நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2

‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி.

முதல் பகுதியைப் படிக்க

கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற  உண்மையான அதிகாரப் பகிர்வு  என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் பேசிய பேச்சுக்களையும் உதாரணமாகச் சொன்னீர்கள்.

2014ல் அவர் முதன்முதலில் இந்தியாவின் பிரதமரானபோது கூட்டுறவு கூட்டாட்சி பற்றி பேசினார். சில நாட்களுக்கு முன்பு சுதந்திர தினத்தன்று போட்டிக் கூட்டாட்சி பற்றி பேசினார். இந்த விதிமுறைகளை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? அல்லது உங்கள் பார்வையில் அவை வெறும் வாய்வார்த்தைக்காக பேசப்படும் சொல்லாடல்களா?

ப.தியாகராஜன்: அவை வெறும் சொல்லாடல்களல்ல, தவறான சொல்லாட்சி என்று நான் நினைக்கிறேன். செயல்களும் வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மாறாக இருக்கும் போது ​​அது, ஒரு கட்டுக்கதை அல்லது தவறான கருத்தை உருவாக்குவதன் மூலம் யதார்த்தத்தைத் தகர்க்கும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்.  மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உங்களுக்குத் தெரியும். ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து, மாநில பட்டியலுக்கு உட்பட்டவை தொடர்பான சட்டங்களை நினைவேற்றுவது வரை, கல்விக் கொள்கை மற்றும் மாநிலத்தின் பட்டியலிலுள்ள கொள்கைகளை இயற்றுவது வரை இவை அனைத்தும் அதிகாரப் பகிர்வு என்ற கருத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படுமானால்,  மாநிலங்களின் ஒத்துழைப்புக்காக ஏன் ஒன்றியம் சட்டம் இயற்ற வேண்டும்? விவசாயம் மாநிலப் பட்டியலின் அதிகாரத்தில் உள்ளதென்றால், எதற்கு 3 முக்கிய வேளாண் மசோதாக்கள்? அணைகள், துறைமுகங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ளதென்றால், அவற்றையும் ஏன் ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்? ஆனால் அவர்கள் வார்த்தைகளும் செயல்களும் வேறுபட்டு உள்ளன. ஜனநாயகத்தில் இது நிலையானதாக இருக்காது. சொற்கள் செயல்களிலிருந்து வேறுபட்டது ஏன் என்று யாரும் கேள்வி எழுப்புவாதக் தெரியவில்லை.

கரண் தாப்பர்: தற்போது நீங்கள் பேசியவற்றிலிருந்து  உங்களுக்கு அதிக அக்கறை கொண்ட மூன்று முக்கிய முன்னெடுப்புகள் குறித்து ஒன்றன் பின் ஒன்றாக கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தி பயில்வதை ஊக்குவிக்க,  இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற இந்த அரசாங்கம் நுட்பமான முயற்சி எடுத்து வருவதாகவும் (Hindi Belt) இந்தி பேசும் மாநிலங்களின் முதன்மையை உயர்த்தும் முயற்சியே இதற்குப் பின்னால் உள்ளது என்று பலர் நம்புகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக நடக்கும் இந்த முன்னேற்றங்களைக் குறித்து நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

ப.தியாகராஜன்: மீண்டும், பழமொழி சொல்வது போல் சூரியனுக்குக் கீழே இது ஒன்றும் புதிதல்ல. இது குறைந்தபட்சம் மூன்றாவது அல்லது நான்காவது முறையாக நடத்தப்படும் முயற்சியாகும். டெல்லியில் தற்போதைய ஆட்சியில் இது ஏதோ ஒரு பெரிய கண்டுபிடிப்பு அல்லது ஒரு சிறந்த மேதமை முயற்சி அல்ல. இதன் முதல் அலை 1930 களில் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஏற்பட்டது. பெரிய அளவிலான இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இது 1960களில்  கலவரங்கள் மற்றும் உயிர் இழப்புகளோடு மீண்டும் ஒரு பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது, ஒவ்வொரு முறையும் நீங்கள் மொழி மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ மக்களுக்கு நெருக்கடி நிலை உருவாக்க முயற்சிக்கும் போதும், ​​குறிப்பாக சுய மரியாதை மற்றும் சுய அடையாளத்தைக் கொண்ட அனைவரிடமிருந்தும் நீங்கள் அதற்கான எதிர்பையும் விடாமுயற்சியும் காணப் போகிறீர்கள்.

நீங்கள் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நமது கலாச்சாரத்தை நோக்கினால், மொழி என்பது நமது கலாச்சாரத்தின் முக்கிய கருப் பொருளாகும். மேற்கண்ட வகையான வழிகளைப் பயன்படுத்தி எங்கள் மொழியை நீர்த்துப் போகச் செய்ய முயற்சித்தால், நீங்கள் பின்வாங்கப் போகிறீர்கள். பேரறிஞர் அண்ணா இது குறித்து என்ன கேள்வி எழுப்பினாரோ அதையே நானும் கேட்கிறேன். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கொள்கையாக இரு மொழிக் கொள்கை இருந்தால், தானாகவே தாய் மொழியே முதல் மொழி.

சுதந்திரத்திற்குப் பிறகு, நம் நாடு பல மொழிகளின் அடிப்படையில் பல வேறுபாடுகளால் செதுக்கப்பட்டதை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம், அந்த நேரத்தில், தனிப்பட்ட உ.பி., தனிப்பட்ட ராஜஸ்தான், தனிப்பட்ட பீகார், தனிப்பட்ட மத்தியப் பிரதேசம் என செதுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த மொழிகளைக்  [இந்த மாநிலங்களிலெல்லாம் அந்நேரத்தில் வேறுபல மொழிகளும், அம்மொழிகளை தாய்மொழியாக கொண்டிருந்த மக்களும் இருந்து கொண்டிருந்தனர். (மொ-ர்)] கொண்டிருந்தனர். பிறகே (Hindi Belt) அவை இந்தி பேசும் மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. அவர்கள் தங்கள் சொந்த மொழிகளைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியின் திணிப்பு தான் அடிப்படையில் இந்த எல்லா மொழிகளையும் அடக்கி அழித்தது. எப்பொழுதெல்லாம் மொழிகளைக் கொண்டுவந்து திணிக்கிறார்களோ, அப்போதெல்லாம் சிக்கல்கள் ஏற்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன.

எனவே அறிஞர் அண்ணா சொன்னது என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள். அதே இணைப்பு மொழி அனைத்து மாநிலங்களையும் இணைக்கிறது. அதே இணைப்பு மொழி உலகத்தின் மற்ற பகுதிகளுடனும் நம்மை இணைக்கிறது. இது மிகவும் புத்திசாலித்தனமானது என்று நாங்கள் கருதுகிறோம், இதையே நாங்கள் தமிழ்நாட்டில் பின்பற்றுகிறோம். ஆனால் நீங்கள்  இந்தி மொழி வேண்டும்  மும் மொழி கொள்கை வேண்டும் என்று சொன்னால், இந்த மும்மொழிக் கொள்கைக்கு உண்மையில் என்ன பொருள் என்று ஒரு கேள்வி எழுகிறது?

இந்தி பேசும் மாநிலங்களில் இருப்பவர்கள் இரு மொழிக் கொள்கையைக் கொண்டிருக்க முடியாது என்று பொருள். மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் திறன் அவர்களிடம் இல்லை. மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் அனைவருக்கும் இந்தி என்ற ஒரே மொழிக் கொள்கை தான் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழையும், உலகத்துடன் இணைவதற்கு ஆங்கிலத்தையும், ஒரு மொழிக் கொள்கையை உடைய பேரினவாதிகளுடன் இணைவதற்கு இந்தி மொழியையும் கற்க வேண்டும். ஏனென்றால், அப்படித்தான் நாம் அவர்களுடன் இணைய இயலும். நாட்டின் வளர்ந்த பகுதிக்கு மும் மொழிக் கொள்கையும், வளராத பகுதிக்கு ஒரு மொழிக் கொள்கையும் இருக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் எப்படி நியாயம்? இது எப்படி சரியானதாகும்? எனவே நாங்கள் இரு மொழிக் கொள்கையையே பின்பற்றிக் கொள்கிறோம்.  மும்மொழிக் கொள்கை அல்லது இந்தி திணிப்பை முற்றிலும் எதிர்க்கிறோம்.

மக்கள் தாமாக முன்வந்து எந்த மொழியையும் கற்க விரும்பினாலும், அவர்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் நீங்கள் அதை ஒரு கொள்கையாக திணிக்க முற்பட்டால் நாங்கள் அதை வலுவாக எதிர்க்கிறோம்.

