உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், அநியாயமான தன்மைகளுடன் ஆக்கிரமித்து வருவது போலவுமான ஓர் உருவை ஏற்படுத்துகின்றன.

ஈராக் அமெரிக்க போர் நடந்து கொண்டிருந்த போது ஊடகங்களை ஆக்கிரமித்த செய்திகளோடு இப்போது வரும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். படைகள் இந்த இடத்துக்கு முன்னேறி விட்டன, இந்த நகரம் வீழ்ந்து விட்டது, அந்த நகரம் கைப்பற்றப்பட்டு விட்டது. ராணுவத்தினரை ஈராக் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள், பெருமித உணர்வை கொடுக்கும் வண்ணம் சேதமடைந்த கட்டிடங்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன அப்போது. போருக்குச் செல்லும் வீரன் குடும்பத்தை பிரியும் கண்ணீர் செய்தி, உக்ரைனிலும், ரஷ்யாவிலும் போருக்கு எதிராக மக்கள் போராடும் செய்திகள், சோக உணர்வை கொடுக்கும் வண்ணம் சேதமடைந்த கட்டிடங்கள் என்று இப்போது செய்திகள் வெளிவருகின்றன. வெண்ணெய், சுண்ணாம்பு வித்தியாசத்தை ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. காரணம் உலகளாவிய அளவில் அனைத்து ஊடகங்களுக்கும் செய்திகளை வழங்குவது வெகுசில அமெரிக்க ஆதரவு செய்தி நிறுவனங்களே. எனவே ஊடகங்களின் வரும் செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போர் குறித்த முடிவுக்கு வருவது பிழையான முடிவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இதை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான தனிப்பட்ட போர் என்றும், ரஷ்ய ஏகாதிபத்தியம் தன்னுடைய அண்டையிலுள்ள உக்ரைன் எனும் நாட்டை ஆக்கிரமிக்கிறது என்றும் பார்ப்பது அமெரிக்கா எனும் ஒற்றைத் துருவ மேலாதிக்க வெறி கொண்ட ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான கண்ணோட்டம். அதிலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எனும் முன்னாள் நகைச்சுவை நடிகரை காதாநாயகனாக கொண்டாடுவது என்பதை அமெரிக்க அடிவருடித் தனம் என்றே கொள்ளலாம்.

இந்தப் போர் இந்த வாரத்தில் தொடங்கி இருந்தாலும் இதற்கான அடிப்படைகள் மிக நீண்டகாலமாக இருந்து கொண்டிருக்கின்றன. ஜார் ரஷ்யாவில் உக்ரைன் என்றொரு நாடே கிடையாது. சோவியத் யூனியன் உருவான பிறகு தேசிய இனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையிலேயே உக்ரைன் எனும் நாடு உருப் பெற்றது. அமெரிக்க ஒற்றை மேலாதிக்கத்தின் நலனுக்காக சோவியத் யூனியனை சிதைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் அமெரிக்கா தலைமையிலான  (North Atlantic Treaty Organisation – NATO) நோட்டோ எனும் அமைப்பு. இதில் இணையும் நாடுகள் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புடன் வெளியுறவுக் கொள்கையிலும் இணக்கமாக இருந்து செயல்படும். நோட்டோவிலுள்ள ஏதோனும் ஒரு நாடு தாக்கப்பட்டால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அந்த நாட்டை எதிர்த்துப் போரிடும். இது நோட்டோ அமைப்பு நாடுகள் குறித்த சுருக்கமான புரிதல். 1991ல் கோர்பச்சேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பது வரை சென்று சோவியத் யூனியன் உடைக்கப்பட்டது. அப்போது செய்யப்பட்ட முதன்மையான ஒப்பந்தம் நோட்டோவைக் கலைக்க வேண்டும் என்பது. இதை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது. ஆனால் இன்றுவரை நோட்டோ கலைக்கப்படவில்லை.

நோட்டோ கலைக்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், முன்பு சோவியத் யூனியனில் இணைந்திருந்த பல நாடுகளை நோட்டோவில் இணைத்துக் கொண்டது அமெரிக்கா. உக்ரைனையும் அவ்வாறு இணைத்துக் கொண்டால் ஏற்கனவே பொருளாதார ரீதியில் பலவீனமாக இருக்கும் ரஷ்யாவை, இராணுவ ரீதியிலும் பலவீனப்படுத்த முடியும். வேறு பல நாடுகளை நோட்டோவில் இணைத்துக் கொண்டபோது அமைதியாக இருந்த ரஷ்யா, தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ரஷ்யர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும், பெரிய நாடான உக்ரைனை நோட்டோவில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால், ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு மிகவும் முதன்மையானது. குளிர்காலங்களில் எரிவாயு இல்லையென்றால் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பிரச்சனையானது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கு ரஷ்யா தான் குழாய் மூலம் எரிவாயு வழங்கி வருகிறது. இதைத் தடுத்து அமெரிக்க எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நோட்டோ பிரச்சனையை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதற்காக அட்லாண்டிக் கடல் வழியாக குழாய் மூலம் திரவ நிலையில் எரிவாயுவை அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளின் கடற்கரைகளில் பல LGN terminal அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் ரஷ்ய எரிவாயுவை விட அமெரிக்க எரிவாயு இரண்டு மடங்கு விலை கொண்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு நெருக்கமாக இருக்கும் வரை அமெரிக்க எரிவாயுவுக்கான ஒப்பந்தம் சிக்கலாகவே இருக்கும். இதனால் பல விதங்களில் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதற்கான துருப்புச் சீட்டு தான் உக்ரைன்.

ரஷ்யாவுக்கான வணிக கடல் வழிகளில் பலவற்றை நோட்டோவில் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்டு தடுத்திருக்கிறது அமெரிக்கா. எடுத்துக்காட்டாக துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Bosporus நீரிணை, கிரீன்லாந்தின் Guik gap போன்ற நீரிணைகள் வழியாக ரஷ்யக் கப்பல்கள் செல்ல முடியாது. இன்னொரு சிக்கல் என்னவென்றால் ரஷ்யாவை ஒட்டியுள்ள கடல்கள் துருவப் பகுதி என்பதால் குளிர் காலத்தில் உறைந்து விடும். போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது. குளிர்காலத்தில் உறையாத ரஷ்யாவின் ஒரே துறைமுகம் Sevestatopol துறைமுகம். இது உக்ரைனை ஒட்டி உள்ளது. உக்ரைனை நோட்டோவுக்குள் கொண்டு வந்து விட்டால், அது ஒட்டுமொத்தமாக ரஷ்யாவை முடக்கியதற்கு ஒப்பானது.

உக்ரைனின் முன்னாள் அதிபராக இருந்த யனுகோவிச் ஓரளவுக்கு ரஷ்ய ஆதரவு போக்கைக் கொண்டிருந்தார். இவர் 2014 ல் திட்டமிடப்பட்ட் கலகக்காரர்களின் கலவரத்தால் பதிவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதன் பிறகு தான் தன்னுடைய துறைமுகத்தை முடக்கும் முயற்சிகளை தடுக்க ரஷ்யா களமிறங்கி கிரீமியாவை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்காவின் ரஷ்யக் கடல்வழியை முடக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் உக்ரைனை ரஷ்யாவை சீண்ட தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதை சரியாகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு ஒப்பீட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம். வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தை பெட்ரோ டாலர் மூலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்காக மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் ரவுடி நாட்டை எவ்வாறு அமெரிக்கா உருவாக்கியதோ, அதே போல, ஐரோப்பாவின் எரிவாயு சந்தையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்காக உக்ரைன் எனும் நாட்டை ரவுடி நாடாக உருவாக்க எண்ணுகிறது அமெரிக்கா.

கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ், ரொன்ஸாக் ஆகிய பகுதிகளில் ரஷ்யர்கள் அதிகம் இருக்கிறார்கள். உக்ரைனில் உருவாக்கப்பட்ட புதிய நாஜிக் குழுக்கள், அந்தப் பகுதிகளில் வாழும் ரஷ்யர்களை தாக்கி இனப்படுகொலை செய்யவும், ரஷ்யாவுக்கு எதிராக பரப்புரை செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்குகின்றனர். அதாவது, இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் வட மாநிலங்களில் திடீரென பசுக் குண்டர்கள் உருவாகி இஸ்லாமிய மாட்டு வியாபாரிகள் சிலரை கொலை செய்தது போல. இப்படி தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான பதிலடியாகத் தான் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.

தற்போது போர் நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்காவுக்கு ஆதரவான, அதாவது உக்ரைனுக்கு ஆதரவான கருத்துகள் பெரிதாக பரப்பப்படுகின்றன. அதில் முதன்மையானது உக்ரைன் இறையாண்மையுள்ள நாடு. அந்நாடு யாருடன் கூட்டணி சேர்வது என்பது அதன் தனிப்பட்ட முடிவு. இதில் ரஷ்யா எப்படி தலையிட முடியும்? எனும் கேள்வி. நோட்டோவில் சேர்வதா வேண்டாமா என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு முடிவு செய்வது, உக்ரைனின் இறையாண்மையான முடிவாக இருக்குமா? அப்படி இறையாண்மைப்படி எடுக்கும் முடிவு இன்னொரு நாட்டை பாதிப்பதாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அல்லது அதன் விளைவுகளையும் சேர்த்து பொறுப்பேற்றுக் கொள்வது தானே நேர்மை. உக்ரைனின் இறையாண்மை குறித்து கவலைப்படுபவர்கள் நோட்டோவின் நோக்கம், அதன் செயல்பாடுகள், அதன் அரசியல், அதன் மேலாதிக்கம் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறார்கள்? அந்தக் கருத்தோடு பொருத்திப் பார்த்துத் தானே உக்ரைனின் இறையாண்மைக்கான பொருளை முடிவு செய்ய முடியும்? நோட்டோவின் அரசியலை விலக்கி வைத்து விட்டு இந்தப் போரை பார்த்தால் அது முழுமையான பார்வையாக இருக்குமா?

ரஷ்யா ஏகாதிபத்திய நாடு. அது தன்னுடைய நலனுக்காக நடத்தும் போரை ஆதரிக்க முடியுமா? அமெரிக்காவும் ரஷ்யாவும் தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்காகவே போரிடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் உக்ரைன் ஆக்கிரமிக்கப்படுகிறது, உக்ரைன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார் என்று கூறிக் கொண்டு ரஷ்யாவை எதிர்க்க முடியுமா? என்பது தான் கேள்வி. இது அமெரிக்க நலனுக்கும் ரஷ்ய நலனுக்கும் வேண்டி நடத்தப்படும் போர் என்ற நிலையில் நின்று இரண்டையும் எதிர்த்தால் அது சரியான நிலைப்பாடு. ஆனால் உக்ரைனை முன்வைத்து ரஷ்யாவை எதிர்க்க முடியாது.

போர் என்றாலே மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, போர்களை எதிர்ப்போம் என்பது பொதுவான கருத்து. ரஷ்யா அமெரிக்கா எனும் இரண்டு ஏகாதிபத்தியங்களில், இரண்டையும் ஒரே அளவில் மதிப்பிட முடியுமா? உலகின் முதல் 100 பெரு நிறுவனங்களில் ரஷ்ய நிறுவனம் எதுவுமே இல்லை. ஆனால் பெரும்பான்மையாக இருப்பவை அமெரிக்க நிறுவனங்களே. உலகின் பெரும்பாலான நாடுகள் டாலரில் வணிகம் செய்யும் நிலையில், பெட்ரோ டாலர் போன்ற டாலரின் மட்டுமே வணிகம் செய்ய வேண்டும் எனும் ஒப்பந்தங்களை கொண்டிருக்கும் நிலையில், உலக வர்த்தக கழகம் போன்ற உலக அமைப்புகளை கட்டுப்படுத்தும் நிலையில், அமெரிக்காவுக்கு இருக்கும் பலத்துடன் ஒப்பிடுகையில் அதில் கால் பங்கு கூட இல்லாத ரஷ்யாவை அதற்கு சமமாக மதிப்பிட முடியுமா? ஈரான், ஈராக், ஆப்கான், லிபியா, சிரியா என தொடர்ந்து பதிலிப் போர்களை நடத்தும் அமெரிக்காவையும், தன்னுடைய வணிகத்தை ஒட்டுமொத்தமாக முடக்க முயற்சிப்பதை எதிர்த்துப் போரிடும் ரஷ்யாவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியுமா?

ரஷ்யா ஒரு சோசலிச நாடு என்று யாரும் கூறமுடியாது. அன்று சமூக ஏகாதிபத்திய நாடாக திரிந்த்திருந்த நிலை மாறி, பெரிய அளவில் பொருளாதார வளமில்லாமல், எரிவாயு, ஆயுத விற்பனைகளில் மட்டுமே தன்னுடைய பொருளாதார பலத்தை நம்பி இருக்கும் ஒரு முதலாளித்துவ நாடாகத்தான் இன்று ரஷ்யா இருக்கிறது. அதை மேலும் மேலும் நெருக்கும் விதமாக நோட்டோவின் பிடி இறுகி வருகிறது.

எனவே, போர் வேண்டாம் என பொதுவாகக் கூறாமல், நோட்டோவைக் கலைக்க வேண்டும் என்பதை முதல் நிபந்தனையாக முன்வைப்போம். அதன் பிறகு உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவை கண்டிக்கலாம்.

One thought on “உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?

  1. முகநூல் செய்தியிலிருந்து,

    யுக்ரேன் இராணுவத்தினர் இந்திய மாணவர்களை மோசமாக நடத்துகிறது எல்லை தாண்டுவதை தடுக்கிறது, கருப்பின மக்கள் ரயில் ஏறுவதை, எல்லை கடப்பதை தடுக்கிறார்கள். இந்த இனவெறி ராணுவம் லுகான்ஸ்க் பகுதியில் ரசிய இனமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. கடந்த 6 வருடத்தில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றது யுக்ரேன் ராணுவம். இங்கு தற்போதும் தீவிர தாக்குதல் நடப்பதை மேற்குலக ஊடகம் காட்ட மறுக்கின்றன. மக்கள் பகுதியில் யுக்ரேன் ராணுவம் நிறுத்துவதை மக்கள் எதிர்த்து குரல் எழுப்புவதை RT டிவி காட்டியது. க்ரிமீயா பகுதிக்கு கடந்த 6 வருடங்களாக தண்ணீர் தரும்..அணையை யுக்ரேன் சட்டவிரோதமாக
    முடக்கி வைத்ததை நேற்று முன்தினம் ரசிய படைகள் மீட்டது. இந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளை இதுவரை மேற்குலகம் சொன்னதில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான அமைப்புகள் பற்றியும் கூட செய்தியை ரசிய ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொள்ளமுடிந்தது. போர் நிறுத்தம்..செய்வதற்கான பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள் ரசிய ஊடகத்தில் வெளியான அதேசமயத்தில் யுக்ரேனுக்கு ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் கொடுக்க முடிவெடுக்கும் செய்திகள் மட்டுமே சொல்லப்பட்டது. லுகான்ஸ்க் பகுதியில் யுக்ரேன் செய்த அட்டூழியங்கள் பற்றி ஆவணங்களை ரசிய ஊடகங்கள் ஒளிபரப்ப ஆரம்பித்த சமயத்தில் மேற்குலகம் ரசிய ஊடகங்கள் மீதான தடையை அறிவித்து, டிவி-செய்தி இணையங்கள் முடக்கப்பட்டன. ஊடக சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசும் மேற்குலகம் தனது போர்வெறி கேள்வி எழுப்பப்படும் பொழுது கோரமுகத்தை காட்டுகின்றன. போர்நிறுத்தத்தில் விருப்பம் கொண்ட எவரும் இருதரப்பிலான தகவலை அறியாமல் நியாயமான போர் பற்றிய புரிதலை பெற இயலாது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s