போட்டுடைத்த சத்யபால் மாலிக், ஜெயரஞ்சன்

இவை ஒன்றும் புதிய செய்திகள் அல்ல. சொல்லப் போகும் இரண்டு செய்திகளுமே கிட்டத்தட்ட பொது உண்மைகளைப் போல, அனைவருக்கும் தெரிந்த ரகசியம் போல ஆகிவிட்ட செய்திகள் தாம். என்றாலும் அதற்கு அண்மை சான்றுகள் கிடைக்கும் போது, அதை எடுத்து வைக்கும் போது ஒரு நிறைவு கிடைக்குமே. அந்த நிறைவு (சரியாகச் சொன்னால் எதிர்மறை நிறைவு) இந்தச் செய்திகளிலும் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அதன் அரசியல் பிரிவான பாஜக வும் அந்தப்படியே. அதன் பிரதமரும் அமைச்சரும், அவர்களுக்கிடையிலான உறவும் எப்படி இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாததல்ல. மோடிக்கும் அத்வானிக்கும்; மோடிக்கும் உபி சாமிக்கும் இடையிலான உறவுகள் குறித்தெல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்து அம்பலப்படுத்தத்தான் செய்கின்றன என்றாலும் உயர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பதிலேயே இந்தப் பேச்சின் முதன்மைத்தனம் அடங்கியிருக்கிறது.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் ஜனவரி இரண்டாம் தேதி ஹரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்தப் பேச்சில் ‘நான் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்த போது, வேளாண் சட்டங்கள், விவசாயிகள் குறித்துப் பேச ஆரம்பித்தேன். பேச ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. அவரிடம் சொன்னேன்… 500 விவசாயிகள் இறந்துவிட்டார்கள் என்று. அதற்கு அவர், எனக்காகவா இறந்தார்கள் என கேட்டார். ஆமாம்… நீங்கள் தான் இந்த நாட்டின் ராஜா என்று சொன்னேன். இதையடுத்து சண்டை போட்டு விட்டுக் கிளம்பி விட்டேன். அப்போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கச் சொன்னார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர். தொடர்ந்து அமித்ஷாவைச் சந்தித்தேன். அவர் பேசும்போது, அவர்(மோடி) எதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னைச் சந்தியுங்கள் என்றார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், தன் மூலம் கொண்டு வரப்பட்ட சட்டங்களை எதிர்த்து போராடும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று தன்னுடைய கட்சியைச் சேர்ந்த பெரிய பதவியில் இருக்கும் ஒருவரால் தன் முகத்துக்கு நேரே சுட்டிக் காட்டும் போது அவர்கள் எனக்காகவா இறந்தார்கள் என்று கேட்க முடியும் என்றால், அது என்ன மாதிரியான புரிதல்?, என்ன மாதிரியான மனோநிலை?

அடுத்ததாக சுட்டிக் காட்ட விரும்பும் செய்தி, அதே ஜனவரி இரண்டாம் தேதி சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவரான முனைவர் ஜெயரஞ்சன் ஆற்றிய உரை. “இன்ஸ்டிட்யூஷன் டெஸ்ட்ராய் எனப்படும் நிறுவனச் சிதைவு பற்றி இங்கே பலரும் பேசினார்கள். பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசும்போது எதிரிகள் வெளியே இருந்து வரவேண்டுமென்பதல்ல உள்ளேயே இருக்கிறார்கள் என்றார். நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். இதுபற்றி விரிவாக உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், அது உண்மை.

அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குனு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு.

ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டெல்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர்களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள், அதுமட்டுமல்ல… முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறைமுகமாக திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதைதான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்புகிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க. இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்கனு நேரடியாம நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது.” என்று பேசி இருக்கிறார்.

இதற்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய தேவை இல்லாமல் மிக தெளிவாகவும், எளிதாகவும் அவர் பேசி இருக்கிறார். இரண்டு பேச்சுகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது தான். பார்ப்பனியத்தின் இலக்கு தெளிவானது. முற்றுமுழுதாக கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கான அரசை நடத்துவது, அதில் எழும் பாதிப்புகளை மறைப்பதற்காக மக்களிடையே மதவாத பிளவை திட்டமிட்டு தூண்டி விடுவது. இதைத் தவிர வேறொன்றுமில்லை. இதை அரசியல் புரிதலுள்ளவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை.

ஆனால் தங்களை மத ரீதியாக இந்துக்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்றவை செய்து வரும் மதவாத மோதல் தூண்டல்களை இந்து மதத்தின் நலனில் இருந்து செய்யப்படுபவை என நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்