அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

manippu delhi naked struggle

 

ஊதாரிகளின் அம்மணம்

ஊக்கிப் பேசப்படும்

நாகரீகமாய்.

அந்த அம்மணங்களின் கூடுகளில்

சுயநலப் புழுக்கள் நெளியும்

அறுவெறுப்பாய்.

 

அம்மணம் இங்கே

பக்தியாக இருக்கும் போது

போராட்டமாய் கூடாதா?

 

லட்சக் கணக்கில் விவசாயிகள்

உயிர் துறந்த போது

செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு,

ஆடை துறந்த போதோ

உங்கள் வல்லரசுக் கனவு

அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.

 

இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி

மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள்

ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.

 

பன்றித் தொழுவத்தின் முடை நாற்றத்தை

அம்மணமாக்கினார்கள் எங்கள் விவசாயிகள்.

அந்த கிருஷ்ணன்களின் இளைய தம்பிகள் இன்று

கைது ஆடை அணிவிக்கிறார்கள்.

 

பத்து லட்சத்தில் ஒற்றை ஆடை அணிந்தவர்கள்

இந்த அம்மணத்தைக் கொஞ்சம் பார்க்கட்டும்

ஆடையின் அம்மணத்தை உடுத்திக் கொண்டு

அங்கத்தின் அம்மணத்தை மறைத்தவர்கள்

தங்கள் அரசியலின் அம்மணத்தை கொஞ்சம்

உற்றுப் பார்த்து தரிசிக்கட்டும்.

 

பாதி மயிர் மழிப்பில் தொடங்கி

தலை கீழாக நின்றது வரை

வடிவங்கள்.

அவற்றில் ஒன்று தானா அம்மணம்?

புழுத்துப் போன இந்த அரசமைப்பு

நம்மை அரவணக்காது என்றுணர்ந்த

குறியீடு அது.

 

37 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து விட்டு

கூச்சமே இல்லாமல்

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது

நேர்மையை பாதிக்கும் என்றார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை

பாசனப் பரப்புகள் அனைத்தும் சாக்கடை

வனங்களை அழித்ததால் மழைவளம் நோயாளி

பசுமைப் புரட்சி கொண்டு வேளாண்மைக்கு தூக்கு

இடுபொருள் விலை உச்சம்

விளைபொருள் விலை துச்சம்

இன்னும் .. .. இன்னும் .. .. .. ஆனாலும்

இந்தியா விவசாயநாடு என்கிறார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மரபணு மாற்று விதை என்றும்

பணப்பயிர் விவசாயம் என்றும்

ஏகாதிபத்திய அறுவடைக்காக

விவசாயி மூளையில் உழுதன அரசுகள்.

 

நம்மாள்வார்கள் போராடிக் கொண்டிருக்கையில்

சுவாமிநாதன்களை கொண்டாடின அரசுகள்.

 

மலட்டு விதைகள்

விவசாயிகள் ஆண்மையை நசுக்கிய போது

பி.டி க்கு எதிராக பேசவும் கூடாதென

சட்டம் போட்டு முந்தி விரித்தன அரசுகள்.

 

கடற்கரை தொடங்கி ஆற்றங்கரை வரை

ஒட்டச்சுரண்டி விற்றுக் குவித்த போது

கலவிக் கொண்டிருந்த அரசுகள்,

விவசாயி கரம்பை மண்ணை அள்ளிய போது

மானமே போனதாய் துடித்தன.

 

கோடைக்கு முன்னே பாலை தலை காட்டி

வைத்த நாற்றும் வதங்கக் கண்டு

மொத்தமும் போனதாய் மண்ணில் வீழ்ந்தான்.

குடிக்க தண்ணீர் மட்டுமல்ல

கண்ணீரும் வற்றிய போதும்

தாமிரவருணியில் உபரி நீர் என்று

பெப்சி கோலாக்களின் உதடுகளில்

முத்தமிட்டுக் கொண்டிருந்தன நீதிமன்றங்கள்.

 

இவற்றை அம்மணமாய் பார்க்காதவர்கள்

முகம் சுழிக்கிறார்கள்

விவசாயிகளின் அம்மணம் கண்டு.

 

பூமியை அவிழ்த்து உண்ணத் தந்தவர்கள்

ஆடையை அவிழ்த்து பார்க்கத் தந்திருக்கிறார்கள்.

வயிற்றிலடிக்கத் தெரியாத அவர்களுக்கு

அவிழ்க்க மட்டுமல்ல,

அடிக்கவும் தெரியும்.

வன்முறை என்று அலறாதீர்கள்.

அவர்கள் அடிக்கத் தொடங்கும் போது

கல்லறைக்குள்ளும்

உங்களால் செத்து விட முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி

viva

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி வைத்து செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.

 

விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய 3 லட்சம் விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள். எது அந்த விவசாயிகளை பட்டினிச் சாவுக்குள், அதிர்ச்சி மரணத்திற்குள், தற்கொலைக்குள் தள்ளியதோ அந்த தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள், அரசால் இன்னும் தீவிரமாய் உச்சத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் விளைவுதான் இன்று தமிழகம் வரையிலும் கொத்துக் கொத்தாய் விவாசயிகள் மடிவது நீண்டிருக்கிறது. இன்னும் எத்தனை லட்சம் விவசாயிகள் மடிந்தாலும், அதற்காக அரசு எதனையும் செய்யப்போவதில்லை. ஏனென்றால் அதைத்தான் முன்னேற்றம் என்று வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியுமா?

 

அண்மையில் வெளியிடப்பட்ட இறந்தாய் வாழி காவேரிஎனும் ஆவணப்படமும், “கொல கொலயா முந்திரிக்காஎனும் குறும்படமும் அதனதன் போக்கில் விவசாயிகளின் மரணத்தை கவனிக்கச் சொல்லி நம்மிடம் கதறுகின்றன. காய்ந்து போன நெற்பயிர்களை மாடுகள் மேயும், “கறட் .. .. கறட்எனும் ஓசை நம் இதயத்தை யாரோ கடித்துத் திண்பது போல் இருக்கிறது.

 

மீண்டும் மெரினாக்கள் தேவைப்படுகின்றன.

 

இறந்தாய் வாழி காவேரி

 

கொல கொலயாய் முந்திரிக்காய்

தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..

அண்மையில் தமிழ் அறிந்த அனைவரும் ஒருமுறையேனும் உச்சரித்த, உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது காஞ்சி தோழர் செங்கொடியின் பெயர். அவரின் தற்கொலை தமிழகத்தை அதிரவைத்தாலும், அந்த ஈகம் கண்களில் நீரையும், அரசின் மீதான கோபத்தையும் வரவழைத்திருந்தது. அதேநேரம், தற்கொலை தீர்வாகுமா? மூன்று உயிருக்காக ஒரு உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியாகும் என்று கேட்டுக் கொண்டு பதிவுலகில் ஒரு கூட்டம் வலம் வந்தது. தற்கொலைகள் தீர்வல்ல, அது ஒரு போராட்ட வழிமுறை அல்ல. என்றாலும் அதன் பின்னிருக்கும் அரசியலை நீர்த்துப் போகவைக்கும் ஓர் உத்தியாக இது கையாளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் தோழர் செங்கொடியின் உடலில் எரிந்த அரசியலின் வெப்பத்தை எதிர்கொள்ள முடியாமல், இரக்க உணர்ச்சியை அணிந்து கொண்டு பார்த்தவர்கள். வேறு சிலரோ மதப் போர்வைக்குள் பத்திரமாக பதுங்கிக் கொண்டு எட்டிப் பார்த்தவர்கள். முத்துக்குமார் நிகழ்வின் போதும் இந்த மதவாதிகள் ஓயாமல் ஓதிய பாட்டுக்களை மீளக் கொண்டுவந்து இப்போதும் ஓதிப் பார்க்கிறார்கள்.

முதலில் கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் இது குறித்த ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் என்னுடன் விவாதித்தவர் தொடரமுடியாமல் நிறுத்திக் கொண்டார். பின்னர், ’நெத்தியடி முகம்மது’ என்ற பெயரில் எல்லோருக்கும் அறிமுகமான பின்னூட்டவாதியாக இருந்து பின்னர் பதிவரான நண்பர் முகம்மத் ஆஷிக் தளத்திலும் இது குறித்த கட்டுரை இருப்பதை அறிந்து. அங்கும் அந்த சுட்டியை இணைத்திருந்தேன். முதலில் அதற்கு பதிலளித்த நண்பர் முகம்மத் ஆஷிக், அதன் பிறகு நான் அளித்த விளக்கங்களை வெளியிடவில்லை. பிளாக்கர் பின்னூட்ட விதிகளை சரியாக அறிந்து கொள்ளாமல் நான் வெளியிட்ட முதல் பின்னூட்டம் வெளிவராத போது, அதை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்து வெளியிடக் கோரியிருந்தேன். அதுபோல இப்போதும் பிரச்சனையாக இருக்கும் என எண்ணி அவருக்கு மீண்டும் மின்னஞ்சலாக அனுப்பிவைத்தேன். ஆனால் இப்போதுவரை அது வெளிவரவே இல்லை.

எனவே, அதை இங்கு பதிவு செய்துவிடலாம் எனும் எண்ணமே இந்த இடுகை. மட்டுமல்லாது, முன்பு ஒருமுறை இதே நெத்தியடி முகம்மது இங்கு தமது பின்னூட்டம் வெளிவருகிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்காக ஒரு பின்னூட்டமிட்டார். உருப்படியில்லாத இந்த பின்னூட்டம் எதற்கு என்று அதை நீக்கிவிட்டேன். உடனே அவரது சகோ.க்கள் எங்கள் பின்னூட்டத்தை எப்படி நீக்கலாம் என்று வானுக்கும் மண்ணுக்குமாய் குதித்தார்கள். (நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பில் ஏழ்மையும் அதன் காரணமும் என்பதில் இதை காணலாம்) இந்த நேரத்தில் அதுவும் நினைவில் வந்து போனது, அதற்காகவும் இந்தப் பதிவு.

தொடர்புடைய நண்பர் முகம்மத் ஆஷிக்கின் பதிவு: பதிவரே நிறுத்துங்கள் மூளைச் சலவையை

நண்பர் முகம்மத் ஆஷிக்,

வேறொரு தளத்தின் விவாதத்தை இங்கு வைக்க வேண்டாம் என்பது தான் அன்று செங்கொடி தளத்தின் நிலைபாடு, விமர்சனங்களை மறுப்பதல்ல. அதனால் தான் தேவைப்படின் மின்னஞ்சலில் கேட்கலாம் எனும் தெரிவும் தரப்பட்டிருந்தது.  அந்தப் பதில்கள் பொதுவில் வைக்கப்பட வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்திருந்தால் அதையும் அப்போதே வெளிப்படையாக கேட்டிருக்கலாமே.  ”வேறொரு தளத்தின் விவாதங்கள் இங்கு தொடர வேண்டாம் என்றால், இந்த தளத்திற்கான கேள்வியாக முன்வைக்கிறோம், பதில் தாருங்கள்”  என்று ஏன் உங்களால் கேட்டிருக்க முடியாது?  ஏனென்றால், உங்கள் நோக்கம் அதுவல்ல.

\\ அது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக அத்தளத்தில் பதியப்பட்டதல்ல///—அப்புறம் எதற்கு என்னை அங்கே பின்னூட்டங்களை பார்வையிட சொன்னீர்கள்…? ///ஒரே தலைப்பு எனும் அடிப்படையில் ஒரு தொடக்கத்திற்காகவே அந்த சுட்டி தரப்பட்டிருந்தது.///—இல்லை..! நீங்கள் அதற்காக நீங்கள் தரவில்லை.  —பின்னூட்டங்களை படிக்க சொல்லித்தான் தந்தீர்கள்..! எதற்கு இந்த முரண்..?//

