பறவை மீது சாவர்க்கர்

செய்தி:

சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா என்று கேட்கின்றனர். இதற்கு பாடநூலை எழுதியவர்கள் சாவர்கர் பற்றிய குறிப்பு மெருகேற்றப்பட்ட வாக்கியம்,  சாகித்ய அலங்காரம் அல்லது உவமை. அதைவைத்து அரசியலும் சர்ச்சையும் செய்வது கேவலம் என்று விளக்கம் கூறுகின்றனர்.

ஒன் இந்தியா செய்தி

செய்தியின் பின்னே:

சாவர்கர் குறித்து அல்லது சாவர்கரைச் சுற்றி செய்திகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலை இல்லை. சாவர்கர் யார் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. அந்த நிலையை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நல்லதோ அல்லதோ அவரைப் பற்றிய செய்திகள் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என ஆளும் பாஜக விரும்புகிறது.

அண்மையில் முடிந்த ஆகஸ்ட் 15 ல் சுதந்திரக் கொண்டாட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த படத்தில் நேரு இடம் பெறவில்லை. மாறாக சாவர்க்கர் இடம் பெற்றிருந்தார். பெரிய விவாதமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த செய்தி நமுத்துப் போன வெடி போல சத்தமின்றி போனது. இந்திய ஊடகங்கள் எதை செய்தியாக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கின்றன.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு சாவர்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஆங்கில அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் குறித்த சான்றுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த போது, இந்த சட்டத்தின் கீழ் இந்த விவரம் வராது என்றும், ஒன்றிய அரசிடம் அப்படியான தகவல்கள் இல்லை என்று பதில் அனுப்பி இருந்தார்கள். இதுவும் பெரிய விவாதமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஊடகங்கள் இதையும் திட்டமிட்டு மறைத்தன.

சாவர்க்கர் முதன் முதலாக 1908 ல் லண்டனில் சிறை சென்றது லாரன்ஸ் மார்க்கரெட் எனும் பெண்ணை பாலியல் சீண்டல் செய்தார் எனும் குற்றச்சாட்டில் தான் எனும் செய்தி வந்தது. இதுவும் இருட்டுப் பானைக்குள் அழுக்குச் சாக்கால் மூடி வைக்கப்பட்டதால் இது குறித்து மேலும் அறிய முடியவில்லை.

சாவர்க்கர் வன்முறை பாதையை திட்டமிட்டிருந்தார், ஆயுதம் சேகரித்தார் என்றெல்லாம் செய்திகள் கசிய விடப்படுகின்றன. ஆனால் சாவர்க்கர் காந்தி கொலையில் மூளையாக செயல்பட்டதைத் தவிர வேறெந்த ஆயுத முன்னெடுப்பிலும் அவர் இறங்கவில்லை.

தற்போது கன்னட மொழிப்பாட திட்டத்தில் பறவையில் ஏறிப் பறந்தார் எனும் குறிப்பு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கேட்டால், அது உவமை தான். அதை அப்படியே எடுத்துக் கொண்டு அரசியல் செய்யக் கூடாது என்கிறார்கள். சாவர்க்கர் உண்மையா? உவமையா? இந்த மயக்கத்தை ஏற்படுத்துவது தான் பாஜகவின் திட்டம். காந்தி மரணமடைந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? குஜராத் பாடதிட்டத்தில் காந்தி இறந்த நாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதோடு இணைத்துப் பார்க்கும் போது தான், அது உண்மையல்ல உவமை என்று விளக்கமளிப்பதின் பின்னுள்ள நரித்தனம் புரியும்.

சாவர்க்கர் யார்? இந்தியாவின் சுதந்திரம் என்று சொல்லப்படும் ஒன்றுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? கொண்டாடப்படும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார்? என்று நேரடியாக கூற முடியாத இவர்கள் தான் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உச்சத்தில் இருக்கும் இன்று கூட எளிதாக அவர்களால் புனைவை வரலாறாக்க முற்படுகிறார்கள் என்றால் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், உபனிடதங்கள், ஆகமங்கள், ஆவக்காய், அவரைப் பொறியல் என எல்லாவற்றிலும் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்திருப்பார்கள் என சிந்திக்க முடிகிறதா?

அதாகப்பட்டது, “மாடு பேண்டத மடையன் தாம்லே நக்கிப் பாத்து தெரிஞ்சுக்குவான்” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்