தானமாக வழங்கி வந்துள்ளன. பாசனத்திற்காக அணைகள் கட்டுவது, ஏரி, குளங்கள், கால்வாய்கள் வெட்டுவது, அவற்றை மராமத்து செய்வது என்பது அரசர்களின் முக்கியக் கடமையாக இருந்திருக்கிறது. தண்ணீரைத் தாயாக மதித்துப் பாதுகாத்து வருவதும் நமது பண்பாடு!

தண்ணீரைச் சமூகச் சொத்தாக மதிப்பது நம் மரபு. அதை எல்லா உயிரினங்களின் தாகம் தீர்க்க இலவசமாக வழங்குவதும் நம் பண்பாடு. தண்ணீரை வாங்கவும் விற்கவுமான பண்டமாக மாற்றியிருப்பதன் மூலம் நமது மரபையும் பண்பாட்டையுமே கேவலப்படுத்துகிறது தண்ணீர் வியாபாரம்.

பண்பாட்டின் ஈரமே உலர்ந்து விடும்

தாகம் கொண்டவர்கள் தண்ணீர் கேட்பதும், கேட்டவுடன் தண்ணீர் வழங்கி, தாகம் தீர்க்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வதும் மக்கள் பண்பாடு. இன்றோ, நா வறண்டு தவித்தாலும் பாட்டில் தண்ணீர் வைத்திருப்பவரிடம் கேட்கத் தயங்குகிறோம். கட்டிடத் தொழிலாளர்களும், சாலைப் பணியாளர்களும் அருகிலுள்ள வீடுகளில் “ஒரு செம்பு தண்ணி’ கேட்பதும், வீட்டுப் பெண்கள் தயங்காமல் தருவதும் நாமறிந்த பண்பாடு. இன்றோ, குடிநீரை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்போர் கொடுக்கத் தயங்குகிறார்கள். “இல்லை’ என்று சொல்லவும் கூசுகிறார்கள். ஆனால், நாளாக நாளாக நமது பண்பாட்டில் ஈரம் உலர்ந்து விடும்; ஆயிரம் குறைகளுக்கும் அப்பாற்பட்டு மனித உறவுகளில் எஞ்சியிருந்த மென்மை இறுகிவிடும்; மனிதாபிமான இழை அறுந்துவிடும்; “இல்லை’ என்ற சொல் நம் வாயிலிருந்து தெறித்து விழும்.

“இல்லை’ என்ற இந்தச் சொல் தண்ணீருடன் முடிந்து விடாது. சக மனிதனுடன் சகஜமாகப் பழகும் பண்பாடு விலகி, இறுக்கமானதொரு அந்நியம் மனிதர்களுக்குள் புகுந்து விடும். ஒரு வகையான மவுன வன்முறை உருவாகி மனித உறவுகளையும் நமது பண்பாட்டையும் நிரந்தரமாகக் காயப்படுத்தி விடும்.

எனவேதான், தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான பாதகம் என்கிறோம்; அடிப்படையான மனித உரிமைக்கு எதிரான அநீதி என்கிறோம்; இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை என்கிறோம்; உயிரினங்களைப் பூண்டோடு ஒழிக்கும் பயங்கரவாதம் என்கிறோம். எனவேதான், தண்ணீரை எவனுக்கும் தனிவுடைமை ஆக்கக் கூடாது; தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது என்று ஓங்கி ஒலிக்கிறோம்.

கோக் ஒரு உயிர்க் கொல்லி. லின்டேன், டி.டி.டி., மாலதியான் போன்ற பூச்சி மருந்துகள் மேலைநாடுகளைக் காட்டிலும் 36 மடங்கு அதிகமாக இந்திய கோக்கில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா, சட்டிஸ்கார் விவசாயிகள் பருத்திச் செடியின் பூச்சியைக் கொல்ல கோக் தெளிக்கிறார்கள். நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கி மடியாத மனிதனின் பற்களையே கோக் அரித்துக் கரைக்கிறது. கக்கூசின் கறைகளையும் அகற்றுகிறது கோக்.

கோக் ஒரு மானம் கொல்லி. நஞ்சென்றும், பூச்சி மருந்தென்றும், கக்கூசு கழுவும் திரவமென்றும் தெரிந்த பின்னரும் அதைக் காசு கொடுத்து வாங்கிச் சுவைக்கச் செய்து “தனது அடிமைகளுக்கு அறிவு மட்டுமல்ல, மானமும் கிடையாது’ என்பதை அது உலகுக்கே அறிவிக்கிறது. ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் அளிக்கும் இளநீரையும் மோரையும் எலுமிச்சைச் சாறையும் புறந்தள்ளி, “இந்தக் கக்கூசு பானத்தை அருந்துங்கள்!” என்று விளம்பரம் செய்ய வெட்கங்கெட்ட தேசத்துரோகிகளை அது கூலிக்கு அமர்த்திக் கொள்கிறது.

கோக்கின் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் பெப்சிக்கும் பொருந்தும். கோக்கும் பெப்சியும் அமெரிக்க மூத்திரம். தண்ணீரை மூத்திரமாக்கும் “தொழிலுக்கு’, தாகத்தைக் காசாக்கும் “தொழிலுக்கு’, நம் தாமிரவருணியைத் தாரைவார்க்க முடியாது. கோக், பெப்சியைப் புறக்கணியுங்கள்! மறுகாலனியாக்கத்திற்கெதிரான போராட்டத்தில், தண்ணீர் தனியார்மயத்திற்கெதிரான போராட்டத்தில் அணிதிரளுங்கள்!

 தண்ணீர்ப் பஞ்சம் :எதனால்? யாரால்?

நாளுக்கு நாள் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. போதிய அளவு மழை பெய்யாததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் இது முழு உண்மையல்ல.

முன்பு போல அல்லாமல் பருவம் தவறி மழை பெய்கிறது என்பதும் ஓரிடத்தில் முன்பு பெய்த அளவிற்கு மழை பெய்யவில்லை என்பதும், இன்னொரு இடத்தில் கூடுதலாகப் பெய்கிறது என்பதும் உண்மைதான். எனினும் இந்தியாவில் அதிக மழைப் பொழிவு உள்ள கேரளத்திலும் உலகின் அதிக மழைப் பொழிவு உள்ள சிரபுஞ்சியிலும் கூட குடிநீர்த் தட்டுப்பாடு வருவது ஏன்?

பெய்கின்ற மழைநீர் முழுஅளவில் நமக்குக் கிடைப்பதில்லை. கணிசமான அளவு நீர் வீணாகிறது. குறிப்பிட்ட பகுதி குடிநீருக்கோ பாசனத்திற்கோ பயன்படுத்தப்பட முடியாத அளவிற்கு நஞ்சாக்கப்படுகிறது அல்லது நாசமாக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகின்றது; தண்ணீர்ப் பற்றாக்குறை / பஞ்சம் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான். போதிய அளவு மழை பெய்யாதது அல்லது வறட்சி என்பது இரண்டாம்பட்சக் காரணம்தான்.

பெய்கின்ற மழைநீர் ஆறுகளில், கால்வாய்களில் ஓடுகிறது; ஏரிகள், குளங்கள், கிணறுகளில் நிரம்புகின்றது; நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது; மீதி கடலுக்குச் செல்கிறது. கடலுக்குச் சென்ற நீரைத்தவிர பிற அனைத்தும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிற உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுகின்றன. இந்தத் தண்ணீர் அனைத்தையும் நஞ்சாக்கி, அதன்மூலம் மண்ணையும் நஞ்சாக்கி, உணவு உற்பத்தியையும் கெடுத்து, குடிநீரும் இல்லாமல் செய்பவர்கள் இரு வர்க்கத்தினர் மட்டுமே; அவர்கள் முதலாளிகளும், அதிகாரிகள் வல்லுனர்களும் தான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலக முழுவதும் இந்த இரு பிரிவினரும்தான் நன்னீரை நஞ்சாக்கும் குற்றவாளிகள்!

எல்லா ஆலைகளும் தங்களது கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்துதான் வெளியே விட வேண்டுமென்று சட்டம் இருக்கிறது; அதை அமல்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கின்றது; ஆனால், ஓரிரு ஆலைகள் தவிர பிற எல்லா ஆலை முதலாளிகளும் ஒன்று, சுத்திகரிப்பு ஆலை கட்டுவதில்லை; கட்டினாலும் அன்றாடம் அதை இயக்குவதில்லை; அல்லது அரைகுறையாகச் சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்றுகிறார்கள்.

ஆறுகளை அழிப்பவர்கள் யார்?

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பாசனத்திற்கும் கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஏராளமான தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். ஆனால், ஆலைமுதலாளிகள் எவரும் இந்தப் பணிகளைச் செய்வதில்லை; சுத்திகரிப்பிற்காக ஆகும் செலவைத் தவிர்ப்பதன் மூலம் இலாபத்தை அதிகப்படுத்தும் வெறிகொண்ட முதலாளிகள், கழிவுநீரைச் சுத்தம் செய்யாமல் அப்படியே ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் விடுகிறார்கள்; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த அக்கிரமத்தை அனுமதிக்கிறார்கள்; இதேபோல், நகரங்களில் சாக்கடைகள் மற்றும் பிற கழிவுகளை நகராட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் கால்வாய்கள், ஆறுகளில் எவ்விதக் கூச்சமுமின்றி இறக்கி விடுகிறார்கள்.

சென்னையின் கூவம் முதல் திருச்சி நகரின் உய்யகொண்டான் கால்வாய் வரை அனைத்திலும் நல்ல தண்ணீர் ஓடிய காலமுண்டு. இன்றோ அவை சாக்கடைகள் என்று அறியப்படுகின்றன. புனித நதிகள் என்று கூறப்படும் கங்கை, யமுனை முதல் தமிழகத்தின் காவிரி வரை அனைத்தும் புனிதச் சாக்கடைகளாக மாறி வருகின்றன, மாற்றப்படுகின்றன.

சில எடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்:

தாமிரவருணி — இது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடும் வற்றாத ஜீவநதி. இந்த ஜீவநதியால் இம்மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இரண்டு போக நெல் சாகுபடியும், சுமார் 25,000 ஏக்கரில் மூன்று போகச் சாகுபடியும் நடைபெற்று வந்தது. பாசனம் தவிர இவ்விரு மாவட்டங்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ளது. இந்த ஆற்றில் சுமார் 65 இடங்களில் குடிநீர் எடுக்கப்படுகின்றது. மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை, சங்கர் சிமெண்ட், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா தொழிற்சாலை, டாக் ஆலை, கனநீர் ஆலை, அனல்மின் நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்கும் முக்கியமாக இந்த ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது.

தாமிரவருணி ஆற்று நீரை முன்பெல்லாம் அப்படியே அள்ளிக் குடிக்கலாம். ஆனால் இன்றோ ஆற்றின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு சில பெரிய தொழிற்சாலைகள், 19 சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், நகரச் சாக்கடைகள், ஆற்றோரச் சுடுகாட்டுக் கழிவுகள், வாகன சுத்திகரிப்புக் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு கழிவுகளின் சங்கமத்தால் தாமிரவருணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது.

நொய்யல் — ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைநீர் முற்றிலும் நஞ்சாக்கப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் வழியாக ஒரத்துப்பாளையத்தை வந்தடையும் நொய்யல் ஆறு கொடுமுடி அருகே காவிரியுடன் கலக்கிறது. 1992இல் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை ஏறத்தாழ 25,000 ஏக்கர் பாசனத்திற்காகத்தான் கட்டப்பட்டது. ஆனால், திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக்கழிவுகள் முழவதையும் நொய்யல் ஆற்றில்தான் திறந்து விடுகின்றனர். கழிவுநீரில் உள்ள சல்ஃபர், சோடியம், காஸ்டிக் சோடா, பிளீச்சிங் தண்ணீர் ஆகியவை காரணமாக விவசாயத்திற்கோ குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீர் நஞ்சாக்கப்பட்டு விட்டது.

இதனால் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம், நீர், காற்று, குடிநீர், குடிநீர் ஆதாரங்கள், கால்நடைகள், விவசாயப் பயிர்கள், மரங்கள், செடி கொடிகள் என அத்தனையும் பாழ்பட்டு விட்டன. மலட்டுத்தனம், கருச் சிதைவு எனப் பல்வேறு நோய்களுக்கும், வறுமைக்கும் இப்பகுதி மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளாக விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை; நீதிமன்றத்திற்கு ஓடியும் பயனில்லை. 700க்கும்மேற்பட்ட முதலாளிகள் சுத்திகரிப்பு ஆலைகளைக் கட்ட வேண்டுமென்றும், விவசாயிகளுக்கு முதலாளிகள் 12 கோடி ரூபாய்கள் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உயர்நீதி மன்றம் “ஆணையிட்டது’. ஆனால் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. இன்றளவும் தொடர்ந்து கழிவுநீர் தங்கு தடையின்றி நொய்யல் ஆற்றில் பாய்ந்து வருகிறது.

இதனால் அணை நிரம்பி வழிய ஆரம்பித்தது. அணை உடையும் அபாயம்; தண்ணீரைத் திறந்து விடுமாறு 2005 மே இறுதியில் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது; உடன் திறக்கப்பட்டது; இதனால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டதோடு, கழிவுநீர் காவிரியில் கலந்து, அதனால் காவிரியிலிருந்து குடிநீர் பெறும் கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் இந்தக் கழிவுநீர் கலந்த தண்ணீர்தான் குடிநீர். இத்தனைக்குப் பிறகும் “”நொய்யல் ஆற்றில் கழிவுநீரை விடக் கூடாது; உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று மட்டும் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பிக்க மறுக்கிறது. காரணம், “”தொழில்பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னியச் செலாவணி இழப்பு” என்றெல்லாம் முதலாளிகள்கூறும் வாதத்தை உயர்நீதி மன்றம் வேதவாக்காக ஏற்றுக் கொள்கிறது.

பவானி — சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை பவானியிலிருந்து அன்றாடம் 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திவிட்டு அதேஅளவு நீரை கழிவாக பவானி ஆற்றில் விடுகிறது. இதனால் பவானி நீர்த்தேக்கத்தில் அதிகஅளவு ரசாயனங்களும், கனரக உலோகக் கழிவுகளும் கலந்திருக்கின்றன. மேலும், யுனைடெட் பிளீச்சர்ஸ், டேன் இண்டியா, டி.டி.கே. அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் போன்றவைகளும் தங்கள் கழிவுகளை பவானி ஆற்றில் கொட்டுகின்றன. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் போன்ற நகரங்களின் சாக்கடைகளும் இதில் கலக்கின்றன. இதனால் பவானி ஆற்றுக் குடிநீரைப் பயன்படுத்துபவர்கள் வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

கொடகனாறு — திண்டுக்கல் நகரையொட்டி ஓடும் கொடகனாற்றின் படுகையில் சுமார் 80 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் சுற்றுப்புறக் கிராமங்களில் 20 சதுர கி.மீ நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது; சிந்தளக் குண்டு எனும் ஒரு கிராமத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டு விவசாயம் நலிந்து விட்டது. கிணறு வெட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் திவாலாக்கப்பட்டுள்ளனர்.

பாலாறு — வேலூர் மாவட்டத்தில் மட்டும் 317 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்குகிறது பாலாறு. இந்த ஆற்றிலிருந்து பாசனத்திற்கு 606 ஆற்று ஊற்றுக் கால்வாய்கள் இருந்தன. பாலாற்றில் ஆற்றடி நீரோட்டம் 30 அடியிலிருந்து 40 அடி ஆழம் வரை உள்ளது. இது இந்த ஆற்றுக்கே உரிய சிறப்பு. பல நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் குடிநீரையும், ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு நீரூற்றையும் இது அளித்து வந்தது. ஆனால், இவையெல்லாம் இன்று சாகடிக்கப்பட்டு விட்டன. காரணம், பாலாற்றுப் படுகையில் கட்டப்பட்டுள்ள சுமார் 100 சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராகும். அன்றாடம் 450 லட்சத்திலிருந்து 500 லட்சம் லிட்டர் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.

பாலாற்றுப் படுகையில் ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ

தோல் பதனிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 100 கிலோ

எடையுள்ள பதனிடப்படாத தோல், பதனிட்டபின் 20லிருந்து 30 கிலோ வரை எடையுள்ள தோலாக மாறுகிறது. மீதமுள்ள கழிவுத்தோல் முழுவதும் திடக் கழிவுகளாக ஆற்றில் கொட்டப்படுகிறது.

யமுனை நதி — தமிழ்நாட்டில் எப்படி காவிரியானது கூவத்திற்கு அடுத்தபடியாக மிகவும் மாசுபடுத்தப்பட்ட நதியாக மாற்றப்பட்டிருக்கிறதோ அப்படி யமுனை நதி உலகிலேயே மிக மிக மாசுபடுத்தப்பட்ட நதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. டெல்லியைச் சுற்றி 22 கி.மீ. தூரம் ஓடும் யமுனை நதி அந்தத் தொலைவு முழுவதும் துர்நாற்றம் வீசும் சாக்கடையாகவே ஓடுகிறது; அந்த நதி 570 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், பத்தாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியும் வழங்குகிறது. யமுனையைக் கடப்பவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் கடக்கிறார்கள். டெல்லியில் ஓக்லா என்ற இடத்தில் ஷாத்ரா என்ற சாக்கடைக் கால்வாய் மட்டும் நாள் ஒன்றுக்கு 60 கோடி லிட்டர் கழிவுநீரை யமுனையில் கொட்டுகிறது. அந்த இடத்தில் யமுனைத் தண்ணீரில் சுத்தமாக ஆக்ஸிஜன் இல்லாமல் போய் விடுகிறது என்றும் மீன் போன்ற எல்லா உயிரினங்களும் மடிந்து அற்றுப் போய்விட்டன என்றும் கூறுகிறார்கள் வல்லுனர்கள். இனி, யமுனையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஓரிரு நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு ஆறும் யாரால் எந்த அளவுக்கு நஞ்சாக்கப்பட்டுள்ளது என விரிவாக விளக்க முடியும். அந்த அளவிற்கு ஏராளமான ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் உள்ளன. மாசு பட்டிருப்பதில், நஞ்சாக்கப்பட்டிருப்பதில் கூவம் முதலிடமும், காவிரி இரண்டாம் இடமும், நொய்யல் பவானி அடையாறு அடுத்தடுத்த இடங்களையும் பெறுகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. (இந்து, 29.4.2005)

மணற்கொள்ளையின் விளைவு வறட்சி!

குடிநீரையும் பாசனநீரையும் நஞ்சாக்கி தண்ணீர்ப் பஞ்சத்தை / பற்றாக்குறையை உருவாக்குவதில் மணல் கொள்ளையர்கள் (லாரி முதலாளிகள், ஓட்டுக் கட்சித் தலைவர்கள் ஆகியோர்) ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றனர். பெரிய கிரிமினல் கும்பலையும் அரசியல் செல்வாக்கையும் வைத்துக் கொண்டு, லஞ்சம் ஊழல் மூலம் பெரிய அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, அன்றாடம் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணலை டன்டன்னாக வாரி எடுத்துச் சென்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர்; கீழ்மட்டத்தில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளோ, மக்களோ இதை எதிர்த்தால் துணிச்சலாக லாரியை விட்டுக் கொலையும் செய்கின்றனர்.

பல அடி ஆழம் மணலைத் தோண்டி எடுத்து விடுவதால், தண்ணீரை உறிஞ்சிப் பாதுகாத்து வைக்கும் ஆற்றின் வலுவும் திறனும் வெகுவாகக் குறைந்து விடுகிறது; ஆற்றில் வருகின்ற தண்ணீரில் பெருமளவு அப்படியே ஓடி கடலில் கலந்து விடுகிறது. இதனால் சுற்று வட்டார நிலத்தடி நீர் மட்டமும், நீர்வளமும் குறைவது வறட்சிக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் நீர்த்தேக்கம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுவது பாலக்காடு மாவட்டம்; இந்த மாவட்டமும் இன்னமும் சில மாவட்டங்களும் அண்மையில் வறட்சிக்கு ஆளாகித் தவித்தன. இதற்கான முக்கியமான காரணம் வரைமுறை இல்லாமல் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டதுதான் என்று வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.

மணலில் உள்ள ஒரு வகை பாக்டீரியா, நீரைத் தூய்மையாக்குகிறதென்றும், மணற்கொள்ளை காரணமாக இயற்கையாக நடைபெறும் இந்தச் சுத்திகரிப்புப் பணியும் அழிக்கப்பட்டு நிலத்தடிநீர் மேலும் மாசுபடுகிறது என்றும் கூறுகின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.

ஏரிகளை விழுங்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்

தண்ணீர்ப் பற்றாக்குறையை உருவாக்கும் குற்றவாளிகளில் இன்னொரு முக்கியமான பிரிவினர் ரியல் எஸ்டேட் முதலாளிகள். இவர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காக நகர்ப்புறங்களை விரிவாக்கிக் கொண்டே போகிறார்கள்; நகர்ப்புறங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் வளமிக்க விளைநிலங்களை எல்லாம் வாங்கி பிளாட் போட்டு விற்கிறார்கள்; இதனால் அங்கெல்லாம் கான்கிரீட் வீடுகளாகி, தண்ணீரை நிலம் உறிஞ்சுவதற்கான மேற்பரப்பு வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. பெரும் பெரும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி அவற்றின் பயன்பாட்டிற்காக வரைமுறையற்று தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவாகக் கீழே இறங்குகிறது.

இவர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லாவற்றையும் நிரப்பி வீடாக்கி விடுகிறார்கள். பலமாதங்கள் தொடர்ந்து ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருந்தால்தான் நிலம் தண்ணீரைத் தொடர்ந்து உறிஞ்ச முடியும். அதனால் நிலத்தடி நீர்வளமும் செழிக்கும். ரியல் எஸ்டேட் முதலாளிகளால் இந்த வாய்ப்பு பலாத்காரமாக அடைக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகரைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் இப்படிக் காணாமல் போயிருப்பதை இப்போதுதான் “கண்டுபிடித்திருப்பதாக’க் கூறுகிறார்கள் அதிகாரிகள். மாநகரப் பகுதிக்குள் உள்ள ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்திற்காக, கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஏரிகளைத் தேடுகிறார்கள். சென்னையில், சேத்துப்பட்டு ஏரி ஒன்றுதான் மிச்சமிருக்கிறதாம்!

நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள ஏரிகள் குளங்களின் நிலை இதுதான். அவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன அல்லது குப்பைத் தொட்டிகளாகவும் கழிவுநீர்க் குட்டைகளாகவும் மாற்றப்பட்டு விட்டன. மக்கிப் போகாத பாலிதின் பிளாஸ்டிக் குப்பைகளில் தொடங்கி, அழுகி நாறும் குப்பைகளும், அபாயகரமான மருத்துவமனைக் கழிவுகளும், இன்னதென்றே தெரியாத வேதிப் பொருட்களும் கொட்டப்படுவதால் சுற்று வட்டாரத்து வீடுகளின் கிணற்று நீர் உடனே நஞ்சாகிறது. நிலத்தடி நீரோ நிரந்தரமாக நாசமாகிறது.

பணக்கார வர்க்கத்தின் குப்பை மேடாக நகரங்கள்!

நகரத்தையும் நகரம் சார்ந்த பணக்கார வர்க்கத்தையும் கொழுக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்ட பொருளாதாரம், அவர்கள் நுகர்ந்த கழிவுகளின் குப்பைமேடாக நகரத்தை மாற்றி, இயற்கையை நாசமாக்குவதுடன் நிற்பதில்லை. இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையே பணக்கார வர்க்கம் தன் நுகர்பொருளாக்கிக் கொள்கிறது.

ஏற்றுமதி அந்நியச் செலாவணி என்ற பெயரில் காவிரியை திருப்பூர் முதலாளிகளின் சாக்கடையாக மாற்றியிருக்கும் அதே கொள்கை, வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகச் சுற்றுலா மையங்கள் அமைக்கிறது. ஆறுகள் உருவாகும் இடங்கள், இயற்கை ஊற்றுகள் உள்ள இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் அருவியோரங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் இதுவரை மனிதர்களே போகாத காட்டுப்பகுதிகளில், ஏரிக்கரைகளில் ஐந்து நட்சத்திரச் சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுகின்றன. அங்கு மனிதக் கழிவுகளும், பிற எல்லா வகைக் கழிவுகளும் அப்படியே அந்த நீர்நிலையின் தலைப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால், ஆறுகள் ஏரிகள் அருவிகள் எல்லாம் நஞ்சாக்கப்படுகின்றன.

இன்னும் மேல்தட்டு வர்க்கத்தினரின் உல்லாசக் கேளிக்கைகளுக்காகத் தண்ணீர் விளையாட்டு மையங்கள், செயற்கைப் பனிச்சறுக்கு மையங்கள், தண்ணீர்ப் பூங்காக்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன. தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கோடைக் காலத்தில் கோக், பெப்சி நிறுவனங்கள் நடத்தும் மழை நடனங்களுக்காக லாரிலாரியாய்க் குடிநீர் அழிகிறது, கழிவுநீராக மாசுபடுத்தப்படுகிறது.

இன்று நிலத்தடி நீர் மட்டம் வீழ்ச்சியடையும் பிரச்சினை குறித்துப் பேசத் தொடங்கியவுடனே, முதல் குற்றவாளியாக விவசாயிகளை அடையாளம் காட்டுகின்றனர் முதலாளித்துவ வல்லுனர்கள். வகை தொகையில்லாமல் பாசனத்திற்குத் தண்ணீரைச் செலவிடுவதாக விவசாயிகள் மீது பழிபோடுகின்றனர். இது அபாண்டமானது. பன்னாட்டு முதலாளிகளும் இந்திய அரசும்தான் பசுமைப்புரட்சி எனும் விபரீதத்திற்குள் இந்திய விவசாயிகளை இழுத்து விட்டனர். இன்று அதன் விளைவுகளுக்கு விவசாயிகளைக் குற்றம் சாட்டுகின்றனர்.

பசுமைப் புரட்சியால் அழிந்த தண்ணீர், இறந்த விவசாயிகள்!

1960களின் இறுதியில் நமது நாட்டில் புகுத்தப்பட்டது பசுமைப் புரட்சி; அதற்கு முன்புவரை ஏரிகள், குளங்கள், ஆறுகள் மூலம் தான் விவசாயிகள் பெரும்பாலும் பாசனம் செய்து வந்தனர். 1950களில் புதிய அணைகள் கட்டியதோடு, பாசன வாய்க்கால்களை அமைத்து ஏரிகள், குளங்களை வெட்டி, தூர் எடுத்து மராமத்தும் செய்து வந்தது அரசு. பசுமைப் புரட்சிச் சாகுபடி முறைகளோ பணப்பயிர்களை ஊக்குவிப்பதாகவும், அதிக அளவு தண்ணீர் கோரும் சாகுபடி முறைகளாகவும் இருந்தன.

பன்னாட்டு உரக் கம்பெனிகள், டிராக்டர் கம்பெனிகள், விதை மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துக் கம்பெனிகளின் சந்தைக்காகவும் லாபத்திற்காகவும், உலக வங்கியின் உத்தரவுப்படி புகுத்தப்பட்டதுதான் பசுமைப்புரட்சி என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இது புரியும். அரசும் பொது மராமத்துப் பணிகளைப் புறக்கணிக்கத் தொடங்கியது. எனவே, கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு, தனித்தனி விவசாயிகள் தனித்தனியே புதிய கிணறுகள் வெட்டுதல், ஆழ்துளைக் குழாய் போடுதல், மின்சார பம்பு செட்டு போடுதல் ஆகியவற்றை லட்சக்கணக்கில் பெருக்கினர். இதற்கேற்ப நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. நிலத்தடி நீரும் உப்பானது.

பணப்பயிர் முறைக்கு மாறும்படி விவசாயிகளைத் தூண்டியது பசுமைப்புரட்சி. இவ்வாறு பருத்தி விவசாயத்திற்கு மாறிய ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்ட விவசாயிகள் சர்வதேசச் சந்தையிலும், உள்ளூர்ச் சந்தையிலும் நல்ல விலை கிடைக்கிறது என்ற தூண்டிலுக்குப் பலியாகி கடன் வாங்கி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி பம்பு செட்டுக்கள் போட்டு விவசாயம் செய்தனர். நிலத்தடி நீர் இறங்கிக் கொண்டே போனது. ஒரு ஆழ்துளைக் கிணறு வறண்டு விட்டால், அதே விவசாயி இன்னொரு கிணறு அமைத்தார்; அதுவும் வறண்டுட்டால் இன்னொன்று. இவ்வாறு சிறு, நடுத்தர விவசாயிகளும் கூட இரண்டு மூன்று ஆழ்துளைக் கிணறுகள் இறக்கினர். இதன் விளைவாக அப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீர் அதலபாதாளம் சென்றது; நட்டத்துக்கு மேல் நட்டம் — வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பசுமைப்புரட்சியும் பணப்பயிரும் பாலிடாலாக மாறி தண்ணீர் வளத்தைச் சாகடித்தது மட்டுமல்ல, விவசாயிகளையும் சாகடித்தது. இந்தக் கொடுமைகளை “தி இந்து’ நாளேட்டின் துணை ஆசிரியர் பி.சாய்நாத் என்பவர் பல கட்டுரைகள் மூலம் சோகம் ததும்ப வருணித்துள்ளார்.

பசுமைப் புரட்சிச் சாகுபடிகளில், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஏராளமாகக் கொட்டப்பட்டதால், இரசாயனங்கள் அதிகஅளவில் மண்ணில் கலந்து தண்ணீர் வளம் நஞ்சாக்கப்பட்டது; பல்லுயிர் வகைகள் அழிந்தன; மண்வளம் கெட்டது; மண் இறுகி உறிஞ்சும் திறனை இழந்ததால் நிலத்தடி நீர் வளம் புதுப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அடைபட்டது.

1990களிலிருந்து புகுத்தப்பட்ட தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளின் விளைவாக, புதிய அணைகள் கட்டுவது, கால்வாய்கள், ஏரிகுளங்கள் கட்டுவது பராமரிப்பது, சிறுசிறு அணைகள் கட்டுவது, சமூகக் காடு வளர்ப்பு ஆகியவற்றிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொண்டது. தண்ணீரைத் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடவும் செய்தது. இது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றி எரியச் செய்தது.

ஆக, தண்ணீர்ப் பஞ்சத்திற்கும், வரவர தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கும் மேற்கூறிய காரணங்களே அடிப்படை ஆகும். தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்குபவர்கள் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டி வாழும் உள்நாட்டு முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தான்.

காடுகளை அழிப்பதும் முதலாளிகளே!

ஆறுகளை நஞ்சாக்குவதற்கு இணையான அளவில் காடுகளை அழித்து மழைப்பொழிவைக் கெடுப்பவர்களும் முதலாளிகள்தான். எந்தத் தொழிற்சாலையின் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன, எந்த முதலாளியின் லாபத்திற்குக் காடுகள் இரையாகின்றன, எந்த வர்க்கத்தின் நுகர்வுக்காக இந்தக் கொள்ளை நடக்கிறது என்பதைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துவிட்டு, காடுகள் அழிவதைச் சொல்லி நீலிக் கண்ணீர் விடுகின்றன அரசும் ஊடகங்களும்.

காடுகளை அழிப்போரை ஏதோ ஒரு முகம் தெரியாத மாஃபியா கும்பலாகவும், யாரோ ஒரு வீரப்பனாகவும் சித்தரித்து உண்மைக் குற்றவாளிகள் ஒளிந்து கொள்கின்றனர். கனிவளங்களைச் சூறையாட காடுகளை அழிக்கிறார்கள் சுரங்க முதலாளிகள். சட்டிஸ்கரில் தனியார் மின்நிலையம் அமைக்க ஒரே அடியில் 20,000 மரங்களைச் சாய்த்திருக்கிறது ஜிண்டால் நிறுவனம்.

காகித ஆலை முதலாளிகளும் மரச்சாமான்கள் உற்பத்தி செய்கிற முதலாளிகளும் காடுகளைச் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் வரைமுறையற்று அழித்து மொட்டை அடிக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை அழிப்பின் காரணமாகவே கேரளாவில் அண்மை ஆண்டுகளில் வறட்சி வந்ததென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மழை அளவு குறைந்து வறட்சி ஏற்படுவதற்கும், மண் அரிப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைவதற்கும் இதே முதலாளித்துவ வர்க்கத்தினர்தான் காரணமாக இருக்கின்றனர்.

கார்கள் பெருக, கார்மேகம் அழிகிறது!

பருவமழை தவறுவதற்கும், குறைவதற்கும், வெப்பம் அதிகரிப்பதற்கும் காரணம் “புவி சூடேறுதல்’ தான் என்பது இன்று உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. வாகனப்புகை, குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளிவரும் குளோரோஃப்ளோரோ கார்பன் போன்ற வாயுக்களால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து அதன் விளைவாகத்தான் புவிக்கோளம் ஆண்டுக்கு ஆண்டு வெப்பமடைந்து வருகிறது. இதனால் வடதுருவ, தென்துருவப் பனிக்கட்டிகள் கரைந்து கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக நன்னீர் இருப்பின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றது.

இமயமலையில் பனிப்பாறைகள் ஆண்டுக்கு 10 முதல் 15 மீட்டர் உயரத்திற்குக் கரைந்து வருகின்றன; இதன் விளைவாக இமயத்திலிருந்து பிறக்கும் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்துபோன்ற ஆறுகளில் வெள்ளம் அதிகரிக்கும்; சில ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பாறைகள் பெருமளவு குறைந்து தண்ணீரும் குறைந்து விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்குக் காரணமான நச்சு வாயுக்களைத் தடுக்க வேண்டும்; அப்படியென்றால், இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், குளிர்பதனப் பெட்டிகள் ஆகியவற்றின் உற்பத்திக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மாறாக, இந்தத் தொழில்களைத்தான் அரசு வலிந்து ஊக்குவிக்கிறது. சலுகைகள் வழங்கி வளர்க்கிறது. பேரழிவு நோக்கிய இந்தப் பயணத்தைத்தான் தேச முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது. இவ்வாறு உலக முதலாளிகள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் லாப வேட்டைக்காக இயற்கை ஒட்டு மொத்தமாகச் சீர்குலைக்கப்படுகிறது.

