பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை

அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச ரூபாய் என்று அறிவித்து தன்னுடைய பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். இதே முத்தாலிக் முகத்தை சிலர் கரியால் பூசிய போது அதை இந்தியா முழுவதும் எடுத்துச்சென்ற ஊடகங்கள் இப்போது அடக்கி வாசிக்கின்றன.

பாரத பண்பாடு, கலாச்சாரம் என்று பேசிக்கொண்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருந்த இந்த ராம்சேனா நல்லதைத்தான் செய்கிறது என்று ஆசி வழங்கிக்கொண்டிருந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் 60 லட்ச ரூபாயை வைத்துக்கொண்டு ஏழை இந்துக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டத்துடன் இருந்தார் என்று கூறுவார்களா?

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கிருஸ்தவர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக வின் ஓட்டுவங்கி கலவரங்களை அடிப்படையாக கொண்டது. அதில் இருந்து தேர்தல் சீட்டு கேட்டு முட்டிப்பார்த்த முத்தாலிக் வெளியில் வந்து அதையே தன்னை வெளிக்காட்டுவதற்கான உத்தியாக பயன்படுத்திக்கொண்டார். இன்று அதையே நிறுவனமயமாக்கி அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார். தன் முகத்தில் கரி பூசப்பட்ட போது அதை குண்டாயிசம் என்றவருக்கு பப்களில் பெண்களை உதைத்தது குண்டாயிசமாய் தெரியவில்லை. அதே போல 60 லட்சத்திற்கு பேரம் பேசும் போது உண்மையாய் இருந்தது அதுவே தெஹல்காவாகி வெளிவந்த போது உண்மையாக தெரியவில்லை.

இதை ஒரு அமைப்பின் சீரழிவு என்று புரிந்து கொள்ளவேண்டுமா? அப்படி புரிந்துகொள்ளச் சொல்லித்தான் பாடம் நடத்துகிறார்கள். இதில் கடவுள் ராமனுக்கு தொடர்பில்லை முத்தாலிக்கின் முரட்டுப்புத்தி என்று. அந்த கடவுள் ராமனே சுக்ரீவனிடம் பொட்டி வாங்கிக் கொண்டு வாலியை போட்டுத்தள்ளியவன் தானே. எனவே அந்தக்கால முத்தாலிக் படை உதவிக்காக வாலிவதம் செய்ததுபோல் இந்தக்கால ராமன்களின் ஒருவன் பண உதவிக்காக கலவரம் செய்கிறான். இதில் அந்த ஸ்ரீராமனை எப்படி தள்ளிவைப்பது? கல்கி போதைப்பொடியிலிருந்து நித்யானந்தனின் பேதைப்பள்ளி வரை இந்து மதத்திற்கு தொடர்பில்லை என்கிறார்கள். பிறன் மனையை புணர்வதையே புனிதமாய் சொல்லிவைத்திருக்கும் ஒரு மதத்தை இவைகளிலிருந்து விலக்குவது எப்படி?

ஆனால் இவைகளிலிருக்கும் புராணத்தொடர்புகளை கவனிப்பதை விட அரசியல் தொடர்புகளை கவனிப்பதே முக்கியமானது. தெஹல்கா பதிவுகளில் கவனித்தால் கலவரம் செய்யவிருக்கும் ஓவியக் கண்காட்சிக்கு ஒரு முஸ்லீம் மதத்தலைவரை அழைக்கவேண்டும் என்று கூறுகிறான். ஏன்? அன்றிலிருந்து இன்றுவரை ஒரு எதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்து மதம் வளர்ந்திருக்கிறது. அது செரித்துக் கழித்த மதங்களும் கொள்கைகளும் ஏராளம். அதன் இப்போதையை எதிரி இஸ்லாம். கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டது தொடங்கி கோத்ரா வரை அதற்கு சான்றுகள் ஏராளம். இந்த எதிரியை காட்டித்தான் புழுவிலும் கீழாக தாழ்த்தி வைத்திருக்கும் மக்களை இந்து எனும் கூடாரத்திற்குள் அடைக்கிறார்கள். அவர்களுக்கு மதம் வளர்க்க வேண்டுமென்றாலும், பணம் வளர்க்க வேண்டுமென்றாலும், முஸ்லீம் எனும் எதிரி தேவைப்படுகிறது. தங்களை இந்து என அழைத்துக்கொள்வோர் கவனம் பெறுவது எப்போது?

இதை நேரடியாக சொல்லிக்கொள்ள முடியுமா? மக்களில் பெரும்பாலானோர் இந்துத்துவ வெறி பிடித்தவர்களல்லவே. அவர்களிடம் ஓட்டும் வாங்கவேண்டும், பாதந்தாங்கிக்கொண்டு இழி நிலையிலும் இருக்கவேண்டும், தேவைப்படும் போது கலவரம் செய்யவும் வரவேண்டும். அதற்குத்தான் பாரதப் பண்பாடு, கலாச்சாரம் என்று பகல்வேசம் போடுகிறார்கள். பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பற்றி இவர்களுக்கு என்ன அக்கரை? அல்லது ஏழை இந்துக்கள் பற்றித்தான் கவலையா? ஆண்கள் குடிப்பதைக் கண்டு கவலைப்படாதவர்கள் பெண்கள் குடிப்பதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாய் உதைப்பவர்கள் நட்சத்திர விடுதிகளை என்ன செய்திருக்கிறார்கள்? அந்த குடி கலாச்சாரத்தை மக்கள் மீது திணிக்கும் உலகமயத்தை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? உழைக்கும் மக்களை வாழ்விடங்களிலிருந்தும் வாழ்நிலைகளிலிருந்தும் விரட்டியடிக்கிறது உலகமயம். மக்களின் வாழ்வில் நேரடியாக குறுக்கீடு செய்து அவர்களை சிதைத்துக்கொண்டிருக்கும் உலகமயத்தை எதிர்க்காமல் கலாச்சாரத்தை காத்து என்ன பயன்?

தொடர்ந்து இவர்கள் அம்பலப்பட்டுக்கொண்டிருப்பதை காண்போர், அந்த அம்பலங்களிலிருந்து படித்துக்கொள்ளவேண்டிய பாடம் இது தான். மாறாக இது ஒரு நாள் கூத்தாக பொழுதுபோக்கி மறந்து விடுவதற்கல்ல.

கண்டு களிப்பதற்கு மட்டுமல்ல; கண்டு தெளிவதற்கும் கூட.


%d bloggers like this: