கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

 

அமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் மக்கள் கேட்கும் நியாயமான கேள்விகளூக்கு பதிலளிக்கவோ, அந்த கேள்விகளை எதிர்கொள்ளவோ திறனற்றவர்கள் தங்கள் வர்க்க விருப்பங்களை, சொந்தக் கதைகளை பொதுக் கேள்விகளாக மாற்றி உலா விடுகிறார்கள்.

 

கடற்கரை மணலில் இரண்டு நாட்களாக நடந்த முற்றுகைப் போராட்டத்தை சட்ட விரோத செயல் போல திரிக்கப் பார்க்கிறார்கள் இந்த எல்லாம் அறிந்த ஏகாம்பரங்கள். எது சட்ட விரோதம்? தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்ற ஒரு ஆலையை தடுப்பதற்காக அமைதியான முறையில், அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமையைக் கொண்டு எந்த வன்முறையும் செய்யாமல் அமைதியாய் முற்றுகைப் போராட்டம் நடத்தியது சட்ட விரோதமா? ஜனநாயக ஆட்சிமுறை என்று தன்னைப் பீற்றிக் கொள்ளும் ஒரு நாடு, ஜனநாயக முறையில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக ஐந்து மாதங்களுக்கு மேலாக 144 தடையுத்தரவு போட்டு வதைப்பது சட்ட விரோதமா?

 

முற்றுகைப் போராட்டம் என்ற பெயரில் வன்முறை செய்தார்களாம், போலிசார் அமைதியாக கையாண்டார்களாம் கதை விடுகிறார்கள் கதை சொல்லிகள். முற்றுகை என்று வெளிப்படையாய் அறிவித்து; அரிசி, பருப்பு முதல் அனைத்தையும் தயார் செய்து முற்றுகை நடத்த வந்தவர்கள் இரண்டு நாட்கள் அல்ல, இருபது நாட்களானாலும் முற்றுகையை தளர்த்தவோ கைவிடவோ மாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்கள் நோக்கம் சிதைந்து போகும். ஆனால், மக்களை விட அதிகமாய் குவிந்திருந்த போலீஸ் படை லத்தி, துப்பாக்கி, முதல் கண்ளீர்புகை குண்டு, வஜ்ரா வரை அத்தனை ஆயுதங்களோடும் திரண்டிருந்தார்கள். முற்றுகையை இரண்டு நாட்கள் வரை விட்டதே அதிகம். ஏனென்றால், அவர்களின் நோக்கமே முற்றுகையை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலைப்பதே. அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையும் அது தான். ஆண்டுக்கணக்காக நீண்ட உண்ணாவிரதம் போல முற்றுகையும் நாட்கணக்காக நீண்டால் அரசுக்கு அது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். அந்தச் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் போலீசு படைகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. அந்தக் கட்டளையைத் தான் அமைதியாக முற்றுகை நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்தார்கள். மண்ணள்ளி வீசும் புகைப்படத்தை போட்டு யார் வன்முறை செய்தார்கள் என்று கேள்வி கேட்க்கும் சிந்தனைச் சிற்பிகளுக்கு, யார் வன்முறை செய்தால் யாருக்கு லாபம்? எனும் கேள்வி மட்டும் சிந்தையில் உதிக்காமல் போனது எப்படி?

 

நீதி மன்றம் எரி பொருள் நிரப்பச் சொல்லி விட்டது, அரசு 144 தடையுத்தரவு போட்டிருக்கிறது இதை மீறி போராடுவது சரியாகுமா? கேட்கிறார்கள். மக்கள் அரசின் அடிமைகளா இல்லை குடிமக்களா? மக்களுக்காக சட்டங்களா? சட்டங்களுக்காக மக்களா? தொடக்க காலத்திலிருந்து அந்தப் பகுதி மக்கள் அணு உலை வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைக்கு தொடர்ந்து செவி சாய்க்க மறுக்கும் அரசுக்கு 144 போடும் அறுகதை உண்டா? சட்டங்களைப் பற்றி யார் பேசுவது? இந்த அரசும் நீதிமன்றங்களும் சட்டத்தை மதிக்கின்றனவா? எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காக செய்யப்பட்ட முறைகேடுகளை என்ன செய்வது? கடலில் கொட்டப்படும் அணுக்கழிவுகளின் வெப்பநிலை 37 செல்சியஸ் எனும் விதியை கூடங்குளத்திற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தளர்த்தியதன் நோக்கம் என்ன? கடல்சார் ஒழுங்குமுறைச் சட்டங்களிலிருந்து கூடங்குளத்திற்கு மத்திய அரசு விலக்களித்த மர்மம் என்ன? ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு இந்திய அணு உலைகள் பாதுகாப்பு நிபுணர்கள் பரிந்துரைகளை நிறைவேற்றிய பிறகே செயல்படுத்தப்படும் என்று நீதிமன்றத்திடம் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் அந்த பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப் பட்டிருக்காத போதும் கூட நீதிமன்றம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்ததின் பின்னணி என்ன? அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும் முன்னர் 30கிமி தூரத்துக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் பேரிடர் மேலாண்மை பயிர்ச்சி வெளிப்படையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் யாருக்கும் தெரியாமல், பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைக்காமல், எந்த விபரமும் இல்லாமல் நக்கனேரி கிராமத்தில் ரகசியமாக பயிற்சி நடத்தியதாக காட்டியதை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்தது எந்த அடிப்படையில்? அணு உலை அழுத்தக் கலனில் இரண்டு பற்றவைப்புகள்(வெல்டிங் ஒட்டு) இருப்பதாக 2008ல் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்த அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. இந்த பற்றவைப்புகள் அணுக் கதிர்வீச்சை தாக்குபிடிக்கும் திறன் கொண்டவையா? என்று சோதனை செய்யாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி தந்தது என்ன காரணத்துக்காக? மக்களின் முன் சட்டத்தை நீட்டும் மகோன்னதமானவர்கள் யாராவது இவ்வளவு விதிகளை மீறியது ஏன் என்று அரசையும், நீதி மன்றங்களையும், அணுசக்தி ஆணையத்தையும் கேட்பார்களா? மக்கள் உயிர் என்ன கிள்ளுக் கீரையா?

 

முற்றுகை நடத்திய மக்களிடம் காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம், நியாயவான்கள் கூறுகிறார்கள். அவர்கள் பேசிய விபரம் என்ன? வெளியிடுவார்களா? 10 நிமிடத்தில் கலைந்து செல்லாவிட்டால் நாங்கள் தடியடி நடத்தி கலைப்போம் என்று கூறுவது மிரட்டலா? பேச்சுவார்த்தையா? கடலுக்குள் மனிதச் சங்கிலி அமைத்து போராடியவர்களில் மீனவர் சகாயத்தை விமானத்தை தாழப் பறக்கச் செய்து கொன்றதை நலம் விசாரிக்கத்தான் விமானத்தில் தாழப் பறந்தார்கள் என்று கூறுவார்களோ!

 

 

மக்களின் அமைதியான போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாமல், தொடர்ச்சியான போராட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் அரசு அன்றிலிருந்து இன்றுவரை போராட்டத் தலைமை மீது அவதூறு கற்பிப்பதையே வழிமுறையாக கடைப்பிடித்துவருகிறது. வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, கைக்கூலி, விசுவாசி என்று ஏதேதோ. அரசிடம் அதிகாரம் இல்லையா? வசதி வாய்ப்புகள் இல்லையா? கூறலாமே, இந்த நாட்டிலிருந்து, இன்ன அமைப்புகளிலிருந்து பணம் வந்தது நாங்கள் கைப்பற்றி வைத்துள்ளோம் என்று. ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள், ஏன் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முயலவில்லை? இந்திய நாட்டின் முடிவை எதிர்த்து போராடுபவர்களுக்கு  பணம் அனுப்பும் செயல் என்பது இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்கும் செயலல்லவா? போராடிய மக்கள்மீது தேசத்துரோக வழக்குகளைப் போட்ட இந்த அரசு, பணம் அனுப்பும் நாடுகளின் தூதரக உறவை ஏன் துண்டிக்கக் கூடாது? தொடர்ச்சியாக பதிவெழுதி விமர்சிப்பவர்கள் இதை அரசுக்கு கோரிக்கையாக வைத்து ஒரு பதிவேனும் எழுதுவார்களா?

 

விஞ்ஞானி அப்துல் கலாமே சொல்லிவிட்டார் உங்களுக்கு இன்னும் என்ன பயம் என்கிறார். போலிமருத்துவர் சொன்னால் பயங்கொள்ளாமல் எப்படி இருப்பது? அப்துல்கலாம் ஒரு ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானி. ரியாக்டர்கள் இயங்கும் விதம் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் அவர் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? காவிரிக் கரையில் சிறுநீரகக் கோளாறுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பார்களோ!

 

உதயகுமார் காந்தி வழியில் போராடுகிறாரா? அஹிம்சை என்பது போராட்ட வடிவமா? என்பதெல்லாம் அப்பாற்பட்ட கேள்விகள். அணு உலைகளின் ஆபத்து அதன் பாதிப்புகளில் மட்டும் இல்லை, அதன் அரசியலிலும் இருக்கிறது. அணு உலையின் நோக்கம் மின்சாரத் தயாரிப்பல்ல, பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கு சொந்த நாட்டு மக்களைப் பலியிடுவது. அணு மின்சாரம் குறித்த பல புள்ளிவிபரங்கள், பல கட்டுரைகள் இணையப் பரப்பில் கிடைக்கின்றன. அவை குறித்த தேடல் எதுவும் இல்லாது தம் சொந்த விருப்பிலிருந்து எழுதுவதும் பேசுவதும் உண்மைகளுக்கு அருகில் கூட வருவதில்லை.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்