வேள்பாரி

வேள்பாரி – வரலாற்று நெடுங்கதை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப் போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம் போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காக தன்னையே தந்தவன் வேள்பாரி.

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித் தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையனங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்க காலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால் பரம்புமலைப் போரில் மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் நிகழாத வீரச் சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்றுவரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான். வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக் கொடிக்கு தேரைத் தந்தவன் மட்டுமல்ல .. .. .. தனது வீரத்தால் என்றும் ஒளி வீசும் வெற்றிக் கொடியை நாட்டிச் சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்.. .. ..

வேள்பாரி நூலை மின்னூல் கோப்பாக (PDF) பதிவிறக்கம் செய்ய

துணைச் சுட்டிகள்

  1. வேள்பாரி வெளியீட்டு விழாவில் அதன் ஆசிரியர் சு.வெங்கடேசன் வேள்பாரி குறித்த உரை.
  2. வேள்பாரி நாவல் குறித்து BBC

1 thoughts on “வேள்பாரி

  1. வேள்பாரி படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். பல தளங்களில் பதிவிறக்கம் செய்ய முயற்சித்து முடியவில்லை.இந்த தளத்தில் இப்படி என்பதற்குள் பதிவிறக்கம் எளிமையாக.. நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்