மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்

‘மே தின வாழ்த்துகள் தோழர்’ ஒரு சடங்கைப் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் சொற்றொடர். இது கொண்டாட்ட நாளல்ல. அன்னையர் தினம், ஒன்று விட்ட சித்தப்பா தினம் போல இது ஒரு ‘தினம்’ அல்ல. இனிப்பு, புது சட்டை எடுத்து பரிமாற்றிக் கொள்ளும் முதலாளித்துவ பண்டிகை அல்ல. மாறாக, எட்டு மணி நேர உழைப்பு எனும் மெய்யறிவை நம்மோடு, நாம் வாழும் சூழலோடு, நாம் ஆளப்படும் சூழலோடு பொருத்திப் பார்த்து, நம்மையும், உலகையும் மாற்றியமைக்கும் வழியில் செலவிட வேண்டிய தினம்.

இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. அனைத்து குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுவாக கோரிக்கை விடுப்பதும், விருப்பப்படுவதும் இயங்கியல் பார்வையாக இருக்க முடியாது. ஒவ்வொன்றும் தனித்தனியான களங்கள், காரணங்கள், விளைவுகள் இருக்கின்றன. ஆனால், நூற்றுக்கும் அதிகமான குழுக்களாக பிளவுபடும் அளவுக்கு இந்தியச் சூழலில் என்ன தேவை நிலவியது என ஆராய்வது இன்றியமையாதது. இங்கு பல சாதிய அடுக்குகள் இருக்கின்றன. வர்க்க வேறுபாடுகள் இருக்கின்றன. இவைகளை எதிரொலிக்கும் தனித்தனி கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையா? அப்படி இருக்க முடியாது. அரசு சுக்கல் சுக்கலாக உடைத்திருக்கிறதா? அவ்வளவு எளிதில் இவ்வாறு வகைப்படுத்திவிட முடியாது. பின் ஏன் இத்தனை குழுக்கள்? சித்தாந்த முரண்பாடு என்று எளிதாக கடந்து விட முடியுமா? சித்தாந்த முரண்பாடு எனும் ஒன்று, எந்த சார்பும் இல்லாமல் வானிலிருந்து விழுந்திருக்க முடியாது அல்லவா. இது மிகவும் சிக்கலான, நுணுக்கமான ஆய்வுக்குறிய ஒரு தலைப்பு. என்றாலும், என்னுடைய புரிதலில் இருந்து கூறுவதென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது தத்துவார்த்த புரிதலில் இருந்தோ, இந்தியர்களின் பொருளாதார, உற்பத்தி உறவுகளின் தன்மைகளிலிருந்தோ அல்ல என்பது தான். காலனியாதிக்க உணர்வு, புரட்சி குறித்த மிகையுணர்வு ஆகியவைகளில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த போதாமை தான் அத்தனை பிளவுகளுக்கும் பாதை சமைத்திருக்கிறது.

இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் குழுக்கள் என்ன சாதித்திருக்கின்றன? என்றொரு கேள்வியை எழுப்பினால், என்ன விடை கிடைக்கும்? இந்தக் கேள்வி ஒரு குழுக்கு எதிராக இன்னொரு குழுவால் எழுப்பப்படும் கேள்வி அல்ல. ஒட்டுமொத்த கம்யூனிச இயக்கங்களையும் நோக்கி பொதுவில் வைக்கப்படும் கேள்வி. இதற்கு மதிப்பு மிக்க பதில் ஏதும் கிடைக்காது. எனவே, என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று கேள்வியை மாற்றுகிறேன்.

