ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழலே சர்வரோக நிவாரணியாகிவிட்ட அரசியல்வியாதிகளை யாரும் தண்டித்துவிட முடியாது எனும் இயலாமையினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இப்போதைய பரபரப்பு சலசலப்பெல்லாம் அடுத்து யார்? எவ்வளவு தொகை? என்பனபோனற ஆர்வங்களின் விளைவுகளே.

மராட்டிய கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பு ஊழல், இராணுவ நிலபேர ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், கன்னட நிலம் வாங்கிய ஊழல்….. என்று தொடராக வந்துகொண்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் அவைகள் மக்கள் நலன்களுக்காக செயல்படப்போவ‌தில்லை என்றாலும், இந்த ஊழல் பணங்கள் முறையாக அரசுக்கு கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓட்டுப் பொறுக்குவதற்காகவேனும் சில இலவசத் திட்டங்களேனும் வந்திருக்காதா? வேறு வழியின்றி மாட்டிக் கொண்டவை மட்டும்தான் இவை. கருப்பு நிறத்தில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பணம் கூட கடந்த ஆண்டு ஒரு செய்தியாய் வந்து போனது. எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்ல இவை என்ன வெள்ளத்தில் அடித்துவரப்படும் ஊதிப்போன பன்றிப் பிணங்களா? நாம் உழைத்த, நமக்காக பயன்படத்தக்க பணமல்லவா? முதுகில் வலிக்கும்வரை காத்திருக்க வேண்டுமா?

மத்திய அமைச்சர் பதவி விலகி விட்டார், மராட்டிய முதல்வர் பதவி விலகி விட்டார், கன்னட முதல்வர் பதவி விலகப் போகிறார் என்றவாறு வரும் பதவி விலகல் நாடகங்கள் ஊழல் செய்ததற்கான தண்டனையா? அல்லது தவறிழைத்துவிட்டோம் எனும் தார்மீகங்களின் உந்துதலா? நிச்சயம் இல்லை. செய்தியறிந்து கொண்ட மக்களை ஆற்றுப்படுத்தச் செய்யும் வினையாடல்கள். நாளை மக்கள் மறந்ததும் வேறு பதவிகளில் அமர்ந்து கொண்டு தாம் செய்ததை கூடுதல் கவனத்துடன் தொடர்வார்கள்.

பதினோரு நாட்களாக நாடாளுமன்றம் அமளிகளால் செயல்படாமல் முடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தே தீருவது என விடாப்பிடியாக நிற்கின்றன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளாக நாளிதழ்களால் விளம்பப்படும் இது என்ன விதமான பயனைத் தரும்? இன்னும் சில நாட்கள் நாடாளுமன்றம் கூச்சலைச் சந்தித்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் அல்லது குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம். அடுத்து நாடாளுமன்றம் தொடங்கும் போது வேறு விதமான பிரச்சனைகள், வேறு விதமான சவடால்கள், அதோடு மறந்துவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தால் ஊழல் செய்த பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமா? திருடர்கள் ஒன்று சேர்ந்தால் திருட்டுப் பொருட்கள் மீட்கப்படுமா? இந்த ஆட்சிக்காலத்தை மட்டும் விசாரிக்கலாம் என்கின்றன எதிர்க்கட்சிகளின் கூட்டு. பழைய ஆட்சிக்காலத்திலிருந்து பார்க்கலாமா? என்கிறது ஆளும்கட்சிக்கூட்டு. இந்த‌ பல்லவி எதிர்ப்பல்லவியையா ஊழலுக்கான எதிர்வினையாக மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பது?

நாடாளுமன்றம் முறையாக நடந்தால் எதையாவது செய்துவிடமுடியுமா? அது ஒரு அரட்டை மன்றம் என்பதைத்தவிர என்ன நடந்திருக்கிறது இதுவரை? என்ன அதிகாரம் இருக்கிறது அந்த பன்றித் தொழுவத்திற்கு? நாட்டை நடத்திச் செல்வதற்கும் இந்த தொழுவத்தின் அரட்டைகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? அரசு என்ன செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும்? எதை நோக்கிச் செல்ல வேண்டும்? எந்த திசையில் செல்லவேண்டும்? என்பன போன்ற அனைத்தையும் தீர்மானிப்பது உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் ஊடாக பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளல்லவா? ஊழல்கள் என்பதென்ன? இந்த முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும், சலுகைகளையும் அள்ளிக் கொடுப்பதனால் வீசப்படும் எலும்புத்துண்டுகளல்லவா ஊழல்கள். எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டவர்கள் அதை வீசியவர்களுக்கெதிராய் நடவடிக்கை எடுப்பார்களா? வாலாட்டுவார்களா?

எல்லா மாற்றுகளிலும் இந்த அயோக்கியத்தனங்களையே கலையாக நேர்த்தியாகச் செய்யும் அதிர்ச்சியைக் கண்டு கண்டு மக்களிடம் படர்ந்த‌ நொதித்துப்போன அலட்சியங்களையே தம் செயலுக்கான அங்கீகாரமாய் மடைமாற்றுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணமாய், ஆட்சிக் காலங்களில் இலவசத்திட்டங்களாய் மக்களை பின்னோக்கிய பரிணாமத்தில் தள்ளிக்கொண்டு சென்ற காரணத்தினால்தான் மக்கள் இவைகளை செய்திகளாய், பொழுதுபோக்கு அறிதல்களாய் கடந்து போகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் தேவையாய் இருக்கிறது.

இந்த ஊழல்களின் பணத்தை பறிமுதல் செய்து மக்கள் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என மக்களால் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடியாதா? இந்த ஊழல்வாதிகளையும், அதற்கு காரணமானவர்களையும், இதன் மூலம் பலனடைந்தவர்களையும் இப்போதே விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்ய முடியாதா?

தண்ணீர் வரவில்லை என்று காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்ய முடிகிறபோது, இலவசங்கள் முறையாக கிடைக்கவில்லை என்று நகராட்சி அலுவலகங்களை முற்றுகையிட முடிகிறபோது, விலைவாசி உயர்வினை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்ய முடிகிறபோது, ஊதிய உயர்வு வேண்டும் எனக்கோரி போராட முடிகிறபோது, இதுபோன்ற அனைத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாய் இருக்கும், ஊழலை விதை போட்டு வளர்க்கும் தனியர்மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்த்து போராடமுடியாதா? முடியும். அரசியலை அதன் மெய்யான பொருளில் நாம் புரிந்துகொள்ளும்போது, நம் துன்பங்களும் துயரங்களும் இங்கிருந்தே பிறப்பெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் போது, அனைத்து மாய்மாலங்களையும் கடந்து பாட்டாளிகளாய் நாம் களத்தில் நிற்கும் போது நம்மால் நிச்சயம் முடியும்.

 

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌

%d bloggers like this: