கையூர் விவசாயிகள் சாகவில்லை

bf3303c0-5c97-42dc-ac4e-cd296e5c812e
கையூரில் எழுப்பப்பட்ட தியாகிகள் நினைவுத் தூண்

75 ஆண்டுகளுக்கு முன விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக  கண்ணணூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள் நான்கு இளைஞர்கள். 

சாவதற்கு சில நாட்கள் முன்பாக அவர்களில் ஒருவரான சிருகண்டன் கூறுகிறார், “இந்த நான்கு விவசாயி மகன்களைத் தூக்கிலிடலாம்.  ஆனால், கோடிக் கணக்கான விவசாயிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் அழித்து விட முடியாது.  அவர்கள் வாழ்க்கையை வளமாக்க கூடுதலாக உழைக்க முடியவில்லையே என்பதைத் தவிர வேறு எந்த வருத்தமும் எங்களுக்கு இல்லை” என்கிறார்.

இதோ,  நம் கண் முன்னே கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.  தமிழகம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் என நாடெங்கிலும் வயல் வெளிகளில் பிணங்கள் முளைக்கின்றன.

நீங்கள் உணவு உண்ணும் பழக்கம் உள்ளவரென்றால்,  சொல்லுங்கள் !

இந்தச் சாவுகளுக்கும் இந்த அரசமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா ?

நினைவுகள் அழிவதில்லை நூல் குறித்து தோழர் இரணியன்

***********************

சுதந்திரத்திற்கு முந்தைய கர்நாடகத்தின் கடைகோடி கிராமம் ஒன்றான கையூரில் எழுந்த விவசாயிகள் எழுச்சியை அன்றைய பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் சந்துபொந்துகளின் வழியாக ஒழிக்க முற்ப்பட்டதையும் கடைசிவரை செங்கொடிக்காகவும் விவசாயிகளின் எழுச்சிக்கும் துணை நின்று தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத்தியாகிகளான ,அப்பு,சிருகண்டன்,குஞ்ஞம்பு,அபுபக்கர் ஆகிய தோழர்களின் வீரக்காதையையும் சொல்லும் நாவல் தான் நினைவுகள் அழிவதில்லை.

சலூன் கடைகள் ,தேனீர்கடைகள் முதற்கொண்டு பெரிய நிறுவனங்களின் வரவேற்பு அறைகள் வரை செய்தித்தாள்கள் இல்லாத இடமில்லை இன்று .

ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவும் இந்திய கிராமங்களும் அதில் ஆட்சி செலுத்திய பண்ணையார்களும்,நிலப்பிரபுக்களும் ஏழை எளிய மக்களை படிப்பின் வாசம் அறியவிட்டதில்லை.

கல்வி தங்களுக்கான சவக்குழியை தோண்டும் என்று நிலப்பிரபுக்கள் அஞ்சினார்கள்

.உழுகுடிகளின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உழைப்பில் ஈடுபடுத்தி அவர்களை ஒட்டச்சுரண்டி வாழ்வதையே நோக்கமாக கொண்டிருந்தவர்களின் மத்தியில் நுழைந்து விவசாயிகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி போதித்து அதன் வழியாக நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கம்யூனிஸ்டுகள் போதித்தார்கள்.

அப்படி கல்வி போதிக்க வந்து மக்களை அரசியல் படுத்திய மாஸ்டர் என்பவரின் சீடர்களாக வந்து தோழர்களாக பரிணாமித்து செங்கொடிக்காக தங்களை அற்பணில்கிறார்கள் அப்புவும் சிருகண்டனும்.

பள்ளிப்பாடத்தோடு விவசாயிகளுக்காக மாலைநேரக் கல்வி போதிக்கிறார் மாஸ்டர்.

உள்ளூர் நிலவுடைமையாளர்களான நம்பியாருக்கும் ,நம்பூதிரிக்கும் இடையில் இருக்கும் பூசல்களை,அதிகாரப்போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கல்வி கற்றுக்கொடுக்கிறார் மாஸ்டர் .

அத்தோடு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நாளிதழ் வாசிப்பின் வழியாக போதித்து அரசியல் படுத்துகிறார் .

ஒற்றுமையாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்.

நிலப்பிரபுகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடிவரும் அரசை அதன் வர்க்க இயல்பை புரியவைக்கிறார்.

நிலப்பிரபுத்துவம் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இரண்டையும் எதிர்க்கும் வழி மக்கள் திரள் போராட்டங்களே என்பதை புரியவைக்கிறார்.

அப்பு ,சிருகண்டன் பாடகர் கண்ணன் ,அப்பு,சிருகண்டனின் அப்பா இவர்களின் முன் முயற்சியில் குஞ்ஞம்புவின் நிலத்தில் விவசாயிகளுக்கான செங்கொடி இயக்கம் உருவாகிறது.

விவசாய சங்கத்தினரை படைவீரர்களைப் போல பயிற்றுவிக்கும் பொறுப்புக்கு வருகிறார் அபுபக்கர்.

விவசாய சங்கத்தின் எழுச்சியை பொறுத்து கொள்ள முடியாத நம்பியார் போலிசின் உதவியை நாடுகிறார்.

ஒருநாள் செங்கொடி ஏந்தி தோழர்கள் அணிவகுத்து செல்லும் போது ஒரு போலிஸ்காரானால் தோழர்கள் தாக்கப்படுகிறார்கள்.தோழர்களின் பதில் தாக்குதலால் நிலைகுலைந்து போகும் போலிஸ்காரன் பயந்தோடி ஆற்றில் குதிக்கிறான் ,ஆற்றை கடக்க சக்தியற்று நீரில் மூழ்கிச்சாகிறான்.

இந்த எதிர்பாராத போலிசின் மரணத்தை பயன்படுத்தி ஆங்கிலேய அரசு ,அரசவன்முறையை பிரயோகிக்கிறது.அரசுக்கு எதிராக கலகம் செய்ததாக மாஸ்டர் ,அப்பு,சிருகண்டன்,அபுபக்கர் ,குஞ்ஞம்பு,சிறுவன் குட்டி கிருஷ்ணன் உள்ளிட்ட அறுபது நபர்களை கைது செய்கிறது .ஊருக்குள் நரவேட்டை ஆடிக்களிக்கிறது.

ஆண்டுக்கணக்கில் வழக்கு நடத்தி கையூரில் விவசாயிகளின் எழுச்சிக்கு வித்திட்ட அப்பு,சிருகண்டன்.சங்கம் அமைக்க இடம் கொடுத்த குஞ்ஞம்பு,படைகட்டிய அபுபக்கர் ஆகியோருக்கு தூக்குதண்டனை கொடுத்து திருப்தி அடைகிறது .

நேற்று இன்றல்ல என்றுமே முன்முடிவோடு விசாரணை நடத்தும் ஆளும் அதிகார வர்க்கம்,அதிகார வர்க்கத்தின் ஏவல்நாய்களாய் வாழும் போலிசு,மாற்றங்களை கண்டு அஞ்சும் நிலப்பிரபுக்கள் .இவர்களை எப்போதும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நிற்கும் செங்கொடி தோழர்கள் .

களங்கள் மாறினாலும் போராட்டக்கதைகள் இன்றும் தொடரவே செய்கிறது .

அப்பு சிருகண்டனின் நீட்சிகள் ,வாரிசுகள் இன்றும் செங்கொடியோடு அதே தீரத்தோடு இருக்கிறார்கள் .

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்

நினைவுகள் அழிவதில்லை ….

நினைவுகள் அழிவதில்லை நூல் குறித்து தோழர் வீரா பாலு.

கையூர் தோழர்கள் நினைவாக ஒலிக்கும் மலையாள பாடல்கள் ஒன்று, இரண்டு

நூலினை தரவிறக்க

1 thoughts on “கையூர் விவசாயிகள் சாகவில்லை

  1. நண்பரே …. ! எல்லோருக்கும் தெரிய வேண்டிய இந்த நால்வரின் வீர செயலை – முதலில் எழுத்தாளர் ” நிரஞ்சனா ” என்பவர் கன்னடத்தில் ” திரேஸ் மரண ” என்ற நாவல் எழுதினர் — அது மலையாளத்திற்கு சென்று பின் தமிழில் ” தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் ” மொழிபெயர்ப்பில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற நாவலாக வந்தது….

    அதுவே பின்னர் தமிழ் திரைப்படமாக அதே ” நினைவுகள் அழிவதில்லை ” என்கிற பெயரில் ஏப்ரல் 2013 வெளிவந்தது — பகத்சிங் கண்ணன் இயக்கத்தில் — பி . லெலினின் தொகுப்பில் வந்தது … பி. லெனின் அவர்களின் பங்களிப்பு அதிகம் சம்பளம் வாங்காமல் தன் பணியை செய்த உத்தமர் — பெயருக்கேற்ப நடந்துகொண்ட உன்னத எடிட்டர் …

    நண்பர்கள் தற்போதும் இந்த படத்தை யு டியூபில் கண்டு — பழைய வரலாரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் — ” தண்ணீர் விட்டா வளர்த்தோம் என்று பாரதி சுதந்திரம் பற்றி பாடினான் — ஆனால் இன்றும் குருதி — உயிர் விட்டே வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் — சுதந்திர இந்தியாவில் நம் ” விவசாயிகள் ” … காலம் மாறியதா … ?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்