நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை?

 

“இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் பெயரில் தொடர் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கியதிலிருந்தே, பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? எனும் கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன். இதுபோன்ற கேள்விகள் யாரிடமிருந்து எதனால் கிளைக்கின்றன என்பதை கவனித்தால் இந்தக் கேள்வியை ஒதுக்கிவிட்டு கடந்து செல்வதே பொருத்தமானதாக இருக்கும். ஆனாலும் அதை நான் அவ்வாறு கடந்து செல்லவில்லை. காரணம், பிஜே எனும் சொல்லின் ஆளுமை தமிழக முஸ்லீம்களிடம் எந்த அளவுக்கு தொழிற்படுகிறது என்பதை அறிந்திருக்கிறேன் என்பது தான். அந்தத் தாக்கத்தில் உண்மையை நோக்கிய சிறிதளவான சலன‌த்தையேனும் ஏற்படுத்த முடியுமா? என்பது என்னுள் கேள்வியாக எழுந்தது. அதனைத் தொடர்ந்தே விவாதிப்பதற்கு இசைவு தெரிவித்திருந்தேன். நான் ஊர் திரும்புதில் ஏற்பட்ட தனிப்பட்ட தாமதங்களும், சில எண்ணங்களும் அந்த இசைவில் சுதி விலகச் செய்திருக்கின்றன. அந்த சுதிவிலகலை சுரம் பிரித்து ஆலாபிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இணையத்தில் எழுதுவது கோழைத்தனமானது, நேரடியாக விவாதிப்பது தான் வீரமானது என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன். கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதி இல்லாத காலகட்டங்களில் அவசியப்பட்ட நேரடியாகத் தோன்றுவது பின்னர் வந்த தொழில்நுட்ப மாற்றங்களால் அவசியமிழந்து விட்டதை உள்வாங்க வேண்டும். நேரடியாக விவாதிக்க வேண்டும் என்பதை முன்மொழிவதற்கான காரணம் என்ன? இணையத்தில் மறைந்து கொண்டு எது வேண்டுமானாலும் எழுதலாம், நேரடி விவாதம் என்றால் அப்படி எதை வேண்டுமானாலும் பேச முடியாது என்று சொல்லப்படும் காரணம் அபத்தமானது. தான் நிற்கும் நிலை சரியானதா? தவறானதா? எனும் மீளாய்வுக்கு அப்பாற்பட்டு அதில் வெல்ல வேண்டும் என்பதே முதன்மையானது என்று ஒருவன் நினைத்து விட்டால் அவனிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது, அது இணையத்தில் எழுத்து விவாதம் என்றாலும், நேரடியாக தோன்றும் விவாதம் என்றாலும் ஒன்றுதான். இதில் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டியது விவாத நேர்மை தானேயன்றி இணைய விவாதமா? நேரடி விவாதமா என்பதல்ல.

முதலில், இணையத்திற்கும் நேரடிக்கும் இடையிலுள்ள மிகப் பெரிய வித்தியாசமே அதன் சாத்தியப்பாட்டில் அடங்கியிருக்கிறது. நேரடியாக விவாதிப்பது அந்த நேரத்தில் நினைவில் இருக்கும் விவரங்கள், குறிப்புகள், சான்றுகள், உணர்ச்சிகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கும். இணையத்தில் என்றால் புதிதாக குறிப்புகளை விவரங்களை சான்றுகளை தேடித்தேடி சரியான திசையில் விவாதத்தை நடத்த முடியும். மட்டுமன்றி நடத்தும் விவாதத்தில் உணர்ச்சிக் கலப்பின்றி நிதானமாகவும் அறிவார்த்தமாகவும் விவாதிக்க முடியும்.

நேரடி விவாதத்தில் பலம் பலவீனங்களைக் குறிப்பறிந்து, பலமான இடங்களைத் தவிர்த்தும் பலவீனமான இடங்களை விரித்தும் விவாதத்தின் போக்கை மாற்ற முடியும். அதாவது, எடுத்துக் கொண்ட தலைப்பின் விவரங்களை விட விவாதத்தை செயல்படுத்தும் உத்தி அதிகப் பங்காற்றும். அவ்வாறில்லாமல் இணைய விவாதத்தில் ஏனைய எதுவும் முக்கியப்படுத்தப்படாமல் எடுத்துக் கொண்ட தலைப்பிலான விவரங்கள் மட்டுமே விவாதத்தை நகர்த்தும்.

