மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ!

கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய கலை நிகழ்ச்சியில் தான் அந்தப் பாடல் பாடப்பட்டது. அந்தப் பாடலின் ஓரிடத்தில் அம்பேத்கரும் பெரியாரும் மார்க்சியத்தின் சாரம் என்று வருகிறது. அம்பேத்கரியமும், பெரியாரியமும் மார்க்சியத்தின் சாரமா? இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் கடந்து செல்லலாம். தேர்தல் இடதுசாரிகளோ, புதிதாக கம்யூனிசத்தான் ஈர்க்கப்பட்டவரோ கூறியிருந்தால் புரிய வைக்கலாம். கோவனை என்ன செய்வது? இதில் கோவனுக்கு மட்டும் தனிப் பொறுப்பு இருக்காது. கூட்டாக இருந்தே பாடல் வரிகளை இறுதி செய்வார்கள். என்றால் இந்த அலட்சியத்தின் கனம் அதிகரிக்கிறதே.

வழக்கமாகவே அம்பேத்கரா? மார்க்ஸா? எனும் விவாதம் தொடர்ச்சியாக இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ரங்கநாயகியம்மா எழுதிய நூலை கொற்றவை தமிழில் மொழிபெயர்த்தன் பிறகு இந்த விவாதம் வீரியமாகவே நடந்தது. இதன் வழியே கம்யூனிசத்துக்கு எதிராக அம்பேத்கரிசத்தையும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களையும் நிறுத்தும் உத்தி வலதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

மார்க்சியமும் அம்பேத்கரிய பெரியாரியமும் ஒன்றா எனும் கேள்வி எப்போதும் இங்கு தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என்ன சிக்கல் என்றால், களத்தின் தேவை மார்க்சியர்களும் அம்பேத்கரியர்களும் பெரியாரியர்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மெய்யியலின் தேவையோ ஒன்றுக்கு எதிராக மற்றொன்று என்று இருக்கிறது. இதை தெளிவாக பிரித்தறிந்து புரிந்து கொள்ளாதவரை குழப்பம் நீடிக்கவே செய்யும்.

மார்க்சியம் வர்க்க ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. அம்பேத்கரியமும், பெரியாரியமும் வர்க்க ஒற்றுமையை கருத்தில் கொள்ளாதவை. அடையாள அரசியல் எனும் நிலைப்பாட்டில் நிற்பவை. அடையாள அரசியல் என்பதே மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவ அறிவுத்துறையினரால் உருவாக்கப்பட்ட பின்னவீனத்துவம் போன்ற ஒரு வகையினம். இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளாத யாரும் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மார்க்சியத்துக்கும் அடையாள அரசியலுக்குமான எல்லைக் கோடு தெளிவாக இருக்கிறது.. இரண்டும் இணைவதில்லை, ஒன்றை ஒன்று எதிர்த்து களமாடுகின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதியப் படிநிலை உயிரோட்டமாய் இருப்பதால் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கவும் முடியாது, இரண்டும் ஒன்று என்று கொள்ளவும் முடியாது. இந்தக் குழப்பத்திலிருந்து தான் அம்பேத்கரா? மார்க்ஸா? எனும் விவாதம் தலைதூக்குகிறது. இங்கிருக்கும் பார்ப்பனியம் அதை வளர்த்துவிட முயல்கிறது.

அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சாதியப் படிநிலை குறித்து மிகத் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அவர் உழைப்பின் தீவிரத்தை, ஈடுபாட்டை மறுக்கவே முடியாத அதேவேளை அவர் ஆய்வின் களம் வேத, புராண, இதிகாசங்களைத் தாண்டி நீளவே இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இன்னொரு மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மை ஒன்றும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இதுவரை இயங்கியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் இந்திய சமூகத்தில் நிலவும் சாதியப் படிநிலை குறித்து துல்லியமான எந்த ஆய்வையும் செய்யவில்லை என்பதே அந்தப் பேருண்மை.

பொதுவாக இந்திய வரலாறு என்பதே மிகவும் குழப்பமான, மிகவும் சிக்கல் நிறைந்த, வெகுவாக முரண்படும் நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கிறது. சட்டோபத்யாயா தொடங்கி ரொமிலா தாப்பர் வரை வரலாற்றாய்வாளர்கள் செய்த ஆய்வுகளெல்லாம் இருக்கும் சான்றுகள் வழியேயான கருத்துவாக்கங்களாவே முடிந்து போயிருக்கின்றன. இதுவரை அறியப்பட்ட இந்திய வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போடும் ஆய்வுகளும் சான்றுகளும் வரத் தொடங்கி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஆசீவகம்.

பார்ப்பனிய மேலாதிக்கம் இங்கு பலநூறு ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வரலாறு பார்ப்பனியத்தைச் சுற்றியே இருக்கிறது. அம்பேத்கரின் ஆய்வுகளும் இதற்கு விலக்கில்லை. ஆனால் ஆசீவகத்தையும், அதன் அழிவையும் ஆராயாமல் பார்ப்பனியம் குறித்த ஆய்வுகள் முழுமை பெறாது.

இன்றைய இந்திய சூழலில் அடையாள அரசியலால் ஈர்க்கப்பட்டு இருந்தாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே கம்யூனிசமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அம்பேத்கரையும் பெரியாரையும் அவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளாக இருந்தாலும் கூட துண்டித்து விடவே முடியாது. அதானால் தான் அடையாள அரசியலுக்கு எதிரான துல்லியமான நடவடிக்கைகள் இந்திய கம்யூனிசத்தில் இல்லை.

இந்த அடிப்படையில் இருந்து தான் கோவன் அதாவது மகஇக வின் அந்தப் பாடலும் வந்திருக்கும் எனக் கருதுகிறேன். அதற்காக மெய்யியல் தெளிவு இல்லாமல் மார்க்சியத்தின் சாரம் அம்பேத்கரியம் என்பது மிக மிகத் தவறான, ஏற்கவே முடியாத கூற்று.

கடைசியாக, அப்படியென்றால் மார்க்ஸுக்கு குறைந்தவரா அம்பேத்கர் என்று ஒப்பீட்டு அடிப்படையில் யாரேனும் கேட்டால் .. .. .. மார்க்ஸின் களம் வேறு அம்பேத்கரின் களம் வேறு. எப்படி அம்பேத்கரின் ஆய்வுகளில் வேத இதிகாசங்களைத் தாண்டிய பார்வை இல்லையோ, அதேபோல மார்க்ஸின் ஆசிய பாணி சொத்துடமை வடிவம் குறித்த முடிவுகளில் கிழக்கிந்தியக் கம்பனியின் தரவுகளைத் தாண்டிய பார்வை கிடைக்கவில்லை. விமர்சனங்களை குற்றச்சாட்டுகளாக மாற்ற வேண்டிய தேவை இல்லை. இமயமலையின் உயரம் என்ன என்று கேட்டால் எப்படி 8848 மீட்டருக்கு அதிகமாக கூறமுடியாதோ அதேபோல அம்பேத்கரின் உயரத்தில் காணப்படும் உள்ளீடற்ற மதிப்புகளை பொருட்படுத்தத் தேவையில்லை.

3 thoughts on “மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

  1. அடையாள அரசியலின் ஆபத்தை உணர்ந்திராத தன்மை கட்டுரையில் வெளிப்படுகிறது. நிராகரிப்புடனான சமரசங்கள் அழிவையே தரும். அனுபவரீதியாகக் கண்டிருக்கிறோம் தோழர்.

  2. வணக்கம் தோழர்,

    இவை நிராகரிப்புடனான சமரசங்களாக நான் கருதவில்லை. வாய்ப்பிருந்தால் இன்னும் கூர்மையாக விமர்சியுங்கள்.

    அடையாள அரசியலையே தங்களின் விடுதலையாக கருதிக் கொண்டிருக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகள் அணிகள், மக்களிடையே அடையாள அரசியலின் அழிவை தொழிற்படுத்தும் தேவையை வர்க்க அரசியல் கொண்டிருக்கிறது எனும் இன்னும் சரியாக உள்வாங்கப்படாத நுண்மையை தான் நான் சுட்டிக் காட்டியிருப்பதாக கருதுகிறேன்.

  3. தோழர் வணக்கம், சிறப்பு தத்துவார்த்த ரீதியில் ஒன்று ஒடுக்கும் வர்க்கத்திற்க்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் கலககுரல் மற்றொன்றோ ஒடுக்கம் வர்க்கத்தோடு இயைய்ந்து சீர்திருத்த வழியில் ஒரு சிலரின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தேடுவதுதான் அடையாள அரசியலின் அடிப்படை மேலும் தவறியும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கம். ஆக தோழர் உங்களின் முன்னெடுப்பு சிறப்பு. கோவன் பற்றியோ ம.அ.க அல்லது மக்கள் அதிகாரம் என்ற திரிந்து போன மார்க்சியர்கள் மீதான விமர்சனம் சரியே தோழர்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்