செய்தி:
திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது அவரது உருவத்தை மாற்றுவது என அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மேக்மில்லன் பதிப்பக புத்தகத்தில் 10ஆவது பாடத்தில் வாசுகியுடன் திருவள்ளுவர் இருப்பது போன்று படம் உள்ளது. இதில் திருவள்ளுவருக்கு முடிகள் மழிக்கப்பட்டு பின்னந்தலையில் கொஞ்சம் குடுமி வைக்கப்பட்டு நெற்றியில் திருநீர் பூசி சித்தரிக்கப்பட்டுள்ளது. கழுத்து கைகளில் ருத்ராட்ச மாலை அணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சடை முடியுடன் நீண்ட தாடியுடன் கையில் எழுத்தாணியுடன் இருப்பதைதான் காலம் காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
செய்தியின் பின்னே:
திருவள்ளுவரை பார்ப்பனிய மயமாக்குவதற்கான முயற்சி சில காலமாக நடந்து வருகிறது. திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவித்து படம் வெளியிடுவது, சிலைக்கு காவிச் சாயம் பூசுவது என்று சில்லரைச் சேட்டைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், குழந்தைகளுக்கு கல்வியில், பாடத் திட்டத்தில் நஞ்சை ஏற்றுவதும் வெகு காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. ஆகவே, இது திட்டமிட்டு நடந்திருக்கிறது என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. தற்போது பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின்னர் இப்போது படத்தை நீக்க முயற்சிக்கிறோம் என்கிறார்கள்.
முதலில், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அவர்கள் இது குறித்து என்ன கூறுகிறார்கள்? எனும் எந்த விவரங்களாவது வெளியிடப்பட்டிருக்கிறதா? பொறுப்பான எந்த அரசு ஊழியர்களிடமிருந்து எந்தவித அறிகையோ விளக்கமோ வெளிவரவில்லை. மாறாக, எட்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பாடநூலை பதிப்பித்த பதிப்பகத்தாரான மாக்மில்லன் எனும் பதிப்பகமே, “சித்தரிக்கப்பட்ட படம் சர்ச்சையானது தொடர்பான தகவல் தற்போது எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த பணிகளை மேற்கொள்வது எடிட்டோரில் டீம். இதை உடனடியாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம்”
ஒரு பதிப்பகத்தார் தான் நினைக்கும் ஏதாவது ஒரு படத்தை அல்லது கருத்தை தன்னிச்சையாக பாடநூலில், அதுவும் மாநிலங்களில் கற்பிக்கப்படுவதெல்லாம் தரமில்லாத கல்வி. மத்திய அரசு கற்பிப்பது தான் தரமான கல்வி எனும் கற்பிதம் மக்களிடம் வெகுவாக பரப்பி வைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், ஒரு அச்சிட்டுத் தரும் ஒரு பதிப்பக நிறுவனம் தான் விரும்பும் எதையும் பாடநூலில் சேர்க்கலாம் என்றால் அது என்ன மாதிரியான தரம்? அந்த அளவுக்கு தொளதொளப்பாகவா சிபிஎஸ்சி பாடத்திட்டம் இருக்கிறது. இந்த லட்சணத்தில் தான் 5 வகுப்பிலிருந்தே பொதுத் தேர்வு வைக்க வேண்டும். அப்போது தான் கல்வி தரமானதாக இருக்கும் என்று கூறுகிறார்களா?
பார்ப்பனியத்தை எல்லா வகையிலும் புகுத்தியே தீர்வது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தன்மையை அரித்தே தீர்வது, பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சாரத்தையெல்லாம் நீக்கி விட்டு பார்ப்பனியக் கலாச்சாரத்தையே அதாவது சாதியப் படிநிலைப்படி தன்னைத் தவிர ஏனையை அனைவரும் படிநிலைப்படி தனக்கு அடிமைகளே எனும் பண்பாட்டு சீரழிவை புகுத்துவதை திட்டமிட்டு செய்யும் அரசாக இது இருக்கிறது என்பதற்கான அண்மை எடுத்துக்காட்டு தான் இது.
அதாகப்பட்டது, “நீ மேக்க திரும்பி நிண்ணு எவ்வளவு கத்தினாலும் அது கிழக்கு ஆகாது தம்பி” அம்புட்டுதேன்.