ஊழலில் 19வது இடம்; வெட்கப்படுவது மட்டும் போதாது.

மழைக்காலம் வெயில் காலம் என பருவகாலம் மாறுவதைபோல மக்கள் பேசும் விசயங்களும் ஊடகங்கள் அடியெடுத்துக்கொடுப்பதைக்கொண்டு அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை வங்கிகள் நிறுவனங்கள் திவால் பேசுபொருளாயிருக்கும், மறுமுறை போராட்டங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாய் விளம்பப்படும், மற்றொரு முறை அரசியல்வாதிகளின் வீரதீர விசாரங்கள் பிரிதொரு முறை வழக்கு விவகாரங்கள், இப்போதோ ஊழல். அண்மையில் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேசனல் என்ற அமைப்பு அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகளின் அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்தொன்பதாவது நாடாக இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊழல் குற்றம் தவறு என்பதையெல்லாம் மக்கள் எப்போதோ மறந்துவிட்டனர், அது வாழ்நெறியாக மாறிக்கொண்டிருக்கிறது இப்போது. தேச பக்தர்கள் வெட்கித்தலை குனிகிறார்களாம், இன்னும் சிலரோ பதினெட்டு நாடுகளுக்கு பிறகுதானே என ஆறுதல் பட்டுக்கொள்கிறார்களாம். இந்த வெட்கத்தையும் ஆறுதலையும் பொசுக்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டுமோ…

அரசியல்வாதிகளால் தான் எல்லாம் கெட்டது, அதிகாரிகள் ஒழுங்காக செயல்பட்டாலும் அரசியல்வாதிகள் விடுவதில்லை என்று சிலர். அரசியல்வாதிகள் தவறு செய்தாலும் அவர்களை தண்டிப்பதற்கு தேர்தல் இருக்கிறது, அதிகாரிகளை எப்படி தண்டிப்பது என்று இன்னும் சிலர். தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக மக்கள் தான் தொடங்கி வைக்கின்றனர் என்று வேறு சிலர். ஆனால் ஊழல் லஞ்ச விவகாரங்களில் ஒரு பகுதியினரை கைகாட்டும் போது மற்ற பகுதியினர் தப்பித்துக்கொள்ள ஏதுவாகிறது என்பதே உண்மை. ஏனென்றால் அரசியலமைப்பு மட்டுமன்றி, நிர்வாகம், நீதித்துறை, காவல் துறை, ராணுவம் என நாட்டின் அனைத்து அமைப்புகளுமே ஊழலில் புரையோடிப்போய் கிடக்கின்றன. அரசுத்துறைகளில் இப்படியென்றால் தனியார் துறைகளிலோ ஊழலும் திருட்டுத்தனமும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக, வியாபாரதந்திரமாக நுணுக்கமாக இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்த அனேக ஊழல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மிக மிக சொற்பமே அதிலும் தண்டனையை அனுபவித்தவர்கள் வெகு அபூர்வம். சட்டம் இதுபோன்றவர்கள் தப்பிப்பதற்கு சாதகமாக இருப்பதது தான் இப்படி ஊழலில் ஊறிப்போனதற்கு காரணமா? அல்லது நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள் அமையாதால்தான் ஊழல் ஊற்றெடுத்துவிட்டதா? பல்வேறு காரணங்களுக்காக இத்தகைய முறைகேடுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, இங்குமட்டுமல்ல எல்லா நாடுகளிலும். வியாபாரப்போட்டி என்ற பெயரில் சக உற்பத்தியாளர்களை கவிழ்ப்பதற்கு அனைத்து வகை உத்திகளையும் கையாளும் முதலாளிகள். உற்பத்திச்செலவை குறைப்பது என்ற பெயரில் அரசுகளின் துணையுடன் செய்யப்படும் வரி ஏய்ப்புகள். தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழியவிடப்படும் அரசு துறைகள். முதலாளிகளின் லாபத்திற்காக செய்யப்படும் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு ஊழல் முறைகேடுகள் கருவியாக தேவைப்படுகின்றன. ஊழலை தடுக்க முடியாததற்கு இது ஒரு முக்கியமான காரணம். நேர்மையான தலைவர்கள் வந்து திறமையான சட்டங்கள் தந்தாலும் முதலாளிகள் இருக்கும்வரை ஊழலையும் திருட்டுத்தனத்தையும் நீக்கமுடியாது.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இன்னொரு வகை ஊழலும் செய்கிறார்கள், பொதுவான ஊழலைப்போல இவை மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிப்பதில்லை மாறாக சமயங்களில் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெற்றுவிடுகின்றன. மாணவர்கள் தேர்வுகளுக்கு படிப்பதற்கே மின்சாரம் இன்றி தட்டுப்பாட்டுடன் இருக்கும் நிலையில் தொகா பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபம் தரும் தொகா பெட்டிகள் வழங்கும் திட்டம் மக்கள் மேல் திணிக்கப்படும் ஊழலல்லவா. ஆண்டுக்கணக்காக சாலை வசதி வேண்டும் என கிராமமக்கள் போராடும் போதெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ரிலையன்ஸ் நாடு முழுவதும் அமைக்கும் கொள்முதல் நிலையங்களின் வசதிக்காக கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு மக்களுக்கான திட்டமாக பீற்றிக்கொள்வது மக்கள் மேல் திணிக்கப்படும் ஊழலல்லவா. தேர்தல் வந்துவிட்டால் கொள்ளையடித்ததில் சிறு பகுதியை வீசி எறிந்துவிட்டு மக்களிடம் ஓட்டை பொறுக்கிக்கொள்வது; தங்களை தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை தந்திரமாக பறிக்கும் வகையில் மக்களையே ஊழல்மயப்படுத்துவதை ஊழல் என்று சொல்லாமல் இருக்கமுடியுமா?

நாட்டின் பொருளாதாரத்தையே உரசிப்பார்க்கும் ஊழல்கள் தொடங்கி, தாங்களே ஊழல்மயப் படுத்தப்படுவது வரை மக்கள் ஒரு செய்தியாகவே பார்க்கிறார்கள். ஆனால் யதர்த்தத்தில் மக்களின் வாழ்வை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஊழலில் சுழலும் பணமெல்லாம் ஏதோஒரு வகையில் மக்களிடம் சேரவேண்டியவை. தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்று ஒன்றை கொண்டுவந்து வெளிப்படையான நிர்வாகம் என்று மார்தட்டினார்கள் இன்று அதிலிருந்து ஒவ்வொன்றாக விதிவிலக்குகள் தருகிறார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன் சுவிஸ் வங்கியின் கருப்புப்பணம் பற்றி பேசப்பட்டது, இன்னமும் சுவிஸ் கணக்குகளில் அந்த பல லட்சம் கோடிகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன தனிச்சொத்தாக. மக்களின் பிரதிநிதிகள் இதைப்பற்றி கேள்வி எழுப்புவார்களா? அவர்களின் சொத்துக்களை முடக்க அவர்களே முனைவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால் நாமும் அப்படி இருக்க முடியாதே. வெட்கப்பட்டுக்கொண்டோ, ஆறுதலடைந்துகொண்டோ இருக்கும் நேரமல்ல இது. ஏனென்றால் நம்மை பாதிக்காத நமக்கு வெளியிலுள்ள பிரச்சனையல்ல. எனவே வெட்கத்தை கொளுத்திவிட்டு வெளிப்படையாக களம் இறங்குவோம் ஊழலுக்கு எதிராக மட்டுமல்ல, அதை தக்கவைத்திருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அதை தாங்கும் கேடயமாக இருக்கும் ரெட்டை ஆட்சி முறைக்கு எதிராகவும் கூட.

%d bloggers like this: