வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி

 

மக்களின் ஆரோக்கியத்தின் மீதும், மனித வளத்தின் மீதும், தனி மனிதனின் ஆளுமையின் மீதும் மிகப்பெரிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது தமிழக அரசு .. .. .. சாராய வியாபாரத்தின் மூலம். குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி, கொலை. குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை. குடிபோதையில் மனைவி குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி .. .. .. இப்படி அன்றாடம் மூன்று நான்கு செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிகழும் குற்ற நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை குடிபோதையினால் நடப்பவையே. அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சனையை விட குடிபோதையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்கள் மீதான புகார்கள் தான் 80 விழுக்காட்டுக்கு மேல் பதிவாகின்றன.

 

பள்ளி மருத்துவமனைகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை மதுப் பொருட்கள் விற்கக் கூடாது என அரசின் விதி உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அதே அரசு தான் அது போன்ற விதிகளை குடித்துவிட்டு கசக்கி எறியபடும் ‘டிஸ்போஸபிள் கப்’ போன்றதாக மாற்றுகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதல் இடம் தமிழகத்திற்கு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தோராயமாக 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த விபத்துகளில் 60 விழுக்காடு மது காரணமாக நடந்திருக்கிறது.

 

18 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது என்பதற்காக பத்தாயிரம் பேரை சாலை விபத்துகளில் காவு கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. அரசு கணக்கின் படியே டாஸ்மாக்கின் வருவாய் உயர்வுக்கு நிகராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் 21 ஆயிரம் கோடிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளது அரசு. இனி சாகப் போகிறவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? இதில் நம்மில் ஒருவர் கூட இருக்கலாம்.

 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மனித வெடி குண்டுகள் என்றும், போதையில் மரணங்களை உண்டாக்குவோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கூறுகிறது நீதிமன்றம். இத்தகைய மனித வெடிகுண்டுகளையும், கொலையாளிகளையும் டாஸ்மாக் மூகம் உருவாக்கி உலவவிட்டிருக்கும் அரசை என்ன செய்யலாம்?

 

தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கணிசமானோர் சிரோஸிஸ் உள்ளிட்ட மிகக் கொடுமையான கல்லீரல் நோய்களுக்கும், சைக்கோஸிஸ் போன்ற மனநோய்களுக்கும் ஆட்படுகின்றனர். குடியினால் ஏற்படும் மரணத்தினால் இளம் விதவைகளின் எண்னிக்கையும் தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது.

 

குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆண்டுதோறும் இலக்கு வைத்துச் செயல்படும் அரசிடம், குடிநோயை குணப்படுத்த வேண்டிய போதை மீட்பு மையங்களுக்கும் மனநல மருத்துவர்களுக்கு இருக்கும் பற்றாக்குறையை தீர்க்கும், குறைக்கும் திட்டமோ, இலக்கோ கிடையாது. ஊருக்கு பத்து டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, ஒற்றை ஒரு போதை மீட்பு மையம் கூட நடத்தவில்லை. குடிக்கு அடிமையானவர்களை குடி நோயாளிகள் என்கிறது மருத்துவம். இந்த நோயை திட்டமிட்டுப் பரப்பும் அரசை கிரிமினல் அரசு என்று கூறாமல் வேறென்ன பெயரால் அழைக்க முடியும்?

 

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை போதைப் பழக்கம் அறிமுகமாகும் வயது 25ஆக இருந்தது. இன்று அது 13 வயதாக குறைந்திருக்கிறது. 21 வயதுக்குட்பட்டோருக்கு சாராயம் விற்கக் கூடாது என விதி இருந்தும் பள்லி மாணவர்களுக்கும் கூட சாராயம் விற்கப்படுகிறது. பருவ வயதில் போதைப் பொருட்கள் மீது இயல்பாக இருக்கும் ஆர்வமும்; சாராயம் சிகரெட் குடிப்பது ஆண்மையின் வெளிப்பாடு என்ற அறியாமையும் சேர்ந்து மாணவர்களை டாஸ்மாக் பக்கம் ஈர்க்கிறது. பார்களும் அதற்கு வசதி செய்து கொடுக்கின்றன. முன்பு குடிநோய் சிகிச்சைக்கு கணவன்களை அழைத்துச் சென்ற பெண்கள் தற்போது பருவ வயது பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். எதிர்கால தலைமுறையே சீரழிந்து போய்க் கொண்டிருப்பதற்கான அபாயச் சங்கு இது.

 

அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983 – 1984ல் தொடங்கப்பட்டபோது அதன் முதலீட்டுத் தொகை 15 கோடி, அன்றைய ஆண்டு வருவாய் 139 கோடி. 2003 – 2004ல் அதன் ஆண்டு வருவாய் 3500 கோடி. 2011 – 12ல் 18 ஆயிரம் கோடி 18 ஆயிரம் கோடி என்பது லாபம் மட்டுமே ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடி ரூபாயை உழைக்கும் மக்களிடமிருந்து பிக்பாக்கெட் அடிக்கிறது அரசு. இது 25 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி. இந்தியாவின் எந்த பொதுத்துறை நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடையவில்லை. அந்த திமிரில் தான் நிகழும் ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் மதுக் கொள்கை என்று எதுவுமில்லை. அதிகபட்ச வருவாய் ஈட்டுவது ஒன்று மட்டும் தான் அதன் இலக்கு. ஆண்டு தோறும் போடப்படும் அந்த இலக்கு எட்டப்பட வேண்டுமானால் புதிய குடிகாரர்களையும், புதிய குடி அடிமைகளையும் அது உருவாக்கியாக வேண்டும். கட்டுப்பாடில்லாமல் குடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அது பார்களையும் திறந்து வைத்திருக்கிறது. அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள், சமூக விரோதிகள் என அனைவரையும் கொண்ட வலைப் பின்னலோடுதான் இந்த டாஸ்மாக் இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் பணம் கொட்டுகிறது. 18 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்து இன்னுமொரு பத்தாயிரம் கோடி அரசியவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் போகிறது. கருணாநிதி கொண்டுவந்த பல திட்டங்களை கலைத்துப் போட்ட ஜெயா டாஸ்மாக்கில் ஒட்டுகிறார்.

 

எந்த ஓட்டுக் கட்சியாக இருந்தாலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்துத்தான்  தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஜெயாவோ, கருணாநிதியோ தங்கள் பரம்பரை சொத்துகளிலிருந்தோ அல்லது தாங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்தோ இந்த இலவசங்களைக் கொடுக்கவில்லை. மாறாக, டாஸ்மாக் மூலம் மக்களிடமிருந்து பறித்தெடுத்துத்த பணத்தைக் கொண்டு தான் இந்த இலவசங்களை வழங்குகின்றன. ஜெயா அரசு ஆண்டொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு கொடுக்கும் இலவசங்களின் மதிப்பு 16 ஆயிரம் ரூபாய். மாறாக, குடிப்பதன் மூலம் அரசு அதே குடும்பத்திடமிருந்து ஓர் ஆண்டில் பறித்துக் கொள்ளும் மதிப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்.

 

சாராய விற்பனை மூலம் பெண்களின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரை சீரழித்து சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்மார்களால் பெண்கள் குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்கு உள்ளாக்கி அந்த அவலம் சோகம் கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறிகொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணிணி போன்றவற்றை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய கிரிமினல் தனம்? எவ்வளவு பெரிய கொடூரம்? எவ்வளவு பெரிய குற்றம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற் கொள்ளையடிக்கவும், தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ ஜெயா கருணாநிதியின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரிப்பது எவ்வளவு பெரிய மோசடி? பித்தலாட்டம்?

 

தனியார்மயம், தாராளமயம், கடுமையான உழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச் சுமையையும், வீடு குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் சாராயம் என்பது எளிதில் ஆனால் சற்றே செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அவலத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டங்களினால் மாற்றுவது என்பது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விட்டது.

 

முன்னெப்போதைக் காட்டிலும் பெரும்பாலான ஆண்கள் அன்றாடம் குடித்தே தீர்வது என்பது வழக்கமாக மாறிவிட்டது. உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தகுந்த பங்கை குடிப்பதற்காகச் செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். அதனால் வருமானமிருந்து வாழமுடியாத அவலம் நிரந்தரமாகி விட்டது. அந்த வகையில் இது ஏழைக் குடும்பங்களின் பெண்கள் பிரச்சனையாகி விட்டது.

 

காற்று நிலம் நீர் என இயற்கையின் அத்தனை வளங்களிலும் பகற்கொள்ளையடித்து லாபம் பார்த்து பழகிப் போன அரசியல்வாதிகளும், தொழிலதிபார்களும், அரசு அதிகாரிகளும், சமூக விரோதிகளும் எக்காலத்திலும் டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். எனவே டாஸ்மாக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஏழைப் பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் சாராயக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.

 

இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழியில்லை. நமது வாழ்வை வழிமறிக்கும் மறுகாலனியாக்கத்தை உணரவிடாமல் நமது சிந்தனையை சீரழித்து பண்பாட்டு ஆக்கிரமிப்பு செய்யும் டாஸ்மாக்கை ஒழித்துக் கட்டாமல் நமக்கு வாழ்வில்லை, வழியில்லை.

 

முதலிபட்டி வெடிவிபத்து படுகொலைகள்: நேரடி ரிப்போர்ட்

டந்த புதன்கிழமை (05/09/2012) பிற்பகலில் சிவகாசியை அடுத்த முதலிபட்டி ஓம்சக்தி புளூ மெட்டல்ஸ் எனும் வெடி பொருட்கள் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஈரத்துடன் காட்சியளித்தன. விசாரித்துப் பார்த்ததில் முதலிபட்டிக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆட்டோ, வேன் போன்றவையும் கூட செல்லாது என்றும் கூறினார்கள். வேறு வழியின்றி டூவீலர்களுக்கு ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

முதலிபட்டிக்கு சென்றதும் யாரும் தொழிற்கூடம் இருந்த பகுதிக்குச் சென்றுவிட முடியாதபடி காவல் படைகளின் அரண் தான் எம்மை எதிர்கொண்டது. முன்பக்கப் பாதை, பின்பக்கப் பாதை, சுற்றுவழி, ஒத்தையடிப் பாதை, முள்வேலி என அனைத்து வழிகளில் உள்ளே செல்ல முயற்சித்தும் அத்தனையிலும் லத்திக்கம்புகள் விரட்டின. கேரளாவின் கைரளி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஏதேதோ பேப்பர்களைக்காட்டி உள்ளே நுழைந்தன. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் சிபிஎம் தலைவர் எச்சூரியும் (மதுரையில் எஸ்.எஃப்ஃ.ஐ மாநாடாம், அப்படியே துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்) அவர் பின்னே ஒரு கூட்டமும் வந்தது. பின்னர் காவல்படை அரண்களும் விலக்கப்பட்டுவிட உள்ளே நுழைந்தோம்.

வெடித்துச் சிதறி சிதிலமைடைந்த அறைகள், தீப்பிடித்து கரிந்து போன சுவர்கள், முறிந்து போன மரம் என காணக் கிடைத்தவை நடந்த கோரத்தின் மௌன சாட்சிகளாய் எஞ்சியிருந்தன. ஆனால் சிதறிய பட்டாசுகளின் மிச்சங்கள் கூட்டிப் பெருக்கி ஓரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா இடமும் சுத்தமாய் காட்சியளித்தது. தெளிவாய்ச் சொன்னால் கட்டிட இடிபாடுகளைக் கழித்து விட்டால் சில மணி நேரங்களுக்கு முன்னர் கோரமான வெடி விபத்து நிகழ்ந்த இடம் என்று கூறமுடியாதபடி இருந்தது. அதாவது, இப்படி ஒரு விபத்து நேர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த இடத்தைப் பார்வையிட்டால் எப்படி இருக்குமே அப்படி ஒரே இரவில் மாற்றப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் இது ஏன் என்ற கேள்விதான் மனதில் தொக்கி நின்றது. மெல்ல அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஒரு முதியவர் கூறினார், இரவோடு இரவாக புல்டோசர்களும், ஜேசிபி எந்திரங்களும் வந்து சென்றன என்று. அந்தக் கோரம் நடந்து ஓரிரு மணி நேரத்திற்குள் அந்தப் பகுதியை காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. காலை வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வந்து சென்றிருக்கின்றன. காலையில் உள்ளே சென்று பார்த்தால் எல்லா இடமும் சுத்தமாக இருக்கிறது. என்றால் இதன் பொருள் என்ன? முதல் நாள் இரவில் ஜி டிவி செய்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 வரை என்று கூறினார்கள். ஆனால் காலையில் அனைத்து நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும் 38 என்று முடித்து விட்டன. ஆகவே, இது தெளிவாக இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் வேலைதான்.

சிறிதும் பெரிதுமாக சிவகாசி பகுதியில் இது போன்ற பட்டாசு ஆலைகள் 900க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக 200 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள். இத்தனைக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு எட்டு பெண்களுக்கு எட்டு என பதினாறு படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சைப் பிரிவு மட்டும் தான். ஆபத்து காலங்களுக்கு சிவகாசியிலிருந்தோ சாத்தூரிலிருந்தோ தான் தீயணைப்பு வண்டிகள் வர வேண்டும். சாலைகளோ படு மோசம். 15 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படவே இல்லை என்கிறார்கள் பகுதி மக்கள். சரியாக பகல் 12.15 மணிக்கு முதலில் வெடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு வண்டிகளோ, ஆம்புலன்ஸ்களோ வந்து சேர ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியிருக்கிறது. ஆளும், அதிகார வர்க்கங்கள் எந்த அளவுக்கு மக்கள் மீது அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பதம்.

இங்குள்ள எந்த பட்டாசு ஆலையும் விதிமுறைகளுக்கு மயிரளவுக்கும் மதிப்பளிக்கவில்லை. ஓம்சக்தி ஆலை உட்பட எந்த ஆலையிலும் சிறிய அளவில் விபத்து நடந்தால் கூட அதை எதிர்கொள்வதற்கு முதலுதவியோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வேலை செய்பவர்களுக்கு முறையான பயிற்சியோ, தொழில்நுட்பங்களோ கற்றுக் கொடுக்கப்படவில்லை. முதலிப்பெட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் கூறுகிறார், இங்குள்ள யாருக்கும் எந்தவித பயிற்சியும் தரப்பட்டதில்லை என்று. மட்டுமல்லாது ஆபத்தான ஃபேன்ஸி ரக வெடிகளை தயாரிக்கும் அவருக்கு அதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பெயரோ, அது என்ன விதமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும் என்பதோ, விபரீதம் நேர்ந்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதோ தெரியவில்லை. சிவப்பு மருந்து, பச்சை மருந்து, நீல மருந்து என்று அவற்றின் நிறங்களே பெயராக தெரிகிறது. அவருக்கு மட்டுமல்ல அந்தப்பகுதியில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளிகளுக்கு தெரியாது என அடித்துக் கூறுகிறார்.

சிவகாசி மருத்துவமனையில் கையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் காளியம்மாளிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெடிவிபத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போதிய அனுபவமற்ற தொழிலாளர் ஒருவர் வெடிமருந்தை கிட்டிக்கும் போது (வெடியின் குழாய்களில் வெடிமருந்துக் கலவையை திணிப்பது) அதிக அழுத்தம் கொடுத்ததால் வெடித்தது என்கிறார். அனுபவமற்ற, புதிய, பயிற்சியற்ற தொழிலாளரைக் கொண்டு படு ஆபத்தான வேலையைச் செய்வித்த அந்த முதலாளியின் லாப வெறியை என்னவென்று அழைப்பது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, நாங்கள் முப்பத்தாறு பேர் இந்த ஆலையில் வேலை செய்தோம் ஒருவர் இறந்து விட்டார் என்கிறார். எப்படி நேர்ந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது, நான் வெளியில் சென்றுவிட்டேன் என்கிறார். இன்னொருவரைக் கேட்டாலும் அதே பதில். ஏனையவர்கள் எங்கே என்றால் கூற மறுக்கிறார். எதையும் கூறக் கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களில் ஓம்சக்தியில் வேலை பார்த்தவர்களைவிட முதல் வெடித்தலுக்குப் பிறகு அக்கம் பக்கத்திலிருந்து காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கை பார்க்கச் சென்றவர்களுமே அதிகம். சரியாக 12.15க்கு முதல் வெடி வெடித்திருக்கிறது. இதில் அதிக சேதம் ஏற்படவில்லை. வேலை செய்தவர்கள் காயங்களுடன் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அருகிலிருந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் உதவிக்கு வந்து பெரும்பாலானோரை தூக்கிவந்து வெளியில் கிடத்தியிருக்கிறார்கள். அதற்கு சரியாக அரை மணி நேரம் கழித்து மணி மருந்து என்று சொல்லப்படும் கடுகைப் போல் உருட்டிய வெடிமருந்துக் கலவை சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து அறை மிக மோசமாக வெடித்துச் சிதறி இருக்கிறது. இது தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் வெடிப்பு நிகழ்ந்த பிறகு, உதவி செய்யவும் வேடிக்கை பார்க்கவும் வந்த அநேகர் இரண்டாவது வெடிப்பில் சிக்கிக் கொண்டனர்.

இதில் தன் தம்பியை பறிகொடுத்த குமார் என்பவர் புதுத் தகவல் ஒன்றைக் கூறினார், காலை பத்து மணிக்கு சிறிய அளவில் வெடித்ததாகவும், அதை அணைத்து தார்ப்பாயில் சுற்றி தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை தொடருமாறு நிர்வாகத் தரப்பில் வற்புறுத்தியதாகவும், அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கு காரணமாகி விட்டது, முதலிலேயே வேலை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றி இருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இந்தத் தகவலை அங்கு வேலை செய்த யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த கோரத்துக்கு காரணமான விசயம் என்னவென்றால் மணி மருந்தை சிறிய அளவிலல்லாது சேமித்து வைக்கவே கூடாது. ஆனால் வேறொரு ஆலைக்கு வேண்டி மிக அதிக அளவில் மணி மருந்தை இரண்டு நாட்களாக சேமித்து வைத்திருந்திருக்கிறது நிர்வாகம். இது தான் இரண்டாவது வெடிப்புக்கு முக்கியமான காரணம். மணிமருந்தை சேமித்துவைப்பது ஆபத்து என்று தெரிந்திருந்த போதிலும் இரண்டு நாட்களாக சேமித்து வைக்கத் தூண்டியது எது? அந்த லாப வெறி அல்லவா இந்த விபத்துக்கும் இத்தனை மரணங்களுக்கும் காரணம்?

முதல் வெடிப்பு நிகழ்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது கிரசஷர் எனப்படும் கன்வேயர் பெல்ட் போன்ற ஒன்றின் மீது ஏறி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டாவது வெடிப்பின் போது சடுதியில் புகை சூழ்ந்து கொண்டதால் எந்தப் பக்கம் இறங்குவது என்று தெரியாமல் கிரஷருக்குள்ளேயே விழுந்திருக்கிறார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது உள்ளே நின்றிருந்த நான்கு பேருந்துகளை வெளியில் எடுத்துவரும் போது அதில் சிக்கியும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

எப்படி இருந்த போதிலும் 38 என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகளில் மதுரையிலும் சாத்தூரிலும் தலா 13 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிவகாசியில் 18 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 44 என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையில் அது எப்படி 38 ஆனது என்பது முதலாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஓம்சக்தியில் அதிகாரபூர்வமாக தற்காலிக வேலை செய்பவர்கள் (நிரந்தரத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இல்லை) 260 வரை இருக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லா ஆலைகளிலும் ‘எக்ஸ்ட்ரா ஆட்கள்’ தான் உற்பத்தியில் பெரும்பகுதியைச் செய்வது. இவர்கள் வேலை செய்ததற்காக எந்தப் பதிவும் இருக்காது.

250 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டமிருக்கிறது, பயிற்சித் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால் இந்த சட்டங்களெல்லாம் முதலாளியின் கழிப்பறைக் காகிதமாகத்தானே இருக்கிறது. அதன்படி எக்ஸ்ட்ரா ஆட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மொத்தம் 400 பேர்வரை வேலையில் இருந்திருக்கிறார்கள். வெடிப்பு நடந்து ஒன்றரை மணி நேரம் வரை எந்த உதவியும் அரசிடமிருந்து வரவில்லை. வந்த பின்னரும் கூட மிக மோசமான சாலைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என்று கூறுவதை மிகைப்படுத்தப்பட்டது என்று கொண்டாலும், நூற்றுக்கு குறையாமல் இருக்கும் என்பதை களத்தை ஆய்வு செய்யும் போது அறிய முடிகிறது. ஆனாலும் இது துல்லியமான எண்ணிக்கை அல்ல.

எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று உறுதியாக தெரியாதவரை இறப்புக் கணக்கை துல்லியமாக கூற முடியாது. மேற்கு வங்கத்திலிருந்து முதலிபட்டி வரை பல இடங்களிலிருந்தும் வந்து எக்ஸ்ட்ராவாக வேலை பார்த்தவர்கள் இருக்கும் போது உண்மை கணக்கு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.  அதேநேரம் ஊடக வலைப்பின்னல் கொண்டிருக்கும் எந்த செய்தி நிறுவனங்களும் இதை கணக்கெடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அரசு சொன்ன 38 போதுமானதாக இருக்கிறது.

இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை விட ஏன் இறந்தார்கள் என்பதே முதன்மையானது. சற்றேரக்குறைய 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இந்த வெடிமருந்து ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப்பகுதியில் வேலை செய்யும் அனைவரும் இந்த வேலையைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் சிறிதும் பெரிதுமாய் விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆபத்தான இரசாயனப் பொருட்களை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, எந்தவித தொழில்நுட்ப பயிற்சியும் இன்றி வெறுங்கைகளுடன் குழைத்து திரித்து உருட்டி கிட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தான இந்த தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு ஏன் அவர்கள் செல்லக் கூடாது?

இதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் கேட்கலாம். இவ்வளவு கோரமான விபத்து நடந்து இத்தனைபேர் இறந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்தப்பகுதி மக்களிடம் உறவினர்கள், நண்பர்கள் இறந்துபோன சோகம் இருக்கிறது ஆனால் இவ்வளவு கோரமான இந்த விபத்து குறித்து எந்த வித அதிர்ச்சியும் அவர்களிடம் இல்லை. இது ஏன்? இதற்கு செல்லையநாயக்கன்பட்டி ஆறுமுகம் பதில் கூறுகிறார், “இன்று எல்லை ஆலைகளுக்கும் லீவு விட்டு விட்டார்கள் அதனால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். வேலை வைத்திருந்தால் இன்றும் வேலைக்கு சென்றிருப்பார்கள். ஏனென்றால் இதை விட்டால் நாங்கள் வாழ்வதற்கு வேறு வழியில்லை” மாற்று வேலை வாய்ப்புகளே இல்லாமல் இந்த மக்களை வெடிமருந்தோடு மருந்தாய் கிட்டிக்கச் செய்திருப்பது யார் பொறுப்பு?

திருடனையும் திருட்டுக் கொடுத்தவனையும் ஒரே தட்டில் வைத்து இருவர் மீது தவறு இருக்கிறது என்று கூறுவது போல், ஜாக்கிரதையாக இல்லாதது தொழிலாளர்கள் தவறுதான் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எட்டு மணி நேரம் வேலை, மாதச் சம்பளம் என்று இருந்தால் அவர்கள் செய்யும் வேலையின் ஆபத்தை உணர்ந்து நிதானமாய் செய்திருக்க மாட்டார்களா? ஆனால் பீஸ் ரேட் போட்டு ஒரு யூனிட்டுக்கு (ஆயிரம் வெடிகள்) ஆறு ரூபாய் சம்பளம் என்று அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதால் தானே, தங்கள் வயிற்றுக்காக உயிரையே துச்சமென மதிக்கிறார்கள். பீஸ் ரேட் போட்டு கொள்ளையடிப்பதற்கு அனுமதித்த இந்த அரசை யார் தண்டிப்பது?

இராமலிங்காபுரம் இன்னாசி வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டார். “மற்ற எல்லா வேலையிலும் கங்காணியோ சூபர்வைசரோ பின்னால் நின்று கொண்டு வேலை செய் வேலை செய் என்று தார்க்குச்சி போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் மட்டும், கங்காணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதேநேரம் ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் வேலை நடக்கும்”.  பீஸ் ரேட் என்ற ஒன்றைக் கொண்டு வந்து அவர்களை அவர்களே எந்திரமாய் மாற்றிவைத்தது யார் பொறுப்பு?

இத்தனைக்கும் மேல் மக்களை கொதிக்க வைக்கும் விசயமும் இதிலிருக்கிறது. இந்த ஓம்சக்தி ஆலையின் உரிமையாளரான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விருதுநகர் சேர்மன் முருகேசன் ஆலை நடத்துவதற்காகப் பெற்றிருந்த அனுமதி கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இவனுக்கோ, இதை லீசுக்கு ஏற்று நடத்தும் திருத்தங்கல் பால் பாண்டிக்கோ இது தெரியாதா? இன்னும் எத்தனை உயிர்கள் இந்த மண்ணில் வீழ்ந்தாலும் இவர்களின் லாபவெறி கண்ணை மறைக்கும். ஆலை நடத்த அனுமதி இல்லை, தொழிலாளர் சட்டங்களை மதிப்பது இல்லை, முறையான பயிற்சி அளிப்பதில்லை, விழிப்புணர்வு கொடுப்பதில்லை, முறையான ஊதியம் கொடுப்பதில்லை, சங்கம் சேர அனுமதி இல்லை. ஆனால் தொழிலாளர்களை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை என்றால். இது யார்மீது யார் செலுத்திய வன்முறை? இந்த அரசும் முதலாளிகளும் சேர்ந்து செய்த படுகொலை இது என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா?

வினவு செய்தியாளர்கள்

முதல் பதிவு: வினவு

கொலைகார “டௌ” வே வெளியேறு

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ

கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

போபால் – காலம் கடந்த அநீதி


அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.


தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க :  94446 48879
பு.ம.இ.மு :  94451 12675
பு.ஜ.தொ.மு :  94448 34519
பெ.வி.மு :  98849 50952
வினவு :  97100 82506

நன்றி: வினவு

%d bloggers like this: