நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா

இலவசங்கள் குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி இருந்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா என்பவர் வழக்காக வழிமொழிந்தார். ஒரு நேர்காணலில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவைகளை எள்ளி நகையாடினார். அவ்வளவு தான் மீம்ஸ்கள் பறந்தன. கட்டபொம்மன் வசனத்தோடு ஒப்பிட்டு, “எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா மாமனா மச்சானா” என்று அந்த மீம்ஸ்கள் தமிழ்நாட்டைத் தாண்டியும் தீப்பற்றி எரிந்தன. பொதுவாக நிதியமைச்சர் தியாகராஜன் பேச்சுகள் வட மாநிலங்களில் உற்றுநோக்கப்படுவது வாடிக்கையாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் ‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர் செய்த நேர்காணல் தலையாய இடத்தை கைப்பற்றிக் கொண்டது. மிகவும் பண்பட்ட, செழுமையான, வரலாற்றுத் தொடர்ச்சியுடைய, தரவுகளுடனான நிதியமைச்சரின் அந்த உரையாடல் இங்கே தமிழ்படுத்தப்படுகிறது.

தன்னுடைய தொடர் பணிகளுக்கிடையே இதற்கும் நேரம் ஒதுக்கி தமிழ்படுத்தித் தந்த தோழர். சாரதாவுக்கு சிறப்பு நன்றி.

கரண் தாப்பர்: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்ற இந்த நேரத்தில், 75 ஆண்டு சுதந்திரம் என்பது குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களுக்கு எவ்வாறு இருக்கிறது? தென்னிந்திய மாநிலங்கள் இந்தியாவுக்கு மிக முதன்மையான பகுதிகளாக  இருக்கின்றன. 1962ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு அண்ணாதுரை அவர்கள் தன் முதல் உரையில், ‘எங்கள் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வேண்டும். அதனால் எங்களுக்கு தனித் தமிழ்நாடு வேண்டும்’ என்று கேட்கிறார். பின்னர் சீனாவுடனான போரின் காலத்தில் இந்தக் கோரிக்கை மாற்றிக் கொள்ளப்பட்டது. அண்ணாதுரை பேசி அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தனித்தமிழ்நாடு கோரிக்கை இன்னும் உயிருடன் இருக்கிறதா? தமிழ்நாட்டில் இன்னும் சிலரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா? இதற்கு உங்கள் பதில் என்ன? [சிலரால் எனும் இடத்தில் சிறுபான்மையினரால் என்று வர வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் எனும் சொல் மத சிறுபான்மையினர் என்று பொருள் கொள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிலரால் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.]

ப.தியாகராஜன்: இது மிகவும் ஆழமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமென்றால் திராவிட இயக்கத்தின் ஆணிவேரை நோக்கி நாம் செல்ல வேண்டியதிருக்கும். அதன் ஆணிவேர் என்னவென்றால் தன்மதிப்பு [சுயமரியாதை – Self Respect] முந்திய காலத்தில் மனிதர்களை பல படிநிலைகளாக பிரித்து வைத்திருந்தார்கள். இன்னார் இந்தந்த வேலைகளைச் செய்ய வேண்டும். இன்னார் இந்தந்த வேலைகளை செய்யக் கூடாது என்ற பாகுபாடுகளை மக்களிடையே புகுத்தி வைத்திருந்தார்கள். இந்த படிநிலைகளை உடைத்தெறிய தேவையான கருத்தாகத்தான் தன்மதிப்பு(சுயமரியாதை) என்பது இருக்கிறது. எல்லா மக்களும் சமமானவர்கள் எனும் பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி அதுதான் எங்களின் ஆணிவேராக இருக்கிறது. ஆக, மக்கள் தன்மதிப்போடு(சுயமரியாதையோடு) சிந்திப்பது தான் அதற்கு அடுத்த கட்டமாக விடுதலை உணர்விலான, சுய முயற்சி அடிப்படையிலான, தர்க்கரீதியிலான சிந்தனைக்கு வழிவகுக்கிறது. இது படிப்படியாக கல்வி, பகுத்தறிவு சிந்தனைகள் அதற்கு அடுத்த கட்டமாக தானே முடிவு செய்யும் உரிமை முதலியவை அதனுடைய தொடர்ச்சியாக வருகின்றன. உள்ளூர் சுயாட்சி என்பது [Local self govenance] உலகம் முழுவதும் இருக்கிறது. இது தன்மதிப்பு(சுயமரியாதை) எல்லோரும் சமம் எனும் சமூக நீதியிலிருந்து தான் அது பிறந்தது. இந்த அடிப்படையிலிருந்து தான் அறிஞர் அண்ணா தன் முதல் உரையில் இதைக் குறிப்பிட்டார்.

தற்போது, அறிஞர் அண்ணாவின் தன் முயற்சியிலான, பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையிலான உரிமை என்பதற்கும், இப்போது இருக்கின்ற தேசிய, மையப்படுத்தப்பட்ட, மையப்படுத்துகின்ற முறைமை என்பதற்கும் இடையே ஒருவித பதட்டம் நிலவுகிறது. நாம் வரலாற்றிலிருந்து பார்த்தால், நம்முடைய நிலப்பரப்பை பல மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அசோகர் மிகப்பெரும் நிலப்பரப்பை தன் ஆளுமைக்குள் வைத்திருந்தார். தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால் சோழர்கள் மிகப்பெரும் நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்தார்கள். கிரேக்கர்கள், முகலாயர்கள் போன்ற வெளியிலிருந்து வந்தவர்களும் ஆண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி இந்த நிலைப்பரப்பு பல நாகரீக முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. ஆனால் இப்போது முன்னெப்போதுமே இல்லாத முறையில் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்கிற அழுத்தம், நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அதாவது தனி உரிமை கொண்ட நாடு வேண்டும் என்பதற்கும் தேசியம் வேண்டும் என்பத்ற்கும் இடையில் ஒரு சன்படுத்தும் ஏற்பாடு வேண்டும். அந்த சமன் படுத்தும் போக்கு சீனப் போருக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தது.

குறுக்கீடாக கரண் தாப்பர்: அந்த சுயாட்சி உரிமை தற்போது தமிழ்நாட்டில் அடங்கி விட்டதா? அல்லது இன்னும் கருத்தளவில் அது இருந்து கொண்டிருக்கிறதா?

ப. தியாகராஜன்: மையப்படுத்துகின்ற, காலனிப்படுத்துகின்ற மாதிரியான திணிப்பை எதிர்க்கின்ற தன்மதிப்பிலூடான பகுத்தறிவு தாகம் எங்கள் இரத்தத்திலேயே ஊறிப் போன ஒன்று. எங்களின் இருப்புக்கு இன்றியமையாதது அந்த தாகம் தான். எனவே, சுயாட்சி உரிமை கருத்து தொடர்ந்து இங்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.

கரண் தாப்பர்: அதாவது அன்று அண்ணாதுரை அவர்களின் உரை நேருவால் ஏற்கப்பட்டது. ஆனால், அன்று அண்ணாதுரை பேசியது போல் இன்று யாரேனும் பேசினால் கைது செய்யப்படக் கூடும் எனும் நிலை. இந்த நிலை இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை எவ்வாறு எடுத்துரைக்கிறது என்று கருதுகிறீர்கள்?

ப. தியாகராஜன்: தற்போதைய மாற்றம் பெருமை கொள்வதைக் காட்டிலும் கவலை கொள்ளத்தக்க அளவிலும், எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் மிகவும் இன்றியமையாதது. நாம் சுதந்திரமாக இருக்க போராடுகிறோம். உண்மையில் சுதந்திரம் என்றால் என்ன? கண்டிப்பாக சுதந்திரம் என்பது கருத்து சுதந்திரத்தையும் உள்ளடக்கிய ஒன்று தான். ஆனால் கருத்து சுதந்திரம் என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்று பார்க்கிறோம். உலகை விட்டுவிட்டு இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இங்கு மாற்றுக் கருத்து அது எந்த விதமான மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அது தேசவிரோதமாகவும், நக்சல் என்பதாகவும் முட்டாள்தனமாக முத்திரை குத்தப்படுகிறது. இந்த நிலை ஆரோக்கியமற்றதாக இருப்பதுடன் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இப்படித்தான் இதை பார்க்க வேண்டும். இது அரோக்கியமான முன்னேற்றத்துக்கான, நாட்டின் வளமான எதிர்காலத்துக்கான அறிகுறியாக இது இல்லை.

கரண் தாப்பர்: அப்படியென்றால் 1962ல் அண்ணாதுரைக்கு இருந்த கருத்து சுதந்திரம். அன்று கருத்து சுதந்திரமாகவும் இன்று தேச விரோதமாகவும் பார்க்கப்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி என்றால், இந்தியா முன்னேற்றம் அடையவில்லை, குறுகிய, சகிப்புத்தன்மையற்ற. ஜனநாயக விரோதமாக மாறிவிட்டது என்று கூற வருகிறீர்களா?

ப.தியாகராஜன்: ஆம். நான் இதை முன்னேற்றமாக பார்க்க மாட்டேன், பின்னடைவாகவே பார்க்கிறேன். அதாவது இந்த தேசிய எண்ணம் இருபது ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இந்த நாடு எப்படி செதுக்கப்பட்டது, எப்படி உருவாகியது என்று பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக பல கலாச்சாரங்களையும், பல நாகரீகங்களையும், பல அரசர்களையும் கடந்து தான் வந்திருக்கிறது. இந்த நாடு இன்றைய நிலையை அடைவதற்கு இவ்வளவு கலாச்சாரங்களும், இவ்வளவு நாகரீகங்களும், இந்தனை அரசர்களின் ஆட்சி முறைகளும் தேவைப்பட்டிருக்கிறது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கு மாற்றுக் கருத்துகள் கருத்து சுதந்திரமாக பார்க்கப்பட்டிருக்கிறது. என்றால், இந்தியா இன்னும் முன்னேறி இருக்கிறது என்றால் அந்த கருத்து சுதந்திரம் இன்னும் அதிகரித்துத் தானே இருந்திருக்க வேண்டும். இன்னும் வெளிப்படையான பேச்சுகளும், இன்னும் வெளிப்படையான மாற்றுக் கருத்துகளும் அதிகரித்துத் தானே இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லையே. தேசவிரோதம், தேச விரோதி, நக்சல் என்றெல்லாம் தானே முத்திரை குத்தப்படுகிறது. எனவே, இதை நான் சுதந்திரத்தின் பின்னடைவாகவும், ஜனநாயகத்தின் பின்னடைவாகவும் தான் இன்றைய நிலையை நான் பார்க்கிறேன்.

கரண் தாப்பர்: இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் மாநில அரசுகளுக்கும் ஒன்றிய(மத்திய) அரசுக்கும் இடையில் உள்ள உறவை பார்ப்போம். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். கூட்டாட்சி என்பது நம்முடைய அரசியல் அமைப்பின் முதன்மை அங்கம். கூட்டாட்சி கொள்கையே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை. அப்படிப் பார்க்கும் போது தமிழ்நாட்டிலிருந்து, சென்னையிலிருந்துது, பி.டி.ஆர் என்கிற உங்களுடைய பார்வையிலிருந்து கூட்டாட்சிக் கொள்கையை எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையாக கடைப்பிடித்திருக்கிறீர்கள்?

ப.தியாகராஜன்: அரசியல் அமைப்பில் கூட்டாட்சி எனும் சொல்லை எடுத்துக் கொண்டால், உலகில் உள்ள எந்த நாட்டின் அரசியல் அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் – அது ஏழை நாடாக இருந்தாலும், பணக்கார நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும் சிறிய நாடாக இருந்தாலும் – நம்முடைய நாட்டின் கூட்டாச்சி அரசியல் அமைப்பு என்பது மைய அதிகாரம், தேசிய அதிகாரம் அதிகமாக உள்ள அமைப்பாகத் தான் இருக்கிறது. தீவிர வலதுசாரி அல்லது தீவிர இடதுசாரி நாட்டை எடுத்துக் கொண்டாலும், கம்யூனிச சீனாவாக இருந்தாலும், முதலாளித்துவ அமெரிக்காவாக இருந்தாலும் அவைகளுடனும் கூட ஒப்பிட்டுப் பார்க்கலாம். இது போன்ற நாடுகள் கூட மாநிலங்கள் நகராட்சிகள் பஞ்சாயத்துகள் போன்றவற்றின் உரிமைகள் இந்தியாவில் இருப்பதை விட மிக மிக அதிகமாக இருக்கிறது. நான் அமெரிக்காவில் இருபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். நான் வாழ்ந்த கிராமம் அதற்கான சுய கல்வி வாரியம் கொண்டதாக இருந்தது. அது போல காவல்துறை அதிகாரம் பெற்றதாக இருந்தது. அந்த மாநிலம் மிக அதிக உரிமை பெற்றதாக இருந்தது. வருமான வரி, விறபனை வரிகளை முடிவு செய்வது, பெறுவது, மதுபான சட்டங்கள், தெழில்துறை அனுமதிகள் வழங்குவது போன்றவை அந்த மாநிலத்துக்கே சுயமாக இருந்தது. இதேபோல் சீனாவில் கூட ஷாங்காய் நகர மேயர் கூட காவல் துறை தனி அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். தொழிற்துறை ஏற்புகள் வழங்கும் அதிகாரம் மேயருக்கே இருக்கிறது.

மற்ற அனைத்து நாடுகளையும் பார்க்கும் போது, இந்த சுய உரிமை இந்தியாவில் மட்டுமே குறைவாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் இதுவரை இருந்திராத நாட்டை உருவாக்குகிற ஒரு அரசியல் முயற்சி என்பது அதீத மைய அதிகாரத்துவம் கொண்டதாக இருக்கிறது. இன்னும் மோசமடைந்து கொண்டே வருகிறது. அவசரநில காலகட்டத்தில் இந்திராகாந்தி அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்து அனைத்தையும் தேசியமயப்படுத்தினார். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைப் போன்ற முற்போக்கு மாநிலங்கள் இந்த தேசியமயமாக்கலை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே தான் இருந்தன. இதில் கேலிக் கூத்தான ஒன்று என்னவென்றால், இந்த தேசிய மயமாக்கலை குஜ்ராத் மாநில முதல்வராக இருந்த மோடியும் அதிகம் எதிர்த்தார். இப்போது நான் இந்த தேசியமயமாக்கலை பொதுவெளியில் எந்த தன்மையில் முன்வைக்கிறேனோ அதைவிட அதிகமாக முன்வைத்தவர் மோடி. இந்த மையமாக்கலை நான் மட்டுமோ, தமிழர்கள் மட்டுமோ, திராவிட இயக்கம் மட்டுமோ வலியுறுத்தும் ஒன்றல்ல, அனைத்து மாநிலங்களின் பொதுக் கருத்தாகத் தான் இது இருந்து வந்திருக்கிறது. பலகாலம் இதை வலியுறுத்தி வந்திருக்கின்றன.

தொடரும் .. .. ..

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s