இதில் என்ன முரண் இருக்கிறது என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.  உங்கள் பதிவில் எழுப்பப்பட்டிருப்பதற்கான பதிலல்ல. ஆனால், உங்கள் பதிவின் நோக்கமும், அங்கிருக்கும் பின்னூட்டங்களின் நோக்கமும் ஒன்றே எனும் அடிப்படையில்; இப்பதிவில் என்னுடைய பதிலைத் தொடங்குவதற்கான ஒரு முனோட்டமாக அதை உங்கள் பார்வைக்கு தந்திருந்தேன். இது எந்த விதத்தில் முரண்பட முடியும்.

உங்கள் கேள்விக்கான பதிலாக தரப்பட்டவையல்ல என்றபோதிலும், செயலை மட்டுமே எடுத்துக்கொண்டு காரணத்தைப் புறந்தள்ளும் உங்களது இழிவை மறுப்பதை துல்லியமாக்குகிறது. இதில் என்ன முரண் இருக்கிறது? முதலில் வாக்கியங்களை பிய்த்துப் பார்ப்பதை விட அந்த வாக்கியம் கூறும் பொருளை உய்த்துப் பார்ப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.

தற்கொலைகள் ஆதரிக்கப்பட, பின்பற்றப்பட வேண்டிய ஒன்றல்ல. ஒரு மனிதனின் முடிவு எனும் நிலையில் அது தவறு. அதேநேரம் அந்த தவறான முடிவுக்கான நோக்கம் ஒரு பொது நலம் சார்ந்து, அரசுக்கு எதிரான கலகமாக இருப்பதால், இந்தத் தன்மையை உணர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதால் அதை வெறும் தற்கொலை எனும் செயலாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது.  இது தான் முத்துக்குமார், செங்கொடிக்கான வீரவணக்கமாக கட்டுரைகளில் பயணப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது. அவர்களின் முடிவு தவறானது என்பதும் கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பெரியவரின் கருத்து கூட அந்த முடிவு தவறு என்பதையே சுட்டிக் காட்டுகிறது.  இதில் எங்கிருந்து வருகிறது முரண்?  முன்முடிவுகளை கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசிப்பதை விட அதில் உள்ளாடும் பொருளைப் புரிந்து கொண்டு எதிர்வினையாடுவது உங்களுக்கு கடினமாகவே இருக்கும் என்பது எனக்கு புரிந்ததுதான்.

\\ இங்கே யாரும் அவர்களை இழிவு படுத்தவில்லை….. ஏன் நீங்கள் கண்டனம் செய்யவில்லை என்றேதான் திருப்பி திருப்பி கேட்கிறோம் // அல்ல, அவர்களின் முடிவு தவறானது என்பது அந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களால் அதை கண்டனம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  நீங்கள் இழிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும் உங்களின் கட்டுரை அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறது.  \\ எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும்// என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே அது இழிவுபடுத்தல் தான். அதாவது காரணத்தை, நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்ட ஒரு செயலை அந்த நோக்கத்தை நீக்கிவிட்டு செயலை மட்டும் தான் பார்ப்பேன் என்பது இழிவு படுத்தல் தான்.  \\ இறைவனை நம்பிக்கை கொண்ட ஒருமுஸ்லிம் இது போன்ற பகுத்தறிவு இல்லாத இழிசெயலை ஒருபோது செய்யமாட்டான்// \\ மூடர்கள் கூட இந்த இழி செயல் செய்வார்களா? // இந்த பின்னுட்டங்களுக்கும் உங்களின் இடுகைக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் பயன்படுத்தியிருப்பது போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதது தானேயன்றி, இரண்டின் நோக்கமும் இழிவு படுத்துவது தான். சரி இப்போது நீங்கள் கூறுங்களேன், மதம் என்பதைத்தவிர செங்கொடிகளின் தற்கொலைகளை எதிர்ப்பதற்கு என்ன தான் காரணம்?

