ஒரு சம்பவம் நடந்த போது .. ..

முகநூல் நேரலை 1

மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை வீசிய போது, மீண்டும் தொடர்ந்து விமர்சித்துப் பேசி மீதமுள்ள இரண்டாவது செருப்பையும் வீச வைத்து இரண்டு செருப்பையும் எடுத்து பயன்படுத்திய பகலவன் பெரியாரின் பெயரால் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அந்த புகாரை செய்திருப்பவர்கள்.

அந்த நேரலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லூலு குழுவின் பாலியல் சுரண்டல் குறித்து தமிழ் இணையப் பரப்பில் தொடர்ந்து இணைந்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். என்றாலும், தேவைப்பட்டால் பின்னர் அதை விரிவாக அலசலாம். இப்போது தோழர் தமிழச்சி குறிப்பிட்ட அந்த ‘சம்பவம்’ என்பது என்ன? அந்த சம்பவம் நடந்த போது அதை பெரியாரின் பெயரால் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை கீழ்க்கண்ட இரண்டு முகநூல் நேரலைகளில் நீங்கள் காணலாம்.

முகநூல் நேரலை 2

முகநூல் நேரலை 3

இப்போது சில கேள்விகள் எழுகின்றன. 1. தோழர் ஒருவர் ஒரு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது சில குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அதை விசாரிக்க வேண்டும் என்று கோரி அதை மனுவாக கொடுக்க வருகிறார். ஒரு பெரியாரிய அமைப்பினர் அதை எப்படி அணுக வேண்டும்? 2. அமைப்புத் தோழர்கள் சிலரைக் கொண்டு, புகார் கொடுக்க வருபவரை சாலையிலேயே தடுத்து நிறுத்தி கலகம் செய்து, (பெரியார் கலகம் செய்யுங்கள் என்று சொன்னது இது போன்ற கலகத்தைத் தானா?) தகாத வசைச் சொற்களை வீசி, அச்சுறுத்தி விலகச் செய்து விடலாம் என்ற நோக்கில் செயல்பட்டிருக்கிறார்களே. ஒரு பெரியாரிய அமைப்பின் தகுதி இது தானா? 3. தோழர் குறிப்பிடும் குற்றச்சாட்டை அவர்கள் ஏற்கிறார்களா? மறுக்கிறார்களா? என்பது வேறு விதயம். ஆனால் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் விதத்தைக் கொண்டே அதன் உண்மைத் தன்மை விளங்கி விடாதா? இன்னும் இது போன்ற வேறு சில கேள்விகளும் இருக்கின்றன. என்றாலும், முதன்மையான இந்தக் கேள்விகளுக்கு அந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக இந்த நேரலைகளை பார்த்தவர்களும், ஓரளவுக்கு இது குறித்து அறிந்தவர்களும் இதற்கான பதிலை சிந்திக்க வேண்டிய நேரம் இது.

அந்த அமைப்பிடம் மனு கொடுப்பதால் விசாரிக்கப்பட்டு அந்தக் குற்றச் சாட்டின் மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் எனும் மயக்கம் தமிழச்சி தோழருக்கு கூட இருக்காது என எண்ணுகிறேன். ஆனால் அந்த அமைப்பினர், மனு கொடுக்க வருவதையே தடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் செய்த தகராறில் ஓரிரு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வதும் இன்றியமையாதது என எண்ணுகிறேன்.