நேரடி விவாதத்தில் விளக்கங்களை தருவதற்கு குறுகிய கால அவகாசம் இருப்பதால், இருக்கும், விளக்கங்களையே சிறப்பாக எடுத்து வைக்க இயலாமல் போகலாம்; மட்டுமன்றி உடனடியாக எதிர்வாதம் புரிய வேண்டியதிருப்பதால் துல்லியமான, தெளிவான விளக்கங்களை தரவியலாமல் போகலாம்.

இணைய விவாதத்தின் சிறப்புகளை கூற வேண்டுமென்றால் அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இணைய விவாதத்தை தவிர்ப்பதற்கு கூறப்படும் இன்னொரு காரணம், நேரடி விவாதம் என்றால் ஓரிரு நாட்களில் முடித்து விடலாம், இணைய விவாதம் என்றால் நீண்டு கொண்டே செல்லும் என்பது. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்; விவாதம் என்பது ஒரு பிரச்சனை குறித்தோ அல்லது ஒரு குற்றம் குறித்தோ ஆன விசாரணை அல்ல. கொள்கை குறித்தான விவாதம். எது சரி என தீர்மானிக்க வேண்டிய விவாதம். அதை உடனடி தோசையைப் போல் ஓரிரு நிமிடங்களில் வெந்து விட வேண்டும் என நினைப்பதும் ஒரு விதத்தில் அறியாமை தான். நம்பிக்கையோடு ஊடாடி நிற்கும் ஒன்றை சில நாட்களில் உதிரவைத்துவிட முடியும் என்பதும் மத நம்பிக்கையைப் போன்றதொரு மூட நம்பிக்கையாகத் தான் இருக்க முடியும். எது சரி என்பதை முடிவு செய்ய வேண்டுமென்றால் அந்தக் கொள்கைகளின் எல்லாத் தளங்களிலும் ஊடுருவிச் செல்லும் விவாதம் நடத்தினால் தான் முடியும். ஆண்டுக் கணக்கில் நீண்டாலும் கூட, ஆழமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும், செய்யப்படும் விவாதமே அந்த இலக்கை நோக்கி எட்டு வைக்கும். அதற்கு எந்த விதத்திலும் நேரடி விவாதம் ஏற்றதல்ல.  

இல்லை, இது சரியில்லை, நேரடி விவாதம் தான் சரியானது என நினைப்பவர்கள், இதுவரை நடத்திய எத்தனையோ விவாதங்களில் எந்த ஒரு விவாதத்திலாவது ஒரு முடிவை வந்தடைய முடிந்ததா என்பதை நினைவுபடுத்திக் கூறட்டும். இரண்டு நாள் கச்சேரி நடத்திவிட்டு உன் முடிவு உனக்கு என் முடிவு எனக்கு என்று விலகிச் செல்வதற்கு விவாதம் என்ற பெயரிலான இரண்டு மூன்று நாள் கச்சேரி எதற்கு?

எந்த ஊடகத்தில் விவாதிப்பது என்பது ஒரு புறமிருக்கட்டும், ஏன் இந்த த.த.ஜ வினரோடு விவாதிக்க வேண்டும்? பிஜே அவர்களின் இணைய தளத்தில் விவாதம் குறித்த விளக்கமொன்று இப்படிக் குறிப்பிடுகிறது,

\\\கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்///

இது ஏற்கத்தக்க நிலையல்ல என்பதோடு மட்டுமன்றி ஆதிக்க நிலையிலிருந்து வெளிப்படும் கருத்து. இவர்கள் யாருடனும் விவாதிப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்ய முன்வரும் எவரும் இவர்களுடன் முதலில் விவாதம் செய்திருக்க வேண்டும் என எண்ணுவது ஆதிக்க மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

மதம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல, பொதுவானது, அது குறித்து விமர்சனம் செய்ய எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பினால் அவர்களுக்கு உகந்த எந்த ஊடகத்திலும் அதைச் செய்யலாம். அந்த விமர்சனங்களுக்கு இந்த வழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என எப்படி நிபந்தனை விதிக்க முடியாதோ அது போலவே நேரடி விவாதம் செய்ய முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க முடியாது.