\\ நல்ல நோக்கம் உள்ளது என்றும் சொல்லிவிட்டு அதை செய்ய நீங்கள் முன்வரமாட்டீர்கள்……..பெரியவரின்’ துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம்தானா…? அதையும் தெளிவுபடுத்தி விடுங்கள் // நீங்கள் புரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கும் விசயம் இது தான்.  நாங்கள் அதைச் செய்ய முன்வராததன் காரணம், நல்ல நோக்கம் மட்டும் போதாது, நல்ல வழிமுறையும் வேண்டும். நோக்கமும், வழிமுறையும் சரியாக இருக்கும் ஒன்றைத்தான் நாங்கள் பின்பற்ற முடியும்.  நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் அதை இழிவு படுத்தவும் முடியாது செயல்படுத்தவும் முடியாது.  இதைத்தான் நீங்கள் தலைவர்கள், தொண்டர்கள், பிரபாகரன், பிடல் காஸ்ட்ரோ என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம், பெரியவரின் துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம் தான்.

 

தட்டையான புரிதல் என்றால் அதற்கு எதிரான பதங்களை பாவிப்பதால் மட்டும் உங்கள் புரிதல் உருண்டையாகிவிடும் என எதிர்பார்க்க முடியுமா?  சுமையூந்து நிகழ்வுக்கும் செங்கொடி நிகழ்வுக்கும் உள்ள பொருத்தப்பாடு, இருவரும் தங்களை இழக்கத் துணிகிறார்கள் சுயநலமற்ற ஒரு காரணத்திற்காக. சுமையூந்து என்பது உருவமாக இருக்கிறது, அதனால் தடுக்கும் வழிகளும் வெளிப்படையாக இருக்கிறது. இதுவே செங்கொடி விசயத்தில் அருவமாக இருக்கிறது. தமிழகம் தழுவிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் சரியான பலனைத் தருமா எனும் ஐயம் எழுகிறது.  அந்த தூக்கு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒருவேளை செங்கொடி காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  எனவே இது வெறும் தற்கொலை மட்டுமல்ல அரசு தாமதத்தால் விளைந்த கொலையும் கூட.  ஏனென்றால், செங்கொடியின் முடிவு மக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாததை பாற்பட்டும் இருக்கிறது.  உருண்டை என கேலி செய்வதால் மட்டும் உங்களுக்கு பருண்மையான புரிதல் வந்து விடாது.

நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தியாகம் என கொண்டாடிக் கொண்டிருக்கும் நிகழ்வில் என்ன பொதுநலம் இருக்கிறது?  இறைவன் சொந்தக்காரன் என்று உங்கள் நம்பிக்கையை கூறுகிறீர்கள்.  வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமாக ஒரு தற்கொலைக்கு தயாராவதையே தியாகம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நீங்கள்,  ஒரு பொது நலனுக்காக பிரமாண்டமான அரசு எந்திரத்தின் அநீதிக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுப்பது என்று புரியாமல், பயன்படவேண்டுமே எனும் பதைப்பில் மேற்கொண்ட முடிவை இழிவு படுத்துகிறீர்கள். எந்த விதத்தில் இது சரி கூறமுடியுமா?

உங்களின் சமூக மற்றும் அரசியல் புரிதல் தவறானது.  உயிர் என்பதை வெறும் இருத்தலுக்கான சாரம் என்பதாக புரிந்து கொள்ளக் கூடாது.  கொள்ளைகளும் கொலைகளும் புரிந்து வயிறு வளர்ப்பதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவனுக்கு இருப்பதும்,  சமூகத்துடிப்புடன் போராட்டக் களத்தில் நிற்பதையே வாழ்க்கையாகக் கொண்டவனுக்கு இருப்பதும் தன்மையில் உயிர் தான். ஆனால் இரண்டையும் ஒன்றாக மதிப்பிட முடியுமா?  வாழ்க்கை என்பது யாரோ தருவதற்கும், அதை திருப்ப ஒப்படைப்பதற்கும் இடைப்பட்ட புனிதமல்ல.  இருப்பதின் அடையாளமே அதை எதற்காக செலவிட தயாராக இருக்கிறோம் என்பதில் பொதிந்திருக்கிறது.  இறைவன் தந்த உயிர், அதை அவன் தான் எடுக்க வேண்டும் நாமே போக்கக் கூடாது எனும் மத விழுமியங்களில் இருந்தே தற்கொலைகளுக்கு எதிரான உங்களின் அறச்சீற்றம் எழும்புகிறது.  மெய்யில் இது அறச்சீற்றமே அல்ல.  இது உங்கள் அகச்சீற்றம்.  அதை சமூகத்தளத்தில் இருந்து எழுப்பப்படும் கேள்விகள் போலக்காட்டி அகச்சீற்றத்தை அறச்சீற்றமாக மொழிமாற்றம் செய்கிறீர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

