அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

pj altha

 

அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் முனங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடாகவே தெரிகிறது.

முகம்மது அலி ஜின்னா அவர்களால் தொடங்கப்பட்ட முஸ்லீம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லீக் லீக் ஆக மாறுகிறது. காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இயங்கிய வரையில் அரசியல் ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த அந்தக் கட்சி, அவரின் மறைவுக்குப் பிறகு மெல்ல மெல்ல மதவாத ரீதியில் சருக்கி இன்று இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

எண்பதுகளின் தொடக்கத்தில், மதீனாவில் (சவூதி அரேபிய நாட்டின் மதீனா எனும் நகர்) வேதம் பயன்றவர்களைக் கொண்ட இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் மூலம் ஜாக் (ஜாமியத்துல் அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்பதின் சுருக்கம் – மெய்யான குரான் ஹதீஸ் வழியில் நடக்கும் அமைப்பு என்பது பொருள்) எனும் பெயரில் வஹ்ஹாபிய அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு அரசியல் ரீதியாக யதார்த்தத்தில் இஸ்லாமிய மக்களின் பிரச்சனைகள் என்ன? அவைகளை எவ்வாறு தீர்ப்பது? அவைகளுக்காக என்ன வழியில் மக்களைத் திரட்டுவது? போன்ற எந்த முனைப்பும் இன்றி மதவாதத்தில் மூழ்கித் திளைத்த அமைப்பாக இருந்தது. அரசியலற்ற மதத் தூய்மை பேசுகின்ற அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது. ஆனால், அரசியலின்றி ஏதேனும் இருக்க முடியுமா?

வஹ்ஹாபியம் பேசும் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பதே அரசியல் தான். சர்வதேச அரசியல். அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் காலங்களில் சோவியத் யூனியனை வெல்ல அமெரிக்கா கண்டுபிடித்து, கடைப்பிடித்த  அரசியல். வியட்நாமில் வாங்கிய அடியில் அமெரிக்க மக்களே ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடத் தொடங்கி விடுவார்களோ என்ற பயத்தில் நேரடியான இராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து மாற்று யோசனைகளை செயல்படுத்த முயன்றது அமெரிக்கா. அதில் ஓர் உத்தி தான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த செய்யத் குதூப் எனும் எகிப்தியரின் இஸ்லாம் ஓர் அறிவியல் மதம் எனும் சிந்தனை வழியாக ஆப்கானில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தி. இது தான் வளைகுடா நாடுகளின் பொருளாதார பலத்தினாலும், அமெரிக்க ஊடக பலத்தினாலும் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இன்றும் எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ அங்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்கள் இஸ்லாமிய தூய்மைவாதம் பேசி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதே சான்று. இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்க வஹ்ஹாபியக் குழுக்கள் வளர்ந்த அதே காலகட்டத்தில் தான், பார்ப்பனிய பாஜகவும் அரசியல் அதிகாரத்தில் வளர்ந்தது. அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எப்படி அமெரிக்காவுக்கு உதவியதோ அதைப் போலவே இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இது தான் வஹ்ஹாபிய இயக்கங்களின் அரசியல். தெளிவாகச் சொன்னால், தன்னைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான உழைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தன்னை உருவாக்கிய முதலாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் இந்தியக் கூட்டாளிக்கும் உதவும் அரசியல்.

இன்று தமிழகத்தில் இயங்கும் பல வஹ்ஹாபியக் குழுக்களுக்கு தாய் அந்த ஜாக் எனும் அமைப்பு தான். அதிலிருந்து பிரிந்து வந்த பல உடைவுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிஜே என அழைக்கப்படும் பி ஜெய்னுலாப்தீன் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ இஸ்லாமிய இளைஞர்களிடம்  மதத்தூய்மைவாதம் தீயைப் போல் பற்றிக் கொள்வதற்கு பிஜேவின் பேச்சாற்றல் ஒரு முதன்மையான காரணி. அதேநேரம் காயிதே மில்லத் மறைவுக்குப் பிறக்கான அப்துல் சமது, அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அரசியலை முழுமையாக கை கழுவி பிழைப்புவாதத்தில் கரைந்து போக விரக்தியுற்ற இஸ்லாமிய இளைஞர்கள் பீஜேவின் எளிமையான தர்க்கவியல் பேச்சால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். அதேநேரம் வளைகுடாவில் கிடைத்த வேலை வாய்ப்பும் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.

எழுபதுகளின் பிற்பகுதியில் உத்திரப் பிரதேசத்தில் அஹ்மதுல்லா சித்திக் என்பவரால் தொடங்கப்பட்ட சிமி அமைப்பின் தமிழகப் பிரிவு, குணங்குடி ஹனீபாவால் தொடங்கப்பட்ட முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கோவை பாஷாவால் தொடங்கப்பட்ட அல் உம்மா போன்றவை அரசின் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகின. இவற்றில் இருந்தவர்கள் (ஜவாஹிருல்லா, பாக்கர் போன்றோர்) மேற்கூறிய வஹாபிய குழுக்களோடு தங்களை இணைத்துக் கொண்டதும் அரசின் அடக்குமுறை காணாமல் போனது. இவற்றில் சிமியின் தாய்  அமைப்பான ஜாமாதே இஸ்லாம் இ ஹிந்த் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து நிற்கிறது.

அரசியல் கலப்பில்லாத இஸ்லாமிய தூய்மைவாதம் பேசுவதாக கூறப்படும் வஹ்ஹாபிய குழுக்களில் ஏன் பிளவுகள் தோன்றுகின்றன? இவ்வாறான அனைத்து பிரிவுகளுக்கும் கொள்கை(!) ஒன்று தான். இஸ்லாத்தின் சன்னி பிரிவை தான் இவர்கள் அனைவரும் பின்பற்றுகிறார்கள்.  சன்னி பிரிவை பின்பற்றும் நடைமுறைகளில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பின் ஏன் பிளவுகள்?

ஜாக் தொடங்கி இன்று தவ்ஹீத் ஜமாத் வரை ஏற்பட்டுள்ள அத்தனை குழப்பங்களுக்கும் தனி நபர் ஒழுக்கக் கேடு, பொருளாதார பிரச்சனைகள் தான் காரணமாக முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. தேர்தல் அரசியலில் பங்கெடுக்கலாமா கூடாதா என்பதும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது என்றாலும் அது முதன்மையானதில்லை என்பது அவர்களின் நடைமுறையில் வெளிப்பட்டது.

தொடர்ச்சியாக ஏன் இந்த வஹ்ஹாபிய அமைப்புகள் தனி மனித கேடுகளில் சிக்குகின்றன? அதன் வழியாக பிளவைச் சந்திக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாறாக, பிஜே, அல்தாபிகளின் பாலியல் நடவடிக்கைகள், அவர்களின் பைலா விதிகள், பிஜேவா அல்தாபியா யார் சரியானவர்?, அதில் சதி இருக்கிறதா? என்பன போன்ற கவைக்குதவாதவைகளை அலசுவது பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ள உதவாது.

என்பதுகளுக்கு முன்பு வரை தமிழக இஸ்லாமியர்களிடம் மதமும் அதன் கோட்பாடுகளும் முதன்மையாக இருந்ததில்லை. வணக்க வழிபாடுகளும் கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.  வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர அன்றாட ஐவேளைத் தொழுகைகளுக்கு ஒரு வரிசை நிறைந்தாலே அதிசயம் தான். எல்லா மதத்தினருடனும் கலந்து பழகி ஐக்கியமாக உழைக்கும் மக்களாக வாழ்ந்த காலம். வஹ்ஹாபிய குழுக்கள் தான் மதத்தை முதன்மையாக நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருகின்றன. இது தான் அன்றைய ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான அரசியலாக இருந்தது. இந்து மத உணர்வை ஏற்படுத்துவது, இந்து மத விழுமியங்களுக்குள் மக்களைக் கொண்டு வருவது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசங்களுக்கு எவ்வளவு தேவையனதாக இருக்கிறதோ, அதேபோல, அன்று மதக் கோட்பாடுகளில் பிடிப்பற்ற இயங்கியவாதிகளாக கம்யூனிஸ்டுகளை எதிர்க்க  மதப்பிடிப்புள்ள அதை மட்டுமே முதன்மையானதாக கொண்ட ஒரு கூட்டம் தேவைப்பட்டது. அதைத்தான் உலகெங்கும் வஹ்ஹாபிய குழுக்கள் செய்தன.

மதத்தைக் காட்டி மக்களை ஈர்க்கலாம், தக்க வைக்க முடியுமா? உழைக்கும் மக்களுக்கு அன்றாடப் பிரச்சனைகள் தேவைகள் பேரளவில் இருக்கின்றன. இதைப் பற்றி பேசாத, இதை தீர்க்க முயலாத எந்த இயக்கமும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது.  தமிழக வஹ்ஹாபிய குழுக்களின் இருத்தலுக்கு அடிப்படையாகிய பொருளாதார தேவைகளை வழங்குவது வளைகுடா நாடுகளில் இருக்கும் உழைக்கும் மக்களே. அந்த வளைகுடா நாடுகள் முதலாளித்துவ விதிகளுக்கு ஆட்பட்டு நிடாகத் போன்ற சட்டங்கள் மூலம் ஆட்குறைப்பு செய்த போது இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன? மேலும், தங்களைப் பின்பற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகளான விலைவாசி உயர்வு முதல் பார்ப்பன பாசிச தாக்குதல்கள வரை இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன? எதுவுமில்லை, அல்லது ஆழமற்ற மேம்போக்கு நடவடிக்கைகள் மட்டுமே.  ஏனென்றால் அவர்களுக்கு உழைக்கும் மக்களின் அரசியல் தேவையே இல்லை மாறாக ஏகாதிபத்திய அரசியல் மட்டுமே தேவை.

இவைகளைத் தாண்டி அரசியல் என்று அவர்கள் முன் வைத்தது ஒட ஒதுக்கீடு மட்டுமே. அதிலும் முழுமையற்று தனியார்மயம் இடஒதுக்கீட்டை அதன் வேரிலிருந்தே அழுகச் செய்வதை எந்தக் கேள்வியும் எழுப்பாமல், தன்னைப் பின்பற்றோவோருக்கு பயிற்றுவிக்க முயலாமல் மொன்னையான வடிவிலேயே இடஒதுக்கீடு கோரும் போராட்டங்கள் அமைந்தன. இவ்வாறு தங்கள் வாழ்வுக்கான போராட்டமாக இல்லாமல் மதத்தை மட்டுமே முனிலைப்படுத்தும் ஒரு இயக்கத்தில் யாரால் நீடித்திருக்க முடியும்?

ஜாக் கில் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலரே எஞ்சி இருப்பதன் காரணம் என்ன? ஏனென்றால் உழைக்கும் மக்களை ஈர்க்கக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை.  மாறாக ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிரிவினால் பிளவுபடும் இயக்கம் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஏற்படும் பிளவு உழைக்கும் மக்களின் அரசியலற்ற அதன் தன்மையை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி பிளவு பேசு பொருளாக ஆக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள், ஜாக் கில்  எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்றால் இன்றைய பல வஹ்ஹாபிய இயக்கங்களின் செல்வாக்கு ஜாக் கிற்கு கிடைத்திருக்குமா?

ஆம். ஒவ்வொரு முறை ஏற்பட்ட பிளவின் மூலம் மட்டுமே, அதன் வழியேயான எதிரெதிர் போட்டி மனப்பான்மையால் மட்டுமே தமிழகத்தில் வஹ்ஹாபிய இயக்கங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பிஜே என்பவர் மீதான நாயக பிம்பமும் இதற்கு துணை செய்தது. இதனைத் தாண்டி அந்த இயக்கங்களில் எதுவுமில்லை. இதற்கு இன்றைய காலங்களில் புதிய இளைஞர்களை அந்த இயக்கங்கள் ஈர்க்க முடியாமல் திணறுவதையே போதுமான சான்றாக கொள்ளலாம்.

இப்போது ஒரு முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். அல்தாபி, பிஜே, சைபுல்லா ஹாஜா, பாக்கர் இன்னும் பலர் மீது ஏன் பாலியல், கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன? அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று கம்பீரமாக முழங்கும் இவர்களால் ஏன் சமூகத்தில் அப்பழுக்கற்றவர்களாக நல்லவர்களாக இருக்க முடிவதில்லை? சமூகத்தில் நல்லவர்களாக இருப்பதற்கும் நீடிப்பதற்கும் வேதங்களில் ஒன்றுமில்லை என்பதற்கு தேவநாதன்களே (கோவில் கருவறைக்குள்ளேயே பெண்களை மயக்கி கலவியில் ஈடுபட்டவன்) சாட்சி. சமூகம் சீர் கெட்டிருக்கும் போது தனி ஒருவனால் ஒருபோதும் நல்லவனாக இருக்கவோ நீடிக்கவோ முடியாது. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? இப்படி சீர் கெடுவதற்கு யார் எது காரணம்? நேர்மையாக உழைத்து வாழும் மக்கள் எதனால் வீழ்த்தப்படுகிறார்கள்? சமூகம் எந்த அடிப்படையில் இயங்குகிறது? அதை எந்த வழியில் மாற்றுவது என்று சிந்திக்காத யாரும், அவ்வாறு மாற்றுவதற்காக முயற்சிக்காத யாரும் நல்லவர்களாக நீடிக்க முடியாது.

இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஊழலிலும், முறைகேடுகளிலும், ஆணாதிக்கத்திலும் மூழ்கிக் கிடப்பதற்கு இது ஒன்றே காரணம். அவர்களுக்கு சமூகம் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. சமூகத்தின் இயக்கத்தை இயங்கியல் பார்வையோடு அவர்கள் அணுகுவதில்லை. அதனால் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. மதம் ஒரு போதும் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள தூண்டாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாத்துக்குள் நடக்கும் மோதல்களே போதுமான சான்றாகும். இஸ்லாத்தையே தன் பேச்சாலும் விளக்கங்களாலும் தூக்கி நிறுத்தி இருப்பதாக கருத்தப்படும் பிஜே மீது அன்றிலிருந்து இன்று வரை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இவைகளை அவர் எதிர்கொண்ட விதத்தை நேர்மையான மீளாய்வுக்கு உட்படுத்திப் பாருங்கள். மதமும், வேதங்களும் அது கொடுக்கும் நீதி போதனைகளும் மனிதனை நேர்மையானவர்களாக நிலைநாட்டுவதற்கு போதுமானவை அல்ல என்பதை அந்த மீளாய்வு உங்களுக்கு புலப்படுத்தும்.

இஸ்லாமிய இளஞர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும். அது இப்போதைய பிரச்சனை அல்ல. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை பின் தள்ளி வைத்துவிட்டு இருக்கிறார் என்றே கொள்வோம். நீங்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, சக மனிதர்களுக்கு உண்மையானவர்களாக மாற விரும்பினால், முதலில் சக மனிதர்களைப் பாருங்கள். உழைத்தே உடல் வற்றிப் போன அந்த மக்களின் நிலைக்கு காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது என்று சிந்தியுங்கள்.

நம்முடைய அன்றாடப் பிரச்சனைகள் என்ன? விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தொழில்துறை கார்ப்பரேட்டுகளுக்கான இயந்திரங்களாகவும் மக்கள் அதில் சிக்கி பிழியப்படும் கரும்புகள் போலவும் மாற்றப்பட்டு விட்டன. நீர், நிலம், காற்று என சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது. கனிம வளங்கள் வகைதொகையின்றி கொள்ளையிடப்படுகின்றன. இவைகளின் விளைவுகள் தான் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். இவைகளை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்?

நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் நெறிமுறைகளில் இதற்கு தீர்வு இருக்கிறதா என்று சிந்தியுங்கள். இருக்கிறது என்றால் விளக்குங்கள் நாங்களும் உங்களோடு வருகிறோம். இல்லை என்றால் இந்த மக்களையும், சமூகத்தையும், இயற்கையையும் காப்பாற்ற எங்களோடு ஏன் நீங்கள் இணையக் கூடாது?

 

தொடர்புடைய கட்டுரைகள்

சௌதி நிடாகத் சட்டம் புரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

நீங்கள் டி.என்.டி.ஜே வுக்கு பணம் அனுப்பவில்லையா?

1 thoughts on “அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்