கரண் தாப்பர்: மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த இரண்டாவது முன்னேற்றம் உங்களது கவனத்திற்குறியது எனக் கருதுகிறேன். பாஜக தலைவர் திரு ஜே.பி.நட்டா (J.P Nadda), பிராந்தியக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதே தனது கட்சியின் லட்சியம் என்றும் அதன் மூலம் மத்தியில் ஆட்சி செய்யும் அதே கட்சி மாநிலங்களிலும் ஆட்சி செய்வதை உறுதி செய்யவேண்டுமென பகிரங்கமாகத் தெரிவித்தார். நாட்டில் ஒரே கட்சியை திறம்பட உருவாக்கும் இந்த முயற்சிக்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

ப.தியாகராஜன்: திரு நட்டா கட்சியின் சார்பாக அவர்களது உண்மையான நோக்கங்களையும் லட்சியங்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா எவ்வாறு இருந்தது என்பதையும், ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களைத் தவிர அனைத்துக் மாநிலங்களும் காங்கிரஸ் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள யாராவது வரலாற்றுப் புத்தகத்தை நட்டாவுக்குக் கொடுக்கலாம். எமர்ஜென்சியின் போது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற திருமதி காந்தி இதைச் செய்ய வேண்டியிருந்தது. எனவே திரு நட்டா கூறிய இந்த கருத்து பாஜக என்பது தேர்தல் மற்றும் அதிகார லட்சியங்களுக்காக மட்டுமே இயக்கப்படும் ஒரு கட்சி என்பதை அம்பலப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

அவர்களுக்கு அதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை, ஏனென்றால் அவர்கள் சொல்ல விரும்புவது, சுதந்திரமான சிந்தனையை விரும்பும், தனி அடையாளத்தை விரும்பும் எவருக்கும் இங்கு மதிப்பில்லை என்பதைத் தான். இந்த நாட்டின் அளவைப் பாருங்கள். தமிழ்நாட்டில் சுமார் 80 மில்லியன் மக்கள் உள்ளனர், அது தனி நாடாக இருந்தால் உலகின் 19 வது பெரிய நாடாக இருக்கும். உ.பி யில் சுமார் 200 மில்லியன் மக்கள் உள்ளனர், அது உலகின் 4 வது பெரிய நாடாகியிருக்கும். ஏன் மாநிலங்களை ஆட்சி செய்ய ஒரே கட்சி இருக்க வேண்டும்? ஒன்றிய ஆட்சியை சிறப்பாகச் செய்ய முடியாத நிலையில், அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்ய ஒரே கட்சி ஏன் இருக்க வேண்டும்? பாஜக என்றால் முரண்பாடுகள் மட்டுமே. கோவா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை. ஆனால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் மாட்டிறைச்சி கொண்டு சென்றால் நீங்கள் கொல்லப்படலாம். அதாவது, அடிப்படை மதிப்பு இல்லாத, அடிப்படை நம்பிக்கைகள் இல்லாத ஒரு கட்சி உங்களது கட்சி. மேலும் சுய அதிகாரத்திற்கான ஒரு வாகனம் போன்று மட்டுமே இருக்கும் கட்சி. இந்த கட்சி உண்மையில் எதற்காக செயல்படுகிறது என்பதை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளட்டும். அது மதிப்புகளுக்காக அல்ல, தேசியத்திற்காக அல்ல, மாறாக கட்சியைச் சார்ந்துள்ள மக்களின் தனிப்பட்ட லட்சியத்திற்காக மட்டுமே செயல்படுகிறது என்பதை தெளிவாக புரியவைக்கிறது திரு.நட்டா வின் பேச்சு.

கரண் தாப்பர்: இப்போது நான் குறிப்பிடும் மூன்றாவது முன்னேற்றமானது உங்களுக்கு கவலையளிக்கும் ஒரு காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 2026-ல் நடக்க இருக்கும் மக்களவை தொகுதிகளின் மறுசீரமைப்பு பற்றி பேசுகிறேன். தமிழ்நாடு அதன் 39 இடங்களில் 11 இடங்களை இழக்க நேரிடும், அதாவது கிட்டத்தட்ட 30%. கேரளா தனது 26 இடங்களில் 6 இடங்களை இழக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தி இந்து நாளிதழ் கணக்கிட்டுள்ளது. இந்த வாய்ப்புகள் குறித்து நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இது உண்மையான பயமா?

ப.தியாகராஜன்: இந்த நாட்டில் ஏதோ ஆழமான தவறு உள்ளது. அதுவும் நீண்ட காலமாக உள்ளது.  நான் உங்களுக்கு இரு பக்கங்களையும் தருகிறேன். ஒருபுறம், வளமையான மாநிலங்கள் தங்கள் பணத்தை மையத்திற்கு மேலும் மேலும் ஏழை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுப்பது ஒப்பீட்டளவில் நல்லது. மற்ற கூட்டாட்சி சமூகத்தைப் போலல்லாமல், அது இடைவெளியைப் பொருட்படுத்தாது. மேலும் நிகர பரிமாற்றங்கள் நன்றாக இருந்தாலும் ஏழை மற்றும் பணக்கார மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சரியாகச் சொன்னால் அது அதிகரிக்கவில்லை, மாறாக, அது துரிதப்பட்டு வருகிறது என்றே கூறலாம். கட்டமைப்பு ரீதியாக ஏதோ தவறு உள்ளது. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற நிலை இருக்கிறது, சில மாநிலங்களில் ஒன்றரை மில்லியன் மக்களுக்கு ஒரு எம்.பி மற்ற சில மாநிலங்களில் 2 மில்லியன் மக்களுக்கு ஒரு எம்.பி என்ற நிலை உள்ளது என்பது தெளிவாகிறது. இது சரியான ஜனநாயகம் அல்ல. அதனால் மாநிலங்கள் நிர்வகிக்கப்படும் விதத்தில் ஏதோ ஆழமான தவறு உள்ளது. குறிப்பாக நாட்டின் ஏழ்மையான மாநிலமான இந்தி பேசும் மாநிலங்கள் அதிக மக்கள்தொகை கொண்டதாக இருக்கின்றன எனும் உண்மையை எடுத்துக் கொண்டால், அதற்கு நேர் எதிராக வளமான மாநிலங்கள் சராசரியாக ஒரு சதுர மீட்டருக்கு ஒரு தனிநபர் என்ற மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருக்கின்றன, மேலும் மிகக் குறைந்த மொத்த கருவுறுதல் வரம்பையும் கொண்டுள்ளன.

வேறு எந்த கூட்டாட்சி சமூகத்திலும் இதை நீங்கள் எங்கும் காண முடியாது வாழ்க்கைத் தரம் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மிகப்பெரிய பொருளாதார வளம்மிக்க பகுதிகளிலும் அதிக மக்கள் தொகை இருப்பதை உறுதி செய்கிறது. இது இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சனை, இது தொகுதிகளின் மறுசீரமைப்பால் தீர்க்கப்படப் போவதில்லை. இது நம்மிடம் உள்ள ஒரு கட்டமைப்பு சிக்கலின் வெளிப்பாடு மட்டுமே மற்றும் கூட்டாட்சி ஒன்றியத்தின் பொறுப்பான தலைமை உண்மையில் தொகுதிகளின் மறுசீரமைப்பு செய்வதை விட மிகவும் ஆழமாக இந்தப் பிரச்சனைகளை பற்றி யோசித்திருக்க வேண்டும். பிரச்சனைகளை நாம் எப்படி வெல்வது? நாம் அனைவரும் முன்னேற வேண்டாமா? நாட்டில் சிலர் மேலும் மேலும் மேலும் பின்தங்குவது எப்படி நியாயம்? இதில் ஆழமான தவறு இருக்கிறது அல்லவா? தேசியத் தலைவர்கள் இதில்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதிகாரப் பறிப்பு மற்றும் கட்சிசார் எழுச்சி ஆகியவற்றில் அல்ல

கரண் தாப்பர்: இந்த 3 முன்னேற்றங்கள் அதாவது, இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் முயற்சி, நட்டாவின் கருத்து  கட்சிகளுக்கு அச்சுறுத்தல், மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகிய இந்த 3 வளர்ச்சிகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா?

ப.தியாகராஜன்: இந்த மூன்றும் ஒரு ஆழமான பிரச்சனையின் அறிகுறிகள், விளைவுகள் அல்லது எடுத்துகாட்டுகள். ஆழமான பிரச்சனை என்னவென்றால், நாடு சமமாக வளர்ச்சி அடைகிறதா? நாட்டின் சில பகுதிகளில் ஆட்சி சிறப்பாகவும்,  பொருளாதார ரீதியாகவும் முன்னேறி வருகின்றன ஆனால் நாட்டின் பிற பகுதிகள் பொருளாதார கொடுப்பனவுகளில் முன்னேறி வருகின்றன, என்றாலும் சமூக நீதி இல்லாமல் இருக்கிறது. குஜராத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.  எனது விருப்பப்படி, தேசிய தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறேன். ஆனால் எங்களுடையது 3 லட்சத்தில் ஒரு நபருக்கு 5 அல்லது 8 ஆயிரம் குறைவு. 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு பெறுகிறார்கள், ஆனால் குஜராத்தில் 60 சதவீதம் மட்டுமே பெறுகின்றனர். எங்களிடம் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். குஜராத்தில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் தான்.  இது நியாயமான, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் வேண்டும் என்பதற்காக.