பெரியார் சரவணன் என்பவர் மீதான சிக்கலை ஏன் இங்கு கொண்டு வந்து முறையீடு செய்கிறீர்கள்? அடிப்படையில் இது பெரியார் சரவணன் என்பவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பானது தான் என்றாலும், இந்த மனுவில், தோழர் கொளத்தூர் மணியின் அறிக்கை குறித்த எதிர்வினைகளும் கேள்விகளுமே இடம் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த மனுவை இங்கு கொடுக்காமல் வேறு எங்கு கொடுக்க வேண்டும்? தவிரவும், இது முதல் நடவடிக்கை இல்லை. ஓராண்டுக்கும் மேலாகவே பெரியார் சரவணன் என்பவர் குறித்து அவர் செய்துவரும் குற்றங்கள் குறித்து கொளத்தூர் மணி அவர்களுடன் தமிழச்சி தொலைபேசி வாயிலாக பேசியும், பகிரி(வாட்ஸ் ஆப்) வழியாக அதற்கான சான்றுகளை அளித்திருந்த பின்னரும் கூட, பெரியார் சரவணன் என்பவருடன் ஒரே மேடையில் தோன்றுவதும், அவருக்கு ஆதரவாக அறிக்கை விடுவதும் ஏன்? என்பது தான் தமிழச்சியின் கேள்வி. இந்தக் கேள்வியை வேறு யாரிடம் கேட்பது? அல்லது வேறு எங்கு கேட்பது?

வேறு ஒரு நாட்டில் இருந்து விசிட்டராக (விருந்தாளியாக) வந்திருக்கும் ஒருவர் எங்கள் தலைவர் மீது குற்றம் சாட்டலாமா? பகுத்தறிவையே மூச்சாக கொண்டிருந்த பகலவன் பெரியார் குறித்து கொஞ்சமேனும் அறிந்திருக்கும் யாரும் இப்படி ஒரு கேள்வியை எழுப்ப முடியுமா? ஒருவேளை வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் இங்குள்ளவர்கள் குறித்து குற்றச்சாட்டு எதையும்கூறக் கூடாது என்பது சட்டத்தின் நிலையாக இருந்தாலும் கூட (அப்படி ஒரு நிலை சட்டத்தில் இல்லை) அந்த உரிமை வேண்டும் என்று போராடுபவராகத் தான் பெரியார் இருந்திருப்பரே அன்றி, இவர்கள் போல் அதையே கேள்வியாக எழுப்பி தடுப்பதற்கு தகராறு செய்திருக்க மாட்டார்.

இந்தக் கேள்வியில் இன்னொரு கோணமும் இருக்கிறது. ஒருவருக்கு எளிதாக இது போன்ற கேள்விகள் (வேறு ஒரு நாட்டில் இருந்து விசிட்டராக (விருந்தாளியாக) வந்திருக்கும் ஒருவர் எங்கள் தலைவர் மீது குற்றம் சாட்டலாமா?) எழும் வாய்ப்பு இருக்கிறதா? இல்லை. என்றால் இதன் பொருள் என்ன? இது குறித்து அவர்கள் ஏற்கனவே கூட்டம் நடத்தி இருக்கிறார்கள், ஆலோசனை செய்திருக்கிறார்கள், எப்படி எதிர் கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார்கள், அதில் என்னென்ன கேள்விகளை எழுப்ப வேண்டும் என ஆய்து முடிவு செய்திருக்கிறார்கள், என்பவை தானே இதன் பொருளாக இருக்க முடியும். ஒரு மனு கொடுக்க வருவதை தடுக்க இவ்வளவு முன்னேற்பாடுகள் ஏன் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா?

இதை புரிந்து கொள்வது எளிதானது தான். பெண்களுக்கு எதிரான ஒரு பெருங்குற்றம் இணையப்பரப்பின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடக்கிறது. அதை தடுக்க வேண்டும், அதில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தோழர் தமிழச்சி கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறார், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அந்தப் போராட்டத்துன் ஒரு சரடு தான் இந்த மனு கொடுக்கும் சம்பவம். இதில் நாம் எந்தப் பக்கத்தில் நிற்கப் போகிறோம் என்பது தான் நம் புரிதலை வெளிப்படுத்தும் முதன்மையான கேள்வி.

பெரியாரிய, இடதுசாரிய, முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் இந்த எளிய கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள் என நம்புகிறோம்.

கீழே தோழர் தமிழச்சி கொடுக்க விரும்பிய மனு.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்