கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின்
கைகளில் இன்னும் காயவில்லை
மலம் அள்ளிய ஈரம்.
ஒருமுறை கைதட்டிக் கொள்வோம்
ஐந்து செயற்கைக் கோளுடன்
வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட்.
வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம்
ஆனால் என்ன?
தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம்.
கொஞ்சம் பாராட்டலாம்
ஊனமுற்றோர்க்கு மோடி
சக்கர நாற்காலி வழங்கினார்.
இடுகாட்டுக்கு பாதையில்லை
போலீசே பிணம் திருடி
புதைத்த கொடூரம்.
பெருமிதம் கொண்டால் என்ன?
பன்னாட்டு தரத்தில் எட்டு வழி
வழுக்கும் சாலைகள்.
இரு கால், ஒரு கை செயல் தராவிடினும்
அபாயகரமான பயங்கரவாதி
பேராசிரியருக்கு நீதிமன்றம் தந்த பெயர்.
இந்தியராய் பெருமை கொள்வோம்
பதான்கோட்டில் தீவிரவாதிகள்
சுட்டுக் வீழ்த்தப்பட்டனர்.
பனங்கள் இறக்க அனுமதிக்க மாட்டோம்
டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயித்தவாறே
சட்டமன்றத்தில் அமைச்சர்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
வெள்ள நிவாரணம்
முறையாக கொடுக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை இறங்க இறங்க
பெட்ரோல் விலை உயரும்
இது மோடி விதி.
அதனால் என்ன?
பென்ஸ் கார் இரண்டு லட்சம்
திட்டம் இருக்கிறதே.
அடடே! மறந்து விட்டேன்.
மக்கள் வதங்கினால் என்ன?
இன்று குடியரசு தினம்.
மக்கள் வதங்கினால் என்ன?
இன்று குடியரசு தினம்.