ஆனால் இவை கூட குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே உள்ள நுணுக்க வேறுபாடுகள் மட்டுமே. குஜராத் மற்றும் தமிழகத்தின் வேறுபாடுகளை ஒரு அளவிலும் (bucket) பீகார் மற்றும் உ.பி வேறுபாடுகளை  (bucket) அதே போன்ற அளவிலும் ஒப்பிடும்போது, ஏதோ கட்டமைப்பு தவறு உள்ளது. நாட்டின் சில பகுதிகள் பின்தங்கியுள்ளன.

கோடிக்கணக்கான மக்கள் வளர்ச்சி பெறவில்லை. இது சரி செய்யப்பட வேண்டும். இந்த மூன்று வளர்ச்சிகளும் இந்த நாட்டின் ஆழமான பிரச்சனையின் விளைவுகளாகும். அந்த பிரச்சனையை சரிசெய்வதே பொருத்தமானதாகும்.

கரண் தாப்பர்: ஆழமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஒரு நாட்டை உடைக்கும். சாத்தியக் கூறுகளால் கூட அந்த ஆபத்து வருமா?

ப.தியாகராஜன்: சரி அனைத்தும் சாத்தியம் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றே வைத்துக்கொள்வோம். 140 அல்லது 180 கோடி மக்கட்தொகை கொண்ட, ஆனால், வரலாறு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றால் வேறுபட்ட ஒரு நாட்டைச் இவ்வளவு காலம் ஒன்றாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணமே அதிசயமானது தான். இன்று இந்தியா ஒரு அதிசயம். ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாறு, வேற்றுமைகள் கொண்ட உணவு, மொழி, என அனைத்தையும் ஒருங்கிணைத்து, 75 ஆண்டுகளில் ஒரு நிர்வாக ஒற்றுமையை உருவாக்கியது நமது ஜனநாயகத்தின் வெற்றியாக உள்ளது. இது போன்ற ஒரு வரலாறு உலகில் எங்குமே இல்லை. இந்தியா ஒரு அதிசயம். அந்த அதிசயம் இனி ஒரு அதிசயமாக இருக்காது என்ற அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் உண்மையில் இந்த நாட்டை புதியதாக மாற்ற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக அதற்கான பலவகையான வேலைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் இந்த அதிசயம் தொடர்ந்து இருக்காதோ என்ற பயத்தில் ஏற்கனவே நாங்கள் இருக்கிறோம்.

கரண் தாப்பர்: உங்கள் பதில் தெளிவாக இருக்கிறது. இந்தியா  அதிசயம். ஆனால் இந்த அதிசயம் எல்லா நேரத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் இந்திய அதிசயம் நீடிக்காமல் போகலாம் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். இந்த நேர்காணலின் முடிவிற்கு வருகிறேன். ஜிஎஸ்டி பற்றி கேட்கிறேன். இது நாட்டின் கட்டமைப்பை மாற்றியிருக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாநில உறவை மாற்றியிருக்க வேண்டும், அவ்வாறு நிகழவில்லை. இதில் என்ன தவறு நடந்தது? அது தவறாகச் உருவாக்கப்பட்டதா? அல்லது மோசமாக செயல்படுத்தப்படுகிறதா?

ப.தியாகராஜன்: மேலே உள்ள அனைத்தும் என்பதே இதற்கான பதில். நான் ஒரு நிபுணராக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். நான் அரசியல்வாதியாக பேசவில்ல. பிஜேபியாக இருந்தாலும் சரி, காங்கிரசாகக இருந்தாலும் சரி GST என்ற கருத்து தொடங்கிய நிமிடத்திலிருந்தே, முந்தைய நாட்களிலிருந்தே அது சரியாக உருவாகவில்லை. இது மிகவும் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டது, மிகவும் மிகவும் மோசமாகச் செய்ல்படுத்தப்படுகிறது என்ற முன்னாள் குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி அவர்களின் கருத்தையே மீண்டும் நான் எதிரொலிக்கிறேன். கருத்தாக்கத்திலேயே நிறைய குறைபாடுகள் உள்ளன. அதன் வடிவமைப்பிலிருந்து, அது தொடங்க வேண்டிய இடம் மற்றும் வரம்பு, செயல்படுத்துவது ஆகியவை இன்னும் மோசமாக இருந்தது. அது ஒரே இரவில் அவசர கதியில் அமுல்படுத்தப்பட்டு, 6 அல்லது 8 மாதங்களில் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. GST மன்ற உறுப்பினராகவும், அமைச்சர்களின் பல துணைக் குழுக்களின் உறுப்பினராகவும் இப்போது எனக்கு இருக்கும் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் இதற்காக செலுத்த வேண்டிய கவனத்தின் அளவு, முயற்சி, மூளையின் பயன்பாடே மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த அமைப்பை சரிசெய்ய வேண்டிய முக்கிய தேவை இருப்பது போல் நாங்கள் செயல்பட இயலவில்லை. அனைவருக்கும் வேறு பொறுப்புகளும் இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு அமைச்சர் அல்லது மற்ற பொறுப்புகள் உடையவராக இருக்கிறார். நிதிச் செயலர் அல்லது வணிக வரிச் செயலர் போன்றோர் உள்ளனர். கருத்தில் சரியற்ற, கருத்தாக்கத்தில் சரியற்ற, வடிவமைப்பில் மோசமான மற்றும் செயல்படுத்துவதில் மோசமான இதை மேம்படுத்துவதற்கு போதுமான ஆற்றலை நாங்கள் செயல்படுத்தவில்லை. உண்மையான செயல்படுத்துதலில் கூடுதல் மோசமாக இருந்தது என்று நான் கவலை கொள்கிறேன். ஏனெனில் அது சரிசெய்யக்கூடியது. ஆனால் இன்றே அதை சரிசெய்ய முடியாது. பழைய அனைத்தையும் இன்றே சரிசெய்வது இயலாத காரியம். ஆனால் நமது வேகம் அல்லது கவனம் அல்லது மூளையின் பயன்பாட்டின் விடாமுயற்சியால் சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறேன்

கரண் தாப்பர்: இன்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உண்மையில் கவலை அளிக்கிறது. எங்களிடம் நேரம் இல்லை. பிரச்சனை சரிசெய்யக்கூடியது. ஆனால், நமக்கு நேரமோ, மனப்பங்கோ யாருக்கும் இல்லாததால், அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?

ப.தியாகராஜன்: நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வி கேட்கிறேன். ஜிஎஸ்டி வடிவமைப்பு கவுன்சிலின் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டம் நடந்தப்பட வேண்டும். சபை இதுவரை சில ஆண்டுகளில் 47 முறை கூடியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2 அல்லது 3 சந்திப்புகளை நீக்கிவிட்டாலும். மற்ற கூட்டங்களுக்கு என்ன நடந்தது? நூற்றுக்கும் அதிகமான சிக்கல்களையும் ஆயிரத்திற்கும் அதிகமான மேப்பாடுகளையும் செய்திருக்கலாம். நம்மிடம் திறமையான தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், வரி நிபுணர்கள், என 100 பேர் இருந்தால், அத்தகைய 100 பேர் தினமும் வேலை செய்தால் போதும். தற்போதுள்ள அமைப்பை மேம்படுத்தலாம். அத்தகைய முனைப்புள்ள நபர்கள் நம்மிடம் இல்லை.

கரண் தாப்பர்: இந்த நேரத்தில் நான் மற்றொரு பிரச்சினைக்கு வருகிறேன், இது நாட்டில் பலருக்கு கவலையாகி வருகிறது, இது இந்தியாவின் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆவேசம்/ வெறுப்பு அரசியல் என்று அழைக்கப்படுவது பற்றியது. நீங்கள் சென்னையில் இருந்து இவற்றைப் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இது வட இந்திய நிலமையா? குறிப்பாக நாடு சுதந்திரம் அடைந்த போது பாக்கிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் உள்ள மக்கள் மத்தியில் உள்ளதா? பாக்கிஸ்தான் வெறுப்பு அரசியல் என்றால் முழு நாடும் ஒரே நிலையைப் பகிர்ந்து கொள்வதாகக் கருதுகிறீர்களா?

ப.தியாகராஜன்: புவியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்தியாவின் தீபகற்பத்தின் தெற்குப் பகுதி 1000 ஆண்களுக்கு பின்னுள்ள கண்ணோட்டத்திலிருந்து படையெடுப்புகள் மற்றும் ஊடுருவல்களுக்கு அப்பாற்பட்டது என்பதால் இதைக் குறித்துச்  சொல்வது எனக்கு கடினமாக உள்ளது. நீங்கள் கூறிப்பிட்டது போல 1962 போரைப் பொறுத்தவரை, பேரறிஞர் அண்ணா மிகப் பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். 1971-ம் ஆண்டு நடந்த போரிலும் கூட தமிழ்நாட்டின் நிலைப்பாடு அத்தகையதே.  கார்கில் போரின்போதும், தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் நிதி மத்திய அரசுக்கு வழங்கினோம். மத்திய அரசு வசூலித்த மொத்தத் தொகையில் 25% தமிழ்நாட்டிலிருந்து அளித்தோம்.

எனவே நாங்கள் வெகு தொலைவில் உள்ளோம் என்பதால் நாங்கள் இதை உணரவில்லை என்று நான் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரையும் போல தேசப் பற்று கொண்டவர்கள் தான். பிரச்சனை பாகிஸ்தானிலும் உள்ளது. இந்தியாவிலும் உள்ளது. சில தசாப்தங்களாக மக்களுக்கு (ரொட்டி கப்டா அவுர் மக்கான்) உணவு உடை உறைவிடம் வழங்க முடியாத அரசியல்வாதிகள் தான் இரு நாடுகளுக்கு இடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியவர்கள். பாகிஸ்தான் இந்தியாவைப் அச்சுறுத்துகிறது அல்லது இந்தியா பாகிஸ்தானைப் அச்சுறுத்துகிறது என்பது தவறாக இருக்கலாம். இந்தியா மீது படையெடுப்பதில் அல்லது அணு ஆயுதப் போரில் ஈடுபடுவதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை அல்லது இந்தியா அதே போன்ற ஆர்வம் கொள்ளவில்லை என்பதே அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தான் இதுபோன்ற வெறுப்பு அரசியல் மற்றும் அச்சுறுத்தல்கள் வளர்ந்ததுள்ளன என்பதை நான் உணர்கிறேன். எனவே சிறந்த கல்வி, சிறந்த அணிதிரட்டல் மேலும் சிறந்த சர்வதேச ஒருங்கிணைப்பு ஆகியவையே இந்த அதீத/தீவிர தேசபக்தி மற்றும் அச்சுறுத்தல்களையும் குறைக்க உதவும் என்று நம்புகிறேன்.

கரண் தாப்பர்: இந்த நேர்காணலின் முடிவில்,  நாம் ஏற்கனவே விவாதித்த போக்குகளை மனதில் கொண்டு உங்கள் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் நீங்கள் பார்கிறவாறு வேண்டுமென்றே இக்கேள்விகளை மீண்டும்  கேட்கிறேன்.

இந்தி திணிப்பு, மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் லட்சியம், மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற அச்சம் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற சில மாநிலங்களுக்கு பாதகமாக இருக்கலாம். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும்  அச்சம், கவலைகள் என்னவென்று சொல்லுங்கள்?

ப.தியாகராஜன்: நான் ஒரு நம்பிக்கையாளன். நான் உலகத்தை போதுமான அளவு பார்த்திருக்கிறேன். நான் பரவலாக பயணம் செய்து, பல பல தொழில்கள் புரிந்து பல இடங்களில் வசிக்கும் வாய்புகளைப் பெற்றிருந்தேன்.  ஒவ்வொரு நாளின் முடிவிலும், நான் நம்புவது இந்த மனித இயல்பு என்றால்,  இயல்பாகவே அனைவரும் நல்ல மனிதர்களாக இருப்பதையே  நாம் வேண்டுகிறோம். நாம் இயல்பாகவே நல்ல சமுதாயத்தில் வாழ விரும்புகிறோம். நம் குழந்தைகள் அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று  விரும்புகிறோம்.

மனித உறவுகளில் இருந்து வெளிவரும் தோழமை என்பதே என் மனதின் மையத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்  பொது சேவைக்கு வந்தேன். அந்த நம்பிக்கை நீடிக்கிறது. நிச்சயமாக பல அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனால் உலக வரலாற்றில்  அரசியல் ரீதியான, இராணுவ ரீதியான மோதல்களை சந்தைகளில் பார்க்கிறீர்கள் என்றால் .. .. .. இது போன்ற பிறழ்வுகள் நீண்ட காலம் நீடிக்காது. சிலர் மிக வேகமாக, வெற்றி பெறக்கூடும். அவர்கள் தாங்களை கடவுள் என்று நம்பத் தொடங்குகிறார்கள். அனைத்திற்கும் வீழ்ச்சி உள்ளது. சந்தைகள் பகுத்தறிவுக்கும், தர்க்கத்திற்கும் முற்றிலும் மதிப்பளிக்கின்றன. எனவே அதற்கு ஒரு பெரிய வீழ்ச்சி உள்ளது, சரிவு உள்ளது. ஹிட்லரைப் போன்றவர்கள் அதிகாரப் போக்கைத் தேர்ந்தெடுத்து போர் வெறியில் அனைத்து ஐரோப்பாவையும் ஆள முடியும் என்று நினைக்கத் தொடங்கினர். பின்னர் அது மோசமான சரிவை அடைந்தது. எனவே, மக்களின் இயல்பில் நாம் சமநிலையை நிலைநாட்ட பாடுபடுவோம், மகிழ்ச்சியுடன் இணைந்து வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிப்போம் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நான் மனித இயல்பை நம்புகிறேன். நாம் தமிழ்நாட்டின் குடிமக்களானாலும், குஜராத் வங்காளத்தின் குடிமக்களாக இருந்தாலும், அனைவரும் ஒரே மாதிரியான மனித விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன்.

கரண் தாப்பர்: நான் சற்று குறுக்கிடலாமா?

ப.தியாகராஜன்: தயவுசெய்து என்னை தொடர்ந்து பேச அனுமதியுங்கள். நான் தவறாக இருக்கலாம் அல்லது நான் சரியாக இருக்கலாம். ஆனால், கொள்கைகள், அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் எனது முதலமைச்சரால் எனக்கு ஒப்படைக்கப்பட்ட  நிதித்துறை ஆகியவற்றில் என்னால் முடிந்தவரை வாழ்க்கையில் பின்பற்றும் இந்த அணுகுமுறையின் உணர்வை வளர்ப்பதே எனது சக்திக்கு உட்பட்டது. மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இவை அனைத்தையும் அளவுகடந்த நம்பிக்கை என்பீர்கள் என்றாலும் சரி. அதை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். எனவே, எந்த மனிதனையும் விடவும், எந்த ஆற்றலை விடவும் பெரிய ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை அது எனக்கு அளிக்கிறது. எனவே எது நிலைக்க வேண்டுமோ அது நிலைக்கும்.

கரண் தாப்பர்: நேரம் நமக்கு குறைவாக இருப்பதால் விரைவாக கூறுங்கள். இந்தியா மேலும் குழப்பமடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இந்தியா சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் என்று கூறுகிறீர்களா? இரண்டில் எது?

ப.தியாகராஜன்: சவாலை இந்தியா முறியடிக்கும் என்று சொல்கிறேன். எல்லாம் சுழற்சியானது. எதுவும் ஒரு திசை கொண்டது அல்ல. எல்லாம் சுழற்சிக்குள்ளாவதே. திருமதி காந்தி இரு அவைகளிலும்,  2/3 பங்கு பெரும்பான்மை பெற்றிருந்தார். ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மை இருந்ததால் அவசரநிலையை விதித்த காலம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசைத் தவிர வேறு யாரும் இந்த நாட்டை நிர்வகிக்கவில்லை அல்லது அரசாங்கத்தை நடத்தவில்லை. ஒரு கட்டத்தில்  திருமதி காந்தி தேர்தலில் தோல்வியுற்றார். நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நான் முடிவில் சொல்கிறேன், எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாமே இயற்கையான சுழற்சியைக் கொண்டிருக்கின்றன, மேலும் இந்தியா எல்லாவற்றுக்கும் மேலாக தழைத்து வளரும் என்று நான் நம்புகிறேன். அதனால் தான் நான் ஒரு நம்பிக்கைவாதி. அதனால் தான் பொது வாழ்வில் இருக்கிறேன்.

கரண் தாப்பர். நிறைவு: மிகவும் முக்கியமான கருத்துக்களைப் பகர்ந்ததற்கு நன்றி. நாடு சுதந்திரம் அடைந்த 75 வருடங்களின் நாட்டின் தென் பகுதிப் பார்வையாக, நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். “இந்தியா ஒரு அதிசயம்”.  வரலாற்றில் இதற்கு வேறு எந்த உதாரணமும் இல்லை. இது ஆழமான சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. “அந்த அதிசயம் அச்சுறுத்தலில் உள்ளது”.

தமிழில்: தோழர்.சாரதா.

மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s