மாமேதை ஏங்கல்ஸ்

28 நவம்பர் 2019. இந்த நாளிலிருந்து மாமேதை ஏங்கல்சின் 200வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிசம் குறித்தும், மார்க்சிய ஆசான்கள் குறித்தும் அறிந்து கொள்ள, உலகம் புதிய உத்வேகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட மறைக்க முடியவில்லை. ஆங்காங்கே மார்க்சிய படிப்பு வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ஏங்கல்சின் படைப்புகளில் ஒன்றான ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் (2020 பிறந்த நாளில் முடியும் வண்ணம்) இந்த நூல் பகுதி பகுதியாக வெளியிடப்படும். வாரம் ஒரு பகுதியாக வெளியிடப்படவிருக்கும் இந்நூலை வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் படித்து, உள்வாங்கி, விவாதிக்க வேண்டும் என்பது ஆவல்.

நூல் குறித்து

மனித வரலாற்றில் முதலாளித்துவத்துக்கு முந்திய கட்டத்தை ஆராயும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முழுமையாகக் கையாள முடியும் என்று “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூல் நன்கு நிரூபித்திருக்கிறது. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக- பொருளாதார அமைப்புக்குப் பொருந்துகின்ற வளர்ச்சி விதிகள் பண்டைய சமூகத்துக்கும் பொருந்துகின்றன என்று உலக விஞ்ஞானத்தில் முதன்முதலில் எடுத்துக் காட்டியவர் எங்கெல்ஸ்.

குறிப்பாக, பண்டைய வரலாறு மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகளில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் கூர்மையான முரண்பாடுகள் இருக்கின்றன, எந்த சமூகப் பிரிவுகள், குழுக்களின் அடிப்படையான பொருளாயத நலன்கள் மோதுகின்றனவோ அந்தப் பிரிவுகள், குழுக்களுக்கு இடையில் போராட்டம் நடைபெறுகிறது. முடிவில் பூர்விகச் சமூக பொருளாதார அமைப்பை வர்க்க-பகைமுரண்பாட்டு சமூகத்தின் ஏதாவதொரு வடிவம் – அடிமையுடைமை சமூகம் ( கிரேக்கர்கள், ரோமானியர்கள்) அல்லது நிலப்பிரபுத்துவ சமூகம் (ஜெர்மனியர்கள்) அகற்றுவதற்கு சமூகப் புரட்சி சாதனமாயிற்று.

நவீன மார்க்சிய வரலாற்று விஞ்ஞானம், பண்டைக்கால வரலாற்றுக் துறையில் எங்கெல்சினுடைய படைப்பாற்றல் மிக்க பாரம்பரியத்தை ஆதாரமாகக் கொண்டு அவர் சுட்டிக்காட்டிய பாதையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது; புதிய ஆராய்ச்சி முறை களின் தோற்றத்தினால் அதன் வளர்ச்சியில் ஏற்படுகின்ற திருப்புமுனையில் அது அவருடைய தத்துவப் பாரம்பரியத்துக்கு மீண்டும் மீண்டும் திருப்புகிறது. பூர்விக சமூகத்தின் சாராம்சத்தைப் பற்றியும் வர்க்க – பகைமுரண்பாட்டு சமூக அமைப்புகளை நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் மார்க்சிய மூலவர்கள் உருவாக்கிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வரலாற்றாசிரியர்கள் இன்று திரட்டியுள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன. குறிப்பிட்ட யுகங்கள், கலாச்சார வரலாற்றின் பொது விதிகளின் செயல்பாட்டை அதிகமான விவரங்களுடன் விரித்துக் கூறுவதை இத்தத்துவம் சாத்தியமாக்குகிறது.

இந்த அர்த்தத்தில் எங்கெல்சின் தத்துவப் பாரம்பரியம் அதன் முழுப் பொருத்தத்தையும் கொண்டிருக்கிறது; “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற அவருடைய நூல் பண்டைய வரலாற்றின் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய மெய்யான இயக்கவியல் பகுப்பாய்வுக்கு மூலச்சிறப்பான உதாரணமாக இருக்கிறது.

முதற்பதிவு: புத்தகப் பிரியன்

நூல் அறிமுகம்

“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூல் பி. எங்கெல்ஸ் 1884ஆம் ஆண்டு மார்ச் இறுதி முதல் மே இறுதி வரையிலான இரண்டே மாதங்களில் எழுதினார்.

மார்க்சின் கையெழுத்துப் பிரதிகளைப் புரட்டி பார்த்த பொழுது எங்கெல்ஸ், முற்போக்கு அமெரிக்க விஞ்ஞானி லூ. ஹெ. மார்கன் எழுதிய பண்டைக்காலச் சமூகம் என்ற நூலின் சுருக்க குறிப்பைக் கண்டுபிடித்தார். அதை 1880-1881 இல் மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் மார்க்சின் பல விமர்சன குறிப்புகளோடுகூட சொந்த கருத்துகளும், பிற நூல்கள், கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட கூடுதல் விவரங்களும் இடம் பெற்றிருந்தன. அச்சுருக்க குறிப்பைப் படித்து, அது மார்க்சும் தானும் சேர்ந்து உருவாக்கிய வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தையும் பூர்விக சமுதாயம் பற்றிய தம் கண்ணோட்டங்களையும் ஊர்ஜிதப்படுத்துவதைக் கண்ட எங்கல்ஸ், மார்க்சின் குறிப்புகளையும் மார்கனின் நூலில் அடங்கியுள்ள ஒரு சில முடிவுகள், உண்மை விவரங்களையும் பரவலாகப் பயன்படுத்தி ஒரு தனி நூலை எழுதுவது அவசியம் என்ற முடிவிற்கு வந்தார். இது மார்க்ஸ் “விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிப்பதாக” அமையுமென்று எங்கெல்ஸ் கருதினார். இந்நூலை எழுதும்பொழுது, கிரீஸ், ரோம், பண்டைய அயர்லாந்து, பண்டைய ஜெர்மானியர்கள் பற்றியெல்லாம் தான் நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் கிட்டிய ஏராளமான விவரங்களையும் எங்கெல்ஸ் பயன்படுத்தினார்.

மார்க்சிய இலக்கியத்திலேயே முதன்முதலாக எங்கெல்ஸ் இந்நூலில் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து விளக்குகிறார். குடும்பம் என்பதை ஒரு வரலாற்று கருத்தினமாக அணுகும் எங்கெல்ஸ், அதன் பல்வேறு வடிவங்களுக்கும் (பண்டைய குழு மணத்திலிருந்து துவங்கி, தனியுடைமை தோன்றிய பின் நிலைபெற்ற ஒருதாரக் குடும்பம் வரை) சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களுக்கும் இடையிலான அங்கக ரீதியான தொடர்பையும், இந்த வடிவங்கள் உற்பத்தி முறையின் மாற்றங்களை எப்படி சார்ந்தவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உற்பத்திச் சக்திகள் வளர வளர சமுதாய அமைப்பின் மீது இரத்த உறவுமுறையின் தாக்க எப்படி குறைந்துவந்தது, தனியுடைமை வெற்றி பெற்ற பின் “சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தும்” சமுதாயம் எப்படித் தோன்றியது என்றெல்லாம் காட்டுகிறார்.

பூர்ஷ்வாக் குடும்பத்தை எங்கெல்ஸ் கடுமையாக விமர்சிக்கிறார். தனியுடைமை ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில் பெண்களுடைய சமமின்மையின் பொருளாதார அடிப்படையை சுட்டிக் காட்டும் அவர், முதலாளித்துவ பெண்கள் உண்மையான விடுதலையை அடைய முடியும் என்று கூறுகிறார். சோஷலிச சமுதாயத்தில்தான், பெண்கள் சமூக உற்பத்தியில் பரவலாக ஈடுபடுத்தப்படுவதையடுத்து, சமுதாய வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு முழு சமத்துவம் அளிக்கப்படும், வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்படுவர், இப்பணியை சமுதாயம் மேன்மேலும் அதிகமாக தான் எடுத்துக் கொள்ளும், அப்பொழுதான் முழு சமத்துவம், பரஸ்பர மதிப்பு, உண்மையான அன்பு ஆகியவற்றின் அடிப்படையிலான உயரிய வகையான சொத்துடைமை வடவங்கள் தோன்றி, வளர்ந்ததைப் பற்றி ஆராயவும், சமுதாய அமைப்பின் பல்வேறு வடிவங்கள் எப்படி இவற்றைப் பொறுத்துள்ளன என்பதை ஆராயவும் நூலின் கணிசமான பகுதியை எங்கெல்ஸ் ஒதுக்குகிறார். தனியுடைமை அமைப்பு ஒன்றும் என்றென்றைக்கும் நிரந்தரமானதல்ல, பூர்வீக வரலாற்றின் நீண்ட காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருந்தன என்று எங்கெல்ஸ் காட்டுகிறார். உற்பத்திச் சக்திகள் வளர்ந்து, உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதையடுத்து பிறருடைய உழைப்பின் விளைபொருளை அபகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது, எனவே தனியுடைமையும் மனிதனை மனிதன் சுரண்டுவதும் தோன்றுகின்றன, சமுதாயமானது பகைமுரண்பாட்டு வர்க்கங்களாகப் பிரிகிறது என்றார் எங்கெல்ஸ். இதனுடைய விளைவுதான் அரசின் தோற்றமாகும்.

அரசின் தோற்றம் மற்றும் அதன் சாரம் பற்றிய பிரச்சினைதான் எங்கெல்சின் நூலில் மையப் பொருளாகும். இப்பிரச்சினையை எங்கெல்ஸ் பன்முக ரீதியில் ஆராய்ந்ததானது அரசைப் பற்றிய மார்க்சியப் போதனையை உருவாக்குவதில் ஒரு முக்கியக் கட்டமாக அமைந்தது. இந்த நோக்கில் இது லுயீ போனப்பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற மூலச்சிறப்புள்ள மார்க்சின் நூல்களுடன் எங்கல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு நூலுடனும் ஒரே வரிசையில் நிற்கிறது.

அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக சித்தரித்து, இது ஏதோ எல்லா மக்களின் நலன்களையும் சமமாகப் பாதுகாப்பதாக விளக்கமளிக்கும் விஞ்ஞானிகளுக்கு எங்கல்சின் நூல் தக்க பதிலடி தருகிறது. பண்டைய ஏதன்ஸ், ரோமாபுரி மற்றும் ஜெர்மானியர்களிடையே அரசு தோன்றிய உதாரணங்களின் அடிப்படையில் எங்கெல்ஸ், அரசு தோன்றிய உதாரணங்களின் அடிப்படையில் எங்ககெல்ஸ், அரசு என்பது தான் பிறக்கும் தருணத்திலிருந்தே, எந்த வர்க்கங்களின் கரங்களில் உற்பத்திச் சாதனங்கள் உள்ளனவோ அந்த வர்க்கங்களின் ஆதிக்க கருவியாகத் திகழ்கிறது என்று தெட்டத் தெளிவாயும் ஆணித் தரமாயும் மெய்ப்பித்தார். தன்னுடைய நூலில் எங்கெல்ஸ், அரசின் பல்வேறு திட்ட வட்டமான வடிவங்களை, உதாரணமாக, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் ஜனநாயகத்தின் உயர் வடிவமாக சித்தரிக்கும் பூர்ஷ்வா-ஜனநாயகக் குடியரசை ஆராய்கிறார். இக்குடியரசின் வர்க்கத் தன்மை ஜனநாயகப் போர்வையின் பின் மறைந்துள்ள பூர்ஷ்வா ஆதிக்கத்தின் வடிவம் என்கிறார் எங்கெல்ஸ்.

நாடாளுமன்ற மாயைகள் அத்தருணத்தில் ஏற்கெனவே தொழிலாளர் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலருக்கு இடையில், குறிப்பாக ஜெர்மன் சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகளின் மத்தியில் பரவியிருந்தன. இதற்கெதிராக எச்சைத்த எங்கெல்ஸ், மூலதனத்தின் ஆதிக்கம் நிலைத்திருக்கும் வரை எவ்வித ஜனநாயக சுதந்திரமும் உழைப்பாளிகளுக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது என்றார். அதே நேரத்தில், அவர் இந்த ஜனநாயக சுதந்திரத்தை (ஜன்நாயக உரிமைகளை) பேணிக் காத்து வளர்ப்பதில் பாட்டாளிகளுக்குள்ள அக்கறையையும் கோடிட்டுக் காட்டினார்; இந்த உரிமைகள், சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்திற்கு அதிகபட்சம் அனுகூலமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்.

உற்பத்திச் சக்திகள் வளர வளர பொருளாயதச் செல்வங்களின் உற்பத்தி முறை மாறுகிறது; குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தனியுடைமை தோன்றி, சமுதாயம் எதிரெதிர் வர்க்கங்களாக பிளவுறுவது தவிர்க்க இயலாதுதாக, நியதியானதாக மாறுகிறது; முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகள் மேற்கொண்டு வளர்ச்சியடையும் பொழுது, தனியுடைமையும் சுரண்டும் வர்க்கங்களும் உற்பத்தியின் வளர்ச்சிக்கு நேர்த் தடைகளாக மாறுகின்றன என்பதை எல்லாம் எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார். இது பாட்டாளி வர்க்கப் புரட்சியை தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது; மார்க்சும் எங்கெல்சும் பன்முறை சுட்டிக்காட்டியபடி, இப்புரட்சியின் பொழுது பழைய பூர்ஷ்வா அரசு இயந்திரம் உடைக்கப்பட்டு, ஜனநாயகத்தின் உயர் வடிவமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் புதிய வகையான அரசு தோற்றுவிக்கப்படுகிறது.

மூலச்சிறப்பான வடிவத்தில் அரசைப் பற்றி எங்கெல்சால் முன்வைக்கப்பட்ட மார்க்சியக் கருத்தமைப்பு புதிய வரலாற்று சகாப்தச் சூழ்நிலைகளுக்கேற்ப வி. இ. லெனினால் அரசும் புரட்சியும் என்ற நூலில் பன்முக ரீதியில் வளர்க்கப்பட்டது.

1890இல், பூர்விக சமுதாய வரலாறு பற்றி புதிய விவரங்கள் கிட்டியதையடுத்து, இந்நூலின் புதிய பதிப்பைத் தயாரிக்கும் பணியில் எங்கெல்ஸ் இறங்கினார். இப்பணியில் அவர் நவீன நூல்கள், கட்டுரைகள் அனைத்தயும் படித்தார், உதாரணமாக, ருஷ்ய விஞ்ஞானி ம. ம. கவலேவ்ஸ்கியின் நூல்களைப் படித்தார், பூர்வாங்க வாசகத்தில் பலவற்றை திருத்தினார், மாற்றினார், கணிசமான கூடுதல் விவரங்களை (குறிப்பாக, நவீன புதைபொருள், மானுடவியல் ஆராய்சிகளின் பின்னணியில், குடும்பத்தை பற்றிய அத்தியாயத்தில் சேர்த்தார். இந்த மாற்றங்கள், திருத்தங்களினால் எங்கெல்சின் முடிவுகள் மாறவில்லை, இவை புதிய ஊர்ஜிதத்தைப் பெற்றன, அவ்வளவே. மார்கனின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில கருத்துகள் (உதரணமாக, பூர்விக வரலாற்றைப் பற்றி மார்கன் தரும் காலவரையறுப்பு, அவர் பயன்படுத்தும் சொற்றொடர்கள் போன்றவை) புதிய விஞ்ஞான தகல்வல்களின் பின்னணியில் சரிபார்க்கப்பட வேண்டும் என்றாலும் எங்கெல்சின் நூலில் குறிப்பிடப்படும் முடிவுகள் பின்னரும் தம் முக்கியத்துவத்தை இழக்கவில்லை; இம்முடிவுகள் சரியானவை என்று விஞ்ஞான வளர்ச்சி மெய்ப்பித்தது.

எங்கெல்சுடைய நூலின் திருத்தப்பட்ட, புதிய விவரங்களடங்கிய நான்காவது பதிப்பு 1891ஆம் ஆண்டின் இறுதியில் ஷ்டுட்கார்ட்டில் வெளிவந்தது, பின்னர் இதில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை; இந்த நான்காவது பதிப்பிற்காக எங்கெல்ஸ் புதிய முன்னுரையை எழுதினார்.

இந்த நூல் 1891 ஆம் ஆண்டின் 4வது ஜெர்மன் பதிப்பிற்கேற்ப, முதலாவது, நான்காவது பதிப்புகளுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளுடன் வெளியிடப்பட்ட முன்னுரைகளுடன் வெளியிடப்படுகிறது.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s