அஸ்ஸலாமு வணக்கம்

முன் குறிப்பு:

இது 2013ம் ஆண்டு குலாம் எனும் இஸ்லாமிய பரப்புரைப் பதிவருக்கும் எனக்கும் இடையே வணக்கம் எனும் சொல்லை முன்வைத்து நடந்த விவாதத்தின் ஒரு பகுதி. இன்று அவருடைய வலைப்பக்கத்தை அழித்து விட்டு சென்று விட்டார் என்றாலும், தற்போது வணக்கம் எனும் சொல்லை முன் வைத்து விவாதம் நடந்து வருவதால் இதை மீள்பதிவாக இடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

ஒருவரது நிலைப்பாட்டின் அடிப்படையை கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான முடிவுகளுக்கே சென்று சேரக் கூடும். எடுத்துக்காட்டாக அமெரிக்க எதிர்ப்பை எடுத்துக் கொள்ளலாம். இஸ்லாமியவாதிகளும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள், கம்யூனிஸ்டுகளும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள். இரண்டும் ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இஸ்லாமிய அரசுகளை அமெரிக்க கருவறுத்து தன் கைப்பாவையாய் வைத்து ஆட்டுவித்து வருகிறது, முஸ்லீம்களின் எதிரியான இஸ்ரேலை தாங்கிப் பிடித்து வளர்த்து விடுகிறது போன்ற அடிப்படையிலிருந்தே முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பு வருகிறது. ஆனால் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை தங்களின் லாபத்திற்காக வதைத்து வருவது குறித்து முஸ்லீம்களுக்கு ஏதாவது கவலை உண்டா? இந்தோனேசியாவில் லட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது குறித்து முஸ்லீம்களுக்கு கருத்து ஏதும் உண்டா? லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா செய்த அரசியல் சதிகள் குறித்து.. ..? அவ்வளவு ஏன் இவர்கள் ஆராதிக்கும் சௌதி அரேபியாவில் 70களின் தொடக்கத்தில் அமெரிக்காவின் விருப்பத்திற்காக நஜ்ரான் பகுதியில் கொல்லப்பட்ட பல கம்யூனிஸ்டுகள் குறித்து முஸ்லீம்கள் எதுவும் பேசுவதில்லை. எனவே அமெரிக்க எதிர்ப்பு எனும் ஒன்றை வைத்துக் கொண்டு முஸ்லீம்களும் கம்யூனிஸ்டுகளும் ஒரே நிலையில் இருப்பதாக கூறமுடியாதல்லவா? முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பு மேம்போக்கானது, கம்யூனிஸ்டுகளின் அமெரிக்க எதிர்ப்பு ஆழமானது எனும் வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல் கம்யூனிஸ்டுகளின் அமெரிக்க எதிர்ப்பையும், முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பையும் ஒன்றாக மதிப்பிட்டால் அது பெரும் பிழையாகவே இருக்கும்.

அதே போலத்தான் வணக்கம் எனும் சொல்லை எடுத்துக் கொண்டு நாத்திகத்தின் முரண்பாடு என இவர் கூறுவது எந்த அடிப்படையில் இருந்து எழுந்து வருகிறது என்பதை அறியாமல் நாத்திகத்தின் முரண்பாட்டை அலச முடியாது. வணக்கம் சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது என நண்பர் குலாம் கூறுவதற்கான காரணம், நாத்திகர்கள் சர்வ வல்லமை கொண்டவராக ஆத்திகர்களால் கருதப்படும் கடவுளையே வணங்க மறுக்கிறார்கள். அப்படியென்றால் சக மனிதனையே வணங்கும் வணக்கம் எனும் முகமன் எப்படி பகுத்தறிவுக்கு உவப்பானதாகும்? இதுதான் முரண்பாட்டின் சாரம். ஆனால் இப்படி கேள்வி எழுப்புபவர்கள் யார்? தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி கேள்வி எழுப்புவதில்லை. கிருஸ்தவர்களும் இப்படி கேள்வி எழுப்புவதில்லை. முஸ்லீம்கள் மட்டுமே இப்படி கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் வணக்கம் எனும் சொல்லை வேறு எந்தக் கடவுளோடும் அல்லது வேறு எதனோடும் தொடர்புபடுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மதமும் அதை அனுமதிப்பதில்லை. மட்டுமல்லாது வணக்கம் எனும் சொல்லுக்கு மாற்றாக அவர் முன்வைப்பது அஸ்ஸலாமு அலைக்கும் எனும் இஸ்லாமிய முகமனைத் தான். எனவே நாத்திகத்தின் முரண்பாடு என இங்கு குறிப்பிடப்படுவது இஸ்லாமிய அடிப்படையிலிருந்து நாத்திகத்தை நோக்கி எழுப்பப்படும் ஒன்று.

வணக்கம் எனும் சொல்லின் பொருள் கடவுளை வணங்குவது என்பது தானா? நிச்சயமாக இல்லை. வளைதல், இணங்குதல் என்பது தான் வணக்கம் எனும் சொல்லின் பொருள். திருக்குறளின் 827வது குறள் இதை தெளிவாக விளக்கும்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 

தீங்கு குறித்தமை யான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வணக்கம் கூறும் முறை இல்லை. அப்படியென்றால் இந்தக் குறளின் பொருள் என்ன? வில் வளைவது எப்படி தீங்கில் முடியுமோ அது போல பகைவர்கள் இணக்கமாக பேசுவதை ஏற்பதும் தீங்கில் தான் முடியும் என்பது தான் அந்தக் குறளின் பொருள்.

வணக்கம் எனும் சொல்லின் பொருளை உணர்த்துவதற்கு குறளைத் தேடியெல்லாம் போக வேண்டியதில்லை. நடைமுறையிலிருந்தே பார்க்கலாம். வணங்காமுடி என்றொரு சொல்லைச் செவியுற்றிருக்கலாம். இதன் பொருள் என்ன? என்னுடைய முடி எந்தக் கடவுளையும் வணங்காத நாத்திக முடி என்பதா இதன் பொருள்? அல்ல, சீப்புக்கு வளையாத முடி என்பது தான் பொருள். இந்தச் சொல்லையே ஆகு பெயராக்கி சில மனிதர்களைச் சுட்டுவதற்கும் வணங்காமுடி எனப் பயன்படுத்துவார்கள். இதன் பொருள் குறிப்பிட்ட அந்த ஒருவர் எந்தக் கடவுளையும் வணங்காத நாத்திகர் என்பதா? எந்த மனிதரின் அறிவுரைக்கும் இணங்காமல் தன் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர் என்பதா? சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு உண்மையும் யதார்த்தமும் புரியும்.

சரி, ஒருவருக்கு ஒருவர் முகமனாக வணக்கம் கூறிக் கொள்வதன் பொருள் என்ன? உனக்கு நான் பகைவனல்ல நண்பன் தான் என்பதை வெளிக்காட்டுவதே வணக்கம் கூறிக் கொள்வதன் பொருள். இன்றும் கூட வணக்கம் கூறாமல் யாரும் செல்லும் போது “நான் என்ன இவன் கூட சண்டையா போட்டேன். ஒரு வணக்கம் கூட சொல்லாமல் போகிறானே” என்று வெள்ளந்தியாக பேசுவதைக் கேட்டிருக்கலாம். இதற்கு மாறாக வணக்கம் என்று கூறிவிட்டால் “சுடலை மாடனுக்கு விடலை போடுவது போல் 41 தேங்காயும் குறும்பாட்டுக் கறியும் கொண்டா” என்று யாரும் கேட்பதில்லை. வணக்கம் எனும் முகமனின் பொருள் யதார்த்தத்தில் இப்படித்தான் இருக்கிறது.

