வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” என்று உரை நிகழ்த்தி இருக்கிறார். கட்சிக் கூட்டங்களில் கட்சிக் காரர்கள் பேசிக் கொள்ளட்டும். அல்லது தலைமை நீதிபதி தன்னை கட்சிக்க்காரர் என அறிவித்துக் கொள்ளட்டும். குறைந்த அளவிலான நேர்மை கூட இல்லாமல் உயர் பதவிகளில் இருப்போர் இப்படி தம்மை அம்மணமாக்கிக் கொள்வது முன் எப்போதும் நடந்திராதது.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய ஆணையிட வேண்டும் என்று பாஜகவினரால் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவும், ஆம் ஆத்மியும் கோருகின்றன. இந்த வழக்கின் விசாரணையின் போது திமுக வழக்குரைஞர் வில்சன் தன் வாதங்களை எடுத்துவைக்க எழும் போது கீழ்கண்டவாறு முழங்குகிறார் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா.

இந்த விவகாரத்தில் உங்களுடைய கட்சி மற்றும் தமிழக நிதியமைச்சர் கூறி வரும் கருத்துகளை, நாங்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக, கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி விடாதீர்கள். தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.ஏதோ, தி.மு.க., மட்டும் தான் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். இந்த விஷயத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. உங்கள் தரப்பில் பேசப்படும் விதம், அறிக்கைகள் கொடுப்பது போன்றவற்றை நாங்கள் கவனிக்கவில்லை என்று மட்டும் நினைக்காதீர்கள். இலவசங்கள் என்பது வேறு, மக்கள் நலத் திட்டங்கள் என்பது வேறு. நகரத்தில் இருப்பவருக்கு கிடைக்கும் ஒரு பொருள், அவருக்கு இலவசமாக இருக்கலாம். ஆனால், கிராமப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு, அதுவே வாழ்க்கையை நடத்துவதற்காக இருக்கும். அதனால், இந்த விவகாரத்தில் விவாதம் தேவை. நாங்கள் இந்த விஷயத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட விரும்பவில்லை. அதுபோல கட்டுப்பாடுகளை விதிக்கவும் விரும்பவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒரே தரப்பாக உள்ளன. அதுபோல இலவசங்கள் தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த இலவசங்களால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து, நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கான களத்தை உருவாக்கும் வகையிலேயே நிபுணர் குழுவை நியமித்து, மக்களின் கருத்துகளை திரட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் நலனுக்காகவே இந்த விவகாரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்.

ஒரு வழக்கு விசாரணைக்கு வரும் போது வழக்குக்கு தொடர்பே இல்லாமல் தங்கள் நோக்கத்துக்கு பேசுவது நீதிபதிகளுக்கு வாடிக்கையாகி வருகிறது. தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேர்காணல்களில் பொருளாதாரம் குறித்து தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இதை ஒரு நீதிபதியாக அமர்ந்து வழக்கை விசாரிப்பவர் விசாரணையின் போது பேசுவது எந்த அடிப்படையில் சரியானது? இதற்கு நீதிபதிகளுக்கு வரம்பு ஏதும் இல்லையா? திமுக புத்திசாலித்தனமான கட்சியா? அல்லது முட்டாள்தனமான கட்சியா? என்றெல்லாம் கவலைப்படுவதற்கு ஒரு நீதிபதிக்கு அதுவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு என்ன தேவை இருக்கிறது?

ஓய்வு பெறும் கடைசி நிமிடங்களில் நின்று கொண்டு இது போன்ற சமூக முதன்மை வாய்ந்த வழக்குகளை விசாரிக்க முன்வருவதன் நோக்கம் என்ன? இப்போது மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்றி இருப்பதாக செய்தி வருகிறது. இதை முதலிலேயே செய்து இருக்கலாமே. ஒருவேளை, தன்னுடைய கருத்தை இதில் பதிய வைக்க வேண்டும். அதன் மூலம் இனி யார் தீர்ப்பு சொன்னாலும் தன்னுடைய கருத்தை மீறாதவாறு மறைமுக வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கமா? குழு அமைக்க வேண்டும். அதை நீதிமன்றம் செய்ய வேண்டுமா? ஒன்றிய அரசு செய்ய வேண்டுமா? என்றெல்லாம் கேட்பதன் மூலம் தன்னுடைய சமூக அக்கரையை வெளிப்படுத்துவதாக காட்டிக் கொள்கிறார். நீதிபதிகளுக்கு என்ன மாதிரியான சமூக அக்கரை இருக்கிறது என்பதற்கு தனியாக ஆய்வுகலெல்லாம் செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலான நீதிபதிகள் கொடுத்திருக்கும் தீர்ப்புகளின் வரலாறுகளைப் பார்த்தாலே தெரிந்து போகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதி மன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தொகுத்துப் பார்த்தால் அதில் பார்ப்பனிய பாசம் பொங்கி வழியும். காரப்பரேட்டுகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகளை தொகுத்துப் பார்த்தால் அது முதலாளித்துவ வீழ்படிவில் தரை தட்டி நிற்கும். ஆதிக்க சாதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை எடுத்துப் பார்த்தால் அதில் உழைக்கும் மக்கள் மீதான வன்மம் கொப்பளிக்கும்.

சமூக முதன்மை வாய்ந்த பல வழக்குகள் ஆண்டுக் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு குறித்த அடிப்படையான முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தூசு படிந்து கிடக்கிறது. காவல்துறை அத்துமீறல்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் காணாமல் போய் விட்டன. விவசாயச் சட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகள் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராடி சட்டத்தை நீக்கும் வரை எங்கே கிடந்தன என்று எந்த நீதிபதிக்கும் தெரியாது.

உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் இலவசங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்படும் லட்சக்கணக்கான கோடிகள் இலவசங்கள் பட்டியலில் சேராதது ஏன்? போன்ற கேள்விகளை விட வேறு கேள்விகள் இன்றியமையாததாய் தற்போதைய சூழலுக்கு தேவைப்படுகிறது. நீதிபதிகளாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் தங்கள் முடிவு என்பதோரு அரசு உரசினால் கொலீஜியம் முன்வருகிறது. நீதிபதிகளின் வசதி, வாய்ப்புகளில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் சுமோட்டோ முன்வருகிறது. நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பை யாரும் விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு முன் வருகிறது. அப்படி என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா நீதிபதிகள்?

இலவசங்கள் தேவையா? இலவசங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவையா என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நீதிபதிகள் நீதிபதிகளாக அமர்ந்து பேசும் பேச்சுக்களுக்கும், அளிக்கும் தீர்ப்புகளுக்கும் நீதிபதிகள் பதில் கூற கடமைப்பட்டவர்களா இல்லையா? கர்நாடக நீதிபதி குமாரசாமியின் கால்குலேட்டர் பிழையாய் காட்டியது வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் ஜெயலலிதா ஆண்டதற்கு யார் பதில் சொல்வது?

2 thoughts on “வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

  1. ஒன்றிய அரசின் இலவச வீட்டை பெறும் முதல் நீதிபதி என்.வி.இரமணா?

    செய்தி-1

    பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபத்யாய இலவசங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. இரமணா நேற்றைய விசாரணையில் “தேர்தல் பிரச்சாரங்களின் போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மட்டுமே வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், போட்டியிடும் தனிநபர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்லை. காரணம் தனி நபருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. எனவே தேர்தல் இலவசம் குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டும். இந்த பிரச்சினை தீவிரமானது என்பதில் சந்தேகவில்லை. ஒன்றிய அரசு இலவசம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டலாமே” என்றிருக்கிறார்.

    ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவோ “ இலவசங்கள் வழங்குவதை சில கட்சிகள் அடிப்படை உரிமையாகக் கருதுகின்றன. இலவசங்கள் வழங்குவதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்களும் உள்ளனர். இந்த விசயத்தில் நீதிமன்றத்துக்கு அரசு உதவும். நிபுணர்குழு அமைக்கப்படும் படசத்தில் 3 மாதத்தில் நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய முடியும்” என்றிருக்கிறார்.

    செய்தி-2

    நாளை உச்சநீதிமன்ற தலைமைப் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் நீதிபதி என்.வி.இரமணா

    செய்தி-3

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் போது நீதிபதிகளுக்கு சலுகைகள் (இலவசங்கள்) அளிப்பதற்கான விதிமுறைகளை சட்ட அமைச்சகத்திற்கான நீதித்துறை நேற்று திருத்தியுள்ளது. ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இதில் பல்வேறு இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    ஓய்வு பெறும் நாளில் இருந்து ஆறு மாதங்களுக்கு டெல்லியில் வாடகையின்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.

    ஓய்வு பெற்ற பின்னர் ஒராண்டுக்கு 24 மணி நேரமும் இலவச பாதுகாப்பு வழங்கப்படும்
    விமான நிலைய ஓய்வு அறைகளில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம்

    ஒரு ஓட்டுநர், மற்றும் அமைச்சக உதவியாளர் ஒருவரும் இலவசமாக நியமிக்கப்படுவார்.

    நாளை ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. இரமணா ஒன்றிய அரசின் இந்த சலுகைகளை ஏற்றுக் கொண்டார் என்றால் இலவசங்களை அனுபவிக்கும் முதல் நீதிபதியாக இருப்பார்.

    – அருள் எழிலன்

  2. கிடப்பில் கிடக்கும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சில:

    ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு- 1,116 நாட்களாக நிலுவையில் உள்ளது.
    16 ஆகஸ்ட் 2019 அன்று முதல் விசாரணை நடந்த இந்த வழக்கில் கடைசியாக விசாரணை நடந்தது – 2 மார்ச் 2020 (30 மாதங்கள் ஆகிறது.) 25 ஏப்ரல் 2022 அன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரிய போது “பரிசீலிக்கிறோம்” எனக் கூறிவிட்டார் தலைமை நீதிபதி.

    தேர்தல் பத்திரங்கள் எதிர்த்த வழக்கு – 1,817 நாட்களாக நிலுவையில் உள்ளது.
    ஏப்ரல் 5, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது – மார்ச் 29, 2020 (30 மாதங்களுக்கு முன்பாக.25 ஏப்ரல் 2022 அன்று இந்த வழக்கை விசாரிணைக்கு எடுக்கக் கோரிய போது “எடுத்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டார் தலைமை நீதிபதி.)

    இந்த தேர்தல் பத்திரங்களைக் கொண்டு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் மட்டும் பாஜக 10,000 கோடி ரூபாய்க்கு மேல் ‘நன்கொடை’ பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    UAPA சட்டத்திற்கு எதிரான வழக்கு: 1,105 நாட்களாக நிலுவையில் உள்ளது.
    செப்டம்பர் 9, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு அதற்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை -(35 மாதங்களாக.)

    UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட CAA வுக்கு எதிராக போராடிய JNU மாணவர் தலைவர் உமர் காலித், ஹத்ராஸ் பாலியல் வன்முறை – படுகொலை பிரச்சினை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே, ரோனா‌ வில்சன்‌ உள்ளிட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாசிச மோடி அரசு தனக்கு எதிராக போராடுபவர்களை, கருத்து தெரிவிப்பவர்களை, உண்மையை பேசுபவர்களை UAPA எனும் கொடூர அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு ஒடுக்குகிறது. எந்த விசாரணையும் இன்றி எவரையும் “பயங்கரவாதி” என முத்திரை குத்தக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது இந்த சட்டம்.

    இந்த சட்டத்தை பாதுகாப்பதன்மூலம் அந்த அடக்குமுறையை நீடிக்கச் செய்கிறது உச்சநீதிமன்றம்.

    கடந்த டிசம்பர் 9, 2021 தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா “படித்த இளைஞர்கள் சமூக எதார்த்தத்தில் இருந்து தள்ளி இருக்க முடியாது. தலைவர்களாக உதிக்க வேண்டும். அரசியல் உணர்வும், அறிவார்ந்த விவாதங்களும் தேசத்தை அரசியல் அமைப்புச் சட்டம் கனவு கண்ட திசையில் நகர்த்திச் செல்லும். “என்று கூறியுள்ளார்.

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு எதிர்த்த வழக்கு:
    மார்ச் 12, 2019 அன்று போடப்பட்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது –ஆகஸ்ட் 5, 2020 (24 மாதங்களுக்கு முன்பாக.)

    இப்படி விசாரிக்கப்படாமல் நிலுவையில் போட்டதன்‌ மூலம் உயர்சாதி ‘ஏழை’களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: 988 நாட்களாக நிலுவையில் உள்ளது.
    டிசம்பர் 18, 2019 அன்று முதல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு கடைசியாக விசாரிக்கப்பட்டது – ஜனவரி 20, 2020- (31 மாதங்களுக்கு முன்பாக. )

    முஸ்லிம் மக்களை மட்டும்‌ இந்திய முஸ்லிம், பிற‌ நாட்டு முஸ்லிம் எனப் பிரிப்பதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 14 அனைவருக்கும் (குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட) உறுதிபடுத்தும் சமத்துவத்தை, நிராகரிக்கிறது இந்த சட்டத்திருத்தம். இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய பலரும் சிறை வைக்கப்பட்டனர்.

    கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிரான வழக்கு: 189 நாட்களாக நிலுவையில் உள்ளது.
    மார்ச் 15, 2022 அன்று தொடரப்பட்ட வழக்கு இதுவரை ஒருமுறைக்கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கடந்த ஏப்ரல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரிய போது “இரண்டு நாட்களில்” எடுத்துக் கொள்வதாக கூறிய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா இன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆகிவிடுவார். வழக்கு இன்னும் பல மாதங்களுக்கு விசாரணைக்காக காத்திருக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்