திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, ஆவடியில் பசுக்கூடம் என தொடர்ச்சியாக திமுக அதன் கடந்த தேர்தலில் வாக்களித்த ஆதரவாளர்களிடம் நம்பிக்கை இழப்பை எதிர்கொண்டிருக்கிறது. களத்தில் மக்களிடம் அந்தந்த பகுதியை தாண்டி இவை குறித்து கருத்துருவாக்கம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. என்றாலும், சமூக ஊடகங்களில் இவை மீப்பெரும் விவாதங்களாக அலைந்து கொண்டிருக்கின்றன.

இந்த விவாதங்களை இரண்டு விதமாக பார்க்கலாம். திமுக பார்ப்பனியத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மகிழ்வாக பார்க்கும் பரப்பும் திமுக வெறுப்பாளர்களும், இதையே ஆற்றாமையாக வேறொரு தொனியில் பார்க்கும் ஆதரவாளர்களும் என ஒரு பக்கம். எது சரி எது தவறு என எந்த ஆய்வும் இன்றி திமுக செய்யும் அனைத்தையும் ஏற்பது, அதற்கு எதிரான எதையும் மறுப்பது என்று செயல்படும் அக்மார்க் திமுகவினரும், இதையே வேறு புறத்தில் இருந்து புரட்சிகர இடதுசாரிகள் கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தார்களே அவர்கள் அனைவரும் திமுகவின் இந்த பார்ப்பன ஆதரவு நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நீட்டி முழங்கும் புரட்சிகர இடதுசாரிகளும் என மறுபக்கம். இவைகளை எப்படி மீளாய்வு செய்வது?

மெய்யியல் பார்வையில், அரசு செய்யும் எந்த ஒன்றையும் ஒரு எல்லைக்கு அப்பாற்பட்டு அரசாங்கங்களால் எதுவும் செய்ய முடியாது. அடுத்து, அரசு நிர்வாக எந்திரத்தில், திட்டமிட்டு பல பத்தாண்டுகளாக உள்ளே நுழைக்கப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். இவைகளைத் தாண்டி ஒரு அரசாங்கம் எவ்வாறு செயல்படும் எனும் புரிதல் இல்லாமல் மேலெழுந்தவாரியாக மதிப்பீடு செய்வது பிழையானது.

அரசை தாண்டி அரசாங்கங்கள் செயல்பட முடியாது எனும் மெய்யியல் புரிதல் கொண்டவர்கள் கடந்த தேர்தலில் ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்? திமுகவை ஆதரித்த யாரும், திமுக சோசலிசத்தை கொண்டு வந்து விடும் என நம்பி ஆதரிக்கவில்லை. திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி தான். தேர்தல் அரசியலில் நிற்கும் பிற கட்சிகளைப் போலவே திமுகவிற்கும் எல்லா பலவீனங்களும் உண்டு. ஆனால் தேர்தல் அரசியலில் பார்ப்பனியம் தற்போது பெற்றிருக்கும் வீரியத்தை குறைப்பதற்கு – அதிலும் குறிப்பாக எதிர்க் கட்சிகளை பிரிப்பதால் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியை தொடர்ந்து பெற்றுவரும் பாஜகவின் வீரியத்தை – அதன் தேர்தல் தோல்வியும் பங்களிக்கும் என்பதால் மட்டுமே தங்கள் தேர்தல் புறக்கணிப்பை மாற்றி திமுகவை ஆதரித்தார்கள். இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்கள். எனவே, திமுகவை கடந்த தேர்தலில் ஆதரித்ததாலேயே திமுகவின் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என எண்ணுவதும் எழுதுவதும் பக்கப்பார்வையின் உச்சம்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளில் திமுகவின் தவறு என்ன? நாம் அமைத்திருக்கும் அரசாங்கத்தை விட அதிகாரிகளின் கட்டமைப்பான அரசுக்கு அதிகாரம் மிக அதிகம் எனும் உண்மையை திமுக ஒருபோதும் உணரப் போவதில்லை. ஏனென்றால் அது முதலாளித்துவக் கட்சி. அரசு எந்திரத்தில் ஊடுறுவி இருக்கும் பார்ப்பனியச் சிந்தனையாளர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டியதும், அவ்வாறானவர்கள் இடும் உத்தரவுகள் எந்த அளவுக்கு திமுகவின் ஆட்சிக்கும், கட்சிக்கும் இன்னல்களை ஏற்படுத்தும் என்றும் உணராமல் இருப்பதே திமுகவின் தவறு.

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் ஆகப் பெரும் மக்களைக் கொண்டிருக்கும் கட்டமைப்பு திமுக எனும் கட்சி. கேடூளாக அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் திமுகவின் கொள்கையோ, வரலாற்றையோ, சாதனைகளையோ அறியாத பிழைப்புவாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கிறார்கள். இதைக் களைவதற்கு திமுக தலைமை கட்சி உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தத்துவ வகுப்புகள் நடத்தி பயிற்சியளிக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் கிராமங்களில் காலூன்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் செய்துவதும் நைச்சியமான முயற்சிகளை இல்லாமல் செய்வதற்கு எளிய திமுககாரர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

ஆம். பாஜகவின், ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கருவறுக்க இடதுசாரிகளுக்கு திமுக போல் உதவக் கூடிய கட்சி வேறொன்று இல்லை. மட்டுமல்லாது, உழைக்கும் மக்களுக்கு உகந்த அண்மை இலக்கு பாஜகவின் தேர்தல் வெற்றியை தடுத்து நிறுத்துவது தான், வேறொன்றுமில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்