நேரடி விவாதங்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன? நிச்சயம் விளம்பரங்களாகத் தான். எந்தத் தரப்பிலிருந்தும் மற்றத் தரப்பை சலனப்படுத்தக் கூடச் செய்யாத விவாதங்களையும் நாங்கள் வென்றுவிட்டோம் என அறிவித்துக் கொள்வதன் மூலம் மிகைமதிப்பை ஏற்படுத்தி அறிவிக்கப்படாத விளம்பரங்களாய் செயல்படுத்துவது தான் நேரடி விவாதங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவிரவும் இந்த விவாதங்கள் வியாபார ரீதியிலும் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு டிவிடிக்கள் அடங்கிய திகவுடனான விவாதத்தை சௌதியில் 25 ரியாலுக்கு (தோராயமாக 300 ரூபாய்) விற்கிறார்கள்.

எந்த மாற்றத்தையும் செய்ய எவருக்கும் அதிகாரமில்லாத‌ ஒன்றைப் பற்றி விவாதம் நடத்த முடியுமா? எதைத் தொடுத்தாலும் அதில் எங்கள் நிலைபாடு சரியானது தான் என விளக்கம் கொடுக்க மட்டுமே முடிந்த ஒரு இடத்திலிருந்து தன்னிலை விளக்கம் தான் கூற முடியுமேயன்றி விவாதம் செய்ய முடியாது. எனவே விவாதம் என்பதே தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எத்தனிக்கும் ஒரு உத்தி தான். ஆக செம்மையான விளம்பர, வியாபார திட்டமிடல்களுடன் நடத்தப்படும் விவாதங்களில் பங்கேற்பது அறிதல் எனும் வழியிலன்றி, அவர்களின் நோக்கங்களுக்கு துணைபோதல் எனும் வழியிலேயே அமையும்.

அடுத்து, யாருடன் விவாதம் செய்வது? எனும் கேள்வி முதன்மையானது. உழைக்கும் மக்களின் இல்லாமையை பயன்படுத்தி அவர்களை மதங்களின் பிடியில் ஒட்டச் செய்யும் மத அமைப்புகளுடன் விவாதம் செய்வதை விட அந்த மக்களிடம் நேரடியாக, அவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளினூடாக சமூகத்தை உணரச் செய்யும் விவாதங்களே தேவையாகவும் இன்றியமையாததாகவும் இருக்கின்றன. அந்த வகையில் மதங்களின் கோரப் பிடியில் சிக்குண்டு கிடப்பவர்களிடம் விவாதமல்ல அம்பலப்படுத்தல்களே அவசியமாக இருக்கின்றன. அந்தவகையில் தான் இஸ்லாம் எனும் மதத்தை அம்பலப்படுத்தி அந்தத் தொடர் எழுதப்படுகிறது. அந்த அமபலப்படுத்தல்களுக்கு பதில் கூற விரும்பினால் எங்கும் எதிலும் கூறலாம். மாறாக நேரடி விவாதம் எனும் திரைகளின் பின்னே மறைந்து கொண்டு பதில் கூறுவதிலிருந்து நீண்ட நாள் தவிர்க்க முடியாது.

இங்கு எழுப்பப்படும் கேள்விகளை அலட்சியம் செய்வதென்றாலும் அதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை, அது அவர்கள் உரிமையும் கூட. ஏனென்றால் இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் மதத்தின் மீதுதானேயன்றி, தனிப்பட்டவர்கள் மீதோ, தனிப்பட்ட அமைப்பின் மீதோ அல்ல.

பின் குறிப்பு: இதைக் கண்டதும் பயந்து விட்டேன் என்பது முதல் கோழை என்பது ஈறாக அணிவகுக்கப் போகும் பின்னூட்டதாரிகளுக்கு ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். நேரடி விவாதத்தை விட இணைய விவாதமே சிறந்தது என்பதற்கு இங்கு வைக்கப்பட்டுள்ள காரணங்கள் குறித்து மறுக்கவோ எதிர்வினையாற்றவோ இயலாத எவருக்கும் அவ்வாறு பின்னூட்டமிடும் அறுகதை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

%d bloggers like this: