செவ்வணக்கம் தோழர் சம்மனசு

2012 – 15 காலகட்டத்தில் நான் ராஜபாளையத்தில் இருந்தேன். அதற்கு முன்னர் வெகு சில கூட்டங்களில் தோழர் சம்மனசுவை சந்தித்திருந்தாலும் குறிப்பான அறிமுகம் நான் ராஜபாளையத்தில் இருந்த போது தான் கிடைத்தது. கம்யூனிசம் ஒரு கட்சி மட்டுமல்ல, அது உந்தாற்றல் ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் இருந்தவர் தோழர் சம்மனசு. தோழர் சம்மனசையும், தோழர் செல்வத்தையும் பார்க்கும் போது அவ்வளவு வியப்பாக இருக்கும். முதிய வயதிலும், உடல் நிலை இணக்கமாக இல்லாத போதும் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்வம் தோழர் தன் வாழ்வை முடித்துக் கொண்டார், தற்போது கடந்த 27.04,2022 அன்று மாலையில் தோழர் சம்மனசு.

மக்கள் யுத்தக் குழுவிலிருந்து தன் புரட்சிகர அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் தோழர் சம்மனசு. பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியில் தம்மை இணைத்துக் கொண்டு, இராஜபாளையம் பகுதி விவிமு அமைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். விளக்கெண்ணெய் ஊற்றி வைக்கப்பட்ட வெண்டைக்காய் குழம்பான விவிமு கலைக்கப்பட்ட கதையில் தன் தனிப்பட்ட வலிகள் வழுக்கிச் சென்றிருந்தாலும், தொடர் செயல்பாடுகள் மூலம் அவைகளை கரைத்து இயங்கிக் கொண்டிருந்தார்.

பகுதிக் குழுவில் தோழர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் இருந்த போது, அவருக்காக கடைசிவரை போராடியவர் தோழர் சம்மனசு. இன்றைய காலகட்டத்தில் புரட்சிகர அமைப்புகளில் செயல்பட ஒருவர் முன் வருவது பெரும் போராட்டத்தின் விளைவு. தவறுகள் இருந்தாலும் அதைக் களைவதற்கான விமர்சனங்களுக்கு குறுகிய எல்லை வகுக்காமல் கடைசி எல்லை வரை முயல வேண்டும் என்றார். அதாவது தவறுகளுக்கு எதிரான கூர்மையான விமர்சனங்களின் தன்மை சூழலையும் கணக்கில் எடுத்துக் கொண்டதாக இருக்க வேண்டும் எனும் தோழரின் புரிதல் நூல்களிலிருந்து மட்டுமல்ல, வாழ்வின் தடங்களிலிருந்தும் புடம் போடப்பட்டவை.

புரட்சிகர திருமணம் ஒன்றை பகுதியில் நடத்திய போது, அழைப்பிதழின் வண்ணத்திலிருந்து, செலவுகளை நிர்வாகம் செய்வது வரை எல்லா இண்டு இடுக்குகளிலும் தோழரின் உழைப்பு இருந்தது. மண விழா நிகழ்வு என்பது கொண்டாட்ட வடிவமாய் பார்த்து கொண்டிருந்த போது, அதையே ஒரு பாடமாக்கி வகுப்பறை போல் நடந்தி வைத்த பேராசிரியர் தோழர்.

முதன் முதலாய் இராஜபாளையத்தில் நடத்தப்பட்ட மே தின பேரணி, பொதுக் கூட்டங்கள், அந்தப் பகுதியின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் முயற்சியில் உற்சாகம் கொப்பளித்த பங்களிப்பு,  தொழிற்சங்கம் கட்டும் முயற்சியில் ஏற்பட்ட இன்னல்களை எதிர் கொண்ட விதம் என தோழர் சம்மனசு பற்றி நினைவுகூர எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. இருந்தாலும் என்ன .. .. ..?

உங்கள் புன்னகையை – பார்த்த நொடியிலேயே உள்ளத்து உவகை எல்லாம் பொக்கை வாய் உதட்டில் கொண்டு வந்து, தன் அருகிலிருக்கும் அனைத்தையும் நனைத்து குளிரச் செய்யும் தண்ணீர் போல உணர்வுகளை தீமூட்டி கிளர்ந்தெழச் செய்யும் அந்தப் புன்னகையை – இழந்து விட்டோமே தோழர்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்