இந்த மே நாளையே எடுத்துக் கொள்வோம். அத்தனை இயக்கங்களும் மேநாளில் சூழுரைப்போம் என்று சிலபல முழக்கங்களை தொகுத்து சமூக ஊடகங்களில் பரவச் செய்திருக்கின்றன. சில இயக்கங்கள் பேரணி பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. இவைகளைச் செய்யக் கூடாது என்பதல்ல. ஆனால் விழிப்புணர்வு பரப்புரை என்பதைத் தாண்டி இவைகளில் என்ன விழுமியங்கள் இருக்கின்றன? சிறப்பு நாட்களில் மட்டுமல்ல பொதுவாக ஆண்டு முழுவதும் இடதுசாரி இயக்கங்களின் பணி இன்றைய சூழலுக்கு ஒட்டாத போராட்ட வடிவங்களையும், பரப்புரை உத்திகளையுமே கைக் கொண்டிருக்கின்றன. உச்ச முனைப்புடன் நடத்தப்படும் போராட்டங்கள் கூட அரசுக்கு எந்த நெருக்குதலையும் கொடுப்பதில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே ஒரு மக்கள் நல முதலாளித்துவ அரசுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்ட வடிவங்கள். ஆனால் அரசு பாசிசத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் செல்கிறது என்று புரிந்து வைத்திருப்பதாக கூறிக் கொள்கிறோம். என்றால் இந்த போராட்ட வடிவங்கள் அதற்கு ஏற்றபடி இருக்கிறதா என்பதை மீளாய்வு செய்ய வேண்டாமா?

மறுபக்கம் மக்கள் ஒரு பாசிச அரசின் கீழ் என்ன மாதிரி வாழும் வாய்ப்பு கிடைக்குமோ அந்தந்த மாதிரியெல்லாம் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அரசை எதிர்த்து மூச்சு விட வேண்டும் என்றாலும் சற்று நேரம் கழித்தே மூச்சு விடுகிறார்கள். இது மக்கள் மீதான குற்றச்சாட்டு அல்ல. இது தான் யதார்த்தம். போராட்டமின்றி வாழ்க்கை இல்லை என்று முழங்குகிறார்கள் கம்யூனிஸ்டுகள். போராடினால் வாழ்க்கை இல்லை என்று அரசு மக்களுக்கு எல்லா விதங்களிலும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் வாழ்வதற்கு எது ஏற்றதாக இருக்கிறது என மக்கள் கருதுகிறார்களோ அதை எடுத்துக் கொள்கிறார்கள். வலதுசாரி அரசியல் நோக்கத்துக்காக நிகழும் பச்சைப் படுகொலையைக் கூட ஒரு காட்சியாக கண்டு கடந்து செல்லும் மனோநிலை மக்களிடம் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தும் உரசினாலன்றி தீப்பிடிக்காத தீப்பெட்டிகளாக மக்கள் இருக்கிறார்கள். உரச வைக்கும் வேலையை இடதுசாரி இயக்கங்கள் செய்கின்றனவா?

இயற்கை வளங்களை கொள்ளை கொடுப்பதாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக இருந்தாலும், வாழும் அனைத்து சூழலையும் மாசுபடுத்துவதாக இருந்தாலும், வாழ முடியாத அளவுக்கு வரிகளை பொருட்களின் விலையை உயர்த்துவதாக இருந்தாலும், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும் வரி விலக்குகளையும் கடன் தள்ளுபடிகளையும் அறிவிப்பதாக இருந்தாலும் .. .. .. எதற்கும் தயக்கமோ, மக்களுக்கு பதில் கூற வேண்டுமே எனும் பதைப்போ அரசிடம் கிஞ்சிற்றும் இல்லை. அந்த அளவுக்கு அரசு வெளிப்படையாகவும், துணிவாகவும், துல்லியமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளை அதாவது அரசின் பாசிசத் தன்மை, மக்களின் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, இடதுசாரிகளின் தீரமற்ற சடங்குத்தனமான இயங்கும் தன்மை ஆகிய இந்த நிலைமைகளை எத்தனை இடதுசாரிக் குழுக்கள் மீளாய்வு செய்திருக்கின்றன? தங்களின் லார்வாக் கூடுகளை உடைத்து வெளியேற முன்வந்திருக்கின்றன? மக்களை பகடைக் காய்களாக ஆக்காமல், தங்களின் சடங்குத் தனமான வடிவங்களைக் கடந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் போராட்ட வடிவங்களை கண்டடைய முன்வந்திருக்கின்றனவா? மக்களை அரசியல்படுத்துவதற்கு புதியபுதிய உத்திகளைக் கையாள முன் வந்திருக்கின்றனவா? மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை உருவாக்கவும், கூர்மையடையச் செய்யவும் திட்டங்கள் வைத்திருக்கின்றனவா?

இவை எதுவுமே இல்லாமல் வெறுமனே மே நாள் வாழ்த்துகளை பகிர்வதால் என்ன பயன் இருந்து விட முடியும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்