பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை மடைமாற்றி, மோடியை முன்னிறுத்துகின்றன ஆளும் வர்க்கங்கள்.

நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி, குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர், தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர்; உறுதியான முடிவுகள் எடுத்து துணிச்சலாக நடைமுறைப்படுத்தி வெற்றிகளைக் குவிக்கும் திறமைசாலி; ஊழலை ஒழித்த உத்தமர்; மொத்தத்தில் ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்று பொய்களை மாலையாக சூட்டி, புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இதயம் உள்ள மனிதர்கள் அனைவரின் இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர பச்சைப் படுகொலைகளை 2002-ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தி 3000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை படுகொலை செய்தவர். அதற்கு சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா என்ற தனது சக அமைச்சரையே படுகொலை செய்தவர். இந்த மோடி தனி நபர் அல்ல. சாதி மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை மோத விட்டு, பார்ப்பன-இந்து மதவெறி பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலைவன். இந்துத்துவத்தை குஜராத்தில் சோதித்து ருசிகண்ட காட்டுப் பூனை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை திட்டமிட்டு புறக்கணித்து, டாடா, அம்பானி, அதானி, எஸ்.ஆர், ஃபோர்டு, மாருதி என கார்ப்பரேட் முதலைகளுக்கு குஜராத் வளங்களை தாரை வார்த்தது தான் மோடி உருவாக்கிய வளர்ச்சி. அதனால் மேட்டுக்குடி வர்க்கமும், கார்ப்பரேட் முதலாளிகளும் மோடியை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றனர். தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி இங்கே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஜப்பானுக்கு நேரில் சென்று எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார். 4.5 கோடி சில்லறை வணிகர்களை அழிக்க வரும் வால்மார்ட் பற்றி இன்று வரை மோடி வாயைத் திறக்கவில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் முகமூடிகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து வாங்கி பயன்படுத்திய இந்த யோக்ய சிகாமணி தான், சீன ஊடுருவலை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என சவடால் அடிக்கிறார்.

நாடு முழுவதும் அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக நடத்திய ஊழல்களில் காங்கிரசின் நிலக்கரி, அலைக்கற்றை ஊழல்கள் முதல் பாஜக-வின் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை வரை அனைத்துமே தனியார்மயத்தின் பெயரால் முதலாளிகள் கொள்ளையடித்த ஊழல்கள் தான். இந்த தனியார்மய கொள்கையில் காங்கிரசுக்கும பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை என்பதோடு அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக ஒரு துறையையே ஏற்படுத்தியது வாஜ்பாயின் பாஜக அரசுதான். சுமார் 42 லட்சம் ஏக்கர் அரசு நிலம் பல்வேறு காரணங்களுக்காக டாடா, அம்பானி, எஸ்.ஆர், மிட்டல், அதானி, அமெரிக்க மெக்டோனால் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய குஜராத்தின் முக்கிய விவசாய உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 152 கிராமங்களைப் பிடுங்கி பல்லாயிரம் ஏக்கர் வளமான விலை நிளங்களைப் பறித்து (64 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் தனியார் அணு மின்நிலையத்திற்கு) தாரை வார்க்கப்பட்டுள்ளன.

ஊழல் கறை படியாத உத்தமரான மோடி, ரிலையன்ஸ் குழுமத்திற்கு எரிவாயு திட்டத்தில் காட்டியுள்ள சலுகைகள் அலைக்கற்றை ஊழலை விட முகப்பெரிய ஊழலாகும். சிங்கூரிலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற குத்தகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் மானியமாக மட்டும் 35 ஆயிரம் கோடி வழங்கினார். குஜராத் அரசிடமிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்த முதலாளிகள் பலர் தொழில் தொடங்காமல் வீட்டு மனைகளாக்கி விற்று கொள்ளைடித்துள்ளனர். 56 மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து முந்திரா என்ற தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேருக்கு வாழ்வளித்த வெங்காய சாகுபடி நிலத்தைப் பறித்து நிர்மா சிமெண்ட் கம்பெனிக்கு கொடுத்ததும் மோடி தான். ஆனால் வேலை கிடைத்ததோ வெறும் 416 பேருக்கு மட்டும் தான். குஜராத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில், மோடி ஆட்சியில் தான் அரசு சொத்துக்கள் அதிகம் சூறையாடப்பட்டது என்பதோடு மிகப்பெரிய ஊழல் ஆட்சியும் இது தான் என்பதை பல்வேறு ஆய்வுகளும் தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தியுள்ளன. 2011-ம் ஆண்டு மட்டும் 17 ஊழல்களை தலைமை தணிக்கைத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். வாழ்வாதார அழிப்பு, கார்ப்பரேட் சூறையாடல், ஊழல் இவற்றை தான் மாபெரும் வளர்ச்சி, நாட்டிற்கே முன்மாதிரி என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இருள் கவ்விக் கிடக்கும் குஜராத்

எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்லும் அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் மோடி. ஆனால், 2003 முதல் 2012 முடிய 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையை பதிவு செய்ய வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீசு அதிகாரியே அம்பலப்படுத்துகிறார். சுமார் 85 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி நாசமான போது சல்லிக்காசு கூட நிவாரணம் வழங்காமல் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்தவர் தான் மோடி. மின் உற்பத்தியில் உபரி எனப் பீற்றிக் கொள்ளும் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு 10 மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

• மாநில மொத்த உற்பத்தி (SGDP) அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.
• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.

இதுதான் மோடி நிர்வாகத்தின் யோக்யதை. ‘மோடி நடத்துவது ஆட்சி அல்ல, மளிகைக் கடை; இங்கு லாபம் மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்’ என்றார் ஒருவர். இது தான் உண்மை நிலை. ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002-ல் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீசு அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்றும் ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் ஒரே குரலில் பேசக் காரணம் குஜராத் மக்களை ஒடுக்கியது போல, இந்திய மக்களை அனைவரையும் ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தடைகளை நீக்குவார் என்பதே. மோடியும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானவர்கள் தான். குஜராத்தில் முதலாளிகளின் லாபம் உயரும் அதே வேகத்தில் தொழிலாளிகளின் ஊதியம் வீழ்ச்சி அடைகிறது என்பதே உண்மையான நிலவரம்.

தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்கவும், கம்யூனிச எதிர்ப்பை நயவஞ்சகமாய் முன்னெடுக்க இனவாதிகளும், முதலாளிகளும் பாஜக பின்னால் அணிவகுக்கும் அபாயகரமான சூழலில் உழைக்கும் மக்களாகிய நாம் ஓரணியில் திரள்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம். வாரீர்.

காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே !
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் !

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்

சிறப்புரை : தோழர். மருதையன்,
மாநில பொதுச்செயலர், 
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
சித்ரா காம்ப்ளக்ஸ் எதிரில், சத்திரம் – திருச்சி.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

 

“பெண்கள் இந்நாட்டின் கண்கள்” என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா?

 

அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் பெண் உறவுகளை இழிவுபடுத்துகிறது. பெண்களின் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு அலசுகிறது, விளம்பரப்படுத்துகிறது. இளவட்டங்களின் சிந்தனையைச் சீரழிக்கிறது. அவர்களை ஒருபுறம் வில்லிகளாகவும், மறுபுறம் அடிமைகளாகவும் வாய்பேச வக்கற்றவர்களாகவும் காட்டுகிறது. பனியனுக்கும் ஜட்டிக்கும் சாக்லேட்டுக்கும் ஐஸ்கிரீமுக்கும் சோரம் போகிறவர்களாக இழிவுபடுத்த்டுகிறது. அறைகுறை ஆடைகள் அணிந்த அழகுப் போட்டிகள், ஆபாசமான ஆடல் பாடல் போட்டிகள், இரட்டைப் பொருள் கொண்ட பட்டிமன்றங்கள் ஆகியவற்றைக் கடைவிரித்து தனியார் டிவி நிறுவனங்கள் காசுபறிக்கின்றன.

 

ஆனால், வரதட்சனை வரவில்லை என்று புகையும் சிகரெட்டால் பொட்டு வைப்பதைப் பற்றியோ, வாழாவெட்டியாக பெண் விரட்டியடிக்கப்படுவதைப் பற்றியோ, குடும்பம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றியோ, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றியோ, ஆணாதிக்கக் கொடுமைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் பெண்களைப் பற்றியோ, அப்பெண்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் பற்றியோ, பெண்கள் அமைப்பாக அணிதிரளவேண்டிய அவசியத்தைப் பற்றியோ மறந்தும்கூட அந்த டிவி நிகழ்ச்சிகள் சொல்வதில்லை. கதைகளாகக் கூட சித்தரிப்பதில்லை. டிவி மட்டுமல்ல குடும்பப்பத்திரிக்கைகள் என்ற போர்வையில் வலம்வரும் மஞ்சள் மசாலா பத்திரிக்கைகளும் இச்சமூகப் பிரச்சனைகளை விவாதிப்பதில்லை. காரணமென்ன? அவைகளின் நோக்கமே பெண்களை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்படையச் செய்து போராட வைப்பதல்ல, பெண்களை வைத்து காசு பறிப்பதே அவற்றின் நோக்கம். இந்த கேடு கெட்ட நோக்கத்தை உடைத்தெறியாமல் வெறும் சுமை தாங்கிகளாக, அடிமைகளாக இருந்து என்ன பயன்? இவைகளைத் தாங்கிக் கொண்டு எவ்வளவு காலம் தான் இருக்கப் போகிறோம்?

 

குடும்பத்தில் சுமை, வேலையில் சுமை, வயிற்றில் சுமை, இதயத்தில் சுமை என்று பல சுமைகளைத் தாங்கியது போதும். தவிர, ஈராயிரம் ஆண்டுகளாய் பார்ப்பன இந்துமதம் உருவாக்கிய சாதிக் கட்டுமானத்துக்கும், பிற்போக்குகளுக்கும், பல மதப் பிரிவுகளுக்கும் பலியாக்கப்படுவது போதும். சமூகம் நம்மீது திணித்துள்ள இத்தனை சுமைகளுக்கும் பலிகளுக்கும் நாம் பணிந்து போக முடியாது. போராட்டம் ஒன்றே தீர்வு!

 

புதியதொரு சமூகத்தை, புதிய ஜனநாயக சமூகத்தைப் படைக்க உண்மையான கம்யூனிஸ்டுகளாகிய நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம். கள்ளிப்பாலை ஊற்றிக் கல்லறைக்கு அனுப்பும் கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.

“சமூக மாற்றம் நிகழ்வதும் பெண்ணாலே, ஆணாதிக்கம் அழிவதும் பெண்ணாலே” ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிலை நாட்டுவோம்!

பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாக திரள்வோம்.

மார்ச் 8 உலகப் பெண்கள் நாளில் உறுதியேற்போம்!

இந்த நாளை உழைக்கும் பெண்கள் நாளாக வளர்த்தெடுப்போம்!

 

பொதுக்கூட்டம் * கலை நிகழ்ச்சி

8.3.2011 செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணி

பேருந்து நிலையம்,

குரோம்பேட்டை (சென்னை)


தலைமை:

தோழர் உஷா

செயலர்,

பெ.வி.மு.,

சென்னை.

 

சிறப்புரைகள்:

தோழர் அமிர்தா,

பெ.வி.மு., சென்னை.

தோழர் துரை, சண்முகம்

ம.க.இ.க‌

பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை


தொடர்புக்கு:

தோழர் உஷா,

41, பிள்ளையார் கோவில் தெரு,

மதுரவாயல்,

சென்னை 600095.

பேச: 98416 58457

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

 

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்

நண்பர்களே,

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும்,  முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான போர் யாருக்கு எதிராக யார் நடத்தும் போர் என்பது தெளிவாகும். பிப்ரவரி 20 ல் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அவ்வாறான பகுத்தறிதலை உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.

வாருங்கள்,

உங்கள் குடும்பத்தினரோடு

உங்கள் நண்பர்களோடு

ஆம் நண்பர்களே, நம் மீதான போரை நாம் எதிர்ப்பதன் முதல்படி இது.

தொடர்புக்கு: (0091) 9710082506

(0091) 9444834519

போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.

     தில்லைக் கோவிலை அரசு தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து விரட்டப்பட்ட தீட்சிதக் கும்பலைப்போலவே வேறுசில கும்பல்களும் வயிற்றில் அமிலமேறிக் கொதிக்கிறார்கள்.ஆனால் அதை தீட்சித ரவுடிகள் போல் வெளிப்படுத்த முடியாமல் சுவரொட்டிகளில் உமிழ்ந்திருக்கிறார்கள் அரசுக்கு நன்றி என்று.     

    
தில்லை நடராஜரின் காதில் தமிழ் ஓதியதும் ஆலயத்திலிருந்து அயோக்கியர்களை வெளியேற்றியதும் வக்கீல் வைத்து வாதாடிப் பெற்ற வெற்றி மட்டுமல்ல, மக்களை ஒன்றினைத்து போராடிப்பெற்ற வெற்றி. எத்தனை தடைகள்? எத்தனை குள்ள நரித்தனங்கள். அத்தனையையும் மக்களின் துணையால் துடைத்தெறிந்து பெற்ற வெற்றி. முதல் கூட்டத்தில் புலி வேசம் கட்டி உருமிய சிபிஎம் போலிகள் பின் பார்ப்பான் என்று சொல்லாதிர்கள் என்று பூனையாகி ஒதுங்கினர். போராட்டத்திற்கு வராத தேசியவாதிகள் வக்கில் ராஜீவை நாங்கள் தான் அறிமுகப்படுத்தி வைத்தோம் என்று விலகி நின்று துண்டு போடுகிறார்கள். இவர்களின் கூத்துகளைக்கண்ட சிதம்பர மக்களோ இரண்டாம் வாயால் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் முதியவர் ஆறுமுகச்சாமியை அடித்து வீதியில் தள்ளியதையும் கண்டார்கள், யானையில் வந்து தமிழ் பாடியதையும் கண்டார்கள். இந்த இரண்டுக்கும் இடையேயான மாற்றம் சும்மா வந்து விடவில்லை என்பதையும் கண்டார்கள். இதை பொறுக்கமாட்டாமல் தான் பார்ப்பனியத்தில் ஊறித்திழைத்த ஊடகங்கள் புரட்சிகர அமைப்புகளை அவர்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன. இரவில் நடை சாத்தப்பட்டப் பிறகு கோயிலின் பிரகாரங்களில் மடைமாற்றிய சல்லாபங்களை தலையங்கமாய் தீட்டாத நாளிதழ்கள் கோயிலை அரசு எடுத்துக்கொண்டதும் தலையங்கம் தீட்டுகின்றன. ஆத்தீகக் கோயிலுக்குள் நாத்தீகச் சதி என்று அலறுகின்றன. கள்வெறி ஆட்டங்களையும் காமக்களியாட்டங்களையும்; சுரண்டியும் திருடியும் வயிறு பெருக்கிய கொட்டத்தை சுற்றியிருந்த மடங்களும் ஆத்திகர்களும் ஏன் கேட்கவில்லை? கடலுக்குள் பயனற்றுக் கிடக்கும் மணல்திட்டை தொட்டபோது புண்பட்ட இந்துக்களின் மனம் கோயிலுக்குள் ஒழுக்கக் கேட்டின் எல்லையையே தொட்டபோது ஏன் புண்படவில்லை? ஏனென்றால் அது ஆத்தீகப் புண்ணல்ல. அரசியல் புண். இந்தப் புண்ணுக்கு நாத்திகர்களான புரட்சிகர இயக்கங்களிடம் தான் மருந்து இருக்கிறது.     

     அன்று மக்கள் முன் அறிவிக்கப்பட்ட இலக்குகள் இன்னும் மீதமிருக்கிறது. நந்தன் நுழைந்த தெற்குச் சுவர் இன்னும் மீதமிருக்கிறது. இது ஆன்மீகமல்ல, தீண்டாமை. இந்த சாதி வெறியை தீண்டாமையை, அரசியல் போலிகளின் கபட நாடகங்களை திரைகிழிப்பது அவசியம். மொட்டை சோ முதல் முட்டை சு.சாமி வரை கோவிலை அரசிடமிருந்து பிடுங்கப் போராடும் இதே கும்பல் தான் சுகாதாரம் முதல் கல்வி வரை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான துறைகளைனைத்தையும் அரசிடமிருந்து பிடுங்கப் போராடுகிறது. இந்த மக்கள் விரோதக் கும்பலை விரட்டியடிப்பதும் தீண்டாமையை பக்தியாக காட்டும் ரவுடிக் கும்பலை விரட்டியடிப்பதும் வேறு வேறானதல்ல. அந்த திசை வழியில் தில்லையில் தொடர்கிறது போராட்டம். பிப்ரவரி 21ம் தேதியில் நடைபெறும் பேரணியும் பொதுக்கூட்டமும் இதை விரிவான தளத்தில் உங்களிடம் எடுத்து வைக்கும்.  

 

பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

நாள்:சனிக்கிழமை பிப்ரவரி 21, சனிக்கிழமை

பேரணி துவங்கும் இடம் காந்தி சிலை அருகி்ல்

பொதுக்கூட்ட இடம் : பெரியார் சிலை,

சிதம்பரம்

%d bloggers like this: