”நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை
உலவுவதுண்டு.
எதிர்மறையில் ஏற்கும்
ஏக்கம் அது.
கருப்புக் கொடி நாட்டி
கருப்பு நாள் என்றறிவித்து
எதிர்ப்பை பதிவு செய்யும்
எதிர்வினைகளும் இங்குண்டு.
எதிர்ப்பின் மூலமே
இருப்பதாய் கட்டிக் கொள்ளும்
பொருளும் வந்து விடுகிறது அதில்.
விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும்
கருப்புதினம் எனும் துக்கத்துக்கும்
எதிராய்,
விடுதலை எனும் சொல்லின் வீச்சு
இந்த சுதந்திர நாளில்(!)
எங்கேனும் ஒட்டியிருக்கிறதா?
எனும் கேள்வியே மாற்று.
சட்டையில் மூன்றுநிறக் கொடியும்
நெஞ்சில் பூக்கும் பெருமிதமுமாய்
சுதந்திர தினம் கொண்டாடும்
அப்பாவிகளே!
எதில் இருக்கிறது என்று
இன்றை கொண்டாடுகிறீர்கள்?
உழைக்கும் மக்களின் பிரச்சாரத்தை மறுத்து
நகரின் சுவர்களில்
வண்ணாங்களாய் தீட்டி வைத்த
ஓவியங்களின் முதுகில்
சுவரொட்டி ஒட்டும் சுதந்திரம் உண்டா உனக்கு?
ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி
வரிச் சலுகையாய் உன் பணத்தை
கொட்டி முழுங்கும் முதலாளியை
இலவச முதலாளி என்றோ
விலையில்லா முதலாளி என்றோ
விளிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?
விளைச்சலை கொள்முதல் செய்யும் வசதிக்காக
கிராமப்புற சாலைகளை அமைத்துவிட்டு
மக்களுக்காக உள்கட்டுமான வசதிகள்
என உதார் விடுவது போல்
பசுமைப் புரட்சி எனும்
விவசாயிகளின் தூக்குக் கயிற்றை
முதலாளிகளின் செல்லத்திட்டம்
என்றழைக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?
மருத்துவ வியாபாரிகள்
கோடிகளில் லாபம் பெற
உன் உறுப்புகளை தானம் செய்வது
மனிதாபிமானம் என திரிக்கப்பட்டிருக்கிறதே,
அவசரம் என்று ஒதுங்க
அவர்களின் பளிங்கு கக்கூசை கூட
திறக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு?
பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும்
இந்த பணம் படைத்த உலகில்
உங்கள் உரிமைகளுக்காய் வீதியில் கூடி
போராடச் சுதந்திரம் தான் உண்டா உனக்கு?
ஆனால்,
முன்னேற்றம் எனும் பெயரில்
முதலாளி குவிக்கும் பொருட்களை
நுகர்ந்து ஏமாற
சுதந்திரம் உண்டு உனக்கு.
எந்தச் சுதந்திரத்துக்காக
நீ கொண்டாடுகிறாய்?
இல்லாத சுதந்திரத்துக்கா?
இருக்கும் சுதந்திரத்துக்கா?
என்ன பொருளில் நீ கொண்டாடினாலும்
உன்னை அடிமையாய் ஆளப்படுவதற்ற்கு
நீயே வழங்கும் சுதந்திரம் அது
என்றே கொள்ளப்படும்.
திணிக்கப்படும் கொண்டாட்டங்களை மறு,
மறுக்கப்படும் உரிமைகளுக்கான சட்டங்களை மீறு
திரண்டு வீதியில் போராடு
அதுவே உன் சுதந்திரத்தைச் சமைக்கும்.
arumai
nice and thanks to share your emotions on Aug.15th
ஓடிப்போ சீனாவுக்கு.
அனைத்தும் உண்மை… சிறப்பாக முடித்துள்ளீர்கள்… பாராட்டுக்கள்… நன்றி…
ஏன்…? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்… ஜெய் ஹிந்த் !!!