போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!

12657442_518976178272029_1146155974848426023_o

அன்புடையீர், வணக்கம்!

டாஸ்மாக் போதையால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது. கணவனை இழந்த விதவைகளின் துயரங்களை சொல்லி மாளாது. பள்ளி மாணவிகள் – மாணவர்கள் குடிப்பதும், குழந்தைகளை குடிக்க வைப்பதும், குடிப்பது தவறில்லை என்ற பண்பாட்டுச் சீரழிவும் புற்றுநோயாக நம் சமூகத்தை அழித்து வருகிறது. தாய்மார்கள் கதறுகிறார்கள்.

டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்கள், சாலை விபத்தில் செத்து மடிந்தவர்கள்,விதவைகளாகிப் போனவர்கள் ஏராளம். பாம்பைக் கண்டவுடன் அலறியடித்து கொல்ல முயலுவதைப் போல, டாஸ்மாக்கை மூடினால் தான் அழிவிலிருந்து மீண்டு வாழ முடியும். யாராவது இந்த சனியனை ஒழித்துக் கட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் ஆத்திரமும் மக்களிடையே எரியும் நெருப்பாக தகிக்கிறது.

கூச்சப்பட்டு ஒழிவு மறைவாக குடித்த நிலைமை போய், குடிக்கும் பழக்கமில்லாத பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் கூட கூச்சநாச்சமின்றிக் குடிக்கும் நிலமை வந்து விட்டது. பள்ளி மாணவன் முதல் கிழவன் வரை அரை நிர்வாணமாக, போதை தலைக்கேறி நடுத் தெருவில் கிடக்கிறார்கள். பள்ளி மாணவிகள், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை யாரும் பயமின்றி தெருவில் போக முடிவதில்லை. குடிவெறி போதையில் பெற்ற மகளிடமே காமவெறியுடன் பாயும் தகப்பன், இதை தடுக்க முடியாமல் அவனை அடித்தே கொல்லும் மனைவி. கூடப்பிறந்த சகோதரியிடமே பாலியல் வன்முறையில் ஈடுபடும் சகோதரன், வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், குடிக்க காசு கொடுக்கவில்லை என்று தாயைக் கொல்லும் பிள்ளைகள், குவார்ட்டருக்காக திருடனாக மாறும் கல்லூரி மாணவர்கள். இப்படி சமூகமே மெல்ல அழுகி, அழிந்து கொண்டிருக்கிறது.

அரசு பள்ளிகளை மூடும் அரசு, மக்கள் போராடினால் கூட டாஸ்மாக்கை மூட முடியாது என திமிராக நிற்கிறது. விபத்து அதிகரிப்பதால் நெடுஞ்சாலையில் உள்ள சாராயக் கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் உத்தரவிட்டும் செய்ய மறுக்கிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராடிய அய்யா சசிபெருமாள் சாகட்டும் என ஜெயலலிதா அரசு வேடிக்கை பார்த்தது. கிராமப் பஞ்சாயத்துகள் எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் எனப் போட்ட தீர்மானங்கள், அரசியல் அமைப்புச் சட்டப்படி மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்பவை அனைத்தும் செல்லாக் காசாகிப் போய் விட்டது.

டாஸ்மாக்கை மூடப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசு அடித்து நொறுக்கி, மாணவிகளை பூட்சு காலால் மிதித்தது. மூடு டாஸ்மாக்கை என போராடிய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் பலரை மாதக் கணக்கில் பொய் வழக்கில் சிறையிலடைத்து துன்புறுத்தியது. கலிங்கப்பட்டியில் போராடிய மக்கள் மீது கண்ணீர்புகை வீச்சு, தடியடி.

“ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்,

ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயசில் உல்லாசம்”

எனப் பாடிய கோவனை தேசத் துரோக வழக்கில் நள்ளிரவில் கைது செய்தது. அவரை நிரந்தரமாக சிறையில் அடைக்க உச்சநீதி மன்றம் வரை வழக்கு நடத்தியது. டாஸ்மாக்கை எதிர்த்தால் ஜெயா அரசுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? போதையும் போலீசும் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக ஆட்சி நடத்தி அனைத்துப் பிரச்சனைகளையும் அடக்கி ஒடுக்க முயல்கிறது ஜெயா அரசு.

வெள்ளப் பேரழிவில் கூட தத்தளித்த தமிழகத்தில் மருத்துவமனைகளும் பள்ளிக் கூடங்களும் மூடப்பட்ட நிலையில் டாஸ்மாக் விற்பனை நடத்திய வக்கிரம் தான் ஜெயா ஆட்சி. பாலியல் குற்றவாளியை கரண்டு கம்பத்தில் கட்டி வைத்து விளக்கமாத்தால் விளாசினால், ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தால் யாராவது பெண்களிடம் வாலாட்டுவானா? அறிவுரை சொல்லி பொம்பள பொறுக்கியை திருத்த முடியாது. அது போல் எத்தனை தாய்மார்கள் தாலி அறுத்தாலும், எத்தனை குடும்பங்கள் அழிந்தாலும் சாராயத்தை விற்றே தீருவேன் என்பவர்களிடம் மனு கொடுத்து என்ன பயன்?

குடி போதையில் இருந்து நம் இளைஞர்களை மீட்காமல், டாஸ்மாக்கை மூடாமல் எந்த பிரச்சனையை யாரிடம் பேசி என்ன பயன்? குடி போதையோடு ஆணாதிக்க கொடுமையை சகித்துக் கொண்டு, தினம் தினம் செத்துப் பிழைக்கும், தாய்மார்கள் களத்தில் இறங்கினால் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட முடியும். ஆயிரக்கணக்கில் பெண்கள் மேல் மருவத்தூருக்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் கால் வலிக்க நடக்கிறார்கள். நம் குடும்பத்தை, நமது சமூகத்தை சீரழிக்கும் குடியின் பிடியிலிருந்து விடுவிக்க சிறைக்கு போனாலும் பரவாயில்லை என ஒரு கணம் நினைத்தால், டாஸ்மாக்கை மூடப் போராடுவது கடினமில்லை.

எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டும் டாஸ்மாக்கை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. ஓட்டுப் போட்டு அவர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு, அப்புறம் மனுவை வைத்துக் கொண்டு கலக்டர் ஆபீசு வாசலில் எதற்காக காத்து நிற்க வேண்டும்? மனு கொடுக்கும் மூட நம்பிக்கையை விட்டொழிப்போம்.

இனி அஞ்சுவதற்கோ தயங்குவதற்கோ எதுவும் இல்லை. நீதி நம் பக்கம், மக்கள் நம் பக்கம்.

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!

தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம்!

நம் தெருவில் இனி டாஸ்மாக் கிடையாது!

இது தான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்  தேர்தல் பகடைக் காயல்ல, தமிழகத்தை மீட்கும் போராட்டம். எதிர்கால தலைமுறைக்கானது. சாராயக் கடையை மூடுவதற்கு நடக்கும் மக்கள் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டால் 24 மணி நேரத்தில் டாஸ்மாக்கை இயங்க விடாமல் செய்ய முடியும். எதற்காக காத்திருக்க வேண்டும்? இத்தகைய போராட்டம் தான் கள்ளச் சாராயத்தையும் ஒழிக்கும். மக்களின் எரியும் பிரச்சனையாக உள்ள டாஸ்மாக் தான் முதன்மையானது அதை மூடாமல், யாரும் தேர்தல் அரசியல் பேச முடியாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்குத் தான் இந்த டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு.

சுயமரியாதை தமிழகத்திற்காக, தேசபக்தியோடு மக்களை நேசித்ததற்காக எண்ணற்றவர்கள் சிறைக் கொட்டடியில் வாடினார்கள், தூக்கில் தொங்கினார்கள். அவர்களின் தியாகம் நம்மைக் கேள்வி கேட்கிறது. அத்தகைய வீரம்செறிந்த தமிழகத்தை மீட்டெடுப்பதில் டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டம் முதன்மையானது. அந்த அடித்தளத்தில் அனைத்தையும் சாதிக முடியும்.

சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டுவோம்!

அனைவரும் திருச்சிக்கு வாங்க!

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!

 நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

 

அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,

 

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் (நமது நாட்டை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மீண்டும் அடிமை நாடாக மாற்றும்) கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டிருப்பதாகும். இது கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உரக்க ஒலிக்கவும்,

 

எனவே, எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் அரசுடமையாக்க வேண்டும். அவற்றில் எல்லா மாணவர்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஒரே பாடத் திட்டம், ஒரே பயிற்றி மற்றும் ஒரே தேர்வு முறை, நல்ல வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி – அருகாமைப் பள்ளி முறைமையை (Common – neibourhood school system) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் நூற்றூக்கணக்கான பெற்றோர்களுடன் இணைந்து, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 28.06.2012 அன்று காலை 11 மணியளவில் நடத்தினோம்.

 

பள்ளிக் கல்வி இயக்குனரைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி தராத போலீசு, எங்கள் மீது வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டது. போலிசின் கொலைவெறித் தாக்குதலையும், அதை எதிர்த்து எவ்வித அச்ச உணர்வுமின்றி, ஒருவர்கூட பின்வாங்காமல் எங்கள் தோழர்கள் போர்க்குணத்துடன் போராடியதையும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடி வாங்காதவர்கள் என்று யாரும் இல்லை. 3 பெண்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சேர்க்குமளவுக்கு தாக்கப்பட்டனர். எங்களில் 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசு, 77 தோழர்கள் மீது 6 பிரிவுகளில் பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைத்தது. இதற்கெல்லாம் நாங்கள் கிஞ்சிற்றும் அஞ்சப் போவதில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகிறோம். இதோ, தோழர்கள் சிலர் சிறையில் உள்ள போதும் உங்களிடையே பிரச்சாரத்திற்கும், உங்களை அணி திரட்டுவதற்கும் வந்துள்ளதே இதற்குச் சாட்சி.

 

கல்வி வள்ளல்கள், கல்வித் தந்தைகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ள முன்னாள் சாராய ரவுடிகள், இன்னாள், முன்னாள் ஓட்டுப் பொறுக்கி அரசியலயோக்கியர்கள், சாதி வெறியர்கள், மதவாதிகள், அம்பானி டாடா போன்ற கார்ப்பரேட் திருடர்கள் (முதலாளிகள்) பன்னாட்டு பண முதலாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வித்துறையை மீட்டு, அரசால் இலவசமாக வழங்கப்படும் சேவைத்துறையாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

 

இந்த பகற் கொள்ளையர்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உட்பட எல்லா சேவைத் துறைகளிலும் ஏறி உட்கார்ந்து கொண்டு மக்களை கசக்கிப்பிழிகிறார்கள். நாட்டின் எல்லா கனிவளங்களையும், மக்களின் உழைப்பு சக்தியையும், அரசுப் பணத்தையும் படிப்படியாக தங்களது உடமையாக்கி மொத்தத்தையும் உறிஞ்சி கொழுத்துக் கொண்டே போகிறார்கள்.

 

மக்களையும் நாட்டையும் பகற்கொள்ளையடிக்கும் இவர்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே நடக்கின்றன. இவைகள் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை முடிவுகளாக அறிவிக்கப்பட்டு நடக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் – தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் – நடந்து வருகின்றன.

 

மத்தியிலும் மாநிலங்களிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற எல்லா வண்ண முன்னணிகளும் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஒரே அணியில் நிற்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு நடைமுறை படுத்துகின்றன.

 

எனவே, ஓட்டுப் போட்டு நமக்கு மேலே இருக்கின்ற சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம் இந்த மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் இவைகள் சட்டங்களை மட்டுமே இயற்றக் கூடிய பழைய வகை ஜனநாயகக் கருவிகள். இந்த பழைய வகை ஜனநாயகத்தில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் போலீசு, கலெக்டர்கள், நீதிபதிகளிடம் மட்டுமே உள்ளது. இவர்கள் எல்லாம் மருகாலனியாக்க கொள்கையின் பாதுகாவலர்கள் தான். கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகள் தான்.

 

எனவே, மக்களே உள்ளூர் அளவில் கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும், நக்சல்பாரி பாதையில் நமக்கான புதிய ஜனநாயக அரசை நிருவுவதன் மூலமே மறுகாலனியாக்க கொள்கையையும், அதன் ஒரு பகுதியாக உள்ள கல்வியில் தனியார்மயத்தையும் ஒழிக்க முடியும். கட்டணக் குறைப்பு, 25 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த சட்டங்களையெல்லாம் தனியார் கல்வி முதலாளிகள் எவனும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றநீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் முன் கைகட்டி நிற்கிறார்கள்.

 

ஆமாம். இது உண்மை தான். இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர் ரக கல்வியைத் தருகின்றன. எனவே இங்கே நம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் நல்ல வேலைக்குப் போக முடியும்; அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கில கான்வெண்டுகளில் சேர்க்கிறார்கள். சில லட்சங்களைக் கொடுத்து ‘தரமான’ தனியார் பள்லி கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

 

எங்களது மதிப்பிற்குறிய சகோதர சகோதரிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே..! நீங்கள் கடுமையாக உழைத்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களை நல்ல வேலையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களது பாசத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதே வேளையில், கீழே நாங்கள் சொல்கின்ற உண்மை நிலவரங்களை அதே பாசத்தோடும் பரிவோடும் பரிசீலித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தொழில் திறமையை விட வரி ஏய்ப்பு, அந்நிய செலவாணி மோசடி போன்ற பல தகிடுதத்தங்களின் மூலமே பெரும் கோடீஸ்வரர்களாக உப்பிவரும் டாடா அம்பானி போன்ற முதலாளிகள், முன்னாள் இன்னாள் கிரிமினல்கள்,ஓட்டுப் பொறுக்கித் தலைவர்கள், அரசு பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்றோர்கள் தான் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நடத்துகிறார்கள்.

 

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பது தான். எனவே அவர்களுக்கே உரிய ‘தொழில் முறைப்படி’ புறம்போக்கு நிலங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் போட்டுக் கொள்கிறார்கள். சில கட்டுமான வசதிகளை மட்டும் செய்து வைத்துக் கொண்டு, காண்ட்ராக்ட் முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருப்பதாக விளம்பரம் செய்கின்றனர். அந்தத் துறை படிப்பு இந்தத் துறைப் படிப்பு என்றும், அதுவும் உலகத் தரத்தில் இருப்பதாகவும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் துறைக்கான கட்டிடங்களோ, ஆசிரியர்களோ இருக்க மாட்டார்கள். அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என்று பில்லே கொடுக்காமல் காசு பறிக்கிறார்கள். தங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஒருசிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதை வைத்துக் கொண்டு 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என்று பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.

 

இன்னும் ஒருபடி மேலே போய் சில லட்சங்களைக் கொடுத்தால் படிக்காமலே எம்பிஏ, பிஎச்டி போன்ற எந்த பட்டங்களையும் கொடுக்கிறார்கள். தாங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கலை அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து புதிய மருத்துவக் கால்லூரி நடத்த அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்.

 

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான மோசடிகளை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள். இவை போதாதென்று இப்போது அமெரிக்கா இங்கிலாந்து போற நாடுகளிலுள்ள மோசடி பல்கலைக் கழகங்களும் இங்கே கடைகளைத் திறந்து வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தரமான கல்வி தருகின்றன என நம்புவது, சிட்பண்டுகளில் பணத்தைப் போட்டு சேமிப்பைப் பறிகொடுப்பதற்கு சமமானது. இது ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறுவது போன்றது.

 

தமிழ்நாட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இன்னும் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பலநூற்றுக் கணக்கான கல்லூரிகள் பணம் பறிக்க வாய் பிளந்து காத்திருக்கின்றன. இவைகளில் ஒரு சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைகள் கிடைக்கலாம். மற்றப்படி இந்த பள்ளி கல்லூரிகளில் 80சதவீத மக்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பப்படி படிக்க வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

 

இன்னொரு பக்கம், கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொள்கை ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, இருக்கின்ற அரசு பள்ளி கல்லூரிகளும் சீரழிய அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கும் பலகோடி ரூபாய் ஊழல்கள் மோசடிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

 

இவைகளின் மூலம் தரமான கல்வி பெற தனியார் பள்லி கல்லூரிகள் தான் ஒரே புகலிடம் என பெற்றோர்களை கல்வி முதலாளிகளிடம் அரசே தள்ளி விடுகின்றது. இதை மறைக்கவும் ஊக்குவிக்கவும் தான் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்ற ஏற்பாடாகும். இப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கான் கல்விக் கட்டணத்தை அரசே தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்கும் என்பதும் 14 வயது வரை மட்டும் தான் இலவசகட்டாயக் கல்வி என்பதும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே என்று நாங்கள் சொல்வதை நிரூபிப்பதாகவே உள்ளது.

 

எப்படிப் பார்த்தாலும் இன்றுள்ள பழையவகை ஜனநாயக அமைப்பில் 80 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி பெறும் உரிமை கூட வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அமைப்பையே ஒழித்துக் கட்டி நமக்கான புதிய ஜனநாயக அரசை அமைத்து, அதன் கீழ் எங்கும் பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்ட அரசாங்கக் கல்வி நிறுவனங்களை மட்டும் நிறுவுவதன் மூலமே, நமது பிள்ளைகளுக்கு கல்வியையும் வேலைகளையும் நாம் நினைத்தபடி பெற முடியும். ஒரு பகுதியிலுள்ள எல்லோருக்கும் அங்குள்ள ரேசன் கடைகளில் மட்டுமே பொருளைப் பெற முடியும். இதைப்போல ஒரு பகுதியில் குடியிருக்கும் அனைவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளி கல்லூரிகளில் தான் படிக்க வேண்டும். இந்த பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான உயர்தர விஞ்ஞானபூர்வமான கல்வி இலவசமாக வழங்கப்படும். இதற்கான போராட்டப் பாதையில் எங்களுடன் இணைந்து போராட முன்வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவோம்!

 

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறைமையை நிலைநாட்டுவோம்!

 

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளம்யம்,உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

 

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

 

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே தவறாமல் கலந்து கொள்வீர், கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகளில் 

 

கடலூர் ஜூலை 15ல்

சென்னை ஜூலை 17ல்

திருச்சி ஜூலை 19ல்

விழுப்புரம் ஜூலை 22ல்

 

தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி

உணர்ச்சிகளைத் தூண்டும் வாசகங்களுடன், ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை (15 லட்சம் பேர் (…?…) கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு சென்னை தீவுத்திடலில் ஜூலை நாலாம் தேதி நடத்தவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் உரிமையுடன்(!) அழைக்கும் குழும மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கக் கோரி நடப்படவிருக்கும் மாநாடு என்பதாக அனுப்பப்பட்ட விளம்பரங்கள் கூறுகின்றன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சியிலிருப்பவர்களே அது வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு என்று நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு இடஒதுக்கீடு போராட்டத்தினால் முஸ்லீம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்து விடும் அல்லது முன்னேறுவதற்கு உதவிகரமாய் இருக்கும் என நம்பவைக்கப்படும் இந்த மாநாடு குறித்து அதாவது இட ஒதுக்கீடு குறித்து சில தெளிதல்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்பது மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மட்டுமல்லாது அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை வெற்றிகரமாக குத்தப்பட்டுவருகிறது. அரசு எந்திரம் முழுமையும் பார்ப்பனீயத்திற்கு, சங்பரிவார செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் சங்பரிவாரங்களின் செயல்திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே தெளிவாகச் சொன்னால் முஸ்லீம்கள் எந்தத்திசையில் பயணித்தால் தங்களுக்கு நல்லது என சங் பரிவாரங்கள் எண்ணுகின்றனவோ அதே பாட்டையில் இஸ்லாமிய இயக்கங்கள் பயணிக்கின்றன என்பதும் மறுக்கவியலாத உண்மையாகிவருகிறது.

அறுதியான அரசியல் வெற்றி எனும் குறிக்கோளுடன் தனது செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கும் சங்கப் பரிவாரங்கள் அதற்கான நடைமுறையாக ஒரு பொது எதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்து எனும் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்கிறது. இன்றைக்கு அந்த பொது எதிரியாக இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாம் எனும் மதத்தை முஸ்லீம்களிடையே பலங்குன்றச்செய்யவேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்திருந்தால் அது கைக்கொண்டிருக்கும் அரசு எந்திரத்தைக் கொண்டு வெகு சுலபமாக அதை செய்திருக்க முடியும். இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சலுகைகள் கொடுத்து வேறு பிரிவினரை புறக்கணித்திருந்தால் எந்தச் சிரமமுமில்லாமலேயே முஸ்லீம்களுக்குள் இஸ்லாமிய ஐக்கியத்தை சிதறடித்திருக்கமுடியும். ஆனால் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டது தொடங்கி இன்று எந்தப் பேதமுமில்லாமல் விசாரணைக்கைதியாக முடக்கி வைத்திருப்பது ஈறாக மிகக் கவனமாக அதை தவிர்த்திருக்கிறார்கள். 47க்கு முன்னிருந்த இந்தியாவில் முஸ்லீம்களின் பெரும்பான்மையை திட்டமிட்டு தனி நாடாக பிரித்துவிட்டு, பின்னர் முஸ்லீம்களை ஓரணியில் திரள வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அடிமையாய் தீண்டத்தகாதவனாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கிவைத்திருக்கும் மக்களை முஸ்லீம்களின் ஒற்றுமையை காட்டித்தான் இந்து எனும் பட்டிக்குள் அடைக்க முடியும். அதற்கு முஸ்லீம்கள் ஒற்றுமையாய் ஓரணியில் நிற்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.

இடஒதுக்கீடு என்பது ஒரு இடைக்கால ஆறுதலாக இருக்கலாமேயன்றி அது ஒரு தீர்வாக அமையாது. எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் இதுவரையில் எட்டப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் எனும் திசையில் வந்த இடஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்களல்ல பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் பெயரால் ஒடுக்கியவர்களே பலனடந்தார்கள். இடஒதுக்கீட்டின் பலனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறிவிடவில்லை. மாறாக பலனடைந்த வெகுசிலரும் ஒடுக்குபவர்களாக பரிணாமமடைந்தார்கள். அதேநேரம் ஒடுக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே பெற்றிருக்கும் எழுச்சி இடஒதுக்கீட்டின் விளைவல்ல, அரசியல் விழிப்புணர்வினால் ஏற்பட்ட எழுச்சி. அரசியல் அறியாமையைக் களையாமல், விழிப்புணர்வு பெறாமல் இடஒதுக்கீட்டினால் ஏழை உழைக்கும் வர்க்க முஸ்லீம்கள் எந்தப் பலனையும் அடைந்துவிட முடியாது.

பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்த மாநாட்டின் மூலம் மைய அரசிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்த மைய அரசு தொடக்கம் முதலே இஸ்லாமியர்களை திட்டமிட்டே புறக்கணித்து வந்துள்ளது என்பதை, குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வேளைகளில் குயுக்தியுடன் செயல்பட்டு முஸ்லீம்களை சிக்கவைத்தார்கள் என்பதை, நாடெங்கும் விசாரணைக் கைதிகளாக முஸ்லீம்களை எந்தவித உரிமையும் கிடைக்கவிடாமல் வதைத்தார்கள் என்பதை வீரியத்துடன் பேசிவருகிறார்கள். அதாவது எந்த மைய அரசு முஸ்லீம்களை புறக்கணிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்களோ, எந்த அரசு எந்திரத்தின் மனோ நிலை முஸ்லீகளுக்கு விரோதமாக இருக்கிறது என எண்ணுகிறார்களோ அந்த மைய அரசு (எந்தக் கட்சி அரசாக இருந்தாலும்) பத்து விழுக்காடு இடஒதுக்கீடு தந்துவிட்டால் முஸ்லீம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி விடுவார்கள் அல்லது முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எந்த அடிப்படையில் எண்ணுகிறார்கள்? முஸ்லீம்களை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்குவதை திட்டமாக கொண்டு செயல்படும் அரசு எந்திரம் பத்து விழுக்காடல்ல ஐம்பது விழுக்காடு தந்தாலும் அதனால் பலன் ஒன்றும் விளையாது.

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டாலும் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் என்ன நிகழ்ந்ததோ அதுவே முஸ்லீம்களுக்கும் ஏற்படும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்று சத்தமாக மேடையேற்றினாலும், குரான் ஹதீஸில் (ஒருவேளை) இல்லை என்று எடுத்துக்காட்ட முடிந்தாலும், இந்தியாவில் முஸ்லீம்களுக்குள் ஜாதி இருக்கிறது என்பது தெளிவு. பிற்படுத்தப்பட்டோர் எனும் அடையாளத்துடன் அடக்குமுறைச் சாதியினரே ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலனை அறுவடை செய்ததுபோல் முஸ்லீம்களிலும் அடைவார்களே தவிர பக்கிரிஷாக்கள், நாவிதர்கள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது. ஏனென்றால் ஜாதிகள் இருக்கிறது என்பதை ஒருக்காலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. காயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாலல்லவா மருந்திடுவது குறித்து சிந்திக்கமுடியும். காயம் என்ற ஒன்று இல்லை என குரானை தடவிப்பார்த்துச் சொல்லும்போது அதை குணமாக்குவது குறித்து எப்படி யோசிப்பது?

இன்றைய நிலையில் இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் கல்விக்கூடங்கள் எத்தனை? ஒரு முஸ்லீமுக்கு பணம் இல்லாமல் கல்லூரியில் இடம் வாங்க முடியுமா? அடிமையாய் வேலைவாங்க முடியும் என்பதால் அடித்தட்டு முஸ்லீமாகப் பார்த்து தன் நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுக்கும் ஒரு முஸ்லீம் முதலாளி தொழிலாளர்கள் முஸ்லீம் என்பதால் சலுகை எதுவும் கொடுத்துவிடுவானா? பின் யாருக்கு பலனளிப்பதற்காக இடஒதுக்கீடு?

ஓட்டுப்பொருக்கி அரசியல் நடத்துபவர்கள் தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டி பலம் காட்டுவதைப்போல 15 லட்சம்பேர் என்று முன்கூட்டியே கணக்கிட்டு இடஒதுக்கீடு கேட்கும் இந்தப் போராட்டம் எந்த அடிப்படையில் நிற்கிறது? தமிழகத்தில் கடந்த ஒராண்டில் அரசில் வேலை பெற்றவர்கள் எத்தனை பேர்? பத்தாயிரம் கூட இருக்காது என்கிறது ஒரு நாளிதழ் செய்தி. பத்தாயிரம் கூட இல்லாத வேலைவாய்ப்பில் பத்து விழுக்காடு ஒதுக்கீட்டுக்கா 15 லட்சம் பேர் திரண்டு போராடப் போகிறீர்கள்? கல்வி, மருத்துவம், பொதுத்துறை, உணவு வழங்கல், பொதுவிநியோகம், உள்கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அரசு தனியாரிடம் கைமாற்றிக்கொண்டிருக்கிறதே அதை கண்டு கொள்ளாமல் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டுப்போராடுவது, கோமணமே பறிபோய்க் கொண்டிருக்கையில் அதில் ஒரு நூல் பச்சை நூலாக இருக்கவேண்டும் எனக்கோரிப் போராடுவது போலில்லையா? தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினால் கூட அதில் பொருளிருப்பதாக கொள்ளமுடியும். அரசு எல்லா வேலைவாய்ப்புகளையும் தனியாரிடம் மடைமாற்றிக்கொண்டிருக்கும் வேளையில்  இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டமா?

போராட்டம் என்பது மகிழ்ச்சி அது தனக்கு மட்டும் என குறுக்கிக் கொள்வது கடைந்தெடுத்த சுயநலம். எல்லோருக்குமாக போராடுவோம். ஒரு ஜாதியினர் தங்களுக்கான உரிமை என்று போராடினால் அது ஜாதிக் கட்சி. ஒரு மதத்தினர் தனக்கான உரிமை என்றாலும் அதன் பொருள் மாறுவதில்லை. வர்க்கக் கோடு வெகு அழுத்தமானது, மதம் எனும் அழிப்பானால் அதை அழித்துவிட முடியாது. நாடே மறு காலனியாதிக்கத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளிலிருந்து முஸ்லீம் மட்டும் தப்பித்துவிட இயலுமா? தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளால் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மட்டும் விடப்பட்டுவிடுவார்களா? ஏகாதிபத்திய மூலதனக் குவிப்பால் எட்டமுடியாத உயரத்தில் விலைவாசிகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு மட்டும் அது எட்டிவிடுமா? எனவே, கல்வியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல கல்வி ஒரு அடிப்படை உரிமை அதை அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கு என்று போராடுவோம். வேலைவாய்ப்பில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல, வேலை வாய்ப்பு என்பது அனைவருக்குமான வாழ்வாதார உரிமை, அதை அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமை என்று போராடுவோம். அரசு என்பது முதலாளிகளின் கருவியாக இருக்கிறது, அதை பாட்டாளிகளுடையதாய் மாற்றுவோம். அதற்கான போராட்டங்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அது தான் காலத்தின் தேவையாக இருக்கிறது.

%d bloggers like this: