
கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன?
இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து மிக மெல்லிய விலகல் தெரிந்தாலும் கூட, பணியிலிருந்து நீக்குவது, சட்ட விதிகளை துளியும் பொருட்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைப்பது என்று ஊடகவியலாளர்கள் மீப்பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நிலை.
மறுபுறம், கல்புர்கி, கௌரி லங்கேஷ், பன்சாரே போன்ற அறிவுத்துறையினர், எழுத்தாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரவரராவ், பேராசிரியர் சாய்பாபா போன்றவர்கள் சிறையில் வாடுகிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதினால் கூட வெளியிடும் பொத்தானை அழுத்துவதற்கு முன் இந்தப் பதிவை வெளியிட வேண்டுமா என மக்களை யோசிக்க வைத்திருக்கும் நிலை.
இதே வேளையில் படைப்பாளிகள் என தங்களைக் கருதிக் கொள்ளும் சிலர், தான் விரும்பிகளாகவும், சமூகத்தின் போக்கு குறித்து கொஞ்சமும் கவனம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கலைக்கும் மக்களுக்குமான தொடர்பு என்ன? படைப்பாளிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? அவர்களின் படைப்புகள் மக்களைக் கவர்ந்திழுக்க, மக்களைச் சென்றுசேர என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதோடு, இன்றைய இந்த மோசமான சூழலில் படைப்பாளிகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் துல்லியமாக உணர்த்துகிறது இந்த நூல்.
அன்றைய சீன விடுதலை இயக்கத்தின் தலைநகரான யோனானில் 1942 மே2 லிருந்து 23 வரை நடைபெற்ற கலை இலக்கிய மாநாட்டில் தோழர் மாவோ ஆற்றிய உரைகளின் தமிழ் பெயர்ப்பே இந்த நூல்.
படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.