மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி பழுதாகி, பின்னர் சரி செய்து தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த முறை மீண்டும் பழுதாகி பெருமூச்சு விட வைத்து விட்டது.

ஐரோப்பாவில் இருக்கும் தோழர்களுக்கும் இந்த விளக்கத்தை சொல்லி இருந்தேன். ஒரு தோழர் நானே புதிய மடிக்கணிணி ஒன்றை வாங்கி அனுப்புகிறேன் என்றார். இதோ அந்தக் கணிணி வந்து சேர்ந்துவிட்ட்து. அதில் தான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.

அரசியல் உறவு, தோழமை உறவு போன்ற சொற்கள் வெறுமனே இடுகுறிப் பெயர்கள் அல்ல, காரணப் பெயர். தோழர் என்ற சொல்லே மிகுந்த நிறை கொண்டது. தோழமை உறவு எனும்போது அதற்கு இன்னும் எடை கூடி விடுகிறது. முன்னர் நான் செவியுற்ற செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு பகுதிச் சிக்கலுக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழலில், மக்களிடம் நன்கொடையாகப் பெற்றது திட்டமிட்ட செலவில் பாதிக்குக் கூட வராது என்ற நிலையில் ஒரு தோழர் தன் மனைவியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை வைத்து செலவு செய்தார். அது பின்னர் மீட்கப்பட்ட்து என்றாலும், அந்த உணர்வு தான் மதிக்கத் தக்கது. தன்னுடைய தேவையை விட சமூகத் தேவையை உயர்வாய் மதிக்கும் எண்ணம் இந்த நுகர்வு உலகில் அவ்வளவு எளிதாக தோன்றி விடுவதில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கு இது எளிதானதும், உவப்பானதுமாக இருக்கிறது என்பதற்கு பல எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

ஒரு மடிக்கணிணியின் செலவு அந்தத் தோழருக்கு எளிதான, குறைவான செலவாக இருந்திருக்கலாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், சேதி தெரிந்ததும் தானே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை இருக்கிறது அல்லவா. அது தான் இந்த நிகழ்வின் படிப்பினையாக இருக்கிறது. உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்ட, வாங்கி அனுப்பிய தோழர்களுக்கு நன்றி.

நான் ஒன்றும் நாள் தவறாமல் கட்டுரைகள் எழுதி பதிவேற்றுபவனல்லன். முன்னர் சில முறைகள் இது போன்ற இடைவெளிகள் நேர்ந்திருக்கின்றன. முதன்மையான வேறு சில வேலைகள் காரணமாகவும், வேறு வழியில்லாமல் முடக்கப்பட்டிருந்த போதும் என ஒருவித ஏற்பிலிருந்து எழுதாமல் இருந்திருக்கிறேன். என்றாலும் இப்போது கடந்த இருபது நாட்கள் எழுதாமல் இருந்தது, நோயில் கிடந்தது போன்ற உணர்வை கொண்டு வந்திருந்தது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த மாதத்திற்குள் யூடியூப் வலையொளி ஒன்றை தொடங்க வேண்டும், எதிர்வரும் நவம்பர் 7 அன்று மாத இதழ் ஒன்றை கொண்டுவந்து தொடங்க வேண்டும். இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாணடுக்குள் பதிப்பகம் ஒன்று தொடங்க வேண்டும். முதல் நூல் மொழிபெயர்ப்பு நூலாக இருக்க வேண்டும் என்று நூலும் தேர்வு செய்து, திட்டங்கள் இட்டு வைத்திருந்த நிலையில், சின்ன நூல் கண்டா நம்மை சிறைப்படுத்துவது என்று சொல்லப்படுவது போன்று மடிக்கணிணி பழுதாகியது நோயுற்ற மனோநிலையை ஏற்படுத்தி இருந்தது. மருந்தாக இந்த புதுக் கணிணி வந்திருக்கிறது.

மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு என்று வசனம் பேசத் தோன்றுகிறது.

நன்றி தோழர்களே.

8 thoughts on “மீண்டும் நான்

  1. வாழ்த்துக்கள் தோழர். எண்ணங்கள் ஈடேறட்டும்

  2. காலையில் என்ன உணவு சாப்டீங்க.மாலை என்ன சாப்டீங்க தீடிரென ஏன் பிரியாணி சாப்பிடவில்லை இது போன்று எழுதுங்கள் யார் இது எல்லாம் கேட்பது .தான் ஒரு அறிவாளிகள் என்று தானே நினைத்து கொள்கிறார்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்