செங்கொடி

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.

நான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்?

காரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம். அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.

பூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான்.  ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.

சித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.

” பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும் தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி.”

“பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.”

இவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன? ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ? படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை? பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை? (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)

சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா? அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது?

காதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள்? காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள்? உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.

சம்பாதிக்கும் பெண்ணாக தேடிவிட்டு அவர் எதிர்த்துப் பேசினால் சம்பாதிக்கிற திமிர் என்று  என்று அடையாளமிடும் சமூகத்தில் வாழ்கிறோம். காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய புகார்களில் ஆணின் பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் வழக்கை ‘செட்டில்’ செய்யவே முயற்சிக்கிறார்கள். மனைவியை அடிப்பது தவறில்லை என்றும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி உடலுறவு கொள்வது கற்பழிப்பாகாது என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கும் தேசமிது. பதிவிரதா தர்மம் நம் நாட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தவறாமல் போதிக்கப்படுகிறது. காதலனுடன் திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்திருந்த பெண்கள் இங்கு முற்றிலுமாக நண்பர்களாலும் வீட்டாராலும் புறக்கணிக்கப்படுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட புறக்கணிப்பே இப்படிப்பட்ட பெண்களை (அயோக்கியன் என்றாலும்) அந்தக் காதலனின் காலிலேயே விழ வைக்கிறது. அவனும் நிராகரிக்கின்ற வேளை வரும்போது இவர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போகிறார்கள். தனித்து விடப்படுவதால் முதல் முட்டாள்தனத்தை சரிசெய்ய இன்னொரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள்.

ஆதித்யாவை கொலை செய்வதற்கு முன்பிருந்த பூவரசியின் நிலைக்கு ஒப்பானவர்கள் நம்மைச் சுற்றியும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் எல்லோரும் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தருகிறார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களில் பூவரசி மட்டும் காதலனின் மகனை கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறார். நேர்மையாக சொல்வதானால் அவரது குற்றத்தில் நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இந்த வழக்கிலும் பாருங்கள் இப்போதும்கூட ‘என் கணவர் நல்லவர்’ என்கிறார் ஜெயக்குமாரின் மனைவி, பூவரசியின் தரப்பில் ஒருவர்கூட அவரைக்காண வரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவேறு ஒழுக்கவிதிகளையும் நியாயங்களையும் நாம் வைத்திருக்கிறோம் என்பது இவ்வழக்கு விவாதிக்கப்படும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

பூவரசி தண்டிக்கப்படுவார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, அவரும்கூட தன்னை தண்டியுங்கள் என்றுதான் சிறையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆகவே இந்தத் தருணத்தில்  இன்னொரு பூவரசி உருவாகாமல் தடுப்பதற்கு நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா என்பது நாம் நம்மிடம் கேட்டாக வேண்டிய கேள்வி. சீக்கிரம்.. இன்னொரு ஆதித்யா கொல்லப்படும் நாள்வரை நாம் காத்திருக்கலாகாது.

அறிமுகம்


இந்த இடுகையை தந்தது தோழர் வில்லவன். அரசியல் சமூகம் சார்ந்த தனது சிந்தனைகளை வில்லவன் எனும் பெயரில் வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

வலைதள முகவரி: http://villavan.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: villavan.r@gmail.com
%d bloggers like this: