வெற்றி அதிமுகவிற்கு பரிசா? தோல்வி திமுகவிற்கு தண்டனையா?

இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்திருப்பது குறித்து பலரும் எழுதியும் பேசியும் முடித்து விட்டனர். ஜெயலலிதா கூறியிருப்பது போல் அவர்களே எதிர்பாராத அளவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. திமுக தான் வெல்லும், அதிமுக தான் வெல்லும் என்று ஆரூடம் கூறிய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கூட இரண்டு கூட்டணிக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் எனத் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சி எனும் தகுதி(!)யைக்கூட திமுக இழந்து போகும் என எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் இருநூறு இடங்களுக்கும் மேல் வென்று அதிமுக ஆட்சியமைத்திருக்கிறது.

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” எனும் இயக்கம் கடந்த தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் சற்றேறக் குறைய அனைத்து பெரு சிறு நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் வீச்சாக செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த தேர்தல்களைவிட அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. என்றாலும் கூட தோராயமாக 25000 வாக்குகள் 49ஓ வில் போடப்பட்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது ரகசியமானது என பிரம்பெடுத்து பாடம் நடத்திய தேர்தல் கமிசன், 49ஓ வை அப்படி ரகசியமாக எளிய முறையில் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. மட்டுமல்லாது, 49ஓ போட்டவர்களை மிரட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. மாறாக ஓட்டு போடும் இயந்திரத்திலேயே 49ஓ வுக்கும் ஒரு பொத்தானை அமைத்திருந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் சில மடங்குகள் உயர்ந்திருக்கக் கூடும்.

49ஓ போட்டவர்களும் கூட இந்த அமைப்புமுறை நமக்கு எந்த நன்மையையும் செய்து விட இயலாத ஒரு பொம்மை அமைப்பு என்பதை உணர்ந்து அதற்கான எதிர்ப்பாக இதை வெளிப்படுத்தி விடவில்லை. உள்ளூர் பிரச்சனைகள், கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் காட்டிய அலட்சியத்திற்கு எதிரான கோபமாகவே 49ஓ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ”ஓட்டுப்போடாதே புரட்சி செய்“ எனும் முழக்கமும் 49ஓ வும் ஒன்றல்ல. இந்த அமைப்புமுறை நம்மை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒன்று, இதைத் தகர்த்து புதிய அமைப்புமுறையை நிர்மாணிக்கும் வரை நமக்கு விடுதலை இல்லை என உணர்ந்து அதற்கான அறைகூவலை விடுப்பது ”ஓட்டுப்போடாதே புரட்சிசெய்” என்பது. வேட்பாளர்கள் மீது வாக்காளர்களுக்கு இருக்கும் அதிருப்தியும் கோபமும் இந்த அமைப்புமுறைமீது திரும்பிவிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஒரு வடிகால் முறைதான் 49ஓ.

திமுகவும் காங்கிரசும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருப்பதற்கு தங்களின் பிரச்சாரம் தான் காரணம் என தமிழீழ ஆதரவு இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் மகிழ்ந்து கொள்கின்றன. அவர்கள் அப்படி சொல்லிக்கொள்வதற்கு ஏதுவான வெற்றி என்று கொள்ளலாமே தவிர தங்களின் பிரச்சாரம் தான் காரணம் என கூறிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனப் படுகொலை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை மறந்துவிட முடியுமா?

இந்தத் தோல்வி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான தண்டனை என்கிறார்கள். மின்தடை, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என்கிறார்கள். இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் அதன் முழுப்பொருளில் அப்படியான காரணமாக கருத முடியாது. தேர்தலில் ஒரு அணி வெல்வதையும் தோல்வியடைவதையும் தீர்மானிக்கும் காரணிகளில் பெரும்பங்கு வகிப்பது கூட்டணி சேர்வது தான். இந்தத் தேர்தலில் ஏதோ காரணங்களுக்காக தேமுதிகவும் காங்கிரசும் கூட்டணியமைத்து போட்டியிட்டிருந்தால் திமுக எளிதாக வென்றிருக்கும் அல்லது அதிமுக இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது. அப்போது ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்தடை போன்றவற்றை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று காரணம் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருந்திருக்குமோ அவ்வளவு அபத்தம் தற்போது ஊழலுக்காக திமுகவை மக்கள் தண்டித்து விட்டார்கள் என்பது.

கட்சி சார்ந்து வாக்களிக்கும் மக்களை விடுத்து பொதுவாக தேர்தல் நேர மனநிலையைப் பொருத்து வாக்களிக்கும் மக்கள் தேர்தல் முடிவுகளில் செலுத்தும் தாக்கம் சிறிதளவுதான். எதிர்ப்பு அலை ஆதரவு அலை போன்ற விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்தால் இது தான் உண்மை. ஊழல் என்றாலும், விலைவாசி உயர்வு உள்ளிட்டு என்னென்ன சீர்கேடுகள் என்றாலும் கட்சித்தலைமை கூறும் சப்பைக் கட்டுகளை ஏற்றுக் கொண்டு, அதை மெய்யென நம்பி தன் உறவினர்களிடம் பிரச்சாரம் செய்யும் கட்சித் தொண்டர்கள், அனுதாபிகள் இருக்கும் வரை கட்சிகள் கூட்டணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது. இல்லாவிட்டால் 63 தொகுதிகளிக் கொடுத்து காங்கிரசை கூட்டணியில் இறுத்திக் கொள்ள வேண்டிய தேவையென்ன? தன்னுடைய பார்ப்பனிய புத்தியை தணித்துக்கொண்டு விஜயகாந்தை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன?

ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி சேர்ந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும், அதன் மூலம் ஆட்சியமைத்துக்கொள்ளும் வசதி இருக்கும் வரை ஊழலோ விலைவாசி உயர்வோ பாரிய முக்கியத்துவம் எதையும் பெற்றுவிடாது. இன்றைய நிலையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர வேறெதற்கும் தொண்டர்களின் ஆதரவாளர்களின் அவசியமில்லை என்பதே யதார்த்தம். பரப்புரை செய்வதிலிருந்து கொடிகட்டுவது வரை ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் செய்து கொள்ளும் வசதி கிடைத்திருக்கும் போது ஒரு கட்சிக்கு அதன் ஆதரவாளர்களை பிரச்சனை சார்ந்து சிந்திக்க வைப்பதோ கொள்கைகளை பயிற்றுவிப்பதோ அவசியமற்றதாகி விட்டது. தேர்தல் சமயங்களில் மட்டும் காசை விட்டெறிந்து ஓட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இன்றைய நிலையில் சமூகப்பிரச்சனைகளின் தாக்கத்தை தேர்தல் முடிவுகளில் எதிர்பார்ப்பது சிந்திக்கும் திறனுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா?

ஆனால் சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு வேறு செயல்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக அதிமுக தலைமையிலான அரசாங்கம் அமைந்திருக்கிறது. திமுகவின் சமச்சீர் கல்வித் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் சட்டசபை வளாகம் மீண்டும் கோட்டைக்கே மாற்றப்பட்டிருக்கிறது. இவைகளில் இவ்வளவு கவனம் செலுத்தும் புதிய அரசு, கடந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையாவது திருத்தம் செய்யவோ அல்லது நீக்கவோ செய்யுமா? மின்தடையை நீக்குவதற்கு முன்னுறிமை அளிப்போம் எனக்கூறும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறுமா? கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது போலவே இந்த ஆட்சியிலும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளும் ஊக்குவிப்புகளும் அவர்களுக்கான லாபக் காப்பீடும் தொடர்ந்து வழங்கப்படும் என்றால், எந்த அடிப்படையில் இதை புதிய ஆட்சி என்பது?

கண்துடைப்பு திட்டங்களைத்தவிர மக்களை மேம்படுத்த மெய்யான அக்கரையுடன் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படுமா? அல்லது கருப்புச் சட்டங்கள், உத்தரவுகள் வாயிலாக மக்கள் துன்புறுத்தப்படுவார்களா? இரண்டில் யார் வந்தாலும் இது தான் நடக்குமென்றால் இதில் யாருக்கு பரிசு? யாருக்கு தண்டனை?

முந்திய அதிமுக ஆட்சியில் சசிகலாவின் மிடாஸ் சாராய ஆலையில் கொள்முதல் செய்ய வேண்டுமென்பதற்காக டாஸ்மாக் தொடங்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் மிடாஸிலிருந்து சாராயம் வாங்குவது நிறுத்தப்பட்டதா? திமுக ஆட்சி என்பதால் அதிமுகவினரின் மணல் கொள்ளை நிறுத்தபட்டதா? இதோ அதிமுக ஆட்சியேறியதும் கல்வி கட்டணச் சீர்திருத்தத்தை நீர்த்துப் போகவைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதில் திமுக கல்வி வள்ளல்களுக்கு பங்கு ஏதும் இருக்காதா? இதனால் அவர்கள் பலனடைய மாட்டார்களா? என்றால் இதை என்ன பொருளில் ஆட்சி மாற்றம் என்றோ தண்டனை என்றோ கூறமுடியும்?

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ என்ன செய்தார்கள் என்பதைப் பேசுவதல்ல அரசியல், அதை அவர்கள் என்ன அடிப்படையில் செய்தார்கள் என்பதைப் பேசுவதில் தான் அரசியல் அடங்கியிருக்கிறது. வாக்கைச் செலுத்திவிட்டு ஜனநாயகக் கடமையை நிறைவு செய்துவிட்டோம் என களிப்பில் இருப்பவர்கள் இங்கிருந்து தான் தங்கள் சிந்தனையைத் தொடங்கியாக வேண்டும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: