

கோவை டவுண்ஹால் பகுதியில், பாஜக வானதியை ஆதரித்து பேச வருகிறார் யோகி என்பதை சாக்கிட்டு வானரக் கூட்டம் ஒரு வன்முறை வெறியாட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈருருளி (இருசக்கர வண்டி) ஊர்வலம் என்ற பெயரில் அந்த விலங்காண்டிகள், கடைகளை மூடச் சொல்லி அடாவடி செய்ததுடன், கேள்வி எழுப்பியவர்களை தாக்கி, கல்லெறிந்து அச்சமூட்டி இருக்கிறது. பள்ளிவாசல்கள் முன்னின்று வெறிக்கூச்சல் இட்டிருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து பேயாட்டம் ஆடியிருக்கிறது.
இவை எதுவும் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே வட மாநிலங்களில் நிகழ்ந்து நாம் செய்திகளாக செவியுற்றவை தான். 2002ல் குஜராத்தில் வெள்ளோட்டம் விடப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டக் கும்பல், வட மாநிலங்கள் பலவற்றில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி தங்களை கூர் தீட்டிக் கொண்டு தற்போது தமிழ்நாட்டிலும் தன் கணக்கை தொடங்கி இருக்கிறது.
இதே கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வன்முறை வெறியாட்டக் கும்பல் தன் கைவரிசையை காட்டியிருக்கிறது. என்றாலும், அப்போது அதற்கு காவலர் படுகொலை எனும் தொடக்கப்புள்ளி தேவையாய் இருந்தது. இப்போது அது போன்ற எந்த தொடக்கப்புள்ளியும் இல்லாமல் நேரடியாகவே எந்தக் கணத்திலும், எந்த இடத்திலும் எங்களால் இயங்க முடியும் என்பதைக் காட்டி இருக்கிறது அந்த வன்முறை வெறியாட்டக் கும்பல். இது தான் தமிழ்நாட்டுக்கு புதிய விதயம்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே இராணுவத்தினர் எல்லா இடங்களிலும் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர். மாநில காவல்துறை இருக்கிறது. இந்த இரண்டும் இந்த நிகழ்வில் அந்த வன்முறை வெறியாட்டக் கும்பலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஒரு பள்ளிவாசலின் முன்பு காவலர்கள் கையைக் கோர்த்து மனிதச் சங்கிலி போல் நிற்கிறார்கள். பார்த்த காணொளிகள் எதிலும் எந்தக் காவலரிடமும் கையில் கம்பு கூட இல்லை. ஆனால் வாக்கு கேட்டு வந்ததாக கூறப்பட்ட அந்த வன்முறை வெறியாட்டக் கும்பலின் கைகளில் கற்களும், செங்கற்களும் இருந்தன. இது என்ன மாதிரியான திட்டமிடல்? ஒரு லத்தி கூட இல்லாமல் காவல்துறையினர் அனுப்பப்பட்டதன் காரணத்தை தமிழ்நாட்டு காவல் துறை கூறுமா? இது தமிழ்நாட்டுக்கு புதிய விதயம் அல்லவா?
மக்கள் தங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக, அரசியல் கொரிக்கைகளுக்காக போராட்டம் செய்யும் போது காவல்துறை நடந்து கொள்ளும் விதத்தை பார்த்திருக்கிறோம். துப்பாக்கிக் குண்டுகள் சுடப்படுவதற்கு ஆயத்தமாய் இருக்கும். இங்கோ கையில் குச்சி கூட இல்லாமல் பரிதாபமாக நிற்கிறது. ஒருவேளை இன்னொரு செல்வராஜை எதிர்பார்க்கிறார்களோ.
ஆனால் கோவை நகர மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தார்கள். இது தான் பாராட்டப்பட வேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய, அந்த வன்முறை வெறியாட்டக் கும்பலை மூக்குடைபட வைத்த விதயம். இது தமிழ் நாட்டுக்கு பழமையானது தான், வழமையானது தான்.
அதேநேரம் இஸ்லாமிய மக்களை எதிர்வினையாற்ற வைப்பதும் அந்த வன்முறை வெறியாட்டக் கும்பலின் மூளையான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய பாசிசங்களுக்கு எளிதானது தான். ஏற்கனவே பல கைக்கூலிகளை அவர்கள் உருவாக்கியும் இருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று நிகழ்ந்தது ஒரு எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கை செயல் வடிவம் பெறும்போது தான் தமிநாட்டு மக்களின் பொருத்தமான அமைதியையும், பொருத்தமான எதிர்வினையையும் காட்ட வேண்டும். ஏனென்றால் குஜராத் தான் எங்களுக்கு காட்டப்பட்டிருக்கும் முன்மாதிரி என்று காவல்துறை காட்டி விட்டது.
திமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது என்பது இதற்குச் செய்யப்படும் சிறு தொடக்கம் மட்டும் தான்.