கடலும் தப்பவில்லை!

முதலாளிகளின் லாபவெறி நன்னீர் வளங்களை நாசமாக்குவதுடன் நின்று கொள்வதில்லை. பரந்து கிடக்கும் கடலையும் அது மாசுபடுத்துகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான டிராலர்கள் எனப்படும் பிரம்மாண்டமான மீன்பிடிக் கப்பல்கள் கடல் வளத்தை அரித்தெடுக்கின்றன. பல கிலோமீட்டர் சுற்றளவுள்ள அதன் வலைகள் தேவையான மீன்களை மட்டுமின்றி வலையில் சிக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் வாரி எடுக்கின்றன. மீன்களை மட்டும் சலித்து எடுத்தபின் செத்து அழுகிப் போன மற்ற உயிரினங்கள் அனைத்தையும் கடலில் கொட்டி கடல்வளத்தை நாசமாக்குகின்றன. பிறகு வெட்டுக் கிளிகள் போல அடுத்த இடம் நோக்கி நகர்கின்றன. கடலில் அன்றாடம் கலக்கும் எண்ணெய்க் கப்பல்களின் கசிவுகள், பன்னாட்டு நிறுவனங்கள் காதும் காதும் வைத்தாற்போல கடலில் கொட்டி விட்டுச் செல்லும் அபாயகரமான ரசாயனக் கழிவுகள், அணுக் கழிவுகள், கடலடியில் நடத்தப்படும் அணுச்சோதனைகள்…. என கடல் வளத்தை நாசமாக்கும் உலக முதலாளி வர்க்கத்தின் குற்றங்கள் ஒரு தனிப்பட்டியலாக நீள்கின்றன.

நன்னீர் வளம் அழிந்து, கடல்நீரைக் குடிநீராக்கித்தான் மனிதகுலம் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலை நாளை தோன்றினால், கடல்நீரும் கூட கழிவு நீராகிவிட்ட சூழலைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, பரந்து கிடக்கும் கடலைக்கூடப் பட்டா போட்டுப் பிரித்து, பன்னாட்டு முதலாளிகளிடம் குத்தகைக்கு விட்டுவிட வேண்டும் என்ற திட்டத்தைத் தயாரித்து விட்டார்கள் அமெரிக்க முதலாளிகள். தண்ணீர்ப் பஞ்சம் எனும் பிரச்சினையை எந்தக் கோணத்திலிருந்து பரிசீலித்தாலும், அதற்குக் காரணமான குற்றவாளிகள் முதலாளி வர்க்கத்தினர்தான் என்ற முடிவையே நாம் வந்தடைய இயலும். அது சாய ஆலை முதலாளியாகவோ துணி ஆலை முதலாளியாகவோ சாராய முதலாளியாகவோ இருக்கலாம். இந்நாட்டுத் தரகு முதலாளியாகவோ பன்னாட்டு முதலாளியாகவோ இருக்கலாம்.

தன்னுடைய குறுகிய லாபநோக்கத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் குடிநீரையும், லட்சக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தையும் நாசமாக்கும் “இரக்கமின்மை’ இந்த வர்க்கத்துக்கு மட்டுமே உரியது. நகையை விற்று, கந்துவட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டும் மக்கள் யாரும் “கழிவு நீர்த் தொட்டி கட்டக் காசில்லை’ என்று சொல்லித் தம் வீட்டுக் கழிவறைத் தண்ணீரைச் சாலையில் விடுவதில்லை. சட்டத்திற்கு அஞ்சுவதல்ல காரணம்; அவ்வாறு செய்ய யாருக்கும் மனம் வருவது இல்லை. ஆனால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் முதலாளிகள்தான் கொஞ்சமும் கூசாமல் தம் கழிவுநீரை ஆற்றில் இறக்குகிறார்கள்.

குடிநீர்க் குடத்தில் கையை விட்டு விளையாடும் அறியாப் பிள்ளைகளைக்கூட நாம் அடித்து விடுகிறோம். லட்சக்கணக்கான மக்களுக்கும், உயிரினங்களுக்கும் குடிநீர் வழங்கி, உணவு உற்பத்திக்குத் தேவையான பாசனவசதியும் அளிக்கும் ஆறுகளில் மனதறிந்து நஞ்சைக் கலக்கிறார்களே இந்த முதலாளிகள், இதைவிடக் கொடிய பயங்கரவாதச் செயல் இருக்க முடியுமா?

இது பயங்கரவாதமில்லையா?

சந்தேகத்திற்கிடமின்றி இது பயங்கரவாதம்தான். ஆனால் இந்தப் பயங்கரவாதிகளை அரசு தண்டிப்பதில்லை. கழிவு நீரைக் கலக்கும் ஆலைகளை மூடுவதில்லை. நடுநிலை தவறாமல் நாட்டுக்கே நீதி கூறுவதாகச் சொல்லிக் கொள்ளும் நீதிமன்றங்கள் ஆற்றில் கழிவுநீர் விடுவதை நிறுத்தச் சொல்லிக் கூட ஆணை பிறப்பிப்பதில்லை. சுத்திகரிப்பு ஆலை கட்டுவதை விரைவு படுத்துமாறு ஆண்டுக் கணக்கில் முதலாளிகளுக்கு “அறிவுறுத்தியபடியே’ இருக்கின்றன. கோக் ஆலையின் உரிமத்தை பிளாச்சிமடா பஞ்சாயத்து பறித்தால், உடனே உரிமம் வழங்கச் சொல்லி பஞ்சாயத்துக்கு உத்தரவிடுகிறது உயர்நீதி மன்றம்.

அதிகார வர்க்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ஆறுகள், கால்வாய்களில் மாநகராட்சிக் கழிவுகளைக் கலக்க ஆணையிடுவதே மாநகராட்சி ஆணையர்கள்தான். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் இந்தக் கொடுமையைத் தடுக்க முயற்சி எடுப்பதேயில்லை. இவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள், நிபுணர்கள், சமூகத்திற்குப் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

கிடைத்தற்கரிய செல்வமான தண்ணீரில் நச்சுக் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் கடும் விளைவுகள் பற்றியும் அதன் பரிமாணம் குறித்தும் நன்றாகத் தெரிந்தே அனுமதிக்கும் இந்த மேதைகளும் நிபுணர்களும் தான் முதலாளிகளைவிட மிகவும் இரக்கமற்ற கொடியவர்களாக, சமூக விரோதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் திறமையும் பட்டங்களும், நீதிமான்கள் என்ற கௌரவமும் இந்த அயோக்கியத்தனத்தை மூடி மறைக்கும் கவசங்களாகவே உள்ளன. முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்கு வாலை ஆட்டும் பிராணிகளாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

திருட்டுக்குத் தண்டனை பரிசு!

அதிகாரவர்க்கம், நீதித்துறையினர் மற்றும் ஓட்டுக் கட்சிகளின் கருத்துப்படி முதலாளிகளின் லாபம் புனிதமானது. அதுதான் தேச நலன்; அதுதான் சமூகத்தின் முன்னேற்றம். அதைப் பாதிக்கும் விதத்திலான எத்தகைய நடவடிக்கையையும் இவர்கள் எடுக்க மாட்டார்கள். எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள்.

இன்றைய பிரதமரும் அன்று உலக வங்கியின் கூலி பெற்ற பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் தண்ணீர் வீணாக்கப்படுவதற்கு காரணம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதுதான் என்று அப்பட்டமாக விவசாயிகளைத் தூற்றியுள்ளார். மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதால், தங்கள் விருப்பம் போல மின் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீரை விவசாயிகள் வீணாக்கி விட்டார்கள். எனவே, இனி மின்சாரம் மட்டுமல்ல, பாசனத்திற்கான தண்ணீரைக் கூட இலவசமாகத்தரக் கூடாது. அதற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று வன்மத்துடன் பேசியுள்ளார்.

ஆறுகளை நஞ்சாக்கும் ஆலை முதலாளிகளுக்கு எதிராகவோ, ஏரிகளை விழுங்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு எதிராகவோ, நிலத்தடி நீரைச் சூறையாடும் பன்னாட்டுத் தண்ணீர்த் திருடர்களுக்கு எதிராகவோ இந்தக் கோபத்தில் ஒரு சதவீதத்தைக் கூட அரசு காட்டுவதில்லை. எந்த முதலாளிவர்க்கம் தண்ணீரை நஞ்சாக்கிப் பஞ்சத்தை உருவாக்குகிறதோ, அந்த முதலாளி வர்க்கத்திடமே, இந்தப் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் அடித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதித்துவிட்டு, மக்களுக்குத் தண்ணீர் வினியோகம் செய்யும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்கிறது. விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தண்டனை. தண்ணீரைக் கொள்ளையடித்து விற்பனை செய்யும் முதலாளிகளுக்குப் பரிசு! இதுதான் அரசாங்கத்தின் தண்ணீர்க் கொள்கை.

 தண்ணீர்க் கொள்ளையர்களைத் தாங்கிப் பிடிக்கிறது அரசு!

அரசு என்ன செய்கிறது? தண்ணீர்க் கொள்ளையை அனுமதிக் கிறது. மக்களுடைய தாகத்தைக் காசாக்கும் இந்தக் கொள் ளையை ஊக்குவிக்கிறது. இந்தத் தண்ணீர்த் திருட்டைத் தொழில் வளர்ச்சி என்றும் தண்ணீர்த் திருடர்களைத் தொழிலதிபர்கள் என்றும் கூறி கவுரவிக்கிறது.

ஆனால் தங்களுக்குச் சொந்தமான நீரைப் பறிகொடுத்த மக்கள் குடிநீர் லாரிக்காகக் குடத்துடன் மறியல் செய்தாலோ போலீசு லாரியை அனுப்பித் தடியடி நடத்துகிறது.

“ஒரு நாளைக்கு நாலுகுடம் தண்ணீர் கிடைத்தால் அதுவே சொர்க்கம்” என்று வாழப் பழகிக் கொண்ட மக்களிடம் “தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள்” என்று புத்திமதி சொல்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் கையில் அட்டையைக் கொடுத்து ஊர்வலம் விடுகிறது.

மழைநீர் சேகரிப்பு, கடல் நீரைக் குடிநீராக்குவது, கழிவுநீர் மறுசுழற்சி, ஆழ்துளைக் கிணறு தோண்ட அரசு அனுமதி… இவையெல்லாம் மக்களுக்கு. ஆறுகளும் ஏரிகளும் நிலத்தடி நீர்வளமும் கோக், பெப்சி, விஜயசாந்தி, டீம், நர்மதா, கங்கா ஜல், ப்யூர், ஃபிரெஷ் போன்ற தண்ணீர்த் திருடர்களுக்கு! “தண்ணீரைச் சேமிப்பது மக்கள் கடமை அதைத் திருடுவது முதலாளிகளின் உரிமை” என்பதுதான் அரசின் தண்ணீர்க் கொள்கை.

ஆறும் அணைகளும் தனியார்மயம்

இது வெறும் கூற்றல்ல; நாடெங்கும் தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் வீதம் ஆண்டு முழுவதும் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சி கொக்கோ கோலாவிற்கு விற்கிறது, கோவை அன்னபூர்ணா குழுமத்திற்குச் சொந்தமான “பூனம் பெவிரேஜஸ்’ என்ற நிறுவனம். கட்டணம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாம்! சென்னை சோழவரம் ஏரியை கோக்கும், பாலாறு, வைகையை பெப்சியும் உறிஞ்சுகின்றன.

தண்ணீர் தனியார்மயம் என்பது இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் கொள்கை. சட்டிஸ்கார் மாநிலத்தில், மகாநதியின் கிளை நதியான ஷியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. “ஆற்றோரக் கிராமத்து மக்கள் குடிக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது” எனத் தடை விதித்தது அந்த நிறுவனம். கரையோர நிலங்களில் விவசாயிகள் போட்டிருந்த பம்பு செட்டுகளைக் கூடப் பிடுங்கி எறிந்தனர் அந்தக் கம்பெனியின் அடியாட்கள். மக்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக 2002இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே மாநிலத்தில் கருண், கேலு, சாக்ரி போன்ற ஆறுகள் முதலாளிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. குர்குத் என்ற அணைக்கட்டும் நீர்மின் நிலையமுமே ஜிண்டால் நிறுவனத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன.

மகாராட்டிராவில் கொக்கோ கோலோவிற்குத் தண்ணீர் தருவதற்காகவே வைதரணா என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் வகால் என்ற ஆற்றில் சொந்தமாக அணை கட்டிக் கொள்ள இந்துஸ்தான் சின்க் என்ற தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, மக்கள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். உ.பி. ராஜஸ்தான், ஹரியானா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் கோக், பெப்சி நிறுவனங்களின் நிலத்தடி நீர்க் கொள்ளையை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

இத்தனை எதிர்ப்புகளுக்கிடையிலும் நாட்டின நீர்வளங்கள் கூறு கட்டி விற்கப்படுகின்றன. உயிரின் ஆதாரமான குடிநீர், விற்பனைச் சரக்காக்கப்படுகிறது. பம்பாய், டெல்லி, பெங்களூர், ஹூப்ளி, தார்வார், பெல்காம் போன்ற நகரங்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. சென்னை குடிநீர் விநியோகத்தை வியாபாரமாக்கி லாபம் சம்பாதிக்க விவென்டி என்ற பிரெஞ்சு நிறுவனம் மாநகராட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது. இவை சில சான்றுகள் மட்டுமே. எல்லா மாநிலங்களிலும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல்படுத்திவரும் கொள்கை இதுதான்.

குடிநீர் விநியோகம்: அரசால் இயலாதா?

மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய அரசாங்கத்தால் முடியாதாம்! பணபலம் ஆள்பலம் இல்லையாம்! அதனால்தான் தனியார் முதலாளிகளிடம் அந்தப் பொறுப்பை விடுகிறார்களாம். இந்த அற்பத்தனமான பொய்யை யாராவது நம்ப முடியுமா? “அரசாங்கத்து முட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்” என்கிறார்களே, அப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான அரசு எந்திரத்தின் ஆள், அம்பு, சேனை, அமைச்சகங்கள், துறைகள், வாரியங்கள், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து மக்களுக்குக் கேவலம் குடிநீர் கூடத் தர இயலாதாம்! அதற்கு அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டனிலிருந்து ஆள் வரவேண்டுமாம்!

பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் என்று குடிநீர் விநியோகம் தொடர்பான எல்லாத் துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள் அனைத்தும் அரசின் பராமரிப்பில் இருக்கின்றன. நிலத்தடி நீர் எங்கே இருக்கிறது எங்கே குறைகிறது என்று விண்ணிலிருந்தே கண்டுபிடித்துச் சொல்லும் செயற்கைக் கோளையும் வைத்திருக்கும் அரசாங்கத்தால் மண்ணில் கிடக்கும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிக்க முடியாதாம்! போதிய தொழில்நுட்ப அறிவு இல்லையாம்! நம்ப முடிகிறதா?

அயோடின் கலவாத உப்பைத் தின்றால் மக்களுக்கு கழலை நோய் ஏற்பட்டு விடுமேயென்று “கருணையோடு’ சிந்தித்து கல் உப்பைத் தடை செய்கிறது அரசு. உயிர்வாழ்வதற்கு உப்பைக் காட்டிலும் அவசியமானது தண்ணீர் என்ற எளிய உண்மை பேரறிஞர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாதா?

அத்தகைய தண்ணீரை பகிரங்கமாகக் களவாடி ஒரு கும்பல் விற்பனை செய்யும்போது, அதைக் காசு கொடுத்து வாங்க முடியாத மக்கள் தாகத்தால் தவிக்கும்போது அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்து அதனைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்ம். ஆறுகளை மாசுபடுத்தும் ஆலை முதலாளிகளையும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, நீர்வளமுள்ள பகுதிகள் தனியார் வசமிருந்தால் அவற்றையும் பொதுநலன் கருதி கையகப்படுத்தி மக்களுக்கு இலவசக் குடிநீரை உத்திரவாதம் செய்ய வேண்டும். “பொதுநலன்’ என்று கூறி அணைகள், சுரங்கங்களுக்காகப் பழங்குடி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்றும் அரசு, நெடுஞ்சாலையமைப்பதற்காக வீடுகளை இடிக்கும் அரசு, தனியார் முதலாளிகளிடமிருந்து நீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவதும் சாத்தியம்தான்.

ஆனால், அரசோ நேரெதிராகச் செயல்படுகிறது. மக்களின் பொதுச் சொத்தான ஆறுகளையும் ஏரிகளையும் முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கிறது. தண்ணீர் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது. “இலவசமாகத் தருவதனால் தண்ணீரின் அருமை மக்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் தனியார் விற்பனையை அனுமதிக்கிறோம்” என்று நியாயப்படுத்துகின்றது.

தண்ணீர்ப் பஞ்சத்தில் மக்களைத் தவிக்கவிட்டு, வேறு வழியில்லாமல் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டு, “இதோ மக்கள் தண்ணீருக்குக் காசு கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே, பிறகு எதற்காக இலவசமாகத் தரவேண்டும்?” என்று இப்போது கேள்வி எழுப்புகிறார்கள் தண்ணீர் தனியார்மயத்தை ஆதரிக்கும் கொள்ளையர்கள்.

தனியார்மயத்தின் அடிக்கொள்ளி!

“தண்ணீர் வியாபாரம்’ என்பது தண்ணீர்ப் பஞ்சத்தால் தானே உருவாகி வளர்ந்துவிடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை அரசுதான் உருவாக்கி வளர்த்து வருகிறது. “தனியார்மயம் தாராளமயம் உலகமயம்’ என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

“அரசாங்கத்தால் பள்ளி, கல்லூரிகள் நடத்த முடியாது — 5 லட்சம் 10 லட்சம் கொடுத்து மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்துக் கொள்ளட்டும்; வேலைவாய்ப்பையும் அரசாங்கம் வழங்க முடியாது — அது அவரவர் பொறுப்பு; அரசாங்கம் மருத்துவமனை நடத்த முடியாது — தனியார் மருத்துவமனைக்குக் கொட்டியழ முடியாதவன் செத்துப் போகட்டும்; அரசாங்கம் சாலை போடாது — அதுவும் தனியாரிடம்; அரசாங்கம் நியாயவிலையில் ரேசன் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை தர முடியாது — அநியாய விலையில் வாங்க முடிந்தவன் தின்று பிழைத்துக் கொள்ளட்டும்; அரசு தானியக் கொள்முதல் செய்யாது — கிடைக்கின்ற விலைக்கு விவசாயி விற்றுக் கொள்ளட்டும்; போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், வங்கி, இன்சூரன்சு, தபால் துறை… என இது நாள் வரை செய்து வந்த எந்தச் சேவையையும் அரசு செய்ய முடியாது; இவையெல்லாம் அரசாங்கத்தின் வேலையல்ல” — இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாக் கட்சி அரசுகளும் அமல்படுத்தி வரும் கொள்கை. இந்த வரிசையில் இப்போது தண்ணீரும் வந்திருக்கிறது.

மக்கள் உயிர் வாழ்வதற்கே அடிப்படையான தண்ணீரைக் கூடத் தன்னால் வழங்க முடியாதென்று கூறும் உரிமை ஒரு அரசுக்கு உண்டா? ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீராதாரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பராமரிக்காமல் சீர்கெட விட்டு, முதலாளிகள் விருப்பம் போல உறிஞ்சவும் கொள்ளையடிக்கவும் கழிவுகளை இறக்கி நாசமாக்கவும் அனுமதித்து விட்டு “பாசனநீருக்குப் பணம் கொடு” என்று விவசாயிகளைக் கேட்கும் அதிகாரம் இந்த அரசுக்கு உண்டா? தனது குடிமக்களுக்கு வேலை, உணவு, கல்வி முதல் தண்ணீர் வரை எதையும் தரவியலாத ஒரு அரசுக்கு மக்களுடைய சமூக அரசியல் வாழ்க்கை மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது? “அருகதை இல்லை’ என்றுதான் நியாயமாகச் சிந்திப்பவர்கள் யாரும் சொல்ல முடியும்.

முதலாளிகளுக்கு மாமா வேலை!

“மக்கள் நல அரசு’ என்று சொல்லிக் கொண்டு இத்தனைக் காலம் காட்டி வந்த பம்மாத்துக்களையெல்லாம் எல்லா அரசாங்கங்களும் மூட்டை கட்டிவிட்டன. விவசாயம், தொழில்துறைகள், சேவைத்துறை உள்ளிட்ட அனைத்தையும், காடுகள், சுரங்கங்கள், ஆறுகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து தரும் மாமா வேலையைத்தான் இந்த நாட்டின் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், அதிகார வர்க்கமும் நீதித்துறையும் இப்போது செய்து வருகின்றன.

“பொதுத்துறை வங்கிகளையும் இன்சூரன்சு நிறுவனங்களையும் திறந்து விடு” என்று பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கேட்கிறார்களா அதற்கேற்ற சட்டம் தயார்; விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்க விதைச்சட்டம், மருத்துவத்துறையைக் கொள்ளையடிக்க காப்புரிமைச் சட்டம், கட்டுமானத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகள் புகுந்து சூதாட வசதியாக 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, சிறு வணிகர்களை ஒழித்து சில்லரை விற்பனையிலும் பன்னாட்டுக் கம்பெனிகளைப் புகுத்த வாட் வரி விதிப்புச் சட்டம், முதலாளிகள் காடுகளை அழிக்கத் தடையாக இருக்கும் பழங்குடி மக்களை காட்டிலிருந்து துரத்த காடுகள் சட்டம், தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியத் துறைகளில் அந்நிய நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கட்டைப் பஞ்சாயத்து செய்ய “ஒழுங்குமுறை ஆணையம்’…!

ஒன்றா, இரண்டா? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் நாட்டை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கும் ஏலக்கம்பெனி வேலையைத்தான் செய்து வருகின்றன. கொஞ்சம் அசந்தால் நமக்கே தெரியாமல் நம் குடும்பம், பெண்டாட்டி பிள்ளைகளில் 10 சதவீதத்தை பங்குச் சந்தையில் விற்கப் போவதாகக் கூட சட்டமியற்றி விடுவார் ப.சிதம்பரம்.

சட்டமியற்றும் ஓட்டுக் கட்சிகளும், அதை அமல்படுத்தும் அதிகாரவர்க்கமும் மட்டுமல்ல; அரசியல் சட்டத்தைக் “காவல்’ காப்பதாகக் கூறிக் கொள்ளும் நீதித்துறையும் முதலாளிகளின் திருட்டுக்கு ஆதரவாகத் தான் தீர்ப்பு சொல்கின்றது. நகர்ப்புறக் குடிசைகளை இடிக்கலாம், நடைபாதை வியாபாரிகளைத் துரத்தலாம், நர்மதை அணைக்காகப் பழங்குடி மக்களை மூழ்கடித்துக் கொல்லலாம், கொக்கோ கோலா தண்ணீர் திருடலாம், அரசுத் தொலைபேசியை அம்பானி கொள்ளையடிக்கலாம், பால்கோ, மாடர்ன் பிரட் போன்ற பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு விற்கலாம்… என எத்தனைத் தீர்ப்புகள்!

மக்களுக்கு குண்டாந்தடி!

மக்களின் சொத்துக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசும் இந்தத் தரகு வேலையைத் தவிர வேறெதையாவது இந்த அரசு செய்கிறதா? செய்கிறது. இந்தத் தேசத்துரோகச் செயல்களால் பாதிக்கப்படும் மக்கள் போராடுவதைத் தடுக்கப் புதிது புதிதாகச் சட்டமியற்றுகிறது. பணிப் பாதுகாப்பு முதல் வேலை நிறுத்த உரிமை வரை தொழிலாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிக்கிறது. குடிநீருக்காகப் போராடும் விவசாயிகளைக்கூட (ராஜஸ்தான்) கூசாமல் சுட்டுத்தள்ளுகிறது. அதன் பிறகும் மக்கள் போராடக்கூடும் என அஞ்சுவதால் போலீசை நவீனமாக்குகிறது; போலீசுக்கும் இராணுவத்துக்கும் ஆளெடுத்து கோக்குக்கும் பெப்சிக்கும் காவலுக்கு நிறுத்துகிறது. அட்டூழியங்கள், கொலைகள் ஒவ்வொன்றுக்கும் போலீசுக்குப் பரிசளித்துக் குளிப்பாட்டுகிறது. தெருவுக்குத் தெரு “போலீசு நண்பர்கள்’ என்றொரு ஐந்தாம்படையை உருவாக்கி மக்களை வேவு பார்க்கிறது.

இதுதான் அரசு. இதில் இரகசியமோ மூடு மந்திரமோ இல்லை. வாஜ்பாயி, மன்மோகன்சிங், கருணாநிதி, ஜெயலலிதா என்று நாற்காலியைத் தேய்க்கும் நாயகர்கள் யாராக இருந்தாலும் நடந்து கொண்டிருப்பது இதுதான். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நரசிம்மராவ் அரசு. அதற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. அன்று முதல் நடந்து வருவது உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி! “தாராள இறக்குமதியும், காப்புரிமைச் சட்டமும் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகள்” என்று அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலேயே பேசவில்லையா? “பேருந்து, மின் கட்டண உயர்வுகள் உலகவங்கியின் உத்தரவு” என கருணாநிதியும் ஜெயலலிதாவும் சட்டசபையில் சொன்னதில்லையா?

நடப்பது உலக வங்கி உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி. அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் போடும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதுதான் இந்தியாவின் பட்ஜெட். இந்தியாவில் இத்தனைக் கோடி டாலருக்கு குடிதண்ணீர் விற்க வேண்டுமென கோக்கும் பெப்சியும் அமெரிக்காவில் முடிவு செய்தால் அதற்கு ஆவன செய்யும் அடிமைதான் இந்த அரசாங்கம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எல்லா ஏழை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

மறுகாலனியாக்கமா, முன்னேற்றமா?

இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். அமெரிக்காவுக்கும் பிற வல்லரசுகளுக்கும் நாட்டை அடிமையாக்கும் சதித்திட்டம் என்கிறோம். இதுதான் முன்னேற்றம் என்றும் நாடு வல்லரசாக மாறக் கிடைத்த நல்வாய்ப்பு என்றும் கொண்டாடுகிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். இதற்குக் காரணமிருக்கிறது. டாடா, பிர்லா, அம்பானி, டி.வி.எஸ்., எஸ்ஸார், தாபர், மல்லையா, சிங்கானியா, பஜாஜ், ஜிண்டால் போன்ற பரம்பரைத் தரகு முதலாளிகளில் தொடங்கி கலாநிதி மாறன், சந்திரபாபு நாயுடு போன்ற திடீர்த் தரகு முதலாளிகள் வரை அனைவரும் கடந்த பத்தே ஆண்டுகளில் பார்த்திருக்கும் லாபம் பல லட்சம் கோடி.

இந்தியாவில் எதையெதை விழுங்கினால் கொள்ளை லாபம் என்று அந்நிய முதலாளிகளுக்கு இவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்; ஓட்டுக் கட்சிகளுக்கு ஆணையிடுகிறார்கள்; அடுத்த கணமே சட்டங்கள் நிறைவேறுகின்றன.

ஆலைகளும், ஆறுகளும், சுரங்கங்களும் விற்கப்படும்போது, பொதுச்சொத்தில் ஒன்று குறையும் போது ஓட்டுப் பொறுக்கிகளின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு கூடுகிறது. ஓட்டுப் பொறுக்கிகள் தொழிலதிபர்களாக முன்னேறுகிறார்கள்; தொழிலதிபர்களோ நேரடியாக எம்.எல்.ஏ., எம்.பி.யாகிறார்கள். ஓட்டுக் கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். அங்கே பன்னாட்டு நிறுவன அதிகாரிகளாகப் பதவியைப் பெறுகிறார்கள்.

ஐதராபாத் மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரைமணிநேரம் தண்ணீர் விடுகிறது நகராட்சி. அந்த நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லிட்டர் 25 காசு விலையில் கொக்கோ கோலாவுக்கு விற்றார் சந்திரபாபு நாயுடு. தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் விட மறுத்த கிருஷ்ணா, கர்நாடகத்தின் காவிரி நீரை பன்னாட்டு கம்பெனிக்கு எழுதித் தருகிறார். கர்நாடகத்திடமும், ஆந்திரத்திடமும் தண்ணீருக்குக் கையேந்தும் ஜெயலலிதா, தாமிரவருணித் தண்ணீரை அமெரிக்க கோக்கிற்கு அள்ளி வழங்குகிறார். “ரத்தப் புற்று நோய்க்கான மருந்தை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடாது” என்று சென்னை நீதிமன்றத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் வக்கீலாக நின்று வாதாடி ஜெயித்துக் கொடுக்கிறார் ப.சிதம்பரம்.

பிரிட்டிஷாருக்கு நாட்டை அடிமையாக்கி விட்டு அவனிடம் பென்சன் வாங்கிக் கொண்டு பதவியில் நீடித்த மன்னர்களைப் போல, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விற்பதற்காகவே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், சட்டம் ஆகிய அனைத்தையும் இதற்கேற்ப திருத்தியமைக்கிறார்கள். இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம்.

 தண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு! உலகெங்கும் தோல்வி!

ஏழை நாடுகளின் மீது மறுகாலனியாக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள்.உலக வங்கி என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான வங்கியுமல்ல; ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கெல்லாம் கடனுதவி வழங்கும் வள்ளலுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை எல்லா ஏழை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது, அதற்கேற்ப சட்டதிட்டங்களைத் திருத்தியமைக்குமாறு அந்நாட்டு அரசுகளை நிர்ப்பந்திப்பது,

ஆட்சிகள் மாறினாலும் எந்த நாட்டிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனத்துக்கோ சுரண்டலுக்கோ ஊறு நேராமல் உத்திரவாதப்படுத்துவது, உலக முதலாளித்துவத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்துவது — என்பவைதான் உலக வங்கியின் பணிகள்.
உலக வங்கியின் விதிகள் 1944இல் உருவாக்கப்பட்டவை. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் 85 சதவீத வாக்குகள் வேண்டும் என்கிறது அந்த விதி. ஆனால் வங்கியின் 17 சதவீதப் பங்குகளை அமெரிக்கா நிரந்தரமாகத் தன் கையில் வைத்திருக்கிறது. அதாவது, தான் விரும்பாத எந்த முடிவையும் அமெரிக்கா “வீட்டோ’ செய்து தடுத்துவிட முடியும். உலகவங்கியின் தலைவரை நியமிக்கும் உரிமையும் அமெரிக்க அதிபருக்கு மட்டுமே உண்டு.

சுருக்கமாகச் சொன்னால், உலக வங்கி என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகள் நடத்தும் இந்தக் கந்துவட்டி பைனான்சு கம்பெனியின் நோக்கமே ஏழை நாடுகளை அடகுபிடிப்பதுதான்.

உலக வங்கி உதவி, தனியார்மய சதி!

“குடிநீர்த் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, பாசனத் திட்டத்துக்கு உலக வங்கி உதவி, தூர்வாருவதற்கு உலக வங்கி உதவி” என்று உலக வங்கி அள்ளிக் கொடுக்கும் கடனுதவிகள் எல்லாம் ஏழை நாடுகளின் நீர்வளத்தை மேம்படுத்துவதற்காகத் தரப்படும் உதவிகள் அல்ல; அவற்றை விழுங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செய்யப்படும் “உதவிகள்’.

பல்வேறு ஏழை நாடுகளின் நீர் வளங்களையும், நகரக் குடிநீர் விநியோகத்தையும் பிடுங்கி அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை 1990ஆம் ஆண்டு முதற்கொண்டே தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது உலகவங்கி.

“தண்ணீர் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் உரிமையுள்ள இயற்கையின் கொடை அல்ல அது காசுக்கு விற்க வேண்டிய சரக்கு; தண்ணீர் மனிதனின் அடிப்படை தேவையல்ல காசு தருபவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை; தண்ணீர் மனிதகுலமே போற்றிப் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமல்ல அது முதலாளிகள் லாபம் பார்ப்பதற்கான முதலீடு” — என்பதுதான் உலகவங்கியின் கொள்கை.

“மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் குடிநீர் வழங்குவது, விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்குவது” என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டுமென்று பகிரங்கமாக அறிவிக்கிறது உலகவங்கி. ஒழித்துக் கட்டியுமிருக்கிறது.

பணக்கார நாடான அமெரிக்காவிலோ ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல; ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகளில்தான் உலக வங்கி தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. கடன்பட்டு வட்டி கட்ட முடியாமல் திணறும் ஏழை நாட்டு அரசுகளை மிரட்டி “தண்ணீரை தனியார்மயமாக்க ஒப்புக் கொள்வதாக’ எழுதி வாங்கியிருக்கிறது. மறுத்தால் அந்த நாடுகளுக்கு வேறு யாருமே கடன் கொடுக்க விடாமல் தடுப்பது, அந்நாடுகளின் வணிகத்தை முடக்குவது, கடனை உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லி மிரட்டுவது என ஒரு கந்து வட்டிக்காரன் செய்யக்கூடிய எல்லா ரவுடித்தனங்களையும் செய்து காரியத்தைச் சாதித்திருக்கிறது.

அந்த நாடுகளின் நாடாளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ தெரிந்தால் அரசியல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் ரகசிய ஒப்பந்தங்கள் மூலமே பல நாடுகளின் தண்ணீர் வளத்தை பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.

நரியைப் பரியாக்கும் வித்தை!

தனியார்மயத்தைச் சாதிக்க உலகவங்கி கையாளும் உத்திகள் நரித்தனமானவை. ஏற்கெனவே இலவசக் குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கவேண்டும். பிறகு கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். “கட்டணம் அதிகம் அரசின் சேவை மோசம்” என்ற கருத்து மக்களுக்கு ஏற்படத் தொடங்கியவுடனே “தரமான சேவை’ என்று கூறி தனியார்மயத்தை அறிமுகப்படுத்தும் வேலையையும் அந்த அரசே முன்நின்று செய்ய வேண்டும் — இதுதான் தண்ணீர் தனியார்மயத்திற்கு உலகவங்கி போட்டுத் தந்திருக்கும் பாதை. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு இதே பாதைதான் நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1990 முதல் 2002ஆம் ஆண்டு வரை குடிநீருக்காக உலகவங்கி கொடுத்த 276 கடன்களில் 84 கடன்கள் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நிபந்தனையோடு கூடியவை. 1996 முதல் 1999 வரை கொடுக்கப்பட்ட மற்ற கடன்கள் 193 இல் 112க்கு தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனை.

உலக வங்கியின் நிபந்தனைக்கிணங்க தண்ணீரைத் தனியார்மயமாக்கிய நாடுகளில் நடந்தது என்ன? சில அனுபவங்களைக் காண்போம்:

பொலிவியா (தென் அமெரிக்கா) நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் நீர்விநியோகத்தை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 40 ஆண்டு குத்தகைக்கு விட்டது நகராட்சி.

“தண்ணீரைத் தனியாருக்கு விட்டால்தான் கடன் தருவேன்” என 1996இல் அந்த மாநகராட்சியை நிர்பந்தித்தது உலக வங்கி. “பொலிவியாவின் கடன்களை அடைக்க காலநீட்டிப்பு தரவேண்டுமானால் தண்ணீரைத் தனியார்மயமாக்கு” என 1997இல் பொலிவிய அரசையும் மிரட்டியது. குடிநீருக்கு மானியம் தரக்கூடாதென 1999இல் நிர்பந்தம் கொடுத்தது. கடைசியில் 2000ஆவது ஆண்டு கொச்சபம்பா நகர குடிநீர் விநியோகத்தை பெக்டெல் நிறுவனம் கைப்பற்றியது.

உடனே குடிநீர்க் கட்டணம் 200% முதல் 500% வரை உயர்த்தப்பட்டது. மாதம் 2000 ரூபாய் சம்பாதிக்கும் சாதாரணத் தொழிலாளர்களின் குழாய் நீர்க் கட்டணம் 200இலிருந்து 800 ரூபாயாக உயர்ந்தது. சோறா தண்ணீரா, மின்சாரமா தண்ணீரா, பிள்ளைகளின் கல்வியா தண்ணீரா என்று முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்தனர். “தண்ணீர் எனக்குச் சொந்தமென்றால் மழையும் எனக்குச் சொந்தம். மழைநீர் சேமிக்கும் விவசாயிகளும் வரி கட்டி எங்களிடம் அனுமதி பெற வேண்டும்” என்று அறிவித்தது பெக்டெல்.

உடனே வெடித்தது மக்கள் போராட்டம். 3.5 லட்சம் மக்கள் திரண்டனர். பொலிவிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 170 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்து நடுக்காட்டிலுள்ள சிறையில் அடைத்தது அரசு. எனினும் போராட்டம் வெற்றி பெற்றது.

பெக்டெல் வெளியேறியது. ஆனால், தான் சம்பாதித்திருக்கக் கூடிய லாபத்தின் ஒரு பகுதியாக சுமார் 200 கோடி ரூபாயை பொலிவிய அரசு இழப்பீடாகத் தரவேண்டுமென, உலக வங்கி நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களிடமிருந்து குடிக்கிற தண்ணீருக்குக் காசு பிடுங்க முடியாத அந்த அமெரிக்க நிறுவனம், குடிக்காத தண்ணீருக்கு 200 கோடிரூபாய் வசூலிக்கப் போகிறது — பொலிவிய மக்களின் வரிப்பணத்திலிருந்து.

பிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவில் மாநகராட்சியின் குடிநீர்ச் சேவை மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தது. குழாய்கள் உடைந்து தண்ணீர் கசிவது, தண்ணீர்த் திருட்டு, முறையான சேவையின்மை என தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கான எல்லா முகாந்திரங்களும் அங்கே இருந்தன.

உலகின் இரண்டாவது பெரிய பன்னாட்டுத் தண்ணீர்க் கம்பெனியான சூயஸ் நிறுவனத்திடம் 1997இல் மணிலா நகரின் தண்ணீர் விநியோகம் ஒப்படைக்கப்பட்டது. முதல் சில ஆண்டுகளில் நன்றாக இருந்த சேவை, போகப் போக நகராட்சிச் சேவையைக் காட்டிலும் மோசமாக மாறத் தொடங்கியது. தண்ணீர்க் கட்டணமோ 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. “மீட்டரைப் பார்த்துக் குறிப்பதற்குக் கட்டணம், குழாய் ரிப்பேர் செய்ய வந்தால் 2500 ரூபாய் என்று விதவிதமாகக் கொள்ளையடிக்கிறார்கள். சேவையே வழங்காமல் காசு பார்க்க அலைகிறார்கள்” என்பதுதான் மணிலா மக்கள் தனியார் “சேவை’யைப் பற்றித் தெரிவித்த கருத்து.

“தண்ணீர்ச் சேவைக்கான கட்டணத்தை டாலரில் செலுத்த வேண்டும்” என்பது பிலிப்பைன்ஸ் அரசுடன் சூயஸ் போட்டிருந்த ஒப்பந்தம். டாலருக்கெதிராக பிலிப்பைன்ஸ் நாணயமான பெசோவின் மதிப்பு வீழ்ந்து விட்டதால் அதற்கு 1400 கோடி ரூபாய் நட்டஈடு கேட்கிறது சூயஸ். டிசம்பர் 2002இல் சூயஸ் வெளியேறிவிட்டது.

உடைந்து ஒழுகும் குடிநீர்க் குழாய்களையும், கழிவுநீர்க் குழாய்களையும் சரி செய்து பழையபடி மாநகராட்சியை வைத்து இயக்குவதற்கான செலவை இனி அந்த அரசுதான் ஏற்கவேண்டும். இதுதான் தனியார்மயத்தால் பிலிப்பைன்ஸ் நாடு கண்ட பலன்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நெல்சல் மண்டேலாவின் தலைமையில் 1994இல் ஆட்சி அமைத்தது. “எனது ஆட்சியின் அடிப்படைக் கொள்கை தனியார்மயம்தான்” என்று ஆட்சிக்கு வந்தவுடனேயே அறிவித்தார் மண்டேலா. உலகவங்கியோ “தென் ஆப்பிரிக்கா எங்கள் சோதனைச் சாலை” என்றது.

1998இல் தலைநகரம் ஜோகனஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ், விவென்டி, பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. மீட்டர் விலை 7500 ரூபாய். தண்ணீர்க் கட்டணம் மாத வருவாயில் 30 சதவீதத்தை விழுங்கியது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் இரண்டே ஆண்டுகளில் 1 கோடி மக்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் காவல்படையுடன் தண்ணீர்க் கம்பெனி ஊழியர்கள் வந்து இறங்கி குழாய் இணைப்பைத் துண்டிப்பதும் அந்த இடத்தில் கலவரம் வெடித்து ரத்தக் களரியாவதும் அன்றாட நடைமுறையானது.

வீட்டில் குழாய் வசதி இல்லாமல் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் குடிசைவாழ் மக்களையும் பன்னாட்டுக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் காசு பிடுங்க ப்ரீ பெய்டு கார்டு (செல்போனுக்கு உள்ளதைப் போல முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பெறும் அட்டை) முறையை அமலாக்கின. குழாயின் மீட்டரில் அட்டையைச் செருகினால் தண்ணீர் வரும். அட்டையில் காசு தீர்ந்துவிட்டால் தண்ணீரும் நின்று விடும்.

“கையில காசு வாயில தண்ணி” என்ற இந்த வக்கிரமான முறை காரணமாக ஏழைகள் குளம் குட்டைகளிலிருந்து மாசுபட்ட தண்ணீரைக் குடிக்குமாறு தள்ளப்பட்டனர். கார்டு முறை அமல்படுத்தப்பட்ட ஆறே மாதத்தில் குவாசுலூ நகரில் காலரா தொடங்கி தலைநகர் வரை பரவியது. இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 265 பேர் இறந்தனர். முன்னர் அதேநகரில் வெள்ளை நிறவெறி ஆட்சியின்போது காலரா பரவி 24 பேர் இறந்ததால், நிறவெறி அரசு 9 பொதுக் குழாய்களை அமைத்திருந்தது. அந்தக் குழாய்களுக்கும் மீட்டர் போட்டு சாவு எண்ணிக்கையை 265 ஆக்கியது “கறுப்பின’த் தலைவரின் ஆட்சி.

தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து “உடையுங்கள் மீட்டரை சுவையுங்கள் தண்ணீரை” என்ற மக்கள் இயக்கம் அங்கே பரவத் தொடங்கியதும் பயந்து போன அரசு, குழாய் இணைப்புள்ள வீடுகளில் “ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் இலவசம். அதற்கு மேல் காசு” என்று அறிவித்தது.

குடிக்க, குளிக்க, துவைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இது எப்படிப் போதும்? “5 நாளுக்கு ஒருமுறை குளி, ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல் கக்கூசுக்குத் தண்ணீர் ஊற்றாதே” என்று பிரச்சாரம் செய்தது அரசு. கழிவறைக்கு இப்போது பழைய செய்தித்தாளைப் பயன்படுத்துகிறார்கள் ஏழைமக்கள்.

இதை எதிர்த்து மக்கள் குழாய்களை உடைக்கத் தொடங்கியதால், குடிசைப் பகுதிகளில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வருவது போல குழாய்களுக்குள் அடைப்பான்களை வைத்து விட்டன தண்ணீர்க் கம்பெனிகள்.

மக்களின் போராட்டம் தொடர்கிறது. தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதனால் “கறுப்பின’ ஆட்சியில் 73% கறுப்பின மக்களுக்கு குடிநீர் இல்லை. 97% வெள்ளையர்கள் தண்ணீரை அனுபவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில், கறுப்பின அரசைக் கொண்டே வெள்ளை நிறவெறியைப் புதிய வடிவத்தில் அமல்படுத்த வைத்திருக்கிறது தனியார்மயக் கொள்கை.

தண்ணீர் தனியார்மயம்: படுதோல்வி!

இவை மூன்று உதாரணங்கள் மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் நடத்தும் தண்ணீர் விநியோகம் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலேயே கூட வெற்றியடையவில்லை.

“சுத்தமான குடிநீர் தரமான சேவை’ என்ற அவர்களது முழக்கம் முழுப் பொய். இரசாயனக் கழிவுகள் கலந்த மோசமான தண்ணீரை விநியோகித்ததற்காகவே பல நாட்டு மக்கள் இக்கம்பெனிகளை விரட்டி யிருக்கிறார்கள். நகராட்சிக் குழாய் நீரைப் பிடித்து பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்பனை செய்த கோக் நிறுவனம் சமீபத்தில் பிரிட்டனில் பிடிபட்டது. கழிவு நீரை ஆற்றில் விடுவது, சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது என எல்லா மோசடிகளுக்காகவும் இவர்கள் பிடிபட்டிருக்கின்றனர். முதன்முதலில் தண்ணீர் தனியார்மயம் அமலாக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டும் 1989 முதல் 1997க்குள் 128 வழக்குகளில் தனியார் கம்பெனிகள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று அபராதம் கட்டியுள்ளனர்.

ஏழை நடுத்தர மக்களின் மாத வருவாயில் மூன்றிலொரு பங்கு வரை கட்டணமாக வசூலித்துக் கொள்ளையடித்தது ஒன்றுதான் தனியார்மயத்தை வரவேற்றவர்களுக்கு முதலாளிகள் தந்த பரிசு. “காசில்லாமல் குடிநீர் இல்லை’ என்பதால் தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் காலரா, வயிற்றுப் போக்கு, குடற்புண் போன்ற நோய்களுக்கு இரையாகியிருக்கிறார்கள்.

 பன்னாட்டு முதலாளிகள் நீர்வளத்தைக் கைப்பற்றுவதற்கே உலக வங்கியின் “உதவிகள்’!

மக்களின் எதிர்ப்புகள் எவ்வளவு வந்தபோதும், “தனியார்மயம் தோல்வி’ என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட போதும் உலக வங்கி எள்ளளவும் பின்வாங்குவதில்லை. உலகின் நீர்வளம் அனைத்தையும் கைப்பற்றி, குடிநீரை மட்டுமின்றி உலகின் உணவு உற்பத்தி முழுவதையுமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே உலக வங்கியின் நோக்கம்.

எனவேதான், தனியார்மயத்தைத் திணிப்பதற்கான புதிய புதிய வழிமுறைகளை உலக வங்கி அறிமுகப்படுத்துகிறது. தண்ணீர் வளத்தை முழுமையாகத் தனியார்மயமாக்கும் “கொச்சபம்பா மாடல்’ முதலாளித்துவத்திற்கே எதிரான வெறுப்பை மக்களிடம் தோற்றுவிப்பதால் “தனியார் மக்கள் கூட்டுக் குடிநீர்த் திட்டம்’ என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளை உள்ளே திணிக்கிறது, அல்லது, “சுத்திகரிப்பதற்குப் பன்னாட்டுக் கம்பெனிகள், விநியோகிப்பதற்கு மாநகராட்சி’ எனக் கொல்லைப்புறம் வழியே தனியார்மயத்தை நுழைக்கிறது.

“தண்ணீர் என்பது மனிதனின் ஜீவாதார உரிமை. அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்குவது அரசின் கடமை” என்ற கருத்தையே மக்கள் மனதிலிருந்து ஒழித்து, “எண்ணெய் எரிபொருளைப் போல தண்ணீரும் ஒரு விற்பனைச் சரக்கு; அதை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு” என்ற கருத்தை நிலைநாட்டுவதுதான் உலக வங்கியின் உடனடி நோக்கம். “தண்ணீருக்கு விலை’ என்பதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் காலப் போக்கில் “விலை உயர்வை’ச் சகித்துக் கொள்ளவும் பழகிவிடுவார்கள்; தனியார்மயத்தையும் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்பதே உலகவங்கியின் கணக்கு.

உலக வங்கியின் நோக்கம் என்ன?

உலக வங்கி தன்னுடைய நோக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது. “தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திடமிருந்து பிடுங்கி ஒரு சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகத் தண்ணீரின் விலையை மலிவாக நிர்ணயம் செய்யும் அபாயத்தை அப்போதுதான் தடுக்க முடியும்” என்று டிசம்பர் 2003இல் ம.பி. மாநில அரசுக்குக் கொடுத்த கடனுக்கான நிபந்தனையாக உலக வங்கி இதைத் தெரிவிக்கிறது.

1998இல் மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் துறை குறித்த அறிக்கை “பாசனநீரின் விலையைப் படிப்படியாக உயர்த்த முடியாது. அதிரடியாக உயர்த்துவதுதான் நல்ல பலனைத் தரும் என்று ஆந்திர அனுபவம் காட்டுகிறது” எனக் கூறுகிறது.

மைய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மே 1999இல் வெளியிட்டுள்ள ஆவணம் உலக வங்கியின் முடிவுகளை வழி மொழிகிறது. “தண்ணீர்ச் சேவை என்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டு வர்த்தக நோக்குடன் நடத்தப்பட வேண்டும். போட்ட முதலுக்கு போதிய லாபமும் ஈட்ட வேண்டும்” என்கிறது.

ணி ஓரளவு வாங்கும் சக்தியுள்ள நுகர்வோர் நிறைந்த நகர்ப்புறங்களில் குடிநீர் விற்பனையை கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாற்றி அதனைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல்.

ணி வாங்கும் சக்தியில்லாத ஏழை விவசாயிகள் நிறைந்த கிராமப்புறத்தில் பாசனக் கால்வாய்கள் மற்றும் ஏரி குளங்களை உள்ளூர்ப் பண்ணையார்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் ஒப்படைத்து பாசனக் கட்டணம் வசூலித்தல்; இலவச மின்சாரத்தை ரத்து செய்வதன் மூலம் குழாய்க் கிணற்றுப் பாசனத்தை முடக்குதல்; இதன் மூலம் ஏழை நடுத்தர விவசாயிகளை மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளையும் விவசாயத்தை விட்டே வெளியேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பண்ணையார்களின் கட்டுப்பாட்டிற்குள் விவசாயத்தைக் கொண்டு வருதல்.
— இந்தியாவின் நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் தண்ணீரின் மூலம் அடிமைப்படுத்த உலக வங்கி வகுத்திருக்கும் இரண்டு அம்சத் திட்டம் இதுதான்.

உலகின் உணவு உற்பத்தி முதல் தொழில் உற்பத்தி வரையிலான அனைத்தையும், காடுகள், மலைகள், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்ற வேண்டும். அவற்றைத் தாம் விரும்பிய வகையில் சூறையாடவும், கொள்ளை லாபமீட்டவும் உலக முதலாளிகள் உரிமை பெற்றிருக்க வேண்டும். இதற்குத் தடையாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்கள், மக்களின் உரிமைகள், அரசியல் ரீதியான இடையூறுகள் ஆகியவற்றை அகற்றுவதுடன் தொலைநோக்குடன் சிந்தித்து பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குப் பாதையும் அமைத்துத் தரவேண்டும் — இவைதான் உலக வங்கியின் நோக்கங்கள்.

இதனடிப்படையில் அது வகுத்துள்ள தண்ணீர் தனியார்மயத் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்கெனவே பல்வேறு படிநிலைகளில் அமலாகிக் கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு சான்றுகளைப் பார்த்தாலே போதும், வரவிருக்கும் விபரீதத்தை நாம் புரிந்து கொண்டு விட முடியும்.

ஏக்கருக்கு 8000 ரூபாய் பாசனவரி மகாராட்டிரா சட்டம்!

ஆறு குளம் ஏரி போன்ற பொது நீர் நிலைகளிலிருந்து பாரம்பரியமாகப் பாசனம் செய்து வரும் விவசாயிகள் அந்தத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. இந்த ஆணையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் விதத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று மகாராட்டிர அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

“மகாராட்டிரா நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்” என்ற இந்தச் சட்டம், “நீர்வளத்தைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, இயக்குவது ஆகிய அனைத்துச் செலவுகளையும் ஈடு செய்யும் விதத்தில் தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்படும்” என்கிறது. “இதன்படி ஒரு ஏக்கர் பாசனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8000க்கும் மேல் ஒரு விவசாயி செலுத்த வேண்டியிருக்கும்” என்கிறார் முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் திரு. தேசர்தா.

இதுமட்டுமின்றி, “பல மாவட்டங்களில் சொட்டு நீர்ப்பாசன முறை மட்டும் தான் அனுமதிக்கப்படுமென்றும், இந்தக் கருவிகளை நிறுவாத விவசாயிகளுக்குப் பாசன நீர் தரப்பட மாட்டாது” என்றும் கூறுகிறது இச்சட்டம். இக்கருவிகளை நிறுவுவதற்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவாகும். அதனை இயக்குவது மற்றும் பராமரிப்பதற்கான செலவுகள் தனி. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட விவசாயிகள் ஒன்றரை மடங்கு பாசனவரி கட்டவேண்டுமென்றும் கூறுகிறது இச்சட்டம். அதாவது ஏக்கருக்கு 12,000 ரூபாய்.

“தண்ணீரின் விலையை அரசாங்கம் தீர்மானிக்காது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீர்வளத்துறை வல்லுநர், தனியார்துறை முதலாளி ஆகிய மூவர் கொண்ட “ஒழுங்குமுறை ஆணையம்’தான் ஆண்டுதோறும் பாசன நீரின் விலையை நிர்ணயம் செய்யும்” என்றும் கூறுகிறது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தின் விளைவை ஒரே வரியில் சொல்கிறார் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கத் தலைவர். “இதுவரை பாசன வசதி இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான் தற்கொலை செய்து கொண்டார்கள். இனி பாசன வசதி பெறுபவர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!”

ஏப்ரல் மாதம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கையோடு

மே 10ஆம் தேதியன்று, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது மகாராட்டிர அரசு. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்று விளக்கமும் சொல்லியிருக்கிறது.

பாசன நீரையும், நிலத்தடி நீரையும் விவசாயிகளிடமிருந்து “பாதுகாத்து’ பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை கச்சிதமாக முடித்து விட்டது காங்கிரசு அரசு. இப்படியொரு சட்டம் கொண்டு வரப் போவதாக எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் சட்டத்தின் நகலை சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூடப் படிக்கத் தராமல், ஒரே நாளில் 16 சட்டங்களில் ஒன்றாகக் குரல் ஓட்டு மூலம் விவசாயிகள் மீதான இந்த “மரண தண்டனை’ நிறைவேற்றப்பட்டு விட்டது.
தமிழகத்திலும் பாசனநீருக்கு வசூல்!

பாசன நீருக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வசூலிப்பது என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறொரு வழிமுறையையும் உலக வங்கி கையாள்கிறது. இந்த வழிமுறை தமிழ்நாட்டில் தற்போது மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

“புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், ஏரிகள், கிளைக் கால்வாய்கள் ஆகியவற்றைப் புனரமைத்துப் பயனாளிகளின் பொறுப்பிலேயே அவற்றைப் பராமரிக்க வழிவகை செய்யவும் நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம்2 என்ற திட்டத்தினை 3900 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு தயாரித்து, இதற்கு உலக வங்கியின் நிதி உதவியைப் பெற உள்ளது” என்று மார்ச் 23ம் தேதியன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.

அதாவது, அணைக்கட்டுகள் முதல் பாசனக் கால்வாய்கள் வரை எதையும் இனி அரசு தன் செலவில் பராமரிக்காது. அதைப் பயன்படுத்துபவர்கள்தான் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது அரசு. அதாவது, பாசனநீருக்குப் பணம் கொடுக்க முடிந்த விவசாயிக்கு மட்டும்தான் தண்ணீர். மற்றவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு பணம் கொடுப்பவர்களுக்குப் பெயர்தான் “பாசன நீர்ப் பயனாளிகள்’.

ஒவ்வொரு பாசனப் பகுதியிலும் “பாசன விவசாயிகள் சங்கம்’ என்ற ஒன்றை உருவாக்க வேண்டுமாம். 25 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள “விவசாயி’தான் அதன் தலைவராக முடியுமாம். தண்ணீரின் விலை அங்கே தீர்மானிக்கப்படுமாம். இதுதான் உலக வங்கியின் திட்டம். தமிழக அரசின் பொதுப்பணித்துறையே முன்நின்று பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பாசன நீரைப் பெறுவதற்கு விவசாயிகள் கொண்டிருந்த பாரம்பரிய உரிமைகளும், நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டு விட்டன. “பணம் கொடுப்பவனுக்குப் பாசனநீர்” என்ற இந்த விதி ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டுத் துரத்தும். அவர்களது நிலங்களைப் பண்ணையார்கள் பறித்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.

இவையெதுவும் வெறும் ஊகமல்ல. ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், “தண்ணீர்ப் பஞ்சாயத்து’ என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பாசன நீர் முழுவதையும் பண்ணையார்களிடம் ஒப்படைப்பதில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் “தண்ணீர்ப் பயனாளிகள் சங்கத்தை’த் துவக்கி வைப்பதற்கு வந்த உலக வங்கித் தலைவர் உல்பன்சனையும், “பயனாளி’ களையும் விரட்டியடித்தார்கள், தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்ட ஏழை விவசாயிகள்.

விவசாயத்தை அழிப்பதே நோக்கம்!

விவசாயிகள் தற்கொலையில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஆந்திர மாநிலம். உலக வங்கியோ, “பாசனச் சீர்திருத்தத்தில்’ ஆந்திர அரசு காட்டிய மன உறுதியை மெச்சுகிறது. எல்லா மாநிலங்களும் இதனைப் பின்பற்றப் பரிந்துரைக்கிறது.

அவ்வாறு பின்பற்றினால் அதன் விளைவு என்ன? கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர விவசாயிகள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்படுவார்கள். சிறு, நடுத்தர விவசாயிகள் அழிந்தால் இந்நாட்டின் உணவு உற்பத்தித் தற்சார்பு அழியும். பெரும் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயத்தைக் கைப்பற்றி அதனை ஏற்றுமதிக்கான தொழிலாக மாற்றியமைப்பார்கள். தண்ணீரை விற்பனைச் சரக்காக்குவதன் மூலம் நாட்டின் உணவுச் சங்கிலியையே பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விட முடியும். உலக வங்கியின் நோக்கமும் அதுதான்.

டில்லியில் தீவட்டிக் கொள்ளை!

நகர்ப்புற நீர் விநியோகத்தைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் 19 பெருநகரங்களில் அதிகாரபூர்வமாகவும், மேலும் 21 நகரங்களில் அதிகாரபூர்வமற்ற முறையிலும் அமலாகி வருகின்றது. முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதன் விளைவாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கெதிரான கோபம் மக்களிடம் உருவாகி விடுவதால், “அரசுத்துறை தனியார் துறைக் கூட்டு’ என்ற பெயரில் இது அமல்படுத்தப்படுகிறது.

டில்லி குடிநீர் வாரியத்தின் குடிநீர்ச் சுத்திகரிப்புப் பணியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் “சோனியா விகார்’ என்ற திட்டத்தின் விவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. இவற்றைப் படித்த பின்னர் இதனைத் “தனியார்மயம்’ என்று அழைக்கக்கூடாது; “தீவட்டிக் கொள்ளை’ என்று அழைப்பதே பொருத்தமானது என்ற முடிவுக்குத்தான் வாசகர்கள் வரமுடியும்.

நாளொன்றுக்கு 270 கோடி லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து விநியோகம் செய்து வரும் டெல்லி குடிநீர் வாரியத்தால், கூடுதலாக 63 கோடி லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியவில்லையாம். சூயஸ் என்ற உலகின் இரண்டாவது பெரிய தண்ணீர்க் கம்பெனியின் கிளை நிறுவனமான ஒன்டியோ டெக்ரிமாண்ட் நிறுவனத்திடம் இந்தச் சுத்திகரிப்புப் பணியை ஒப்படைத்துள்ளது.

உ.பி. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அவர்களது பாசன நீரைப் பறித்து, கங்கையிலிருந்து குழாய் போட்டு தண்ணீரை டெல்லிக்குக் கொண்டு வருகிறது அரசு. விவசாயிகள் குழாயை உடைக்காமல் பாதுகாக்க ஆயுதப் போலீசு வழிநெடுகிலும் காவல் காக்கிறது.

சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான செலவு 200 கோடி ரூபாயை டெல்லி குடிநீர் வாரியமே ஏற்கிறது. ஆலை கட்டுவதற்கான நிலமும், இயங்குவதற்கான மின்சாரமும் இலவசம். சுத்திகரிக்கும் குடிநீரை மக்களுக்கு விநியோகிக்கும் பணியையும் சூயஸ் நிறுவனம் செய்யாது. மழைக் காலத்திலோ, குளிர் காலத்திலோ மக்களின் தண்ணீர்த் தேவை குறைவாக இருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட 63 கோடி லிட்டரையும் டெல்லி குடிநீர் வாரியம் வாங்கியே தீர வேண்டும். ஏதாவது காரணத்தினால் கங்கையிலிருந்து தண்ணீர் குறைவாக வந்தாலும் வரவே இல்லையென்றாலும் 63 கோடி லிட்டர் தண்ணீருக்கான சுத்திகரிப்புக் கட்டணத்தை குடிநீர் வாரியம் தந்துவிட வேண்டும். ஒப்பந்தக் காலமான 10 ஆண்டுகளிலும் சூயஸ் நிறுவனம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் பெறுவதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். சிறப்பான சேவைக்கு ஊக்கத் தொகை தனியே வழங்க வேண்டும்.

மேற்கூறியவை அனைத்தும் ஒப்பந்தத்தின் ஷரத்துகள். இவையனைத்தைக் காட்டிலும் வக்கிரமான ஒரு உண்மை பாக்கியிருக்கிறது. அதாவது, 100 லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கான கட்டணமாக சூயஸ் நிறுவனத்துக்கு, டெல்லி குடிநீர் வாரியம் கொடுக்கவிருக்கும் தொகை, 100 லிட்டர் தண்ணீருக்கு மக்களிடம் வசூலித்து வரும் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாம்!

அதாவது இந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அழைத்ததால் ஆகும் கூடுதல் செலவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அல்லது, குடிநீர்க் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சூயஸ் நிறுவனத்தின் கொள்ளைக்கு மக்கள் காணிக்கை செலுத்த வேண்டும். தனியார்மயத்தின் “திறமை’ இதுதான்.

வெறும் 100 கோடி ரூபாயில் டில்லி குடிநீர் வாரியமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்துவிட முடியும் என்றும், யமுனை நதியிலிருந்தே நீரை எடுத்துச் சுத்திகரிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள் நீர்வள வல்லுநர்கள். ஒப்பந்த விவரங்களை வெளியிடக் கோரி பலமுறை போராடியும் ரகசியம் காக்கிறது குடிநீர் வாரியம். சூயஸ் நிறுவனம் நடத்தும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில், போதிய பாதுகாப்பு இல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் கடந்த ஆறே மாதத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சோனியா விகார் திட்டத்தில் சூயஸ் நிறுவனத்தைக் கொண்டுவந்து அரசு சாதித்ததென்ன? பெண்ணைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிச் சம்பாதிக்கவும் வைத்து அதன்பின் வரதட்சிணையும், நகையும், வண்டியும் வாங்கிக் கொடுத்து எவனாவது ஒரு குரங்கிடம் ஒப்படைப்பதற்கும் இந்தத் “தனியார்மயத்திற்கும்’ என்ன வேறுபாடு?

தற்போது சோனியா விகார் மட்டுமின்றி மொத்த டில்லி நகரின் குடிநீர் விநியோகத்தையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. (பார்க்க: அவுட்லுக், 11.7.2005) இது சோனியா விகார் திட்டத்தையே தூக்கியடிக்கும் மோசடியாக இருக்கிறது. இதன்படி சுத்திகரிப்புப் பணியையும் குடிநீர் வாரியமேதான் செய்யுமாம். தண்ணீரை விநியோகித்துக் கட்டணம் வசூலிக்கும் வேலையையும் வாரியம்தான் செய்யுமாம். நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் நடப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் மேற்பார்வையிடுமாம். குடிநீர் வாரிய ஊழியர்கள் இவர்களிடம் கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டுமாம்!

“நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். ஊதி ஊதித் தின்னலாம்” என்ற பழமொழி கூறும் மோசடியைக் காட்டிலும் மகா மோசடியான இந்தத் திட்டத்திற்குப் பெயர் அரசுத்துறை தனியார்துறை கூட்டாம்! எனவே, இனிமேல் குடிநீருக்கான கட்டணத்தை அரசு தீர்மானிக்க முடியாதாம். அதற்கென ஒரு சுயேச்சையான “ஒழுங்குமுறை ஆணையம்’ உருவாக்கப்படுமாம். அவர்கள் கட்டணத்தைத் தீர்மானிப்பார்களாம்!

“2011ஆம் ஆண்டிற்குள் குடிநீருக்காகத் தரப்படும் மானியங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்” என்பது உலக வங்கியின் உத்தரவு. இது அமல்படுத்தப்பட்டால் டில்லியில் தற்போது 192 ரூபாயாக இருக்கும் மாதக் குடிநீர்க் கட்டணம் 1750 ரூபாயாக உயரும்” என்று ஆதாரங்களுடன் எச்சரிக்கை செய்திருக்கிறார் பரிவர்த்தன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் அர்விந்த் கேஜ்ரிவால்.

வாங்காத மின்சாரத்துக்கு மாதம் 90 கோடி ரூபாய் என்ரான் நிறுவனத்துக்குத் தண்டம் கட்டியது மராத்திய அரசு. அதன்பின் என்ரான் நிறுவனமே திவாலாகிவிட்டதால், என்ரான் முதலாளிகள் சுருட்டிய 10,000 கோடி கடனை இப்போது மத்திய அரசு அடைக்கவிருக்கிறது. “டெல்லி குடிநீர் தனியார்மயம்’ இன்னொரு என்ரானாக மாறப் போகிறது என்று எச்சரிக்கிறார் அவுட்லுக் பத்திரிகையாளர்.

திருப்பூரில் அமெரிக்கக் கம்பெனி

யார் எச்சரித்தாலும் யார் எதிர்த்தாலும் தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் இந்தத் தீவட்டிக் கொள்ளையை அரசு நிறுத்துவதாக இல்லை. தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்கப் போவதாக ஜம்பமடிக்கும் ஜெ. அரசு, தண்ணீர் தனியார்மயத்தில் ஆசியாவிலேயே முதல் திட்டத்தை திருப்பூரில் அமல்படுத்துகிறது.

“திருப்பூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர்ச் சுத்திகரிப்புத் திட்டம்” என்ற பெயரில் 1023 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் கழகம், திருப்பூர் நகராட்சி, தமிழக அரசின் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பெக்டெல் என்ற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமும், அமெரிக்க நிதி உதவி நிறுவனமும், மகிந்திரா கன்சார்ட்டியம் என்ற இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனமும் அங்கம் வகிக்கின்றன.

பவானி ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 18.5 கோடி லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கொண்டு வரப்படவுள்ளது. திருப்பூரிலுள்ள சாயப்பட்டறைகளுக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் தண்ணீர் வழங்குவதே இதன் முதல் நோக்கம். நகர குடிநீர் விநியோகத்துடன் குழாய் வரும் பாதையிலுள்ள சுமார் 20 கிராமங்கள், சிற்×ர்களுக்கும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. தண்ணீருக்கான கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் மேற்கூறிய நிறுவனங்கள் அடங்கிய குழுமத்தினுடையது. விநியோகம் மற்றும் வசூலிக்கும் பணி வழக்கம் போல நகராட்சியினுடையது.

“கழிவு நீர்ச் சுத்திகரிப்பு’ என்பது இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்தபோதிலும், சாயப்பட்டறைக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் பணியை இத்திட்டம் மேற்கொள்ளவில்லை. அதாவது, இனி தாராளமாகத் தண்ணீர் கிடைக்குமென்பதால் இன்னொரு ஒரத்துப்பாளையம் அணை நிரம்புமளவுக்கு திருப்பூர் முதலாளிகள் கழிவுநீரை வெளியேற்றுவார்கள். காவிரி, கழிவு நீர் ஆறாகவே மாறும். திருப்பூர் “குடிநீர்’த் திட்டம், 8 மாவட்டத்து மக்களின் குடிநீரையும், சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்க்கையையும் மேலும் நாசமாக்கும். வேறு விதமாகச் சொல்வதானால், கோடிக்கணக்கான மக்களின் குடியைக் கெடுத்த முதலாளிகளுக்குத் தண்டனை எதுவும் இல்லை; மாறாக, சுத்தமான பவானிநீர் பரிசாக வழங்கப்படுகிறது.

சென்னைக்கும் நெருங்குகிறது அபாயம்!

உலக வங்கியின் ஆசியுடன் திருப்பூரின் வக்கிரம் சென்னையிலும் அரங்கேறுகிறது. 600 முதலாளிகள் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சென்னை நகரின் சுற்று வட்டாரங்களிலிருந்து உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பொதுப் பணித்துறையின் கணக்கின்படியே அவர்களது ஆண்டு வியாபாரம் 600 கோடி ரூபாய்.

ஒருபுறம் இந்தக் கொள்ளையை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு, மறுபுறம் சென்னை நகரின் நீர் விநியோகத்தை மேம்படுத்த உலகவங்கியிடம் 1350 கோடி ரூபாய் கடன் வாங்குகிறது. விவசாயிகளின் பாசனநீருக்குப் பணம் பிடுங்கச் சொல்லும் உலகவங்கி “இந்த நிலத்தடி நீர்க் கொள்ளையை தண்ணீர் முதலாளிகள் நிறுத்தினால்தான் கடன் தருவேன்” என்று நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. மாறாக, கொக்கோ கோலா உறிஞ்சும் கொசஸ்தலை ஆற்றிலும், பெப்சி உறிஞ்சும் பாலாற்றிலும் நீர்வளத்தை உத்திரவாதப்படுத்த அரசுக்கு திட்டம் வகுத்துத் தருகிறது.

நீர்வளத்தை மேம்படுத்தித் தண்ணீர்க் கொள்ளையர்களிடம் வழங்குவதற்காக உலகவங்கிக் கடன்! கட்டண உயர்வு மூலம் இந்தக் கடனை அடைக்க வேண்டியவர்கள் சென்னை நகர மக்கள். கட்டணத்தை உயர்த்துவதெப்படி, குடிநீர் விநியோகத்தை லாபகரமாக நடத்துவது எப்படி என்று சென்னை நகரக் குடிநீர் வாரியத்துக்குப் “புத்திமதி’ சொல்வதற்கென்றே ஒரு ஆலோசகரையும் நியமித்திருக்கிறது தமிழக அரசு. தென் ஆப்பிரிக்காவில் குடிநீர்க் குழாய்க்கு ப்ரீபெய்டு மீட்டர் போட்ட விவென்டி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிதான் அந்த ஆலோசகர்!

மத்திய அமைச்சகத்தில் தொடங்கி ஊராட்சி மன்றம் வரையில் தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை உத்திரவாதம் செய்கிறார்கள் உலகவங்கியின் பிரதிநிதிகள்; ஆலோசனை கூறுகிறார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள்; தண்ணீரின் சந்தை விலையை நிர்ணயம் செய்யப்போவ÷தா, முதலாளிகளைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத “சுயேச்சையான’ ஒழுங்குமுறை ஆணையம்!

எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான். எல்லாப் புறங்களிலும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது தண்ணீர். உலகின் நீர்வளம் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தான் சொந்தம் என்பதை ஒப்புக் கொள்வதில் இன்னமும் யாருக்கேனும் தயக்கமோ, தடுமாற்றமோ, ஐயமோ இருக்குமானால் அவற்றை அகற்றும் பொருட்டு இது சட்டமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது — அதன் பெயர் காட்ஸ் ஒப்பந்தம்!

 காட்ஸ் ஒப்பந்தம் : இறுகுகிறது மறுகாலனியாக்கச் சுருக்கு!

தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஏழை நாடுகளின் கையை முறுக்கிக் கையெழுத்து வாங்கியது உலக வங்கி. காட்ஸ் ஒப்பந்தமோ, சுயவிருப்பத்துடன் மனப்பூர்வமாக இதில் கையெழுத்திட்டுத் தருமாறு கோருகிறது.
சேவைத்துறைகளிலான வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade related Services) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், காட் (GATT) ஒப்பந்தத்துடன் (வரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம்) இணைந்ததாகும். எனவே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் காட்ஸ் ஒப்பந்தத்தையும் அடிப்படையில் ஏற்றுள்ளன.

பொருள் (Goods) உற்பத்தித் துறையில் ஏற்றுமதி இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதன் மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவது காட் ஒப்பந்தத்தின் நோக்கம். காட்ஸ் ஒப்பந்தமோ, பொருளுற்பத்தி இல்லாத சேவைத்துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கானது. தொலைபேசி, மின்சாரம், காப்பீடு, சாலைகள், ஊடகங்கள் ஆகியவற்றில் தொடங்கி சுற்றுலா, அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் நீதித்துறை வரை அனைத்தும் திறந்து விடப்பட வேண்டிய சேவைத்துறைகளின் பட்டியலில் வருகின்றன. இந்தப் பட்டியலில் பாசன நீர் விநியோகம், நகராட்சிகள் செய்து வரும் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் போன்றவையும் இடம் பெறுகின்றன.

காட்ஸ் வழங்கும் “ஜனநாயக’ உரிமை!

“எந்தெந்தத் துறைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடலாமென்று தீர்மானிக்கும் “உரிமை’ எல்லா நாடுகளுக்கும் உண்டு” என்று காட்ஸ் ஒப்பந்தம் கூறுகிறது. எனினும் இது ஒரு சொற்ஜாலம். “நட்சத்திர விடுதியில் விருந்துண்ணும் உரிமை மூட்டை தூக்குபவனுக்கும் உண்டு” என்று கூறும் நமது அரசியல் சட்ட உரிமையைப் போன்றதே இது.

“எங்கள் நாட்டின் சேவைத்துறைகளைத் திறந்து விட முடியாது” என்று கூறும் நாடுகள் வல்லரசுகளின் மிரட்டலையும் பதிலடியையும் உலக வர்த்தகக் கழகத்தின் பொருளாதாரத் தடைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த விவரங்கள் ஒருபுறமிருக்கட்டும். அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா? உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் “எள் என்று சொல்லுமுன்னே எண்ணெயாய்” வழிந்து, வங்கி, காப்பீடு, சாலை, ஊடகம், தண்ணீர் என அனைத்தையும் திறந்து விடும் கைக் கூலிகள் நிறைந்த அரசுக்கு “ஒருவேளை மீசை முளைத்தால்’ என்று சிந்திப்பதே மடமை.

2005 ஜனவரியில் கையெழுத்திடப்படுவதாக இருந்த காட்ஸ் ஒப்பந்தம் இன்னும் இறுதியாக்கப்படவில்லை. இறுதியாக்கப்படும் போது இந்திய அரசு அதில் கையெழுத்திட்டே தீருமென்பது கல்லின் மேல் எழுத்து. காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகளுடைய நீர்வளத்தின் கதி என்ன, தண்ணீரின் மீது பன்னாட்டு நிறுவனங்களுக்குள்ள உரிமை பற்றி காட்ஸ் ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

தண்ணீர் வளத்தை விழுங்கும் காட்ஸ்!

* தண்ணீர் இயற்கையின் கொடை என்பதையோ, மனிதனின் வாழவுரிமை என்பதையோ காட்ஸ் ஒப்பந்தம் ஏற்பதில்லை. காட்ஸ்இன் படி தண்ணீர் ஒரு விற்பனைச் சரக்கு.

குடிநீர் விநியோகத்திற்காக நகராட்சிகள் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கின்றன. எனினும் குடிநீர் விநியோகத்துக்கான முழுச் செலவையும் வசூலிக்கும் விதத்திலோ, லாபம் வைத்தோ இந்தக் கட்டணம் தீர்மானிக்கப்படுவதில்லை. தண்ணீர் மனிதனின் ஜீவாதாரத் தேவை என்பதைக் கணக்கில் கொண்டுதான் இது இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படுகிறது. நட்டத்தை ஈடு செய்ய அரசின் / மாநகராட்சியின் வரி வருவாயிலிருந்து இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காட்ஸ் ஒப்பந்தம் குடிநீர் விநியோகம் என்பதை பேருந்துப் பயணம், ரயில் பயணம் போல “காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சேவை’ என்கிறது. பன்னாட்டு முதலாளிகள் இதில் “முதலீடு’ செய்வதால் அதற்குத் தகுந்த லாபமீட்டும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என்கிறது. அதாவது தண்ணீரின் விலையை நிர்ணயிப்பதில் அரசு எந்த விதத்திலும், எந்தக் காரணத்துக்காகவும் குறுக்கிட முடியாது.

* தனது நகரின் குடிநீர் விநியோகத்தையோ, குப்பை அள்ளும் பணியையோ ஒரு நகராட்சி குத்தகைக்கு விட முடிவு செய்தால் உள்நாட்டு நிறுவனங்களைப் போலவே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விட வேண்டும்.

* அரசுத் துறையைச் சேர்ந்த குடிநீர் வாரியத்திற்கு மாநில அரசோ, மத்திய அரசோ சிறப்பு சலுகை காட்டக் கூடாது; மானியம் வழங்கவும் கூடாது. அவ்வாறு வழங்கினால் அத்தகைய மானியம் பன்னாட்டு குடிநீர் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

* தன்னுடைய வர்த்தகத்தை வளர்க்கும் நோக்கில் ஒரு பன்னாட்டு நிறுவனம், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வேறு எந்தப் பகுதிக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லலாம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு அரசு தடைவிதிக்க முடியாது. (இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளுக்கு கொச்சியிலிருந்து கப்பல் மூலம் தண்ணீர் ஏற்றுமதி செய்ய சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் முயன்றது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. காட்ஸ் ஒப்பந்தம் இவ்வாறு தடை விதிக்கும் அதிகாரத்தை அரசிடமிருந்து பிடுங்கி விடும்.)

* நிலத்தடி நீர் வற்றுவது, சுற்றுச்சூழல், உயிரியல் சூழல், கலாச்சாரம், மரபு…… என எந்தவிதக் காரணத்திற்காகவும் தண்ணீர் விற்பனையின் மீது அரசு தடை விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதிப்பது சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.

* குடிநீரின் தரம் குறித்து எந்த அரசும் தன்னிச்சையாகச் சட்டமியற்றவோ, அதனடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கவோ கூடாது. தரத்தை நிர்ணயிக்கும் போது தண்ணீரின் தரம் குறித்த சர்வதேசச் சராசரி அளவுகோலை எந்த நாடும் விஞ்சக்கூடாது. குடிநீரின் தரத்தில் குறையிருப்பின் போதிய அளவுக்குச் சுட்டிக் காட்டி, அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கலாம். அது வணிகத்தை முடக்கும் நோக்கிலானது அல்ல என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.
ட் தேசியச் சட்டங்கள் உள்நாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே பொருந்தும். உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் ஏதேனும் பிணக்கு தோன்றினால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரைவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்ததைப் போல, உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பாயத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். அது வழங்குகின்ற தீர்ப்பே இறுதியானது. இத்தகைய தீர்ப்புக்கள் இதனையொத்த வழக்குகளில் முன்மாதிரியாகவும், விதியாகவும் கொள்ளப்படும். உள்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது.

* அதே நேரத்தில் ஒரு குடிமகனுக்கு அரசியல் சட்டம் வழங்குகின்ற அனைத்து உரிமைகளும் பன்னாட்டு நிறுவனத்திற்கும் வழங்கப்படவேண்டும். “நிறுவனம்’ என்பது உயிருள்ள தனிமனிதனல்ல என்றபோதிலும் “சட்டரீதியில் ஒரு மனிதனே’ என்று கருதி இவ்வுரிமைகள் அனைத்தும் வழங்கப்படவேண்டும்.

* ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நிகழ்கால வணிகத்தை மட்டுமின்றி, எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் வண்ணமும் மைய அரசு முதல் ஊராட்சி வரையிலான அரசு சார் நிறுவனங்களோ, பல்கலைக்கழகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அரசுசாரா நிறுவனங்களோ எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அந்த நாட்டின் அரசுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் இழப்பீடு கேட்டு பன்னாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடரலாம். இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க மறுத்தால் அந்த நாட்டிற்கெதிராக உலக வர்த்தகக் கழகம் பொருளாதாரத் தடை விதிக்கலாம்.

— தண்ணீர் தொடர்பாக காட்ஸ் ஒப்பந்தம் கூறும் விதிமுறைகளில் முக்கியமானவை இவை. வாசகர்கள் பலருக்கு இவை நம்பமுடியாதவையாகவும், நடக்க முடியாதவையாகவும் தோன்றலாம்.

நம்ப முடியவில்லையா?

“ஒரு பாட்டில் தண்ணீர் 13 ரூபாய்க்கு விற்கும்” என்று 15 ஆண்டுகளுக்கு முன் யாராவது எண்ணியிருப்பார்களா? “ஒரு ஏக்கர் பாசன நீருக்கு 8000 ரூபாய் வரி கட்ட வேண்டியிருக்கும்” என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் மகாராட்டிர விவசாயிகளிடம் யாராவது சொல்லியிருந்தால் அவர்கள் தான் நம்பியிருப்பார்களா? வாளியும் கயிறும் இல்லாமல் குனிந்தே கிணற்றிலிருந்து தண்ணீர் மோந்த பிளாச்சிமடா கிராமத்து மக்களிடம் “ஒரு குடம் தண்ணீருக்கு நீங்கள் 5 மைல் நடக்கப் போகிறீர்கள்” என்று 5 ஆண்டுகளுக்கு முன் கொக்கோ கோலா கம்பெனிக்காரனே சொல்லியிருந்தாலும் அவர்கள் நம்பியிருப்பார்களா?

காட்ஸ் ஒப்பந்தமென்பதோ, தண்ணீர் தனியார்மயமென்பதோ ஆரூடங்கள் அல்ல; நாம் கண்முன்னே காணும் உண்மைகள். வட அமெரிக்கக் கண்டத்தினைச் சேர்ந்த கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையில் அமலிலிருக்கும் “நாப்தா’ என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி “தண்ணீர்’ ஒரு விற்பனைச் சரக்கு. உலகின் நன்னீர் வளத்தில் 20 சதவீதத்தைப் பெற்றிருக்கும் கனடாவிலிருந்து தண்ணீரைச் சூறையாடுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். கால்பந்து மைதானத்தின் அளவிலான பிரம்மாண்டமான உறைகளில் தண்ணீரை நிரப்பி அதனைக் கப்பலில் கட்டி இழுத்துச் சென்று ஏற்றுமதி செய்கின்றனர் பன்னாட்டு முதலாளிகள்.

நீர்வளம் குறைந்த மெக்சிகோவையும் தண்ணீர் முதலாளிகள் உறிஞ்சுகிறார்கள். அங்கே மக்கள் தமது சொந்தக் கிணற்றிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமென சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட நாப்தா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான் தண்ணீர் தொடர்பான காட்ஸ் விதிமுறைகள் என்பதை தனது “நீலத்தங்கம்’ (ஆடூதஞு எணிடூஞீ) என்ற நூலில் நிறுவியிருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் மாட் பார்லோ.

இறையாண்மை வெறும் பேச்சு!

இந்த காட்ஸ் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் இந்திய அரசு கையெழுத்திடப் போவது உறுதி. நாடு, இறையாண்மை, நாடாளுமன்றம், கொடி, தேசிய கீதம் என்ற எல்லா ஜிகினா வேலைப்பாடுகளையும் கலைத்து, இது காலனி ஆதிக்கம் தான் என்பதைப் பாமரனுக்கும் புரியவைக்கிறது இவ்வொப்பந்தம்.

இருப்பினும் இந்த அரசு இதில் கையெழுத்திட்டே தீரும். ஏனென்றால் காட்ஸ் ஒப்பந்தத்திற்கு அடங்கி வருவது போல “தேசிய நீர்க் கொள்கை 2002′ என்பதை வகுத்து ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கிறது பா.ஜ.க. ஆட்சி. காங்கிரஸ் அரசோ இதனைத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.

இந்த காட்ஸ் ஒப்பந்தம் குறித்தும் அதன் ஷரத்துகள் குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கப் போவதில்லை. இதற்கு முன் எப்போதும் விவாதித்ததுமில்லை; விவாதித்துப் பயனுமில்லை.

நாட்டின் அரசியல் பொருளாதாரத் தலைவிதியையே மாற்றியமைக்கக் கூடிய காட் ஒப்பந்தத்தில் 1994ஆம் ஆண்டு கையெழுத்திட்டவர் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அல்லர். நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் சில அதிகாரிகள் கையெழுத்திட்டனர். பிறகு நாடாளுமன்றம் அதனை ஏற்றுக் கொண்டு கைதட்டி நிறைவேற்றியது.

காட்ஸ் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதும், முடிவு செய்வதும் ஜெனிவாவில் இந்திய அரசின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் சில அதிகாரிகள்தான். 100 கோடி மக்களின் உயிர்வாழும் உரிமை, நம் அனைவருக்கும் சொந்தமான நீர்வளம், வரவிருக்கும் தலைமுறைகளின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒரு அதிகார வர்க்கக் கும்பல்தான் தீர்மானித்து வருகிறது.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அமர்ந்திருக்கும் கைக்கூலிகள் இந்த முடிவை வழிமொழிவார்கள்; நாட்டை வல்லரசாக்கும் பாதை இதுதானென்று நமக்கு விளக்கமும் சொல்வார்கள்.

பன்னாட்டு முதலாளிகளின் கையில் தண்ணீரை ஒப்படைக்கும் நாடு, தனது மண்ணையும் ஒப்படைப்பதாகத் தனியே எழுதிக் கொடுக்கத் தேவையில்லை. தனது உயிரின் ஆதாரத்தையே கைப்பற்றிக் கொள்ள அந்நியனை அனுமதிக்கும் மனிதன், மானத்தையும் வழங்கி விட்டதாக விளக்கம் தரவும் தேவையிருக்காது.

போராட வாருங்கள்!

நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. உடனே செயலில் இறங்க வேண்டிய தருணமிது. இது நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம்!

சேவைத்துறை தனியார்மயம் என்ற பெயரில் அரசுத் தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீடு, மருத்துவம், கல்வி, ஊடகங்கள், நூலகங்கள், தண்ணீர்… என அனைத்துத் துறைகளையும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்கக் கதவைத் திறந்து விடுகிறது காட்ஸ் ஒப்பந்தம். சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் அடிமைத்தனத்திற்குக் கதவுகள் அகலத் திறக்கப்படுகின்றன.

இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா? நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த அடிமைத் தனத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் விடுதலைக்குப் போராட நாம் ஒவ்வொருவரும் களமிறங்கியாக வேண்டும்.

சட்டமன்றமும் நாடாளுமன்றமும் நீதிமன்றங்களும் மறுகாலனியாக்கத்தின் கருவிகள். இந்த அடிமைத்தனத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கும் முத்திரைக் கட்டைகள். இவற்றின் நாற்காலிகளை நிரப்புவோர் அனைவரும் பன்னாட்டு நிறுவனங்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள்.

“காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறி! உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறு!” என்று முழங்குவது நக்சல்பாரி இயக்கம் மட்டும்தான். வேறு யாருமில்லை. இந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்கவல்லதும் நக்சல்பாரி பாதையொன்றுதான். வேறு பாதையில்லை. சிந்தியுங்கள், செயலில் இறங்குங்கள், போராட வாருங்கள்!

 தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க “கோக்’ கைஅடித்து விரட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தண்ணீர்ப் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். குடிநீருக்காக மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைக் கையகப்படுத்தி இலவசமாக மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.

ஆனால் அரசு என்ன செய்கிறது? தண்ணீருக்காகப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துகிறது. நெல்லை அருகே கங்கை கொண்டான் எனும் கிராமத்தில் அமையவிருக்கும் கொக்கோ கோலா ஆலைக்கு, தாமிரவருணி ஆற்றிலிருந்து குழாய் போட்டுக் கொண்டுவந்து, லிட்டர் ஒண்ணரை பைசா விலைக்கு தண்ணீர் விற்க ஒப்பந்தம் போடுகிறது. கோவில்பட்டி சாத்தூர் மக்களுக்குக் கிடைக்காத தாமிரவருணித் தண்ணீரை கொக்கோ கோலாவுக்கு வழங்குகிறது. அதை பாட்டிலில் அடைத்து 13 ரூபாய் விலைக்கு விற்று தமிழக மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறது கொக்கோ கோலா.

அமெரிக்க கம்பெனிக்கு வாரி வழங்குமளவுக்கு இங்கே நீர்வளம் கொழிக்கிறதா? “தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதவீதம் குடிக்க லாயக்கற்றது” என்று கூறுகிறது பொதுப் பணித்துறை. மீதமுள்ள 28 சதவீத நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சிக் காசாக்குகிறார்கள் தனியார் முதலாளிகள். 600 தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன. சென்னை நகரில் மட்டும் இவர்களது தண்ணீர் வியாபாரம் மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது பொதுப்பணித்துறை.

அதாவது, “தாகத்தால் தவிக்கும் மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்” என்று தனியார் முதலாளிகளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டிருக்கிறது இந்த அரசு. “அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகள், பொதுச் சொத்தைச் சூறையாடும் திருடர்கள், இவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் இவர்கள் திருடர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகள்; உலக வங்கியின் அடிமைகள். அதிமுக, திமுக, காங், பாஜக, தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த அடிமைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களுக்கு ஆணையிடும் ஆண்டையான உலகவங்கியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக வங்கிக்காரன் என்பவன் யார்? “குடிநீர் முதல் கக்கூசு வரை எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவி வழங்கும் வள்ளல்” என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஒரு கந்துவட்டிக் கும்பல்; ஏழை நாடுகளுக்கு வலியக் கடன் கொடுத்து, வலையில் வீழ்த்தி அந்த நாடுகளின் வளங்களையும் சொத்துக்களையும் வளைத்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்குவதுதான் உலகவங்கியின் பணி.

“உலக வங்கி ரேசன் அரிசி விலையை உயர்த்தச் சொல்கிறது, மின் கட்டணம் பேருந்துக் கட்டணத்தைக் கூட்டச் சொல்கிறது” என்று ஜெயலலிதாவும் கருணாநிதியும் சட்ட சபையிலேயே பேசுவதை நீங்கள் எத்தனைமுறை கேட்டிருப்பீர்கள்! மத்திய அரசு முதல்மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் வரை அனைத்து மட்டங்களிலும் உலகவங்கி நேரடியாக அதிகாரம் செலுத்துகிறது; கண்காணிக்கிறது. அந்த உலக வங்கிதான் தண்ணீரைத் தனியார்மயமாக்கச் சொல்கிறது. பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதைப் போலவே ஆறு,குளம், ஏரிகளையும் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கச் சொல்கிறது.

இயற்கையின் கொடையான தண்ணீரை, உயிரின் மூலமான தண்ணீரை, உயிரினங்கள் அனைத்தின் உரிமையான தண்ணீரை ஒரு “விற்பனைச் சரக்கு’ என்று சொல்கிறது. ஆறுகளும், குளங்களும் “மக்களின் பொதுச்சொத்தல்ல, முதலாளிகள் தொழில் செய்வதற்கான முதலீடு’ என்கிறது. காற்றைப் போலத் தண்ணீரும் மனிதனின் இயற்கையான தேவை என்பதை மறுத்து, அது “காசு கொடுப்பவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை’ என்கிறது.

உலக வங்கி இதுநாள்வரை தந்திரமாகச் செய்ததை, வெளிப்படையாகவும் சட்டபூர்வமாகவும் செய்வதற்கு காட்ஸ் என்ற சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. “சேவைத்துறை வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்’ என்ற இந்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவம், கல்வி, வங்கி போன்ற சேவைத்துறைகளைப் போலவே அரசு செய்து வரும் குடிநீர் விநியோகத்தையும் தனியார்மயமாக்க வேண்டும். எனவே இலவசக் குடிநீர் விநியோகத்தை உடனே ஒழிக்கச் சொல்கிறது இந்த ஒப்பந்தம்.

இந்த “காட்ஸ்’ ஒப்பந்தத்திலும் இதற்கு முந்தைய “காட்’ ஒப்பந்தத்திலும் இந்திய மக்களுக்குத் தெரியாமல், நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ஒரு அதிகார வர்க்கக் கும்பல் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒப்புதல் அளித்து விட்டன.

“உலக வங்கி ஐ.எம்.எப் காட்ஸ் உலக வர்த்தகக் கழகம்’ என்ற இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொல்வதுதான் இனி இந்தியாவின் சட்டம். உலக வர்த்தகக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கேற்ப இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தைத்தான் மறுகாலனியாக்கம் என்று சொல்கிறோம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாக்கத்தின் ஒரு குரூரமான வெளிப்பாடு!

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டால் என்ன நடக்கும்? அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும். எண்ணெய் விலை ஏறுவது போல தண்ணீர் விலையும் ஏறும். லாபவெறி பிடித்த முதலாளிகள் நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சி இயற்கையை நாசமாக்குவார்கள். நம் கண்முன்னே ஒரத்தப்பாளையம் நீர்த்தேக்கத்தைத் தமது கழிவுநீர்த் தொட்டியாக மாற்றி எட்டு மாவட்டத்து மக்களின் குடிநீரையும் பாசன நீரையும் நஞ்சாக்கியிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.

பன்னாட்டு முதலாளிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? முப்போகம் விளைந்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தில் ஆலை அமைத்து, நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நச்சுக்கழிவுகளையும் இறக்கிவிட்டு இரண்டே ஆண்டுகளில் அந்த வட்டாரத்தையே தரிசாக்கியிருக்கிறது கொக்கோ கோலா. இன்று அந்த மக் கள், ஒரு குடம் தண்ணீருக்காக 5 மைல் நடக்கிறார்கள்.

எனவேதான் சொல்கிறோம் தண்ணீரைப் பன்னாட்டு முதலாளிகளின் உடைமையாக்கினால் அவர்கள் நம் நாட்டின் நீர்வளத்தை அழித்து புல், பூண்டுகள், உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் அழித்து அந்தப் பேரழிவை இயற்கையே கூட மீண்டும் சரி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி விடுவார்கள்.

இவையெல்லாம் நாளை வரவிருக்கின்ற அபாயங்கள் அல்ல. இன்று நம் கண்முன்னே தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. குடிநீருக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி அட்டை வாங்கும் “பிரிபெய்டு கார்டு’ முறை அங்கே அமலாக்கப்பட்டுள்ளது. காசு கொடுத்து குடிநீர் வாங்க முடியாத ஏழைகள், கண்ட தண்ணீரையும் குடித்து காலராவுக்கு பலியாகிறார்கள். தென்னாப்பிரிக்க நகரங்களின் தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் “விவென்டி’ என்ற பன்னாட்டு நிறுவனம்தான் இலவசக் குடிநீரை ஒழிக்க சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை கூறி வருகிறது.

பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரின் தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்தி மக்களின் மாத வருவாயில் மூன்றில் ஒரு பங்கைப் பிடுங்கிக் கொண்டது அமெரிக்காவின் “பெக்டெல்’ நிறுவனம். பொலிவிய மக்களால் விரட்டப்பட்ட “பெக் டெல்’ நிறுவனம் தான் திருப்பூரின் குடிநீர் விநியோகத்தை 30 ஆண்டுகளுக்குக் குத்தகை எடுத்திருக்கிறது.

“நகரங்களின் நீர் விநியோகம் பன்னாட்டு முதலாளிகளுக்கு; கிராமப்புற நீர் வளங்கள் பண்ணையார்களுக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும்” இதுதான் உலக வங்கி திட்டம். 3900 கோடி ரூபாய் உலக வங்கியிடம் கடன் வாங்கி தற்போது தமிழக அரசு அமல்படுத்தவிருக்கும் “நீர்வள மேம்பாட்டுத் திட்ட’த்தின்படி ஏரி, குளங்களை இனி அரசாங்கம் பராமரிக்காது. “பயனாளிகளே பராமரித்துக் கொள்வது’ என்ற பெயரில் நீர்வளங்கள் அனைத்தும் கிராமப்புற ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்படும். சந்தைக்கும் கக்கூசுக்கும் டெண்டர் எடுத்த சமூக விரோதிகளைப் போல பாசன நீருக்கு இவர்கள் விவசாயிகளிடம் விருப்பம் போலப் பணம் பிடுங்குவார்கள்.

மராட்டிய காங்கிரசு அரசு கடந்த ஏப்.16 அன்று ஒரு கொடூரமான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு விவசாயி கட்ட வேண்டிய தண்ணீர் வரி ரூ. 8,000/. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றவிவசாயிகளுக்கோ வரி ரூ. 12,000/ ஏழை, நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்தி பட்டினிச் சாவுக்குத் தள்ளப் போகிறது இந்தச் சட்டம்.

தண்ணீர் தனியார்மயமென்பது தண்ணீர்ப் பிரச்சினை மட்டுமல்ல. தண்ணீரை இழந்தால் நாம் சோற்றையும் இழப்போம். விதைகளின்மீது நமது விவசாயிகள் கொண்டிருக்கும் பாரம்பரிய உரிமையை ரத்து செய்து அவற்றை பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குகிறது மத்திய அரசின் புதிய விதைச் சட்டம். உரமும், பூச்சி மருந்தும் ஏற்கனவே அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அரசு கொள்முதல் ஒழிக்கப்பட்டு நாடெங்கும் கார்கில், ஐ.டி.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதலைத் தொடங்கி விட்டன. பன்னாட்டுக் கம்பெனிகள் நேரடியாக ஏற்றுமதிக்கான விவசாயம் செய்வதற்காகவே “தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டு வரப்படுகிறது. தற்போது தண்ணீர் விற்பனையில் இறங்கியிருக்கும் அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம் “மொத்த உணவுச் சங்கிலியையும் கைப்பற்றுவது தான் எங்கள் திட்டம்’ என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டால் நாம் சுயசார்பை இழந்து உணவுக்கும் தண்ணீருக்கும் கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்போம். தண்ணீரைக் கட்டுப்படுத்துபவன் எல்லா ஆதாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை இழந்தால் பெயரளவிலான இறையாண்மையையும் நாம் இழப்போம்.

கோக் ஒரு குறியீடு. “உலகின் நீர்வளங்கள் அனைத்தும் எம் தனி உடைமை” என்று கூறும் பன்னாட்டு தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு கோக் ஒரு பிரதிநிதி. ஆறு, குளங்களும் நிலத்தடி நீர் வளமும் நமக்குச் சொந்தமா, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.

தண்ணீர், முதலாளிகளின் தனி உடைமை என்பதை இந்த நாட்டின் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் ஊடகங்களும் ஒப்புக் கொண்டு விட்டன. “நம் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் காட்டிலும் முதலாளிகளின் லாபம் மேன்மையானது. முதலாளிகளின் வளர்ச்சியே தொழில் வளர்ச்சி. முதலாளிகளின் முன்னேற்றமே தேச முன்னேற்றம். இந்தியாவை அந்நிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்படுத்தும் உரிமையும் முதலாளிகளுக்கு உண்டு. உலகை அடிமைப்படுத்தும் உரிமையோ பன்னாட்டு முதலாளிகளுக்கு உண்டு.” இதுதான் இவர்கள் கூறும் நீதி.

நாம் தண்ணீரை சரக்காக்கி விற்கவும் சம்மதிக்க முடியாது. தாய்நாட்டை விற்கவும் சம்மதிக்க முடியாது. இவ்வாறு “முடியாது’ என்று உரத்த குரலில் முழங்குபவர்கள் நக்சல்பாரிகளைத் தவிர வேறு யாரும் கிடையாது.

இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், மான்சாண்டோ விதைகளுக்கெதிரான போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், நெய்வேலி மின்நிலையம் அமெரிக்கக் கம்பெனிக்கு விற்கப்படுவதற்கெதிரான போராட்டம்… என கடந்த பத்தாண்டுகளாக மறுகாலனியாக்கத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இதுநாள் வரை மெத்தனம் காட்டிய பலர் இன்று உணர்ந்து வருகிறார்கள்.

மெத்தனம் இனியும் வேண்டாம். தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கிற்கு எதிராக, மறுகாலனியாக்கத்திற்கெதிராக நமது கரங்கள் உயரட்டும்! மண்ணின் உயிரை, மக்களின் உரிமையை உறிஞ்சத் துடிக்கும் கோக்கின் கொடுங்கரம் சாயட்டும்!

“நக்சல்பாரிப் பாதையில் அணி திரள்வோம்!
தண்ணீரைக் கண்ணியாக்கி
மறுகாலனியாக்க வலையை இறுக்கும்
உலக வங்கி, உலக வர்த்தகக் கழகத்தின்
ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

வெளியீடு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

%d bloggers like this: