பிஜேபியை வெட்டு! மட்டுக் கறியை திண்ணு!!

peoples-power-beef-festival-2

மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்!

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக…..
ஜூன் 1 தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் நடத்தும் மாட்டுக்கறி திருவிழா!
அனைவரும் வருக!

தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்

dellikkaddu

கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது.

அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள்,  பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தார்கள். அரசு லத்திக் கம்புகள் மூலம் மட்டுமே பேச முடிவு செய்திருந்தது அப்போது அங்கே வெட்ட வெளிச்சமாகியது. சென்னை மெரினாவில் மட்டுமல்ல. மதுரை, கோவை, திருச்சி, சேலம், என அனைத்து இடங்களிலும் அரசு ஒரே மாதிரியாக தன் பாசிச முகத்தைக் காட்டியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து நொறுக்கினார்கள், வெகுண்டெழுந்து வந்த பொது மக்களை தடுத்து விரட்டியடித்தார்கள், உணவு, குடிநீர் கொண்டுவந்தவர்களை அவைகளை பிடிங்கிக் கொண்டு விரட்டினார்கள். கடல் வழியாக உணவு கொண்டு வந்தவர்களை கடலோர ரோந்துப் படகுகள் விரட்டின. வீடுகளில் புகுந்து பெண்கள் குழந்தைகளையும் கூட தாக்கினார்கள். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்து தீவைத்துக் கொழுத்தினார்கள். ஆட்டோக்களை, குடிசைகளை தீமூட்டி எரித்தார்கள். இன்னும், இன்னும் .. .. ..

இப்படியெல்லாம் அராஜகம் செய்வதற்கு பொறுக்கித்துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்புவது வெகு எளிது. ஆனால் அப்படி கேள்வி எழுப்புவது அறியாமை என்பது தான் உண்மை. இப்படியான அராஜகங்களை செய்வதற்காக பயிற்சியளித்து உருவாக்கப்பட்டிருப்பது தான் அந்த கிரிமினல் துறை. வரலாறெங்கும் இதற்கான ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அண்மையில் ரூபாய்தாள்கள் மதிப்பிழப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்டு, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இன்றி தெனாவெட்டாக சுற்றித் திரிகின்றனவே. அது ஒன்று போதாதா? இத்தனை நாட்கள் அவர்கள் அனுமதித்ததும், திங்களன்று அவர்கள் வன்முறை வெறியாட்டம் ஆடியதும் திட்டமிட்ட நடவடிக்கைகளே. அதற்கான தயாரிப்புகளை முதல் நாளே தொடங்கி விட்டார்கள். இன்று அவர்கல் குதறிப் போட்டிருப்பதற்கு எதிராக சட்டப்படி எதுவும் செய்துவிட முடியாது.  நீதி மன்றங்களின் கதவை முட்டி முட்டித் திறந்தாலும், அவர்கள் லத்தியை வீசும் போது அதன் குறுக்கே உடலைக் காட்டியது உங்கள் தவறு தான் என்று தீர்ப்பெழுதப்படும். ஒரு போராட்டம் என்பது இதனைப் புரிவதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சரிதான். ஊடகங்களின் கதி என்ன?

அனைத்து ஊடகங்களும், “படுத்தே விட்டானய்யா” என்பது போல் காவலர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கிறார்கள் என்றும், மாணவர்கள் கலைந்து செல்கிறார்கள் என்றும் கூறின, காட்டின. இதற்கு மேல் போனால் அம்பலப்பட்டு விடுவோம் எனும் எல்லையில் தான் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகளை காட்டின. இன்றைய செய்தித்தாளகளை புரட்டிப் பாருங்கள். எந்த நாளிதழும் காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கவே இல்லை. கூத்தாடிகளும், அறிவுஜீவிகள் என தங்களை கூறிக் கொள்வோரும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விளங்குவதற்கு இதைவிட தூலமாக வேறு எதுவும் தேவையில்லை.

ஆனாலும் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களின் இந்த போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. அவர்களின் முகாந்திரமான கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இது தொடக்கம் தான் என்றும் இனி போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் அரண்டு போய்க் கிடக்கின்றன. அரசுகளுக்கு எதிரான போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் எல்லா விதத்திலும் பேராதரவு வழங்குவார்கள் என்பது நீரூபிக்கப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் நோக்கங்களுக்கு அப்பட்டமான எதிரிகள் கூட போராட்டத்தை புகழாமல் (நடிப்பாகவேனும்) நகர்ந்து செல்ல முடியாது எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசு எத்தனை கொடூரமானது என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நேரடியாக உணர்ந்திருக்கிறார்கள். இதை விட போராடுபவர்களுக்கு வேறு என்ன வெற்றி வேண்டும்? ஆனால், இதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விலை, இதிலிருந்து கிடைத்திருக்கும் பாடம். இவைகளை உணராமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட முடியாது.

புரட்சி சாத்தியமா? கம்யூனிசத்துக்கு எதிராக இப்படி ஒரு கேள்வி வெகுகாலமாக நீட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. இதற்கு தத்துவார்த்த ரீதியாக, வரலாற்று ரீதியாக தொடர்ந்து பதிலளிக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. என்றாலும், இந்த மெரீனா போராட்டம் புரட்சி சாத்தியம் தான் என்பதை கண்முன்னே நிகழ்த்திக் காட்டி விட்டுச் சென்றிருக்கிறது. இரவு பகல் பார்க்காமல் லட்சக் கணக்கானோர் தங்கள் நோக்கத்திற்காக விடாப்படியாக கூடியிருந்தார்கள். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்துப் பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கூட போராட்டங்கள் நடைபெற்றன. சிறு வணிகர்கள் தொடங்கி தரைக்கடை வியாபாரிகள் வரை போராடுபவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்குவதற்கு அவ்வளவு ஆர்வத்துடன் செயல்பட்டார்கள். சில இடங்களில் போராட்ட இடத்துக்கு போக வேண்டும் என்றதும் பணமே வாங்காமல் ஆட்டோக்கள் கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன. மேல்தட்டு வர்க்கத்தினரைத் தவிர ஏனைய அனைத்து பிரிவு மக்களும் இந்தப் போராட்டத்தில் தங்களுடைய பங்களிப்பு ஏதாவது ஒரு விதத்தில் இருக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் முன்வந்திருக்கிறார்கள். இதைத்தான் புரட்சி கோருகிறது. அறிவியலாளர்கள் வேதியல் ஆய்வுக் கூடங்களில் செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தி வினைபுரிய வைப்பார்களே, அதேபோல நெருக்கடியான காலகட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மக்கள் இங்கே இந்தப் போராட்ட சூழலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பல பதில்களால் விளக்கியும் புரட்சி சாத்தியா? என மீண்டும் மீண்டும் முணுமுணுத்தவர்கள், எந்தப் பதிலும் சொல்லப்படாத நிலையிலும் ஆம் புரட்சி சாத்தியம் தான் என வாய் திறக்கிறார்கள்.

மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள், தனக்கு நேரடியான, உடனடியான பலனைத் தராத எதிலும் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே கலந்து கொண்டாலும் எதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் செய்வார்களே தவிர உள்ளார்ந்த விருப்பத்துடன் கலந்து கொள்ள மாட்டார்கள் இப்படி ஒரு பட்டியலே வாசிப்பார்கள். இது போன்ற அனைத்துக்கும் செருப்படி கொடுத்திருக்கிறது இந்த டில்லிக்கட்டு போராட்டம். மகிழ்ச்சி என்றால் போராட்டம், போராட்டம் என்றால் மகிழ்ழ்சி என்று ஆசான் அன்று சொன்னதற்கேற்ப இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் தங்கள் சொந்தக் குடும்பத்தில் நடக்கும் திருவிழா போல அத்தனை மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள். எந்தப் பிரச்சாரமும் செய்யப்பட்டிருக்காத நிலையிலும் தாய்மார்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவசர வேலையாக வெளியூர் செல்பவர்கள் ஆர்வமாக வந்து பத்து நிமிடம் அமர்ந்து முழக்கம் எழுப்பிவிட்டுச் சென்றார்கள். கைத்தடி இல்லாமல் நடக்க முடியாத முதியவரும் கூட தன் பொக்கைவாய் கொள்ளாத மகிழ்வுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஒரு கருத்து மக்களை பற்றிக் கொண்டால் அது பௌதீக சக்தியாக மாறும் என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டாக இருந்தது மெரீனா போராட்டம்.

