ஹிஜாபும் பூனூலும்

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கல்லூரிகளை மையமாகக் கொண்டு ஒரு சிக்கல், மத மோதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனும் உத்தரவு போட்ப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் படிக்கட்டுகளிலும் வெளியிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தின. ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி ஊடாக காஷ்மீரின் மஹ்மூதா முப்தி வரை இதைக் கண்டித்து குரல் கொடுத்தார்கள். மாணவிகளும் தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க ஆணையிடுமாறு கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

அவ்வப்போது கல்லூரிகளும், வேறு நிறுவனங்களும் சில போதுகளில் திடீரென தடை விதிப்பதும், பின்னர் அனுமதிப்பதும் உலகம் முழுவதிலும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இப்போது இதில் புதிய சிக்கல் என்னவென்றால், ஏபிவிபி எனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஹிஜாப் அணிந்து வருவதை அனுமதித்தால் நாங்கள் காவித் துண்டு அல்லது காவி ஷால் அணிந்து கல்லூரிகளுக்கு வருவோம் என்கிறார்கள். அதாவது ஆடைக் கட்டுப்பாடு, சீருடை சார்ந்த பிரச்சனையாக இருந்ததை மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றுகிறார்கள். இது தான் ஹிஜாப் தடை எனும் இந்தப் பிரச்சனையின் அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது.

இந்த இடத்தில் நடுநிலையாளர்கள் என தங்களை கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லது முற்போக்காளர்களுக்கு ஒரு உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்தால் அது இஸ்லாமிய பிற்போக்குத் தனத்துக்கு ஆதரவு கொடுத்தது போல ஆகிவிடாதா? என்பது தான் அந்த உளவியல் சிக்கல். ஆனால் இதில் முதன்மையான பிரச்சனை ஆர்.எஸ்.எஸ் இதனை மத மோதலாக உருவகப் படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான அடுத்த தாக்குதலாக வடிவமைக்கிறது என்பது தான்.

ஹிஜாப் அணிவது பிற்போக்குத் தனமா இல்லையா எனும் கேள்வி இங்கு எழவே இல்லை. ஏனென்றால் அது பெண்களுக்கான கண்ணியம், பாதுகாப்பு என்று கூறப்படுவதெல்லம் வெறும் பிதற்றல்களே என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. அது வெறும் மதக் கூற்று என்பதைத் தாண்டி அதற்கு எந்த முதன்மைத் தனமும் இல்லை. ஆனால் அந்தக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு ஏற்கனவே அனுமதி இருந்ததா இல்லையா? அனுமதி இருந்தது என்றால் தற்போது திடீரென தடை போடுவதற்கான காரணம் என்ன? போன்றவை விளக்கப்பட்டிருக்கிறதா. எந்த விளக்கமும் இல்லை என்றால் இது திட்டமிட்டு உருவாக்கப்படும் மத மோதலே என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

ஏற்கனவே, ஹிஜாப் அணிந்து வர அனுமதி இருந்தது, நாங்கள் அணிந்து கொண்டு தான் இருந்தோம். இப்போது திடீரென வகுப்பறைகளுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது மாணவிகளின் கூற்று. இதை மத அடையாளங்களை நீக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதும், இன்றைய காலங்களில் நச்சுப் பண்பாடாக பரவி வரும் கையில் கலர் கலராக கயிறு கட்டிக் கொள்வதும், சிலுவை அணிந்து கொள்வதும், அவ்வளவு ஏன் பூனூல் அணிந்து கொள்வதுமே மத ஜாதி அடையாளங்களே. இவைகளை நீக்க உத்தரவிட முடியுமா? குறிப்பாக பூனூல் அணிந்து கல்லூரிகளுக்கு வரக் கூடாது என தடை விதிக்க முடியுமா?

என்றால் பிரச்சனை எங்கு இருக்கிறது? ஏற்கனவே, பார்ப்பனிய மதம் இஸ்லாமிய மத நடவடிக்கைகளை நேரடியாக கேள்விக்கு உள்ளாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அதன் மூலம், இதுகாறும் தாங்கள் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்தவர்களை இந்து எனும் போலிப் பெயரால் ஒருங்கிணைத்தார்கள். அதன் நீட்சி தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும். நீ மீசை வைக்கிறாய் தாடியை மழிக்கிறாய், அவன் மீசைய மளிக்கிறான் தாடியை வைக்கிறான் என்று எதிரெதிராக கொம்பு சீவி விட்ட அனுபவத்தின் தொடர்ச்சியாகத் தான் அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நீ காவித் துண்டு அணிந்து கொள் என்பது வருகிறது.

ஆர்.எஸ்.எஸ், பாஜக தன் அரசியலையும் இந்த திசையில் தான் நகர்த்திக் கொண்டு செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் சின் தேர்தல் கட்சியாக பாஜக இருந்த நிலை மாறி, இந்து எனும் பார்ப்பனிய மதத்தின் ஒரே அடையாளமாக பாஜக ஆகி விட்டிருக்கிறது. பாஜக வுக்கு எதிராக பேசுவது இந்துக்களுக்கு எதிராக பேசுவது எனும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் லாவண்யா விதயத்தில் ஒன்றிய அரசு அனுப்பிய குழுவில் இடம் பெற்றிருந்த விஜயசாந்தி எனும் நடிகை, திமுகவுக்கு இந்துக்களின் ஓட்டு வேண்டாமா என்று கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது பாஜகவுக்கு எதிராக பேசுவது இந்துக்களுக்கு எதிராக பேசுவது என்பது தான் அதன் பொருள். இதை பிற கட்சிகளும் கூட ஓரளவுக்கு நம்ப ஆரம்பித்து விட்டன.

இந்த அடிப்படைகளிலிருந்து தான் இந்த ஹிஜாப் பிரச்சனையை அணுக வேண்டுமே அல்லாது, இஸ்லாமிய பிற்போக்குத் தனத்துக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டுமா எனும் கேள்வியை எழுப்புவது அரசியல் உள்ளீடற்ற வெற்றுக் கேள்வியாகவே இருக்கும்.

ஹிஜாப் அணியத் தூண்டுவது நம்முடைய நோக்கமல்ல, அது ஆணாதிக்கப் பார்வை என்பதிலும் பெண்ணடிமைத்தனம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் அதை அணிந்து கொண்டு வரும் உரிமை மத அடிப்படையிலும், சட்ட அடிப்படையிலும் அவர்களுக்கு உண்டு. ஹிஜாப் அணிவது பிற்போக்குத் தனம் என்றாலும் ஒரு மத அடையாளமாக அதை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு வரும் உரிமை அவர்களுக்கு உண்டு.

இதில் இன்னொரு பார்வையும் இருக்கிறது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய பெண்களுக்கு மதக் கடமை. அதை அணியாமல் பொது இடங்களுக்கு வருவது அவர்கள் நம்பும் மதத்தின் அடிப்படையில் குற்ற நடவடிக்கை. ஆனால், காவித் துண்டு அணிவது அல்லது காவி ஷால் அணிவது என்பது தங்களை இந்துக்கள் என்று நம்பும் பார்ப்பனிய மத அனுதாபிகளுக்கு மதக் கடமையல்ல, அணியாமல் இருப்பது குற்ற நடவடிக்கை அல்ல. அப்படி இருக்கும் போது ஹிஜாப்பை அனுமதித்தால் காவித்துண்டு அணிவதையும் அனுமதிக்க வேண்டும் என்பது திட்டமிட்ட கலவர நடவடிக்கை.

பூனூல் உட்பட எந்தவித மத அடையாளங்களுக்கும் அனுமதி இல்லை என்று கல்லூரிகள் நிலைப்பாடு எடுத்தால் முதல் ஆளாக அதை வரவேற்று உடனிருக்கலாம். ஆனால் பூனூல் உட்பட ஏனைய மத அடையாளங்களை அனுமதிக்கும் போது ஹிஜாபை மட்டும் அனுமதிக்க மட்டோம் அது அமத அடையாளம் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் பிரித்தாளும் சூழ்ச்சி. அந்த சூழ்ச்சிக்கு முற்போக்காளர்களும் இரையாவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

2 thoughts on “ஹிஜாபும் பூனூலும்

  1. பெண் தனது அவயங்களை மறைப்பது பெண் அடிமைத்தனம், தன் அழகை எல்லோருக்கும் விருந்தளிப்பது சுதந்திரம் அப்படித்தானே?

  2. தெரியாமல் தான் கேட்கிறேன். எப்படி இவ்வளவு மோசமாக, தட்டையாக சிந்திக்கிறீர்கள்? நீங்கள் கூறியிருப்பது போல் நான் எந்த இடத்தில் கூறி இருக்கிறேன். உங்கள் கற்பிதங்களை எல்லாம் என் மீது திணிக்காதீர்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்