பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்

பெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம்  கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர்.

திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து

caste

நண்பர் ராஜ் ரம்யா,

பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு தலித்திய அரசியலைக் குறிப்பிடவில்லை, தலித்தியம் எனும் சொல்லின் பின்னாலுள்ள அரசியலைக் குறிப்பிடுகிறேன். பெரியாரியமும், அம்பேத்காரியமும் ஒடுக்கப்படும் மக்களுக்கான அரசியலாக, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழியாக இருந்து கொண்டிருப்பவை. அதாவது, ஒடுக்கப்படும் மக்கள் எதன் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த தனிச் சிறப்பான அம்சத்தை – பார்ப்பனிய கொடுங்கோன்மையை – தகர்க்க அல்லது அது ஒடுக்கும் மக்களைப் பாதுகாக்க முனையும் இயங்கள். ஆனால் மார்க்சியம் இதற்கு அப்பாற்பட்டு மக்களை ஒடுக்கும் அனைத்து அம்சங்களையும் தகர்த்து மக்களை பாதுகாக்க பாடுபடும் இயம். இந்த அடிப்படையில் மார்க்சியம் முழுமையானது.

ஆனால் தலித்தியம் எனும் சொல்லின் அரசியலை முதன்மைப்படுத்துபவர்கள், ஆசியாவின் அல்லது இந்திய துணைக் கண்டத்தின் தனிச் சிறப்பான ஜாதியக் கட்டமைப்பை மார்க்சியம் சரியாக உள்வாங்கவில்லை எனவே, அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகியவை மார்க்சியத்துக்கு பதிலீடாக செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இந்த அடிப்படையிலிருந்து தான் பெரியாரியம், அம்பேத்காரியம் ஆகியவை பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக மார்க்சியத்துக்கு எதிரானவர்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன. மற்றப்படி மூன்றும் மக்களை அதன் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாக கொண்டவை தான். வேறுபாடான அம்சம் மூன்றும் வேறுவேறான வழிமுறைகளைக் கொண்டவை.

அம்பேத்காரும், பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களின் வாழ்வைச் சந்தித்தார்கள், வாழ்நாளைச் செலவு செய்தார்கள். அம்பேத்கார் தன் அறிவுப் புலமையால் பார்ப்பனியத்தை வெற்றி கொள்வது குறித்து ஆலோசித்து வழிமுறைகளைக் கண்டடைந்தார். பெரியாரோ தன் கறாரான, யதார்த்தமான நடைமுறை வழிமுறைகள் மூலம் பார்பனியத்தை வேரறுத்துவிட போராடினார்.

அம்பேத்காரின் வழிமுறையைப் பார்த்தோமானால், ஒடுக்கப்பட்ட மக்களே பல ஜாதிகளாக பிரிந்து முரண்பட்டுக் கிடைக்கிறார்கள். வெவ்வேறு படிநிலைகளைக் கொண்டிருக்கும் இந்திய ஜாதிய அமைப்பு முறையில் முதலில் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடுத்த வேண்டும், பின்னர் அவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இந்த ஒன்றுபடுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் திரள் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பலத்தில் பார்ப்பனியத்தை வெளியேற்றி அல்லது வெளியேறி அதனை தனிமைப்படுத்தி பலங்குன்றச் செய்ய வேண்டும். இதனைச் செயல்படுத்த அவர் பல உத்திகளைக் கையாண்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் இழி பிறவிகளல்ல அவர்களே மண்ணின் மைந்தர்கள் எனும் வரலாற்றுப் பெருமையை அவர்களுக்கு உணர்த்தினால், தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து ஒன்றுபடுவார்கள் எனக் கருதினார்.

ஒடுக்கப்பட்டவர்கள் பிரிந்து கிடப்பதால் பொதுவான வாக்குரிமை அவர்களை சிறுபான்மையினராய் சிதறடித்து விடும். எனவே, அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கிடைத்தால் அது அவர்களை ஒற்றுமைப்படுத்தும். மட்டுமல்லாது, பிறரால் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்படும் எனக் கருதினார்.

காங்கிரஸ் என்பது பார்ப்பனிய கூடாரமாய் இறுகிக் கிடக்கிறது. கங்கிரஸை மட்டுமே கைக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவாது. எனவே, காங்கிரசானாலும், வெள்ளை அரசானாலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களுக்கான சலுகைகளையும் வாய்ப்புகளையும் பெற்று பயன்படுத்த வேண்டும் எனக் கருதினார்.

இந்த வழிகள் எதுவும் பலனிக்க முடியாத நிலை வந்தால் ஒட்டுமொத்தமாக இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் பார்ப்பனியக் கொடுமைகளுக்கு தீர்வு காண முடியும் எனக் கருதினார். இது தான் அம்பேத்காரியம்.

பெரியாரியத்தை பார்த்தோமானால், பார்ப்பனியத்தை தாக்கி வீழ்த்துவதுதான் ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் ஒரே வழி என்பது தான் பெரியாரின் தீர்க்கம். இதற்காக கடும் போராட்டங்களை மேற்கொண்டார். பெரியாரின் கால்படாத இடமே இல்லை எனும் அளவுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் உழைப்பில் எல்லை வரை சென்றார், கடைசி மூச்சுவரை மேடைகளிலேயே கழித்தார். என்றாலும் சட்டரீதியான முயற்சிகளின் மூலம் மக்களிடமிருந்து பார்ப்பனியத்தை  விரட்டிவிட முடியும் எனக் கருதினார்.

ஒடுக்கப்பட்டவர்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் தனியே வாழும் சேரி முறையை அகற்றி மக்கலோடு கலந்து வாழ வைக்க வேண்டும் குறிப்பாக அக்ரஹாரங்களில் குடியேற்ற வேண்டும் என்றார்.

ஒப்பீட்டளவில் தீண்டாமை நடைமுறை ஒழிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனிப்பட்ட கௌரவமும் பணப்பரிசுகளும் கொடுக்க வேண்டும். உயர் பதவிகளில் ஒடுக்கப்பட்டவர்களை அமர்த்த வேண்டும் என்றார்.

சாதித்திமிரை வெளிக்காட்டும் அடையாளங்களைத் தடுக்க வேண்டும். பெயருக்குப் பின்னால் ஜாதியை குறிக்கும் சொல்லை இணைக்கைக் கூடாது. இவைகளை சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும் என்றார்.

இனி செய்யப்படும் திருமணங்கள் அனைத்தும் கலப்பு மணமாகவே இருக்க வேண்டும் என சட்டமியற்றப்பட வேண்டும். மட்டுமல்லாது தன்னுடைய சொந்த ஜாதியிலேயே திருமணம் புரிவோருக்கு அரசு சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். இது தான் பெரியாரியம்.

இருவருமே ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை மாற்ற கடுமையாக உழைத்தார்கள் என்றாலும், இவர்களுக்கிடையேயான இன்னொரு முதன்மையான ஒற்றுமை என்னவென்றால் இருவருமே வர்க்கப் பார்வையை வெவ்வேறு அளவுகளில் நிராகரித்தார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருக்கும் சாதிய கட்டமைப்பு எவ்வாறு தோன்றியது? உலகம் முழுவதிலும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியில் தோன்றிய வேலைப் பிரிவினை பொருளாதார அடிப்படையில் ஊன்றி நின்றதால், உற்பத்திமுறை வளர்சியுற்று மாறிச் சென்ற காலகட்டங்களில் பலங்குன்றி வேலைப் பிரிவினையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஆனால், இதே வேலைப் பிரிவினை இந்தியத் துணைக் கண்டத்தில் பொருளாதார அடிப்படையைத் தாண்டி அடிக்கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டதால் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதோடு கொடுமையான, பசப்பலான வடிவங்களையும் எடுத்திருக்கிறது. இது தான் இந்தியத் துணைக் கண்டத்தில் சாதிய படிநிலையாக இருக்கிறது.

அம்பேத்காரும் பெரியாரும் கண்டடைந்த வழிமுறைகளால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என முழுமையாக மறுத்து விட முடியாது. ஆனால் அவர்கள் கண்ட கனவு சாத்தியமாவதற்கான ஏற்பாடு அந்த வழிமுறைகளில் எந்த அளவுக்கு இருக்கிறது? வர்க்கப் பார்வையை ஒதுக்கி வைத்துவிட்டு சமைக்கும் எந்தத் தீர்வும் முழுமையாக அதன் நோக்கத்தை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது.

மார்க்சியம் இதை எப்படிப் பார்க்கிறது? மக்கள் வர்க்கமாய் ஒன்றிணைவது தான் சாதிப்படிநிலை ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்கும் என்கிறது. அடிப்படையில் அனைத்துப் பிரிவினைகளும் உழைப்புச் சுரண்டலுக்கானது தான். வாய்ப்புகளும், வசதிகளும் சமமாக இல்லாமல் ஏற்றத்தாழ்வாய் இருக்கும் சமூகத்தில், எதிர்காலம் குறித்த அச்சம் நிரந்தரமாக்கப்பட்டுள்ள சமூகத்தில், தங்கள் விடுதலைக்கு எதிரான அம்சங்கள் அனைத்தும் பண்பாட்டுத் தளங்களில் திணிக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற சீர்திருத்தங்கள் ஒரு எல்லைக்குமேல் பலனளிக்காது. இதுவரை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாக அரசு அதிகாரம் அமைய வேண்டும். கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உழைக்கும் வர்க்கத்தின் மேலாதிக்கம் நிருவப்பட வேண்டும். அதுவரை சாதிப் படிநிலை ஆதிக்கத்தை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. இது தான் மார்க்சியம்.

உங்களுக்கான பதில் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன். முதலில் வேறு வடிவில் உங்களுக்கான பதிலை எழுதியிருந்தேன். ஆனால் அது உங்களின் கேள்விக்கான பதிலாக இருந்தாலும், உங்கள் கேள்வியின் நோக்கத்துக்கான பதிலாக இருக்காது என எண்னினேன். அதனால் அதை மாற்றியமைத்து வெளியடலாம் என எண்ணியதால் தாமதமாகி விட்டது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்