போராட்டம் என்ற பெயரில் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதையும் அண்டாவுடன் சேர்த்து பிரியாணியை திருடித் தின்பதையும் வழிமுறையாகக் கொண்ட கும்பல்களை, இந்தப் போராட்டத்தின் ஒழுங்கும் கட்டுப்பாடும் காரி உமிழும்படி செய்திருக்கிறது. மனிதர்கள் அரசு என்ற ஒன்று இல்லாமல் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கும் சம்மட்டியின் வீரியத்துடன் பதிலை இறக்கியிருக்கிறது இந்தப் போராட்டம். தலைமை என்றும் வழிநடத்தும் குழு என்றும் எதுமிலாத போதும் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் சாத்தியப்பட்டிருக்கிறது. பெண்கள் என்றாலே போகப் பொருள் என்றெண்ணும் சாம்பிராணிகள், எப்போதும் உடனிருந்த பெண்களும் ஆண்களும் உயரிய நோக்கங்களினால் உந்தப்பட்ட உணர்வுடன் நடந்து கொண்டார்களே, இதைக்கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். எந்தவித அரசுகளும் தந்திரமுடியாத உச்சகட்ட ஜனநாயகமும் இங்கு தழைத்தது. ஒரு கல்லூரி விரிவுரையாளர் இந்தப் போராட்டம் ஏன் என்பதை விவரித்தார். அடுத்து பேசவந்த சைக்கிளில் வாழைப்பழம் விற்பவர் இந்தப் போராட்டத்தில் நான் ஏன் கலந்து கொண்டேன் என்பதை உணர்ச்சிக் கொந்தளிப்புடன் விவரித்த போது விலையுயர்ந்த உடையுடன் இருந்த அந்தக் கல்லூரி விரிவுரையாளர் அழுக்கு ஆடையுடன் இருந்த வாழைப்பழக்காரரை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டார். உடலுழைப்பை மூளை உழைப்பு அங்கு கொண்டாடியது. விரும்பும் அனைவரும் பேசினார்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள், குப்பை அள்ளினார்கள், வந்த உணவுப் பொதிகளையும், திண்பண்டங்களையும் குறித்து வைத்து, கணக்குப் பார்த்து வினியோகித்தார்கள். சாதி, மத பேதங்களுக்கு இடமே இல்லாத, போலியாகக் கூட ஆணாதிக்கம் எட்டிப் பார்க்காத சமூகமாக சில நாட்கள் வாழ்ந்து காட்டினார்கள். முதலாளித்துவ கசடுகள் இன்னும் மனதில் இருந்து அழித்தொழிக்கப்பட்டிராத நிலையிலும் ஓர் அரசற்ற அரசாக தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும் என்றால், இதுவரை இருந்த ஆதிக்க மனப்பான்மை உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை கசடுகளையும் நீக்கியிருக்கும் கம்யூனிச சமூகத்தில் மக்கள் எவ்வளவு உயரிய, மகோன்னத நிலையில் இருப்பார்கள். திறனுள்ளவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

அரபுலக நாளிதழ் ஒன்று மெரீனா போராட்டத்தை தஹ்ரீர் சதுக்க போராட்டத்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தது. சமூக ஊடகங்கள் மூலம் அரசுக்கு எதிராக ஒலித்த ஓங்கிய குரல் அந்தப் போராட்டம்.  ஆனால் அதன் தற்போதைய நிலை என்ன? எந்த ஏகாதிபத்திய அடிவருடி அரசை எதிர்த்து எகிப்திய மக்கள் போராடினார்களோ அதே ஏகாதிபத்திய அடிவருடிகள் வேறு வடிவத்தில் மீண்டும் அங்கே அதிகாரத்தில் இருக்கிறார்கள். உணர்வெழுச்சியுடன் போராடிய மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உள்வாங்காமல் இன்னொரு தஹ்ரீர் அங்கு சாத்தியமா?

இன்னொரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். 80களின் தொடக்கத்தில் அஸ்ஸாமில் மாணவர் எழுச்சி ஏற்பட்டது. மாணவர் தலைவரான பிரபல்ல குமார் மகந்தா புதிய கட்சியை தோற்றுவித்தார். அடுத்து வந்த தேர்தலிலேயே அஸ்ஸாம் கணபரிசத் எனும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தது. இன்று அதன் நிலை என்ன? ஓட்டுக் கட்சிகளில் பத்தோடு பதினொன்றாய் அழுகி நாறிக் கிடக்கிறது. அந்த மாணவர் எழுச்சியின் பலன் ஏன் இப்படி உருத்திரிந்தது?

மெரீனா போராட்டத்தை அனைவரும் விதந்தோதுவதன் மையச் சரடு அது அரசியல் கட்சிகளின் கலப்பில்லாமல் நடந்தது என்பது தான். போராட்டம் நடந்த பல இடங்களில் அரசியல் பேச வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கு எந்தச் செயலும் அரசியல் கலப்பில்லாமல் இல்லை. புரட்சிகர அரசியலும், ஓட்டுக்கட்சி அரசியலும் ஒன்றல்ல எனும் யதார்த்தம் புரியாத இடங்களில் அரசின் பூச்சாண்டிகள் கோலோச்சுகின்றன. பொறுக்கித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் புது தொடர்புகளைக் கண்காணியுங்கள். தோழர் என அழைத்துப் பேசினால் அவர்களின் தொடர்புகளைத் துண்டியுங்கள் என்று வெளிப்படையாக கோரிக்கை வைக்கிறார்கள். சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? மாணவர்களின் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் அரசியல் பேசவேண்டாம் என விடுத்த கோரிக்கைக்கும், இப்போது அதிகாரிகள் விடுக்கும் கோரிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இதற்கான பதிலில் தான் மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு போராட்டங்களும் தூர்ந்து போனதற்கான விடை இருக்கிறது.

புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் தான் மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கான கோரிக்கைகள் அவர்களின் கைகளில் தான் தீர்க்கப்படும். அவர்களோடு கை கோர்ப்பது மட்டுமே போராட்டங்களை சரியான திசையில் கொண்டு செல்லும். மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும். இனி அடுத்தடுத்து பயணப்பட வேண்டியிருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?

uzavar

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் கொத்தாய் மடிந்து போன விவசாயிகளின் தற்கொலையில் தென்படாத ஈரமா? எது முதன்மையானது? மாணவர்களே! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றானே ஒரு கிழவன். அவனை தமிழன் இல்லை என அறிவித்து விடலாமா?

 

சர்வ நிச்சய்மாக உங்கள் போராட்ட உணர்வை குறைத்து மதிப்பிட விருப்பமில்லை. ஆனால் உங்கள் போராட்டம்.. .. ? ஜல்லிக்கட்டில் ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. அவைகளை இங்கு எழுப்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய பயிர்களைப் போல் தாங்களும் கருகி வீழ்ந்து கிடக்கிறார்களே, இதை விட ஜல்லிக்கட்டு எந்த விதத்தில் இன்றியமையாததது?

 

நாடு முழுவதிலும் கடந்த 25 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இந்தப் பிரச்சனை வெகு மக்களிடம் எந்த தக்கங்களையும் ஏற்படுத்தாமல் கடந்து போயிருக்கிறது. அதாவது கடந்து செல்ல வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், குண்டு வெடிப்பு முதல் தேசபக்தி வரை பல்வேறு செய்திகள் இந்த கடந்து போதலுக்கு பக்கமேளமாக ஆகியிருக்கின்றன. உங்கள் போராட்டமும் அவ்வாறான ஒரு பக்கமேளமா எனும் மெல்லிய ஐயம் இழையோடுகிறது.

 

எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அமைப்போ முன்னெடுக்காமல் சமூக வலைத்தளங்களின் உந்துதலால் மட்டுமே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிரான செய்திகள் சத்தமில்லாமல் நீக்கப்படுவதும், திடீரென ஒரு செய்தி வைரலாகி இணையத்தை கலக்குவதும் இயல்பானது போன்ற ஒப்பனையுடன் உலாவருகின்றன. அண்மை ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் நாடுகளில் நடத்தப்பட்ட வானவில் புரட்சிகள் நிழலாடுகின்றன. அந்தப் போராட்டங்களில் எதை எதிர்த்து மக்கள் திரண்டார்களோ அது தான் இப்போதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. போராடிய மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கு அடிமைத்தனம் மட்டுமல்ல, அவ்வப்போது கிளர்ச்சிகளும் தேவைப்படுகின்றன.

 

காவிரி கழிமுக பகுதிகளில் கொத்துக் கொத்தாக மடியும் விவசாயிகள் அச்சு, காட்சி ஊடகங்களிலோ, வெகுமக்களிடமோ பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்பதன் உள்ளீடு, அதன் பின்னே ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதில் மையம் கொண்டிருக்கிறது.

 

கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்னீர் திறந்து விடப்படவில்லை என்பதன் பின்னே மீத்தேன், நியூட்ரினோக்களும், ஷெல்கேஸ், கெயில்களும் இல்லை என்று கூற முடியுமா?

அந்நிலங்களை பாழ்நிலங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. போஸ்கோவுக்கு எதிராக நியாம்கிரி மக்கள் நடத்திய போராட்டங்கள் எதிர்மறையாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. நேர்மறையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் எங்கே? ஜல்லிக்கட்டு போராட்டங்கள் யாருக்கு உதவுவதற்காக?

 

நூற்றைம்பது விவசாயிகள் வரை தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் தாமதமாக கர்நாடகா, கேரளாவுக்குப் பிறகு வறட்சி மாநிலம் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசோ 17 விவசாயிகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. மரணமடைந்த விவசாயிகளுக்கு 3 லட்சம் நிவாரணமகவும், ஏக்கருக்கு 5500 இழப்பீடாகவும் அறிவித்து எச்சைக்கையால் காக்காய் விரட்டியிருக்கிறது. விவசாயிகளை தூக்குக் கயிற்றின் முன்னே நிருத்தி, அவர்களின் தலையை சுருக்கினுள் மாட்டி விட்ட செயல் வரை இந்த அரசுகளும் அதன் கொள்கைகளும் செய்தவை. ஆற்று மணல் கொள்ளை தொடங்கி, நீர்நிலைகளை நாசமாக்கியது, இருக்கும் சொற்ப நீராதாரத்தையும் பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்த்தது, எந்த வரைமுறைகளும் இல்லாமல் தொழிற்சாலைகளை அமைக்க அனுமதித்து சுற்றுச் சூழலை நாசமாக்கியது, கனிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் காடுகளை மொட்டையடித்தது என அனைத்தும் சேர்ந்து தான் மழை வளத்தை அரித்தது. எல்லாவற்றையும் முதலாளிகளின் நலன் எனும் அடிப்படையிலிருந்து செய்து விட்டு, இயற்கை பொய்து விட்டது, வயோதிகத்தால் இறந்தார்கள் என்று இப்போது சொல்கிறதே இந்த அரசு. ஆளும் கட்சி எதிர்க்கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து வண்ண தனியார்மய தாசர்களும் ஜல்லிக்கட்டை ஆதரித்து நிற்கிறார்களே. என்றால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் யாரைக் காப்பாற்ற?

 

பொங்கல் என்றால் அது அறுவடைத் திருவிழா. பாளம் பாளமாய் நிலம் வெடித்து அந்த வெடிப்பின் வழியே விவசாயிகளின் உயிர் காய்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பொங்கல் கொண்டாடுவது என்பதன் பொருள் என்ன? இழவு வீட்டில் கொண்டாட்டமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்துக்கு எதிரே உண்ணும் விரதம் நடத்துவது போல், இந்த நேரத்தில் பொங்கல் கொண்டாடுவது செத்துப் போன அந்த விவசாயிகளைக் கேலி செய்வது போல் இல்லையா?

 

இதோ, செத்துப்போன விவசாயிகளுக்கு நீதி வேண்டும் என்று குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத் தீப்பொறியை பற்ற வைத்திருக்கிறார்கள். கல்லூரிகளில் தீ பரவட்டும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Mr.Senkodi

What is your opinion of following article ?

Is it True ? If it is true can we drink ?

Medically  it is ok ??

please answer it.

byrosekhan

one of the agenda from hindutva.

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தைஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெளஜல் என அது பெயரிட்டுள்ளது.இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இதுமார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக்குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர்வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போதுமார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போலஉடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காதுஎன்றார் ஓம் பிரகாஷ்.இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சிவருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும்புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில்இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்டகுளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. 2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல்பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல்பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இதுகுணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டுகுளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள்தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டுதயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேதமூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும். இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம்இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதியகுளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தைஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

அண்மையில் தோழர் அரை டிக்கட் வினவு தளத்தில் பின்னூட்டமிடுகையில் கதை ஒன்றை சொல்லியிருந்தார். பிரிட்ஜ் (குளிர் பெட்டி) வாங்குவதற்கு ஒருவர் கடைக்கு செல்கிறார். விற்பனைப்பிரதிநிதியோ அவருக்கு அதை விற்க மறுக்கிறார். பின் அவர் பல நாட்களில் பல்வேறு வேடங்களில் வந்து கேட்டும் அவரை சரியாக அடையாளம் கண்டு ஒவ்வொரு முறையும் “உனக்கு விற்பதற்கில்லை” என மறுத்துவிடுகிறார். கடைசியில் சோர்ந்து போய் அவர் “ஒவ்வொரு முறையும் நான் தான் என்று எப்படி சரியாக அடையாளம் கண்டு கொள்கிறீர்கள்?” என்று விற்பனை பிரதிநிதியிடம் கேட்டார். “யோவ் நீ ஒவ்வொரு முறையும் பிரிட்ஜ் என்று கேட்டது ஒரு வாஷிங் மிஷினை” என்றார். இதைப்போல்தான் பார்ப்பனீய பாசிசங்கள் சுதேசி என்றும் கலாச்சார காவலர்கள் என்றும் பல்வேறு முகமூடிகளுடன் வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் அவர்களின் சொந்த கோர முகத்தை மறைக்க முடிவதில்லை. அந்த வகையில் இப்போது கோமிய பானம். அதாவது பசுவின் மூத்திரத்திலிருந்து குளிர்பானம் தயாரிக்கிறார்களாம், அதற்கு கோஜல் என்று பெயராம். கோகோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க மூத்திரத்தில் உட்கொள்ளக்கூடாத அளவில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் ஆய்வகங்களில் சோதனை செய்து நிரூபித்தனர் சில ஆண்டுகளுக்கு முன்பு. அதனைத்தொடர்ந்து பல ஊர்களிலும் அந்த அமெரிக்க மூத்திரத்தில் மின்ட் மிட்டாயை போட்டால் எப்படி பொங்கிச்சீருகிறது என்று பலர் நேரடியாக செய்து காட்டினர். இன்னும் சிலர் கழிப்பறையை கழுவி அதன் கரை நீக்கும் அமிலத்தன்மையை விளக்கிக்காட்டினர். அந்த நேரத்தில் அவைகளின் விற்பனை கொஞ்சம் சரிந்திருந்தது. இதைப்பயன்படுத்தி ஒரேகல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கத்திட்டமிட்டன பாசிசப்பரிவாரங்கள். அந்தக்கல்தான் கோஜல் எனும் மாட்டு மூத்திரம். அப்படியென்றால் மூன்று மாங்காய்கள்?

உழவர்களின் வாழ்வோடும், கிராமப்புற கால்நடை வளர்ப்போடும் இரண்டறக்கலந்த விலங்கு மாடு. உழவுக்கு காளையும், கால்நடை வளர்ப்புக்கு பசுவும் இன்றியமையாதவை. அறுவடைக்குப்பிறகு வைக்கோல் மாடுகளுக்கு உணவானது, அடுத்த விதைப்புக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடை வளர்ப்பு மாற்றுத்தொழில். பால், இறைச்சியை உணவாகக்கொள்வதும், சாணத்தை வீடுகளில் தரை மொழுகவும், அடுப்பெரிக்கவும் என்று அவர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதனால்தான் அவர்கள் கொண்டாடும் திருநாளில் கூட மாட்டுக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஆனால் இதற்கு நேர் எதிராக வேள்வி நெருப்பில் குதிரையையும் மாடுகளையும் பொசுக்கித் தின்றுதீர்த்த பார்ப்பனக்கூட்டம், பௌத்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் அதன் கொல்லாமயை தன்னுள் வாங்கிக்கொண்டு புலாலுண்ணாமை என தகவமைத்துக்கொண்டு தன்னை தக்கவைத்துக்கொண்டது. பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் தங்கியிருப்பதாக புழுகி அதையே புராணமாக்கி பசுவை புனிதமாக்கிக்கொண்டது. இன்று அதைக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் நரவேட்டையாடிவருகிறது. மாட்டை கொன்றார்கள் என்று கூறி மனிதர்களின் தோலை உரிக்கிறது. மாட்டின் உயிரைவிட மனிதனின் உயிர் முக்கியமானதல்ல என்று வெளிப்படையாகவே கொக்கரிக்கிறது. பெரியார் ஒரு முறை சொன்னார், “பஞ்சகவ்யம் என்று பசுவின் சாணி மூத்திரம் போன்றவற்றை கலந்து அதை புனித தீர்த்தமாக குடிக்கச்செய்வது, முகம் சுழிக்காமல் குடிக்கிறானா என்பதை வைத்து இவன் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறான், எந்த அளவு இவனை ஏமாற்றலாம் என்று அளந்து பார்க்கும் கருவியாக பசுமூத்திரத்தையும் சாணியையும் பயன்படுத்துகிறான்” என்று. இன்று அதே சோதனையை விரிவான அளவில் செய்யப்போகிறார்கள் அதுவும் நம்மிடமே காசு வாங்கிக்கொண்டு. சரி இந்துக்கள் என்று தம்மை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சரிவரும் ஏனையவர்களுக்கு? அதற்க்காகத்தானே பசு மூத்திரம் செல்வளர்ச்சிக்கு உதவுகிறது என்று டாக்டர் சந்திர சேகர் என்பவர் ஆய்வு செய்து கூறியிருக்கிறார். குஜராத்தில் பசுவின் பயபாடுகள் பற்றி கருத்தரங்கம் நடத்தியிருக்கிறார்கள். மைசூரில் பிஞ்சாரேபோல் சொசைட்டி சாந்திலால் சோர்டியா என்பவரின் தலைமையில் இது போன்ற அரிய உண்மைகளை(!) கண்டுபிடித்துச்சொல்வதற்கு முழுமூச்சோடு ஈடுபட்டு வருகிறது. உத்ராஞ்சல் அரசு 20கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இணையத்தில் தேடினாலோ உலகத்திலுள்ள அத்தனை நோய்களுக்கும் கோமியம் சிறந்த நிவாரணி என்று கட்டுரைகள் கிடைக்கும். ஆக நாம் எவ்வளவு ஏமாளி என்று நம்முடைய காசைக்கொண்டே சோதித்துப்பார்த்து அதில் லாபமும் அடைவது முதல் மாங்காய்.

பெப்சி கோக் போன்ற அன்னியப்பொருட்களை எதிர்ப்பது போலவும், சுதேசியத்தை காப்பது போலவும் போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்தது என்ன? பொதுத்துறை நிறுவனங்களை அன்னியனிடம் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சகம் அமைத்தார்கள். பசுவதை தடுப்புச்சட்டம் என்று மாட்டின் புனிதம் பற்றி பாடம் நடத்தியவர்கள், அந்த புனிதமான மாட்டோடு இணைந்த விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ள காரணமான கொள்கையை எதிர்த்து ஒரு எழுத்தேனும் பேசமுடியுமா? நாடெங்கும் உள்ள சிறுபான்மையினர் உணவுக்காக கொன்ற மாட்டைவிட பால் பவுடர் இறக்குமதி என்ற ஒரே உத்தரவில் லட்சக்கணக்கான மாடுகளை ஒழித்துக்கட்டினார்களே, இதற்கு பதில் கூற முடியமா? இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாயைப்போல சேவகம் புறிய ஓட்டுப்பொறுக்குவதற்கு, சுதேசி கோமாத என்று கபட நாடகமாடுவதற்கு மாட்டு மூத்திர கோஜல் பயன்படுகிறதே இது இரண்டாவது மாங்காய்.

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் என்று பயங்கர வாதம் குண்டுவெடிப்பு சீன் காட்டி சிறுபான்மையினரை விரக்தியின் விழிம்புக்குத்தள்ளி அதைக்காரணம் காட்டியே இந்து என்ற பட்டிக்குள் எல்லோரையும் அடைத்துக்கொண்டிருக்கிறார்களே பாசிச பயங்கரவாதிகள், அவர்களின் அந்த செயல்திட்டத்தின் வழிமுறைகள் தான் தேசிய நாயகன் தேசிய கலாச்சாரம் என்பது. ஒரே நாடு ஒரேகலாச்சாரம் ஒரே சட்டம் என்று தங்களின் பார்ப்பனிய முகத்தை தேசிய முகமூடியால் மறைத்துக்கொள்ள மருத்துவப்பலன்களை புனைந்து அதைக்காட்டி ஒரு குளிர்பானமாய், விதேசியத்திற்கெதிராய் சுதேசியமாய் விளம்பரம் செய்து, தேசிய வெறியை கிளப்பி தங்களின் அரசியல் இலக்கை நீங்கள் அறியாமலேயே உங்களுக்குள் திணிக்கிறார்களே இது மூன்றாவது மாங்காய்.

நாட்டில் பயங்கரவாதத்திற்கு பலியானவர்களை விட, தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த பொருளாதாரக்கொள்கையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். விவசாய நாடான இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்பை கிராமப்புறங்கள் தான் வழங்கிக்கொண்டிருந்தன. அவர்களை கிராமியச்சூழலிலிருந்து பிய்த்து உதிரித்தொழிலாளர்களாய் நகரங்களில் வீசி எறிந்திருக்கிறது அந்த பொருளாதாரக்கொள்கை. சமூகத்தில் எல்லாத்தட்டு மக்களையும் பாதிக்கும் பொருளாதாரக்கொள்கைகளையும், உலக வங்கியின் உத்தரவுகளையும் எந்தக்கட்சியும் மீறுவதில்லை. இப்படி அன்னியக்கைக்கூலிகளாய், நம் வாழ்வை அன்னியனின் சுரண்டலுக்குள் அடிமைப்படுத்தும் சோரம் போனவர்கள் தான் சுதேசியம் என்றும், தேசியக்கலாச்சாரம் என்றும் கௌஜல் புனிதம் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் வருகிறார்கள். இத சரியான வழியில் புறிந்து கொள்வதற்கும் முறியடிப்பதற்கும் பெப்சி கோக்கை கையில் பிடித்துக்கொண்டு சிந்திப்பவர்களால் முடியாது. பெப்சி கோக்கின் ஒவ்வொரு சொட்டிலும் விவசாயிகளின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. அவைகளை புறக்கணிப்பதுடன் ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த இளநீர் மோர் போன்ற பானங்களுக்கு திரும்புவோம். அதோடு மட்டுமன்றி இயற்கை பானங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை நாசமாக்கி அதை தம் சொத்தாக மாற்றுபவர்களுக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.

%d bloggers like this: