
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு அவ்வாறு செயல்படாது என்பது தான் நிகழ்வுகளின் பாடம். என்றால் நாம் என்ன செய்வது? இன்று (01/08/2019) தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த, ரோஜா முத்தையா நூலக இயக்குனர் சுந்தர் அவர்களின் செவ்வி (நேர்காணல்) அந்த புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. படித்துப் பாருங்கள்
****************************
தமிழகத்தின் பெருமிதம் இந்த நூலகம்… தமிழ்ச் சமூகம்தான் இதைப் பாதுகாக்க வேண்டும்!- ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் பேட்டி
கால் நூற்றாண்டைக் கடந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமானது வெறும் நூலகம் அல்ல; அது தமிழ்நாட்டின் முக்கியமான பண்பாட்டுக் களஞ்சியமும்கூட. முதன்முதலில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட 1812 வருடத்திய ‘திருக்குறள்’ நூல் வேண்டுமா? நீங்கள் அதை இங்கே பார்க்கலாம். ‘சுதேசமித்திரன்’, ‘உதயதாரகை’, ‘சக்தி’ போன்ற இதழ்கள் வேண்டுமா? நீங்கள் அவற்றை இங்கே நகல் எடுத்துக்கொள்ளலாம். 4 லட்சம் ஆவணங்கள், 25 லட்சம் டிஜிட்டல் நகல்கள், 30 ஆயிரம் உலகளாவிய வாசகர்கள், மிக அரிதான கண்காட்சிகள் என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இந்த 25 ஆண்டுப் பயணம் அசாத்தியமானது. தமிழ்நாட்டின் இரண்டு நூற்றாண்டுகளின் அறிவு, கலை, கலாச்சார, சமூகவியல் அசைவுகளைப் புரிந்துகொள்ளவும், ஒரு ஆய்வாளர் நினைத்தால் தொகுத்து கற்பனையில் வரைந்துபார்க்கவும் இயலக்கூடிய அரிதான தமிழ் இடம் இது. தெற்காசியாவின் முன்மாதிரி நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூலகம் சென்னை தரமணியிலுள்ள மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் அமைந்துள்ளது (இணையதளம்: http://rmrl.in/). இன்று தன் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தருணத்தில் இந்நூலகத்தின் இயக்குநர் சுந்தருடன் பேசியதிலிருந்து…
ரோஜா முத்தையா எனும் தனிமனிதரின் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் கைமாறிய கதையைச் சொல்லுங்கள்… ரோஜா முத்தையாவின் சேகரிப்பு மனோபாவத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
யாழ்ப்பாண நூலக எரிப்பு தமிழ் மக்களின் இதயத்தில் உண்டாக்கிய ரணத்திலிருந்து வெளிப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகவே ரோஜா முத்தையாவின் புத்தகச் சேகரிப்பைப் பார்க்க வேண்டும். ஒரு புதிய நூலக இயக்கத்தையே அவர் உருவாக்கியிருக்கிறார் என்பேன். டி.என்.ராமச்சந்திரன், பல்லடம் மாணிக்கம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி என்று இன்றைக்கு அரிய நூல் சேகரிப்பாளர்களாக நாம் பார்க்கும் பலருக்கும் உந்துதலாக ரோஜா முத்தையா இருந்திருக்கிறார். ஒரு புத்தகத்தின் முதல் பதிப்பு மட்டுமல்லாமல் எல்லாப் பதிப்புகளையும் வாங்கி சேகரிப்பது ரோஜா முத்தையாவின் வழக்கம். வெவ்வேறு பதிப்புகள் உள்ளடக்கியிருக்கும் அரசியல் பார்வையையும் பிற்பாடு வரும் தலைமுறை உணர வேண்டும் என்ற உந்துதலிலிருந்து வெளிப்பட்ட அணுகுமுறை அது. பெரிய தொலைநோக்கர் அவர். அவரது வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்திருந்த ஒரு லட்சம் ஆவணங்களையும் அவர் உயிரோடு இருக்கும்போதே அரசாங்கத்திடமும் பெரிய நூலகங்களிடமும் கையளிக்க முயன்றார். ஆனால், அது நிறைவேறவில்லை. பிற்பாடு ரோஜா முத்தையா இறந்த பிறகு, ‘ஒரு புகழ்பெற்ற நூலகம் விற்பனைக்கு’ என்று அவரது குடும்பத்திலிருந்து விளம்பரம் தருகிறார்கள். அதைப் பார்த்த எழுத்தாளர் அம்பை, சிகாகோ பல்கலைக்கழகத்திடம் அந்தச் சேகரிப்பை வாங்கிக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதை அப்பல்கலைக்கழகம் ஏற்றது. ஏ.கே.ராமானுஜன், தெற்காசிய நூலகர் ஜேம்ஸ் நையும் மற்றவர்களும் கலந்து பேசி அதற்காகப் பணம் சேகரிக்க முயற்சி எடுத்தார்கள். ‘ஃபோர்டு பவுண்டேஷன்’, ‘நேஷனல் எண்டோமென்ட் ஃபார் ஹுயூமானிட்டிஸ்’, இங்கிலாந்திலுள்ள ‘வெல்கம் நிறுவனம்’ இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து நல்கை பெற்றார்கள். ஜேம்ஸ் நை மட்டும் இல்லையென்றால் இந்த நூலகம் சாத்தியமாகியிருக்காது.
சிகாகோ பல்கலைக்கழகம் ரோஜா முத்தையாவின் சேகரிப்பை வாங்கிய பிறகு இங்கே தமிழ்நாட்டில் யாரெல்லாம் நூலகம் தொடங்கும் பணியில் பங்காற்றினார்கள்?
இந்த நூலகத்துக்குப் பொறுப்பாக தமிழகத்தில் ‘மொழி அறக்கட்டளை’யை சிகாகோ பல்கலைக்கழகம் கண்டறிந்தது. ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், சங்கரலிங்கம், தியடோர் பாஸ்கரன், பல்லடம் மாணிக்கம், கி.நாராயணன் ஆகியோர் அதன் ஆரம்ப கட்டப் பணியில் ஈடுபட்டார்கள். மொழி அறக்கட்டளையோடு சேர்ந்து சிகாகோ பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இட்டது. 1994-ல் முகப்பேரில் நூலகம் அமைத்த பிறகு நான் பணியில் சேர்ந்தேன். பத்து ஆண்டுகள் கழித்து மொழி அறக்கட்டளை விலகிய பிறகு நாங்கள் ஒரு அறக்கட்டளை தொடங்க முடிவெடுத்தோம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையைத் தொடங்கி மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டோம். ஆறு வருடங்களுக்குப் பிறகு சேகரிப்பு முழுவதையும் எங்கள் அறக்கட்டளைக்கே சிகாகோ பல்கலைக்கழகம் கொடுத்துவிட்டது. அதன் பிறகு, இன்னும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினோம். ஒரு லட்சமாக இருந்த ஆவணங்கள் இன்று நான்கு லட்சமாக வளர்ந்திருக்கின்றன.
ரோஜா முத்தையா நூலகத்தின் முதல் இயக்குநரான சங்கரலிங்கம் பற்றிச் சொல்லுங்களேன்…
மகத்தான மனிதர் சங்கரலிங்கம். தொலைநோக்கர். அவர் இல்லாமல் இந்த நூலகம் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது. ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக அணுகியவர். அவர் ஒரு நல்ல ஆசிரியரும்கூட. முழுமையான சுதந்திரம் கொடுக்கக்கூடியவர். ‘நீ இந்த வேலையைச் செய்’ என்று யாரிடமும் சொன்னது கிடையாது. ஆனால், ஒவ்வொருவருக்குமான வேலையை அவர் உணர்த்திவிடுவார். துரதிர்ஷ்டவசமாக, நூலகம் ஆரம்பித்து மூன்றே வருடங்களில் இறந்துவிட்டார். இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இன்னும் பல வேலைகளைச் செய்திருப்போம். அவர் கொடுத்த அந்த உத்வேகம்தான் இன்று வரை நாங்கள் இயங்குவதற்கான ஊக்கசக்தி.
நூலகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்னென்ன தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள்?
நுண்படத் தொழில்நுட்பமானது உலகப் போர் காலகட்டத்திலிருந்து இருக்கிறது. ரகசிய ஆவணங்களைக் கொண்டுசெல்வதற்காக அது பயன்படுத்தப்பட்டது.பிறகு, அதை நூலகங்கள் பயன்படுத்தத் தொடங்கின. நாங்கள் 1994-ல் நூலகம் தொடங்கியபோது நுண்படத் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்தினோம். 2000 வரைக்கும் அதுதான். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நேரு நினைவு அருங்காட்சியகம், தேசிய ஆவணக் காப்பகம் போன்ற அரசு சார்ந்த ஆவணக் காப்பகங்கள், ஒருசில தனியார் நிறுவனங்கள்தான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவந்தன. தமிழ்நாட்டில் பெரிய அளவில் அத்தொழில்நுட்பத்தைச் செய்துகாட்டியது ரோஜா முத்தையா நூலகம்தான். 2000-க்குப் பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டோம். இந்த டிஜிட்டல் யுகத்திலும்கூட நுண்படச் சுருள்தான் சிறந்த முறையாக உலகம் முழுக்கப் பார்க்கப்படுகிறது. நாங்களும் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாறினாலும் நுண்படச் சுருள் முறை பாதுகாப்பைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுபோக, புத்தகத்தை நுண்படமாக்கி, கணினிமயமாக்கிய பிறகும்கூட இவற்றையெல்லாம் ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பாதுகாக்கிறோம். இதை ஒரு நெறியாகவே பின்பற்றிச் செயல்படுகிறோம்.
தர நிர்ணயத்துக்காக என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்?
உலகளாவிய சிறந்த நடைமுறைகள் என்பார்கள் இல்லையா? அவை எல்லாவற்றையும் ரோஜா முத்தையா நூலகம் பின்பற்றுகிறது. உலகத் தரம் வாய்ந்த நூற்பட்டியல் (கேட்டலாக்) முறையைப் பின்பற்றுகிறோம். அதிகபட்சத் தரம் வாய்ந்த நுண்படச் சுருள்களை உருவாக்குகிறோம். நுண்படச் சுருள்களைப் பாதுகாப்பதற்கு சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். சென்னை கடலோரப் பகுதி என்பதால் இங்கே ஈரப்பதம் அதிகம். நுண்படச் சுருளுக்கோ ஈரப்பதம் ஆகவே ஆகாது. எனவே, அதற்கு ஏற்றாற்போன்ற தட்பவெப்ப நிலையை நாம் உருவாக்க வேண்டும். 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 35% ஈரப்பதமும் இருக்கக்கூடிய அறையை உருவாக்கியிருக்கிறோம். ஒருவேளை உலகப் போர் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். வெடிகுண்டுகளால் தாக்கப்படும் நிலை வருகிறது; யாராவது தீ வைத்து எரித்துவிடுகிறார்கள்; ஏதாவது இயற்கைப் பேரிடரால் நாசாமகிறது; அப்படியான சூழ்நிலையில் நாளைக்கு எல்லாம் அழிந்துபோயிற்று என்று சொல்லக் கூடாது; அதை எதிர்கொள்வதற்கான வேலைகளை இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.
பட்டியலிடும் முறைக்கு ரோஜா முத்தையா நூலகம் தெற்காசியாவுக்கே முன்னோடி எனலாம். அது குறித்துச் சொல்லுங்களேன்…
ஒரு நூலகத்தின் முதுகெலும்பு என்பது நல்ல நூற்பட்டியல்தான். போலவே, பட்டியலுக்கு ஏற்றபடி அலமாரியில் சரியான இடத்தில் புத்தகங்களை வைக்க வேண்டும். இந்த விஷயங்களில் ரோஜா முத்தையா நூலகமானது மிகச் சிறப்பான வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. தெற்காசியாவிலேயே முதன்முதலில் அச்சான நூல் தமிழில்தான். அது தொடங்கி இன்று வரை வெளியான நூல்களைப் பட்டியலிட்டோம் என்றால் அதை வரலாற்றுரீதியான பட்டியல் என்றுதானே சொல்ல வேண்டும்? பொதுவாக, புத்தகத்தின் பெயர், எழுத்தாளர், தேதி, விலை, பதிப்பக விவரங்கள் போன்றவற்றைத்தான் பட்டியலிடும்போது கொடுப்பார்கள். ஆனால், இன்னும் ஏராளமான தகவல்களை நாம் சேர்க்க முடியும். இன்னார் எழுதி, இன்னார் பரிசோதித்து, இன்னார் அதற்குப் பொருளுதவி புரிந்து, இன்னாரின் அச்சுக்கூடத்தில், இன்னார் பதிப்பித்தார் என இவ்வளவு தகவல்களைப் பட்டியலிடலாம். பதிப்பக வரலாறு போன்ற ஆய்வுகளில் புத்தகத்தைப் பார்க்காமல் வெறும் பட்டியலை வைத்துக்கொண்டேகூட ஆய்வுகளைச் செய்ய முடியும்.
இப்போது என்ன பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?
எல்லோரும் ஒன்றுபோல பயன்படுத்தும் விதமாக ‘ஒருங்கிணைந்த நூற்பட்டியல்’ (யூனியன் கேட்டலாக்) உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதில் என்ன வசதி என்று பார்த்தீர்களென்றால், ‘தேவாரம்’ என்றொரு புத்தகத்தை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.இந்தப் பதிப்பு எங்கெங்கெல்லாம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் திருநெல்வேலியில் இருந்துகொண்டு நூற்பட்டியலைப் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் தேடும் புத்தகம் அருகில் இருக்கும் ஏதோ ஒரு நூலகத்தில் இருக்கலாம். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டுவிட முடியும். இப்போதுதான், தமிழக அரசு அந்த வேலையை எங்கள் கையில் கொடுத்திருக்கிறது. அரசு நூலகங்களுக்கு ஒருங்கிணைந்த நூற்பட்டியல் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறோம். அதோடு ரோஜா முத்தையா நூலகத்தின் பட்டியலையும் சேர்க்கப்போகிறோம்.
ஏற்கெனவே, ‘ஒருங்கிணைந்த தெற்காசிய நூற்பட்டியல்’ ஒன்று தயாரித்திருக்கிறோம். அது தமிழுக்கானது மட்டுமல்ல; தெற்காசிய மொழிகள் அனைத்திலும் வெளியான புத்தகங்களையெல்லாம் ஓரிடத்தில் சேர்க்கும் பணி அது. அது ஒரு பிரம்மாண்டமான வேலை. ஆனால், நிதித் தட்டுப்பாட்டால் ஒருகட்டத்தில் அதைக் கைவிடும்படி ஆயிற்று.
நுண்படச் சுருள், டிஜிட்டல் முறைகளில் உள்ளடக்கத்தைப் பாதுகாத்துவிடலாம். ஆனால், மூலப் புத்தகங்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்கிறீர்கள்?
காகிதத்துக்கென குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. எனவே, காகிதத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காக ஒரு ஆய்வுக்கூடத்தையே உருவாக்கியிருக்கிறோம். காகிதங்களில் இருக்கும் அமிலத்தன்மையை அகற்றிவிட்டு, ஒவ்வொரு காகிதத்தையும் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சிறப்புத்தாள்கள் (Japanese cellulose tissue paper) கொண்டு பலப்படுத்துவோம். இப்படி செய்வதால் காகிதத்தின் ஆயுட்காலத்தை இன்னுமொரு 200 வருடங்களுக்கு நீட்டிக்க முடியும். நாம் பண்பாடு பண்பாடு எனப் பெருமைப்படுகிறோம் இல்லையா? என்னைப் பொறுத்தவரை, அச்சுப் பண்பாடு மிகவும் பெரியது. கடந்த 100 வருடங்களில் கல்வியானது எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. அதை உருவாக்கத் துணைபுரிந்தது அச்சுப் பண்பாடுதான். முதலில், குரு சொல்வார், அதைப் பத்து மாணவர்கள் திரும்பச் சொல்ல வேண்டும். புத்தகம் வந்த பிறகு ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் படிக்க முடியும் என்ற சூழல் உருவானது. இந்தப் பண்பாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். அச்சுப் பண்பாடானது ஒரு சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை எதிர்காலச் சந்ததிக்குச் சொல்ல வேண்டும்.
உங்கள் பதிப்பு முயற்சிகள் குறித்துச் சொல்லுங்கள்…
முக்கியமான நூல்களை மறுபதிப்பு கொண்டுவந்திருக் கிறோம். உதாரணமாக, ஓலைச்சுவடியில் எப்படி புள்ளி இல்லாமல் எழுத்துகள் இருக்குமோ அதேபோல் திருக்குறள் முதல் பதிப்பைப் பதிப்பித்திருந்தனர். அதையே நாங்களும் மீள்பதிப்பாகக் கொண்டுவந்தோம். இதைக் கொண்டுவந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அது திருக்குறள் என்பது; இரண்டாவது, அந்தப் பதிப்பு உலகத்திலேயே மூன்றோ நான்கோ பிரதிகள்தான் இருக்கின்றன. அதில் ஒரு பிரதி எங்களிடம் இருக்கிறது. இதை எல்லோர் கையிலும் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற கனவில் மறுபதிப்புக்கான பணியில் இறங்கினோம். அதேபோல், கணித மேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டது எங்களுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்தப் பிரதிகளைப் படியெடுத்து 1957-ல் புத்தகமாக அச்சிட்டு ‘டிஐஎஃப்ஆர்’ (TIFR) நிறுவனம் வெளி யிட்டது. உலகிலே இதுவரை யாருமே பயன்படுத்தாத ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் மறுபதிப்பை உருவாக்கித் தந்தோம். நான்கைந்து நிறங்களிலும் பென்சிலாலும் ராமானுஜன் எழுதியிருந்தார். அதை அப்படியே கொண்டுவந்தோம். அந்தப் படைப்பு ஓர் அற்புதம்!
நூலகங்களுக்கும் அரசுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
என் கோரிக்கை இதுதான். பொதுநல நோக்கோடு சமூகப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களை அரசு கண்டுகொண்டு அங்கீகரிக்க முன்வர வேண்டும். அரசுக்கே ஏதேனும் வேண்டுமென்றால் அது நிபுணர்களைத் தேடித்தானே போகும்? நிபுணர்களைக் காணாமலடித்துவிடக் கூடாது. அரசு-தனியார் உறவானது மிகவும் அத்தியாவசியமானது. உலக நாடுகள் பலவற்றிலும் ‘காப்பு’ வேலையை (பிரசர்வேஷன்) தனியார்தான் செய்கிறது. அரசு ஆவணக் காப்பகமும் உண்டு என்றாலும் கணிசமான அளவில் தனியார் ஆவணக் காப்பகங்களும் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்குப் பணம்கொடுத்து படிக்க வருகிறார்கள் இல்லையா, அப்போது அப்பணத்தை நூலகம் உட்பட ஒவ்வொரு பிரிவுக்கும் பிரித்துக்கொடுத்துவிடுவார்கள். ஓசிஎல்சி என்பதுதான் உலகத்திலேயே இருக்கும் பெரிய ஆவணத் தரவகம். என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டாலும் அதை வாங்கிக்கொடுப்பதற்கு நூலகர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் கேட்பதை வாங்கிக்கொடுப்பது அவர்களது கடமை. இல்லை என்று சொல்லி அனுப்பிவிட முடியாது. குறைந்தபட்சம், இங்கே இருக்கிறது என்று வழிகாட்டவாவது வேண்டும். நம் நாட்டில் அப்படியொரு பண்பாடு இல்லை. அது உருவாக வேண்டும்.
பல்கலைக் கழகங்களும் கூட நூலகங்களுடன் ஒத்துழைப்பு தருவதில்லை இல்லையா?
ஆமாம். இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மொழி சார்ந்து ஆய்வுசெய்வதற்கு யாரிடம் வசதி இருக்கிறது? தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது; ஆனால், அது முழுமையானது அல்ல. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் அதுதான் நிலைமை. தனியார் நூலகங்களிடம் மட்டும்தான் இதுபோன்ற ஆவணங்களெல்லாம் இருக்கின்றன. அப்படி இருக்கும்பட்சத்தில், முனைவர் பட்ட ஆய்வுகள் செய்ய விரும்புபவர்களை அவர்களது பல்கலைக்கழகம் எங்கே அனுப்புகிறது? பல்கலைக்கழகம் கண்களை மூடிக்கொள்கிறது. பேராசிரியர்கள்தான் அவர்களது தனிப்பட்ட ஆர்வத்தில் தனியார் நூலகங்களுக்குத் திசைதிருப்பிவிடுகிறார்கள். பயன்களை மட்டும் பெற்றுக்கொண்டு, உதவி ஏதும் செய்யாமலிருப்பது ஒரு ஆரோக்கியமான அமைப்பாக எனக்குத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்களும் அரசும் இதுபோன்ற நூலகங்களுக்கு ஆதரவு தர வேண்டும். குறைந்தபட்சமாக, இங்கே பிரதி எடுக்க வருபவர்களுக்கு சிறு தொகையை நாங்கள் மானியமாகத் தருகிறோம் என்று சொல்லலாம். நான் ரோஜா முத்தையா நூலகத்துக்காக மட்டும் சொல்லவில்லை. உ.வே.சா. நூலகம், ஞானாலயா நூலகம் என எவ்வளவோ அற்புதமான நூலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.எல்லாவற்றுக்காகவும்தான் பேசுகிறேன். கண்ணை மூடிக்கொண்டு பல்கலைக்கழகங்கள் இருக்க முடியாது.
நிதிப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதை நீங்கள் பேசுவதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அரசு என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
அரசின் ஆவணக் காப்பகத்தில் இப்படியான நூல்கள் இல்லை. தமிழ்நாட்டு அரசுதானே இது? தமிழர்களுக்கான, தமிழுக்கான அரசுதானே? அப்படியென்றால், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றக்கூடிய எதுவாக இருந்தாலும் அதை அரசு பாதுகாத்தாக வேண்டும். இந்த நூலகத்தையும் உள்ளடக்கியே சொல்கிறேன். நமது அரசாங்கம் போதுமான அளவு நிதியுதவி தருமானால், மற்ற எல்லா நூலகங்களுக்கும் எடுத்துக்காட்டாக ரோஜா முத்தையா நூலகத்தை மாற்றிவிடுவோம். இந்தக் கட்டிடத்தை நவீனமாக மாற்றுவோம். அச்சுப் பண்பாட்டைச் சித்தரிக்கக்கூடிய அருங்காட்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டம் உள்ளது. சிந்துவெளியைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். உலகிலேயே சிந்துவெளிக்கென அர்ப்பணித்த முதல் கண்காட்சியை செம்மொழி மாநாட்டில் நடத்தியபோது அஸ்கோ பர்போலோ, “இதைக் கொண்டுசென்று எங்கேனும் நிரந்தரமாகக் காட்சிப்படுத்துங்கள்” என்றார். ஆனால், செய்ய முடியவில்லை. அதற்கு பத்தாயிரம் சதுர அடி நிலம் தேவைப்படும்.
மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
நிறைய ஊடகங்கள் ரோஜா முத்தையா நூலகம் பற்றி எழுதியிருக்கின்றன. சமூக வலைதளங்களில் இயங்குகிறோம். ஆனாலும், பெரும்பாலானவர்களின் கவனத்துக்கு இந்நூலகம் வரவில்லை என்ற மனக்குறை உண்டு. மக்கள் முன்வர வேண்டும். இதையெல்லாம் யாருக்காகச் செய்கிறோம்? நம் சமூகத்துக்காகத்தானே? அப்படியென்றால், நம் சமூகம் செய்ய வேண்டியதைச் செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தின் பெருமிதம் இந்த நூலகம். தமிழ்ச் சமூகம்தான் இதைப் பாதுகாக்க வேண்டும். தனிநபராக ஒரு புத்தகத்தைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். அதாவது, புத்தகத்தை வாங்குவது, அதை டிஜிட்டல்மயப்படுத்துவது, மின் நூலகத்தில் பதிவேற்றுவது, புத்தகத்தைப் பாதுகாப்பது – இது மொத்தத்துக்கும் ஆகும் செலவை ஒருவர் ஏற்றுக்கொள்ளலாம். இதேபோல, ‘நான் சைவ இலக்கியத்துக்கு உதவுகிறேன்’, ‘சமண இலக்கியத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்’, ‘இலக்கணங்களுக்கு நான் பொறுப்பு’ என ஒவ்வொரு வகைமைக்குள் வரும் புத்தகங்களை ஒரு நிறுவனம் ஏற்றுக் கொள்ளலாம். பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் இது மிகவும் சாதாரண விஷயம். அரசாங்கத்துக்கோ இது பொருட்டாகவே இருக்காது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குப் பத்து கோடி கொடுத்திருக்கிறது தமிழக அரசு. அங்கே கொடுப்பது அவசியமில்லை என்று சொல்லவில்லை. இங்கே இருக்கும் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் இல்லையா?