ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிரா இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தாங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘கணவனைப் பார்க்க வேண்டும்’ என்ற ஒரு மிகச் சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்திற்காக பிள்ளைகளுடன் அவரைக் கைது செய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்ச்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள் வேலிச் சிறையில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்க்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்த கொடும் சிறையிலிருந்து ஈழத்தமிழ் மக்களை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூட்டங்களை இழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா ? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான். இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைப் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர். இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத் தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதபத்துக்குறிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குறிய குற்றவாளிகளாகவே நடந்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்றே தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் கியூ பிரிவு உளவுத்துறை தான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்களின் மீது புலி என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூடக் கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்ரிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக்கூட பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கைகால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப் படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒருவகை ஆயுள் தண்டனை.

சிற்ப்பு முகாம்களில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும் போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூட பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குள் முகாமிற்கு திரும்ப வேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும் தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்குச் சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலிதீன் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப்படாததால், குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கும் மின்சார கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு இரவு மட்டும் தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்ற தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆஅரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆளனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசால் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளை தாங்க முடியாமல் தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச்செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். தாய்த் தமிழகம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள்கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான் ஈழ அகதிகளை கௌரவமாக நடத்துகின்றன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித் தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்க்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதிலை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால் ஐநா அதிகாரிகளை அகதி முகாம்களுக்குள் தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்த போதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே காண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணைத் தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலையைக் கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒருமுறை வெளியேறி விட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்தி விட்டது ஜே அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக் கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெயா அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெயா அரசு. ராஜிவ் கொலையைத்க் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர் ஜெயலலிதா. இன்றைக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டுக்கு திரும்புவதா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை இரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி, தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்த போராட்டங்கள் ஈழ மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்ப வாதிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சி தான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேச பாட்டாளி வர்க்கம் எனும் முறையில் நமது கடமை.

 சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
 அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக்குடியுரிமை வழங்கு!
 ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
 கவுரவமான வேலை வாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்