இவைகளை மீறி வணக்கம் எனும் சொல்லுக்கு வரலாற்று ரீதியாக கம்பீரமான ஒரு பொருளும் இருக்கிறது. திராவிட இயக்கம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய வரலாறு அது. திராவிட இயக்கத்திற்கு முன்பு வணக்கம் சொல்வது நடைமுறையில் இல்லை. நமஸ்காரம், கும்புடுறேன் சாமி என்பன தான். ஆதிக்க சாதியைச் சார்ந்த இருவர் சந்தித்துக் கொண்டால் நமஸ்காரம் என்பர்கள். அந்த மட்டத்திலும் உயர்வு தாழ்வினால் ஒருவர் நமஸ்காரம் என்றால் மற்றொருவர் ம்ம் என்று உறுமி விட்டுப் போவார். ஒடுக்கப்பட்ட மக்களோ துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஒதுங்கி நின்று கும்புடுறேன் சாமி என்பர், பார்ப்பனியப் பன்னாடைகளோ கேவலமாய் சைகை காட்டிவிட்டுச் செல்லும். இந்தக் கொடுமைகளை மறுத்துத் தான் திராவிட இயக்கம் தோளில் துண்டை நீளமாக போட்டுக் கொள்ளும் நடைமுறையையும், உனக்கும் எனக்கும் உயர்வு தாழ்வு ஏதுமில்லை நாம் நண்பர்களே என்பதை உணர்த்தும் வணக்கம் எனும் சொல்லையும் பிரபலப்படுத்தினார்கள். இன்றும் தோளில் துண்டு போடுவதை அநாகரிகமாக விமர்சிக்கும் அம்பிகளைப் போல் வணக்கம் எனும் சொல்லை இழிவு படுத்த சில தும்பிகள் ரெக்கையை படபடக்கின்றன.

வணக்கம் எனும் சொல்லுக்கு வணங்குதல் என்று பொதுவில் அறியப்பட்டிருக்கும் பொருள் எவ்வாறு வந்தது? அது இயல்பான பொருளா? ஏற்றப்பட்ட பொருளா? இணங்குதல் எனும் பொருளிலிருந்து ஏற்றப்பட்ட பொருளாகத்தான் வணங்குதல் எனும் பொருள் வந்திருக்கிறது. அதாவது, கடவுளுக்கு உருவகிக்கப்படும் தகுதிகள் அனைத்தையும் இணங்கி ஏற்றுக் கொள்கிறேன் எனும் வழியில் தான் வணங்குதல் எனும் பொருளும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று இயல்பான பொருளே தெரியாத அளவுக்கு ஏற்றப்பட்ட பொருள் முதன்மை பெற்றிருக்கிறது.

இன்று பொதுவாக சௌக்கியமா எனும் விசாரிப்பு தான் முகமனாக இருக்கிறது. வணக்கம் என்பது பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை. மட்டுமல்லாமல் கூறப்பட்டே ஆகவேண்டும் எனும் வற்புறுத்தலும் இல்லை. விருப்பம் இருந்தால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இதற்கு மாற்றாக நண்பர் குலாம், கொண்டிருக்கும் ஒரு வாக்கியம், அது ஆட்சேபகரமானது. அஸ்ஸலாமும் அலைக்கும் எனும் அரபு வாக்கியத்தின் பொருள் என்ன? சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என எதிர்ப்படும் முஸ்லீம்கள் அனைவரும் கூற வேண்டும் என்பதாக வரையறுப்பு இருக்கிறது. யாரால் ஒருவருடைய சாந்தியும் சமாதானமும் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதோ அவர்களைப் பார்த்து பாதிக்கப்பட்ட ஒருவர் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என கூறமுடியுமா?

வணக்கம் எனும் சொல் குறித்து எதையுமே அறிந்து கொள்ளாமல் மண்டபத்தில் ‘யாரோ’ எழுதி வைத்ததைப் படித்துவிட்டு வந்து கட்டுரை வரைந்திருக்கிறார் நண்பர் குலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து எழுதுவதை விட ஆய்ந்து முழுமையாக உள்வாங்கி எழுதுவதே சிறந்தது.

பின் குறிப்பு: தற்போது, மாநகரத் தந்தை என சொல்லப்படும் மாநகராட்சி மேயரை ‘வணக்கத்துக்குறிய’ என்று அழைக்க வேண்டுமா எனும் தற்போதைய விவாதத்தினாலேயே வணக்கம் எனும் சொல் பேசுபொருளாகி இருக்கிறது. ஆதலின், இதன் பொருள் வணக்கத்துக்குறிய என்று அழைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பது என்பதன்று. இரட்டை ஆட்சி முறையை எதிரொலிக்கும் எதன் மீதும் எனக்கு மயக்கமொன்றும் இல்லை. ஆகவே இந்தப் பதிவின் நோக்கம் வணக்கம் எனும் சொல்லை மட்டுமே முதன்மைப்படுத்துகிறதே அன்றி, வணக்குத்துக்குறிய என்று மேயரை அழைப்பது குறித்த விவாதத்தை முதன்மைப்படுத்தவில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்